நான்கு தொடரடைவுகள் உருவாக்கத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.
அதில் ஒன்றைத் தெரிவிக்க மறந்துவிட்டேன்.
பொதுவாக நிகண்டுகளில் சொற்பிரிப்பு என்பது மிகக் கடினம். பலவற்றுக்கு ஏற்கனவே சொற்பிரிப்பு செய்யப்பட்ட பதிப்புகள் கிடைத்தன.
சிலவற்றுக்கு அவ்வாறு கிடைக்கவில்லை. ஆனால் அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, நிகண்டுகளில் சொற்பிரிப்பைத் தொடங்கினேன். ஏற்கனவே சொற்பிரிப்பு உள்ள நிகண்டுகளைப் பயன்படுத்தி, சிக்கலான பல இடங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பேன். அவ்வாறும் அவிழ்க்க முடியாத இடங்களைத் தொகுத்து, இறுதியில் முனைவர். ஜெயதேவன் அவர்களுக்கு அனுப்புவேன். அவரும் அன்புகூர்ந்து, அவற்றைச் சரிசெய்து அனுப்புவார்.
அண்மையில் அவர் காலமானது எனக்குப் பேரிழப்பாய் ஆனது.
அவரது மறைவுக்குப் பின் நான் எடுத்துக்கொண்ட நிகண்டு பொதிகை நிகண்டு – முதற்பகுதி.
இதிலும் பல சிக்கல்கள் இருந்தன. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியை திருமதி.வாணி அறிவாளன் அவர்களைத் தொடர்புகொண்டு நிகண்டு நூல்களில் நிபுணர்கள் பற்றிய தகவல் கேட்டேன். அவர் உடனடியாக இரு பெயர்களை, அவர்களின் தொலைபேசி எண்களுடன் எனக்கு அனுப்பினார். அவர்களில் ஒருவர் முனைவர் செ.மாதையன் அவர்கள். நான் அவரைத் தொடர்புகொண்டு என் வேண்டுகோளைத் தெரிவித்தேன். அவரும் அன்புகூர்ந்து சம்மதித்தார். உடனே அவருக்கு என் ஐயங்களைத் தெரிவித்தேன். மிகக் குறுகிய காலத்தில் அவர் அவற்றைத் தீர்த்துவைத்தார். அவருக்கும். அவரைப் பற்றிய தகவல் தந்த பேராசியையுக்கும் மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா