கால்டுவெல்: திராவிட முகவரி

513 views
Skip to first unread message

Suba

unread,
Aug 28, 2018, 4:26:59 AM8/28/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கவிஞர் வைரமுத்துவின் இக்கட்டுரை அறிஞர் கால்டுவெல் பற்றிய பல முக்கியக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.  இக்கட்டுரை  /இவ்வுரை தொடர்பாக சில கருத்துக்கள்.

1. // 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தரையில் கால் மடக்கி அமர்ந்து மணலில் விரல் செலுத்தி எழுதித் தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, //
--> 1706ம் ஆண்டு சீகன்பால்க் தரங்கம்பாடி வந்தார். இதனை வைரமுத்து கட்டுரை 1709 என்று தவறாகக் குறிப்பிடுகின்றது.

2. // வேட்டி கட்டிய விலங்குகளாய்த் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சமூக மரியாதை பேசப்படவில்லை பெரிதாய். //

இது கண்டனத்திற்குறிய ஒரு சொல் பய்ன்பாடு. கட்டுரையை எழுதி அதனைப் பிரசுரிப்பதற்கு முன் வைரமுத்து அவர்கள் இதனை வாசித்து, தான் என்ன எழுதுகின்றோம் என யோசித்திருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை ’வேட்டி கட்டிய விலங்குகள்’ எனக் குறிப்பிடும் உரிமையை இவருக்கு யார் வழங்கியது? ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டார்கள்.    அதனைத் தான் கட்டுரை வெளிப்படுத்த வேண்டுமேயன்றி பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இழிவு செய்யும் இவ்வகைச் சொற்பயன்பாடு அநாகரிகமானது.   கவிஞர் வைரமுத்து இதனைக் கருத்தில் கொள்வார் என  எதிர்பார்ப்போம்!!

-சுபா




ஓவியம்: ஜீவா

ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பெளதிகப் பெயர் கால்டுவெல்.

அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற - எவராலும் பின்தொடர முடியாத தனித்தன்மை மிக்கதாகவும் திகழ்ந்தது. அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை.

வசீகரமானது அவரது வாழ்வு; ஆனால் வலிகளால் நிறைந்தது.

கால்டுவெல் கடந்து வந்த பாதை

அயர்லாந்தில் பிறந்து, தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு 10 வயதில் இடம்பெயர்ந்து, 16 வயது வரை ஆங்கில இலக்கண இலக்கியக் கல்வி பெற்று, கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று, பின்னர் மெய்யுணர்வு நாட்டம் பெற்று, சமயப் பணியே தம் பணி என்று இறுதியாக உறுதியுற்று, லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் 20 வயதில் இணைந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஐரோப்பியத் தொன்மொழிகளின் நீதி நூல்களையும் சமய நூல்களையும் தேர்ந்து கற்றுத் தெளிவு பெற்று, டேனியல் சேண்ட்ஃபோர்டு என்ற மொழிநூல் மேதையிடம் கிரேக்க மொழியை உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்து, சமயத் தொண்டர் சங்கம் ஆற்றுப்படுத்த, தென்தமிழ்நாட்டின் திருப்பணிக்காக 24 வயதில் கப்பலேறி, நான்கு மாதக் கப்பல் பயணத்தில் ஆந்திரம் - ஆரியம் இரண்டும் கற்று, 1838-ல் சென்னையில் இறங்கி ‘ட்ரூ’ என்னும் ஆங்கில அறிஞரோடு மூன்றாண்டு வாசம் புரிந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழர் பண்பாட்டையும் உயிருக்குள் உள்வாங்கி, 400 மைல் தூரத்தையும் நடந்தே கடப்பதென்று பாண்டி நாட்டுக்குப் பயணப்பட்டு, சோழ நாடடைந்து, காவிரியோடு நடந்து, சிதம்பரம் - மயிலாடுதுறை வழியே தரங்கம்பாடி சென்று தங்கி, குடந்தை அடைந்து, நிலவளம் - நீர்வளம் - மொழிவளம் - பண்பாட்டு வளத்தை உற்றறிந்து, திருவரங்கம் புகுந்து நீலகிரி அடைந்து கோவை வழியே மதுரை அடைந்து, பொருனை வழியே பாளையங்கோட்டை கடந்து நாசரேத் சென்று தன் இறுதி எல்லையான இடையன்குடியை ஓர் இரவிலே அடைந்து, அங்கேயே தங்கி, தன் தேகம் வருத்தித் தெருக்கள் திருத்தி, தெருப் பணியோடு திருப்பணி தொடங்கி, 29 வயதில் நாஞ்சில் நாட்டில் வளர்ந்த நங்கை எலீசா என்னும் கிறித்துவத் திருமகளை மணம்புரிந்து, சமயப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றிமுடித்து, 33 ஆண்டுகள் முயன்று கிறித்துவக் கோயில் கட்டியெழுப்பி, தமது 77-ம் வயதில் இயற்கை கொழிக்கும் கொடைக்கானலில் இயற்கை எய்தி, இடையன்குடியில் தான் கட்டிய கோயிலில் அடக்கஞ்செய்யப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒருவரிச் சரிதை.

கால்டுவெல்லின் வாழ்க்கை இத்தோடு கழிந்திருந்தால் காலப் பெருவெள்ளத்தில் மற்றுமொரு குமிழியாய் ஓசையின்றி உடைந்திருப்பார். ஆனால் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற பேராய்வுதான் அவருக்குக் கால முகவரி தந்தது; திராவிடம் என்ற இனத்துக்கு மூல முகவரி தந்தது.

18-19-ம் நூற்றாண்டுகளில் தமிழ் இனத்தின் மீது ஒரு கெட்டி இருட்டு கொட்டிக் கிடந்தது. சூரியக் கதிர்களும் துளைக்க முடியாமல் இறுகிக் கிடந்தது அந்த இருட்டு. அந்த வெளியேறாத இருட்டை வெட்டியெடுத்த ஐரோப்பியக் கோடரி கால்டுவெல்.

சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - பண்பாடு - கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் - காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர்.  இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே.

கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது. 1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மார்பில் பூணூல் தரித்து, கிறித்துவ மதம் பரப்பிய தத்துவ போதக சுவாமி என்ற ராபர்ட் டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வருகைதந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தரையில் கால் மடக்கி அமர்ந்து மணலில் விரல் செலுத்தி எழுதித் தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து  வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திருநெல்வேலியில் ‘சாந்தபுரம் -

சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடிகள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் ஆகிய பெருமக்கள் செய்த பெருந்தொண்டு தமிழையும் ஒரு மொழியென்று முன்னிறுத்தியது மேற்குலகில்.

ஆனால், தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சம்ஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல்லமை கொண்டதென்றும் ஐரோப்பிய அறிவுலகம் அறிந்து மதித்தது கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ 1856-ல் இங்கிலாந்தில் வெளிடப்பெற்ற பிறகுதான். அதுவரை இந்திய மொழிகளின் மூலம் குறித்து ஐரோப்பாவில் நம்ப வைக்கப்பட்ட பிம்பம் கண்ணாடி நிழல் மீது கற்பாறை விழுந்ததுபோல் உடைந்து சிதறியது. திராவிடம் என்பது மொழிப்பரப்பு மட்டுமன்று; அது ஒரு நிலப்பரப்பு மற்றும் பண்பாட்டுப்பரப்பு என்றும் பின்பு ஐரோப்பா அறிந்தது.

தொல்காப்பியம் முதல் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் வரையிலான நூல்களெல்லாம் தமிழின் அமைப்பிலக்கணம் கூறுவன. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சிதான் முதன்முதலில் தமிழின் ஒப்பிலக்கணம் கூறியது. ஒப்பிலக்கணம் என்பது மொழிப்புலத்தின் புத்தறிவியல். தீயும் சக்கரமும் கண்டறியப்பட்ட பிறகு மனித குலப் பயணம் புதுப்பாய்ச்சல் கொண்டதுபோல, ஒப்பிலக்கணம் என்ற மொழிஅறிவியல் தோன்றிய பிறகுதான் மொழிக் குடும்பங்கள் புத்தொளி பெற்றன.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், சம்ஸ்கிருதம்தான் தமிழுக்குத் தாய் என்ற கருத்தை முதலில் கருக்கலைப்புச் செய்தது. மனிதர்களுக்கு மரபணுக்கள் மாதிரி மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் என்று கண்டறிந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்களை ஒப்பிட்டு உறழ்ந்து, தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பதை உலகமே ஒப்புக்கொள்ள ஓங்கி உரைத்தது. திராவிடம் என்பது, ஓர் ஆதி இனத் தொகுதியின் அடையாளக் குறி - இந்த மண்ணும் மண் சார்ந்ததுமான உரிமை உயில் என்பதை உறுதி செய்தது.

திராவிடம் எனும் ஆதிச் சொல்

திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச் சொல்.

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்று மனோன்மணிய ஆசிரியரும், ‘திராவிட உத்கல வங்கா’ என்று மகாகவி தாகூரும், ‘திராவிடத்திலே’ என்று தாயுமானவரும் சுட்டுவதற்கு முன்பே 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கியமான லீலா திலகம் ‘திராவிடம்’ என்பதைப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. 8-ம் நூற்றாண்டில் குமாரில பட்டர் என்ற வடமொழி ஆசானும் ‘ஆந்திர திராவிட பாஷா’ என்று குறிக்கிறார். பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை ‘திராவிட மன்னன்’ என்றே அழைக்கப்படுகிறான்.  விஷாலர் என்று மனுதர்ம சாஸ்திரம் இழியினத்தாராக அழைக்கும் பட்டியலில் ஒட்டரர் - காம்போஜர் - யவனர் - சாகர் - பாரதர் - சீனர் - கிராதர் இவர்களோடு திராவிடர் என்ற பெயரையும் எழுதிப்போகிறது. இப்படி இலக்கிய இலக்கண புராண முற்சுட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள்சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.

இந்தி - வங்காளம் போன்ற கெளரிய மொழிக் குடும்பத்தில் சதையும் நரம்புமாய் ஒட்டிக்கிடக்கும் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கத்தை ஆய்ந்து அந்த மொழிகள் வடமொழிச் சிதைவில் பிறந்தவை என்று மொழி வல்லார் முடிவு கட்டினர். மெழுகுவத்தியை ஊதி அணைத்தவர்கள் விண்மீனையும் அப்படியே அணைத்துவிடலாம் என்று கருதி, உச்சி வானம் பார்த்து உதடு குவித்ததுபோல, இந்திக்கும் வங்காளத்துக்கும் வைத்த அளவுகோலையே திராவிட மொழிகளுக்கும் நீட்டித்தனர். அவையும் வடமொழி வழிவந்தவையே என்று நம்பினர்; ஐரோப்பிய அறிவுலகத்தையும் நம்ப வைத்தனர்.

வடமொழியைக் கழித்துவிட்டால் இந்தியும் வங்காளமும் இயங்கவே இயங்கா. அதேபோல், தெலுங்கும் மலையாளமும் கன்னடமும்கூட இயங்குவது அரிது; அல்லது கடிது. ஆனால், வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்த பிறகும் வாழ வல்லதும் வளர வல்லதும் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் தமிழ் மொழி ஒன்றே என்று கால்டுவெல் நிறுவினார். ஒரு மொழி தன் வேர்ச்சொற்களை எப்படி வினைப்படுத்துகிறது என்ற அளவுகோல் கொண்டுதான் அதன் பிறப்பும் இருப்பும் பெருமையும் பெறப்படும் என்று கணக்கிட்ட கால்டுவெல்லின் ஆராய்ச்சிகள் அரிதானவை. அறிவுலகத்தால் மறுக்க இயலாதவை.

அவர் எழுதுகிறார்: “திராவிட மொழிக் குடும்பங்களின் வேர்ச்சொற்கள் ஓரசைத் தன்மை உடையவை; உயிர் நெடில் உடையவை; குறிலோடு உயிர்கூடிய மெய்யீறு கொண்டவை.” இதை மெய்ப்பிக்க அணுவைப் பிளப்பதுபோல் சொல்லைப் பிளக்கிறார். ‘பெருகுகிறது’ என்ற சொல் ஆறசை உடையதாயினும் உண்மையில் அதன் வேர் ஓரசையே என்று உணர்த்துகிறார்.

பெருகுகிறது என்ற சொல்லில் ஈற்றசையாகிய ‘அது’ அஃறிணை ஒருமை விகுதி; ‘கிறு’ என்பது நிகழ்கால இடைநிலை. இரண்டையும் கழித்தால் ‘பெருகு’ என்பதே வினையின் பகுதி. ‘கு’ என்பது தன்வினை உணர்த்தும் அஃறிணைச் சொல்லாக்கம். எனவே ‘பெரு’ என்பதே வினைமூலம் என்று பெறப்படும். இதிலும் ஒலிநயம் கூட்ட வரும் உகரம் களைந்தால் ‘பெர்’ என்பதே வேர்ச்சொல்லாய்ப் பெறப்படும். திராவிட மொழிகள் அனைத்துக்கும் இந்த வேர்ச் சொல் விதி பொருந்தும்; வேர்ச் சொல் அடிப்படையில் ஆராய்ந்து திராவிடமும் சமஸ்கிருதமும் வெவ்வேறு குருதிக்குடும்பம் என்று விளக்கமுறச் செய்தார் கால்டுவெல்.

“திராவிட மொழிகளில் சமஸ்கிருதச் சார்புத் தன்மைகளைவிட எதிர்த்தன்மைகளே மிகுதி. திராவிட மொழிகளின் இடப்பெயர்களும் எண்ணுப் பெயர்களும் பெயர்வினை என்ற சொல்லாக்கங்களும் சம்ஸ்கிருதத்தோடு முற்றிலும் வேறுபட்டவை. தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் அளவு, ஆங்கிலம் கடன் வாங்கிக்கொண்ட இலத்தீனைவிடக் குறைவுதான்” என்று நீண்ட ஆய்வுகளில் நிறுவினார் கால்டுவெல். இந்த ஆய்வுகளால் தமிழைக் கட்டிப்போட்ட சம்ஸ்கிருதத்தின் நூற்றாண்டு முடிச்சுகளை நுட்பமாக அவிழ்த்தார் கால்டுவெல்.

திருந்திய மொழிகளும், திருந்தா மொழிகளும்

திராவிடக் குடும்ப மொழிகள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எண்ணுப் பெயர்கள் கொண்டு எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். தமிழின் ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் மலையாளத்திலும் ஏழு, கன்னடத்தில் ஏளு, துளுவில் ஏளு, தெலுங்கில் ஏடு என்று வழங்கப்படுகிறது. தமிழ் ‘ழ’கரம் தெலுங்கில் ‘ட’கரமாகும், கன்னடத்தில் ‘ள’கரமாகும். ஆகவே அவையாவும் ஒரே குடும்பம் என்று உறுதிசெய்தார்.

மலையாளம் என்ற மொழிப்பெயரை ‘மலய’ என்ற வடமொழியின் திரிபு என்று கருதுவாருண்டு. அது அவ்வாறன்று. தமிழில் வழங்கும் ‘மல்’ என்ற வேர்ச் சொல்லுக்கு வளம், வலிமை என்று பொருள். அதனால்தான் பெருங்குன்றுக்கு ‘மலை’ என்று பெயர் வந்தது. எனவே மலையாளம் என்ற மொழிப்பெயரே அது தமிழ்க் குடும்பம் என்று சுட்டுகிறது.

தெலுங்கு மொழியை ஆதிப் புலவர்கள் அழைத்த பெயர் தெனுகு அல்லது தெனுங்கு என்பதே. அது அவ்வாறாயின் ‘தேன்’ என்ற வேரடியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. இது ஏற்புடைத்தாயின் தமிழ் வேரிலிருந்தே நமது சகோதரத் தெலுங்கு மொழியும் பெயர்பூண்டிருக்க வேண்டும் என்று பெறப்படும்.

வடமொழியில் இருந்து பிறந்ததே ‘கர்நாடகம்’ என்று சிலர் கருதுவர். ஆனால், மொழி அறிஞர் குண்டர்ட் கூற்றுப்படி ‘கரு+நாடு+அகம்’ என்ற தமிழடியாகப் பிறந்தது என்பதே சால்புடைத்து.

துளு மொழிக்கு எழுத்துருவும் இல்லை; இலக்கியமும் இல்லை. ஆனால் அது அச்சு வடிவம் கண்டதென்னவோ கன்னட எழுத்துருவைக் கடன்வாங்கித்தான். எனவே, அதுவும் திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கம் என்பது ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது.

பிறப்புமுறை - ஒலிப்புமுறை - அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் அவரே உணர்த்தினார்.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

தமிழ் - மலையாளம் - தெலுங்கு - கன்னடம் - துளு - குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் - கோதம் - கோண்ட் - கூ - ஓரியன் - ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். சம்ஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதென்பதைத் திருந்தா மொழிகளைக்கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

“திராவிட மொழிகளைச் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். சம்ஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதனவென்று மதிப்பதில்லை.” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண முதல் பாகத்தில் கால்டுவெல் கூறும் கட்டியம் இது. இந்தக் கருத்தை வெறுப்பாருண்டு; மறுப்பாரில்லை.

மறதியின் புழுதி மறைத்த அருந்தொண்டுகள்

கால்டுவெல் ஊர் திருத்தியும் சீர்திருத்தியும் பேர்திருத்தியும் ஆற்றிய பெருந்தொண்டுகள் பலவற்றை மறைத்துவிட்டது மறதியின் புழுதி.

ஒன்பது பள்ளிகள் உண்டாக்கி, பிள்ளைகளுக்கு அவர் மதிய உணவு தந்த மாண்பு மறந்து போயிற்று. வேட்டி கட்டிய விலங்குகளாய்த் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சமூக மரியாதை பேசப்படவில்லை பெரிதாய். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பேரொளியின் முன்னே அவர் எழுதிய ‘தாமரைத்தடாகம்’, ‘ஞான ஸ்நானம்’, ‘நற்கருணை’, ‘திருநெல்வேலிச் சரித்திரம்’ போன்ற தீபங்கள் மங்கிப்போயின. குங்குமத்தின் குழந்தை போன்ற தேரியின் செம்மண்ணை வியன்னா ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, உலகில் எங்குமே அறியக் கிடைக்காத அரிய மண் அதுவென்று நெல்லைச் சீமைக்கு அவர் பெற்றுத்தந்த பெரிய பெருமை பெரிதும் அறியப்படவில்லை. படைப்போவியமாய் எழுதிப்பார்த்துப் புடைப்போவியமாய் அவர் எழுப்பிய கிறித்துவத் திருக்கோயில் போதிய கீர்த்தி பெறவில்லை. அந்த இடையன்குடி ஆலயத்திலேயே அவர் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிவுலகம் தவிரப் பிற உலகம் அறியவில்லை.

சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் சமுதாயப் பணியும் ஆற்றி, திராவிடம் என்ற கருத்தியலை இமயத்தில் ஏற்றி வைத்து இங்கேயே - இந்த மண்ணிலேயே தன் பூத உடலைப் புதைத்துக்கொண்டார். இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை - சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப்பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது.

இதை எனது கூற்றாக முன்வழிவதைவிடக் கலாநிதி க.கைலாசபதியின் கூற்றை வழிமொழிவதே வழிகாட்டுதலாகும். “தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” என்பது அவரது திறனாய்வுத் தீர்ப்பு.

நன்றி அய்யனே! ஒரு தலைமுறைக்கே தலையறிவு தந்தவனே! எங்கள் மூல முகவரி அறிந்து சொன்ன மூதறிஞனே! தாய்க்கு முகமெழுதிய தனயனே! அயர்லாந்தில் கருவுற்று இடையன்குடியில் திருவுற்றவனே! பைன் மரங்களுக்கிடையே கண் விழித்துப் பனை மரங்களுக்கிடையே கண்மூடியவனே! உனக்கும் கிறித்துவச் சமுதாயத்தின் பெருந்தொண்டுக்கும் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்க உன் புகழ் என்று வானம் பாடுகிறது. தெற்கத்திக் காற்று ‘ஆமென்’ சொல்கிறது. திராவிடச் சமுதாயம் ஆமென்று சொல்கிறது!

மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் ஆகஸ்ட் 25  அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.




--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Aug 28, 2018, 4:43:05 AM8/28/18
to மின்தமிழ்


On Tuesday, August 28, 2018 at 1:26:59 AM UTC-7, Dr.K.Subashini wrote:
கவிஞர் வைரமுத்துவின் இக்கட்டுரை அறிஞர் கால்டுவெல் பற்றிய பல முக்கியக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.  இக்கட்டுரை  /இவ்வுரை தொடர்பாக சில கருத்துக்கள்.

1. // 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தரையில் கால் மடக்கி அமர்ந்து மணலில் விரல் செலுத்தி எழுதித் தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, //
--> 1706ம் ஆண்டு சீகன்பால்க் தரங்கம்பாடி வந்தார். இதனை வைரமுத்து கட்டுரை 1709 என்று தவறாகக் குறிப்பிடுகின்றது.

வைரமுத்துவுக்கு சரியாக நோட்ஸ் எடுப்பதிலும் , ரெஃபரென்ஸ்  கொடுப்பதிலும்  அக்கறையில்லை என்பதை  அவர்  ஆண்டாள் விவகாரத்தில் மாட்டிக் கொண்ட பொழுதே பார்த்தோமே 

தேமொழி

unread,
Aug 28, 2018, 11:52:17 PM8/28/18
to மின்தமிழ்


"கவிஞர் வைரமுத்துவின் 

திராவிட மந்திரம்!"
================================== 
தோழர் பெ. மணியரசன் 
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் 
==================================

பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.

சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.

வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.

“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)

“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது - அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் - திருக்குறளில் - காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!

வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 - 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 - 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 - 1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 - 1819), இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 - 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.

வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!

தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?

கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்! அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.

மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.

தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனி மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?

கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு - தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே - வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் - பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”

- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் - புலவர் கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் - 7.

ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.

ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
----------------------------------------------------------

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.

இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான - திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :

“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் - Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.

“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் - உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”

- இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் - Kavithasaran Pathipagam, Chennai - 600019, பக்கம் - 5,6.

மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் - திராவிடம் - தமிழர் தொடர் கட்டுரை).

மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள் கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை - மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர - திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று தன்விருப்பப்படி - சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!

கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.

இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” - “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் - “Indian Antiquities By the Late Bishop Caldwell” என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை - பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் - மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை போன்ற தமிழ் நூல்கள் தமிழர் - தமிழகம் - தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?

அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!

இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை - மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.

கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண்டாட்டம் போட வேண்டும்?

“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று - ஆரியச்சொல்!

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான - “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக - விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.

“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் - தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை - அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.

அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!

தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.

அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.

தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள் விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!

அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!

மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு - பாவாணர், பக்கம் 26 - 28).

கால்டுவெல் இல்லையென்றால் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!

தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் - தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் - தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் - போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் - பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி - வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!

மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் - தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.

திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.

திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!

தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).

கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!

===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================== 
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com 
===================================== 
இணையம்: tamizhdesiyam.com 
=====================================

Suba

unread,
Aug 29, 2018, 3:23:48 AM8/29/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கால்டுவெல்: ஓர் எதிர்வினை


கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் எழுதியுள்ள ‘கால்டுவெல்: திராவிட முகவரி’ கட்டுரையைக் கண்டேன்.சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் குடும்ப உறவுடையவை என்பதை முதலில் நிறுவியவர் வில்லியம் ஜோன்ஸ். ஒப்பீட்டு மொழியியலில் ஒரு புரட்சியாக இக்கண்டுபிடிப்பு கருதப்படுகிறது. இதன் துணைவிளைவே திராவிட மொழிகளும் சம்ஸ்கிருதத்தினடியாகப் பிறந்தவை என்ற கருதுகோள். ஆனால், பிரசுரம் ஆகியுள்ள கட்டுரையில் ஜோன்ஸ் பெயரே இல்லை. மாறாக, மாக்ஸ் முல்லர் பெயரை முதலில் சுட்டுகிறார் வைரமுத்து.

முல்லர் ஜோன்ஸுக்கு இரண்டு தலைமுறை இளையவர். முல்லர் பெயருக்குப் பிறகு ‘கோல் புரூக் காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம்’ என்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் இருவர் அல்லர்; மூவர். கோல்புரூக் (Henry Thomas Colebrook), கேரி (William Carey), வில்கின்ஸ் (Charles Wilkins) ஆகியோரைத்தான் வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார் என ஊகிக்கிறேன். வில்கின்ஸும் கோல்புரூக்கும் ஜோன்ஸின் சமகாலத்தவர் (கல்கத்தாவில் புலமை மையமாக விளங்கிய ஆசியக் கழகத்தில் (Asiatic Society) இணைந்து பணியாற்றியவர்கள்); கேரி அடுத்த தலைமுறையினர்.

கால்டுவெல் ஒப்பிலக்கண நூலை 1856-ல் வெளியிட்ட பிறகுதான், தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதவழிப்பட்ட இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தோடு தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பம் என்பதை அறிவுலகம் உணர்ந்தது என்பது சரியல்ல. கால்டுவெல் தம் நூலை வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே 1816-லேயே ­ எல்லிஸ் இதை நிறுவிவிட்டார். இதனை மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மென் பல கட்டுரைகள் வாயிலாகவும், தன்னுடைய நூல் வாயிலாகவும் (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras) விரிவாகப் பேசியிருக்கிறார். 2006-ல் கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடாக வந்த இந்நூல் அடுத்த ஆண்டே பேராசிரியர் இராம. சுந்தரத்தின் தமிழாக்கத்தில் ‘திராவிடச் சான்று’ என்ற தலைப்பில் வெளிவந்து பரவலான கவனிப்பைப் பெற்றது (சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் காலச்சுவடு இணை வெளியீடு).

கால்டுவெல்லின் சாதனை என்பது எல்லிஸ் சுருக்கமாக முன்வைத்த புலமைக் கருத்தாக்கத்தை மிக விரிவான மொழியியல், மானிடவியல் செய்திகளோடும் அரசியல் உணர்வோடும் முன்வைத்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முகிழ்த்த தமிழ்/திராவிட அரசியலுக்கும் இது ஒரு கொத்தளமாக விளங்கியது.

கால்டுவெல் பற்றி தமிழ் அறிவுலகம் தொடர்ந்து விவாதித்துவருகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண நூலைத் தொடர்ந்து அச்சிட்டுவருகிறது. இதுவரை நானறிந்து நான்கைந்து பதிப்புகள் வந்துவிட்டன. ‘ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ்’ என்ற பதிப்பகமும் இந்நூலைத் தொடர்ந்து அச்சிட்டு விற்றுவருகிறது. கால்டுவெல் மறைந்த 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான மூன்றாம் பதிப்பின் (1913) மறுஅச்சாகும் இவை. இம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், கால்டுவெல் காலத்திலேயே வெளியான இரண்டாம் பதிப்பை (1875) கவிதாசரண் 2008-ல் முழுவதுமாகப் பதிப்பித்தார். அதே ஆண்டில் ‘மாற்றுவெளி’ ஆய்விதழ் கால்டுவெல் சிறப்பிதழை வெளியிட்டது.

சென்னை கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர் வின்சென்ட் குமாரதாஸ் 2007-ல் வெளியிட்ட தன்னுடைய நூலில் (Robert Caldwell: A Scholar Missionary in Colonial South India) ஏராளமான புதிய சான்றுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

கால்டுவெல் தமிழிலேயே எழுதிய ‘பரத கண்ட புராதனம்’ நூலைப் பொ.வேல்சாமி 2012-ல் மறுபதிப்பிட்டார். ‘உங்கள் நூலகம்’ கால்டுவெல் இருநூற்றாண்டுச் சிறப்பிதழை 2014-ல் வெளியிட்டது. கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாற்றின் தமிழாக்கமும் வெளிவந்துள்ளது (மொழியாக்கம்: கிருஷ்ணா சஞ்சீவி; காவ்யா வெளியீடு).

கால்டுவெல்லின் கிறிஸ்தவச் செயல்பாடுகள் பற்றிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அகராதியியல் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் செய்துவரும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பைத் தமிழுலகம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நீ.கந்தசாமிப் பிள்ளை ‘தமிழ்ப்பொழில்’ இதழில் எழுதிய ‘கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும்’ என்ற கட்டுரையும் தமிழன்பர் பலரும் அறிந்தது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியதாக வைரமுத்துவின் கட்டுரை அமைந்துள்ளது.

ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றுப் பேராசிரியர்.

தொடர்புக்கு: chala...@mids.ac.in



 

Suba

unread,
Aug 29, 2018, 3:24:24 AM8/29/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கால்டுவெல்லும் என் மனக்குறையும்….

நண்பர்களே…

நேற்றைய (28.08.18) இந்து தமிழில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “கால்டுவெல் ஓர் எதிர்வினை” என்ற கட்டுரை வந்துள்ளது. அதில் “கால்டுவெல் மறைந்த 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான மூன்றாம் பதிப்பின் (1913) மறுஅச்சாகும். இவை, இம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், கால்டுவெல் காலத்திலேயே வெளியான இரண்டாம் பதிப்பை (1875) கவிதாசரண் 2008 ல் முழுவதுமாகப் பதிப்பித்தார்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட பகுதி எப்படி வெளிவந்தது என்ற தகவல் இல்லை.

1913 இல் வெளிவந்த “கால்டுவெல்லின் ஒப்பிலக்கண” நூலில் நீக்கப்பட்டிருந்த பகுதிகளைக் கண்டறிந்து நான் கவிதாசரணில் ஒரு கட்டுரை எழுதினேன். பின்னர் 1875 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்புத்தான் முழுமையானது. ஆனால் அந்நூல் தமிழ்நாட்டில் எங்கும் எளிதாகக் கிடைக்கவில்லை. அந்த நூல் பேராசிரியர் தேவசகாய குமாரிடம் இருப்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் என்னிடம் சொன்ன தகவலின் அடிப்படையில் 
தேவசகாயகுமார் அவர்களை தொடர்பு கொண்டு ஒரு கட்டுரையை கவிதாசரணுக்கு எழுதி தருமாறு வேண்டினேன். அவரும் கொடுத்தார். பின்னர் அந்நூலை நான் பார்க்க முடியுமா என்று பேராசிரியர் தேவசகாயகுமாரிடம் கேட்டேன். அவர் தன்னிடம் பிரதி இல்லை என்றும் ஏதோ ஒரு நூலகத்தில் பார்த்தாகவும் கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளாகத் தேடியதில் அந்நூலின் பிரதியொன்று சென்னையில் இருப்பதாகக் கூறி என் நண்பர் தியாகராஜனும் அவருடைய மூத்த மருமகன் மோகனும் எனக்கு நூலின் நகலை அனுப்பினார்கள். அந்த நூல் மிகவும் சிதலமடைந்திருந்ததால் அதில் பல பக்கங்கள் இல்லை. எனவே மீண்டும் முழுமையான நூலை தேடி அலைந்தேன். ஒரு நாள் நானும் நண்பர் பெருமாள்முருகனும் நாமக்கல்லில் அரிய நூல்களை சேகரித்து வைத்திருந்த மறைந்த பெரியவர் ந.பா.ராமசாமி அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் அந்த நூல் இருந்தது. அவர் பெருந்தன்மையுடன் அந்நூலை நகல் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்.

அதனைப் படித்து வியப்படைந்த நான் அந்நூலைப் பற்றிய செய்திகளை பேராசிரியர் வீ.அரசுவிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த நூலைத் தானும் படிக்கவேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டார். கையிலிருந்த ஒரே பிரதியை அவரிடம் கொடுத்துவிட்டேன். அன்று தஞ்சை தமிழறிஞர் தட்சிணமூர்த்தி அய்யா அவர்களையும் அரசு வீட்டில் பார்த்தேன். இந்நூலில் இருந்த சுவையான பகுதிகளையும் சென்னைப் பல்கலைக் கழகம் நீக்கிவிட்டு பதிப்பித்த பகுதிகளைப் பற்றி ஆர்வமுடன் பேசிக்கொண்டு இருந்தோம்.

இந்த நூலை முழுமையாகப் படித்துவிட்டு பிறகு தருகிறேன் என்று அரசு கூறிவிட்டார். சில மாதங்கள் கழித்து அரசுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்நூலை மறுஅச்சு போட வேண்டும் என்றார். அதனை கவிதாசரண் செய்வார் என்றார். ஒரு நாள் கவிதாசரண் சென்னைப் பல்கலைக் கழகப் பதிப்பையும் பார்க்க வேண்டும் என்றார். அவரை பல்கலைக் கழகத்திற்கு அழைத்து சென்று அந்த நூலையும் வாங்கினோம்.

கவிதாசரணால் வெளியிடப்பட்ட பின்னர் அந்நூலுக்கு ஒரு வெளியீட்டு விழாவை வீ.அரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு சிபிஐ கட்சி பெரியவர் நல்லகண்ணு அய்யாவை அழைத்திருப்பதாகவும் அவருக்கு இதைப் பற்றிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்கள். அடுத்து வந்த தொலைபேசியில் அய்யா நல்லகண்ணு அவர்கள் என்னிடம் பேசினார். சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக கால்டுவெல் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் அய்யா அவர்களிடம் கூறினேன். கடைசியில் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன்.

1913 பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் முழுமையானது அல்ல என்பதை முதன்முதலாக கண்டறிந்து, அதைப் பற்றி கவிதாசரணில் கட்டுரை எழுதினேன். இரண்டு ஆண்டுகள் தேடி விடுபட்டுள்ள பகுதிகள் உள்ள 1875 ம் பதிப்பை எடுத்து கொடுத்த என்னை இவர்கள் புறக்கணித்தது என்ன நியாயம்? என்று பெரியவரான நீங்கள் கேட்க வேண்டும் என்றும், இந்த நூலைக் கண்டுபிடித்து வெளியிட்டவர் கவிதாசரண் என்று குறிப்பிட்டுள்ளது நியாயமல்ல என்பதையும் நீங்கள் அவர்களுக்கு அன்புடன் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நிச்சயம் பேசுவேன் என்று என்னிடம் சொல்லியவர் என்ன காரணத்தாலோ அங்கு அவர் அதனை பேசவில்லை.

இப்படியான பல வரலாறுகளை உள்ளடக்கிய 1875 ம் பதிப்பு உங்கள் கையில் எளிமையாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்நூலின் இணைப்பு உங்களுக்கு கொடுத்துள்ளேன். தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே…

https://archive.org/details/comparativegramm00caldrich


Reply all
Reply to author
Forward
0 new messages