(வெருளி நோய்கள் 896-900: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 901-905
901. கெடுமதிப்பு வெருளி – Oppugnophobia(2)
சுட்டுரை, முகநூல் முதலான குமுகத் தளங்களில் பின் தொடருநர் இழிவாக எண்ணும் வகையில் சிலர் மதிப்புக்கேடாகக் குறிப்பிடுவார்கள் எனப் பேரச்சம் கொள்ளுதல் கெடுமதிப்பு வெருளி.
00
902. கெண்டக்கி கோழி வெருளி -KFCphobia
கெண்டக்கி கோழி உணா குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி கோழி வெருளி
கெண்டக்கி வறுகோழி (KFC, Kentucky Fried Chicken) என்பது விரைவு உணவுச்சாலைகளின் கூட்டமைப்பு. இதன் தலைமையிடம் கெண்டக்கியில் உள்ள (உ)லூயிவிலில் (Louisville ) உள்ளது.
வறு கோழியுடன் பிற உணவுகளும் விற்பதால் கெண்டகி வறுகோழி வெருளி என்று சொல்லாமல் கெண்டகி கோழி எனக் குறிக்கப்பெறுகிறது.
00
903. கெண்டக்கி வெருளி -Kentuckyphobia
கெண்டக்கி மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கெண்டக்கி வெருளி.
கெண்டக்கி(Kentucky) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் 15 ஆவது மாநிலமாக 1792 இல் இணைந்தது. இதன் தலைநகரம் ஃபிராங்போர்ட்டு(Frankfort).
கெண்டக்கி மாநிலம் தொடர்பானவற்றுள், உணவு, பழக்க வழக்கம், பண்பாடு, தொழில், மக்கள் என ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருண்மைகளில் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்.
00
904. கேட்பி வெருளி – Hearingaidphobia
கேட்புதவிப்பொறி(Hearingaid) குறித்த வரம்பற்ற பேரச்சம் கேட்பி வெருளி.
செவிப்புலன் குறைந்தோர் கேட்பதற்குப் பயன்படும் கருவி காதொலிக்கருவி அல்லது செவித்துணைக் கருவி அல்லது கேட்புதவிப்பொறி என அழைக்கப்படுகிறது. இதனைச் சுருக்கமாகக் கேட்பி எனக் குறிக்கலாம்.
கேட்பியை அணிவதால் தம்மைச் செவிடர் எனப் பிறர் எண்ணுவர் என்ற அச்சம், தரமற்றவற்றை அணிந்து சரியாகக் கேட்க முடியாமல் போவதால் ஏற்படும் இடர் போன்ற கவலையும பேரச்சமும் கொள்வதால் கேட்பி வெருளி வருகிறது.
00
905. கேயானு வெருளி – Keanuphobia
கேயானு கதைப்பாத்திரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கேயானு வெருளி.
கேயானு இரீவசு என்னும் கனடா நடிகர் உள்ளார். இங்கே அவரைக் குறிக்கவில்லை. தீன் கோண்டசு (Dean Koontz) என்பவரின் பொய்யான நினைவகம் (False Memory) என்னும் புத்தகத்தில் உள்ள பாத்திரம் ஒன்றின் பெயர். அதில் கேயானு மீது ஒரு பெண்ணிற்கு அளவுகடந்த வெறுப்பும் அச்சமும் இருப்பதாக வரும். அதனையே கேயானு வெருளி என்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
“நானிலம் சிறக்கவே
நன்னெறி காணவே
நலம் திகழவே
வளம் நிறையவே
அல்லன அழியவே
நல்லன பெருகவே
நல்லோர் உயரவே
இல்லார்க்கும் வல்லார்க்கும்
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
எல்லார்க்கும் வாழ்த்துகள்
நடைமுறை யாண்டில்
என்றென்றும் வாழிய!”
நடைமுறை ஆண்டு எனக் குறிப்பதன் காரத்தை அறிய 2019 இல் அகரமுதல இதழில் எழுதிய கட்டுரையை அளிக்கின்றேன்.
உலகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனவு கண்டாலும் அவர் கனவு நனவாகும் என எதிர்பார்த்திருக்கவில்லை. அலோசியசு மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் கனவு நனவாகியது. தொடக்கத்தில் ஆண்டுமுறை மாற்றத்திற்கான கருத்துருவை அவர்தான் அளித்திருந்தார். எனினும் 1575 இல் அவரது தம்பி அந்தோனியோ இலிலியோ (Antonio Lilio) நாட்காட்டிச் சீர்திருத்த ஆணையத்திடம் அதனை அளித்தார். இந்த ஆணையம் நாட்காட்டி மீட்புப் புதுச் செறிவுத் திட்டம்(Compendium novae rationis restituendi kalendarium) என்ற பெயரில் 1577 இல் அச்சிட்டு 1578இல் உலகிலுள்ள உரோமன் கத்தோலிக்கு அமைப்புகளுக்குஅனுப்பியது.
அவற்றின் ஒப்புதலையும் சில திருத்தஙு்களையும் ஏற்று, இவ்வாண்டு முறையைத் திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி [Pope Gregory XIII, 07.01.1502 – 10.04.1585] 24.02.1582 இல் நடைமுறைப் படுத்தினார். எனவே, இதனைக் கிரகோரியன் ஆண்டு அல்லது கிரிகோரியன் நாட்காட்டி என அவர் பெயரால் அழைக்கின்றனர்.
தொடக்கத்தில் 8 நாடுகள் மட்டுமே இந்த ஆண்டுமுறையைப் பின்பற்றின. இப்பொழுது பெரும்பாலான உலக நாடுகள் இம்முறையையே பயன்படுத்துகின்றன.இயேசுநாதர் பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் குறிக்கப் பெற்றமையால் கிறிததுவ ஆண்டுஅல்லது ஆண்டவரின் ஆண்டு அல்லது பொதுமுறை ஆண்டு என்றும் அழைக்கின்றனர்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்காகும் காலம் என்பது 365 நாள் 5 மணி நேரம் 49 நிமையம் 12நொடி ஆகும். கணக்கிடுவதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டு 365 நாள் என்பதையே ஆண்டுக் காலமாகக் கொள்கிறோம். ஏறத்தாழ கால் நாள் குறைவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 366 நாள் எனக் கணக்கிடுகிறோம். இதுதான் மிகைநாள் ஆண்டு(leapyear). எனினும் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளில் மிகை நாள் இருக்காது. அஃதாவது 1900, 2100, 2200, 2300 ஆகியன மிகைநாள் ஆண்டுகளன்று. ஆனால் 2000, 2400, 2800 முதலான ஆண்டுகள் மிகைநாள்ஆண்டுகள்.
3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பெற்ற தொல்காப்பியத்தில் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவதன் வாயிலாகத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே 6 பருவங்கள் கொண்ட ஆண்டு முறை இருந்தது என்பதை அறிகிறோம். ஒவ்வொரு பருவத்திற்கும் 2 மாதங்கள். எனவே, ஆண்டிற்கு 12 மாதங்கள். இதனைப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு ஆவணியும் புரட்டாசியும் கார்காலம், ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம், மார்கழியும் தையும் முன்பனிக்காலம், மாசியும் பங்குனியும் பின்பனிக்காலம் சித்திரையும் வைகாசியும் இளவேனில் காலம், ஆனியும் ஆடியும் முதுவேனில் காலம் என விளக்குகிறது. (ஆவணி முதலான மாதங்களின் பெயர்கள் யாவும் தமிழே எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான தமிழறிஞர்கள் மெய்ப்பித்துள்ளனர்.)
பூமி தன்னைத்தானே சுற்றும் கால அளவினை நாளாக வகுத்தனர் தமிழர்கள்.
நிலா பூமியைச் சுற்றிவரும் கால அளவைத் திங்கள் அல்லது மாதம் என்றனர்.
