சென்னை லயோலா கல்லூரியில் தனிநாயகன் ஆவணப்பட வெளியீடு
சென்னை நுங்கம்பாக்கத்தில் 1925-ம் ஆண்டு பிரெஞ்சு ஜெஸ்யூட் பாதிரியார் பிரான்சிஸ் பெர்ட்ராம் அவர்களால் தொடங்கப்பட்டது லயோலா கல்லூரி. ஆரம்பத்தில் 75 மாணவர்களுடன் கணிதம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய 3 பாடங்களுடன் தொடங்கியது. சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த இக்கல்லூரி 1978-ல் தன்னாட்சி (Autonomous) பெற்றது. 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்சமயம் இக்கல்லூரியில் பயில்கின்றனர். 99 ஏக்கர் பரப்பில், 1930-ல் கட்டப்பட்ட கோதிக் தேவாலயத்துடன் சென்னையின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக இக்கல்லூரி விளங்குகிறது. சாதி, மதம் பாராமல் ஏழை முதல் தலைமுறை மாணவர்களுக்கும் தரமான கல்வி கொடுத்து, இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இக்கல்லூரி இயங்குகிறது.
இக்கல்லூரியில் செயல்படும் தமிழ்த்துறை B.A. தமிழ் இலக்கியம் 1969-ல் தொடங்கப்பட்டது. தற்போது இளங்கலை முதுகலை முனைவர் பட்ட தமிழ் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது.
ஆங்கில வழி ஜெஸ்யூட் கல்லூரியில் தமிழை உயர்த்திப் பிடித்து, பல தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்களை உருவாக்கியதில் இத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.
இன்று இக்கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளை வெள்ளி விழா சாதனையாக உருவாக்கியுள்ள தனிநாயகன் ஆவணப்படம் வெளியீடு கண்டது.
இந்த ஆவணப்படம் மூன்று காட்சிகளாக காலை 11:30 மணிக்கு முதல் திரையிடல் முடிந்து மதியம் 3:30க்கு இரண்டாம் காட்சி ஊடகவியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5:30 க்கு மீண்டும் தமிழ்த் துறை மாணவர்களுக்கு மூன்றாவது காட்சியாகத் திரையிடப்பட்டது.
ஏறக்குறைய 650 மாணவர்கள் இன்று தனிநாயகன் ஆவணப்படத்தைப் பார்த்து பயன் பெற்றனர். அவர்களோடு கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
டாக்டர் சேவியர் எஸ்.தனி நாயகன் அவர்களது தமிழ்த் தொண்டையும் உலகத் தமிழ் செயல்பாடுகளையும் இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இன்றைய நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.
முனைவர் க. சுபாஷிணி
9.9.2026