
அருந்ததி ராய்
மேரி என்று ஒரு கேரளப் பெண். சிரியன் கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை காலனி கால பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பூச்சிகள் பற்றி ஆராயும் அறிவியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். சிறந்த அறிஞர் என்றாலும், ஆண். கோபம் வந்தால் இவர் தூக்கி போட்டு மிதிப்பது அவரது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும். பெண் குழந்தை மேரி, ஆண் குழந்தை ஐஸக். பூச்சி அறிஞரின் பணி காரணமாக இவர்களது குடும்பம் கல்கத்தாவில் இருந்தது. அப்போது மேரி தன் இருபது வயதுகளில் இருந்தார். பூச்சி அறிஞர் தன் மனைவியின் தலையில் பூந்தொட்டியைப் போட்டு உடைப்பது போன்ற கோர சம்பவங்கள் வீட்டில் நடக்கின்றன. தந்தையின் வன்முறை தாங்க முடியாமல் தன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்ன ஒருவரைக் கேள்வி கேட்காமல் திருமணம் செய்து கொள்கிறார் மேரி. அவர் ஒரு வங்காள தேசத்தவர். மிக்கி ராய் என்ற பெயரில் அழைக்கப்பட்டவர். ஏனென்றால் பார்க்க மிக்கி மவுஸ் போல் இருப்பார். மேரியின் பெயர் மேரி ராய் ஆகிறது.
மிக்கி ராய்க்கு அசாமில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் மேற்பார்வையாளர் வேலை. தம்பதியர் அசாமில் மண வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். மேரிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. கூடவே மிக்கி ராய் ஒரு மொடாக்குடிகாரர் என்றும் தெரிய வருகிறது. குழந்தை பிறந்து ஒரு வருடத்துக்குள் மேரி வயிற்றில் இன்னொரு குழந்தை. 1960-கள். இந்தியா சீனாவுக்கிடையே போர் ஆரம்பிக்கிறது. அஸாமிலிருந்து பல குடும்பங்கள் வெளியேறுகின்றன. இவர்கள் குடும்பம் மறுபடி கல்கத்தாவுக்குத் தப்பி வருகிறது. கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை, வேலையிழந்த குடிகாரக் கணவன். மேரி கருவை அழிக்க பப்பாளிக் காயெல்லாம் சாப்பிட்டும் பயன் இல்லை. பெண் குழந்தை ஒன்று பிறக்கிறது. மிக்கி ராய் விட்டை விட்டு ஓடிவிடுகிறார். பூச்சி அறிஞரான மேரியின் தந்தையும் இறந்துவிடுகிறார். மேரியின் தாயும், அவரது தம்பி ஐஸக்கும் கேரளா சென்றுவிடுகிறார்கள். மேரியின் தந்தை பூச்சி அறிஞர் வாங்கிப் போட்ட வீடு ஒன்று ஊட்டியில் இருந்திருக்கிறது. அந்த வீட்டுக்கு மேரி தன் இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்கிறார்.
ஊட்டியில் அந்த வீட்டில் ஏற்கனவே வேறு ஒரு குடும்பம் வாடகைக்குக் குடியிருக்கிறது. வீட்டுக்கு ஒனர் யார் என்று தெரியவில்லை, அதனால் வாடகை கொடுக்கவில்லை என்று வாழ்ந்து வரும் ஒரு குடும்பம். இது என் தந்தையின் வீடு என்று மேரியும் அந்த வீட்டில் ஒரு சைடில் தன் இரண்டு குழந்தைகளுடன் தங்கிவிடுகிறார். ஊட்டியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக மேரிக்கு வேலை கிடைக்கிறது. மேரி வேலைக்குச் செல்லும் போது குருசம்மாள் என்று ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்மணி குழந்தைகளைத் தாய் போல பார்த்துக் கொள்கிறார். ஒருநாள் மாலை நேரம். மேரியின் தாயும், சகோதரன் ஐஸக்கும் கேரளாவிலிருந்து ட்ரெயின் பிடித்து மெனக்கட்டுக் கிளம்பி ஊட்டிக்கு வந்து மேரியை அந்த வீட்டிலிருந்து கிளம்பி வேறு எங்கேயாவது போகச் சொல்கிறார்கள். ஏனென்றால், திருவாங்கூர் சிரியன் கிறிஸ்தவ சொத்துரிமைச் சட்டத்தின் படி தந்தையின் சொத்து பெண் பிள்ளைக்குக் கிடையாது, ஆண் பிள்ளைக்கு மட்டும்தான், அதனால் இந்த வீட்டில் தங்கியிருக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது, கிளம்பிப் போ என்று ஒரு வக்கீல் நோட்டீஸைக் காண்பிக்கிறார்கள்.
நல்ல வேளையாக அந்த இரவில் ஊட்டியில் மேரிக்கு ஒரு வக்கீல் கிடைக்கிறார். அவர், “இது தமிழ் நாடு. திருவாங்கூர் சட்டமெல்லாம் இங்கே செல்லாது. இங்கே ஒண்டுக் குடித்தனம் இருப்பவர்களுக்குக்கூட சொத்துரிமை உண்டு”, என்று சொல்ல கேரளாவிலிருந்து வந்தவர்கள் வந்த வழியில் திரும்பச் சென்றுவிடுகின்றனர். இருந்தாலும் மேரியின் பிரச்சனை முடியவில்லை. அவரது ஆசிரியர் வேலை வேறுசில காரணங்களால் பறிபோகிறது. கேரளாவின் கோட்டயம் அருகே அவரது தந்தைக்கு இருந்த இன்னொரு பூர்வீக வீட்டிற்குச் சென்று பிள்ளைகளுடன் குடியிருக்கிறார். திருவாங்கூர் சிரியன் கிறிஸ்தவ சொத்துரிமைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று அதை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு மனு போடுகிறார். அப்படியே அந்த ஊரில் ஒரு கிளப்பை வாடகைக்கு எடுத்து பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கிறார். ஏழு பிள்ளைகள் படிக்கச் சேர்கிறார்கள். அதில் இரண்டு பேர் மேரியின் பிள்ளைகள். காலையில் பிள்ளைகள் படிப்பார்கள். இரவில் கிளப்பில் ஆட்கள் வந்து குடிப்பார்கள். சிகரட் துண்டுகளை வீசிவிட்டுப் போவார்கள். மேரியின் இரண்டு பிள்ளைகளும் அவற்றைச் சுத்தம் செய்து தினமும் பள்ளியைத் தயார் செய்வார்கள்.
பள்ளியில் சேரும் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளைவிட அதிக அக்கறையுடன் மேரி கவனிக்கிறார். பள்ளிக்கூடம் வளர்கிறது. ஊட்டியில் தன் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்ட குருசம்மாளை கேரளா வரவழைத்து அவரை அந்த பள்ளியின் கேட்டரராக நியமிக்கிறார். தூரத்து ஊர்களிலிருந்து வந்த பிள்ளைகளைத் தன் பிள்ளைகளுடன் அவர் வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைக்கிறார். பல சிக்கல்களைத் தாண்டி கோட்டயத்தின் மிகப்பெரிய பள்ளியாக மேரியின் பள்ளி உருவாகிறது. வீட்டை ஹாஸ்டலாக வைத்து நடத்திய பள்ளி பிற்காலத்தில் நீச்சல் குளம், விளையாட்டு அரங்கங்கள் எல்லாம் கொண்ட பல ஏக்கர் பள்ளி நிறுவனமாக வளர்கிறது. இன்னொரு பக்கம், சுப்ரீம் கோர்ட்டில் தன் சொத்துப் போரையும் மேரி விடாமல் தொடர கடைசியில் திருவாங்கூர் சொத்துரிமைச் சட்டம் நீக்கப்படுகிறது. பழமைவாத சிரிய கிறிஸ்தவ எதிர்ப்புகளுக்கிடையே தந்தையின் சொத்துகள் எல்லாம் மேரிக்கும் கிடைக்கிறது. சமுதாயத்தின் பிரபலமான பெண்மணியாகிறார். ஊட்டியில் மேரிய்யை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்ன சகோதரன் ஐஸக் தன் சொத்தையெல்லாம் இழந்து குடும்பத்துடன் போலீஸால் வெளியேற்றப்படுகிறார். மேரி இதை தன் காரிலிருந்து வேடிக்கை பார்க்கிறார். இது மேரியின் பிடிவாத குணத்தின் இன்னொரு பக்கம். மேரி சிறுவயதிலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி. பலமுறை சாவைச் சந்தித்தவர். எண்பது வயதிலும் வென்டிலேட்டர் வரை சென்று மறுபடியும் பள்ளி நிர்வாகத்தைக் கவனித்தவர். கொரோனாவையும் தோற்கடித்து வாழ்ந்து ஏறக்குறைய 90 வயதில் 2022-ஆம் ஆண்டு இயற்கை எய்தியிருக்கிறார். கோட்டயத்தில் இன்றும் இயங்கி வரும் அவரது பள்ளிக்கூடத்தின் பெயர், “பள்ளிக்கூடம்”!
‘Mother Mary Comes To Me” என்று அருந்ததி ராய் தன் சமீபத்திய புத்தகத்துக்கு தலைப்பு வைத்திருக்கக் காரணம் அவரது தாய் மேரி. மேரி ஒருகாலத்தில் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க முயற்சித்துத் தப்பிப் பிறந்த பெண் குழந்தைதான் அருந்ததி ராய். பிற்காலத்தில் எல்லோரும் மேரியை, “நீங்கள் அருந்ததி ராயின் தாய்தானே”, என்று சொல்வதைக் கேட்டுப் பெரிதாக உவக்காத தாய். தான் சொல்லிக்கொடுக்காத எதை என் பிள்ளை கற்றிருக்கக்கூடும் என்ற கர்வத்துடன் வாழ்ந்த தாய்.
இந்த புத்தகம் உண்மையில் அருந்ததி ராயின் சுயசரிதை. தன் பதினேழு வயதிலேயே மேரியை விட்டுவிட்டு 1970-களில் டெல்லிக்கு ஓடி வந்து தன் வாழ்க்கையைத் தன் போக்கில் தொடர்ந்த பெண் அருந்ததி ராய். பாலியல் கொடுமைகளிலிருந்து கேரக்டர் அஸாஸினேஷன் வரை நம் சமூகத்தில் பின்புலமற்ற ஒரு பெண்ணுக்கு ஆண்கள் ஆற்றும் கடமைகளையெல்லாம் சந்தித்தவர். அதெல்லாம் போதாதென்று சமூகப் பிரச்சனைகளையெல்லாம் தனக்கென்ற பிரச்சனைகளாக உருவாக்கிக் கொண்டவர். தன் எழுத்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி சிறைக்குச் சென்ற எழுத்தாளர். இந்தியாவிலிருந்து முதல் புக்கர் பரிசு வென்றவர் என்ற பெருமையைத் தேடித்தந்த இவரது எழுத்துகளே அங்கே இங்கே என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இருப்பவர்.
நர்மதை நதி அணைத்திட்டத்திற்கு எதிராக அங்கிருந்த மக்களுக்காக இவர் போராடும் போது சில பத்திரிகையாளர்கள் அருந்ததி ராயின் சொந்த வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்டு இவர்களுக்காகப் போராடும் நீ யோக்கியமா என்ற ரேஞ்சில் விமர்சித்திருக்கிறார்கள். அவர் மைக்கைப் பிடித்து, “ஒரு விவாதித்திற்காக நீங்கள் சொல்வதையெல்லாம் நான் ஒத்துக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். நான் கெட்ட பெண்ணாக இருந்துவிட்டுப் போகிறேன். கன்னிப் பெண்ணாக இல்லாமல் இருந்துவிட்டுப் போகிறேன். அதற்காக, அணை ஏன் கட்டுகிறீர்கள்?” என்றிருக்கிறார். இந்த புத்தகத்தில் அவரது மொத்த சொந்த வாழ்க்கையையும் தைரியமாகப் பொதுவெளியில் வைத்திருக்கிறார். தன் தாயின் மரணத்தில் ஆரம்பித்து பின்னோக்கிச் சென்று கடைசியில் மறுபடியும் தன் தாயின் மரணத்தில் வந்து தன் சரிதையை முடிக்கிறார். கல்கத்தாவில் இரண்டு குழந்தைகளுடன் மேரியை விட்டுச் சென்ற அவரது குடிகார தந்தையையும் மறுபடி கண்டுபிடித்து டெல்லியில் அவரை வைத்துக் காப்பாற்றி அவரது கடைசி காலத்தில் ஆஸ்பத்திரியில் கூட இருந்து கவனித்திருக்கிறார் அருந்ததி ராய். மேரியால் சொத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்த தன் மாமா ஐஸக்குக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இழந்த வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறார்.
வழக்கம் போல் இந்த புத்தகத்திலும் அவரது உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்து நடை அவர் சொல்லவந்ததை மிஞ்சுகிறது. பட்டாசாக வெடிக்கும் எழுத்து. தன் வாழ்வின் ஓர் இக்கட்டான காலத்தில், “மொழி என்ற மிருகத்தை வேட்டையாடி அதன் இரத்த மையைச் சுவைக்க ஆரம்பித்தேன்”, என்று அவர் எழுதியிருக்கும் வரியை எந்த மொழியும் மறக்க முடியாது.