தமிழறிஞர் முதுமுனைவர் இளங்குமரனார்

198 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 25, 2021, 4:45:38 PM7/25/21
to மின்தமிழ்


தமிழறிஞர் முதுமுனைவர் இளங்குமரனார்
மறைந்தார் என்ற தகவல் கிடைக்கப்பற்றுள்ளது 
முதன்மை செய்தி நிறுவனங்கள் எவையும் இன்னமும் செய்தி வழங்கவில்லை 
----------------------
தமிழறிஞர் முதுமுனைவர் இளங்குமரனார் காலம் ஆனார்.தமிழாசிரியராகத் தம் பணியினைத் தொடங்கியவர்.தமிச்சமூகத்தின் ஆசிரியரானவர்.திருக்குறள் பரப்புகை,தமிழ்வழிக் கல்வி,தமிழ்முறைத் திருமணம் என்று தொடர்ந்து இயங்கியவர்.செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம், தேவ நேயம் ஆகிய அருந்தொகுப்புகளின் பதிப்பாசிரியர்.எளிய, இனிய நடையில் ஐநூற்றுக்கும் மேல் நூல்களை எழுதியவர்.புலமைச் செருக்கின்றி பழகும் பண்பாளர்.இளையவர்களை ஊக்கும் இயல்பினர்..தமிழ் இயக்கமாய் வாழ்ந்தவர்.புகழ் வணக்கம்..

தேமொழி

unread,
Jul 25, 2021, 6:03:15 PM7/25/21
to மின்தமிழ்

R.Ilangkumaranar

R.Ilangkumaranar.jpeg
#WhatsappShare

தேமொழி

unread,
Jul 25, 2021, 11:54:30 PM7/25/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/kalaingar.magesh/posts/5829980210407534


தமிழ் முறையில் 4,621 திருமணங்களை நடத்திவைத்த ‘செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார்
(2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காமதேனு வார இதழில் வெளிவந்த கட்டுரை)
இரண்டு மணமாலை, இரண்டு துணை மாலை, விளக்கு ஒன்று, தீப்பெட்டி ஒன்று. இவற்றை மட்டுமே வைத்து எளிய முறையில் 4,621 தமிழ் முறைத் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார் தமிழறிஞர் இரா.இளங்குமரனார். 91 வயது நிறைந்துவிட்டது அவருக்கு. ஆனாலும், பிப்ரவரி மாதம் வரையில் திருமண அழைப்புகளால் அவரது நாட்குறிப்பு நிரம்பி வழிகிறது.
மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். துணைவியாரும், மகனும் உபசரித்து மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். படிகளைப் பார்த்ததுமே, “இத்தனை படியேறியா அய்யா மாடிக்குச் செல்கிறார்?” என்று வியப்பு ஏற்பட்டது. இதுவரையில் 550 புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், மேலும் 50 புத்தகங்களை அச்சுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார். கடந்த ஞாயிறன்று ‘திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை’ எனும் 3,000 பக்கங்களைக் கொண்ட (6 தொகுதிகள்!) நூலை வெளியிட்டிருக்கிறார்.
அறைக்குள் நுழைகையில், வேட்டி, மேல்துண்டு மட்டும் அணிந்து மணிமேகலைக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார் 91 வயது இளங்குமரனார். தமிழ் முறைத் திருமணங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? என்று கேட்டேன்.
“இளம் வயதிலேயே தமிழில் ஆர்வம். ஐந்தாம் வகுப்பு படிக்கையிலேயே மேடையேறத் தொடங்கிவிட்டேன். 16 அகவையில் (1946ல்) தமிழாசிரியராகிவிட்டேன். அடுத்த சில திங்கள்களிலேயே, திருமணம் நடந்தது. சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் நடந்த அந்தத் திருமணம் ரொம்பவும் எளிமையாக நடந்தது. அறுகாலி(பெஞ்சு) மேல் சமுக்காளம் விரித்து கிழக்கு முகமாக மணமக்களாகிய எங்களை அமரச் செய்தார்கள். மணமகளுக்குச் சீலையும், சட்டையும் இரண்டே முக்கால் ரூபாய். எனக்கு வேட்டியும் துண்டும் இரண்டே கால் ரூபாய். மாலையாக நூற்சிட்டங்கள் (கதர் நூல்) இரண்டு, மாற்று மாலையாக மல்லியை மாலை இரண்டு. மொத்தச் செலவே அவ்வளவுதான். திருமணத்தை நடத்தி வைத்தவர்கள் அய்யரல்ல, உள்ளூர் மகளிர். கெட்டி மேளம்? மகளிர் குரவை. வாழ்த்தும் அந்தத் தாய்மாரே. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், எரி(தீ) வளர்த்தல், அயன்மொழி மந்திரம் ஓதுதல் போன்ற சடங்குகள் எதுவும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, எங்கள் ஊரில் நடக்கிற அத்தனை திருமணமும் அப்படித்தான் நடந்தது.
அகநானூற்றைப் படித்தபோது, அதன் 86, 136ம் பாடல்களில் தமிழர் திருமண முறைபற்றி விரிவாக சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன். அதைத்தான் எங்களூர் பாமரப்பெண்கள் பரம்பரையாக கடைபிடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். சிலப்பதிகார காலத்தில்தான் வேதியரைவைத்து திருமணம் நடத்தும் முறை அறிமுகமாகி, பிற்காலத்தில் அது இல்லாத திருமணம் செல்லாது என்று சொல்கிற அளவுக்குப் போயிருக்கிறது. பாவாணரும் தமிழ் முறைப்படியே திருமணம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே, 1951 முதல் தமிழ் நெறிப்படி திருமணங்களை நடத்திவைக்கத் தொடங்கினேன். அன்று தொடங்கி 67 ஆண்டுகளாக இந்த முறையைத் தொடர்கிறேன். ஆரம்பத்தில் சிற்சில எதிர்ப்புகளும், முகத்திருப்பல்களும் நடக்கத்தான் செய்தன. இப்போது தேதி கொடுக்க முடியாத அளவுக்கு திருமண அழைப்புகள் வருகின்றன” என்கிறார் இளங்குமரனார்.
எப்படிச் செய்வது தமிழ்முறைத் திருமணத்தை?
தமிழறிஞர்கள் வந்துதான் நடத்த வேண்டுமென்பதில்லை. வீட்டுப் பெண்களே திருமணத்தை நடத்திவைக்கலாம்.
திருமணத்திற்கு வேண்டிய பொருட்கள்: மணமாலை 2, துணைமாலை 2, பெற்றோர்களுக்கு மாலை 4, வாய்ப்பிருந்தால் வள்ளுவர் சிலை அல்லது படம், உதிரிப்பூ, விளக்கு ஒன்று, தீப்பெட்டி ஒன்று, ஒரு ஒலிவாங்கி (மைக்).
மணமகனுக்கு வலதுபக்கம் மணமகள் இருக்குமாறு மணமக்களை மாலையுடன் இருக்கையில் அமர்த்த வேண்டும். மணமக்களின் பெற்றோரையும், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்போரையும் மேடைக்கு அழைக்கவும். மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்கி அமர்தல். மொழி, இயற்கை வாழ்த்து பாடுதல். விழாவுக்கு வந்துள்ள தாய்மார்கள், சான்றோர்கள், சுற்றம் சூழல் அனைவரையும் வணங்கி, தங்களை வாழ்த்துமாறு கோருதல். அனைவரும் எழுந்து மணமக்கள் வாழ்க வாழ்க என்று கூறுதல்.
பெற்றோரைப் பார்த்து “பெற்றோர் வாழ்க! பெருந்தகை வாழ்க!!” என்று மணமக்கள் சொல்ல, “எங்கள் கண்ணே! கண்ணின் மணியே! எங்கள் வாழ்வே வளமே வாழ்க!!” என்று பெற்றோர்கள் பிள்ளைகளை வாழ்த்துவார்கள். முதிய தாய்மார்கள் வழிபட்டுத்தந்த மங்கல நாணை, பெண்ணின் தாயும், மாப்பிள்ளையின் தாயும் எடுத்து மணமகன் கையில் தந்து மணமகளுக்கு அணிவிக்கச் செய்தல். கெட்டிமேளம் அல்லது குரவை சத்தம் எழுப்புதல்.
மணமக்கள் இருவரும், ‘இனி நாம் ஒருவர்; நீ வேறு நான் வேறு இல்லை’ என்பதன் அடையாளமாக துணை மாலைகளை மும்முறை மாற்றுதல். ‘என் வீடு உன் வீடு; என் வாழ்வு உன் வாழ்வு; என் உறவு உன் உறவு என்ற வேறுபாடு இனி நமக்குள் இல்லை. இனி நம் வீடு, நம் வாழ்வு, நம் உறவு’ என்பதன் அடையாளமாக மணமக்கள் இடமாறி அமர்தல். மணமகனின் இதயம் இருக்கும் இடப்பாகமாக பெண் அமர்ந்த பிறகு, இல்லுறை தெய்வ வழிபாடாக குடும்ப விளக்கு ஏற்றுதல். மணமக்களை வாழ்த்தி மலர் தூவுதல். வந்திருப்போர் வாழ்த்திப் பேசுதல். விருந்தோம்பல். இதுதான் திருமணம். காலம் கருதி இதனை சுருக்கியோ, கொஞ்சம் பெருக்கியோ நடத்தலாம்” என்கிறார் இளங்குமரனார்.
இதற்கென 38 பக்கங்களில் சிறு பிரசுரம் வெளியிட்டுள்ள இளங்குமரனார், தமிழ்நெறி பிறந்தநாள், பெயர் சூடுவிழா, காதணி விழா, பூப்புநீராட்டு விழா, வளைகாப்பு விழா, புதுமனை புகுவிழா, மணிவிழா போன்றவற்றுக்கும் நூல்களை எழுதியுள்ளார்.
“எப்படி அய்யா இவ்வளவையும் எழுத எப்படி நேரம் கிடைக்கிறது?” என்று கேட்டால், “நான் கைபேசி மட்டுமல்ல, தொலைபேசியும் பயன்படுத்துவதில்லை. வாசிப்பது, சிந்திப்பது, எழுதுவது இந்த மூன்றையும்தான் என் வேலையாக வைத்திருக்கிறேன். காலை 5 மணிக்கு ஆரம்பித்தால், உணவு இடைவேளை போக மாலை 5 மணி வரையில் எழுதுவேன். சிந்தனைத் தெளிவோடு எழுதினால், அடித்தல் திருத்தலோ, பிழை திருத்தமோ தேவைப்படாது. நேரடியாக அச்சுக்குக் கொடுத்துவிடலாம்” என்கிறார் இளங்குமரனார்.
தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதை வெறுத்து ஒதுக்கும் இயல்புகொண்ட இவர், தனது புத்தகங்களைக் கூட பத்திரிகை விமர்சனங்களுக்கு அனுப்புவதில்லை. விருதுகளுக்கும் விண்ணப்பிப்பதில்லை. தேடிவரும் விருது, பரிசுத் தொகைகளையும் தமிழ் வளர்ச்சிக்கே கொடுத்துவிடுவது இவரது இயல்பு. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நூலகத்துக்கு 20,000 நூல்களை வழங்கியிருக்கிறார் என்கிறார்கள் மதுரை தமிழ் அன்பர்கள்.
--------------------------
தமிழ் மொழியியல் மூதறிஞர்
இரா.இளங்குமரனார்
நேற்று இரவு 7.30 மணிக்கு
காலமானார்.
இன்று (திங்கள்) மாலை 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
முகவரி:
5, இராமன் தெரு,
திருநகர்,
மதுரை-6

தேமொழி

unread,
Jul 25, 2021, 11:58:31 PM7/25/21
to மின்தமிழ்
source - https://muelangovan.blogspot.com/2021/07/blog-post.html

ஞாயிறு, 25 ஜூலை, 2021
தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் மறைவு!
 
  திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவி அன்னைத் தமிழுக்கும் அருமறையாம் திருக்குறளுக்கும் தொண்டாற்றிய மூதறிஞர், தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் இன்று (25.07.2021) இரவு 7.30 மணியளவில் தம் மதுரை இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து, பெருந்துயருற்றேன்.

    இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராக விளங்கியவர். பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல முகங்களைப் பெற்றுத் தமிழுக்கு ஆக்கமான பல பணிகளைச் செய்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி, யாப்பருங்கலம், புறத்திரட்டு, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைபாடினியம், தேவநேயம் உள்ளிட்ட நூல்கள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு என்றும் நின்று அரண் சேர்க்கும். திருக்குறள் வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட திரு. இளங்குமரனார் வாழும் வள்ளுவராகவே விளங்கியவர்.

    திருச்சிராப்பள்ளிக்கு மேற்கில் காவிரிக்கரையின் தென்புறம் அமைந்துள்ள அல்லூர் என்னும் ஊரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துப், பாவாணர் நூலகம் கண்டு, தவப் பள்ளியில் உறைந்த நாள்போக எஞ்சிய நாளெல்லாம் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று திருக்குறள் உரைப்பொழிவுகள் வழங்கியும் திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தியும் நல்லற மணமக்களை இல்லறப்படுத்தியும் வாழ்ந்தவர்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நம் ஐயாவுடன் பழகும் பெரும்பேறு பெற்றிருந்தேன். அவர்தம் திருவள்ளுவர் தவச்சாலையில் இருந்த பாவாணர் நூலகத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்களுள் யானும் ஒருவன். ஐயாவின் உரைகளைப் பலமுறை செவிமடுத்துள்ளேன். உரையாடியுள்ளேன். என் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியும், நான் ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஊக்கமொழிகள் வழங்கியும் என்னைப் பெருமையுறச்செய்தவர். என் நூலொன்றில் ”இளங்கோவனார் அழுந்தக் கற்கும் ஆர்வலர். நிறையறிவுபெறுவான் நெடிதுழைப்பாளர். முத்தமிழ்த் திறமும் முத்திரை பதிக்கத் திகழவிருக்கும் முனைவர்” என்று என்னை அன்பொழுக அறிமுகம் செய்துள்ளார்(1995). அவர்தம் உரைகள் சிலவற்றைப் பதிவு செய்து இணையவெளியில் பலரின் பார்வைக்கும் வைத்துள்ளேன். தமிழ்ப் பெருங்கடலாக விளங்கிய ஐயா இளங்குமரனாரின் இழப்பினை உலகத் தமிழர்கள் தங்கள் குடும்பத்து இழப்பாக எண்ணி வருந்துவர். அந்த அளவு அவர் உலகப் பெருந்தமிழராக விளங்கியவர். அன்னாரை இழந்துவருந்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றேன். ஐயாவின் வாழ்க்கை குறித்து முன்பு எழுதிய என் பதிவினை மீள்பதிவாகப் பதிவுசெய்கின்றேன்.

இரா. இளங்குமரனாரின் தமிழ் வாழ்க்கை

இரா.இளங்குமரானார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர். தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார். தந்தையாரிடம் இருந்த தமிழறிவு, கணக்கு அறிவு மகனாரிடத்து நின்று நிலவியது. தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம்மை ஆயத்தம் செய்து கொண்டு தம் பச்சிளம் பருவத்திலேயே 08.04.1946 இல் ஆசிரியர் பணிமேற்கொண்டவர்.

    பின்னர்த் தனியே தமிழ் கற்றுச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றிபெற்றவர்(1951). பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றிருந்த இரா.இளங்குமரனார் தம் பதினான்காம் அகவை முதல் பாடலியற்றும் திறன்பெற்றிருந்தவர். இப்பயிற்சி பின்னாளில் குண்டலகேசி என்னும் காவியம் உருவாக வழிவகுத்தது. இக்காவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

மதுரை பாரதி புத்தக நிலையத்தின் வாயிலாகப் பல நூல்கள் வெளிவரத் தொடங்கின. பல ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும் இவர் விரும்பிச்செய்தது நூலாக்கப் பணிகளேயாகும். பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணிபுரிந்துள்ளார். தமிழ்க்காப்புக் கழகச்செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச்செயலாளர், தேர்வுக்குழு அமைப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துத் திறம்படப் பணிபுரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் அறிஞர் தமிழண்ணல் முயற்சியால் விருந்து பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

அறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் நூல்கள் யாவும் தமிழ்மண் இளவழகனார் அவர்கள் வழியாக மறுபதிப்பும் செம்பதிப்புமாக வெளிவந்துள்ளன. அயல்நாடுகள் பல சென்று தமிழ்ப்பொழிவு ஆற்றிய பெருமைக்கு உரியவர். தமிழக அரசு இவர்தம் தமிழ்ப்பணியை மதித்துப் பல சிறப்புப் பரிசில்கள், விருதுகளை வழங்கியுள்ளது. முனைவர் மு.தமிழ்க்குடிமகன், முனைவர் கா.காளிமுத்து உள்ளிட்ட அரசியல் சார்புற்ற தமிழ் அறிஞர்கள் இரா.இளங்குமரனாரைப் போற்றி மதித்தவர்கள். தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். பல்வேறு அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் இவரைப் பாராட்டிப் போற்றியுள்ளன.

தொடர்புடைய கட்டுரைகள்:

https://muelangovan.blogspot.com/2008/10/blog-post_22.html

https://muelangovan.blogspot.com/2010/04/blog-post_17.html

https://muelangovan.blogspot.com/2011/09/blog-post_05.html

 காணொலிகள்:

தனித்தமிழியக்கம் குறித்து https://www.youtube.com/watch?v=6nYDsaUJswg
தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து: https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc
தமிழ் மரபுத்திருமணங்கள் நடத்துவது எப்படி? https://www.youtube.com/watch?v=bo09sOb3y3Q

   

தேமொழி

unread,
Jul 25, 2021, 11:59:48 PM7/25/21
to மின்தமிழ்

source - https://muelangovan.blogspot.com/2021/07/blog-post.html

ஞாயிறு, 25 ஜூலை, 2021
தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் மறைவு!
 

புலவர் இரா. இளங்குமரனார்

தேமொழி

unread,
Jul 26, 2021, 11:33:54 PM7/26/21
to மின்தமிழ்
Ilankumaranar.jpeg
தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு !

மூதறிஞர்  இளங்குமரனார்
  ( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் .

முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் .

 அறிஞர் உலகம் உச்சி மேற்கொண்டு மெச்சினர் .

தமிழில் பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 

தனித்தமிழ் இயக்கத்தில் பற்றுக்கொண்ட அவர், தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்பிழிவான ‘தேவநேயம்’ பத்துத் தொகுதிகளைத் தொகுத்தவர். 

திருக்குறள் வழியில் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட 4621 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைத் தமிழில் நடத்துவதை  ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர். 

திருக்குறளை வாழ்வியக்கமாக நடத்தியதோடு தமிழ்ச் செல்வங்களைத் தொகை தொகையாக வெளியிடச் செய்தார் .

ஈராண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் முதுமுனைவர் இளங்குமரனார் உருவாக்கிய செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - பத்துத் தொகுதிகளைத் ,தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் பெருந்தகை கோ இளவழகனாரின் அரும்பெரும் முயற்சியால் வெளியிட்டோம் .

மதுரையில் நான் கல்லூரி மாணவனாயிருந்த போது திருநகரிலிருந்து நாள் தவறாமல் வந்து பேராசிரியர் இலக்குவனாரின் நெஞ்சங் கவர்ந்த நிறை புலவராகத் தனித்தமிழ் உணர்வு ததும்ப அரும்பணிகள் ஆற்றினார் .

தேடித் தேடித் தமிழ்ச் சொற்களின் நுணுக்கம் கண்ட நுழைபுலம் வாய்ந்த முதுமுனைவரின் இழப்பு மனத்துக்குப் பெருங்கலக்கம் தருகிறது .

இளங்குமரனார் அணியில் புலவர் பலர் அவர் தமிழ்ப்பணியைத் தொடர்வார்கள் என்றே ஆர்வம் கொண்டு துணிவோமாக ! . 

பெரும்புலவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆய்வுலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கல் .

துயரத்தோடு 
ஒளவை நடராசன் 
25 7 2021

தேமொழி

unread,
Jul 31, 2021, 11:24:49 PM7/31/21
to மின்தமிழ்

எழுத்தெண்ணிப் பயின்ற இளங்குமரனார்!

-- செந்தலை ந.கவுதமன்

ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 - 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’.

இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ஒட்டிக்கொண்டது. திருக்குறள் முழுவதையும் 12 வயதுக்குள்ளும், தொல்காப்பியம் முழுவதையும் 16 வயதுக்குள்ளும் மனப்பாடம் செய்துவிட்டார். சங்க இலக்கியப் பயிற்சியைத் தொடங்கியது 18-ம் வயதில்.

சொந்த ஊரிலேயே தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியை 8.4.1946-ல் தொடங்கினார். புலவர் பட்டம் பெற்ற பின் 1951-ல் தமிழாசிரியர் பணியை கரிவலம்வந்தநல்லூரில் தொடங்கினார்; தளவாய்புரத்தில் தொடர்ந்தார்; மதுரை மு.மு.மேல்நிலைப் பள்ளியில் நிலைத்தார். இறுதி நான்காண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். தொடர்ந்து 43 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்பை இளங்குமரனார் பெற்றதுபோல இனியொருவர் பெற இயலாது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பணியில் இவர் உருவாக்கியது ‘தொல்காப்பியக் கலைச் சொற்களஞ்சியம்’. தொல்காப்பியம், திருக்குறள் இரு நூல்களையும் பல கோணங்களில் பார்த்து, இளங்குமரனார் வெளிப்படுத்திய நூல்கள் மிகுதி.

எந்த ஊரில், எந்தப் பொருளில் பேசினாலும் அதை உடனே நூலாக விரித்தெழுதும் வழக்கமுடையவர் இளங்குமரனார். ‘திரு.வி.க. இப்படித்தான் செய்வார்’ எனத் தம் எழுதுமுறை முன்னோடியாக அவரைக் காட்டுவார். பேசிய உடனேயே, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளுக்கு எழுதியனுப்பும் பெரியார் வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசுவார். திருவள்ளுவர், மறைமலையடிகள், திரு.வி.க., தேவநேயப் பாவாணர் நால்வரும் தந்த நூல் வெளிச்சத்தில் நடப்பதாகப் பெருமிதம் கொள்பவர் இளங்குமரனார். தமக்குப் பெயர் தந்தவராக மறைமலை அடிகளாரையும், நெஞ்சம் தந்தவராக திரு.வி.க.வையும், தோள் தந்தோராகப் பாவாணர் இலக்குவனாரையும், துணிச்சல் தந்தோராக பாரதியார், பாவேந்தரையும் குறிப்பிடுவது இளங்குமரனார் வழக்கம்.

தனித்தமிழ்ச் சொல்லாய்வாளர், வரலாற்றாசிரியர், உரையாசிரியர், படைப்பாளர், பாவலர், பதிப்பாசிரியர், பழம்நூல் மீட்பர் எனப் பல முனைகளிலும் விரிந்த அறிவுப் பரப்பைக் காட்டுவன இவரின் நூல்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் இளங்குமரனார். அத்தனையும் இவர் கைப்பட எழுதியவை. மறைவதற்குச் சில நாட்கள் முன்பு இவர் இறுதியாக எழுதிய எழுத்தும் மணிமணியாக உள்ளது. எழுத்து நடுக்கமும் நினைவுத் தடுமாற்றமும் வராத பெறும் பேறானது 91 வயதிலும் இவருக்கு வாய்த்தது வியப்பு.

கருத்துப் பணியோடு நின்றுவிடாமல், தமிழ் காக்கும் களப்பணி வீரராகவும் செயல்பட்டார். அறிஞர் சி.இலக்குவனார் உருவாக்கிய தமிழ்க் காப்புக் கழகத்தின் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தார். பாவாணரின் ‘உலகத் தமிழ்க் கழகம்’, ‘குறளாயம்’ என இவர் பணியால் பயன் கொண்ட அமைப்புகள் பல. தமிழ்ப் பயிற்று மொழியை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25.04.1990-ல் நடந்த உயிர் துறக்கும் போராட்டத்திலும், 102 அறிஞர்களுள் ஒருவராகத் தோள் தட்டி நின்றவர் இளங்குமரனார்.

தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் தமிழை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ‘திருவள்ளுவர் தவச்சாலை’ நிறுவினார். தமிழில் திருமணம், குடமுழுக்கு, வாழ்வியல் சடங்குகள் நடத்தவல்ல நூற்றுக்கணக்கானோரைப் பயிற்சி தந்து உருவாக்கினார். தமிழில் திருமணம் நடத்துவதை 21 வயதில் தொடங்கி, எழுபது ஆண்டுகள் தொடர்ந்து நடத்திவந்தார். நான்காயிரத்துக்கும் மேற்பட்ட திருமணம் நடத்தி வைத்திருப்பதைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தியுள்ளார்.

இவரது சொல்லாய்வுத் திறம் வியந்த தேவநேயப் பாவாணர், தமது ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’ திட்டத்தின் சிறப்புத் தொகுப்பாளராக இவரை இணைத்துக்கொண்டார். புலமை வாய்ந்தோரே பாவாணர் நூலோடு உறவாட முடியும். பாவாணர் நூல்களுக்கு நுழைவாயிலாக ‘தேவநேயம்’ என 14 தொகுதிகளை வழங்கியுள்ளார் இளங்குமரனார். பாவாணர் வரலாற்றை எழுதியுள்ள இவர், பாவாணர் மடல்களைத் திரட்டி இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியத்தில் மனம் தோய்ந்து மூழ்கி எழுந்த இளங்குமரனார், தொல்காப்பிய முழு நூற்பிழிவாக வழங்கியுள்ள அரிய நூல் ‘தமிழர் வாழ்வியல் இலக்கணம்’. தொல்காப்பியத்தில் புலமை பெற விரும்புவோருக்கு அவர் வழங்கியுள்ள வழிகாட்டி நூல் ‘தொல்காப்பியம் சொற்பொருட்களஞ்சியம்’. பெருமுயற்சியில் ஈடுபட்டு ‘செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்’ எனும் 10 தொகுதிகளை வழங்கியுள்ளார். அழிந்துபோன நூல்களாகக் கூறப்பட்ட ‘காக்கைபாடினியம்’, ‘களவியற்காரிகை’ முதலிய பல நூல்கள் இளங்குமரனாரால் உயிர்பெற்றன.

தமிழரின் வாழ்க்கை நடைமுறைகளை விளக்கும் ‘தமிழக ஒழுகு’ என்னும் அரிய நூலை இவரைப் பதிப்பிக்கச் செய்து வெளியிட்டுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். அந்த நூலை எழுதிய விருதை சிவஞான யோகி 19.11.1908-ல் தொடங்கிய திருவிடர் கழகமே முதல் தனித்தமிழ் அமைப்பு என இளங்குமரனார் வெளிப்படுத்தியபோது, வியந்தது தமிழுலகம். ‘தனித்தமிழ் இயக்கம்’ (1991), ‘தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள்’ (1985), ‘இலக்கண வரலாறு’ (1990) போன்ற நூல்களால் ஆய்வுச் செழுமைக்கு வலிமையூட்டினார் இளங்குமரனார்.

சுவடிகள் அச்சேறிய அரிய வரலாற்றை விளக்கும் ‘சுவடிக்கலை’ (1984), ‘சுவடிப்பதிப்பு வரலாறு’ (1990) போன்ற அரிய நூல்கள் இவருடைய உழைப்பில் பிறந்தவை என்பதை அறிந்தோர் சிலரே. பழைய நூல்களைத் தேடிப் பதிப்பிப்பதில் நம் கால உ.வே.சா.வாகத் திகழ்ந்தார் இளங்குமரனார்!

- செந்தலை ந.கவுதமன், சமகால வரலாற்று ஆய்வாளர்,
சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர்.
தொடர்புக்கு: soo...@yahoo.co.in

--
Reply all
Reply to author
Forward
0 new messages