ஓடைப்பட்டி என்பது நான் பிறந்து வளர்ந்த ஊர். அன்றைய மதுரை மாவட்டம் – இன்றைய தேனி மாவட்டம் – கம்பம் நெடுஞ்சாலையில் தேனிக்கு அடுத்து வரும் ஊர் சின்னமனூர். இந்த ஊருக்குக் கிழக்கே செல்லும் மாட்டுவண்டிப் பாதையில் ஐந்து மைல் சென்றால் வரும் ஊர் ஓடைப்பட்டி. அங்கு என் பெற்றோர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். அப்பா கள்ளர் பள்ளியில் – அம்மா அன்றைய District Board School – இல். இரண்டிலுமே ஐந்தாம் வகுப்பு வரைதான். மேல்படிப்புக்கு சுக்காங்கல்பட்டிக்குப் போக வேண்டும். அங்கேயும் எட்டாம் வகுப்பு வரைதான். அதற்கும் மேலே படிப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்கள் சின்னமனூருக்குச் செல்ல வேண்டும்.
நெடுநல்வாடை என்பது சங்க இலக்கிய நூல். பத்துப்பாட்டு என்ற தொகுப்பினுள் ஏழாவது நூல். 188 அடிகளைக் கொண்டது. ஆசிரியப்பா என்னும் பா வகையைச் சேர்ந்த்து. இயற்றியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர் பெயர் கீரன். நல் என்ற அடைமொழியுடன் நல்+கீரன் = நக்கீரன். சங்க காலத்தில் இந்தப் பழக்கம் உண்டு. நல்லந்துவனார், நச்செள்ளையார், நப்பூதனார், நல்லுருத்தினார் – இந்த மாதிரி பல பெயர்கள் உண்டு.
இந்த ஓடைப்பட்டிக்கும், நெடுநல்வாடைக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?
இருக்கிறது. ஒன்றல்ல – பல – இருக்கின்றன.
நான் ஓடைப்பட்டியில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் – அங்கு எனக்குக் கிடைத்த சில அனுபவங்களால் – சங்க இலக்கியத்தில் சில இடங்கள் எனக்கு சில மாறுபாடான விளக்கங்களை அளித்தன. சில புரிபடாத இடங்களை அந்த அனுபவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. அவற்றைத்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
நெடுநல்வாடை நூல் ஒரு மழைக்காட்சியுடன் தொடங்கும். பெருமழை பெய்து ஓய்ந்த நிலையில், ஆற்றில் முதலில் பெருவெள்ளம் வந்து, பின்பு அது வடிந்த பின்னர், எப்போதும் ஓடும் சிறிதளவு நீர் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கையில், அந்தப் புதுநீரைக் கண்ட மகிழ்ச்சியில் மீன்கள் அதில் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்குமாம். அந்த மீன்களைக் கொக்குகளும் நாரைகளும் பறந்து பறந்து கொத்தித் தின்றுகொண்டிருக்குமாம்.
இதோ புலவரின் வரிகள்.
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி
இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையோடு எவ்வாயும் கவர – நெடு 15-17
இதற்கு எனக்குக் கிடைத்த உரை இதுதான்:
பசிய காலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடைய திரள்
கரிய வண்டலிட்ட சேறு பரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணற்பரப்பில்,
சிவந்த வரியினையுடைய நாரைகளோடே எவ்விடங்களிலுமிருந்து அக் கயலைத் தின்ன,
இதில் என்னைத் தொந்தரவு செய்தது #மென்பறை (த் தொழுதி) என்பதுதான். மென்பறை என்பதற்கு உரைகாரர் மெல்லிய சிறகுகள் என்று பொருள் தருவது எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.
பறை என்பதற்குரிய பொருளைப் பேரகராதியில் (Tamil Lexicon) தேடினேன். அதற்குப் பல பொருள்கள் இருப்பினும் குறிப்பிட்ட இந்த மூன்றும் இந்த இட்த்திற்குப் பொருந்தும்.
paṟai,
n. < பற-.
1. Flying;
பறக்கை. துணைபறை நிவக்கும் புள்ளின மான (மலைபடு. 55).
2. Wing, feather, plumage;
இறகு. பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி (நெடுநல்.15).
3. Bird;
பறவை பல்பறைர்தொழுதி (குறுந். 175)
பறை என்பதற்கு மூன்று பொருள்கள் இருந்தாலும், அதற்கு, இறகு என்ற பொருளுக்கு எடுத்துக்காட்டாக இந்த நெடுநல்வாடை அடியே கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே மென் பறை என்றால் மெல்லிய சிறகு என்றுதான் பொருள் என்பது உறுதிப்படுகிறது.
இருப்பினும் என் மனம் ஏற்கவில்லை.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் – மெய்ப்பொருள் காண மனம் முனைந்தது.
பறை என்ற சொல் சங்க இலக்கியத்தில் வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடினேன். இருக்கவே இருக்கிறது என் இணையதளம் tamilconcordance.in
அந்த முடிவுகள் கொஞ்சம் ஊக்கமளித்தன.
மென் பறை மட்டுமல்ல. வேறு பல பறைகளும் இருக்கின்றன. அவற்றில் சில இதோ:
பைம் கால் கொக்கு இனம் #நிரைபறை உகப்ப – அகம் 120 : 3
#துனைபறை நிவக்கும் புள்ளினம் மான – மலை 54,55
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த #வன்பறை
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் – அகம் 33:3 – 6
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
#கடும்பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்ப்
பறை கண்ணழியும் பாடு சால் நெடுவரை–பதிற்றுப் 67:19–21
இங்கெல்லாம் பறை என்பதற்குப் பறத்தல் (Flying) என்ற முதல் அகராதிப் பொருளே பொருந்திவருகிறது.
காட்டாக,
கடும்பறைத் தும்பி - விரைந்து பறத்தலையுடைய தும்பியானது என்கிறது பதிற்றுப்பத்து உரை.
வன்பறை வீளை கோள் வல் பருந்தின் சேவல் - வலிய பறத்தலையுடைய சிள்ளென்று ஒலி செய்யும் இரை கொள்ள வல்ல பருந்தினது சேவல் என்கிறது அகநானூறு உரை.
எனவே மென்பறைத் தொழுதி என்பது மென்மையான பறத்தலையுடைய பறவைக்கூட்டம் என்ற பொருளைத்தரும் என்பது உறுதியாகிறது.
ஆனால், மென்மையாகப் பறத்தல் என்றால் என்ன?
முதலில் இந்த வரியின் சூழலைப் புரிந்துகொள்ளவேண்டும்.
கொக்குகளும் நாரைகளும் ’எவ்வாயும் கவர’ என்கிறார் புலவர். எவ்வாயும் என்றால் எல்லாப் பக்கங்களிலும் – அதாவது அங்குமிங்கும். அவை எதைக் கவர்கின்றன என்று புலவர் கூறவில்லை. ஆனால், கொக்கும் நாரையும் பறந்து பறந்து எதைக் கவரும். மீன்களைத்தான்.
கோழிகளுக்கு இரைபோட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இரையைத் தூவியவுடன் அவை ஓட்டமாய் ஓடி ஒரு இடத்தில் நின்றுகொண்டு இரையைக் கொத்தித் தின்றவண்ணமாகவே இருக்கும்.
எங்கள் ஓடைப்பட்டி வீட்டில் , நடுவில் திறந்தவெளி இருக்கும். நான்கு பக்கங்களிலும் சுவர் இருக்கும். ஒரு பக்கம் வாசல், அடுத்த பக்கம் வெராண்டா, சமையலறை, சாமான் அறை, படுக்கை அறை. இன்னொரு பக்கம் பசுமாடு, கன்று, அவற்றின் தீவனம். இன்னொரு பக்கம் குழிதாளி – அதாவது மாடு நீர்குடிக்க. இதைத்தான் சங்க இலக்கியங்கள் அகலுள் என்கின்றன.
அந்தத் திறந்தவெளியில்தான் கோழிகளுக்குத் தானியம் போடுவோம். கோழியும் அதன் குஞ்சுகளும் தின்று முடித்தபின் வேறு இடத்துக்குப் போய்விடும். அப்போது கூரையில் அமர்ந்திருக்கும் குருவிகள் பறந்துவந்து அந்த மீந்துபோன தானியத்தைக் கொத்தித்தின்னும். ஆனால் கோழியைப் போல ஒரே இடத்தில் நின்றுகொண்டு கொத்திக்கொத்தித் தின்னமாட்டா. இங்கே இரண்டு கொத்து. அப்புறம் இறக்கையை இரண்டு அடி அடித்துத் தாவி தள்ளிப்போய் அங்கே இரண்டு கொத்து. ஒவ்வொரு குருவியும் அவ்வாறு செய்யும்போது, அவை மென்மையாகத் தம் சிறகுகளை அடித்துத் தாவித்தாவி உண்ணும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த மென்மையான பறத்தல்தான் மென்பறை. நாம் கையை ஓங்கித் தட்டினால் படபடனெப்று சிறகுகளை வேகமாக அடித்துக்கொண்டு அவை உயரே எழுந்து பறந்துபோய்விடும். அதுதான் வன்பறை.
இது போன்ற ஒரு காட்சியைத்தான் நக்கீரர் பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி என்கிறார்.
ஆக, ஓடைப்பட்டி அனுபவம்தான் நெடுநல்வாடையைப் புரிந்துகொள்ள உதவியது.
கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பாருங்கள்.
ஓரளவுக்கு மென்பறை என்றால் என்பது புரியும்.
இதைப்போல பறவைகள் பறப்பதை நிரைபறை, கடும்பறை, துனைபறை, வாப்பறை, நோன்பறை என்று பலவிதமான சொற்களால் சங்கப் புலவர்கள் துல்லியமாகக் குறித்திருக்கிறார்கள். அவற்றைக் காணவேண்டுமென்றால் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்.
(சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள் என்ற தலைப்பில் 6 கட்டுரைகளைக் காணலாம்.)
http://sangacholai.in/SOLAI/table-SANG-12-06-3-text.html
இனி அடுத்த அனுபவத்துடன் அடுத்த நெடுநல்வாடை அடி(கள்) வரும்,
தொடரும் –
ப.பாண்டியராஜா