(மதியால் அளவிடப்படும் காலம் மாதம் எனப்படுவது தமிழே). பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலத்தை ஆண்டு என வகுத்தனர் நம் தமிழ் முன்னோர்கள். இவ்வாறாக, உரோமானியர், கிரேக்கர் முதலான அன்றைய அயல்நாட்டார் ஆண்டிற்குப் பத்து மாதங்கள் என வரையறுத்திருந்த பொழுது துல்லியமாக 12மாதங்கள் கொண்டது 1 ஆண்டு எனக் காலத்தைப் பகுத்திருந்தனர்.
எனவே பொதுமுறை ஆண்டு அல்லது நடைமுறை ஆண்டு அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பே இருந்த தமிழ் ஆண்டுப் பகுப்புச் சிறப்பை நாம் மறந்துவிட்டோம். எந்த ஆண்டு முறையைப் பின்பற்றினாலும் நம் ஆண்டுச் சிறப்பை நாம் மறவாதிருப்போம்.
திருவள்ளுவர் ஆண்டு, தொல்காப்பியர் ஆண்டு, பெரியார் ஆண்டு, கொல்லம் ஆண்டு, பசலிஆண்டு என்றெல்லாம் கூறுவதுபோல் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஆண்டுகள் பழக்கத்தில் உள்ளன. இருப்பினும் அனைவரும் செய்திகள், வரலாற்றுக் குறிப்புகள் முதலானவற்றில் கிரகோரியன் ஆண்டுமுறையையே நடைமுறையில் பயன்படுத்துவதால் இதனை நடைமுறை ஆண்டு எனலாம்.
அவ்வாறாயின் தமிழ் ஆண்டு எது எனலாம். இன்றைய நிலையில் நாம் தை முதல் நாள் பிறக்கும் காலப் பகுப்பையே தமிழ் ஆண்டுப் பிறப்பாகக் கெண்டாடுவோம். அதே நேரம், சித்திரைப் பிறப்பையும் புறந்தள்ள வேண்டா.
சித்திரைத் தொடக்க ஆண்டு முறைக்குத் தவறாகப் புனையப்பெற்ற கதையும் பழந்தமிழ்ப்பெயர்களை மாற்றி அயற்பெயர்களைச் சூட்டிய கொடுமையும் நீங்கவே தமிழறிஞர்கள் திருவள்ளுவர் ஆண்டினை அறிமுகப்படுத்தினர்.
இன்றைய தமிழ்த் தலைறையினரின் 100க்குத் 90 பெயர்கள் தமிழாக இல்லை. பலரின் புனை பெயர்கள் தமிழாக இல்லை. அதனால் நாம் அவர்களைத் தமிழர் அல்லர் எனச் சொல்ல முடியாது. சித்திரை ஆண்டுப் பிறப்பின் பெயர்களை இடைக்காலத்தில் அயற்பெயர்களாக மாற்றி விட்டனர். எனவே, அதனால் அதனை நாம் நம் ஆண்டு இல்லை என ஒதுக்க வேண்டா. பிரபவ முதலான ஆண்டு வட்டத்தை நாம் வேறு பெயர்களில் அழைக்கவும் வேண்டா. முதலாம் ஆண்டு முதல் 60 ஆம் ஆண்டு ஈறாக நாம் பயன்படுத்துவோம்.
ஆவணியில் பிறக்கும் காலப் பகுப்பை நாம் தொல்காப்பியர் ஆண்டு என்போம். சூரியச் சுழற்சியின் அடிப்படையில் அது திசை மாறும் நாளான தைப் பிறப்பில் தொடங்கும் காலமுறையைத் திருவள்ளுவர் ஆண்டாகக் கொண்டாடுவோம். வியாழன் சுழற்சி வட்டத்தின் அடிப்படையில் சித்திரையில் வருடையில் தொடங்கும் வருடத்தினை இளங்கோவடிகள் வருடம் எனக் கொண்டாடுவோம்.
நாளைக் குறிக்க வேண்டிய எல்லா இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்துவோம்.
அனைவருக்கும் நடைமுறை ஆண்டு வாழ்த்துகள்!
– அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்