பெண்ணடிமை நிலை குறித்து பெரியாரின் பார்வை — தேமொழி

77 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 28, 2023, 9:43:44 PM2/28/23
to மின்தமிழ்
பெண்ணடிமை  நிலை குறித்து பெரியாரின் பார்வை
—  தேமொழி


பெண்களின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று பெண்களின் தற்போதைய முன்னேற்ற நிலையைக் கருத்தில் கொண்டால், ஆண்களுக்கு நிகரான சட்ட உரிமைகளும்  பாதுகாப்புகளும்  பெண்களுக்குக்  கிடைக்க இன்னும் 286 ஆண்டுகள் ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.  

பெண்மையைப் போற்றுகிறோம் என்று உலக மகளிர் நாளைக் கொண்டாடும் தமிழர் எவரும், ஓர் ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அது பெண்ணுக்கும் இருக்கிறது என்று சென்ற நூற்றாண்டிலேயே  பெண்ணுரிமை பேசியவரும்,  பெண்ணுக்கு எதிரான சமூக அடக்குமுறைகளை ஒழிக்கப் போர்க்கொடி உயர்த்தியவருமான  தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களை நினைவு கூராமல் இருக்க முடியாது.

விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியாரின் நூல் 1942-இல் வெளியானது. இந்த 79 பக்கங்கள்  கொண்ட சிறு நூலில் 1. கற்பு, 2. வள்ளுவரும் கற்பும், 3. காதல், 4. கல்யாண விடுதலை, 5. மறுமணம் தவறல்ல, 6. விபச்சாரம், 7. விதவைகள் நிலைமை, 8. சொத்துரிமை, 9. கர்ப்பத்தடை, 10. பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழிய வேண்டும் என்ற 10 தலைப்புகளின் கீழ் பெண் ஏன் அடிமையானாள் என்று ஆராய்கிறார் பெரியார்.

கற்பு என்ற சொல்லின் பொருள் ஆராய்ச்சியில் துவங்கும் முதல் அத்தியாயத்தில், "கல்வி, நேர்மை போன்றவற்றைக் குறித்த கற்பு என்ற  சொல் எவ்வாறு மகளிர் நிறை என்பதைக் குறிக்கும் பெண்களின் பாலினக் கலவி ஒழுக்கத்திற்கான ஒரு சொல்லாக மாறியது என்று விளங்கவில்லை" என்று அதிரடியாகத் துவக்குகிறார் பெரியார்.  ஒழுக்கம் என்பது மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்; அதுதான் ஒழுக்கம் என்று ஆணித்தரமாகக் கூறியவர் பெரியார் (விடுதலை, 7.2.1961).  

ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறைதான் இருக்க இயலும். ஆணுக்கு ஒரு ஒழுக்க வரையறை என்றும் பெண்ணுக்கு ஒரு ஒழுக்க வரையறை என்றும்  இருக்க வாய்ப்பில்லை.  கற்பு, விபச்சாரம், மறுமணம், மணவிலக்கு, சொத்துரிமை போன்றவற்றில் பாலினத்திற்கு ஒரு விதி என்று வகுத்து வைப்பது நீதி அல்ல. ஆணுக்கென்று ஒரு நீதியும் பெண்ணுக்கென்று ஒரு நீதியும் இருந்தால் அது அநீதி என்று சொல்லத் தேவையில்லை.  இது போன்ற தன்னல நோக்கம் கொண்ட சூழ்ச்சி, பெண்ணின் வாழ்வுரிமையை, அடிப்படைத் தேவைகளை முடக்கும் நோக்கில் பெண்ணை அடிமைப்படுத்த வடிவமைக்கப்பட்டவை.  வாழும் சமுதாயத்தில் சரிபாதியினரான பெண்களின் தனிமனித உரிமைகளை மதிக்காத நிலை மனித சமுதாயத்திற்குத் தேவை இல்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் எந்த மேன்மையும் இருக்காது.

