(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 17 தொடர்ச்சி)
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18
(பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்)
பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதை
வரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்து
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் (நெடுநல்வாடை : 60) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.
மழைமானி முதலான பல அறிவியல் செய்திகளும் இவற்றில் இடையிடையே கலந்து காணப்படுவதையும் கண்டோம். ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்றவகையில் கட்டடங்களை அமைத்த அறிவியல் செய்திகளும் உள்ளன. இளவேனில் காலத்தில் உறங்குவதற்கு ஏற்ற படுக்கையறையில் தென்றல் காற்று வீசுவதை
வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது (நெடுநல்வாடை 61-2) என்கிறார் ஆசிரியர் நக்கீரனார்.
கட்டளை என்பது பலகணி அல்லது காற்றுமாடத்தைக் குறிக்கிறது.
குளிர்ந்த நீரைச் சேமித்து வைத்துக் குடிப்பதற்கான குளிர்கலனும் (ice-pot) குளிர்காலத்தில் பருத்த வாயை உடைய வெண்ணீர்க்கலனும் (hot-pot)பயன்படுத்தப்பட்டமையை
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செந் நெருப்பு ஆர – (நெடுநல்வாடை 64 – 66)
என்னும் வரிகளில் தெரிவிக்கிறார்.
கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைக்காற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய செம்பாகிய குளிர்க்கன்னலில் தண்ணீரைக் குடிக்காமல் பகுத்தாற்போன்ற வாயையுடைய தூபக்கரண்டியாகிய இந்தளத்தில் இடும் சிவந்த நெருப்பின் வெம்மையைப் போன்ற வெந்நீரைப் பருகினர் என்பதை இவ் வரிகள் உணர்த்துகின்றன.
படுக்கை முதலான மனைப்பொருள்கள், கட்டில் முதலான இல்லணிகள் (furniture) ஆகியன குறித்தும் குறிப்புகள் உள்ளன. அரண் அமைப்பு மதிலமைப்பு முதலானவை குறித்தும் பல்வகைக் குறிப்புகள் உள்ளன. இவை குறித்துப் பின்னர்க் காணலாம்.
இலக்கியங்களிலேயே நம்மால் எண்ணற்ற குறிப்புகளைக் காணமுடியும் பொழுது உரிய துறைநூல்களில் மிகுதியான அறிவியல் உண்மைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இத்தகைய உண்மைகளை மேனாட்டு அறிஞர்கள் மேற்கொள்ளும் பல்வகைப்பட்ட ஆய்வு முடிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. 1950களில் சோவியத்து நாட்டினர் குமரிக்கடலில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொண்டு கடலுள் முழ்கிய தமிழர் நாகரிகம், பண்பாடு முதலியவற்றில் அடைந்திருந்த சிறப்புகளை வெளிப்படுத்த முன்வந்தனர். மத்திய அரசு மறுத்து விட்டது. பண்டைத்தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்திய ஆராய்ச்சி அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான, எடின்பரோவைச் சேர்ந்த கிரகாம் என்காக்கு (Graham Hancock) என்னும் தொல்லியல் ஆராய்ச்சியாளர், தம் சொந்தச் செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்போதைய பூம்புகார் நகரின் அருகிலேயே கடலில் 18 கல் ஆழத்தில் பழைய பூம்புகார் நகரம் புதையுண்டு உள்ளமை அறிய வருவதாகவும் சிதையாத கட்டடங்கள் கடலின்அடியில் உள்ளன என்றும் கி.மு.17,000 ஆண்டிற்கு முற்பட்ட தொன்மைச் சிறப்பு உடையன என்றும் வெளியிட்டார். தமிழர்க்கு நலன் சேர்க்கும் எந்த வரலாற்று உண்மையையும் மறைக்க எண்ணும் மத்திய அரசு அவரது உதவியை உதறியதாலும் மேற்கொண்டு ஆராய்ந்து உண்மைகளை உலகிற்கு உணர்த்த விரும்பாமையாலும் நாம் அடைந்திருந்த எண்ணற்ற அறிவியல் சிறப்புகள் மறைந்தே கிடக்கின்றன. தமிழ்நாட்டரசாவது தமிழர்நல அரசாக மாறி ஆழ்கடல் ஆராய்ச்சிகளையும் அகழ்வாராய்ச்சிகளையும் தொடர்ந்து உண்மைகளை வெளிக்கொணர முன்வரவேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு 07.05.2011
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88
சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே, கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சனாதனத்தை எதிர்ப்பது இயற்கை. அதற்காக இறை மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாகக் கருதுவது தவறே. இறையன்பர்கள் பலரும் தாங்கள் இல்லாத மேற்சாதியால் ஒடுக்கப்படுவதாகவும் இழிவுபடுத்தப் படுவதாகவும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே இறையன்பர்கள் இறைவனின் அருள் அனைவருக்கும் சமமாகக் கிட்ட வேண்டும், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கோவில் நுழைவுரிமையோ சம வழிபாடோ மறுக்கப்படக் கூடாது, கோவில் பூசாரிகள் திருநீறு, குங்குமம் தருவதில் அலட்சியமோ புறக்கணிப்போ காட்டக் கூடாது, சாதி வேறுபாடின்றி நல்லொழுக்கம் உள்ள யாரும் பூசாரிகளாக இருக்கலாம், செல்வம் அல்லது செல்வாக்கு அடிப்படையில் இறைப் பற்றாளர்களை மதிக்காமல் அனைவரையும் இணையாக மதிக்க வேண்டும் என்று கருதுபவர்கள், ஆரிய எதிர்ப்பாளர்களாக மாறுகிறார்கள். எனவே சனாதன எதிர்ப்பாளர்களாக விளங்குகிறார்கள். எனவே, கடவுள் மறுப்பாளர்கள்தாம் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் என்பது தவறு.
இது மிகவும் தவறான வாதம்.
தமிழ்த்தென்றல் திருவிக கடவுள் மறுப்பாளரும் அல்லர், இந்து மதப் பகைவரும் அல்லர். இவ்வாறு கடவுள் நம்பிக்கையாளர்களும் இந்துவாக உள்ளவர்களும் தன்மான உணர்வுடன் சனாதனத்தை எதிர்த்துக்கொண்டுதான் உள்ளனர். வேறொன்றும் விளக்கத்தெரியாமல் இவ்வாறு கூறுகிறார்கள்.
“இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது. சமரசம் சன்மார்க்கம் ஏற்பட்டு வரும் இந்நாளில் இடைக்காலத்தில் ஏற்பட்ட வருணாச்சிரமத்திற்கு ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.
ஒருவன் கோவிலுக்குப் போவது, போகாமலிருப்பது மதச்சின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பது, உருவத்தை வழிபடுவது, வழிபடாமலிருப்பது, ஆத்திகம் பேசுவது, நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொண்டும் செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம்.
இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடமுண்டு. பிறப்பினால் சாதி கற்பிப்பதே வருணாச்சிரமாகும்.
இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. வருணாச்சிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவதில்லை” என்கிறார் தமிழ்த்தென்றல் திருவிக(ல்யாணசுந்தரம்) அவர்கள். (‘நவ சக்தி‘ இதழ், 6.5.1931)
இவ்வினாவை என்னை நோக்கியே ஒருவர் கேட்டதால் நான் பின்வரும் விளக்கத்தையும் அளிக்க விரும்புகிறேன்.
நான் ‘இறைநெறி மன்றம்’ என்னும் அமைப்பின் தலைவராக இருந்து இறைப்பணி செய்து வந்துள்ளேன். கோவில்களில் மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தியுள்ளேன். பாவை நோன்புகள் நடத்தச் செய்து பங்கேற்றுள்ளேன். புதிதாக எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள கோயில்களுக்குப் போய்விட்டு வருவேன். ஆனால், பொதுவாகத் தனித் தமிழன்பர்களாக இருந்தால், பிராமண எதிரி என்றும் தி.க. அல்லது தி.மு.க. என்றும் முத்திரை குத்துவதே வழக்கம். அதனால் இங்ஙனம் சிலர் சொல்கிறார்கள்.
நான் கலைபண்பாட்டுத்துறை, தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் பாவை விழா, கார்த்திகை ஒளி விழா, சிவன் இரவிற்காகக் காரிக்கலை விழா, தைப்பூச விழா முதலியவை நடத்த முன்மொழிவு அளித்து அவை ஏற்கப்பெற்று இன்று அவை அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சிப் பட்டியலில் முதன் முதலில் இவற்றை நான் சேர்க்கப் பரிந்துரைத்த பொழுது சிலர், மத விழாக்களை அரசு நடத்துவதாக எனக் கேள்வி வரும் என்றார்கள். பட்டியலில் நான் வேளாங்கண்ணி விழா, நாகூர் கலைவிழா, முதலியவற்றையும் அரசின் மதச்சார்பின்மைக்காக நல்லிணக்கக் கலைவிழாவையும் சேர்துள்ளேன் என்பதைக் கூறினேன். மேலும் கலைகளைத் தேடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்காமல் மக்கள் கூடுமிடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கலைகளைப் பரப்ப வேண்டும் என்று வாதிட்டேன். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நான் மத எதிர்ப்பாளன் அல்லன். அதே போல் அரசும் மக்களின் நம்பிக்கைகளை மதித்து இத்தகைய மதவிழாக்களைக் கொண்டாடி வருகிறது என்பதையும் உணர வேண்டும்.
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 122-125