தமிழில் 'புணர்ச்சி' என்னும் ஓர் இலக்கணம்

49 views
Skip to first unread message

dr.ponmudi

unread,
Nov 26, 2014, 1:47:32 AM11/26/14
to mint...@googlegroups.com


தமிழில் 'புணர்ச்சி' என்னும் ஓர் இலக்கணம் உள்ளது. அந்த இலக்கணமானது, நாம் பேசும்போது சொற்களை சேர்த்துப்பேசுவதைப்போலவே எழுதவும்வகைசெய்கிறது. சேர்த்துச்சொல்லவேண்டியதை பிரித்துச்சொன்னாலோ பிரித்துச்சொல்லவேண்டியதை சேர்த்துச்சொன்னாலோ சொல்லவரும் பொருளில் குற்றம்வரும்.

பேச்சைப்பொருத்தவரை புணர்ச்சியானது பிழையில்லாமல் அனைவராலும் சரியாகவேசெய்யப்படுகிறது. ஏனென்றால், புணர்ச்சி பொருளை மாறுபடுத்துமென்பது அனைவருக்கும் தெரிந்தவொன்றாகவேயிருக்கிறது. கல்லாதோருக்கு புணர்ச்சியென்பதெல்லாம் என்னவென்றே தெரியாதென்றாலும், சொற்களை  சேர்த்தும் பிரித்தும் தேவைக்கேற்றவாறு  மிகவும் சரியாகப்பேசுவார்கள். 

கற்றோரும் அப்படித்தான்பேசுவார்களென்பதும் ஆனால் அவர்கள் கற்றிருக்கும் புணர்ச்சியை எண்ணிப்பார்த்து அதனாற்பேசுவதில்லையென்பதும் அது தமிழை பேசுவோர்க்கு இயல்பாய்வந்ததென்பதும் அதுவே தமிழ்மொழியின் இயல்பென்பதும் எண்ணிக்கொள்ளத்தக்கது.

ஆனால், எழுத்தென்றுவரும்போது சேர்த்தெழுதவேண்டிய எல்லாச்சொற்களையும் தனிச்சொற்களாகவேயெழுதிவிடுகிறார்கள். சேர்ந்திருக்குஞ்சொற்கள் ‘தொடர்மொழி’ எனப்படுகின்றன. தொடர்மொழிகள் எத்தனைவகையாகுமென்பதை இலக்கணம் வரையறுத்துள்ளது. அவை இருபத்தாறுவகையாகும்.

வேற்றுமையுருபுகளாலுண்டாபவற்றை வேற்றுமைத்தொடர்மொழிகளென்றும், அல்லாதவற்றை அலவழித்தொடர்மொழிகளென்றுஞ்சொல்வர்.

இருபத்தாறுவகைகளுள் முதலாவதாய்ச்சொல்லப்படுவது எழுவாய்த்தொடரென்பதாகும். இது, ஓர் எழுவாயும் அதற்குரிய வினைமுற்றும் புணர்ந்துவருவதாகும்.

‘இது எங்க அப்பாவாங்கித்தந்தது’

என்று ஒரு குழந்தைகூடச்சொல்லும். இதில் ‘அப்பாவாங்கித்தந்தது’ என்பதைப்பாருங்கள். இது ஒரு எழுவாய்த்தொடர். ‘அப்பா’ என்னும் எழுவாயானது, அதன் வினைமுற்றாகிய ‘வாங்கித்தந்தது’ என்னும் பெயரெச்சத்தொடராகிய வினைமுற்றுடன் சேர்த்துச்சொல்லப்பட்டிருப்பதைப்பாருங்கள். இவ்வாறு பலவிடங்களில் நாம் எழுவாயையும் வினைமுற்றையும் சேர்த்துப்பேசுவதுண்டு. ஆனால் எழுதும்போது அவ்வாறு சேர்த்தெழுதாமல், பிரித்தெழுதிவிடுகிறோம்.

பிரித்தெழுதினால் பொருள் வேறாகிவிடுமென்பதை நாம் அறிவதில்லை.

‘இது எங்க அப்பா வாங்கித்தந்தது’

என்று அந்த தொடர்மொழியை பிரித்துச்சொன்னால் சேர்த்துச்சொன்னபோது அது என்னபொருளைத்தந்ததோ அந்தப்பொருளையேதராமல் வேறுபொருளைச்சொன்னதாகும். இதை அறிந்துகொள்ளுமுன், தமிழில் சொற்களும் தொடர்மொழிகளும் எவ்வாறுபேசப்படுகின்றனவென்பதை எண்ணிப்பார்த்துக்கொள்வது தேவையானதாகும்.

