அற்றத்தால் தேறார் அறிவுடையார்
தகுதியும் திறமையும் இருந்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம்; பொதுப்பணியாற்றலாம்; மாத வருமானத்தில் குடும்பத்தை மகிழ்விக்கலாம் என்ற எண்ணம் ஒவ்வோர் இளைஞர் நெஞ்சத்திலும் பஞ்சமில்லாமல் பரவிக்கிடக்கின்றன. அடிப்படைப் பணி முதல் ஆளுமைப் பணி வரை எத்தேர்விலும் அறிவுக்கு ஏற்பிசைவு உண்டு என்ற நம்பிக்கையில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கின்றனர். தேர்வு நேர்மையாக நடைபெற்று, அதனால் திறமையானவன் தேர்ச்சி பெற்றால், அறிவின் விளைவால் உள்ளம் மகிழ்வான்; உயர்ச்சியடைவான். தேர்வு நிகழ்வில் அன்பாலும், ஆசையாலும் முறைகேடுகள் மூக்கை நுழைக்கும்போது, தகுதியானவன் தகுதியிழக்கின்றான்; தகுதியற்ற அறிவிலியோ தேர்ச்சி பெறுகிறான். இப்படிப்பட்ட அறிவிலிகள் இருக்கையில் அமர்ந்தால் இழிசெயல் செய்வர்; இன்னல் கொடுப்பர்.
அறிவற்றவர்களையும் மந்தர்களையும் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது பயனற்ற விளைவுகளையே தரும். தகுதி திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பணித் தேர்வு நடைபெற வேண்டும். தேர்வுக்குப் போட்டியிடுவர்கள் தங்கள் உறவினர்கள் என்றோ, நண்பர்கள் என்றோ கருதி அவர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது. அவ்வாறு தங்களுக்கு வேண்டியவர் என்று திறமையில்லாத நபரை பணியமர்த்தினால் ஏற்படும் அறியாமையின் விளைவு யாவற்றையும் நியமித்தவர் துய்த்தே ஆகவேண்டும். இதனை வள்ளுவர்,
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்என்று உயர்வழியைப் பின்பற்ற நற்கருத்தை நவின்றுள்ளார்.
கருடன் மீது ஏறி வீற்றிருப்பவரும், உலகத்தைத் தாவியளந்த பெருமை பொருந்தியவருமான திருமாலே யாயினும், நல்லதோ கெட்டதோ தனக்கு ஊதியந்தரும் சீரிய செயலை மட்டுமே செய்வர். ஆகையால், யாரையும் நம்பாமலும், உறவினர், நட்பினர் என்று பாராமலும் அறிவிற் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துப் பணியமர்த்த வேண்டும் என்று கீழ்வரும் பழமொழிப் பாடலும் உய்த்து உணர வைக்கின்றது.
சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரைஎனவே, அறியாமையுடையாரைத் தேர்வு செய்தலும், கைகூடாத பொருள்களின்மேல் அன்பு செலுத்துதலும் பேதைமையாகும் என்பது போதரும்.
சில புலிகளின் முகம் மான் போலத் தோற்றமளிக்கும். சில மான்களோ புலிகளின் முகம் போன்ற தோற்றமளிக்கும். இந்த இயற்கையான உருமாற்றத்தால் வெளித்தோற்றத்தைக் கண்டு நம்புவது அபாயகரமாகும் என்கிறது இந்து மதம்.
உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களை, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்குமாறு அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்; மேலும், நீங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் போது, நீதிநெறியுடன் தீர்ப்பளிக்க வேண்டும் " (அல்குர்ஆன்: 4:58).
மனிதர்கள் வெளிப்புறத் தோற்றம், உயரம், உடல் அழகு போன்றவற்றைப் பார்க்கிறார்கள். இயேசு ஒருவரின் அகத்திலுள்ள குணங்கள், எண்ணங்கள், நோக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கிறார் (1 சாமுவேல் 16:7). ஒருவரின் உண்மையான மதிப்பு வெளிப்புறத் தோற்றத்தில் இல்லை; இதயத்தில் உள்ள தூய்மையிலும், குணத்திலும், அறிவிலும், திறமையிலும் தான் உள்ளது என்பதை இயேசு உணர்த்துகின்றார்.
தேர்வு முறையில் தூய நிலைப்பாடு வேண்டும் என்பதை மும்மதமும் தமிழறமும் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எடுத்துரைக்கின்றன.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/4cbc56bf-7caf-403f-81ab-4475053a300an%40googlegroups.com.