மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும் — தேமொழி

58 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 26, 2024, 4:49:45 AMFeb 26
to மின்தமிழ்
நன்றி : சொல்வனம்
https://solvanam.com/2024/02/25/மனித-இனப்-பரவல்-விளைவித்/

 பிப்ரவரி 25, 2024

மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும் 

— தேமொழி

1.png
இன்றைய உலகில் வாழும் மனித இனமான நாம் 'ஹோமோ சாப்பியன்ஸ்'(Homo sapiens) மனித இனம் என  அறிவியலால் வகைப்படுத்தப்பட்டுள்ளோம்.  ஏறத்தாழ 200,000 (200 kya) ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்கக் கண்டத்தின் விக்டோரியா ஏரி என்று இந்நாட்களில் அடையாளப்படுத்தப்படும்  இடத்தில் உகாண்டா, கென்யா, டான்சானியா நாடுகள் சூழ்ந்துள்ள பகுதியில் தோன்றிய நம் மனித இன மூதாதையர்கள்  பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே இடத்தில் வாழ்ந்து அந்த இடத்திற்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்  கொண்டார்கள்.    பின்னர் உணவுத் தேவைகளுக்காக 150,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 120,000 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள்ளேயே பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். அப்பொழுது அவர்கள் வாழ்ந்த  சுற்றுச்சூழலில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் தோற்றத்திலும் உடல் அமைப்பிலும் மாறுதல்களும் அதிகம் இல்லை.  

பின்னர் 120,000  ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறையும் 70,000  ஆண்டுகளுக்கு ஒருமுறையும் என அலை அலையாக ஆப்ரிக்கக் கண்டத்தை விட்டு உலகின் பிறபகுதிகளுக்குப்  புலம் பெயர முற்பட்டனர்.  இந்தப் புலம்பெயரல்  ஏற்படுத்திய தாக்கமே இன்று மனித இனத்தில் காணப்படும் வெவ்வேறு தோலின் நிறத்திற்குக்  காரணம் எனத் தனது ஆய்வின் மூலம் நிறுவியுள்ளார்  பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் 'நினா ஜப்லோன்ஸ்கி' (Nina Jablonski).  
2-.jpg
மனித இனக்குழு தன் தாய்நிலத்திலிருந்து புலம் பெயர்ந்து மற்றொரு புதிய நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, அப்பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத்  தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்குவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு வாழ்வது அடிப்படை பரிணாமவியல் கொள்கை. இதுவே மக்களின் தோற்றம், நிறம், உடலமைப்பு ஆகியவற்றில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம்.  உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோலின் நிறம் மாறுபடக் காரணம் அவர்கள் வாழும் பகுதியின் புற ஊதாக் கதிர்களின் அளவின் தாக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் தோலின் நிறமிகளில் ஏற்படும் மாறுபாடு என்ற ஒரு தகவமைப்பு என்பது நினா ஜப்லோன்ஸ்கி தரும் விளக்கம்.

பொது மூதாதையர் இனத்தில் இருந்து மனித இனம் தோன்றிய பொழுது அவர்கள் தோலின் மீது உள்ள முடிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து போனது.  வேட்டையாடி வேகமாக ஓடி நகர்ந்த வாழ்க்கைமுறை அவர்களுடையது.  அதற்கேற்ப அந்த மாறுதல் ஏற்பட்டது.  வெப்பத்தைக் குறைக்க வியர்வைச் சுரப்பிகள் வெளியேற்றும் வியர்வை மூலம் உடல் குளிர்விக்கப்பட்டது.  அவர்களின் தோல் எந்த மறைப்பும் இன்றி நேரடியாக இயற்கைச் சூழல்களை எதிர்கொண்டது.  அவர்கள் வாழ்ந்த நிலநடுக்கோட்டுப் பகுதியின் அதிகப்படியான சூரியவெளிச்சம் அவர்கள் தோலின் மீது நேரடியாக விழுந்தது.  

புறஊதாக் கதிர்கள்:
3-.jpg
சூரிய ஒளியில் வெவ்வேறு அலைவரிசை கொண்ட புறஊதாக் கதிர்கள் உள்ளன.  இவை புற ஊதாக் கதிர்கள் A, B, C என்று பெயரிடப்பட்டுள்ளன [ultraviolet A (UVA), ultraviolet B (UVB) and ultraviolet C (UVC)].  இவற்றில் UVA கதிர்கள் அதிக அலைவரிசை நீளம்  கொண்டவை,  UVC கதிர்களின் அலைவரிசை நீளம் குறைவு.  இவை சூரியனில் இருந்து புவியை நோக்கி வரும் பொழுது புவியைச் சுற்றியுள்ள பாதுகாப்பான ஓசோன் மண்டலத்தை ஊடுருவிக் கடந்து புவியை அடைய வேண்டும்.  அதிகத் தீங்கு விளைவிக்கக் கூடிய UVC கதிர்கள் ஓசோன் மண்டலத்தால்  உள்வாங்கப்பட்டுத் தடுக்கப்படுகிறது.  UVB கதிர்களின் ஒரு பகுதியும், UVA கதிர்களும் புவியை வந்து சேர்க்கின்றன.  

UVA கதிர்களும் மெலானின் நிறமியும்:
தோலின் மீது விழும் புறஊதாக் கதிர்கள் மரபணுக்களையும் செல்களையும் சேதமடைய வைப்பவை, இதனால் மனித உடல்  நோய் வாய்ப்படுவதற்கும்,  பிறக்கும் சந்ததியர்கள் குறைபாடு கொண்டவர்களாகப்  பிறக்கவும் வாய்ப்புண்டு.  குருதி நாளங்களில் உள்ள  உயிர்ச்சத்து B (வைட்டமின் B-9 / Vitamin B-9) வகையைச் சார்ந்த ஃபோலேட், ஃபோலிக் அமிலம் (folate and folic acid) ஆகியன புற ஊதாக் கதிர்களால் சிதைவுண்டு செயலிழந்து போனால், சேதமடைந்த செல்களையும் மரபணுக்களையும் சீர் செய்ய இயலாத நிலை ஏற்படும்.   அதாவது, புறஊதாக் கதிர்கள் மரபணுக்களை,  செல்களைச் சேதப்படுத்துவதுடன் நில்லாமல், அந்தச் சேதங்களைச்  செப்பனிடக்கூடிய  வைட்டமின்களையும் சேதப்படுத்திவிடுகிறது.  இந்தத் தீங்குகளில் இருந்து மனிதர்களைக் காக்க அவர்கள் தோலில் 'மெலானின் நிறமி' (Melanin pigment) இயற்கையாக உருவாக்கப்  படுகிறது.  

UVA கதிர்கள் தோலின் கீழடுக்கை அடையும்பொழுது அங்குள்ள 'மெலனோசைட்' (melanocyte) என்ற நிறமி உருவாக்கும் செல்கள்  தூண்டப்பட்டு மெலானின் நிறமி உற்பத்தி  செய்யப் படுகிறது.  இது நியூகிளியஸ் (nucleus) என்ற செல்லின் உட்கரு  மீது ஒரு தொப்பி போலப் படர்ந்து உட்கருவைக் காக்கிறது.  இதனால் உட்கருவில் உள்ள மரபணுப் பொருட்கள் புறஊதாக் கதிர்கள் விளைவிக்கக்  கூடிய தீங்குகளில் இருந்து காக்கப் படுகின்றன.  பலவிலங்குகளிலும் மெலானின் நிறமி உண்டு. மனிதர்களின் தோலில் உள்ள மெலானின் நிறமி கருப்பிலிருந்து கரும்பழுப்பு நிறம் கொண்டவையாக இருக்கும்.  அடிப்படையில் ஐந்துவகை மெலானின் நிறமிகள் உள்ளன. அவை யூமெலனின்(eumelanin), பியோமெலனின் (pheomelanin), நியூரோமெலனின்(neuromelanin), அலோமெலனின்(allomelanin), பையோமெலனின்(pyomelanin) என்று  அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் மாற்றங்களால் மரபணுக்களில்   வெவ்வேறு வகை மெலானின் நிறமிகள்  தோற்றுவிக்கப்படுகின்றன. இவற்றின் நிறங்களும் கறுப்பு, பழுப்பு, சிவப்பு, மஞ்சள் என வேறுபடும்.   நிறமிகள் குறைவான  நிலை (depigmentation) வெளிறிய தோல்  நிறத்தை உருவாக்கும், நிறமிகளே அற்ற ஒருநிலை ஆல்பினோ (albino)  என்ற நிறமற்ற நிலைக்குக் காரணமாக அமையும்.  இவை யாவற்றுக்கும் காரணம் மரபணுவில் ஏற்படும் மாற்றங்களாகும்.

UVB கதிர்களும் வைட்டமின் D யும்:
தோலில் படும் UVB கதிர்கள் உயிர்ச்சத்து D (வைட்டமின் D / Vitamin D)யை உற்பத்தி செய்யும்.   வைட்டமின் D எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் தேவையான ஒன்று. வைட்டமின் D இல்லாத குறைபாடு,  உடலின் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் (calcium) என்ற சுண்ணாம்புச் சத்தை உணவுக் குழலில் இருந்து  கிரகிக்க   முடியாத நிலையை ஏற்படுத்தும். இதன் விளைவு, 'ரிக்கெட்ஸ்' (Rickets) என்ற எலும்பு நோய் தோன்றக் காரணமாகும். வளரும் குழந்தைகள்  மெல்லிய வளையக்கூடிய எலும்புகளையும், பெண்களின் இடுப்பெலும்பு அமைப்பு பாதிக்கப்படும் நிலையையும் இந்நோய் உருவாக்கும்.  பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோரின் கால்கள் உடல் எடையைத்  தாங்கமுடியாது வளைந்து போன கால்களைக் கொண்டவர்களாக அல்லல் பாடுவார்கள். பெண்களுக்கு இடுப்பெலும்பு அமைப்பின் மாற்றத்தால்  மகப்பேறு காலத்தில்  சிக்கல் ஏற்பட்டு உயிருள்ள குழந்தைகளைப்  பெற்றெடுக்க முடியாது.  இந்தக்  குறைபாடு சந்ததி  அற்று அந்த இனமே அழியக் கூடிய நிலைக்குக் கொண்டுவிடக்கூடும்.  மருத்துவம் முன்னேறிய நாட்களில் இந்தநிலை உணவில் வைட்டமின் D அதிகம் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கும்  முறையால் தடுக்கப்பட்டது. ஆதலால் ஓசோன் மண்டலத்தைக் கடந்து வரும் UVB கதிர்கள் வைட்டமின் D உருவாக்க மிக மிகத் தேவையான ஒன்று என்பதை வலியுறுத்திச் சொல்லத் தேவையில்லை .  UVA கதிர்களால் வைட்டமின் D உற்பத்தி அதிக அளவில் இருக்காது.   UVB கதிர்களே வைட்டமின் D உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றன.  

 UVB கதிர்கள்  மனித மூதாதையர் வாழ்ந்த நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்  அதிகம் இருக்கிறது. அதனால் தோல்  இயற்கை உருவாக்கிய  'சூரியத்திரை'யாக (sunscreen) மெலானின் நிறமிகளை  அதிகம் கொண்டிருந்தாலும் மனித மூதாதையர் வைட்டமின் D குறைபாடு  என்ற பாதிப்பின்றி வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் சற்றொப்ப 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து விலகி உலகின் பல பகுதிகளுக்கும், குறிப்பாக, துருவப் பகுதிகளையும் நோக்கி நகர்ந்த பொழுது அவர்களுக்கு UVB கதிர்கள் கிடைக்கும் அளவில் மாற்றம் ஏற்பட்டது.  நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவங்களை நோக்கிச் செல்லச் செல்லச் சூரியக் கதிர்கள் விழும் கோணமும் அளவும் மாறுபடும்.  இப்பகுதிகளில் ஓசோன் மண்டலத்தைக் கடந்து ஊடுருவி வரும்  UVB கதிர்களின் அளவும் மிகக் குறைவு. இதனால் வைட்டமின் D  குறைபாடு ஏற்படத் துவங்கியது.  

இயல்பாகச் சூழல் மாறினால் அதன் காரணமாக உயிர்களின் மரபணுக்களில்  சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள்  (genetic mutation) உருவாகும்.  இந்த மாற்றங்களில் தேவையான மாற்றங்கள் இயற்கைத் தேர்வு (natural selection) மூலம்  தக்கவைத்துக் கொள்வதனால் உயிரினங்களின் வாழ்வு தொடரும் என்பது அடிப்படை உயிரியல் விதி, டார்வின் கோட்பாடு (Darwin's theory of evolution by natural selection).

மனித இனப்பரவலும் மரபணு மாற்றங்களும்:
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து விலகி மனித மூதாதையர் அரேபியா, மத்தியக் கிழக்காசியா பகுதிக்கு நகர்ந்தனர்.  அப்பகுதிக்குச் சூரியஒளி கிடைக்கும் நேர அளவும், UVB கதிர்கள் அளவும்  தேவைக்கு ஏற்ப மரபணுவில் மாற்றம் நிகழ்ந்தது.  இந்த மரபணு மாற்றம் கேஐடி லிகண்ட் (KIT Ligand Gene - KITLG) என்ற மரபணுவில் ஏற்பட்டது.  அதனால் யூமெலனின் நிறமி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த மரபணு மாற்றத்தைத் தாய்நிலமான நிலநடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்களிடம் காணமுடியாதது குறிப்பிடத்தக்கது,

மரபணுக்கள் நேரடியாக நிறமி உற்பத்தி செய்யப்படும் வளர்சிதை மாற்றத்தின் மீதோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தும் முறையிலோ நிறமி உற்பத்தி மீது தாக்கம் செலுத்துபவை.  பரிணாம வளர்ச்சியில் இந்த மரபணு மாற்றத்தின் முதன்மைக் காரணமே தோலின் நிறமிகளில் மாற்றம் செய்து கிடைக்கும் UVB கதிர்கள் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் Dயை உற்பத்தி செய்யும் தேவைதான். தோலில்  உள்ள யூமெலனின் நிறமியின்  அளவு வைட்டமின் D உற்பத்தியை  அதிகரிப்பதுடன் நேரடித் தொடர்பு கொண்டது.  

இதே காலகட்டத்தில் தாய் நிலத்தில் வாழ்ந்த மற்றொரு ஆப்பிரிக்கப் பிரிவினர் இரண்டாவது அலையாக வெளியேறி அரேபியா தீபகற்பத்தின் தெற்குப் பகுதி வழியாக ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா வரை புலம் பெயர்ந்தனர்.  இவர்களிடம் KITLG என்ற மரபணு மாற்றம் இல்லாத காரணத்தால் அடர்த்தியான கறுப்பு பழுப்பு நிறமிகள் கொண்ட தோலை உடையவர்களாக இருந்தனர்.

அரேபியா பகுதியில் புலம் பெயர்ந்தவர்களில் சிலர்  40,000 இல் இருந்து  30,000  ஆண்டுகளுக்கு முன்னர்  ஐரோப்பா, ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி,  ஆசியாவின் வடக்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்து பரவலைத் தொடர்ந்தனர்.

ஐரோப்பியப் பகுதியில் வாழ்ந்தவர் 25,000 இல் இருந்து  15,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் துருவப் பகுதியை ஒட்டிய வடக்குப் பகுதிகளுக்கு நகர்ந்தனர்.  இப்பகுதிகள் மிகவும் குளிரான, சூரிய ஒளி நாட்கள் குறைந்த பகுதிகள். இந்தச் சூழலுக்கு ஏற்ப SLC24A5 மற்றும்  SLC45A2 மரபணு மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் தோலின் யூமெலனின் நிறமியின் அளவு மேலும் குறைந்து தோல் வெளிர் நிறமாக மாறியது.

இதைப் போல 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு ஆசியப் பகுதிக்குச் சென்றவர்கள் மரபணுவில் மேலும்  MFSD12 என்ற மரபணு மாற்றம்  நிகழ்ந்தது, இம்மாற்றம்  பியோமெலனின் நிறமியை உற்பத்தி செய்தது. பியோமெலனின் நிறமியும் தோலுக்கு வெளிறிய தன்மைக் கொடுத்து, அப்பகுதியில்  கிடைக்கும் குறைந்த அளவு  UVB கதிர்களை உள்வாங்கி வைட்டமின் D உற்பத்தியை அதிகரிக்க உதவியது.  
 4-.png
5-.jpg
 
சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு ஆசியாவில் இருந்த பிரிவினர் மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து பெரிங் நீரிணைப்பு (Bering Strait) வழியாக வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளுக்கு மிக விரைவாகப் பரவத் தொடங்கினர்.  

காலப்போக்கில் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா ஆசியப் பகுதிகளில் தங்கியவர்கள் மேலும் மரபணு மாற்றங்களை OCA2 மற்றும் MC1R மரபணுக்களில் பெற்றார்கள்.  இந்த மாற்றங்களும் தோலில் யூமெலனின் நிறமியின் அளவை  மேலும் குறைந்து தோல் வெளிர் நிறமாக மாற உதவியது.    சற்றொப்ப 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் உலகம் முழுவதும் பரவிக் குடியேறி விட்டனர்.

மனிதப் பரவலின் போது, பொதுவாக ஓரிடத்தில் கிடைக்கும் சூரிய ஒளி புற ஊதாக் கதிர்கள் அளவிற்கு ஏற்ப,  மரபணு மாற்றங்கள் வழியாகத் தோலின் நிறத்தைத் தகவமைத்துக் கொண்டு,  இயற்கை தேர்வு மூலம் மாற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டு,  தேவையான வைட்டமின் D உற்பத்தியைச் செய்தது  மனித இனத்தின் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சி.  நாம் பார்க்கும் இக்காலகட்டத்தில் நிலநடுக்கோட்டிற்கு அருகில் வாழ்பவர்கள் தோலில்  யூமெலனின் நிறமி அதிகமாகவும், அதனால் அடர்த்தியான தோலின் நிறம் கொண்டிருப்பார்கள் என்பதும்;    நிலநடுக்கோட்டிலிருந்து அதிகத் தொலைவில் வாழ்பவர் தோலில்  யூமெலனின் நிறமி அளவு குறைவாகவும் வெளிறிய தோல் நிறம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பதுமே அறிவியல் ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கிறது. தோலின் நிற வேறுபாட்டின் அடிப்படைக்கு அறிவியல் விளக்கம் கிடைத்துள்ளது எனலாம்.  

 5-.png

பேராசிரியர் நினா ஜப்லோன்ஸ்கி,  அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான  நாசா (NASA) நிறுவனம் செலுத்தியுள்ள, புவியின் ஓசோன் அளவை கண்காணித்து வரும் டாம்ஸ் செயற்கைக்கோள் (Total Ozone Mapping Spectrometer / TOMS) தரவுகளையும், பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோல் நிறத்தின் தரவுகளையும்,  புவியிடக் குறிப்புத் தரவுகளுடன் (Geographic Information System /GIS ) இணைத்து,  புவி வரைபடத்தில் காட்டி வரைபட உதவியுடன் நிறுவியுள்ளார்.  தோலின் நிறம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடர்த்தியாகவும், துருவம் நோக்கிச் செல்லச் செல்ல வெளிர் நிறத்திற்குச் செல்வதையும் இதன் மூலம் காணலாம்.  தோலின் நிறம் மாறுபாட்டிற்கும், புற ஊதாக் கதிர்களின் அளவிற்கும் உள்ள தொடர்பைப்  புள்ளியியல் தரவுகளும் உறுதிப்படுத்தியுள்ளது.
6-.png
7-.png
 
 இக்கட்டுரை  சுருக்கமாக எளிதில் மனிதப்பரவலையும், அதன் விளைவாக மரபணு மாற்றங்களையும், தோலின் மாறுபட்ட நிறமிகளின் தோற்றம் பற்றியும் முக்கியமான நகர்வுகள் வழியாக விளக்கும் ஒரு முயற்சி. உண்மையில் மனிதப்  பரவல் ஒரே திக்கில் தொடர்ந்து நிகழ்ந்தது என்று சொல்வதற்கில்லை, முன்னும் பின்னும் போய் வந்திருப்பார்கள், மேலும் பல மரபணு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.  

நிறமிகளுடன் தொடர்பு உள்ள மரபணுக்களில் குறிப்பிடத்தக்க ஒருசில;
அடர்வண்ண நிறமிக்கான  மரபணுக்கள்:
MC1R மாறாத வகை, ASIP, SOX9, ATRN, AP3D1
நிறமிழந்த நிறமிக்கான  மரபணுக்கள்:
MC1R வேறு வகை, MATP(SLC45A2), SLC24A5, KITLG, HERC2, TYR, TYRP1, OCA2

மேலே காட்டப்பட்டவை  நிறம், நிறமற்ற தன்மை, மாறுபட்ட நிறம் கொண்ட தோற்றத்தை நிர்ணயிக்கும் மரபணுக்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.  

ஏறத்தாழ சுமார் 150க்கும் அதிகமான மரபணுக்கள் தோலின் நிறத்தை நிர்ணயிப்பதில் பங்கேற்கின்றன என்ற நிலைதான் ஒரே குடும்பத்து உடன்பிறப்புகளிலும் தோலின் நிறத்தின் அடர்த்தி மாறுபடக் காரணம். ஒரே வகையான தோலின் நிறமும் கூட தனித்தனியாகப்  புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தனித்தனியே இயற்கைத்தேர்வால் நிகழ்ந்த ஒரு பரிணாம வளர்ச்சி.  எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய வெளிர் நிறத்தோலுக்கும், சீன வெளிர் நிறத்தோலுக்கும் அடிப்படை வெவ்வேறு மரபணுக்கள், வெவ்வேறு இயற்கைத் தேர்வுகள். அதாவது ஒரே மாதிரியான இயற்கைச் சூழலுக்கும் புற ஊதாக் கதிர்கள் தாக்கத்திற்கும்  தனித்தனியே பல்வேறு வழியில் பல்வேறு முறை இயற்கைத் தேர்வு நிகழ்ந்துள்ளதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகிறது. இது இணைப் பரிணாம வளர்ச்சி என்று கூறப்படும்.

இது தவிர்த்து மனித இனத்தில் மரபணுக்களில் 99% மாறுதல் இல்லை என்பதால் தோல் நிறத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வேறுபாட்டையும் ஒவ்வொரு இனம் எனச் சுட்டுவது சமூக கட்டமைப்பின் விளைவு, அறிவியலைப் பொறுத்தவரை வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அனைவரும் ஒரே ஹோமோ சாப்பியன்ஸ்  இனம்தான்.  மரபணுக்களில் குறிப்பிடத்தக்க வேற்றுமை எதுவும் இல்லை. அதனால் வேறுபட்ட நிறங்களினால் மனிதர்களிடையே உயர்வும் தாழ்வும் இல்லை.

ஐரோப்பியர்களால் சற்றொப்ப பதின்மூன்று மில்லியன் (13,000,000) மக்கள் அடிமை வணிகம் நடந்த காலகட்டத்தில் (1525-1867) தங்கள் வாழிடத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு நாடுகளிலும் அடிமையாக விற்கப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்கக் கண்டத்தை வாழிடமாகக் கொண்டிருந்த கறுப்பு நிறத்தவர். இவர்களை இவ்வாறு அடிமைகளாக நடத்துவதை நியாயப்படுத்தும் வகையில் பைபிளில் இருந்து திரிக்கப்பட்ட கருத்துகளாலும், கற்பிக்கப்பட்ட பொய் அறிவியல் கோட்பாடுகளிலிருந்தும்  கறுப்பர்கள் தரக்குறைவானவர்கள் என்று சான்றுகள் காட்டப்பட்டு அடிமை வணிகம் ஆதாயம் பெறும் நோக்கில் மனிதநேயமற்ற  முறையில் நடத்தப்பட்டது மனித வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.

இவ்வாறு புலம் பெயர்க்கப்பட்ட இனத்தவர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக தாங்கள் வாழ்ந்த நிலநடுக்கோட்டுப் பகுதியின் தகவமைப்புக்கேற்ப  வாழ்ந்தவர்கள்.  புதிய சூழலுக்குத் தள்ளப்பட்ட கட்டாய மாற்றத்தால் உடல் குறைபாடுகளையும் நோய்களையும் எதிர் கொண்டவர்கள்.   அவ்வாறே தாங்கள் தகவமைக்கப்பட்ட சூழலில் இருந்து அதிக சூரியஒளி உள்ள இடத்திற்கு மாறும் வெளிர் நிறத் தோல் கொண்டவர்கள் தோலில் 'வெங்குரு' (sunburn) பாதிப்பு தோன்றுகிறது. இவர்கள் சூரியத்திரை (sunscreen) களிம்புகளைத் தோலில் பூசிக் கொண்டு வெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சூரியத்திரை பயன்கொள்ளாது அதிக நேரம் அதிக அளவில் வெயிலில்   இருப்பவர்களின் மரபணுக்கள் சேதமடைந்து கட்டற்ற செல் வளர்ச்சி தோன்றி தோல் புற்றுநோயால் (skin cancer) பாதிக்கப்படுகிறார்கள்.  

எனவே, தோல் நிறம் என்பது புற ஊதாக் கதிர்களின் அளவு குறித்து அமைவது.  புற ஊதாக் கதிர்களில் (UVB) இருந்து வைட்டமின் D உற்பத்தி செய்வதை அதிகரிக்க மரபணு  மாற்றம் நிகழ்ந்து தோல் மெலானின் நிறமியை இழக்கிறது.  இதனால் எலும்பு வளர்ச்சிக்கான கால்சியத்தைக் கிரகிக்கவும்,  மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்காகவும் வைட்டமின் D உற்பத்தி செய்வதும் சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் வாழ்விடங்களில் உள்ளவர்களுக்குச் சீர் செய்யப் படுகிறது.  அத்துடன் தோலின் நிறம் என்பது இனம் என்பதற்கான அடிப்படை இல்லை.  அது  உடல்  தோற்றத்தின் வேறுபாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அல்ல.    புவியில் புற ஊதாக் கதிர்களின் அளவிற்கு ஏற்ப மரபணு மாற்றம் ஏற்படும், அதன் விளைவாகத் தோலின் நிறமிகள் அளவு மாறும்.  உதவும் மரபணு மாற்றங்கள் இயற்கைத்தேர்வு மூலம் தக்க வைக்கப்படும். நிலநடுக்கோட்டிற்கு அருகில் UVA  + UVB கதிர்கள் அதிகம்.  ஆனால் அங்கிருந்து விலகி துருவம் நோக்கிச் செல்லச்செல்லப் புற ஊதாக் கதிர்கள் அளவு குறையும். அதற்கேற்ப தகவமைக்கப்பட்ட மாறுபாடுதான் தோலின் நிற வேறுபாட்டிற்குக் காரணம்.

தோலின் நிறம் என்பது மனிதப் பரவலின் காரணமாக ஒரு பரிணாம வளர்ச்சி.


References:
National Academy of Sciences (US); Avise JC, Ayala FJ, editors. In the Light of Evolution: Volume IV: The Human Condition. Washington (DC): National Academies Press (US); 2010. 9, Human Skin Pigmentation as an Adaptation to UV Radiation.
ttps://www.ncbi.nlm.nih.gov/books/NBK210015/

The evolution of human skin coloration. Nina G. Jablonski, George Chaplin. 2000.   Journal of Human Evolution. Volume 39, Issue 1, July 2000, Pages 57-106.
https://doi.org/10.1006/jhev.2000.0403

Geographic distribution of environmental factors influencing human skin coloration. Chaplin G. 2004.  American Journal of Physical Anthropology, 125:292-302.

Human skin pigmentation as an adaptation to UV radiation.  Nina G. Jablonski and George Chaplin. 2010.  Vol. 107, Supplement 2: In the Light of Evolution IV: The Human Condition (May 11, 2010), pp. 8962-8968.  National Academy of Sciences.
https://www.jstor.org/stable/25681526

Influence of Ethnicities and Skin Color Variations in Different Populations: A Review.  Piyu Parth Naik, Syed Nadir Farrukh. 2022.  Skin Pharmacol Physiol. 2022;35(2):65-76
https://karger.com/spp/article/35/2/65/826910/Influence-of-Ethnicities-and-Skin-Color-Variations

Skin Pigmentation - Human Migration
https://evo-ed.org/skin-pigmentation/biological-processes/human-migration/

López S, Alonso S (2014) Evolution of skin pigmentation differences in humans. In: Encyclopedia of Life Sciences. John Wiley & Sons, Ltd: Chichester

 8-.png


தேமொழி

unread,
Apr 12, 2024, 6:13:48 PMApr 12
to மின்தமிழ்

நான் எழுதிய . . . 
"மனித இனப்பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிநாம வளர்ச்சியும்" கட்டுரை
மார்ச் (2024) மாதத் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மாத இதழான கேரளத்தமிழ் இதழில் வெளியிடப்பட்டது.  வெளியிட்ட திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் இதழின் ஆசிரியர்களுக்கு என் மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றியுடன், 
தேமொழி 
26.jpg
27.jpg
28.jpg
29.jpg
25.jpg
--------------------------------------------------------------------------------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages