1. ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்தக் கட்சியையும் சேராதது ++++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2

12 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 1, 2023, 5:12:12 PM10/1/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      02 October 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

இனிய அன்பர்களே!

காதை (2)

நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். அகவை 21. சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவன். முகநூலில் இடுகை இடுவேன். பிடித்தமான பிறர் இடுகைகைகளைப் பகிர்வேன்.

ஏப்பிரல் 27க்குப் பின் சூரசந்த்பூர் மாவட்டமே பதறியது. குக்கி-சோ குழுக்கள் முதலமைச்சர் பிரேன் சிங்கை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தன. அவர் தொடங்கி வைப்பதாக இருந்த உடற்பயிற்சிக் கூடம் தீவைத்து எரிக்கப்பட்டது.

குமுக ஊடகங்களில் விரைந்து பரவிக் கொண்டிருந்த “பான் லீ” என்பவரின் முகநூல் இடுகை என் கருத்தைக் கவர்ந்தது. குக்கி-சோ மக்கள் அடைந்து வரும் இன்னலுக்கு முதலமைச்சர் பிரேன் சிங்கும் மெய்த்தி அரசியல் தலைவர்களுமே காரணம் என்று அந்த இடுகை குற்றஞ்சாற்றியிருந்தது. நான் இந்த இடுகையை என் முகநூல் பக்கத்தில் மீள்பதிவு செய்தேன். ஆனால் 24 மணி நேரத்தில் அதனை நீக்கி விட்டேன். ஆனால் அதற்குள்ளேயே காவல்துறை அதனைக் கவனித்து விட்டது. ஏப்பிரல் 30 என் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. “பான் லீ” மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றாலும் என்னைக் கைது செய்தனர்.

“முதலமைச்சரின் ஆதரவுடன் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்கள் மலைப்பகுதிகளில் கசகசா பயிரிடத் தூண்டுகின்றனர், பழங்குடி மக்கள் மீது பழி போட்டு அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்காகவே இப்படிச் செய்கின்றனர்” என்பது அந்த முகநூல் இடுகையில் காணப்பெற்ற செய்தி. மெய்த்தி சமுதாயத்தை இனவாதிகள், “இந்தியாவுக்கு எதிரானவர்கள்”, மணிப்பூரின் துயரங்களுக்கு எல்லாம் காரணமானவர்கள் என்றெல்லாம் அதில் எழுதப்பட்டிருந்தது.

மே 3ஆம் நாள் இந்த வழக்கில் எனக்குப் பிணை விடுதலை கிடைத்தவுடனே, இம்பால் காவல் நிலையத்தில் இதே குமுக ஊடகப் பதிவுக்காக மீண்டும் ஒரு முதல் தகவல் அறிக்கை அளித்து என்னை முறைப்படித் தளைப்படுத்தினர். ஒரே முகநூல் இடுகைக்காக 24 மணி நேரத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன.

ஏப்பிரல் 30 காலை 10 மணிக்குப் பதிவு செய்த முதலாவது முதல் தகவல் அறிக்கை காலை 9.50க்கு பான் லீ முகநூலில் இடுகையிட்டதாகக் கூறியது, இந்த இரண்டாவது முதல் தகவல் அறிக்கையும் காலை 9.30க்கு முகநூல் இடுகை செய்யப்பட்டதாகக் கூறியது. என்மீதான வழக்கில் புலனாய்வு அதிகாரியான இம்பால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு அளித்த முறைப்பாட்டின் பேரில்தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தது.

மே 4ஆம் நாள் காவல் உதவி ஆய்வாளர் சஞ்சீவ சிங்கு என்னை நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அவர் தன் சொந்த ஊர்தியில் வந்து கொண்டிருந்தார். காவல் ஊர்தியில் என்னோடு வழிக்காவலாகக் காவல்துறையினர் வந்து கொண்டிருந்தனர்.

போறோம்பட்டு நடுவில் உள்ள பாப்புலர் உயர்நிலைப் பள்ளியை அடைந்து விட்டோம். ஆண்களும் பெண்களுமான சற்றொப்ப 800 பேர் கொண்ட கும்பல் சிறை செல்லும் சாலையில் வந்த ஊர்திகளை எல்லாம் மறித்து சோதனை செய்து கொண்டிருந்தது. காவலர்கள் உதவி கேட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தனர். திரும்பிச் செல்லவும் வழியில்லை. பின்புறம் இன்னொரு கும்பல் வழிமறித்து நின்றது. வேறு வழியின்றி முன்சென்றனர். வன்முறைக் கும்பல் வண்டியை மறித்து துவக்குகளையும் தோட்டாக்களையும் பறித்துக் கொண்டது.

அவர்கள் சஞ்சீவசிங்கையும் காவலர்களையும் கைதி வைப்பேயையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு அடிக்கலாயினர். அவர்கள் கையில் இரும்புத் தடிகளும் குச்சிகளும் உரிமம் பெற்ற துவக்குகளும் இருந்தன.

என்னைக் காப்பற்ற முயன்ற காவலர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. வண்டிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அவர்கள் சேதமுற்ற ஊர்திகளில் ஏறி வெவ்வேறு திசையில் தப்பிச் சென்றனர். என்னை அந்த வெறிக்கும்பல் அடித்துக் கொல்லப் போகிறது.


+=+


பின் காதை (1):

நான் உதவிக் காவல் ஆய்வாளர் சஞ்சய் சிங்கு. மணிப்பூர் முதலமைச்சருக்கும் மெய்த்தி சமுதாய அரசியல் தலைவர்களுக்கும் எதிரான ஒரு முகநூல் இடுகையை மீள்பதிவு செய்த குற்றத்துக்காகத் தளைப்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் வைப்பே என் தலைமையிலான காவல்படையின் காவலில் இருந்து வெறிக் கும்பலால் பறித்துச் செல்லப்பட்டு, அடித்துக் கொலை செய்யபப்பட்டார். இந்நிகழ்வு நடந்து ஏழு மணிநேரம் கழித்து இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் என் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். குற்றஞ்சாட்டப்பெற்ற வைப்பேயை எங்களால் வன்முறைக் கும்பலிடமிருந்து காக்கவும் முடியவில்லை, அவரது உடலைக்கூட மீட்கவும் முடியவில்லை.

பின்காதை (2):

நான் வைப்பேயின் தந்தை. நானும் குடும்பத்தினரும் சூரசந்த்பூர் திங்கன்பாய் சோமி பெத்தலில் இருக்கிறோம். என் மகன் வைப்பேயின் உடல் எங்கே என்று தெரியவில்லை. இம்பாலில் சவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் அவன் உடல் இருப்பதாக காவல்துறை சொல்கிறது. ஆனால் இம்பால் செல்வது பற்றி எங்களால் எண்ணிப் பார்க்கவும் முடியாது.

காவல் உதவி ஆய்வாளர் சொல்வதை முழு உண்மை என்று எங்களால் ஏற்க முடியவில்லை. அவர் கடமை தவறியுள்ளார், அல்லது சதி செய்துள்ளார். மே 18ஆம் நாள் நான் இது குறித்து சூரசந்த்பூர் காவல்துறைக்கு முறைப்பாடு அனுப்பியுள்ளேன். வைப்பேயின் தாய் தந்தையாகிய நாங்களும் அவனுடைய தம்பி தங்கையும் காவல் துறை அவனைப் பிடித்துச் சென்ற நாளுக்குப் பின் அவனைப் பார்க்கவே இல்லை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 259

++

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 17 : நான் எந்தக் கட்சியையும் சேராதது

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      02 October 2023      அகரமுதல


(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 16 : கோயில் தருமகருத்தா வேலை – தொடர்ச்சி)

‘என் சுயசரிதை’

அத்தியாயம் 10. நான் எந்தக் கட்சியையும் சேராதது

சென்னையில் பல கட்சிகள் உண்டு என்பது எல்லாரும் அறிந்த விசயமே. முக்கியமாக காங்கிரசுக் கட்சி, நீதிக் கட்சி என்று இரண்டு பெரிய கட்சிகளைப் பற்றி அறியாதோர். கிடையாதல்லவா? இவைபற்றிய என் விருத்தாந்தங்களை இங்கு எழுத விரும்புகிறேன்.. நான் கல்லூியில் படித்தபோது காங்கிரசுக் கூட்டம் சென்னையில் கூடிய போது ஒரு தொண்டராக இருந்தேன். இது நேர்ந்தது 1894-ஆம் வருசம். அதற்குமுன் சென்னையில் காங்கிரசு கூடிய போது அதன் வேடிக்கையைப் பார்க்க என் தகப்பனார் என்னை அழைத்துக்கொண்டுபோனது ஞாபகமிருக்கிறது. 1894–ஆம் ஆண்டிற்குப்பின் ஒருமுறை சென்னையில் காங்கிரசு மகாசபை கூடியபோது நான் ஒரு வரவேற்பு அங்கத்தினனாக இருந்தேன். இவ்வளவதான் இதில் நான் சம்பந்தப்பட்டது.

இனி நீதிக் கட்சியைப்பற்றி எழுதுகிறேன். காலஞ் சென்ற சர். பிட்டி தியாகராச செட்டியார் இக்கட்சியை ஆரம்பிக்கு முன், எங்கள் குடும்பத்து சம்பந்தியாகிய திவான்பகதூர் ப. இராசரத்தின முதலியார் ஒருநாள் சாயங்காலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவர் வீட்டிற்குப் போனபோது அவரும் காலஞ்சென்ற எல். டி. சுவாமிக்கண்ணு அவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் காங்கிரசுக்கட்சி பிராம்மணர்களுடைய அபிவிருத்தியையே கவனித்து வருகிறது. நாம் எல்லாரும் பிராம்மணர்கள் அல்லாதாரை உயர்த்தும் பொருட்டு ஒரு கட்சியை ஏற்படுத்தவேண்டும். அதில் நீ ஒரு முக்கிய பங்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். அதற்கு நான் “இவ்விசயங்களிலெல்லாம் நான் தலையிட்டுக் கொள்ள எனக்கு இட்டமில்லை. என் வக்கீல் வேலையும் சுகுணவிலாச சபையுடைய வேலையுமே எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. மற்ற விசயங்களில் புகுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அவகாசமுமில்லை” என்று மறுத்தேன். பிறகு நீதிக் கட்சியை பிட்டி தியாகராச செட்டியார் தாபித்த போது அதில் சேரும்படியாக என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் அக்கட்சியில் முக்கியத்தராயிருந்த பானகல் இராசாவும் அதில் சேரும்படிக் கேட்டனர். இந்த பானகல் இராசா அவர்கள் என்னுடன் 4 வருடம் மாகாணக் கல்லூரியில் படித்த என் அத்தியந்த சிநேகிதர் என்று நான் முன்பே கூறியுள்ளேன். இவர்களிருவருக்கும் நான் அக்கட்சியைச் சேராததற்கு கூறிய நியாயத்தை இங்கு சுருக்கமாக எழுதுகிறேன், “நம்முடைய தேசம் முன்னேறவேண்டுமென்றால் இக்கட்சிகளெல்லாம் ஒழிந்து ஐக்கியப்பட்டாலொழிய, இக்கட்சிகள் எல்லாம் இருக்கும் வரையில் நம்முடைய நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். ஆகவே நான் எந்தக் கட்சியிலும் சேரப் பிரியப்படவில்லை. அன்றியும் என் வாழ்நாட்களைத் தமிழ்க் கலையை அதிலும் நாடகக் கலையை அபிவிருத்தி செய்வதில் கழிக்கவேண்டுமென்பதே என் பேராசையாயிருக்கிறது. ஆகவே அரசாங்க விசயங்களிலும் கட்சி பேதங்களிலும் கைவிட்டுக்கொள்வேனாயின் என்னால் தமிழ்க் கலைக்குச் சரியாகத் தொண்டு செய்ய முடியாது” என்பதேயாம். இக்காரணம் பற்றியே நகராட்சி உறுப்பினராகவாவது இருங்கள். அதற்காக நீங்கள் ஒன்றும் கடினப்பட வேண்டியதில்லை. நாங்கள் எல்லாம் முயற்சிசெய்து உங்களை நகரசபை உறுப்பினராகச் செய்விக்கிறோம் என்று என்னைப் பல நண்பர்கள் கேட்டும் அதற்கு நான் இணங்கவில்லை. இதை ஏதோ பெருமையாக இங்கு எழுதியவனன்று. தமிழ் ஆசிரியனாகப் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒருவன் முற்படுவானாயின் அவன் வேறு விசயங்களில் தலை நுழைத்துக்கொள்ளாது, தமிழ்க்கலைக்கே உழைத்தாலொழிய அவன் எண்ணம் நிறைவேறாது என்பது என் உறுதியான அபிப்பிராயம்.

பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார்கள் எனும் இரண்டு கட்சி பேதங்களைப்பற்றி என் அபிப்ராயம் என்ன வென்றால் ஒரு கட்சி உயர்ந்தும் ஒரு கட்சி தாழ்ந்தும் இருந்தால் இந்த பேதத்தை நிவர்த்திப்பதற்கு இரண்டு மார்க்கங்கள் உள. ஒன்று உயர்ந்த கட்சியைத் தாழ்ந்த கட்சியார் தங்கள் நிலைக்கு இழுத்துக்கொள்ளல். இரண்டாவது மார்க்கம் தாழ்ந்த கட்சிக்காரர்கள் தங்களை உயர்த்திக்கொள்வது. இதில் சரியான மார்க்கம் என்னவென்று இதை வாசிக்கும் எனது நண்பர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். இந்த கட்சிப் பேதங்களெல்லாம் நீங்கி நமது தேசம் ஐக்கியப்படுவதற்குத் தற்காலம் உள்ள சாதி பேதங்களெல்லாம் அறவே ஒழிய வேண்டும்! முதலியார், நாயுடு, பிள்ளை என்கிற பிரிவுகளும் நீங்கவேண்டும். தீண்டாமை என்பது இருந்த இடம் தெரியாதபடி மறையவேண்டும். அப்பொழுதுதான் நமது நாடு தலையெடுக்கும் என்று என் மனத்தில் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இக்கொள்கை பற்றியே நான் என் பெயரின் பின்பாக ‘முதலியார்’ என்று எப்பொழுதும் கையெழுத்துப் போடுவதில்லை.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages