திருமந்திரத்தில் இடைச்செருகல் என்ற திருவிளையாடல்

472 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 24, 2021, 1:46:24 PM7/24/21
to மின்தமிழ்
நன்றி - சிறகு - 
http://siragu.com/திருமந்திரத்தில்-இடைச்ச/




Jul 24, 2021

சைவ சமய அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வதும், தமிழ் மூவாயிரம் என்று குறிப்பிடப்படுவதும் திருமூலர் இயற்றிய திருமந்திரமாலை என்னும் திருமந்திரமாகும். திருமூலர் என்ற சிவயோகியார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார் என்றும் கூறப்படுகிறது. இவரது வாழ்க்கை வரலாறு என்று வழக்கில் இருக்கும் கதை ஒரு தொன்மக் கதை, இயற்கையில் நிகழவியலாக் கூறுகளைக் கொண்டவற்றை அவர் வாழ்வில் நடந்ததாகக் கூறுகிறார்கள்.
கி.பி. 8ஆம் நூற்றாண்டினரான சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வொரு நாயனார் பெயரையும் குறிப்பிட்டு இவருக்கு நான் அடியேன் என்று கூறி வருகையில், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ (- தி.7 ப.35 பா.5) என்று திருமூலர் குறித்தும், திருமூலரின் அடியாருக்கும் நான் அடியேன் என அவர் இயற்றிய ‘திருத்தொண்டத்தொகை’ நூலில் குறிப்பிடுகிறார்.

இவரை அடியொட்டி, இவருக்குப் பின்னர் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘நம்பியாண்டார் நம்பிகள்’, தான் எழுதிய ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யில், சற்றே விரிவாக திருமூலர் குறித்து ஒரு சிறு வாழ்க்கை வரலாற்றுச் செய்யுளைப் பதிவு செய்கிறார்.

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பை புக்கு
முடி மன்னு கூனல் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவி விட்டு என் உச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூலன் ஆகின்ற அங்கணனே
(திருத்தொண்டர் திருவந்தாதி பாடல் – தி.11 ப.33 பா.36)

சிவயோகியார் ஒருவர், சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்னும் திருமூலன் என்ற ஆநிரை மேய்க்கும் ஓர் இடையர் உடலில் புகுந்து குடிகொண்டு, சிவபெருமானின் ஆணையை ஏற்று, வேதத்தில் சொன்னவாறே சிவபெருமான் பெருமையினை முழுத்தமிழில் பாடினார் என்பதை இச்செய்யுள் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. வேதத்தில் சிவன் பற்றிய குறிப்பு கிடையாது. வேதத்தில் இல்லாததை இருக்கிறது என்று கூறும் வழக்கமும் அப்பொழுதே உருவானதன் காரணமும் ஆய்ந்து நோக்க வேண்டிய ஒன்றே. ஒன்று அவ்வாறு எழுதியவர் வேதம் படிக்கவில்லை, படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கொடுக்கப்படவில்லை, அல்லது கற்று உண்மை தெரிந்தவரும் இது தவறான கருத்து என்று அறிந்தும் அறம் தவறி மக்களின் கவனத்திற்குச் சுட்டிக்காட்டாத மனநிலையில் இருந்திருக்கிறார்கள்.

பாம்பு கடித்து இறந்து போன மாடு மேய்க்கும் இடையன் ஒருவரின் மாடுகள் அவர் இறந்தத் துயர் தாங்காது கண்ணீர் விட்ட பொழுது, தனது உயிரை இறந்த இடையனின் உடலில் செலுத்தி இடையனாக உயிர்த்தெழுந்து மாடுகளின் துயர் நீக்கியவர் என்ற நம்ப இயலா புனைவிற்கு முன், வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பு என்பது ஒரு பெரிய கருத்துப் பிழையாகவே தோன்றவில்லை.

நம்பியாண்டார் நம்பிகளுக்குப் பின்னர் வாழ்ந்த கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் அவர் இயற்றிய ‘திருத்தொண்டர் புராணம்’ என்ற பெரியபுராணம் நூலில் திருமூலரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்தெட்டுப் பாடல்களில் மேலும் விரிவாகக் கூறுகிறார். திருமூலர் திருக்கயிலை மலையில் வாழ்ந்த ஒரு சிவயோகியார், நந்தி தேவரின் மாணவர், அகத்திய முனிவருக்கு நண்பர். இவர் பொதிகையில் வாழும் அகத்தியரைச் சந்திக்கச் செல்கையில் வழியில் தில்லை திருச்சிற்றம்பலத்தில் சிவனை வழிபட்டுவிட்டுப் பொதிகை மலை நோக்கிச் செல்கிறார். வழியில் திருவாவடுதுறையில் தங்குகிறார். திருவாவடுதுறை அருகே சாத்தனூரில் ஓர் இறந்து போன இடையனின் உடலையும், அவன் உடல் அருகில் கதறும் மாடுகளையும் கண்டு, அந்த ஆநிரைகளுக்காக இரக்கப்பட்டு தனது உயிரை இடையனின் உடலில் பாய்ச்சி, இடையனாக உயிர் பெற்று எழுந்து மாடுகளின் துன்பத்தை நீக்குகிறார். பின்னர் மாடுகளை ஓட்டிச் சென்று உரியவரிடம் ஒப்படைக்கிறார். இடையனின் மனைவி தனது கணவன் என்று அவரை அணுகும் பொழுது தனக்கும் அவளுக்கும் எந்த உறவும் கிடையாது என்று விலகிச் சென்று ஓர் அரசமரத்தடியில் அமர்ந்து தவம் செய்கிறார். பிறகு மீண்டும் தனது உடலைத் தேடி வருகையில் சாத்தனூரில் அது கிடைக்காமல் இடையன் உடலிலேயே தங்குகிறார். சாத்தனூர் என்பது திருவாவடுதுறைக்குத் தெற்கே சுமார் 3 கி. மீ தொலைவில் இன்றும் உள்ள ஓர் ஊர்.

திருவாவடுதுறைக்கு மீண்டு ஓர் அரசமரத்தடியில் அமர்ந்து தவம் செய்கிறார். அவ்வாறு 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒன்றாக 3000 பாடல்களை “திருமந்திர மாலை” என்ற பெயரில் அருளினார். சேக்கிழார் கூறும் இந்த “வரலாற்றுச் செய்திகள்” பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறாகக் கூறும் முறையில் செய்தருளிய திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. நந்திதேவர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும் நந்திகள் நால்வர், சிவயோகமாமுனி, பதஞ்சலி மற்றும் வியாக்கிர பாத முனிவர் போன்ற செய்திகள் யாவும் திருமூலரின் திருமந்திரம் பாடல்களில் (-தி.10 பா.6) இருந்து பெறப்பட்டவையே என்கிறார் ஆய்வாளர் க. வெள்ளைவாரணனார்.
திருமந்திரம் வரிகளைப் பொருள் கொண்டவிதம் புராணக் கதைகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. (-தி.10 பா.20)
என்ற வரிகளின் வழியாக, மூலன் என்ற இடையர் உடலில் புகுந்து சிவயோகியார் வேறு பிறவியாக மீண்டெழுந்தது சிவனின் சிவாகமப் பொருளைத் தமிழில், தமிழ் வேதமாக திருமந்திரத்தைப் படைக்க இறைவன் பணித்ததாகப் பொருள் கொள்ளப்படுவதின் மூலம் இது புலனாகிறது. “இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி”( -தி.10 பா.19); “ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானு மிருந்தேன்நற் போதியின் கீழே”(-தி.10 பா.21); “ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே” (-தி.10 பா.13) என்று மிகைப்படுத்தப்பட்டுப் பாடப்பட்ட வரிகளும் அவர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று பொருள் கொள்ளப்படுவதிலிருந்தும் புராணம் உருவாக்கப்பட்ட விதமும் தெரிகிறது. எண்ணிலி கோடி, ஒன்பது கோடி, ஏழுகோடி என்று ஆண்டுக் கணக்கு ஒவ்வொரு பாடலுக்கும் மாறிக்கொண்டே இருப்பதற்கு, அந்த முரணான கருத்திற்கு, எவரும் முக்கியத்துவம் கொடுத்ததாகவும் தெரியவில்லை.

‘கயிலாயத் தொருசித்தர் பொதியின் சேர்வார்
காவிரிசூழ் சாத்தனூர் கருதுமூலன்
பயிலாதோ யுடன்வீயத் துயரநீடும்
பசுக்களைக்கண் டவனுடலிற் பாய்ந்து போத
அயலாகப் பண்படையுடல் அருளால் மேவி
ஆவடுதண் துறையாண்டுக் கொருபாவாகக்
குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்
கோதிலா வடகயிலை குற்கினாரே’
என்ற ‘திருத்தொண்டர் புராண சாரம்’ பாடல் திருமூலர் புராணக் கதையின் சுருக்கத்தை ஒரே பாடலில் கொடுக்கிறது.

திருமூலரின் காலம்:

மூவரின் தேவாரப் பாடல்களில் திருமூலரின் செல்வாக்குக் காணப்படுவதால் இவர் அவர்களுக்கு முந்தியவர் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ அரசன் சிம்மவர்மன் தில்லைத் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தான் என்பர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். அதன் பிறகு அது பொன்னம்பலம் என்று அழைக்கப் படலாயிற்று. திருமூலரின் பாடலில் ‘பொன்னம்பலம்’ குறிப்பு உள்ளதால் (ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம் – பாடல் 867) திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ வாழ்ந்தவர் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். உயிர் கூடுவிட்டு கூடு பாய்வது, 3000 ஆண்டுகள் மனிதர் ஒருவர் உயிர் வாழ்வது போன்ற இயற்கைக்கு மாறான புனைவுகளைப் புறந்தள்ளினால், கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சோழமண்டலத்துச் சாத்தனூரில் வாழ்ந்த திருமூலர் என்னும் மாடு மேய்க்கும் சைவப்புலர் 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திர மாலை என்ற நூலை எழுதினார் என்று முடிவு கட்டலாம்.

சங்க காலப் புலவர்களில் கணியன் பூங்குன்றனார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, மருத்துவர் தாமோதரனார் என்று பல்வேறு பின்புலம் கொண்டவரும் பாடல் எழுதும் புலவராகவும் கல்வியறிவு பெற்ற சான்றோராகவும் இருந்தனர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த பழந்தமிழரின் போற்றத்தக்கப் பரந்த மனப்பான்மை, சாதிக் கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்ட இடைக்காலத் தமிழரிடம் இல்லாமல் போனது. இடையர் ஒருவரால் பாடல் எழுத முடியும் என்பதை ஏற்கும் மனப்பான்மை இல்லாத காரணமே கயிலை மலையில் வாழ்ந்த சிவயோகியார் தென்திசை வந்து சாத்தனூர் வாழ்ந்த மாடுமேய்ப்பவர் உடலில் தன் உயிரைப் புகுத்தினார், பாடல்கள் எழுதினார் என்ற கற்பிதங்கள் கொடுக்கப்பட்ட நிலையை உருவாக்கியது. ஒளவையார் வள்ளுவர் கபிலர் போன்ற புலவர்கள் யாவரும் உடன் பிறப்புகள், இவர்கள் பெற்றோரில் ஒருவர் பார்ப்பனர் ஒருவர் புலையர் என்ற கற்பிதங்களுடன் கூறப்படும் பல கதைகளுடன் இக்கதையையும் ஒப்பு நோக்கலாம். இடைக்காலச் சோழர்கள் காலம் சாதிக் கட்டமைப்பில் ஊறித் திளைத்த உச்ச நிலையை அடைந்து, வலங்கை இடங்கை பிரிவினர்கள் என்று அணி பிரித்துக் கொண்டு தங்களுக்குள் பெரிய சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த காலம். ஆகவே இது போன்ற சாதிக் கற்பனைகள் இயல்பே.

திருமூலர் இயற்றிய திருமந்திரம் (திருமந்திரம் – திருமுறை 10):

திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. சைவத்திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ள பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாக திருமூலரின் திருமந்திரம் இடம்பெறுகிறது. தந்திரம் என்று அறியப்படும் ‘ஒன்பது’ உட்பிரிவுகளைக் கொண்டது திருமூலரின் திருமந்திரம். ஒவ்வொரு தந்திரமும் 232 அதிகாரங்களைக் கொண்டவை. 1237 பதிகங்கள், 3000 பாடல்கள் கொண்டது திருமூலரின் திருமந்திரம் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது இதில் காப்புச் செய்யுளோடு சேர்த்து 3048 பாடல்கள் உள்ளன. மற்றும் சிலர் 3100 செய்யுட்கள் என்றும் கணக்கிடுகின்றனர். இருந்தாலும், “முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி” என்ற சேக்கிழார் கூற்றாலும், ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பது வழக்கு என்பதாலும் 3000 செய்யுட்களே மூலப்பாடம் மற்றவை பிற்சேர்க்கை என்பது அறியக்கூடியது. பாடல் எண்ணிக்கை 3000 என்பதற்கும் மேல் சென்ற காரணம் சில பாடல்கள் மீண்டும் மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டதும், சொல் பிரித்து எழுதுகையில் வேறு பாடலாகக் கணக்கிடப்பட்டதாலும் என்ற கருத்தும் உண்டு.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று காணப்படும் நூலின் முதல் பாடலே பின்னர் நுழைக்கப்பட்டது, திருமூலர் தமது நூலை “ஏனவெயிறணிந்தாரை ஒன்றவன்றான்“ எனத் தொடங்கினார் என்பது தான் சேக்கிழார் கூறுவது. ஆகவே கடவுள் வணக்கமாக இப்பாடல் பிற்கால இணைப்பானது என்பதையும் அறியலாகும்.

அடுத்துவரும் பாடலான,

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே (-தி.10 பாயி. பா.2)
என்பதே சேக்கிழார் கூற்றுப்படி நூலில் இருந்த முதல் பாடல் என உறுதிப்பட எவராலும் கூற இயலும்.

அத்துடன், திருமந்திரம் பாயிரப்பகுதியிலுள்ள 112 பாடல்களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும் ஏனைய 45 பாடல்களும் இடைச்செருகல் என்றும் கருத்தும் உள்ளது. அவ்வாறே, பாயிரத்திறுதியில் திருமந்திரப் பாடல் தொகையினையும் பொருட் சிறப்பினையும் கூறும் 99, 100ஆம் பாடல்களும், குரு வரலாறு கூறும் 101, 102 ஆம் பாடல்களும் பிற்காலச் சேர்க்கையாகும் என்றும் அறியப்பட்டுள்ளது (சைவ சித்தாந்த சாத்திர வரலாறு).
திருமந்திர நூலின் பெரும் பகுதி சைவ சமயத் தத்துவங்களான சைவசித்தாந்தம் குறித்து விளக்குவது. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை விலக்கி உயிர் இறைவனை அடைய வழிகாட்டுவது.

Thirumoolar.jpg

1. அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் – ஆகவே அன்பே சிவம் என்ற கருத்தையும்,
2. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே – ஆகவே பசித்தவருக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்பதையும்,
3. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று சிவஞானம் பெற்றுப் பிறவியை நீக்குவதற்கு உடம்பைப் பேணுவது இன்றியமையாதது என்றும்,
4. ஒன்றே குலம் ஒருவனே கடவுள் என்றும்
5. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும்
6. உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் என்றும்
இவர் கூறிய புகழ் பெற்ற கருத்துகள், இன்றும் பலரால் எடுத்தாளப்படும் கருத்துக்களாக உள்ளன.

அறிவியல் அறிவு வழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை உலகாயதத் தத்துவங்கள். உலகாயதக் கோட்பாட்டின் பகுத்தறிவு அடிப்படையில் ‘நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே’ போன்ற கருத்துகள் பாடலில் இருப்பதால் திருமந்திரத்திலுள்ள பதி, பசு, பாசம் மும்மலங்கள் போன்ற சைவ சமயக் கோட்பாடுகள் இடைச் செருகல்களாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் உண்டு. மாறாக உலகாயதக் கோட்பாட்டுக் கருத்துகளும் பின்னர் இடம் பெற்றிருக்கக் கூடும் என்பதற்கும் வாய்ப்பு உண்டு.

சித்தர் இலக்கியப் பாடல்களில் பெரும்பான்மையும் 15 ஆம் நூற்றாண்டும் அதற்குப் பிறகும் என்பதால், உலகாயத மெய்யியல் கோட்பாடுகள் அடிப்படையில், சித்தர் இலக்கியங்கள் போன்ற கருத்து கொண்ட பாடல்களும் பிற்காலப் பாடல்களாக இருக்க வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க இயலாது. ஆகவே, இடைச்செருகல் செய்யப்பட்ட பாடல்கள் எவை என்றும் ஆராய முற்படுகையில் சேக்கிழார் திருமூலர் குறித்துக் குறிப்பிட்ட கருத்துகளோ வரிகளோ திருமந்திரத்தில் இருப்பின், அவற்றைத் தவிர்த்து, மற்றப் பாடல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதே முறையாகும்.

திருமூலர் எழுதிய திருமந்திரம் கலிவிருத்தம் என்னும் யாப்பினால் ஆன நூல். ஆனால், கலிவிருத்த யாப்பில் தோன்றிய பிற்கால நூல்கள் பலவற்றிற்குத் திருமூலர் பெயரைச் சேர்த்துவிட்டனர் என்றும், இந்தத் திருமூலர் என்பவர் பிற்காலத்தவர், மற்றொருவர் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், திருமூலர் பெயரில் 12-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வைத்தியம், யோகம், ஞானம் முதலான பொருள்கள் பற்றியவை. இவற்றை எழுதியவர் திருமூலர் அல்ல, “திருமூல சித்தர்” என்று கூறப்பட்டு மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு நூலும் என்று மேற்கோளாகக் கொடுக்கப்படுகிறது.

“அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறாயிரம்” என்ற திருமூலரின் வரிகளால் அவர் எழுதியது பல கோடி பாடல்கள் என்பதும், ஆனால் நமக்குக் கிடைத்தது மூன்றாயிரம் பாடல்கள் மட்டுமே என்று கருதுவோரும் உள்ளனர். ஆனால் அவர் கூற்றைத் ‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் ஏழுகோடி யுகம் இருந்தேனே’ என்று அவர் தம் வாழ்வு திரித்துக் கூறல் போல ஒரு மிகைப்படுத்தப்பட்ட சொல்லாட்சி என்று கருதுதலே தகும். இது சைவத்தின் முதல் நூல் என்றால் ஏன் பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் ஆய்வாளர்கள் இடையே உள்ளது.

பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் (கிபி 700 – 728), எழுப்பிய காஞ்சி கைலாசநாதர் கோயிலில் அவர் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில், சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றியவராக தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார். ‘சித்தாந்தம்’ என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூலர். வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்பது சித்தாந்தம் என்பதன் பொருள். வடசொற்களும் சொற்றொடர்களும் திருமந்திரப் பாடலில் மிகுதி. அவையும் இடைச்செருகல்கள் உண்டு என்று கருத வைக்கிறது. இந்நூலுக்குப் பழைய உரைகள் எவையும் இல்லை, உரைகள் யாவும் 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே.

எது எப்படியாயினும் திருமந்திரம் பல இடைச்செருகல்களை உள்ளடக்கியது என்று திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் என்று அறியப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த வித்துவான் க. வெள்ளைவாரணனார் அவர்கள் எழுதிய ‘சைவ சித்தாந்த சாத்திர வரலாறு’ நூலே சுட்டிக் காட்டுகிறது. ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்ற திருமூலரின் திருமந்திரத்தில் இன்றைய நூலில் இன்று 3000கக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. இதனால், பிற்கால இடைச்செருகல் பாடல்களால் எண்ணிக்கை அதிகமானது என்பது எவராலும் புரிந்து கொள்ள இயலும். இக்கட்டுரை அத்தகைய இடைச்செருகல்களில் நான்கு பாடல்களை அடையாளம் காட்டுகிறது. இதற்கு உதவிய சொல் – “சிதம்பரம்”.