அதாவது, நாம் பேசும் ஒவ்வொருசொல்லையும், அதன் முதலசைக்கு சிறிது அழுத்தங்கொடுத்துப்பேசுவோம்.  தொடர்மொழியைப்பொருத்தவரை, அதில் எத்தனைச்சொற்களிருந்தாலும் முதற்சொல்லைமட்டும் அழுத்திச்சொல்லி மற்றவற்றை தொடர்ந்து இயல்பாய்ச்சொல்வதே வழக்கம். ஆதலால், அழுத்தம்பெறுகின்ற அந்த முதற்சொல்லே சிறப்பித்துச்சொல்லப்பட்டதாயாகும்.

‘அப்பாவாங்கித்தந்தது’ என்பதில் ‘அப்பா’ என்பது சிறப்புறுவதால், ‘வாங்கித்தந்தது’ என்பதைக்காட்டிலும் அதை வாங்கித்தந்தவர் அப்பாவென்பதை குறிப்பிட்டுச்சொன்னதாகிறது.

ஆனால், ‘அப்பா வாங்கித்தந்தது’ என்பதோ, ‘வாங்கித்தந்ததென்பதைக்குறிப்பிட்டுச்சொன்னது. அதாவது, ‘இத யாராவது ஒனக்கு குடுத்தாங்களா, இல்ல ஒங்க அப்பா வாங்கித்தந்தாரா? எனக்கேட்கும்போது, ‘இது எங்க அப்பா வாங்கித்தந்தது!’ எனச்சொல்வது.

இங்கேசொல்லும்போது ‘அப்பாவாங்கித்தந்தது’ எனச்சொல்வது பொருந்தாதென்பதை எண்ணிப்பாருங்கள். ஆனால், ‘இது யார்வாங்கித்தந்தது?’ எனக்கேட்கும்போது, ‘அப்பாவாங்கித்தந்தது’ எனச்சொல்வதே சரியாயிருக்குமென்பதும் இங்கே பிரித்துச்சொல்வது பொருந்தாதென்பதும் அறியத்தக்கது.

இவ்வாறு, சொல்லவேன்டிய பொருளுக்கு பொருந்துமிடத்தில் எழுவாய்த்தொடரென்பது தேவையானதாயிருந்தாலும், இன்று நாம் பார்க்கும் எந்தவொருநூலிலும் அது உரையாடல்கள்களைக்கொண்ட ஒரு கதைநூலாகவேயிருந்தாலும், அதில் இந்த எழுவாய்த்தொடரை காணமுடிவதில்லை.

இதைமட்டுமன்றி, சொல்லப்பட்ட இருபத்தாறுவகைத்தொடர்மொழிகளும் இன்று இல்லையென்பதே உண்மை. வேற்றுமைத்தொடர்களுள் இரண்டாம்வேற்றுமையும் நான்காம்வேற்றுமையும் எங்கெல்லாம்வருகின்றனவோ அங்கெல்லாம் வருமொழியானது வல்லினமுதன்மொழியாயிருந்தால் அந்த வல்லினத்தின் மெய்யை நிலைமொழியில் சேர்த்தெழுதிவிடுகிறோமேயன்றி, அந்த சொற்களைச்சேர்த்தெழுதுவதில்லை.

நிலைமொழியும் வருமொழியும் புணரும்போதுதான் வலி மிகுமென்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அவ்வாறு புணர்த்தியெழுதிவிட்டால் படிக்கமுடியாதென்பதை காரணமாய்க்காட்டி அவற்றை பிரித்தெழுதுவதை வழக்கமாக்கிவிட்டோம். ஆனால், எந்தக்காரணத்துக்காகவும் தொடர்மொழிகளை பிரித்தெழுதக்கூடாது. அவ்வாறு பிரித்தெழுதுவது குற்றமாகும்.

வலிமிகுமிடங்களில் நிலைமொழியீற்றில் வல்லினமெய்யைவைப்பதால் அது வருமொழியுடன் புணர்ந்துள்ளதென்பதை அறியமுடியும். ஆனால், சொற்கள் இப்படி வலிமிகாமல் இயல்பாய்ப்புணர்வதுமுண்டு. அவ்வாறானதொடர்மொழிகளை பிரித்தெழுதிவிட்டால், அவை புணர்ந்துள்ளனவென்பதை அறிந்துகொள்ளமுடியாதென்பதைக்காட்டிலும் அவை புணராமல்வந்ததாகவேபொருளாகும்.

தொடக்கப்பள்ளியிலும் இன்னும் இடைநிலைப்பள்ளியிலும்படிக்கும்போது மாணவர்கள் நீண்டதொடர்மொழிகளை படிக்கமுடியாமல் திணறுவார்களெனச்சொன்னால், அது சரி. ஆனால், முதுகலைக்கல்விபயில்வோரும் ஆய்வுக்கட்டுரையெழுதுவோருங்கூட அவ்வாறேயெழுதுவதென்பது எப்படி சரியாகும்?

இதில் ஒரு குற்றத்தை அனைவருஞ்செய்வதுண்டு. அது என்னவென்றால், தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரித்தெழுதுவது.

தொகைநிலையென்றால், சொற்கள் புணரும்போது அவற்றுக்கிடையே வெளிப்பட்டுவரக்கூடிய வேற்றுமையுருபுகளோ உவமவுருபுகளோ ‘ஆகிய’ என்னும் பண்புருபோ ‘உம்’ என்னும் இடைச்சொல்லோ மறைந்துவருவதுண்டு. இவ்வாறு இவை மறைந்துள்ளனவென்பதை அந்த சொற்கள் புணர்ந்திருப்பதனாலேயேயறிந்துகொள்ளமுடியும்.

எடுத்துக்காட்டாக, ‘தமிழ்மொழி’ என்பதில், ‘ஆகிய’ என்னும் பண்புருபு மறைந்திருப்பதாய்ப்பொருள். அதனால், இது ‘இருபெயரொட்டுப்பண்புத்தொகை’ எனப்படுகிறது. இது ஒரு தொகைநிலைத்தொடர்மொழி. இதை ‘தமிழ் மொழி’ என்றெழுதினால், பொருள் வேறாகிவிடும்.

‘தமிழ்மொழியை ஆராயவேண்டும்’ என்பதும், ‘தமிழ் மொழியை ஆராயவேண்டும்’ என்பதும் வெவ்வேறுபொருளைத்தருவதைப்பாருங்கள். இரண்டாவதாய்ச்சொன்னதில், ‘தமிழ்’ என்பது தனித்துநின்றதனால், அது ஒருவருடைய பெயராகிவிடுகிறது. முதல்வாக்கியம் எழுவாயில்லாமலிருப்பதை எண்ணிப்பாருங்கள்.

தமிழ்ப்பாடநூல்களை பார்த்தீர்களானால், அதில், ‘தமிழ் மொழி’ என்று இது பிரித்தெழுதப்பட்டிருப்பதை காணலாம். தமிழுக்கான பாடநூல்களிலேகூட நம் தாய்மொழியின்பெயரை பிழையாயெழுதிக்கொண்டிருக்கிறோம். இதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டாமா? இப்படி எழுதுவதை அனுமதிக்கலாமா?

இரண்டாம்வேற்றுமையேற்ற ஒரு பெயரானது, தன்னையடுத்து ஒரு வினைச்சொல்வந்தால் அதனுடன் புணர்ந்தும்வரும் புணராமலும்வரும். எப்படிவரவேண்டுமென்பது சொல்லவேண்டிய பொருளைப்பொருத்தது. வினைச்சொல்மட்டுமன்றி, ‘ஏ’ ‘தான்’ என்னும் இடைச்சொற்களும்புணர்ந்துவரும். ஆனால் பெயர்ச்சொல் ஒருபோதும்புணர்ந்துவராது. ஏனென்றால், அந்த வேற்றுமைக்கு முடிக்குஞ்சொல்லாயிருக்ககூடியது வினைச்சொல்மட்டுமே.

ஆனால் இக்காலத்தில் இரண்டாம்வேற்றுமையில் வலி மிகுமென்பதை ஒரு விதியாய்ச்சொல்லியிருப்பதை பொதுவாயெண்ணிக்கொண்டு, அதனையடுத்து ஒரு பெயர்ச்சொல்வந்தாலும் வேற்றுமையுருபுடன் (நிலைமொழியுடன்) வலிமிகுத்தெழுதிவிடுகிறோம். (ஆனால் வருமொழியை புணர்த்துவதில்லையென்பதுவேறு.)

இரண்டாம்வேற்றுமைமட்டுமன்றி, வினையெச்சத்தைக்கண்டாலும், அடுத்துவருவது வினையாபெயராவென்பதைப்பாராமல், பெயர்வரும்போதும் வலிமிகுத்துவிடுவது இன்று வழக்கமாயிருக்கிறது. வினையெச்சமும் வினையோடுமட்டுமேபுணரும். பெயர்வந்தால் அந்த பெயர் தனித்துநிற்குமேயன்றி வினையெச்சத்துடன் புணர்ந்துவராது.

