பத்துப்பாட்டு ஆராய்ச்சி
டாக்டர் மா. இராசமாணிக்கனார், எம்.ஏ., எம்.ஓ.எல்., பி.எச்.டி.
2. பத்துப்பாட்டின் காலம்
முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் கரிகாலன் மீது பொருநர் ஆற்றுப்படையைப் பாடியுள்ளார். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவரும் கரிகாற் சோழன்மீது பட்டினப்பாலையைப் பாடியுள்ளார். இக்கடியலூர் உருத்திரங்கண்ணனாரே தொண்டைமான் இளந்திரையன்மீது பெரும்பாணாற்றுப்படையைப் பாடியுள்ளார். ஆதலால், கரிகாலனும் இளந்திரையனும் ஏறத்தாழ ஒரு காலத்தவர் என்று கொள்வது பொருத்தமாகும். இவருள் கரிகாலன் காலத்தைக் கண்டறியின், ஏறத்தாழ இளந்திரையன் காலமும் புலப்படலாம். கரிகாலன் காலம் யாது?
கோவல கண்ணகியர் திருமணத்தின் இறுதியில், "இமயத்தில் புலிப்பொறி பொறித்த சோழன் தன் திகிரியை உருட்டுவோனாகுக," என்று சொல்லித் திருமணத்திற்கு வந்திருந்தவர் வாழ்த்தினர் என்னும் பகுதியில், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார், அச்சோழனைக் கரிகாலன் என்றே குறித்துள்ளார். கரிகாலன் பெரும்படையுடன் வடவிந்தியாவுக்குச் சென்று இமயத்தில் புலிப்பொறி பொறித்து மீண்ட பொழுது வடவிந்தியாவில் இருந்த வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப்பந்தரையும், மகத நாட்டு மன்னன் பட்டி மண்டபத்தையும், அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலையும் கரிகாலனுக்குப் பரிசிலாக வழங்கினர் என்று சிலப்பதிகாரம் (இந்திர விழவூரெடுத்தகாதை, அடி, 90-104) குறிக்கிறது. அடுத்துக் கானல் வரியில், சோழன் கங்கை வரையிற்சென்று மீண்டமை,
"கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ''
என்னும் அடியாற் குறிப்பாய் உணர்த்தப்படுகிறது. கரிகாலன் ஒருவனே அக்காலச் சோழருள் பேரரசனாய் விளங்கினான் என்பது சங்கப்பாடல்களால் தெரிகிறது. எனவே, கங்கை வரையிற்சென்று மீண்ட சோழ வேந்தன் சங்க காலத்துக் கரிகாலனாய் இருந்திருத்தல் கூடும் என்பது சங்க நூற்பயிற்சியுடையார் நன்கறிந்ததே.
கடப்பை மாவட்டமும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் கி. பி. 7ஆம் நூற்றாண்டில் ரேநாண்டு எனப்பட்டன. அதனை அக்காலத்தில் ஆண்டவர், தம்மைச் சோழர் என்றும் கரிகாலன் மரபினர் என்றும் பட்டயங்களிற் குறிப்பிட்டுப் பெருமை கொண்டனர். [1] கி. பி. 7ஆம் நூற்றாண்டில் அந்நாட்டை நேரிற்கண்ட 'யுவான்சுவாங்' என்ற சீன வழிப்போக்கன் ரேநாண்டு நாட்டைச் 'சூழிய' (சோழநாடு) என்று குறித்துள்ளான்.[2] பின் நூற்றாண்டுகளிலே சோழப்பேரரசர்க்கடங்கிய சிற்றரசராய்க் கடப்பை குண்டூர் நெல்லூர் வடவார்க்காடு செங்கற்பட்டு மாவட்டங்களை ஆண்டுவந்தவர், தம்மைத் தெலுங்கச் சோழர் என்றும் கரிகாலன் மரபினர் என்றும் கூறிக்கொண்டதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின் றன. [3] இந்த ரேநாண்டுச் சோழர் கடப்பை மாவட்டத்தில் எங்ஙனம் எக்காலத்தில் இடம் பெற்றனர் என்பது கூற இயலவில்லை.
கரிகாலன் காவிரியின் கரைகளை உயர்த்தியவன் என்று தெலுங்கச் சோழர் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணியும் (197) இந்தச் செய்தியைக் குறித்துள்ளது. வங்க நாசிக திஸ்ஸன் (கி. பி. 111 - 114) என்பவனுடைய தந்தை காலத்தில் சோழவேந்தன் ஒருவன் பெரும்படையைத் திரட்டுவதை அறிந்து, அச்சிங்கள வேந்தன் தன் நாட்டை விழிப்புடன் காத்துவந்தான். ஆயினும், அவன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் இலங்கையை ஆண்ட பொழுது, சோழ அரசை விரிவாக்கிய சோழன் ஒருவனது படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது. 'அவன் பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்குக் கொண்டு சென்றான்; அவர்களைக்கொண்டு காவிரிக்குக் கரையிடுவித்தான், ' என்று இலங்கை வரலாறு கூறுகிறது. அவ்வரலாறே, வங்க நாசிக திஸ்ஸன் மகனான முதற்கயவாகு (கி. பி. 114 - 136) சோழ நாட்டின் மீது படையெடுத்துப் பன்னீராயிரம் தமிழரைச் சிறை பிடித்து மீண்டான் என்றும் கூறுகிறது.[4]
கரிகாலனே காவிரியின் இருமருங்கும் கரையெடுப்பித்து அதனை நாட்டிற்குப் பயன்படும்படி செய்து புகழ் எய்தியவன். இது பற்றியே இவனைப் 'பொன்னிக்கரை கண்ட பூபதி' என்று கவிச்சக்கரவர்த்தியாராகிய ஒட்டக்கூத்தர் தாமியற்றிய விக்கிரம சோழனுலாவில் புகழ்ந்துள்ளனர். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வரையப் பெற்ற (ரேநான்டுச் சோழனான) புண்ணிய குமாரனுடைய மேல் பாட்டுச் செப்பேடுகளிலும், பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளி வந்த கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசேந்திர சோழனது கன்னியா குமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக் கரையமைத்து அதன் வெள்ளத்தைத் தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை குறிக்கப் பட்டுள்ளது. இவ்வேந்தன் அவ்வரிய செயலை எந்த யாண்டில் நிறைவேற்றினான் என்பதை,
'தொக்க கலியின் மூவாயிரத்துத் தொண்ணூற்றில்
மிக்க கரிகால வேந்தனுந்தான்- பக்கம்
அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான்
மலைக்கும் புயத்தானும் வந்து'
என்ற பழைய வெண்பாவினால் நன்கறியலாம். இதனை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடுமிடத்து, கி. மு. முதல் நூற்றாண்டின் கடைப்பகுதியில் கரிகாற்பெருவளத்தான் காவிரியாற்றிற்குக் கரை அமைத்திருத்தல் வேண்டும் என்பது கொள்ளக்கிடக்கின்றது. மேலே குறித்துள்ள வெண்பாவின் முதலடியில் 'தொக்க சகனிற் றொளாயிரத்துத் தொண்ணூற்றில்' என்ற மற்றொரு பாடமும் காணப்படுகின்றது. இதனை நோக்குங்கால், கி. பி. 1068 ஆம் ஆண்டில் கரிகாலன் என்ற பெயருடைய சோழ மன்னன் ஒருவன் காவிரிக்குக் கரை கட்டுவித்தான் என்பது புலனாகின்றது. இக்காலப் பகுதியில் சோழ இராச்சியத்தில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தவன் கங்கை கொண்ட சோழனுடைய புதல்வனாகிய வீரராசேந்திர சோழனேயாவன். இவ்வேந்தனுக்கும் கரிகாலன் என்ற பெயர் வழங்கியுள்ளது. எனினும், கி. பி. 7 ஆம் நூற்றாண்டினனான ரேநாண்டுச் சோழனாகிய புண்ணிய குமாரனது மேல்பாட்டுச் செப்பேட்டில் கரிகாற்சோழன் காவிரிக்குக் கரையமைத்த செய்தி காணப்படுவதால் அந்நிகழ்ச்சி கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிகழ்ந்ததாதல் வேண்டும்.
ஆகவே, கி. மு. முதல் நூற்றாண்டிலிருந்த சோழன் கரிகாற்பெருவளத்தானாகிய திருமாவளவனே காவிரியாற்றிற்கு முதலிற் கரை அமைத்துச் சோழ மண்டலத்தை வளப்படுத்தியவன் என்பது தெளிவாம். இவ்வளவர் பெருமான் சோழ மண்டலத்தில் 'காடுகொன்று நாடாக்கிக்- குளந்தொட்டு வளம் பெருக்கி'னான்' என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பட்டினப்பாலையில் கூறியிருத்தல் உணரற்பாலதாகும். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர், வடகுடி என்ற ஊர்களிலும், தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருநெய்த்தானம், திருப்பழனம் என்ற ஊர்களிலும் ஆதித்தன், முதற்பராந்தகன் ஆகிய சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டுள்ள சில கல்வெட்டுகள் காவிரிக்கரையைக் 'கரிகாலக் கரை என்று கூறுகின்றன. இக்கல்வெட்டுகளால் அவ்வேந்தர்களின் காலமாகிய கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் காவிரியாற்றின் வடகரையைக் 'கரிகாலக்கரை' என்றே மக்கள் வழங்கி வந்தார்கள் என்பது தெள்ளிதிற் புலனாகும். எனவே, கடைச்சங்க காலத்தில் பெரும் புகழுடன் நிலவிய சோழன் கரிகாற்பெருவளத்தான் காவிரிக்கு முதலிற் கரை அமைத்தவன் என்பதும், அதற்குத் தக்க சான்றில்லை என்று சிலர் என்று சிலர் கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்பதும் நன்கு துணியப்படும்.”[5]
இதுகாறும் கூறிய உண்மைகளைக் கொண்டு, கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியு மென்று கொள்ளலாம். ஏறத்தாழ இக்காலமே காஞ்சியை ஆண்ட இளந்திரையன் காலமென்றும் கூறலாம்.
மாங்குடி மருதனார் என்ற புலவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் மீது மதுரைக் காஞ்சியைப் பாடியுள்ளார். நக்கீரர் என்ற புலவரும் அப்பாண்டியன் மீது நெடுநல்வாடையைப் பாடியுள்ளார் நக்கீரர் அகநானூற்று 141 ஆம் செய்யுளில்,
"செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் "
என்று குறித்துள்ளார். இவர் கரிகாலன் காலத்தவர் என்பதற்குச் சான்றில்லை. எனவே, இவர் கரிகாலனுக்குப் பிற்பட்டவர் என்பதே பொருத்தமாகும். ஆகவே, நக்கீரராற்பாடப்பட்ட நெடுஞ்செழியனும் கரிகாலற்குப் பிற்பட்டவன் என்று கொள்வதே பொருத்தமாகும். கரிகாலனைப் பாடிய புலவருள் ஒருவரேனும் இந்நெடுஞ்செழியனைப் பாடாமையும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது என்னலாம்.[6]
பெருங்கௌசிகனார் என்ற புலவர் நன்னன் சேய் நன்னனைப் பற்றி மலைபடுகடாம் பாடியுள்ளார். இந் நன்னன் சிறந்த கொடை வள்ளல் என்று மலைபடுகடாம் (அடி 71 - 72) புகழ்வதை நோக்க, மதுரைக்காஞ்சியில் வரும்,
"பேரிசை நன்னன் பெரும் பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு''
என்னும் அடிகள் (318 - 319) இந்நன்னனைக் குறிப்பவை என்று கருதுதல் பொருத்தமாகும் [7]. இங்ஙனம் கொள்ளின், மாங்குடி மருதனார் காலத்திலோ, சிறிது முற்பட்டோ, மலைபடுகடாம் பாடப்பட்டது என்று கருதலாம்.
பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள எட்டுப்பத்துகளும் கால முறைப்படி அமைந்துள்ளன. அவற்றுள் ஐந்தாம்பத்தைப் பரணர் பாடியுள்ளார். ஏழாம்பத்தைக் கபிலர் பாடியுள்ளார். இவ்விருவரும் பேகனைப் பாடியுள்ளனர் [8]. பரணர் கரிகாலன் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பாடியுள்ளார் (புறநானூறு, 4). எனவே, கபிலர் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தில் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார் என்று சொல்லுதல் பொருத்தமாகும். மேலும், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரவேந்தன், மதுரைக்காஞ்சிக்குரிய பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்றவன். அவன் தனது பாட்டில் (புறம். 53),“கபிலன் இன்றுளனாயின், நன்றுமன்," என்று கூறியுள்ளான். இதனால், அவன் காலத்தில் - மதுரைக்காஞ்சி பாடப்பட்ட காலத்தில் கபிலர் இல்லை என்பது வெளிப்படை. ஆகவே, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு ஆகிய நான்கும் ஏறத்தாழ ஒரு காலத்தன என்று கூறலாம். மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்ற மூன்றும் ஏறக்குறைய ஒரு காலத்தன என்று கூறலாம்.
முல்லைப்பாட்டில் யவனரைப் பற்றியும், மிலேச்சரைப்பற்றியும் குறிப்புகள் உள்ளன. (அடி, 60-66). நெடுநல்வாடையிலும் இவ்விருவரைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன (அடி,31, 35, 101). ஆதலால், இவ்வகைக் குறிப்புகளைக் கொண்டுள்ள நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே, நெடுநல்வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றியிருத்தல் கூடும்.[9]
பதிற்றுப்பத்தில் பத்தாம் பத்து யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியதாய் இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[10] அவன் ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தவன். ஆதலால், அவன் மீது புலவர் ஒரு பத்தைப் பாடியிருக்கலாம். அவன் இறுதிப்பத்துக்கு உரியவனாயின், ஐந்தாம் பத்துக்குரிய செங்குட்டுவனுக்கு மிகவும் பிற்பட்டவனாவன். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அச்சேரனைப் போரில் வென்றதைப் புறநானூற்றுச் செய்யுள் (17) ஒன்று கூறுவதால், இப்பாண்டியன் நெடுஞ்செழியன் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் என்று கூறலாம். பதிற்றுப்பத்தின் வைப்பு முறையை நோக்க, சேரனை வென்ற இவன் காலம் ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டு என்னலாம்.[11] இங்ஙனம் கொள்ளின், இப்பாண்டியனைப் பற்றிய நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும், நெடுநல்வாடையை ஒத்துள்ள முல்லைப்பாட்டும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னலாம்.
சிறுபாணாற்றுப்படையில் பாரி முதலிய வள்ளல்கள் எழுவர் வரலாறுகள் இறந்த காலச் செய்திகளாய்க் கூறப்பட்டுள்ளன. இவ்வள்ளல்கள் கபிலர், பரணர், முடமோசியார், ஒளவையார் என்னும் புலவர்களால் பாடப்பட்டவர்கள். எனவே, இப்புலவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில் நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறுபாண் ஆற்றுப்படையைப் பாடினார் என்று கொள்வது பொருத்தமாகும். எனவே, சிறுபாணாற்றுப்படை ஏறத்தாழக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.
இதுகாறும் கூறப்பட்ட செய்திகளைக்கொண்டு,
(1) குறிஞ்சிப்பாட்டு, பொருநர் ஆற்றுப்படை, பட்டினப் பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கு பாடல்களும் ஏறத்தாழக் கரிகாலன் காலத்தவை என்றும்,
(2) மலைபடுகடாம், நெடுநல்வாடை, 'மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு ஆகிய நான்கும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகலாம் என்றும், அனைத்திற்கும் இறுதியிற்பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படை கி. பி. 3 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இயற்றப்பட்டதாகலாம் என்றும் கொள்வது பொருத்தமாகும். வேறுதக்க சான்றுகள் கிட்டும் வரையில் இம்முடிபைக் கொள்ளுதல் தகும். இனிப் பத்துப்பாட்டுள் எஞ்சியிருப்பது திருமுருகாற்றுப்படை ஒன்றேயாகும். இதன் காலத்தை ஆராய்வது நலம்.
திருமுருகாற்றுப்படையின் காலம்:
தொல்காப்பியர், 'கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய நால்வரையும் பொருளுதவி புரியும் வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை,' எனக்கூறினார். பாணனை ஆற்றுப்படுத்துவது 'பாணாற்றுப்படை' எனவும், பொருநரை ஆற்றுப்படுத்துவது 'பொருநர் ஆற்றுப்படை' எனவும், கூத்தரை ஆற்றுப்படுத்துவது 'கூத்தர் ஆற்றுப்படை' எனவும், விறலியை ஆற்றுப்படுத்துவது 'விறலி ஆற்றுப்படை' எனவும் பெயர்பெறும். இதனால், புலவரை ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பியர்க்கு முன்பும் அவர் காலத்திலும் வழக்கில் இல்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் மனிதனைத் தெய்வத்தினிடம் ஆற்றுப்படுத்தும் வழக்கம் அக்காலத்தில் அறவே இல்லை என்பது தெளிவாகும்.
புலவராற்றுப்படையின் இலக்கணம் பின் வந்த நூல்களிற்கூறப்பட்டுள்ளது.
(1) புறப்பொருள் வெண்பாமாலை ஏறத்தாழக் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு நூலாகும். [11a ] அந்நூலுள் புலவராற்றுப்படை என்ற பிரபந்தத்தின் இலக்கணம் முதன் முதல் கூறப்பட்டுள்ளது.
"புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே.'' (204)
(2) பன்னிருபாட்டியல் கி. பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்பது முன்பு கூறப்பட்டதன்றோ? அதிலும் புலவராற்றுப்படை இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
"இருங்கண்வானத் திமையோருழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று''
- பாடாண் படலம், 42.
(3) கி. பி 17 ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட இலக்கண விளக்கம் என்னும் நூலிலும் இது கூறப்பட்டுள்ளது. [11b]
"விரும்பிய தரூஉம் விண்ணவர் தம்முழை
அரும்பெறற் புலவரை ஆற்றுப் படுத்தலும்''
-நூற்பா, 245[11c]
திருமுருகாற்றுப்படை பத்தி நூல். முருகன் அருளைப் பெற்ற புலவர் ஒருவர், பத்தி மிகுந்த மற்றொரு புலவரை அம்முருகன்பால் ஆற்றுப்படுத்துதல் முருகாற்றுப்படையின் பொருளாகும். "பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப்படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படும்; ஆனால், திருமுருகாற்றுப்படை பாட்டுடைத் தலைவன் பெயரோடு சார்ந்து வழங்கும். பிறவற்றிற்காணப்படுவனவாகிய ஆற்றுப்படுத்துவானை விளித்தலும், தனது நிலையை விளக்கலும், ஆற்றுப்படுத்துவான் தனது பழைய நிலை, பரிசில் பெற்ற முறை என்பவற்றைக் கூறுதலும் இதில் விளக்கப்படாமல் உய்த்துணரவைக்கப்பட்டிருக்கின்றன.[12]
பத்துப்பாட்டைப் பதிப்பித்த டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையான ஏடுகளுள் திருமுருகாற்றுப்படை சேர்க்கப்பட்டிருக்கவில்லை. [13] மேலும், நெடுநல்வாடை பாடிய பாடிய நக்கீரர், பேரரசர்களையும் சிற்றரசர்களையும் பாடியவர் ; திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், கடவுள் பத்தியிற் சிறந்து விளங்கினவர். இவர் பாடிய திருமுருகாற்றுப்படை 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருப்பதும் இவர் பிற்காலத்தினர் என்பதையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை 'நக்கீரதேவ நாயனார்' என்று 11 ஆம் திருமுறை கூறுகின்றது. [14]
இனி இப்பாடற்செய்தியைக்கொண்டு இதன் காலத்தை இங்கு ஆராய்வோம்.
பரிபாடலில் முருகன் பிறப்பு:
சிவபெருமான் உமையம்மையுடன் நெடுங்காலம் தொடர்ந்து இன்புற்றிருந்தமையால், இந்திரன் சென்று இறைவனிடம் ஒரு வரம் தருமாறு வேண்டினான். இறைவன் இசைவு தந்தவுடன், உமையைக் கூடாதிருக்கும்படி சிவனை வேண்டினான்; அசுரரை அழிக்கத் தகும் சிவசத்தி பொருந்திய பிள்ளையை அருளும்படி வேண்டினான். சிவன் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து, தனது வீரியத்தை வெளிப்படுத்தி, அதைச் சேதப்படுத்தி, ஒரு கூறு மட்டும் இந்திரனிடம் கொடுத்தான்.
அது தேவசேனாபதியாகும் தகுதி உடையதென்று முனிவர் எழுவர் தமது யோகசத்தியால் உணர்ந்து, அதனை இந்திரனிடமிருந்து பெற்றுச்சென்று, வேள்வித் தீயிலிட்டு, அதன் வேகத்தைக் குறைத்து, அதனைத் தம் மனைவியரை உட்கொள்ளச் சொல்லினர். அருந்ததி ஒழிந்த அறுவர் அதனை உண்டு சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளைப் பெற்றனர்.
இந்திரன் பொறாமை கொண்டு அக்குழந்தைகளின் மீது தன் வச்சிராயுதத்தை எறிய, குழந்தைகள் ஆறும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரே குழந்தையாய் மாறிவிட்டன. கடுவன் இளவெயினனார் என்ற புலவர் இச்செய்தியினை 5 ஆம் பரிபாடலில் (அடி, 26 - 55 ) கூறியுள்ளார்.
இக்கதையை ஒப்புக்கொண்டாற்போலவே ஆசிரியர் நல்லந்துவனார் எட்டாம் பரிபாடலில் (அடி, 127 - 128),
"மறு மிடற் றண்ணற்கு மாசிலோன் தந்த
நெறிநீர் அருவி அசும்புறு செல்வம்''
என்று பாடியுள்ளார்.
முருகன் பிறந்தவுடன் இந்திரன் பொறாமை கொண்டு அக்குழந்தையைத் தன் வச்சிராயுதத்தால் தாக்கினான் என்று கடுவன் இளவெயினனார் பாடியதற்கேற்பவே, கேசவனார் தம் பாடலில் (பரிபாடல் 14, அடி, 25-26),
"பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே"
என்று பாடியுள்ளது நோக்கற்பாலது.
திருமுருகாற்றுப்படையில் முருகன் பிறப்பு:
திருமுருகாற்றுப்படையில் (அடி, 254 - 255),
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என்னும் அடிகள் முருகனது பிறப்பைக் குறிக்கின்றன. நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய ஐவருள் ஒருவன் தன் உள்ளங்கையில் (சிவன் தந்ததைப்) பெற்றான். சிவன் எதைத் தந்தான் என்பது, மூலத்தில் இல்லை. இப்பகுதிக்கு உரையும் விளக்கமும் வரைந்துள்ள நச்சினார்க்கினியர், “ஐவருள் ஒருவன் தீ. அவன் 'அங்கையேற்ப' என்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின், இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்து இட்டதனைக் கூறிற்று," என்று விளக்கம் தந்துள்ளார். நச்சினார்க்கினியர் பரிபாடல் 5ஆம் பாடலின் கருத்தை இங்குள்ள முதலடிக்கு ஏற்றிக் கூறியுள்ளார். இதே கருத்தினை 50 ஆம் அடியின் உரை அடியிலும் எழுதி, “இதனை, 'பாயிரும் பனிக்கடல்' என்னும் பரிபாட்டான் உணர்க. இவ்வாறன்றி, வேறு வேறு புராணம் கூறுவாரும் உளர்." என்றும் எழுதியுள்ளமை நோக்கற் பாலது.
இதனை நோக்க, நச்சினார்க்கினியர் காலத்திலேயே முருகன் பிறப்புப் பற்றிப் பரிபாடற்செய்தியினும் வேறுபட்ட வரலாறு கூறப்பட்டமை தெளிவாம். அவ்வேறு பட்ட செய்தி யாது?
கந்தபுராணத்தில் முருகன் பிறப்பு:
கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் திருவவதாரப்படலத்தில் முருகன் பிறப்புப் பற்றிக் கூறும் செய்தி பின் வருமாறு :
பிரமன் திருமால் இந்திரன் முதலியோர். சிவனைக் கண்டு, சூரன் முதலிய அசுரரை அழிக்கத்தக்க மைந்தனை உதவும்படி வேண்டினர் (செ. 42). அப்பெருமான் உடனே தன் கண் ஆறு முகங்களைத் தோற்றுவித்தான் (செ. 43). அவற்றிலுள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறுதீப்பொறிகள் வெளிப்பட்டன (செ. 45). "இப்பொறிகள் ஒரு மைந்தன் உருவத்தைப் பெறும். அம்மைந்தன் அசுரரை வெல்வான். நீங்கள் இப்பொறிகளைக் கங்கையில் விடுங்கள். கங்கை சரவணப் பொய்கையில் இவற்றை உய்க்கும்,” என்றனன் (55); காற்றுத்தேவனையும் தீத்தேவனையும் நோக்கி, "நீவிர் இருவீரும் இப்பொறிகளைக் கங்கையில் விடுமின்,” என்று பணித்தான் (66 - 67). காற்றுத்தேவன் சிவனை வணங்கி, அத்தீப்பொறிகளைத் தன் தலை மீது தாங்கிக்கொண்டு தீக்கடவுளுடன் சென்றான்(77); வழியில் அவற்றைத் தீக்கடவுள் தலைமீது வைத்தான் (84). தீக்கடவுள் அவற்றைக் கொண்டு சென்று கங்கையில் இட்டான் (85). கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையில் உய்த்தது (87).
இறைவன் அருளால் அப்பொறிகள் ஆறு முகங் களையும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரு குழந்தையாய் விளங்க, அக்குழந்தை தாமரை மலர்மீது வீற்றிருந்தது (92 - 96). அதனைக் கண்ட அரி முதலிய அமரர் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும்படி கார்த்திகை மாதர் அறுவரை ஏவினர் (114 - 115). அவ்வறுவரும் தன்னை நோக்கி அன்புடன் வருதலைக் கண்ட ‘அறுமுக ஒருவன் வேறாய் அச்சிறார் உருவம் கொண்டான்' (செ. 116).
திருமுருகாற்றுப்படை குறிக்கும் முருகன் பிறப்பும் வளர்ப்பும்:
சிவபிரானிடமிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளை முதலில் ஏற்றவன் காற்றுக்கடவுள் (ஐவருள் ஒருவன்) என்பது கந்தபுராண வரலாற்றால் தெரிகிறது. அவன் அவற்றை முதலில் தன் அங்கையில் ஏற்ற பின்னரே தலை மீது வைத்திருத்தல் இயல்பாகும். முருகன் கார்த்திகைப் பெண்கள் தன்னை அடைதற்கு முன்பு ஆறு முகங்களைக் கொண்ட ஒரே குழந்தையாய் இருந்தான். பின்னரே தாய்மார் அறுவர்க்கு ஏற்ப ஆறு குழந்தைகளாய் மாறினான் என்பது கந்தபுராண வரலாறு. ஆயினும், முனிவர் மனைவியர் அறுவரே ஆறு பிள்ளைகளைப் பெற்றனர் என்பது பரிபாடற்செய்தியாகும்.
"அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என்று திருமுருகாற்றுப்படையில் குறித்தமை, ஆறு தீப்பொறிகளிலிருந்து பிறந்த முருகனை அறுவர் பாலூட்டி வளர்த்தமை பற்றி உபசார வழக்காய் அமைந்ததாகும்.
கண்ணனைப் பெற்றவள் தேவகி; வளர்த்தவள் யசோதை. ஆயினும், யசோதை கண்ணனை நோக்கி, 'பெற்ற எனக்கருளி' (1:5:8) என்று கூறியதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
“என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
இருடி கேசா முலையுணாயே'' (2:2:6)
என்று யசோதை கண்ணனைப் பாலருந்த அழைத்ததாகப் பெரியாழ்வார் பாடியுள்ளமை காணத்தக்கது. 'உன்னைப் பெற்ற குற்றமல்லால்' (3:1:7) என்று பிறிதோரிடத்திலும் யசோதை கூறுவதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். இவ்வுபசார வழக்குப் பற்றியே 'வளர்த்த கார்த்திகை மகளிர் அறுவரும் முருகனைப் 'பயந்தவர்' என்று நக்கீரர் பாடியதாகக் கொள்வதே இங்குப் பொருத்தமாகும்.
முருகன் சிவனது வீரியத்திலிருந்து பிறந்ததை விளக்கமாகக் கூறும் (அடி, 26-55) பரிபாடல் (செ-5), 81 அடிகளை உடையது. நக்கீரர் இக்கதையையே கூற விரும்பியிருப்பின், 317 அடிகளைக் கொண்ட திருமுருகாற்றுப்படையில் பரிபாடலைப் போலவே இந்நிகழ்ச்சியை விரித்துக் கூறியிருக்கலாம். அவர் அங்ஙனம் கூறாது,
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ"
என இரண்டே அடிகளிற் கூறியிருத்தல், முருகன் பிறப்புப் பற்றிய பரிபாடற்செய்தி அவர்க்கு உடன் பாடன்மையை உய்த்துணர வைப்பதாகும்.
"ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப," என்பது, சிவனிடமிருந்து முதன் முறையாக வீரியத்தையோ அல்லது தீப்பொறிகளையோ தன் கைகளிற்பெற்றுக் கொண்ட ஐவருள் ஓருவனையே உணர்த்தும். பரிபாடற் கதைப்படி சிவனிடமிருந்து வீரியத்தை முதலிற் பெற்றவன் இந்திரன். இந்திரன் ஐவருள் ஒருவனாகான். அவனிடமிருந்து முனிவர் அதனைப் பெற்றனர். அவர்கள் அதனை வேள்வித்தீயில் இட்டார்கள். இங்ஙனம் இரண்டு கைம்மாறிய செய்தியை நக்கீரர் குறிக்க விரும்பியிருப்பின், அதனைத் தெளிவாகக் குறித்திருக்கலாம். இவர் அங்ஙனம் குறிக்கவில்லை. கந்தபுராணச் செய்திப்படி சிவனுடைய பொறிகள் ஆறனையும் தன் தலைமீது வைத்துக்கொண்டவன் காற்றுக்கடவுளாவன். அவன் அவற்றைக் கையில் வாங்கித் தானே தன் தலைமீது வைத்திருத்தல் கூடும்! எனவே, கந்தபுராணச் செய்தியே இவ்வடிகளுக்குப் பொருத்தமென்பது தெரிகிறது என்று கூறலாம்.
பரிபாடலில் முருகனைப்பற்றி எட்டுப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் புலவர் எழுவர் பாடியுள்ளனர். 5 ஆம் பாடலைப் பாடிய கடுவன் இளவெயினனார் போலவே, ஆசிரியர் - நல்லந்துவனார் 8ஆம் பாடலில், முருகன் சிவனுக்கும் உமையம்மைக்கும் பிறந்தவன் (அடி, 127 - 128) என்று கூறியுள்ளார். சிவனுடைய தீப்பொறிகளிலிருந்து முருகன் பிறந்தான் என்று கந்தபுராணம் கூறும் செய்தி முருகனைப் பற்றிய எட்டுப் பரிபாடல்களிலும் இல்லாமை கவனிக்கத்தகும். இந்தப் பிற்செய்தி சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருப்பின், மேலே சொல்லப்பட்ட புலவர் எழுவருள் ஒருவரேனும் இதனைக் கூறியிருப்பர் அல்லரோ? அங்ஙனம் ஒருவரும் குறிப்பிடாமையை நோக்க முருகன் சிவனுக்கும் உமைக்கும் பிறந்தவன் என்ற கதை ஒன்றே சங்க காலத் தமிழகத்தில் வழக்குப் பெற்றிருந்தது என்பதே பொருந்துவதாகும்.
அடுத்து நக்கீரர் முருகனை, 'மலைமகள் மகனே', 'கொற்றவை சிறுவ', 'பழையோள் குழவி' என்று கூறியுள்ளமை, அப்பெருமான் சிவபிரானுக்கு மகனாதலின் என்க. கணவனான சிவபிரான் அருளாற்பிறந்த முருகன், அச்சிவபிரான் மனைவியான உமாதேவிக்கும் மகன் என்று உபசார வழக்காய்க் கூறுதல் பொருத்தமேயாகும்.
முருகனும் கடவுளர் பிறரும்:
புறநானூற்றில் (செ. 56) இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனைப்' பாடிய நக்கீரர், அவனை நோக்கி,
"நீ பகைவரை அழித்தலில் சிவனையொப்பாய்; வலிமையில் பலராமனையொப்பாய்; புகழில் திருமாலையொப்பாய்; முன்னியது முடிப்பதில் முருகனையொப்பாய். இந்நால்வுரும் ஞாலம் காக்கும் காலமுன்பினை உடையவர்; தோலா நல்லிசை உடையவர்,'' என்று கூறியுள்ளார். இந்நக்கீரர் இப்பாடலில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் சமப்படுத்தியுள்ளமை தெளிவு. திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர், "மும்மூர்த்திகளும் தத்தம் தொழில்புரியும் தலைவராகும்படி முருகன் தோன்றினான்," (அடி, 162, 172 - 176) என்று பாடியுள்ளார். இதனால், முருகன் மும்மூர்த்திகளினும் மேலானவன் என்பது இந்நக்கீரர் கருத்தென்பது தெரிகிறது.
புறநானூற்றுப்பாடலில் (56),
"ஞாலம் காக்கும் கால முன் பின்
தோலா நல்லிசை நால்வர்"
என்று நால்வரையும் சமநிலையினராகவே நக்கீரர் கூறியுள்ளார். அ.: தாவது, ஞாலங்காக்கும் ஞாலங்காக்கும் காலமுன்பும் தோலா நல்லிசையும் இந்நால்வர்க்கும் இயற்கையாகவே அமைந்துள்ளன என்பதை இப்பாடலில் நக்கீரர் குறித்துள்ளார். ஆயினும், திருமுருகாற்றுப்படையில் நக்கீரர், 'முருகன் தோன்றிய காரணத்தால் மும்மூர்த்திகள் தங்கள் தொழில் புரியும் தலைவர்களானார்கள்,' என்று கூறியுள்ளார். இங்ஙனம் முருகன் பிறந்த காரணத்தால் மும்மூர்த்திகள் தொழில் புரியும் தலைவர்களானார்கள் என்பதனால், அம்மும்மூர்த்திகளின் தலைமை செயற்கையாய் அமைந்தது என்பது தெரிகின்றது.
'பலரும் புகழ்கின்ற அயன், அரி, அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்பு போல நிகழ்த்தித் தலைவராக வேண்டித் தம்முடைய சீரிய படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைப் பண்டு போலப் பெறுமுறையினைக் குறை வேண்டிச்சேர வந்து காணும்படி முருகன் தெய்வயானையாருடன் திருவாவி நன்குடியில் இருத்தலுமுரியன்,'' என்பது நச்சினார்க்கினியர் உரை. இங்ஙனம் பொருள் கொள்ளினும், முருகன் மும்மூர்த்திகளினும் மேலானவன் என்னும் பொருளே பெறப்படுதல் காணலாம்.
புறநானூற்றுப் பாடலில் அந்நால்வர்க் கும் அத்தொழில்கள் இயற்கையாய் அமைந்தன என்று கூறிய நக்கீரர் (அவரே திருமுருகாற்றுப்படை ஆசிரியராயின்) தம் கூற்றுக்கு மாறுபடத் தமது திருமுருகாற்றுப் படையில் கூறியிருப்பாரா?
சங்ககாலப்புலவர், நன்மாறனைப் பாடிய நக்கீரர் போலவே கடவுளர் பலரையும் சிறப்பித்தே பாடுவர். சான்றாகக் கடுவன் இளவெயினனார் பரிபாடலில் திருமாலையும் முருகனையும் தனித்தனி பாடலில் பாராட்டியுள்ளார். சங்ககாலப் புலவர் பெருமக்கள் பிற்காலத்தார் போல ஒரு தெய்வத்தை உயர்த்துவதற்குப் பிற தெய்வங்களைத் தாழ்த்திப் பாடினமைக்குச் சான்றில்லை.
திருமாலையும் பலதேவனையும் ' இருபெருந் தெய்வம்' என்று புறநானூற்றுப் பாடலொன்று (செ-58) காரிக்கண்ணனாரால் பாடப்பட்டது. திருமாலையும் சிவனையும் 'இருபெருந் தெய்வம்' என்று அகநானூற்றுப் பாடல் ஒன்று (செ. 360) மதுரைக் கண்ணத்தனாராற்பாடப் பட்டது. சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ அடிகள் சிவனையும் முருகனையும் திருமாலையும் வாயாரப் பாராட்டிப் பாடியுள்ளமையே ஏற்ற சான்றாகும்.
பரிபாடலில் (8) முருகனைக்காண மும்மூர்த்திகளும் மற்றத்தேவரும் திருப்பரங்குன்றம் வந்தனர் என்பது கூறப்பட்டுள்ள தே?' எனின், அங்கு அம் மூவரும் அவரைக் குறையிரக்க வந்தனர் என்று அப்பாடல் ஆசிரியர் கூறவில்லை; ‘நின்னைக்காண்பது காரணமாக வந்தனர்' என்றே கூறியுள்ளார். வள்ளி திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதை 19 ஆம் பாடலைக்கொண்டு அறியலாம்.
மேலும், சிவபிரான் பிள்ளையாகிய முருகனை முழு முதற்கடவுளாக்கிச் சிவபெருமானே அவனிடம் சென்று வரம் வாங்கியதாகப் பிற்காலத்தார் பாடியது போலச் சங்ககாலப் புலவர் யாண்டும் சிவபிரானை முருகனுக்குத் தாழ்ந்தவனாகக் கூறாமையும் அறிதற்பாலது.
மும்மூர்த்திகளுக்குத் தலைமை தரும் நிலையில் முருகன் பிறந்தான் என்பது, முருகன் மும்மூர்த்திகட்கும் உயர்ந்தவன் என்று பொருள் படுவதாகும். இங்ஙனம் சங்க காலப் புலவர் யாண்டும் பாடவில்லை. முருகனை முழுமுதற்கடவுளாகக் கருதும் நிலை (கௌமார சமயம்) சங்ககாலத்திற்குப் பிற்பட்டதாகும். ஆகவே, முருகனை முழு முதற்கடவுளாகப் பாடியுள்ள திருமுருகாற்றுப்படையாசிரியரான நக்கீரர், சங்க கால நக்கீரரின் வேறாவர் என்று கொள்வதே பொருத்தமாகும்.
ஆவி நன்குடி:
சங்க கால வேளிருள் ஆவி என்பவனும் அவன் குடியினரும் ஒரு வகையினர். அவர்கள் பழநிமலை நாட்டையாண்டார்கள். வேள் ஆவி என்பவன் அவருள் முதல்வன். வேளாவியின் மரபில் வந்தவனே வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவன். இவன் 'ஆவியர் கோ' (புறம். 147) எனப்பட்டான். ஆவி நன்குடி என்பதற்கு (வேள்) ஆவி (க்கோவின்) நல்ல குடியிருப்பு என்பது பொருள். ஆயின், திருமுருகாற்றுப்படைப் பதிப்புகளில் 'ஆவினன்குடி' என்பதே காணப்படுகிறது. ஆ (பசு), இனன் (சூரியன்) வழிபட்டுப் பேறு பெற்ற குடியிருப்பு என்ற புராண வரலாற்றைத் தழுவி (ஆ + இனன் + குடி) ஆவினன்குடி எனப் பிற்காலத்தார் ஏடுகளில் எழுதியிருக்கலாம் என்று கொள்வது பொருத்தமாகும். அது திருத்தம் பெறாமல் அச்சிடப்பட்டுள்ளது. 'ஆவினன்குடி' என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படும் இடப்பெயர் சங்ககால நூல்களில் இல்லை.
செந்தில் முருகனுக்கு உரியதாக மதுரை மருதன் இளநாகனார் புறநானூற்றில் (செ.55) பாடியுள்ளார், பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருப்பதாக மதுரை மருதன் இளநாகனாரும் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனாரும் அகநானூற்றில் (செ. 59, 149) பாடியுள்ளனர்.
'அலைவாய்' என்பது முருகனுக்குரியதெனப் பரணர் அகநானூற்றிற் (செ. 266) பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையிலும் 'அலைவாய்' கூறப்பட்டுள்ளது. இது, 'நாமனூர் அலைவாய்' என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுவே செந்தில் என்பது அறிஞர் கருத்து.
செந்தில், செங்கோடு, வெண் குன்றம், ஏரகம் என்பவை முருகற்குரிய இடங்கள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. இங்கு ஏரகம் குறிப்பிடப்பட்டுள்ளது. நவிரமலையில் காரியுண்டிக்கடவுள் கோவில் இருந்தது என்று மலைபடுகடாம் பகர்கின்றது. அக்காலத்தில் ஆவிநன்குடியில் முருகன் கோவில் இருந்திருக்குமாயின், அச்செய்தி ஐந்நூற்றுவர்க்கும் மேற்பட்ட சங்ககாலப் புலவருள் ஒருவராலேனும் குறிக்கப்பட்டிருக்குமன்றோ? மேலும், ' ஆவி நன் குடி' என்னும் பெயரே சங்ககாலப் பாக்களில் இடம் பெறவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தகும்.
அயிரை மலையைப் பாடும்போது, அம்மலை கொற்றவைக்குரிய மலையெனச் சங்ககாலப் புலவராற் பாடப் பட்டுள்ளது (பதிற்றுப்பத்து, 79). இவ்வாறே பரங்குன்றமும், செந்திலும் முருகனுக்குரியனவாகப் பாடப்பட்டுள்ளன. பரணர் வரலாற்றுக்குறிப்பை அமைத்தே செய்யுள் பாடும் இயல்புடையவர். அவர் பேகனைப் பாடியுள்ளார். அப்பாட்டில் ஆவி நன்குடி பற்றிய பேச்சே இல்லை. அவர் காலத்தில் செந்திலைப் போலவும் பரங்குன்றம் போலவும் ஆவி நன்குடி முருகன் தலமாகச் சிறப்புற்றிருக்குமாயின், அவர் கூறாதிரார் என்பது உறுதி. இவை அனைத்தையும் நோக்கி, சங்ககாலத்தில் ஆவி நன்குடி முருகனுக்குரிய ஒரு தலமாய் இருந் திருத்தல் இயலாது என்று கருதுதல் பொருத்தமாகும்.
முடிவுரை
இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராய்ந் தால், 'திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் சங்ககால நக்கீரரின் வேறாவர் ; காலத்தாற்பிற்பட்டவர்,' என்பது தெளிவாகும்.
'திருமுருகாற்றுப்படை சங்ககாலத்திற்பாடப்பட்ட தாயினும், சைவசமயத் தொடர்பு கருதிப் பதினோராம் திருமுறையிற் சேர்க்கப்பட்டது,' என்று சிலர் கூறுவர். அங்ஙனமாயின், சங்க காலத்திலேயே முருகன்மீது பாடப்பட்டவை என்பது தெளிவாகத் தெரியும் எட்டுப் பரிபாடல்களும் அப்பதினோராந்திருமுறையிற்சேர்க்கப் படாமைக்குக் காரணம் யாது ? திருமுருகாற்றுப்படை மட்டும் அத்திருமுறையிற் சேர்க்கப்பட்டமைக்குக் காரணம் யாது?
நெடுநல்வாடையில் உள்ள சொற்கள் சிலவும் சொற்றொடர்கள் சிலவும் சிலவும் திருமுருகாற்றுப்படையிலும் வருவதால், இப்பாடல்களையும் சங்ககால நக்கீரரே பாடியிருக்கலாம் என்பது சிலர் கருத்து. சிலப்பதிகாரச் சொற்களும் தொடர்களும் மணிமேகலையில் வருவதை அறிஞர் நன்கு அறிவர்; எனவே, அவ்விரு நூல்களையும் பாடியவர் ஒருவரே என்று சொல்லக்கூடுமா? காலத்தால் முற்பட்டவருடைய சொற்களையும் தொடர்களையும் சிறந்த கருத்துகளையும் பிற்காலப் புலவர் தம் பாக்களிற் கையாளுதல் இயல்பென்பதை அறிஞர் அறிவர். இவை அனைத்தையும் நோக்கத் திருமுருகாற்றுப்படை சங்ககால நக்கீரராற் பாடப்பட்ட தன்று என்று கொள்வதே பொருத்தமாகும்.
திருமுருகாற்றுப்படையின் நடை சங்கச் செய்யுள்களின் நடையை ஏறத்தாழ ஒத்துள்ளது; சங்ககாலக் குறிஞ்சி நிலமக்களது முருகவழிபாட்டை நன்கு படம் பிடித்துக்காட்டுகிறது; கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருமுறைப்பாடல்களிற் குறிப்பிடப்பட்ட ‘திரு' என்னும் அடைமொழியைத் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள தலங்கள் பெறவில்லை.
முருக வணக்கம் சங்ககாலத்திற் சிறப்புற்றிருந்தது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கி. பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் உண்டான நூற்றாண்டுகளில் சிவவணக்கமே சிறப்புறலாயிற்று என்பதற்குப் பன்னிரு திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவை அனைத்தையும் நோக்க, திருமுருகாற்றுப்படை சங்ககாலத்திற்குப் பின்பும் (கி. பி. 300க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பும் (கி. பி. 600க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும். [15]
________________________________________________________
குறிப்புகள்:
1. Epigraphia Indica, Vol. XI, p. 340.
2. Watters, Vol. 1, pp. 225 and 341.
3. History of the Tamils, P. T. S. Aiyangar, pp. 359-360.
4. History of Ceylon, Vol. I, part I, pp. 175-195.
5. பிற்காலச் சோழர் சரித்திரம், T. V. சதாசிவ பண்டாரத்தார், மூன்றாம் பகுதி, பக். 84 - 86.
6. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, pp: 33-34.
7. கொண்கானங்கிழானாகிய நன்னன் பெண்கொலை புரிந்தவனாதலின், அவனையும் அவன் மரபினரையும் புலவர் பாடாதொழிந்தனர் (புறம். 151). ஆதலின், இந்த நன்னன் அந்த நன்னன் மரபினரினும் வேறானவன் எனக் கொள்வது பொருத்தமாகும். இவன் செங்கண்மா (செங்கம்) நகரை ஆண்டவன் என்று கொள்வதே ஏற்புடையது என்னலாம்.
8. புறம். 143-144.
9. இலக்கிய தீபம். எஸ். வையாபுரிப்பிள்ளை, பக். 8-9.
10. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, p. 37.
11. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் இந்தப் பாண்டியன் காலம் ஏறத்தாழக் கி. பி. 250 என்று குறித்துள்ளனர். Vide his History of Tamil Language and Literature, pp. 35-36.
11a. Ibid. 55
11b. Tamil Lexicon, Vol. I, p. 338
11c. இந் நூற்பாவின் இடையில் தொல்காப்பியர் ஆற்றுப்படை பற்றிக்கூறிய ('கூத்தரும் பாணரும்... தெரிந்த' என வரும்) அடிகள் அங்ஙனமே தரப்பட்டுள்ளன ; இருபது அடிகளுக்குப் பின்னர்ப் புலவராற்றுப்படைக்குரிய (மேலே காட்டப்பட்ட) இரண்டு அடிகள் தரப்பட்டுள்ளன. இங்ஙனம் வேறு பிரித்துக் கூறலே புலவராற்றுப்படை தொல்காப்பியர்க்குப் பிற்பட்டது என்பதை நன்கு உணர்த்துவதாகும்.
12. பத்துப்பாட்டு, மூன்றாம் பதிப்பின் முன்னுரை, பக். 12
13. History of Tamil Language and Literature, S. Vaiyapuri Pillai, p. 34.
14. இலக்கிய தீபம், எஸ். வையாபுரிப்பிள்ளை, பக். 32-39
15. The poem on all sides is admitted to be anterior to Tevaram and other Saivite works.--Professor T. P. Minakshisundaram's 61st Birth day Commemoration Volume, p. 70.