அடுத்து, குறளில் "வாழ்க்கைத் துணைநலம்", "பெண் வழிச் சேரல்"  அதிகாரங்களின் குறள்கள் பெண்ணடிமைக் கருத்துகளைக் கொண்டவையாக இருக்கின்றன என்று வள்ளுவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். வள்ளுவர் ஒரு பெண்ணாயிருந்து எழுதி இருந்தால் இது போன்ற கருத்துகளில் எழுதி இருக்கமாட்டார். தன்னல நோக்குடன் வலிய  நிலையில் ஆதிக்க மனப்பான்மையிலிருந்த ஆண்களால் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிகள் சமைக்கப்பட்டு  பெண்கள் வாழ்வில் அவை திணிக்கப்பட்டு அவை பெண்களை அடிமைத் தளையில் சிக்க வைத்துள்ளது. எதிர்க்கேள்வி எழுப்பாமல் இதனைப் பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கியதுதான் அவர்களின் அடிமை நிலைக்குக் காரணம். கீழ் சாதி என்பவர்கள் எவ்வாறு தங்களுக்கு விதிக்கப்பட்ட அந்த நிலையை  மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்கிறார்களோ  அது போன்றே பெண்ணடிமை நிலையும் உருவாகிவிட்டது என்கிறார் பெரியார்.  

ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்ற அவருடைய கேள்வி எவரையும் சிந்திக்க வைக்கும்.  பெண்களுக்கு விடுதலை என்ற நிலை உருவாக, கற்பு என்பதை  இரு பாலருக்கும் பொதுவாக்கி,  ஆணைப் போலவே பெண்ணுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்படுதல் வேண்டும் என்பது அவரது முடிபு.  நாட்டில் இருக்கும் 99.80% பெண்களுக்கு நமக்கு ஏன் இந்த அடிமை நிலை என்ற எண்ணம் கூட வருவதில்லை என்கிறார் பெரியார்.

காதலுக்கு என்று  எந்த சிறப்புத் தன்மையும்  இல்லை.  இயல்பாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இனப்பெருக்கப்  பருவத்தில் ஏற்படும் சேர்க்கை ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட, காதல் என்பது தனித்துவம் கொண்ட வேறு சிறப்புப் பெற்றது அல்ல. இந்தியாவைப்  பொறுத்தமட்டில் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்ற  அடிப்படை நோக்கம் கொண்டதாகத் திருமணம் என்ற இல்லற உறவு மாற்றப்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்றும் நோக்கில் இயற்கைக்கு மாறாக,  மணவுறவிற்கு  ஒரு தெய்வீகத் தன்மை கற்பிக்கப்பட்டு சடங்குகள்  மூலம் பெண்களை அடிமைப் படுத்துவதை மறைத்துப் பெண்கள்  வஞ்சிக்கப் படுகிறார்கள் என்கிறார் பெரியார்.  

விருப்பமில்லாத மணவாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று ஆணையோ அல்லது பெண்ணையோ கட்டாயப்படுத்துதல் சரியல்ல.  மணவுறவில் இருந்து விலக விரும்புவோருக்கு மனித உணர்வுகளுக்கு முதன்மை நிலையும் மதிப்பும் அளித்து மணவிலக்கு கொடுக்கப்படவேண்டும். விருப்பமில்லாத நிலையில் வாழும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் மணமுறிவு செய்துகொள்ளவும் தங்கள் விருப்பப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உரிமையிருக்கவேண்டும் என்பது பெரியாரின் கருத்து. மணம் என்பது மணமக்கள் தங்கள் வாழ்க்கைச் சவுகரியத்திற்காகச் செய்துகொள்ளப்படும் ஒரு ஒப்பந்த ஏற்பாடு.   ஆணுக்கு மனைவி இறந்த பிறகு அல்லது கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இல்லாத நிலையில் அல்லது மணவாழ்க்கை சரியாக அமையாத வேறு பல சூழல்களில் ஆண் மற்றொரு பெண்ணை மணம் செய்வது ஏற்கப்படுகிறது. பெண்களுக்கோ வாழாவெட்டி என்ற பட்டம் கிடைக்கிறது.

அன்பும், ஆசையும் இல்லாத அல்லது அவை தனக்கு ஏற்படாத ஒரு இடத்தில் ஒருவர்  எப்படி வாழ்வது? மணம் செய்து கொண்டாகிவிட்டதே என்று அன்பையும், ஆசையையும், இன்பத்தையும்,  திருப்தியையும் தியாகம் செய்து மணவாழ்க்கையைத் தொடர்வது சரியான முறையா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.  ஆகவே, மணம் செய்து கொண்ட மணமக்கள் (கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ) மணவுறவில் இருந்து விடுவித்துக்கொண்டு மற்றொருவரை மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்ற கருத்தின் அடிப்படையில் செங்கல்பட்டு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, தொடர்ந்து ஈரோடு மாநாட்டில் அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்திருக்கிறார் பெரியார். இது சென்ற நூற்றாண்டில் அவர் காலத்தில் மணவிலக்கு என்ற உரிமை எந்த அளவிலிருந்தது என்பதைக் காண்பிக்கிறது.

பொதுவாகப் பெண்கள் நிலைமை மாறியாக வேண்டும் என்கிறார் பெரியார். எந்தெந்தக் காரணத்தால் கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லையோ, ஒத்துவரவில்லையோ அந்தந்தக் காரணங்களால் மனைவிக்கும்  கணவனைப்  பிடிக்காதபோது,  மறுமணம் செய்து கொள்ள ஆணுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும். மறுமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் பொருந்தும்  என்றும்,  உலக வாழ்விலும், சமுதாயத்திலும், சட்டத்திலும், மதத்திலும் ஆண்களுக்குள்ள சவுகரியங்களும், உரிமைகளும் பெண்களுக்கும் இருக்கவேண்டுமென்றும்  தீர்மானமாகக் கூறுகிறார்.

விபச்சாரம் செய்கிறாள் என்று பெண்ணைத்தான் உலகோர்  வசை கூறிக் குற்றம் சொல்லுகின்றார்களே தவிர, அவளின் அப்படிப்பட்ட  நிலைக்கு ஆணைக்  குற்றம் சொல்லுவதில்லை. இது போன்ற ஒழுக்கக் குறைவு என்ற பழிச் சொற்களும் ஆண்களுக்குக் கிடையாது.  "விபச்சாரம்" என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டும்.   பெண்களை ஆண்களின் அடிமைகள் என்றும், விலைக்கு வாங்கவும் விற்கவும் வாடகைக்கு விடவும் கூடியவர்கள் என்றும் கருதும் நிலையின் வெளிப்பாடுதான்  விபச்சாரம். கற்பு என்பது போல  விபச்சாரம் என்பதும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்களின்மீது சுமத்தப்படாமலும், ஆண்கள் அதற்காகப் பயப்படவோ அவமானப்படவோ கட்டுப்பட்டிருக்கவோ தேவையில்லை என்று இருக்கும் சமுதாயப் போக்கு பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு.  கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு மட்டுமின்றி அவை பெண்களை அடிமையாக்கவும், கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை  கொண்டது என்கிறார் பெரியார்.

நாட்டுக்கும் சமூகத்திற்கும் உரிமை கேட்டு உரிமைக்குரல்  எழுப்பும் எவரும்  சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ள பெண்கள் உரிமையின்றி முடக்கப்பட்டுக் கிடப்பதில் கவலை கொள்வதில்லை என்று சமூக அக்கறை கொண்டவர்கள் பெண்களின் நிலையில் அக்கறை கொள்ளாததைச் சாடுகிறார் பெரியார். இந்து மதத்தில் மனைவியை இழந்தாலும் வயதான ஆண்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள், ஆனால் இல்லறத்தை மேற்கொள்ளாத பதின்ம வயது பெண்ணாக இருந்தாலும் கணவனை இழந்தால் காலம் முழுவதும் வாழ்க்கைத்துணை இன்றி வாழக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடிய இரக்கமற்ற நிலையும் உண்டு.  உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம் என்றால்,  கைம்பெண்ணாக வாழ்வதோ வாழ்நாள் முழுதும் தாங்க முடியாச் சித்திரவதைக் கொப்பான துன்பம் என்று பெண்கள் நிலையிலிருந்து சிந்தித்துள்ளார் பெரியார்.  

திருமணம் என்ற உறவுக்குள் நுழையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு நிலையிலும் வேறுபாடு காட்டப்பட்டு பெண்களின் உரிமைகள் முடக்கப்பட்டே வந்துள்ள நிலையைக் காண முடிகிறது.  மனித சமூகத்தில் சரிபாதியான எண்ணிக்கை கொண்ட பெண்களுக்குப் பிறப்பிலேயே உரிமைகள் மறுக்கப்படுவது தொடங்கிவிடுகிறது.  இயற்கைக்கு மாறான வாழ்வியலை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதும் பெண்ணடிமை நிலை நீக்குவதில் ஒரு பகுதி. பெண்ணடிமை நிலை ஒழிய வேண்டும் என்றால் பெண்களை அடிமையாக நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும் என்கிறார் பெரியார்.  

இந்தியாவில் தனி மனிதர்க்கு எதிரான  கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் அவசரமாய் ஒழிக்கப்பட வேண்டியவை தீண்டாமையும், பெண்ணடிமை நிலையும் என்கிறார் பெரியார்.  ஆண்களைப்போன்ற சட்டப்படி சொத்துரிமை பெறுவதற்குப் பெண்கள் களத்தில் இறங்க வேண்டும், கிளர்ச்சி செய்ய வேண்டும்.  பெண்களுக்குச் சொத்துரிமை இருந்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவிதமான அசவுகரியங்களும் ஒழிந்துபோகும். பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இரண்டும் கிடைத்துவிட்டால் தானே பொருளீட்டவும், தங்கள் வாழ்க்கைத்துணையைத் தாங்களே தேர்ந்து எடுத்து அவர்களுடன் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தும் வாய்ப்பும் ஏற்படும்.  பெண் அடிமை நிலைக்கான பல காரணங்களில்  சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது பெரியாரின் கருத்து.

கர்ப்பத் தடையின் தேவை குறித்து அனைவரும், அக்காலத்தில் கொண்டிருந்த,  இக்காலத்திலும் கொண்டிருக்கும் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் கருத்து.  பெண்களின் உடல்நலம்,  நாட்டின் பொருளாதார நிலை, குடும்பச் சொத்து பிரிவடையாமல் இருக்க என்று பற்பல காரணங்களை முன்வைத்து மற்றவர்கள்  கர்ப்பத்தடை தேவை என்று கூறுவார்கள்.  மாறாக, பெண்ணடிமை நிலையிலிருந்து பெண்கள் விடுதலையடையவும், தற்சார்புடன் வாழவும்  கர்ப்பத்தடையை பெரியார் வலியுறுத்துகிறார்.  இதற்காகப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிடுவதையும் பெரியார் வரவேற்கிறார்.  பெண்கள் மட்டுமல்ல, பிள்ளைகள் பலரைப் பெற்ற ஆண்களும் வாழ்வில் இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.  அதிலும் சொத்து, தொழில், வருவாய் போன்றவை இல்லாத பெண்கள் தங்கள் பிள்ளைகளின் நலம் கருதி பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.  இதை முன்னிறுத்தி   பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட வேண்டும் என்று கூறுகிறார்.  ஆண்களுக்கு வாய்ப்பிருப்பது போல பெண்களுக்கும் பிரம்மச்சாரிய வாழ்க்கை முறை அமைவது அவர்களுக்கு விடுதலை தரும்  என்றும் கூறுகிறார்.  

உலகில் எந்தச் சமயமும் பெண்களை  அறத்துடன் நடத்தியதில்லை.  சமய விதிகளை அமைத்து பெண்களைக் கட்டுப்படுத்தின; கட்டுப்படுத்துகின்றன என்பது உலகறிந்த உண்மை.  இந்தியப் பெண்களின் அடிமைநிலை பற்றிக் குறிப்பிடுகையில்  பெண் என்றும் எந்த வயதிலும் தந்தை, கணவன், பிள்ளைகள் என்று எவருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க வேண்டும் என்று  இந்துமத சாஸ்திரங்களும், புராணங்களும் சொல்லுகின்றன. மத சாஸ்திரங்களின் விதிகள் ஆண்களுக்குப் பெண்ணை அடிமையாக்க வேண்டுமென்பதல்லாமல் வேறில்லை என்று உறுதிப்படக் கூறுகிறார். இவ்வாறு தங்கள் மீது திணிக்கப்படும் கருத்துகளைப்  பெண்களும் ஏற்றுக் கொண்டு வாழ்வதால் பரம்பரை பரம்பரையாக அடிமை வாழ்வு வாழ்கிறார்கள் என்கிறார்.  அத்துடன், இன்னமும் பெண்களுக்கு, தாங்கள் ஆண்களைப்போல முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. ஆண் இல்லாமல் பெண்ணால்  வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதுவதற்கு அவர்களுக்குப் பிள்ளைகள் பெறும் நிலையும் அதையொட்டிய கடமைகளும் இருப்பதானால்தான்.  அதனால் அடுத்தவர் ஆதிக்கத்திற்கு இடமேற்படுகிறது.  அதனால் பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் நிலை இடையூறாக அமைகிறது.  பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு அதனால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற கேள்வியைப் பெரியார் முன் வைக்கிறார்.

பெண்கள் விடுதலைக்கு  ஆதிக்க மனப்பான்மை கொண்ட "ஆண்மை" அழியவேண்டும்.  ஆண்கள் முயற்சியால் பெண்களுக்கு என செய்யப்படும் எவ்வித முயற்சியும்  விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது.  பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி என்று தீர்மானமாகக் கூறுகிறார் பெரியார்.

பெரியாரால் இந்த நூலில் சுட்டப்படுவனவற்றில் விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று சட்டப்படி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், ஆண் உரிமைக்கும்  பெண் உரிமைக்கும்  ஏன் வேறுபாடு இருக்க வேண்டும் என்று சென்ற நூற்றாண்டிலேயே கேள்வி எழுப்பிய பெரியார், ஆண்களுக்கு இருக்கும்  அனைத்து உரிமைகளும்  பெண்களுக்கும்  கொடுக்கப்பட வேண்டும் என்ற உறுதியான கருத்தை முன்வைத்து பெண்களின் நிலையை மாற்றப் போராடினார்.  ஆனால் இந்த நூற்றாண்டிலும் பலருக்குப் பெண்களுக்கு சமவுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்கும் மனநிலை வரவில்லை என்பது வியக்கவைக்கும் உண்மை.

சமூக நலமா அல்லது தனிமனித நலமா என்று வரும் போது தனிமனித நலத்தை விட சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பவர்கள் அந்தப் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே உள்ளதாக எண்ணுகிறார்கள். ஆகவே,  பெண்களின்  அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டால் பெண்கள் வேறுவழியின்றி காலம் முழுவதும் பிறரைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்குத் தள்ளப்படுவார்கள் என்ற தன்னல நோக்கில் ஆண்களுக்கு வாய்ப்பாக உருவாக்கப்பட்ட விதிமுறைகள் பெண்கள் முன்னேற்றத்தை வெகுவாகத் தடுத்துவிட்டது. ஆதிக்க நிலையில் இருப்போர்  திட்டமிட்டவாறே  பெண்களை அடிமை நிலைக்குத் தள்ளிவிட்டது.  சமூகக் கட்டமைப்பைக் கட்டிக் காக்க,   தங்கள் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப்  பெண்களையும் சிலரையும் அடிமைப்படுத்தி வைக்கும்   நிலை இக்காலத்திற்குப் பொருந்தாத ஒரு  நிலைப்பாடு. இதனை ஏற்காமல்  பெண்ணுரிமை பேசுபவர்களையும் கேட்பவர்களையும் ஒழுக்கக் குறைவானவர்கள் என்றும், கட்டற்ற பாலின சுதந்திரத்திற்கு அடிபோடுபவர்கள் என்றும் குடும்ப அமைப்பைச் சீர் குலைப்பவர்கள் என்று கொச்சைப்படுத்தி,  கூசாமல்  குற்றம் சாட்டிப் பழிபோடும் பிற்போக்குவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்துதான் வருகின்றன. ஒருவருடைய உரிமையைப் பறித்து அடிமையாக்கி வாழ்வதில் சமூக மேன்மை இருக்க வழியில்லை.

இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் பெண்கள் இருக்கிறார்கள், குடும்பங்களும் இருக்கின்றன.  உலகில் மகிழ்ச்சியான நாடுகள் என்ற தரவரிசைப் படுத்துதலையும், பெண்கள் வாழ மிகச் சிறந்த நாடுகள் என்று தரவரிசைப் படுத்துதலையும் ஆண்டுதோறும் சில நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன.  இந்த இரண்டு பட்டியல்களிலும் முதல் பத்து இடங்களுக்குள் தங்கள் இருப்பை  தக்க வைத்துக் கொண்டிருப்பவை நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள்.  அங்கும் குடும்பங்கள் இருக்கின்றன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடாக வரிசைப்படுத்தப் படும் நாடுகள் உலகின் மகிழ்ச்சியான நாடுகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த தரவரிசைப்படுத்துதலில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் சட்டங்களால் சீர்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறையினரால் விரிவான சமூகப் பார்வையும் விழிப்புணர்வும் ஏற்பட்டுவிட்ட நிலையில், தகவல் பரிமாற்ற புரட்சியால் சுருங்கிவிட்ட உலகில்  மணவிலக்கு, கைம்பெண் மறுமணம், கல்வியுரிமை, சொத்துரிமையும், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் ஆகியவற்றுக்குத் தடையில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதே.  சமயக் கட்டுப்பாடு என்ற விதிகளால் பெண்களுக்குப் பல உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த ஒரு காலத்தில், பெண்களே தங்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியை இப்படி வாழ்வதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்த சென்ற நூற்றாண்டில், பெண்களுக்கு ஏன் இந்த நிலை என்று சிந்திக்கவும் அதை எதிர்க்கவும் துணிந்தவர்கள் வெகு சிலரே.  பெண்களின் வாழ்வு நிலையை உயர்த்த, போராட்டங்களும் பரப்புரைகளும் செய்த பெரியாரையும், சமத்துவ சட்ட விதிகள்  அவற்றின் மூலம் பெண்விடுதலையை உறுதிப்படுத்திய அம்பேத்கரையும் பெண்கள் என்றும் நன்றியுடன் நினைக்க வேண்டும்.

பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையோ என்றார் கண்ணதாசன்.  தாய் என்ற பெண்ணின்  கருவறையிலிருந்து பிறக்கும் ஆண்கள், தனது தலைமுறையைத் தொடர தனது பிள்ளைகளை ஈன்று வளர்த்தெடுக்கும் துணைவியைக் கொண்ட ஆண்கள் பெண்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் பொருட்படுத்தாது குடும்ப வன்முறைகளையும், பாலின வன்முறைகளையும் செய்வதையும்,   பெண்களின் உரிமைகளை மறுத்து அடிமைகளாகக் கருதும் மனப்பான்மையையும்  விட்டொழிப்பது  நாட்டிற்கு முன்னேற்றம் தரும்.

"எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (புறநானூறு:187)
என்ற பாடலில்  நிலத்தைப் பொறுத்ததன்று வாழ்வும் தாழ்வும், அந்தந்த  நிலத்தில் வாழும்  ஆடவரைப் பொறுத்தது அது என உரைக்கிறார் ஒளவையார்.


பார்வை நூல்:
“பெண் ஏன் அடிமையானாள்?”
தந்தை பெரியார்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
பக்கங்கள்:79


சான்றாதாரங்கள்:
Advancing Gender Equality: UN Women at Davos 2023, January 10, 2023
https://www.unwomen.org/en/news-stories/announcement/2023/01/un-women-at-davos-2023

Best Countries for Women
Scandinavian countries dominate this 2022 list of the Best Countries for Women.
https://www.usnews.com/news/best-countries/best-countries-for-women

Discover the 10 Happiest Countries in the World
https://www.plumguide.com/journal/happiest-countries-in-the-world 



''பெண்ணடிமை  நிலை குறித்து பெரியாரின் பார்வை''
 -- தேமொழி
தமிழணங்கு (மார்ச் 2023)
https://archive.org/details/2023_20230228/page/n5/mode/2up
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages