புத்தரின் தாய் மாயாதேவி என்னும் "வேழத்திரு"(கஜலக்ஷ்மி) — தேமொழி

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
4:12 PM (4 hours ago) 4:12 PM
to மின்தமிழ்
புத்தரின் தாய் மாயாதேவி  என்னும் "வேழத்திரு"(கஜலக்ஷ்மி)

 — தேமொழி

mayadevi.jpg

இந்தியாவில் தோன்றி இன்று உலகச் சமயமாகப் பரவியுள்ள புத்த சமயத்தின் தோற்றுநர் கௌதம புத்தரின் திருவுருவச் சிற்பங்களுக்கு இந்தியச் சிற்பவியலில் என்றும் தனி இடமும் வரலாறும் உண்டு. பிறநாடுகளில் உருவாக்கப்பட்ட புத்தரின் சிலைகளையும் படங்களையும் இணையம் வழியாக இன்று வாங்க இயலும், செயற்கை நுண்ணறிவுத் தளங்களும் அழகிய புத்தர் உருவப் படங்களை உருவாக்கித் தருகின்றன. இன்று புகழ்பெற்ற பல அயல்நாட்டு அருங்காட்சியகங்களில் எண்ணற்ற புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே புத்தருக்குத்தான் அதிகமான சிற்பங்கள் இருக்கின்றன. இந்நாட்களில் சமயச் சார்பின்றிப் பலர் இல்லங்களில் புத்தர் சிலைகள் உள்ளன.   இருப்பினும், பொது ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு./பொஆ.மு.) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்தவரும், இந்திய மெய்யியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியவருமான புத்தருக்கு ஓர் உருவம் கொடுக்கப்பட்டது பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே.

தொடக்கக்கால இந்தியச் சிற்பக் கலையில் (பொ. ஆ. ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்திரிக்கப்படவில்லை, மாறாக அவர் குறியீடுகளால்  மட்டுமே சித்திரிக்கப்பட்டுள்ளார். அதற்கும் முன்னரே பௌத்தச் சமயப் பொது வழிபாட்டிற்கான சைத்தியங்களும்; பௌத்தத் துறவிகள் தங்குவதற்கும், தவமியற்றுதற்கும், கற்பதற்குமான விகாரைகளும்; பரிநிர்வாணம் அடைந்த புத்தரின் நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்து வழிபடும் ஸ்தூபிகளும் இருந்தன. குறிப்பாக இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டில் மாமன்னர் அசோகரால் (268 - 232)  அமைக்கப்பட்டது சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபி. இது உலகப் புகழ்பெற்றவகையில், யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தருடைய எலும்புகள் வைக்கப்பட்டுள்ள காரணத்தால், உலகின் பல நாடுகளில் இருக்கும் பௌத்தர்களும் பௌத்த துறவிகளும்  வழிபட வரும் சாஞ்சி ஸ்தூபி இந்தியாவின் தொன்மையான ஒரு கல் கட்டுமானம் ஆகும். இந்த சாஞ்சி ஸ்தூபி அழகிய சிற்ப உருவங்களைக் கொண்டது. சிற்பங்கள் புத்த சமய வரலாற்றைக் கூறுவது என்றாலும் இவற்றில் புத்தர் மனித உருவில் காட்டப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெளத்த சிற்பக்கலையின் தொடக்கக் காலத்தில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காட்சிகளாகப் பெரும்பாலும் 4 காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். புத்தர் வாழ்வின் வரலாற்றுக் காட்சிகள்: (1) புத்தரின் பிறப்பு, (2) புத்தர் ஞானம் பெறல், (3) அவர் முதல் அறவுரை நிகழ்த்துதல், (4) புத்தர் பரிநிர்வாணம் அடைதல்.

1. புத்தரின் பிறப்பு:
மகப்பேற்றுக்காகப் புத்தரின் தாய் மாயாதேவி தனது தந்தையின் நாட்டிற்குச் செல்லும் வழியில் லும்பினி (நேபாளத்தில் உள்ளது) என்ற இடத்துப் பூங்காவில் புத்தர் என்று அறியப்படும் சித்தார்த்த கௌதமர் என்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறார். மாயாதேவி சால் மரத்தின் கிளையை வலது கரத்தால் பிடித்திருக்க அவர் அருகே அவரது சகோதரியும் தோழிகளும் இருக்க, அவரது வயிற்றுப்பகுதியின் வலது புறத்திலிருந்து புத்தர் பிறப்பதாகவும் இந்திரன் அக்குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொள்வதாகவும் இக்காட்சி பிற்காலச் சிற்பங்களில் காட்டப்படும்.

2. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெறல்:
உலக வாழ்வின் உண்மையை அறிந்து  கொள்ள விரும்பி அரச வாழ்வைத் துறந்த சித்தார்த்தர், பல ஆண்டுகள் உண்மையைத் தேடி அலைந்து திரிந்த பின்னர் கயாவில் உள்ள ஓர் அரச மரத்தடியில் உண்ணா நோன்பை மேற்கொண்டு கடுந்தவம் செய்து ஞானம் பெறும் காட்சி.

3. புத்தர் சாரநாத்தில் நிகழ்த்திய முதல் உரை:
ஞானம் பெற்ற புத்தர் தனது ஐந்து சீடர்களுக்கு வாரணாசியிலுள்ள சாரநாத் மான்கள் பூங்காவில் தனது முதல் அறவுரையை வழங்கும் காட்சி.

4. புத்தரின் பரிநிர்வாணம் (மறைவு):
தனது 80ஆவது வயதில், உணவு ஒவ்வாமை காரணமாக குஷிநகரின் ஒரு மரத்தடியில் வடக்கு நோக்கித் தலைவைத்துப் படுத்திருந்த புத்தர் மறைந்த பின் அவருடைய மாணாக்கர்கள் துயர் தாளாமல் சோகத்தில் துவண்டு அரற்றும் காட்சி.
Buddha life.jpg

புத்தரின் வரலாற்றைக் குறிக்கும் இந்த அடிப்படை நான்கு காட்சிகள் சிற்பங்களில் பெரும்பான்மையாக வடிக்கப்பட்டாலும், பின்னர் ஆறு எட்டு என்று வாழக்கைநிலைக் காட்சிகளின் எண்ணிக்கை வளர்ந்தது [1].

புத்தரின் தொடக்கக்காலக் குறியீட்டுச் சித்திரிப்புகள்:
பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் பௌத்தச் சிற்பக் காட்சிகளில் மனித உருவில் புத்தரைக் காட்சிப்படுத்துவது அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமையாது என்ற கோணத்தில் இக்காட்சிகளில் குறியீட்டால் (aniconic symbol) மட்டுமே புத்தர் குறிக்கப்பட்டார். ஒரு காலியான இருக்கை அல்லது அரியணை புத்தரின் குறியீடாகக் கொள்ளப்பட்டது. அரியணையின்கீழ் பாதச்சுவடுகளும் இருப்பதுண்டு.  

Buddha  life 2.jpg
Buddha  life 3.jpg
மேற்காணும் புத்தரின் வாழ்க்கையைக் குறிக்கும் முதன்மையான நான்கு நிலைகளும் அசோகர் உருவாக்கிய சாஞ்சி  ஸ்தூபி  தோரணவாயில்களில் குறியீடுகளாகப் புத்தரைக் காட்டும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.  புத்தர் பிறப்பைக் குறிக்கும் சிற்பங்களில் 1. யானைகள் நீராட்டும் புத்தரின் தாய் மாயாதேவி புத்தரின் பிறப்பின் குறியீடாகவும்,  2. புத்தர் கயாவில் ஞானம் பெறும் காட்சியில் போதி மரம் குறியீடாகவும், 3. சாரநாத்தில் முதல் உரை வழங்கிய காட்சியில் தர்மச்சக்கரம் குறியீடாகவும், 4. பரிநிர்வாணம் பெற்ற காட்சியில் ஸ்தூபி குறியீடாகவும் காட்டப்பட்டுள்ளது.
sanji1.jpg

