பட்டீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
திருக்கோயிலழகும் சிற்பச் சிறப்பும் உடையது என்கிற நற்பெயரைப் பொதுவாகத் தட்டிக்கொண்டு போவது தஞ்சை மாவட்டம் தான். இந்தப் பெருமைக்குப் போட்டி போடும் விகதமாக அமைந்திருப்பது கோவை மாவட்டத்திலுள்ள திருப்பேரூர் ஆகும்.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கிழக்கு பார்த்த வாசல். ராஜகோபுரத்தை அடுத்துள்ள பல தூண்கள் மிகுந்த கலையம்சமுள்ள சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் 63 நாயன்மார்களின் உருவங்களும், கோவிலின் தல வரலாற்றை கூறும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
தல வரலாறு
இத்தலத்தின் வரலாறு கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
இறைவன் பட்டீசுவரசுவாமி; இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் குளிர்ச்சியாகத் திருப்பெயர்கள். சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது. ஆஞ்சநேயர், _மாய கிருஷ்ணர் என்று ஆங்காங்கே தூண்களில் கலையுடன் சமய ஒற்றுமையும் சேர்ந்து மிளிர்கிறது.
பேரூர் நகரின் வரலாற்றைப் பார்க்கையில், அக்கோயிலில் பலவிதக் கலைப் பாணிகளும் சங்கமித்துள்ளது. அதிசயமில்லை என்று புரிகிறது. அகழ்வாராய்ச்சிகளின் போது ரோமானிய நாணயங்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கி.மு. காலத்தில் தோன்றிய ஊர். பின்னர் கி.பி. ஏழாம் நு}ற்றாண்டு வரை, பல்லவர்கள், சேர, சோழ ஆதிக்கம், கொங்கு, பாண்டியர் ஆட்சி விஜய நகர அரசர்களின் கட்டுப்பாடு, மதுரை நாயக்கர்களின் அதிகாரம், இறுதியாக மைசூர் மன்னர்களின் அரசாங்கம் - என்று தென்னாட்டில் முக்கிய வம்சத்து அரசர்கள் கொடி நாட்டிய இடம் இப்பகுதி.
‘ஆரூரார் பேரூரர்’ என்றும் ‘பேரூர் பிரமபுரம் பேராவூரும்’ என்றும் அப்பர் சுவாமிகள் சுவாமிகள் தனது சேஷத்திரக்கோவையில்; இரண்டிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறார். எனவே சுமார் கி.பி. 650-க்கு முன்னரே பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். பேரூர் பற்றிய தனித் தேவாரம் மறைந்து போய் விட்டதாகக் கருதப்படுகிறது.
சுயம்புவாக சுவாமி தோன்றியது. கயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் அவரிடத்தில் “சுவாமி தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகராகக் கருதக் கூடியது எது?” என ஒரு சந்தேகம் கேட்டாராம். அதற்கு பெருமான் பதில் கூறிய போது “உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிய கயிலாயம் என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவை தாம். ஆனால், எளிய மனிதருக்கும் சென்று முக்தி அடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு” என்றாராம்.
நாரதேசுவரம்
இந்த மகிமையைக் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்த முருக பெருமான் அதை நாரதருக்கு உணர்த்த, நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம். (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கின்றது).
இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட முனிவர், காஞ்சிமா நதிக்கரையோரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிடேகத்துக்கென ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம். நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்று. நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சூழ காஞ்சி நதி அம்போல் அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டீசுவரப் பெருமான்.
பட்டிபுரி - காமதேனுபுரம் - பட்டிநாதர்
ஒரு சமயம் பிரும்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணாயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மகாவிஷ்ணு காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரும்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டு இருக்கிறார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததாம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிணகைலாசம் பற்றிச் சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அதே இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலாபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.
பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் என் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார்.
“இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலேயே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.
இந்தப் புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் பட்டீசுவர பிரானின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம்.
இத்திருக்கோயிலில் முருகப்பெருமான், விசுவநாதருக்கும், விசாலாட்சி அம்மையருக்கும் நடுவில் மேற்கு முகமாக நின்ற கோலத்தில் பாலதண்டபாணியாகக் காட்சியளிக்கின்றார்.
8 திசை காவலர்களும் கதை வேலைப்பாட்டில் காட்சியளிக்கும் வேசரவிமானமுள்ள, சோழ அரசனால் அமைக்கப் பெற்ற கருவறையில் இறைவன் லிங்க வடிவில் பட்டீஸ்வரன் (பட்டிப்பெருமான்) என்னும் நாமத்துடன் தரிசனம் தருகின்றார். கிழக்குதிசை நோக்கியுள்ள மூலவரின் பின்புறத்தில் காமதேனுவும் இடம் பெற்றுள்ளது.
நாற்று நட்ட பெருவாழ்வு
‘சர்வமும் தானே’ என்கிற தத்துவத்தை சுந்திரமூர்த்த நாயனாருக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அதன் பொருட்டு பறவையாருடன் நாயனார் திருப்பேரூர் வந்தடைந்த போது விவசாயக் குடிமகனாக அவதாரமெடுத்தார். பெருமான் பள்ளன் விவசாயியாகவும், உமாதேவி பள்ளி விவசாயப் பெண்ணாகவும் மாறி நாற்று நடப்போனார்கள். தேவர்களுனம், சிவ கணங்களும் உதவியாளர்களாய் வந்தார்கள். இந்த நாற்று நடு திருவிழா நடந்து கொண்டிருக்கையில் சுந்தரர் கோயிலுக்குப் போயிருக்கிறார். அங்கே பெருமானைக் காணாமல் நந்திதேவரிடம் விசாரித்திருக்கிறார். நாற்று நடவுக்குச் செல்லும் முன், தம் நண்பரைப் பற்றி நன்கறிந்த இறைவன் நந்தி தேவரிடம் ‘அவன் கேட்டால் என் இருப்பிடம் உரைக்காதே’ என்று எச்சரித்துச் சென்றார். எச்சரிக்கையை மீறி நந்திதேவர் சுந்தரரிடம் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். சுந்தரரும் காஞ்சி நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த பெருமானை தரிசித்து மகிழ்ந்தாராம்.
இதன் பின்னர் அந்த நதியில் நீராடி மீண்டும் கோயிலுக்குத் திரும்பியிருக்கிறார் பெருமான். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்து விட்டாராம். (நந்தி தேவரின் தாடை சற்று சப்பட்டையாக இந்தக் கோயிலில் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி, மன்னிப்பு வேண்டித் தவமிருக்க, தமது தாண்டவ தரிசனத்தை அவருக்கு அளித்திருக்கிறார்.
திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக, கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
கோயில் அமைப்பு
கிழக்கு பார்த்த கோயிலில் முதலில் அமைந்துள்ளது இராஜகோபுரமாகும். ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் சிறந்த சுதை வேலைப்பாடு கொண்டது. இராஜகோபுரத்தை அடுத்து நீண்ட நெடிய வழியில் இருபுறமும் அமைந்துள்ள தூண்களில் சிறந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. அரக்கியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரும் அனுமன், ஏகபாததிரிமூர்த்தி, கொடி பெண்கள், இடக்கை டோல ஹஸ்தம், வலக்கைப் பூக்கொண்ட அம்மை முதலிய சிற்பங்கள் சிறப்புடையன. மண்டபத்தில் மேல் கூரையில் அறுபான்மை நாயன்பார் வரலாறுகள் ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளன. மேல் கூரையை ஒட்டிய இரு பகுதியிலும் பேரூர் புராணச் செய்திகள் ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளன.
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் விளங்குகிறது. அதனையடுத்து வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி அருள்மிகு தண்டபாணி கோயில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் வலக்கையில் தண்டு, இடக்கை கட்டியம் வலம் பிதஹஸ்தம், அரையில் கோவணம் உடையவராய் தண்டபாணிக் கடவுள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அதனையொட்டி தென்புறத்தில் விசாலாட்சி ஆலயமும், வலப்புறத்தில் விசுவநாதர் ஆலயமும் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் வட கீழ்த்திசையில் யாகசாலை மண்டபம் உள்ளது. அதனையொட்டி அம்மன் கோயிலின் நேர் கிழக்கில் கிழக்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. அவ்வாயிலின் வெளிப்புறத்தின் மேல் அம்மையப்பர் திருமணக் காட்சி சுதை வேலைப்பாட்டில் சிறப்புற்றுத் திகழ்கின்றது. அவ்வாயிலில் தெற்கில் வாகன மண்டபம் உள்ளது.
வெளிப்பிரகாரத்தைக் கடந்து அருள்மிகு பட்டிப்பெருமான் ஆலயத்தை அடைய மேற்கு நோக்கிச் சென்றால் கொடிக்கம்பம், பலிபீடம், இடப வாகனம் ஆகியவற்றை முறையாகக் கடந்து உள்ளே செல்லலாம். இரண்டாம் நுழை வாயிலின் தென்புறத்தில் விநாயகரும், வடபுறத்தில் சண்முகரும் வீற்று உள்ளனர். வாயிலைக் கடந்து உள்ளே சென்று உட்பிரகாரத்தில் தெற்கே சென்றால் தென்கிழக்கு மூலையில் சூரியன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் உள்ளார். தெற்குப் பகுதியில் அறுபத்து மூவர் மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் நாயன்மார் திருவுருவங்களும், சந்தானக்குரவர் திருவுருவங்களும் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. அதனை ஒட்டித் தென்மேற்குத் திசையில் விநாயகர் ஆலயம் உள்ளது. உட்பிரகாரத்தின் மேல் பகுதியில் சிவலிங்கங்கள் உள்ளன.
இவ்லிங்கங்கள் அடுத்து வலப்புறம் மனோன்மணி உருவம் உள்ளது. உட்பிரகாரத்தின் வடமேற்கில் வலப்புறம் வள்ளியம்மை, இடப்புறம் தெய்வானை அம்மையுடன் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய ஆலயத்தில் அருள்பாவித்து வருகிறார். உட்பிரகாரத்தில் வடபுறத்தில் நீண்ட மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தின் கீழ்க்கோடிப் பகுதியில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் திருவுருவங்கள் உள்ளன. இவை இரண்டும் மிகப் பழைய உருவங்கள். அடுத்து வடகிழக்கு மூலையின் ஞானபைரவர் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். பேரூர் முக்தித்தலம் ஆதலின் நாய் வாகனம் இல்லாத ஞானபைரவர் நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஞானபைரவரை அடுத்துக் கிழக்குப் பகுதியில் சந்திரன் நின்ற நிலையில் உள்ளார். உட்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பெரிய மண்டபம் உள்ளது. இடபத்தின் கொம்பினால் (சிருங்கத்தால்) தோன்றிய தீர்த்தம் சிருங்கத் தீர்த்தம் ஆகும்.
மண்டபத்திலிருந்து நுழைவாயிலில் துவாரபாலகர் இருபுறமும் உள்ளனர். துவார பாலகர் அனுமதியுடன் உள்ளே சென்றால் மகாமண்டபம் அடையலாம். ஆம்மண்டபத்தில் தூண்கள், உத்தரங்கள, வாயில்கள் ஆகியவற்றில் அவற்றைச் செய்தளித்தார் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் தென் பகுதியில் அழகிய சிறிய விநாயகர் உருவாம் உள்ளது. அடுத்து வருவது அர்த்த மண்டபம்.
அர்த்த மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் கருவறையை அடுத்து மனோன்மணியம்மை செம்புத் திருமேனி உள்ளது. கருவறையில் அருள்மிகு பட்டிப்பெருமான் சுயம்பு வடிவமான சிவலிங்கமாக வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். சிவலிங்கத் திருமேனியின் முடியில் குளம்புச் சுவடும், கொம்புச் சுவடும் இன்றும் உள்ளன.
