
(வெருளி நோய்கள் 771-775: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 776-780
காற்று வீச்சு தொடர்பான அளவுகடந்ததேவையற்ற பேரச்சம் காற்று வெருளி.
சிறு பருவத்தில் காற்று, சூறைக்காற்று, சூறாவளிக் காற்று, புயல் காற்று முதலியவற்றால் ஏற்பட்ட ஊறு உள்ளத்தில் ஆழ் மனத்தில் பதிந்து அதனால் காற்று வெருளி உண்டாகிறது. காற்று என்பது கொல்வதற்கு அல்லது அழிப்பதற்கு என்று எண்ணிக் காற்று மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
புயல் வெருளி(Procellaphobia), கடும்புயல் வெருளி(Tempestaphobia), சூறாவளி வெருளி(Lilapsophobia), சூறைக்காற்று வெருளி( Cyclonophobia) முதலானவற்றையும் காண்க.
குட காற்று எறிந்த குப்பை, வட பால் (பெரும்பாண் ஆற்றுப்படை : 240)
காற்று என்னக் கடிது கொட்பவும்; ( மதுரைக் காஞ்சி 52)
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் (பரிபாடல் :13.25)
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல் (கலித்தொகை : 45.4)
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து (அகநானூறு : 258.6)
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு (புறநானூறு : 41.16)
எனப் பேரச்சம் தரும் காற்றுவீச்சைப்பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
காற்றில் வானூர்திகள் மூலம் பறந்து செல்வதையும் (Aerophobia) இவ்வகைப்பாட்டில் குறிக்கின்றனர். அதைப் பின்பற்றி நானும் முன்னர்க் குறித்துள்ளேன். எனினும் என்பதைக் காற்று வெருளி எனச் சொல்வதை விடக் காற்றுவெளியில் பறப்பதுகுறித்த பேரச்சம் – பறத்தல் வெருளி(Aerophobia) என அதனைக் குறிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
Anemo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காற்று எனப் பொருள்.
உயர்வெளிவெருளி(Aeroacrophobia)யுடன் இது தொடர்புடையது.
00
காற்றுப் பை(air bag) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காற்றுப் பை வெருளி.
காற்றுப்பை (airbag) என்பது எதிர்பாரா ஊர்தி நேர்ச்சியால் மோதல் ஏற்படுகையில் பயணிகள் அல்லது ஓட்டுநர் ஆகியோரைக் காப்பாற்ற உதவுவது.
காற்றுப்பை உயிரைக் காப்பதற்கானது. ஊர்தி மோதியவுடன் மோதல் உணர் கருவியில் உள்ள குண்டு வேகமாக நகர்ந்து ஒரு மின்னிணைப்பை ஏற்படுத்தி, வெடிமாத்திரைகளைப் பற்ற வைத்து, காற்றுப் பைகளை ஊதி, உயிரைக் காப்பாற்றுகிறது. எனினும் இதனால் சில சமயம் காற்று வெளியேறி இன்னல்களும் ஏற்படுகின்றன. சரியாகப் பேணாமையால் வரும் தீங்கே இது. இவ்வாறு காற்றுப்பையால் திடீரென்று காற்று வெளியேறி, மோதலாகி ஏற்படும் காயம் பற்றிய பேரச்சத்தைத் தனியாகக் காற்றுப்பைக் காய வெருளி(Aelosaccophobia) என்கின்றனர். காற்றுப்பை தொடர்பாகத் தனித்தனியே தேவையில்லை என்பதால் இணைத்துக் கூறியுள்ளேன்.
பனிச்சறுக்கு ஆட்டத்தில் காற்றுப்பை பயன்படுத்துகின்றனர். எனவே, ஊர்திப்பயன்பாட்டில் மட்டுமல்லாமல் பனிச்சறுக்குப் பயன்பாட்டிலுள்ள காற்றுப்பை குறித்த வெருளியையும் இது குறிக்கிறது.
Aero – காற்று, saka – உறை. எனவே, காற்றுறை/ காற்றுப்பை.
sacco இலத்தீன் சொல்லின் பொருள் பை.
Anemo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காற்று எனப் பொருள்.
bolsa என்னும் இசுபானியச் சொல்லிற்குப் பை எனப் பொருள்
00
காடுகள் தொடர்பான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கானக வெருளி.
காடு, மரங்கள், மரக்கட்டைகள் இவைபற்றிய அச்சச்சூழலில் இத்தகையோர் மூழ்குவர். காடுகள் தொடர்பான அஞ்சத்தக்கக் கதைகளைச் சிறு பருவத்தில் கேட்பவர்கள் அச்சத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீாளமல் கவலையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்கின்றனர்.
hylo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காடு.
xylo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மரம். சிலர் மர வெருளி என்றும் குறிக்கின்றனர். ஆனால் மரங்கள் அடர்ந்திருக்கும் அடவியைத்தான்(காட்டைத்தான்) இங்கே குறிக்கிறது. எனவே, அடவி வெருளி (xylophobia) எனலாம். மேலும் மர வெருளி-Dendrophobia எனத் தனியாக உள்ளது.
கானக வெருளி, அடவி வெருளி எனத் தனித்தனியே குறிக்காமல் கானக வெருளி என்றே நாம் குறிக்கலாம்.
00
கிசுகிசுப்பு ஒலி கேட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்ளுதல் கிசுகிசுப்பு வெருளி.
மறைவாகவும் மென்மையாகவும் சொல்லப்படும் கிசுகிசுப்பு தன்னைப்பற்றித்தானோ என்ற ஐயத்தாலும் பெருங்கவலை கொள்வர். திரைப்படக் கலைஞர்கள், அரசியல் வாதிகள், செல்வாக்குள்ளவர்கள் தொடர்பான சில மறைவான செய்திகளைக் கிசுகிசுப்பு என இதழ்களில் வெளியிடப்படுவதுண்டு. இதனால் சிலருக்கு நன்மை ஏற்பட்டாலும் பலருக்குத் தீங்குநேர்ந்துள்ளது. எனவே, கிசுகிசுப்புச் செய்தியால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் எனப் பலர் பேரச்சம் கொண்டு கிசுகிசுப்பு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
கிச்சலிப் பழம்(orange) குறித்த அளவு கடந்த பேரச்சம் கிச்சலிப் பழ வெருளி.
கிச்சிலி(ஆரஞ்சு)ப் பழம் நோய் எதிர்ப்புத் திறன். சிறு நீரகக்கற்களைத் தடுக்க உதவும் போன்ற நன்மைகள் உடையது. எனினும் இதன் அமிலத்தன்மையால் நெஞ்செரிச்சல், பற்சிதைவு, சருக்கரைப்பாதிப்பு போன்ற தீமைகளும் விளையும். எனவே, கிச்சிலிப்பழம் குறித்த வெருளி சிலருக்கு வருகிறது.
Portokali என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கிச்சிலி(ஆரஞ்சு). இது பழத்தையும் நிறத்தையும் குறிக்கும். செம்மஞ்சள் நிறம் என்றும் சொல்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5