sanji2.jpg
இக்குறியீடுகள் தவிர்த்து, அவரது பிச்சை ஏற்கும் திருவோடு புத்தரின் குறியீடாகவும், அவர் சித்தார்த்தர் என்ற இளவரசராக அரண்மனையை விட்டுக் குதிரைமீது வெளியேறுகையில் அமர்ந்திருப்பவர் இல்லாது வெண்கொற்றக்குடை தாங்கிச் செல்லும் குதிரை ஒன்று (சித்தார்த்தரின் குதிரை கந்தகா) புத்தரின் குறியீடாகவும், வனவாசம் பாதச் சுவடுகள் குறியீடாகவும் சாஞ்சி ஸ்தூபி கிழக்கு வாயில் அபிநிஷ்கர்மானா புடைப்புச் சிற்பத் தொகுப்பில் காணப்பெறுகிறது.

புத்தர் பிறப்பைக் குறிக்கத் தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் புத்தரின் தாய் மாயாதேவி மீது அவருக்கு இருபுறமும் நிற்கும் இரு யானைகள் குடத்தின் வழியாக நீர்  ஊற்றுவது போலக்  காட்டப்படும் என்கிறார்கள்  பௌத்த சிற்ப ஆய்வாளர்கள். [1]   யானைகள்  நீராட்டும் பெண்மணியின் இவ்வுருவம் வைதீகம், சமணம் போன்ற பிற சமயங்களிலும் உள்வாங்கப்பட்டு பிற்காலத்தில் கஜலக்ஷ்மி என்று மாற்றப்பட்டது.

புத்தரின் பிறப்பு, ஞானம் பெறுதல், முதல் உரை நிகழ்த்துதல், இறப்பு ஆகிய நான்கு வாழ்க்கை நிகழ்வுகளிலும் புத்தர் குறியீடாகக் காட்டப்பட்ட நிலையையும்;  பிற்காலத்து கனிஷ்கர் கால மகாயானப் புத்த சமயத்திற்குப் பிறகு புத்தர் உருவத் தோற்றம் சித்திரிக்கப்பட்டதையும் ஒப்பீட்டுப் படங்களின் மூலம் அறியலாம். உத்திரப்பிரதேசம் மதுரா பகுதியில் பொ.ஆ. ஒன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சக அரசு காலத்தில் வடிக்கப்பட்ட தோரணவாயில் சிற்பங்களில் புத்தரின் நான்கு வாழ்க்கை நிலைக் காட்சியிலும் அவர்;  முறையே திருவோடு, போதிமரம், தர்மச்சக்கரம், ஸ்தூபி எனக் குறியீடுகளாகக் காட்டப்பட்டுள்ளார். பிற்காலக் காந்தாரப்பகுதிச் சிற்பங்களில் இதே காட்சிகளில் புத்தருக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டர் படையெடுப்பிற்குப் பின்னர் வடமேற்கு  இந்தியப் பகுதியில் தோன்றிய சிற்பக்கலை காந்தாரச் சிற்பக்கலை என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் புத்தரால் போதிக்கப்பட்ட அறவழியும் அசோகரால் பரப்பப் பட்டதுமான புத்த சமயம் ஹினயானம் (தேரவாத பௌத்தப் பிரிவு) பின்பற்றப்பட்டது. பின்னர், மகாயானம் என்ற புதிய பிரிவு புத்த சமயத்தில் தோன்றுகிறது. மௌரியர், சாகர், பார்த்தியர் என்ற பல அரசுகளின் ஆட்சியின்கீழ் தொடர்ந்த காந்தாரம் ஒன்றாம் நூற்றாண்டில் குஷாணப் பேரரசின் ஆட்சியின்கீழ் வருகிறது. மகாயானப் பிரிவைப் பின்பற்றியவரும் குஷாண அரசர்களில் புகழ்பெற்றவருமான கனிஷ்கர் (பொ.ஆ. 78 -102) புத்த சமயத்தைப் பெரிதும் ஆதரித்தவர். இவர் நான்காம் பெளத்த மகாசங்கத்தைக் கூட்டி இரு பிரிவுகளையும் இணைக்கும் முயற்சியை மேற்கொள்கிறார். கனிஷ்கர் காலத்தில்தான் மகாயானப் புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது. இக்காலத்திலிருந்து புத்தர் கடவுளாக வணங்கப்பட்டார். சடங்குகளும், மலர் தூவுதல், தூபம் காட்டி வழிபடும் முறைகளும், புத்த வழிபாடுகளில் இடம் பெறத் துவங்குகின்றன. காந்தாரப் பகுதியில் கனிஷ்கரின் காலம் தொடங்கும்வரை புத்த வடிவங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை.

பௌத்த மூலநூல்கள் எதிலும் புத்தரின் உருவச் சித்திரிப்பு பற்றிய குறிப்புகள் இல்லை என்பதையும் புத்தரின் திருவுருவத் தோற்றம் உருவாக்கப்பட்ட வரலாறு இந்தியச் சிற்பவியல் ஆய்வில் மிக முக்கியமான இடம் பெற்ற ஆய்வு என்பதையும் ஆனந்த குமாரசுவாமி அவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அறிய முடியும். வழிபாட்டிற்காக முதன் முதலில் உருவம் கொடுக்கப்பட்டவர் புத்தர்.  ஆரம்பக்கால இந்தியப் புத்தர் உருவங்கள், அவற்றின் காலம் எதுவாக இருந்தாலும் காந்தாரப் புத்தச் சிற்ப வகைகளை ஒத்திருக்கும் என்கிறார் ஆனந்த குமாரசுவாமி. வடமேற்கு இந்தியாவின் காந்தாரம் பகுதியில் உருவாக்கப்பட்ட காந்தாரச் சிற்பங்களில் பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்துதான் புத்தரின் உருவங்கள் கிடைக்கப்பெறுகின்றன. காந்தாரத்தின் கிரேக்க-பௌத்த கலை (Greco-Buddhist art) அல்லது ஹெலனிஸ்டிக் கலை (Hellenistic art/கிரேக்க கலை) பாணிகளில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற புத்த வடிவங்களைக் காந்தாரப் பகுதியில் காணமுடிகிறது. ஹெலினிஸ்டிக் அப்பல்லோவின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு கிரேக்கக் கலைஞர்கள் புத்தரின் முதல் வடிவங்களை இந்தியப் புரவலர்களுக்காக உருவாக்கினார்கள் [2].

வழிபாட்டிற்காக உருவம் கொடுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் சமயப் பூசல்கள் காரணமாக அவமதிக்கப்படுவதும் சிதைக்கப்படுவதும் பிற்காலக் கதை.


அடிக்குறிப்புகள்:
1.The Origin of the Buddha Image, Ananda K. Coomar-aswamy, The Art Bulletin, Vol. 9, No. 4 (Jun., 1927), pp.287-329 (44 pages), https://www.jstor.org/stable/3046550 &https:/|doi.org/10.2307/3046550

2. The Art of Gandhara in the Metropolitan Museumof Art, Kurt A. Behrendt, Metropolitan Museum of Art (NewYork, N.Y.), 2007 https://resources.metmuseum.org/resources/metpublications/pdf/The_Art_of_Gandhara_in_The Metropoli-tan_Museum_of_Art.pdf


Reply all
Reply to author
Forward
0 new messages