கருவறையின் மேல் விமானம் வேசர அமைப்பில் உள்ளது. விமானத்தில் எட்டுத் திசைக் காவலர் உருவங்குளும் பிற உருவங்களும் சுதை வேலைபாட்டில் அமைந்துள்ளன. வெளிப்புற கோஷ்டங்களின் தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேல்புறத்தில் லிங்கோற்பவர், வடபுறத்தில் நான்முகன், விஷ்ணு, துர்கை ஆகியோர் உருவங்கள் உள்ளன. வடபுறத்தில் கோமுகியை அடுத்து சண்டேசுவர நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. உட்பிரகாரத்தை அடுத்து வெளியில் வடக்குப் பகுதியில நவக்கிரகங்கள் ஆலயம் உள்ளது. அருள்மிகு பட்டிப்பகுதியில் நவக்கிரகங்கள் ஆலயம் உள்ளது. அருள்மிகு பட்டிப் பெருமான் ஆலயத்துக்கு வடக்கிலும், அருள்மிகு பச்சைநாயகி அம்மன் ஆலயத்துக்குத் தெற்கிலும் ஆக இடையில் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. கிழக்கு நோக்கிய அம்மன் சன்னதியின் தென்புறத்தில் துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்து;ளளது. நடராச பெருமான் தூக்கிய திருவடியின் நேர் நோக்கிய நிலையில் துர்க்கையின் திருவுருவம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். அம்மன் சன்னதியில் வடபுறத்தில் வரதராசப் பெருமாள் கோயில் உள்ளது. மகா மண்டபத்தின் உள் வடபுறத்தில் பள்ளியறை அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறையில் நின்ற கோலத்தில் இடக்கை டோல ஹஸ்தம், வலக்கை பூவேந்திய நிலை அருள் வெளிப்படும் கண்கள் என்ற அமைப்பில் அருள்மிகு பச்சைநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். தமிழில் பச்சைநாயகி என்றும் வடமொழியில் மரகதாம்பாள் என்றும் வழங்குவது மரபு. அம்மன் கருவறையின் மீது நாகர (சதுர) அமைப்பில் விமானம் உள்ளது. அம்மன் கோயில் மகா மண்டபத்தில் வடக்கில் வெளிப்பிரகாரத்தில் அண்மைக் காலத்தில் கொண்டு வைக்கப் பெற்ற ஒரே மரத்திலான ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. இத்திருக்கோயிலின் முன்புறம் தெப்பக்குளம் மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது பதினாறு வளைவுகளையுடையது. சிறிய, பெரிய ரதங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
கனகசபை
பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊருரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே.
என்று சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் “தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்துதான் உணரமுடியும்” என்றார்.
உடனே பேரூருக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கி, சுந்தரர் சொன்னது உண்மைதான் என்றுணர்ந்து “சிதம்பரத்தில் இருப்பது திருச்சிற்றம்பலம் இங்கிருப்பதோ அழகிய திருச்சிற்றம்பலம்” என்று கூறிச் சென்றனர்.
அப்பேர்ப்பட்ட பெருமையுடைய இந்த கனக சபையை திருமலை நாயக்க மன்னாpன் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் கட்டினான். 1625 முதல் 1659 வரை 34 வருடங்கள் கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார். இறைவன். அதனால்தான் இத்தலம் மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயாpல் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம்.
கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான 8 சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள். அதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருயே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதைத் தாண்டினால் குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது. அதைத் தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர் அவரோடு சிவகாமியம்மை காட்சியளிக்கின்றனர். நடராஜரின் மண்டபத்தை 4 வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இறைவனுக்கு பணிந்த நிலையில் தூண்கள் சற்றே சாய்ந்த நிலையில் அமைந்துள்ளன.
ஆனந்த தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வீசுகிறஹஸ்தம், வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம் ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்ந்த நிலையிலுள்ளது. சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாக அமைக்கப்பட்டுள்ளன. முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது.
சபாபதி, அழகிய திருச்சிற்றம்பல நாதர், கூத்தப்பிரான் என்பவை நடராஜரின் வேறு பெயர்கள்.
சிவகாமி அம்மையார் வலதுகையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் ஒன்றாகவும், நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத்தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது. இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையில் மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை 28 வருடங்களாக பாடுபட்டு செய்தவரின் பெயர் கம்பனாச்சாரி. குனகசபையில் 36 த்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 36 தூண்கள் உள்ளன.
சிற்பங்கள் அனைத்தும் செய்து முடித்தபின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மன்னர், கம்பனாச்சாரியாரோடு ஏராளமான பொதுமக்களும் கோவிலுக்குள் வந்து கம்பனாச்சாரியாரின் சிலைகளை பார்வையிட்டனர். மகிழ்ச்சியான அந்த தருணத்தில், கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் இரண்டு பக்கமும் இருந்த குதிரைவீரன் சிலைகளில் ஒருபக்கம் உள்ள சிலையில் குறை உள்ளது என்று கூறினான். அதைக் கேட்ட கம்பனாச்சாரியார் குறையை நிரூபிக்குமாறு கேட்டார். உடனே அந்த இளைஞன் நடராஜரின் இடதுபுறத்தில் இருந்த குதிரைவீரன் சிலை முழுவதும் சந்தனத்தை பூசுமாறு கூறினான். அதன்படியே பூசப்பட்டது. சிலையின் ஒரு இடத்தில் மட்டும் சந்தனம் ஈரமாகவே இருந்தது. அந்த இடத்தை உடைக்குமாறு இளைஞன் கூறினான். உடைக்கப்பட்ட இடத்திலிருந்து உள்ளே வசித்து வந்த தேரை குதித்து ஓடியது.
சிற்ப சாஸ்திரம் படித்த தனக்குத் தொpயாத இந்தக் குறை ஒரு இளைஞனால் கண்டறியப்பட்டது கண்ட கம்பனாச்சாரியார் தனது கைகளை வெட்டிக் கொண்டார்.
இக்கதையை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் நடராஜர் சந்நிதிக்கு இடதுபுறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கருகே உடைந்த குதிரைவீரன் சிலையின் மிச்சத்தினை காணலாம்.
கம்பனாச்சாரியாரின் சிற்பத் திறமைக்கு எடுத்துக் காட்டாக தூண்கள் முழுவதும் நிறைந்துள்ள ஏராளமான சிற்பங்களைக் காணலாம். துற்போது 8 அழகிய சிற்பங்களுக்கும் பாதுகாப்பிற்காக கம்பிக்கூடு (வேலி) போடப்பட்டுள்ளது.
கனகசபையின் இருபுறமும் (பக்கத்திற்கு 4) ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்கள்...
நர்த்தன கணபதி
இடதுகாலை மூஞ்சுறு வாகனத்தின் மீது ஊன்றியபடி நடனமாடும் கோலம். வலதுகால் மூஞ்சுறுவின் செவியைத் தொட்டபடி உள்ளது. 8 கைகள் உள்ளன. தும்பிக்கை வலதுபுறமாக சுழிந்துள்ளது கைகளில் மோதகம், பாசம், அங்குசம், கொம்பு ஆகியவை உள்ளன. உதரபந்தனம் காட்டப்பட்டுள்ளது. மூசிக வாகனம் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன் கால்விரல் நகங்கள்கூட அழகாக காட்டப்பட்டுள்ளது. ஆடும் பெருமான் மண்டபம் என்பதால் விநாயகரும் நடனமாடும் நிலையில் காணப்படுகின்றார்.
ஆறுமுகப்பெருமான்
பச்சைமயில் வாகனத்தின் மீது சுகாசனத்தில் அமர்ந்த கோலம். 12 கைகள் உள்ளன. அபயம், வரதம் தவிர ஏனைய கைகளில் வச்சிரம், கத்தி, வில், சேவல் முதலியவை காணப்படுகின்றன. மார்பில் சன்னவீரம் உள்ளது. 6 முகங்களில் 5 முகங்கள் மட்டுமே உள்ளது. ஒரு முகம் பின்னால் இருப்பதாக ஐதீகம். மயிலின் கால்களும், தோகையின் மடிப்பும், தோகையிலுள்ள கண்களும் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
ஊத்துவ தாண்டவர்
ஆலங்காட்டு காளியுடன் போட்டியிட்டு ஆடியதில் வலதுகாலை காதுவரை உயர்த்தியாடி வென்றார். கைகளில் உடுக்கை, வெண்டலையென்னும் பெண், ரிஷபத்தண்டு, திரிசூலம் முதலியவை உள்ளன.
பிரம்மனின் தலைகளில் ஒன்றை கிள்ளி எடுப்பதற்கு முன்னர் நடைபெற்ற தாண்டவாம் என்பதால் பிரம்மன் 5 தலைகளுடன் உள்ளார். அவரைத் தவிர சங்கு, சக்கரத்துடன் திருமாலும் “அரவா நீயாடும்போது உன் அடியன் கீழிருக்க” என்று வேண்டிக்கொண்ட காரைக்காலம்மையாரும் காலடியில் உள்ளார். பின்புறத்தில் நந்தி, நாதர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
ஆலங்காட்டு காளி
காளிக்குரிய ஆலங்காட்டில் தாரகன் என்னும் அசுரனை வென்ற ஆணவத்தில் இருந்த காளியை அடக்குவதற்காக இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். போட்டியில் தோல்வி அடைந்த காளியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. நடராஜர் அருகில் இருந்து பார்த்தால் வெட்கத்துடன்கூடிய புன்முறுவலும், மற்றொரு பக்கம் இருந்து பார்த்தால் கோபமும் தொpயும் விதத்தில் மிகமிக அற்புதமாக செதுக்கப்பட்ட சிலை. சிறப்பு ஆடை, மேகலை, முத்துமாலை, கச்சு ஆகியவையும் தத்ரூபமாகவுள்ளன. கைகளில் கேடயம், கிளி, திரிசூலம் முதலியவை உள்ளன. பின்புறத்தில் கலைமகளும், திருமகளும் இசைக்கருவிகளுடன் காட்டப்பட்டுள்ளனர்.
அக்னி வீரபத்திரர்
தக்கன் செய்த யாகத்தில் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்கப்படாததால் கோபமுற்ற சிவன் அக்னி வீரபத்திரராக உருவம்கொண்டு தக்கனின் யாகத்தை அழித்தார். அரக்கனின் தலையில் திரிசூலம் பதிந்துள்ளது. தலைமாலை, மசரகுண்டலம், சர்ப்பகுண்டலம் ஆகியவை சிறப்பாகவுள்ளன. கைகளில் வில், கேடயம் போன்றவைகளை தாங்கியுள்ளார்.
அகோர வீரபத்திரர்
தக்கனின் யாகத்தை அழித்தபின்னால் அருள்புரிந்த மூர்த்தி, வலதுகையில் வாள், ஏனைய கைகளில் மான், வில், கேடயம் ஆகியவை உள்ளன. இடையில் அணிந்திருக்கும் ஆடை தொங்கும் நிலைகூட நுணுக்கமாக உள்ளது.
பிட்சாடனர்
தாருகாவனத்து முனிவர்களுக்கு ஏற்பட்ட செருக்கை அடக்குவதற்காக இறைவன் எடுத்த அழகிய கோலம் இது. வலது கையில் மானுக்கு புல் தருகிறார். இடதுகை பக்கம் பிச்சை உணவை சுமக்கும் குறட்பூதம், அதன் தலையிலுள்ள பிச்சைப் பாத்திரம் ஆகியவை அழகாக உள்ளன. பின்புறத்தில் தம் மனதை பறிகொடுத்த தாருகாவனத்து முனிபத்தினிகளும் காட்டப்பட்டுள்ளனர்.
யானையுரி போர்த்த கஜசம்ஹாரமூர்த்தி
கஜாசுதன் என்னும் அரக்கன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால் முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தினான். ஆவனை அழிப்பதற்காக இறைவன் தோன்றி, யானை உருவம் எடுத்த அவனை கீழே சாய்த்து யானையின் தலையில் தன்னுடைய இடதுகாலால் மிதித்து நின்று, கைகளால் தோலை உரித்து போர்த்திக் கொண்டார். யானையின் கால்கள், வால், இறைவனின் தலையில் உள்ள கங்கை, தலைமாலை, திரிசூலம் ஆகியவை சிறப்பாக உள்ளன. உக்கிர வடிவமுடைய இம்மூர்த்தி தோலை உரிப்பதற்காக காட்டிய புஜவலிமைகூட தொpயும் விதத்தில் அமைந்துள்ளார்.
கஜசம்ஹாரமூர்த்தியின் அழகைக் கண்டவர்கள் 1975-ல் டில்லியில் இவரின் உருவம் தாங்கிய தபால்தலையை (Stamp) வெளியிட்டு பெருமைப்படுத்தி உள்ளனர்.
இந்த 8 சிலைகளும் உருவத்தில் பெரியதாகவும், அழகாகவும் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற சிலைகள் நடராஜருக்கு இருபுறமும் சந்தனமரத்தில் சிறிய அளவில் அற்புதமாக காட்சியளிக்கின்றன. மேலும் 2 வீரபத்திரர்களுக்கும் நடுவில் மேலே உத்தரத்தில் கற்களால் செதுக்கப்பட்ட 8 சங்கிலிகள் உள்ளன. அதன் நடுவில் கல்லால் செய்யப்பட்ட தாமரை மலரும் உள்ளது. இது சுழலக் கூடியது. கற்களில் இவ்வளவு நுணுக்கமான தோற்றங்களை கண்முன்னே காட்டிய அந்தக்கால சிற்பிகளின் திறமை வியக்க வைக்கிறது.
பிறவாப்புளி
பட்டிசுத்தும் மேடைக்கு கிழக்கில் சாலையோரத்தில் உள்ளது. ஒரே பிறப்புக்கான வரம்பெற்று வந்த புளியமரம். இந்த மரத்தின் விதைகள் முளைப்பதில்லை. இத்தலத்தை வழிபடுபவர்கள் இனி பிறவாநிலை அடைவார்கள் என்று காட்டுவதற்காக அமைந்துள்ளது.
இறவாப்பனை
அறவாணர்கள் போற்றிடும் பேரூர்
அழியா எமக்கோர் இடமாகி
உறவாம் அதனால் எமைப்போல
உலவாததனுக்கு ஒரு சான்றங்கு
இறவாப்பனை ஒன்றுளது.
என்று கச்சியப்ப முனிவரால் குறிக்கப் பெற்றுள்ளன இப்பனை மரம் வடகைலாயர் கோவிலுக்கு வடகிழக்குப் பகுதியில் பிரம்ம தீர்த்தக்கரையில் பல ஆண்டுகளாக இறவாமல் உள்ளது. இத்தலத்தைச் சுற்றி வாழ்பவர்கள் இறவாத புகழடம்பு எய்துவர் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
புழுக்காத சாணம்
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளின்; சாணம் எவ்வளவு நாட்களாக விழுந்து கிடந்தாலும் புழுப்பதில்லை. இத்தலத்தில் இறப்போருக்கு மீண்டும் பிறப்பில்லை என்பதை இது காட்டுகிறது.
கல் எழும்பு
காஞ்சிமாநதியில் இடப்படும் எலும்புகள் சில நாட்களில் கற்கலாக மாறிவிடுவதாக ஐதீகம். அதனால் இத்தலத்தை ஒட்டியுள்ள ஆற்றங்கரையில் ஈமக்கிரியை சடங்குகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன.
வலதுசெவி மேலே
இத்தலத்தின் அருகே வாழ்பவர்கள் வலதுசெவி மேலுள்ள நிலையிலேயே இறப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சிற்ப வேலைப்பாடுகள்
கனகசபையில் உள்ள பெரிய அளவிலான 8 சிற்பங்கள் தவிர ஏராளமான சிற்பங்கள் கோவில் முழுவதும் காணக் கிடைக்கின்றன.
அவற்றில் தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கருகே நண்டும், நாரையும் லிங்கத்திற்கு ருத்ராட்ச மாலை அணிவித்து வழிபடும் சிற்பமும், வாத்திய மண்டபத்தில் ஒரே தூணில் பக்கத்திற்கு ஒருவராக காணப்படும் ராமர், சுக்ரிவன், அனுமார் சிற்பமும், குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வரும் சிற்பமும், இவைதவிர கண்ணப்பநாயனார், மார்க்கண்டேயர் பூஜை (அருகிலேயே மற்றொரு பக்கத்தில் எமன் பாசக்கயிற்றேhடு) மாயக்கண்ணன், ஆஞ்சநேயர், நடராஜர், அர்த்தநாரிஸ்வரர், தட்சிணாமூர்த்தி, மயில் அன்னப்பறவை, லிங்கம், ரிஷபாரூடர், நரசிம்மவதாரம், (முகம் அனுமார் போல உள்ளது) வில்லு}ன்றிய ராமர் ஆகிய சிற்பங்களும் மிகுந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.
ஆதாரங்கள்
1) கோவிலுக்கு வடக்கே காஞ்சி நதியில் கட்டப்பட்டுள்ள சோழன் படித்துறை காpகால் சோழனால் அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
2) கொங்குநாட்டின் வரலாற்றையே இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
கொங்கு சோழர் கட்டிய அர்த்தமண்டபம், மைசூர் அரசர் வெட்டிய 16 கோணமுள்ள திருக்குளம், ஹேhய்சாளர்களின் திருப்பணி இவைதவிர பல செப்புப் பட்டயங்களும் உள்ளன.]
பூஜைகள்
காலை 5.30 மணி முதல் 1 மணிவரையும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும். கோபூஜை, கஜபூஜை தவிர 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
இவை தவிர வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகள், மாதம்தோறும் வரும் 2 பிரதோஷங்கள், ஒவ்வொரு மாதமும் ஏகாதசி, சஷ்டி, விசாகம், கிருத்திகை நாட்களும், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தைப்பூசம், பௌர்ணமி, விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றத்துடன் நடத்தப்படும் பிரம்ம மோற்சவம் தவிர திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்தத் தலத்தில் மட்டுமே கொண்டாடப்படும் மற்றொரு விழா நாற்றுநடும் விழா.
தலவிருட்சம், தீர்த்தம்
இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர்மரம் (சித்தேச மரம்) இது மூலவருக்குப் பின்னாலேயே அமைந்துள்ளது.
காமதேனுவின் கொம்பினால் குத்தி உருவாக்கப்பட்ட தீர்த்தம் சிருங்கக்கிணறு மூலவருக்கு இடதுபுறம் முன்னால் அமைந்துள்ளது.
தேர்கள்
இத்தலத்தில் முதலில் ஐந்து தேர்கள் இருந்தன. தற்போது சுவாமி, விநாயகர், சுப்ரமணியர் ஆகியோரி;ன் தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. அம்மன் தேர் பழுதடைந்துள்ளது. சண்டிகேஸ்வரருக்கு தேர் இல்லை.
நிறைவு
இத்திருக்கோயில் நடராஜர் திருச்சபை திருப்பணி மட்டும் 34 ஆண்டுகள் நடைபெற்றதாம். இப்போது 340 ஆண்டுகள் உழைத்தாலும் அத்தகைய வேலைப்பாடுகளைச் செய்வதற்கான கலைத் தொழில் நுட்பத் திறன் நம்மிடையே இல்லை. நமது கோயில்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அந்த நடராஜரின் குனிந்த புருவமும், குமிழ் சிரிப்பும் நம் நெஞ்சை விட்டு என்றும் அகலா.
பிறவா வரம் தரும் பேரூர் பெருமானை தரிசித்து அருள்பெறுவோம் !
WR
சிவசிவ
..:கே. பிரவீன் குமார் :..
சிவமயம்....:
www.perur.in :....திருசிற்றம்பலம்
..:Aham Brahmasmi:..
"Main Manushya Nahi Kaal Bairav"
.................................................................................................
Disclaimer: Any errors in spelling, tact or fact are transmission errors.
I am never wrong once I thought I was wrong it seems I was mistaken...
.................................................................................................