வினையெச்சமும் பெயரும் புணரக்கூடாதவையென்பதைக்கூட நாம் அறியாமலிருக்கிறோமென்றால், தமிழை நாம் அறிந்திருக்கிறோமென்பதில் பொருளேது?

நான்காம்வேற்றுமையும் இரண்டாம்வேற்றுமையும் எங்கெல்லாம்வருகிறதோ அங்கெல்லாம் அடுத்துவருவது வல்லினமுதன்மொழியாயிருந்தால் நிலைமொழியில் வருமொழிக்கேற்ற வல்லினமெய்யை ஒட்டிவிடுகிறோம். ஆனால், அங்கே சொல்லவரும் பொருளுக்கு பொருந்தக்கூடியது, புணர்த்திச்சொல்வதா, அல்லது புணர்த்தாமற்சொல்வதாவென்பதைப்பற்றி ஒருபோதும் நாம் எண்ணிப்பார்ப்பதேயில்லை.

இப்படி எல்லாவிடங்களிலும்புணர்த்துவதால், புணர்த்திச்சொல்வது பொருந்துமிடங்களில் பொருள் சரியாயிருக்க, பிறவிடங்களில் குற்றப்பட்டுவிடுகிறது.

இதுபோல், ‘அந்த’ ‘இந்த’ என்னும் சுட்டுப்பெயர்வருமிடங்களிலும் வல்லினம்வந்தால் வலிமிகுத்துவிடுவதை வழக்கமாய்க்கொண்டிருக்கிறோம். ஆனால் சுட்டுபெயரும் அது வரும் அனைத்திடங்களிலும் புணர்ந்துதான்வரவேண்டுமென்பதில்லை. அது புணர்ந்துவருவதும் புணராமல்வருவதும் சொல்லவரும் பொருளைப்பொருத்ததே.

அந்த பெட்டியைக்கொண்டுவா’ என்பதற்கும் ‘அந்தப்பெட்டியைக்கொண்டுவா’ என்பதற்கும் பொருளில் வேறுபாடுண்டாவென்பதை எண்ணிப்பாருங்கள்.

பிரித்துச்சொன்னபோது சுட்டுக்கு பொருளில் சிறப்பில்லாமலிருப்பதையும், சேர்த்துச்சொல்லும்போது அது சிறந்திருப்பதையும்பாருங்கள். ‘அந்தப்பெட்டி’ எனச்சொல்லும்போது ஒரு பெட்டியை குறிப்பிட்டுச்சொல்வதும், ‘அந்த பெட்டியை’ எனச்சொல்லும்போது அங்கே இருப்பது அந்த ஒருபெட்டியைத்தவிர வேறேதும் இல்லையென்பதும் விளங்கிக்கொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?

இக்காலத்தில் ‘அந்த’ என்பதை பெரும்பாலும் ‘அ’ எனச்சொல்வது வழக்கமாகிவிட்ட்தால் ‘அப்பெட்டி’ என்றேயெழுதுகின்றோமென்பது குறிப்பிடத்தக்கது.

புணர்ச்சியைப்பற்றி சொல்லவேண்டியவை மிகுதியாயிருந்தாலும் இவ்வளவில் முடித்துக்கொள்கிறேன். இதற்குமேல் எண்ணுவோர் எண்ணிக்கொள்க!

தேமொழி

unread,
Nov 26, 2014, 2:19:56 AM11/26/14
to mint...@googlegroups.com
நன்றி டாக்டர் பொன்முடி,

///
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போதுதான் வலி மிகுமென்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், அவ்வாறு புணர்த்தியெழுதிவிட்டால் படிக்கமுடியாதென்பதை காரணமாய்க்காட்டி அவற்றை பிரித்தெழுதுவதை வழக்கமாக்கிவிட்டோம்.
///

என்று கூறியுள்ளீர்கள்.  அத்துடன் சரியான முறையில் புணர்த்தி எழுதாதது இலக்கண அடிப்படையில் குற்றம் என்றும் சொல்கிறீர்கள்.

ஆனால், படிக்க எளிய முறை, இலக்கணப்பிழை போன்றவற்றையும் தாண்டி எனக்கு வேறு ஒரு கவலையுண்டு.

இந்தக்கணினி மற்றும் இணையக்காலத்தில் பெரும்பாலும் சிறு சிறு தனிச்சொற்களாக அமைத்து எழுதினால்,  அது தொடர்பான தகவல்களைத் தேடுவதில் தேடுபவர்களுக்கு உதவும்.

எடுத்துக்காட்டு: "அந்தப்பெட்டியைக்கொண்டுவா"

எனத்தேடிப்பாருங்கள் ... அந்த தேடலில் எதையுமே கண்டுபிடிக்க வழியில்லை. தேடல் முடிவவாக ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை.

மாறாக 'அந்தப் பெட்டியைக் கொண்டு வா' என்று தேடினால் பல தகவல்கள் கிடைக்கும்.

எனவே... இவ்வாறாக எளிய முறையில் எழுதுவதில் உள்ள பலனையும் பற்றி யோசிக்க வேண்டியத் தேவை இருப்பதாகக் கருதுகிறேன்.

அன்புடன்
..... தேமொழி

Pandiyaraja

unread,
Nov 26, 2014, 2:43:59 AM11/26/14
to mint...@googlegroups.com
>>
எடுத்துக்காட்டு: "அந்தப்பெட்டியைக்கொண்டுவா"
>>
திரு.பொன்முடி அவர்களும் இம் மாதிரித்தான் எழுதவேண்டும் என்று கூறுகிறார் என்று நான் நினைக்கவில்லை.
 "அந்த பெட்டியை கொண்டுவா" என்றுதான் நிறையப் பேர் எழுதுகிறார்கள். இது புணர்ச்சி விதிகள் இல்லாமல் எழுதுவது. இது தவறு. புணர்ச்சி விதிகளின்படி இரண்டு இடங்களில் ஒற்று மிக வேண்டும். மற்றபடி இடைவெளிகள் இருக்கலாம். அது நல்லது. கணினிக்கு மட்டுமல்ல, சாதாரணமாகப் படிப்பவர்க்கும் அதுதான் நல்லது. "அந்த பெட்டியை கொண்டுவா" என்று படித்தால் என் தந்தை தலையில் கொட்டுவார், "ப்-பும், க்-கும் எங்கடா போச்சு" என்பார். அப்படி நான் நிறையக் கொட்டு வாங்கியிருக்கிறேன். இப்படிப் படித்தால், தனியே புணர்ச்சிவிதிகள் என்று படிக்கத் தேவையில்லை. கல்+தூண் = கற்றூண் என்பது போன்ற விதிகள் எல்லாம் இப்போது பின்பற்றத்தகுந்தவை அல்ல என்பது என் கருத்து. பல்பொடி, மண்பாண்டம், குறள்பத்து, முள்தாள் என்பன இயல்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவற்றை வலிதில் புணர்க்கவேண்டாம். கற்றாழை, பற்சிதைவு, உட்பிரிவு போன்றவை தனிச்சொல் போலவே ஆகிவிட்டன. அவற்றை வலிதில் பிரிக்கவேண்டாம். இவை என் கருத்துக்களே. இவற்றை அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும் நான் சொல்லமாட்டேன்.
ப.பாண்டியராஜா

தேமொழி

unread,
Nov 26, 2014, 2:49:24 AM11/26/14
to mint...@googlegroups.com
விளக்கத்திற்கும் உங்களுடையக் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும்  மிக்க நன்றி ஐயா.

Oru Arizonan

unread,
Nov 26, 2014, 12:12:39 PM11/26/14
to mint...@googlegroups.com
உயர்திரு பாண்டியராஜா அவர்களே,

நானும் என் தாத்தாவிடம் நிறையக் குட்டுகள் வாங்கியிருக்கிறேன். ("வாங்கி இருக்கிறேன்"  என்றெழுதவில்லை, பார்த்தீர்களா!)  எனவே, இப்பொழுது தேவையில்லாமால் மெய்யெழுத்துகள் புணர்ச்சிக்காகச் சேர்க்கப்படுகின்றன, அதுபோலத் தேவையுள்ள இடங்களில் விடப்படுகின்றன.

"அச்சப்படுகிறேன்" என்பதை "அச்ச படுகிறேன்" என்று எழுதுவதும், "புதுப்பார்ப்பான்" என்றெழுதாமல், "புதிய பார்ப்பான்" என்றுமெழுதாமல், "புதியப் பார்ப்பான்" என்றும் எழுதப்படுகிறது.

இந்தமட்டும் தமிழில் எழுதுகிறார்களேவென்று மகிழும்படியாகிவிட்டது.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Reply all
Reply to author
Forward
0 new messages