இந்த ஆய்வுக்கு உதவி செய்தது மேனாள் மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கி அளித்துள்ளதும், இலக்கிய ஆய்வுக்கு உதவும் வகையில் இணையத்தில் வலையேற்றப்பட்டுள்ளதுமான “தமிழ் இலக்கியத் தொடரடைவு” (Concordance for Tamil Literature – http://tamilconcordance.in/index.html) இணையத்தளம். இத்தளத்தின் உதவியுடன் தமிழிலக்கியங்களில் “சிதம்பரம்” என்ற சொல் இடம் பெற்றுள்ள நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழின் முதல் நூலான தொல்காப்பியம் முதற்கொண்டு, பழந்தமிழ் நூல்களான பாட்டும் தொகையும் என அறியப்படும் சங்ககால இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் எனப் பல இலக்கியங்களின் தொடரடைவுகளும் இவ்வாறு கிடைப்பது இது போன்ற சொல்லாய்வுகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:

— தொல்காப்பியம் – இந்நூலில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை) – இவற்றில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— பதினெண்கீழ்க்கணக்கு (திருக்குறள் உட்பட அனைத்து 18 நூல்கள்) – இவற்றில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— ஐம்பெருங்காப்பியங்கள் (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்கள்) – இவற்றில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— முத்தொள்ளாயிரம் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— இறையனார் அகப்பொருள் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— கம்பராமாயணம் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— நளவெண்பா – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— பெருங்கதை – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— கலிங்கத்துப்பரணி – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— வில்லி பாரதம் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— நாலாயிரத் திவ்விய பிரபந்தம் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— தேம்பாவணி – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— சீறாப்புராணம் – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
மேற்காட்டிய இலக்கியங்கள் காலத்தால் முற்பட்டது முதல் பிற்பட்டது வரை சமணம், பௌத்தம், வைணவம், கிறிஸ்துவம், இஸ்லாம் எனப் பல சமய இலக்கியங்களையும், இலக்கண நூலையும் உள்ளடக்கியது. இவை எவற்றிலுமே சிதம்பரம் என்ற சொல் கிடைக்கப் பெறவில்லை.
சிதம்பரம் என்பது சைவ சமயத் திருத்தலம். கோயில் என்றாலே சைவ சமயத்தார் குறிப்பிடுவது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான். சிதம்பரம் என்பது கோயிலின் பெயராக இருந்து, காலப்போக்கில் இன்று அப்பெயர் இன்று அந்த நகருக்கேப் பெயராக மாறியுள்ளது. சிதம்பரம் கோயிலுக்கு வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு. இடைக்காலச் சோழர்களின் குலதெய்வமாகப் போற்றப்பட்டவர் சிதம்பரம் நடராஜர். ஆனால் சிதம்பரமோ நடராஜரோ தமிழ்ச் சொற்கள் அல்ல. அவை பிற்காலத்துச் சொற்கள்.

பல்லவர், சோழர், பிற்காலப் பல்லவர், பாண்டியர், நாயக்கர் காலங்களில் படிப்படியான முறையில் வளர்ச்சி அடைந்த ஊர் சிதம்பரம் என்பதற்குத் தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகளாக 237 கல்வெட்டுகள் சிதம்பரம் கோயிலில் கிடைக்கின்றன. இவற்றில் பதிவாகியுள்ள கோயில் நிர்வாகம், அதிகாரிகள், கணக்கர்கள், நிலம், செல்வம் போன்ற தகவல்கள் மூலம் கோயில் மற்றும் ஊரின் வளர்ச்சியை அறிய முடிகிறது. இக்கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு சோழர் காலற்றவை, மற்றுமொரு மூன்றில் ஒரு பங்கு பாண்டியர்களின் கல்வெட்டுகள், பிறிதும் ஒரு மூன்றில் ஒரு பங்கு பல்லவர், நாயக்கர், மற்றும் பிற துண்டு கல்வெட்டுகள். கல்வெட்டுகள் தரும் செய்திகள் மூலம் ஊர் உருவாக்கத்திலும் கோயில் திருப்பணிகளிலும் சோழர்களின் பங்களிப்பே பெரும்பான்மை இருந்துள்ளதைக் காட்டுகிறது. ஆனால் இந்த 237 கல்வெட்டுகளில் எவற்றிலுமே சிதம்பரம் என்ற சொல் இல்லை, கோயிலுக்கு பெரும் திருப்பணிகள் செய்த பிற்கால நாயக்கர் காலத்துக் கல்வெட்டுகள் உட்பட (சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும், முனைவர் ஜெ ஆர் சிவராமகிருஷ்ணன்) கல்வெட்டுகள் எவற்றிலுமே சிதம்பரம் என்ற சொல் இல்லை.

இவ்வூர் தில்லை என்று இலக்கியங்களிலும், பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. அவ்வாறே சிவன், கூத்தன், ஆடவல்லான், அம்பலத்தான், ஈசன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் நடராஜராக மாறியதும் பிற்காலம். ஆகையால் சிதம்பரம் என்ற சொல் சைவ சமய இலக்கியங்களில் இடம் பெரும் வகையை அறியச் சைவத் திருமுறைகளிலும் சிதம்பரம் என்ற சொல் தேடப்பட்டது. கி. பி. ஏழாம் நூற்றாண்டு மூவர் தேவாரத்தில் துவங்கி, கி. பி. 12 ஆம் நூற்றாண்டு சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் வரை எந்த ஒரு சைவத் திருமுறை இலக்கியங்களிலும் சிதம்பரம் என்ற சொல் இல்லை. சிதம்பரம் என்ற சொல் கி.பி. 15ம் நூற்றாண்டு முதல் வழக்கத்திற்கு வருகிறது, அது எவ்வாறு தில்லை, பெரும்பற்றப் புலியூர் என்ற பெயர்களை மாற்றிவிட்டது என்பதே உண்மையில் சிதம்பர ரகசியம் என நாம் கருதலாம்.

சைவத் திருமுறைகள்:

— திருஞானசம்பந்தர் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) இயற்றிய தேவாரம் (திருமுறை 1,2,3) – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— திருநாவுக்கரசர் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) இயற்றிய தேவாரம் (திருமுறை 4,5,6) – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— சுந்தரமூர்த்தி நாயனார் (கி.பி. எட்டாம் நூற்றாண்டு) இயற்றிய தேவாரம் (திருமுறை 7) – இதில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— மாணிக்கவாசகர் (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு) இயற்றிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (திருமுறை 8) – இவற்றில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
— சேக்கிழார் பெரியபுராணம் (திருமுறை 12) – இவற்றில் சிதம்பரம் என்ற சொல் இல்லை
கி.பி. 15ம் நூற்றாண்டு-திருப்புகழ் பாடல்களிலும், திருமூலரின் திருமந்திரத்திலும் சிதம்பரம் என்ற சொல் கிடைக்கிறது.
திருப்புகழ் பாடல்களில் சிதம்பரம் என்ற சொல் கிடைப்பதில் வியப்பு ஏதும் இல்லை. அது பிற்காலத்து இலக்கியம். ஆனால் பிற்காலச் சொல்லான சிதம்பரம் திருமந்திரத்தில் கிடைக்கும் பொழுது, சிதம்பரம் என்ற சொல் உள்ளப் பாடல்கள் பிற்கால இடைச்செருகல்கள் என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அடுத்து திருப்புகழில் சிதம்பரம் என்ற சொல் தோன்றும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதற்கடுத்து திருமந்திரத்தில் இடைச்செருகல் பாடல்கள் என்று கண்டறியப்பட்ட பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கி.பி. 15ம் நூற்றாண்டு-திருப்புகழ் பாடல்களில் சிதம்பரம்:

அருணகிரியால் போற்றப் பட்ட, விஜயநகர மன்னர் இரண்டாம் பிரபுட தேவராயர் என்ற அரசர் (கி.பி.1422முதல் 1446வரை) கி.பி. 15ம் நூற்றாண்டினர் என்பது ஆய்வாளர்கள் முடிவு. ஆகவே கி.பி. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர் என்பது உறுதியாகிறது.

அருணகிரியார் இயற்றிய திருப்புகழ் பாடல்களில்;

‘சிதம்பர’ என்று 3 முறை, ‘சிதம்பரத்து’ என்று 1 முறை, ‘சிதம்பரம்’ என்று 2 முறை என 6 முறை பாடல்களில் சிதம்பரம் குறித்த சொற்கள் கிடைக்கின்றன. அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிதம்பர (3):

செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா ‘சிதம்பர’ திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே – திருப்:468/15,16
அருள் கொடு ஆடி ‘சிதம்பர’ மேவிய தம்பிரானே – திருப்:474/16
‘சிதம்பர’ குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே – திருப்:891/5

சிதம்பரத்து (1):

ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல ‘சிதம்பரத்து’ அமர்ந்த தம்பிரானே – திருப்:469/8

சிதம்பரம் (2)

வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா – திருப்:475/14
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு – திருப்:1306/1
திருமந்திரத்தில் இடைச்செருகலாக அடையாளம் காணப்பட்ட பாடல்கள்:
இதுவே கட்டுரையின் முதன்மை நோக்கம்;

சிதம்பரம் (4)

தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் – திருமந்:886/2
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் – திருமந்:1726/2,3
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே – திருமந்:2653/4
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் – திருமந்:2722/2

(1)
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும்
தேவர் உறை கின்ற தென் பொது ஆமே.
(திருமூலர் திருமந்திரம் – நான்காம் தந்திரம் பாடல் – 866)

பாடலின் பொருள்: தேவர்க்கும் மூவர்க்கும் மற்று யாவர்க்கும் பெருமானாகிய முழுமுதற் சிவன் என்றும் உறைகின்ற திருவிடம் சிற்றம்பலம் என்ப; இதனையே ‘சிதம்பரம்’ எனவும் கூறுவர். இதனையே திருவம்பலம் எனவும் கூறுவர். இவை எல்லாம் அழகிய அம்பலம் என்னும் தென் பொதுவேயாம் (ப. இராமநாத பிள்ளை உரை).

(2)
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
(திருமூலர் திருமந்திரம் – ஏழாம் தந்திரம் பாடல் – 1696)
பாடலின் பொருள்: மக்கள் யாக்கையின் வடிவு சிவலிங்கம்; மக்கள் வடிவு திருச்சிற்றம்பலமாகும்; மக்கள் வடிவு அருளோனாகிய சதாசிவன்; மக்கள் வடிவு அம்பலவாணர் இயற்றும் அருட்பெருங்கூத்து; சிவ பெருமான் மக்கள் யாக்கையை நடமாடுந் திருக்கோவிலாகக் கொண்டு வடிவாய் அரங்காய் வகுப்பாய் வாழ்வாய்ப் பயனளித்தருள்கின்றனன் (ப. இராமநாத பிள்ளை உரை).

(3)
எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும்
தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே.
(திருமூலர் திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் பாடல் – 2674)
பாடலின் பொருள்: சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே யாகும். அச் சிவனின் அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அச் சிவபெருமான் தான் செய்யும் திருவருட்டொழில்களனைத்தும் சிவசத்தியின் வாயிலாகவே செய்தருள்கின்றனன். அச் சிவபெருமானும் திருவருளும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எங்கும் சிதம்பரம் என்றனர். அவன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்தே. எங்கும் சிவமாகவே இருத்தலால் எல்லாவுயிர்களும் எல்லா வுலகங்களும் எல்லா உலகியற் பொருள்களும் சிவனிறைவில் சார்ந்து நிற்கின்றன. அதனால் அனைத்தும் சிவவண்ணமேயாம். அவ்வாற்றால் எங்கும் தங்கும் சிவனருள் திருவிளையாட்டே எல்லாமாகும் (ப. இராமநாத பிள்ளை உரை).

(4)
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே
(திருமூலர் திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் – 1. குருமட தரிசனம், பாடல் எண் : 5)
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள, சிதம்பரம் என்று குறிப்பிடும் நான்காம் பாடல் திருமந்திரப் பாடலாகக் காட்டப்படுகிறது. இப்பாடல் தேவாரம் இணையத் தளத்தில் (http://thevaaram.org/) தொகுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் இணையக் கல்விக்கழகம் தரும் திருமந்திரம் நூலில் கிடைக்கப் பெறவில்லை.

பாடலின் பொருள்: குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப்படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே (தருமை ஆதீனப் புலவர் முனைவர் திரு. சி. அருணை வடிவேலு முதலியார் உரை).

இங்குக் காட்டப்பட்ட ‘சிதம்பரம்’ என்ற சொல் அடிப்படையில் ஆய்வு செய்தது போல, தக்க ஏரணத்தின் அடிப்படையில் செய்யப்படும் சொல்லாய்வு மேலும் பல இடைச்செருகல் பாடல்களை அடையாளம் காண உதவக் கூடும். காலந்தோறும் கருத்துத் திணிப்பு என்ற நோக்கில் இடைச்செருகல்கள் என்ற தாக்குதல்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் உள்ளாக்கும்பொழுது எக்காலத்தில் அவை எழுதப்பட்டது என்று அறிய முற்படும் கால ஆய்வை அது சவால் நிறைந்ததாக ஆக்குகிறது. கணினி செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் துணையுடன் மேற்கத்திய இலக்கியங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுப் போலிகள் அடையாளம் காணப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய பாடல்கள் அவர் எழுதியதுதானா என்பது போன்ற ஆய்வுகள் மேலைவுலகில் நடைபெறுவது வழக்கமே. அது போன்ற ஆய்வுகள் தமிழிலக்கியங்களின் மீதும் செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.

____________________________________________

(1) திருமூலர், விக்கிப்பீடியா — https://ta.wikipedia.org/s/4d6

(2) திருமந்திரம் — http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04115l1.htm

(3) பன்னிரு திருமுறை – பத்தாம் திருமுறை – திருமூலர் திருமந்திரம் — http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10901&padhi=%20&startLimit=5

(4) சைவ சித்தாந்த சாத்திர வரலாறு, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு : 250

(5) மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 212

(6) திருமூலர் திருமந்திரம், தொடரடைவு – முனைவர்.ப.பாண்டியராஜா — http://tamilconcordance.in/TABLE-TMM.html

(7) சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும், முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர்கலைக் கல்லூரி, மே 23, 2021 — https://youtu.be/SE6mkynuB7c?t=6012

(8) Did Shakespeare Really Write His Own Plays?, Sarah Pruitt, July 15, 2015, History — https://www.history.com/news/did-shakespeare-really-write-his-own-plays

____________________________________________________________

தேமொழி

unread,
Jul 24, 2021, 1:54:38 PM7/24/21
to மின்தமிழ்
மிக்க நன்றி பாண்டியராஜா ஐயா. 
🙏🌹😀

Pandiyaraja

unread,
Jul 25, 2021, 2:30:11 AM7/25/21
to மின்தமிழ்
" சங்க காலப் புலவர்களில் கணியன் பூங்குன்றனார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, மருத்துவர் தாமோதரனார் என்று பல்வேறு பின்புலம் கொண்டவரும் பாடல் எழுதும் புலவராகவும் கல்வியறிவு பெற்ற சான்றோராகவும் இருந்தனர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த பழந்தமிழரின் போற்றத்தக்கப் பரந்த மனப்பான்மை, சாதிக் கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்ட இடைக்காலத் தமிழரிடம் இல்லாமல் போனது. இடையர் ஒருவரால் பாடல் எழுத முடியும் என்பதை ஏற்கும் மனப்பான்மை இல்லாத காரணமே கயிலை மலையில் வாழ்ந்த சிவயோகியார் தென்திசை வந்து சாத்தனூர் வாழ்ந்த மாடுமேய்ப்பவர் உடலில் தன் உயிரைப் புகுத்தினார், பாடல்கள் எழுதினார் என்ற கற்பிதங்கள் கொடுக்கப்பட்ட நிலையை உருவாக்கியது " - மிகவும் சரி. தங்கள் கட்டுரை விரிவாகவும் ஆழமாகவும் செய்யப்பட்ட நல்ல ஆய்வு - பாராட்டுக்கள்.
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Jul 25, 2021, 2:34:33 AM7/25/21
to மின்தமிழ்
பாராட்டுகளுக்கு நன்றி.
உங்கள் தொடரடைவுகளின் உதவி இல்லை என்றால் என்னால் செயல்படுத்தியிருக்க முடியாத ஆய்வு. 
மிகவும் நன்றி  ஐயா. 

KJ

unread,
Jul 26, 2021, 4:08:09 PM7/26/21
to மின்தமிழ்
பாராட்டுகள்

தேமொழி

unread,
Jul 26, 2021, 10:01:51 PM7/26/21
to மின்தமிழ்
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. 

Dr. Mrs. S. Sridas

unread,
Jul 27, 2021, 11:02:52 PM7/27/21
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய தேமொழி அவர்களுக்கு,

திருமூலர் பற்றிய உங்கள் ஆய்வு சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்து.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e493ab4d-40ea-4b96-80e6-4dbdf708c7a5n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 27, 2021, 11:09:11 PM7/27/21
to மின்தமிழ்
மிக்க நன்றி மேடம்.  

அன்புடன் 
தேமொழி 

இசையினியன்

unread,
Oct 12, 2023, 1:52:00 PM10/12/23
to மின்தமிழ்
/// ஆணவம், கன்மம், மாயை

இதற்கும் சனாதன கோட்பாட்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக என் சிற்றறிவுக்கு பொறி தென்படுகிறது. இங்கே இருந்த கோட்பாட்டை தான் அவர்கள் tag செய்து ஆவாள் கோட்பாடாக்கிக் கொண்டணரோ? இதற்கு பதில் கூறுமளவிற்கு எனக்கு இன்னும் தெளிவில்லை. 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 14, 2023, 4:33:30 AM10/14/23
to mint...@googlegroups.com
நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை.. எனினும் மீண்டும் படிக்க வேண்டும். 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Oct 14, 2023, 4:43:32 AM10/14/23
to மின்தமிழ்
நன்றி ஐயா. 
அன்புடன் 
தேமொழி 

Dr. Mrs. S. Sridas

unread,
Oct 14, 2023, 4:52:22 PM10/14/23
to mint...@googlegroups.com
முனைவர் தேமொழி,

திருமந்திரம் கால ஆய்வு நன்றாக அமைந்திருக்கிறது. இன்னும் ஆழமாக ஆய்வு செய்திருக்கலாமா?
அன்புடன்

Dr. Mrs. S. Sridas



தேமொழி

unread,
Oct 14, 2023, 6:03:01 PM10/14/23
to மின்தமிழ்
///திருமந்திரம் கால ஆய்வு நன்றாக அமைந்திருக்கிறது. இன்னும் ஆழமாக ஆய்வு செய்திருக்கலாமா?////

நன்றி,
செய்திருக்கலாம் முனைவர் ஸ்ரீதாஸ், பல கோணங்களில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவரும் அவர்களது பின்புலம் மூலம் அணுகி ஆராய இடமுள்ளது என்றே எண்ணுகிறேன்.   
சைவம் என்ற நூலின்  முதன்மை பொருண்மை தவிர்த்து சித்தர் பாடல், மருத்துவம், அறிவியல் பின்புலம் போன்ற கோணங்களில் திருமந்திரம் குறித்து நான் சில கட்டுரைகள் படித்ததுண்டு. 
பொன்னம்பலம்,  சைவ சித்தாந்தம் ஆகிய சொற்கள் காலம் கொண்டு திருமூலர் வாழ்ந்த காலம் 6-7 நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலம் என்று பல ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.   

திருமூலர் காலத்தைப் பற்றிய பல  கூற்றுகளில்; காலத்தை நிர்ணயம் செய்ய உதவக்கூடிய வரலாற்றுத் தகவல், வழக்காறுகள் என்ற ஒரு கோணத்தின் அடிப்படையில் ஒரு சொல்லின் புழக்கம் எப்பொழுது தோன்றுகிறது என்பதிலிருந்து பார்த்தால், பிற்கால வழக்கில் உள்ள ஒரு சொல் நூலாசிரியர் வாழ்ந்த காலத்தில் வழக்கில் இல்லை என்று நிறுவ இயலும் பொழுது . . . நூலில் அந்த சொல் உள்ள பாடல்களை  இடைச்செருகல் என முடிவு கட்டலாம் என்ற கருதுகோளை  அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். 
மேலும் பல கோணங்களில் ஆராய வாய்ப்புண்டு என்றே கருதுகிறேன். 
நன்றி. 
அன்புடன் 
தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages