தமிழ்மணி - பெண்ணைப் பெற்றவரோ...?

33 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Feb 7, 2010, 5:24:21 PM2/7/10
to Min Thamizh
கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாடல்) பாடியவர் புலவர் பெருங்கடுங்கோ என்பவர்.

இவர் சேரர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், சேரமான் பெருங்கடுங்கோ என்றும்,

பாலைக்கலி என்னும் ஒரு நூலைப் படைத்திருந்ததால், அதையும் இணைத்து, பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ என்றும் அழைக்கப்பட்டார்.

தமிழ் இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் பொருள் அறிந்து படித்தால் அதன் சுவையே தனி தான்!

பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு ஏற்படும் வேதனையும், தவிப்பும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் அந்த வேதனையையும், தவிப்பையும் எவ்வாறு ஏற்று, சகித்துக்கொள்வது என்பதை அருமையாக விளக்கியுள்ளார் புலவர் பெருங்கடுங்கோ.

ஒருவனும், ஒருத்தியும் காதல் வயப்பட்டனர்.

பெற்றோர் அறியாத வண்ணம் இருவருக்கிடையேயும், ஆற்றோரம், தோட்டம், வீட்டுக் கொல்லைப் புறம் என பல இடங்களில் சந்திப்புகள் நிகழ்ந்தன.

இவர்கள் சந்திப்பது ஊரால் கண்களுக்கு விருந்தாகி, செவி வழியாக ஊர் முழுவதும் உள்ள வாய்க்கு அவலானது. இச்செய்தி அந்தப் பெண்ணின் தாயார் காதுகளுக்கும் எட்டியது.

காதலனைப் பார்க்க முடியாதபடி வீட்டில் உடனே காவல் வைக்கப்பட்டாள் தலைவி. அவனைச் சந்திக்க ஒரே வழி தோழி தானே! சந்திக்க முடியவில்லை என்றாலும், செய்திப் பரிமாற்றம் செய்வாளே..!

உடனே தோழியின் உதவியை நாடுகிறாள் தலைவி. இருவருக்கும் இடையே செய்திப் போக்குவரத்தை சில நாள்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தாள் தோழி.

நாளாக நாளாக, தான் விரும்பியவனுக்கு மாலையிட முடியாத குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டாள் தலைவி. இந்நிலையில், காதலர்கள் என்ன செய்வார்கள்?

மனம் கவர்ந்த மணாளனை மணப்பதே பெண்மைக்குச் சிறப்பு என உணர்ந்த அக்காலத் தலைவி கட்டுக்காவலை மீறி, தோழி உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி, தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள்.

இரவு விடிந்தது. படுக்கையில் செல்ல மகள் இல்லை. காலை விடிந்ததும் படுக்கையில் மகளைக் காணவில்லை என்றால், பெற்றவர்கள் மனமும், வயிறும் பற்றி எரியத்தானே செய்யும்!

அப்படித்தான் அந்தப் பெண்ணின் தாயும் தவித்தாள்; குமுறினாள்; அழுதாள். உடனே மகளைத் தேடிப் புறப்பட்டாள்.

அவள் செல்லும் பாலை வழியில், சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குடையைப் பிடித்துக்கொண்டு சில அந்தணர்கள் அவள் எதிரே வந்தனர்.

கையில் நீர்ப்பாத்திரத்தையும் (கமண்டலம்), முக்கோலை தோளிலும் வைத்திருந்தனர். வெப்பம் நிறைந்த காடுகளில் நடந்து செல்வதையே இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர்கள் அவ்வந்தணர்கள் (பாலைக் கலியாயிற்றே!).

அவ்வந்தணர்களைக் கண்ட அப்பெண்ணின் தாய், அவர்களைப் பார்த்து,

"அந்தணர்களே! என் மகள், வேறொருத்தியின் மகனோடு காதல் வயப்பட்டு, யாரும் அறியாமல் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரையும் நீங்கள் வழியில் கண்டீர்களோ? அல்லது காணாமல் விட்டுவிட்டீர்களோ?"

என்று கேட்டாள்.

அவள் கூறியதைக் கேட்ட அவ்வந்தணர்கள்,

"தாயே! அவர்களை நாங்கள் வழியில் கண்டோம்; ஆண் தன்மையும், அழகும் நிறைந்த அவனோடு நடந்து செல்ல முடியாத பாலை நிலத்திலே, அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்களை அணிந்த,
உலகப் போக்கை முழுவதும் உணராது உடன் சென்ற அழகிய இளம் பெண்ணின் தாய்தானே நீங்கள்?" என்றனர்.

அந்தணர்கள் கூறியதைக் கேட்ட அப்பெண்ணின் தாய் வருத்தமுற்று, "நான்"தான் என்பதை மெüனத்தின் மூலம், தலைகுனிந்து உணர்த்தி நின்றாள்.

அவள் துயரமடைந்ததைக் கண்ட அந்தணர்கள், அவளுக்கு ஆறுதல் கூறினர். அப்படி என்னதான் கூறினர்?

பெண்ணைப் பெற்ற பெற்றோர் அனைவரும் படித்தறிய வேண்டிய செய்திகளைத் தான், அவ்வந்தணர்கள் வாய்மொழியாக, புலவர் பெருங்கடுங்கோ, அக்காலத்திலேயே கூறிச்சென்றுள்ளார்.

"வாசனைகள் பல கலந்த சந்தனம், பூசிக் கொள்கிறவர்களுக்குத்தான் பயன் தரும். சந்தன மரங்கள் மலையில் பிறந்தவையானாலும் அவைகளால் மலைக்கு ஒரு பயனும் இல்லை.

நினைத்துப் பார்த்தால், இதைப் போலத்தான் உமது மகளும். அவள் பயன்படக்கூடிய பருவ காலத்தில் பிறருக்குப் பயன்படுவாளே ஒழிய, உமக்குப் பயன்படமாட்டாள்".

"சிறந்த வெண்மையான முத்து, அதை அணிந்து கொள்கிறவர்களுக்குத்தான் பயன்படும். முத்துக்கள் தண்ணீரில் பிறந்தவை. ஆனால், அவைகளால் தண்ணீருக்கு ஒரு பயனும் கிடையாது.

இதை ஆராய்ந்து பார்த்தால், உம்முடைய மகளும் முத்தைப் போல் உமக்குப் பயன்படமாட்டாள்".

"ஏழுவகை நரம்புகளின் மூலம் உண்டாகும் இனிய ஓசைகள் பாடுவோருக்குத்தான் இன்பமளிக்கும். அவை யாழிலிருந்து பிறந்தாலும் அவற்றால் யாழுக்கு ஒரு பயனும் இல்லை.

எண்ணிப்பார்த்தால், இதைப்போலவே உமது மகள் உமக்கு இன்பம் தரமாட்டாள்".

எனவே, உமது மகளை நினைத்து துன்பப்பட வேண்டாம்; தாய், தந்தையரைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவனே சிறந்தவன் என்பதை உணர்ந்த உமது மகள், கணவன் சென்ற வழியே சென்றாள்.

அதுவே இல்லறத்தில் குற்றமற்ற செயலுமாகும்" என்று அந்தணர்கள் கூறிய தத்துவ மொழிகளைக் கேட்ட தாய், உண்மையை உணர்ந்தாள்.

மனம் தெளிவடைந்து வந்த வழியே திரும்பினாள்.

சில நாள்கள் கடந்த பிறகு, புதுமணத் தம்பதிகள் ஊருக்குள் வந்தனர். கோபம் தணிந்த பெற்றோர், அவர்களை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்.

மணமக்கள் இனிதே இல்லறம் நடத்தினர். இல்லற வாழ்வின் மகத்துவத்தை விளக்கும் பாடல் இதுதான்.

இப்பாடலின் சுவையை, பொருள் அறிந்து படித்தால், மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.

பாடலைக் காண்போம்.

"எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைலசை வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! (1)

வெவ் இடைச் செல்ல மாலை ஒழுக்கத்தீர் இவ்இடை
என் மகள் ஒருத்தியும்,பிறன் மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்து தாம் அறி புணர்ச்சியர்,
அன்னார் இருவரைக் காணீரோ? பெரும! (2)

காணேம் அல்லேம் கண்டனம் கடத்தினை
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர். (3)

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே. (4)

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே. (5)

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே! (6)

என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம்
படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறந்தலைபிரியா ஆறும் மற்று அதுவே. (7)

அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கக் கருத்தைத் தான் புலவர் கூறியுள்ளார் என்பதில் ஐயமில்லை.

இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி:- தினமணி

N. Kannan

unread,
Feb 8, 2010, 8:03:08 AM2/8/10
to mint...@googlegroups.com
2010/2/8 Kannan Natarajan <thar...@gmail.com>:

> கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாடல்) பாடியவர் புலவர் பெருங்கடுங்கோ
> என்பவர்.

> "எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழல்


> உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
> நெறிப்படச் சுவலசைலசை வேறோரா நெஞ்சத்துக்
> குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! (1)
>

குறிப்பாக இரண்டு கொசுறு சேதிகள்.

சங்கப்பாடல்கள் வெறும் காதலன் - காதலி சமாச்சாரம் மட்டும் சொல்லாமல்,
அவர்கள் வாழ்ந்த சமூகத்தைப் பற்றியும் கோடி காட்டுகிறது.

கொளைநடை அந்தணீர்! என்று விளித்தளிலிருந்து வாமனன் போன்று கொடை கொண்டு
நடை பயிலும் அந்தணர்கள் வாழ்ந்து அச்சமூகத்திற்கு நன்னெறி வழங்கி வந்தனர்
என்று தெரிகிறது.

சங்கம்தான் தமிழின் உயர் விழுமியம் என்று சொல்லிவிட்டு அந்தணர் ஆரியர்
என்ற கதையெல்லாம் பின் பேசக்கூடாது ;-)

அந்த அந்தணர்கள் எந்த நெறியில் உள்ளனர்? அத்வைதிகளா? இல்லை! வைணவர்கள்.
எப்படித் தெரிகிறது. அவர்கள் ஏகதண்டி சாமியார்கள் அல்ல. உரைசால்
முக்கோல் கொண்டு வரும் அந்தணர்கள். முக்கோல் என்பது திரிதண்டி என்று
பொருள்.

உண்மையைச் சொல்லப் போனால், அந்தணர்கள் யார் என்பதற்கு definition தரும்
தொல்காப்பியர்.

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க் குரிய

என்று சொல்லிப் போகிறார். தொல்காப்பிய சூத்திரத்தின் படி அந்தணர்
என்போரே திருமால் அடியார்கள் என்று புலனாகிறது. இந்தப் பண்டைய மரபின்
நீட்சியாகத்தான் கூரத்தாழ்வான் இழையில் பலர் கூறியபடி எல்லா
பிராமணர்களும் ஏதோ ஒருவகையில் நாராயண சம்பந்தத்தை இன்றுவரை கடை பிடித்து
வருகின்றனர் என்று அறிதல் வேண்டும் (ஏன் காஞ்சி மடத்தில் நாராயண என்று
கையொப்பம் இடுகின்றனர், ஏன் ஆதி சங்கரர் நாரணனைப் பரம் என்று கொள்கிறார்
என்பதற்கெல்லாம் விளக்கம் சங்கப்பாடல்களில் அமைந்துள்ளன. இதையெல்லாம்
விவரித்து பெரியோர் எழுதுதல் வேண்டும்) இப்படியான ஒரு புரிதலுடன் தான்
கூரத்தாழ்வான் வைபவத்தில் ஸ்ரீரங்கத்து வைணவர்கள் பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, இன்றைய 21ம் நூற்றாண்டு புரிதலில் அது சைவத்திற்கு எதிர்
என்று வாதம் பண்ணினால் என்ன செய்வது? ஸ்ரீரங்கத்துப் பெரியோர்கள் சங்க
கால மரபின் படியும், வேத, வேதாந்த மரபின் படியும் பேசியுள்ளனர் என்பதை
புரிந்து கொண்டால் மனம் வருந்த அவசியமில்லை.

இதனால் திருமால் அடியாரான இம்முக்கோல் துறவிகள் சங்க காலத்துக்கும்
அதற்கு முன்னரும் தமிழ்ப் பெரு மக்களால் பெரிதும் போற்றப்பட்டனர் என்று
தெளிவாகிறது.

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages