அன்புள்ள வாருணி, நீ எழுதியிருப்பது சரிதான். தேவார மூவரில் நீண்ட காலம் மதுரையில் தங்கியவரும் அதைப் பாடிப் பதிகம் வளர்த்தவரும் சம்பந்தர்தான். அதனால்தான், ஆலவாய்க்கு 9 பதிகங்கள் வாய்த்துள்ளன. சம்பந்தருக்கும் மதுரைக்கும் உள்ள உறவைச் சேக்கிழார் விரிவாகப் பேசியிருக்கிறார். அது தொடர்பான பெரியபுராணக் காட்சிகள் படிக்கத் தக்கவை. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் அழைப்பேற்று அரசரின் வெப்புநோய் தீர்த்ததுடன், சைவத்தின் பேரெழுச்சி யைப் பதிவுசெய்தவர் சம்பந்தர். அவரது பதிகங்களே அதற்குச்சான்று. நாவுக்கரசரும் மதுரைக் கோயிலைப் பாடியுள்ளார். சுந்தரர் பதிகந்தான் கிடைக்கவில்லை என்றாலும், சேக்கிழாரின் கூற்றை ஏற்றால் சுந்தரரும் ஆலவாய் வந்தமை புலப்படும்.
பத்திமைக் காலத்தில் பாண்டிய நாட்டின் தனிப்பெருங் கோயிலாய்த் திகழ்ந்த ஆலவாய் தொடர்ந்து வந்த அரசமரபுகளால் புரக்கப்பட்டாலும், அதன் மலர்ச்சி குன்றிய காலமும் இருக்கத்தான் செய்தது. அதனால்தான், கோயில் வளாகத்தில் பழங்கல்வெட்டுகளைக் காணக்கூடவில்லை. நடுவணரசின் தொல்லியல்துறை இவ்வளாகத்திலிருந்து படியெடுத்துள்ள 64 கல்வெட்டுகளில் முதலாம் சடையவர்மர் குலசேகர பாண்டியரின் கல்வெட்டே (பொ. கா. 1194) காலத்தால் முற்பட்டது.
வாருணி, மதுரைக் கோயில் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நாயக்க அரசர்கள்தான். ஆனால், வரலாற்றுச் சான்றுகளைப் புரட்டினால், இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலமே இக்கோயிலை வளப்படுத்தியதென்பது புலப்படும். இங்குள்ள 44 கல்வெட்டுகள் அவர்தம் கொடையுள்ளம் காட்டுகின்றன. நடுவணரசின் கணக்குப்படி விஜயநகர நாயக்க அரசர்களின் பதிவுகளாய் இங்குள்ளவை 19தான். இந்தச் சூழலில்தான் வாருணி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை எங்கள் ஆய்வுமையம் அணுகியது.
ஒலி ஒளிக் காட்சிக்கான கருத்துருவைப் பெறக் கோயில் முழுவதும் உலாவந்தோம். அங்குலம் அங்குலமாக அவ்வளாகத்தை ஆராய்ந்த சூழலில்தான், அதுவரை வெளிச்சம் காணாத பல காட்சிகள் எங்களுக்காகவே காத்திருந்தாற் போல் பளிச்சென்று தோற்றம் தந்தன. கோயிலின் எல்லாப் பகுதிகளிலும் இப்படி இலைமறை காயாக இருந்து கண்காட்டியவற்றுள் இந்த விளக்குத்தோரணங்களும் அடக்கம்.
நாயக்க அரசமரபின் நாயகராக விளங்கிய திருமலை நாயக்கரைக் கேள்விப்படாதவர் இருக்கமுடியாது. அவருடைய அமைச்சர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்தான் மூன்றாம் மீனாட்சி நாயக்கர். அவரை ஆதி மீனாட்சி நாயக்கர் என்று பெருமைப்படுத்துகிறது கல்வெட்டு. ஆலவாய்க் கோயிலைத் திருமலை நாயக்கர் விரிவாக்கம் செய்தபோது தம் பணியாக ஒரு மண்டபத்தை எடுப்பித்தார் இவ்வமைச்சர். அவர் பெயராலேயே இன்றும் விளங்கும் அம்மண்டபத்தின் பின்பகுதியில் அதையடுத்துள்ள இருட்டு மண்டபமாம் முதலிப்பிள்ளை மண்டபத்தின் முன்னுள்ளது மூன்றாவது விளக்குத் தோரணம். அதில் நம் பேராசிரியர் நளினி கண்டறிந்த 82 வரிகளில் அமைந்த தமிழ் எழுத்துப் பொறிப்பு இந்த விளக்கு மாலையை, 'ஆதிமீனாட்சி நாயக்கர் உபயம்' என்கிறது.
ரோஸ்பீட்டர் தோரணம் போலவே கீழே யானைகள் மேலே காவலர்கள் கொண்டெழும் இந்தத் தோரணம், இருபுறத்தும் 6.89 மீட்டர் உயர்ந்து, பிறைநிலவாய் வளைந்து, கீர்த்திமுகத் தலைப்பில் முடிகிறது. வளைவின் தொடக்கத்தில் பக்கத்திற்கு ஒருவராக உச்சிக்கொண்டையிட்ட வானவமகளிர் ஒரு கையில் அகலும் மறு கையில் மணியுமாய் நிற்க, இருபுறத்தும் அவர்களைத் தொடர்பவர்களாய் உயர்த்திய முழங்காலுடன் ஊர்த்வஜாநு கரணத்தில் பக்கத்திற்கு 13 அழகியர்.
இருகைகளிலும் மலர் கொண்ட இந்தக் கரணச் செல்விகளால் நாயக்கர் தோரணம் ரோஸ்பீட்டர் படைப்பை அழகில் விஞ்சி நிற்கிறது. செல்வியர் தலைக்கருகே நீளும் தண்டுகள் அகலேந்த, கீர்த்தி முகத்திற்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள்.
மீனாட்சிநாயக்கரின் ஆதிதோரணம் சிதைந்ததால் பொ. கா. 1898 நவம்பர் 21-ஆம் நாள் சிவகங்கை ஜமீன்தார் கௌரி வல்லபதேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி மேலாண்மையில் செய்து வைக்கப்பட்ட இத் தோரணம் ஆவியூரை உள்ளடக்கிய 5 ஊர்களின் வருவாயில் உருவானது. 1300 அகல்களுடன் எண்ணிக்கையிலும் வடிவமைப்பிலும் கம்பீரத்திலும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து விளக்குமாலைகளையும் விஞ்சி ஒளிரும் இந்த அழகிய தோரணத்தைச் செய்த பெருமைக்குரியவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரியின் மகனான திரு. இராசகோபால் ஆசாரி.
கலைத்திறன் படைத்த அவரது கைவளமும் கற்பனையாற்றலும் மின்னி மிளிரும் இந்த விளக்கு மாலை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த பித்தளைப் படைப்புகளின் செழுமைக்குச் சான்றாய் நம் கண்முன் நிற்கிறது.
இதிலுள்ள எழுத்துப் பொறிப்பு இத்தோரணத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட பித்தளையின் அளவைத் தருவதுடன், தாங்கல்கள், மரஏணி ஆகியவற்றிற்கான செலவினங்களையும் கணக்குச் சுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.
இந்த எழுத்துப்பொறிப்பு இல்லாது போயிருந்தாலோ அல்லது கண்டறியப்படாதிருந்தாலோ தோரணத்தின் வரலாறே இருளடைந்திருக்கும். ஒளி உமிழவே உருவாக்கப்பட்ட இந்த அகல்தோரணத்தில், அதன் வரலாற்றைப் பொறித்தவர்களுக்கும் அதைத்தம் கடினஉழைப்பால் கண்டறிந்து வெளிப்படுத்தியவருக்கும் நன்றி சொல்வோம் வாருணி. இது போன்ற பதிவுகள்தான் நமக்கு வரலாறு தருகின்றன.
அதனால், இத்தகு பதிவுகளை உருவாக்குவதுடன் உருக்குலையாமல் காப்பதும் நம் கடமை.
நன்றி: "இலக்கியப்பீடம்"
செப்டம்பர் 2025, பக்கம் 41 - 45