மற்றவர்களும் அக்கேள்விக்கும் பதிலுக்கும் தம்தம் கருத்தை முன்வைக்கலாம்.
rnk
சிக்கலான பிரச்சனை - 1
மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை? - பகுதி 1
பகுத்தறிவாதி : மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை?
ஆத்திகன் : மதங்கள் கடவுளால் உண்டாக்கப்பட்டவை
பகுத்தறிவாதி : அல்ல - அவை மனிதர்களால் உண்டாக்கப்பட்டவை
தன்னை பகுத்தறிவாதிகள் என்று கூறிக்கொண்டு ‘கடவுள் மனிதனைப் படைத்தான்; மனிதன் கடவுளைப் படைத்தான்’ என்று கூறுவதை நாம் கேட்டிருக்கலாம். இது முரண்பட்ட சொற்றொடர் (contradiction in terms).
கடவுள் மனிதனைப் படைத்தான் என்று கூறும் பொழுது உயிர்குலங்களின் தோற்றத்திற்கு முன்னமே கடவுள் உண்டு என்னும் கருத்தை ஏற்றுக் கொள்கிறான். அவ்வாறு ஏற்றுக்கொண்ட பிறகு மனிதன் கடவுளைப் படைத்தான் என்று கூறினால் அது முரண்பாடு அல்லவா? இதுதான் அறியாமையில் எழுந்த பகுத்தறிவு வாதம். அதன் அடிப்படையில் எழுந்ததுதான் ‘மதத்தைப் படைத்தது மனிதன்’ என்னும் கூற்று.
‘மதம்’ என்பது என்ன? ஆன்மாவின் வாழ்க்கைக்கு ஒரு தெளிவான வழியைக் காட்டும் நெறியாகும். அதையே ஆன்மிகம் என்று கூறுகிறோம். அப்படியானால் இந்த தெளிவான வழியைக் காட்டியவர் யார்? அவ்வழியைக் காட்டியோரை சான்றோர் என்கிறோம். சான்றோர் என்பதற்கு திருக்குறளின் ‘சான்றாண்மை’ அதிகாரம் கொடுக்கும் விளக்கம் போதுமானதாகும். அகம் புறம் இரண்டிலும் ஒழுக்கம் வேண்டுமாயின் அவர்தம் ஐம்புலன்கள் அடங்கி வாழ்வோரே சான்றோர் என்னும் நிலையை அடைய வல்லவராவார்.
சான்றோர் என்பவர் மெய்யறிவு பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகையோரே ஆன்ம ஈடேற்றத்திற்கு குற்றமற்ற வழியைக் காட்ட இயலும். இதன் செயல்பாடு எப்படி நடைபெறுகின்றது?
ஆன்மாவின் இயல்பு அறிவிக்க அறியும் தன்மையுடையது;
அது எப்பொழுதும் மற்றொன்றைச் சார்ந்து நிற்கும் தன்மையுடையது.
அவ்வாறாயின் ஐம்புலன் அடங்கிய சான்றோர் தான் யார் என்பதை அறிவார். இது பசுஞானம் எனப்படும். இறைவன் திருவருள் அறிவிக்க ஆன்மா தன்னை அறிதல் நிலையாகும். தன்னை அறிந்த மாத்திரத்தில் தான் எதைச் சார்ந்து இருக்கிறோமென்ற புதிர் ஏற்படும். ஆன்மாவிற்கு இங்கே ஒரு சூன்ய நிலை உருவாகும். அந்த நிலையில் ஆன்மா தனக்கும் மேலான இறைவன் இருப்பதை அறிந்து அவனைச் சார்ந்து நிற்றல் வேண்டும். இவ்வாறு ஆன்மா பதியைச் சார்ந்து நிற்கும் பொழுது பதிஞானம் பெறுகின்றது. இதுவே குற்றமற்ற அறிவைப் பெறும் செயல்பாடு. இறைவன் மலமற்றவன் என்பதால் தூய அறிவினன் ஆகிறான். இறைவனுடன் ஆன்மாவும் கலந்து குற்றமற்ற தூய அறிவினைப் பெறுகின்றது.
இவ்வாறு தூய அறிவினனாகிய இறைவன் அறிவிக்க அவற்றை உணர்ந்து மெய்நெறிகளை வகுத்துக் கூறியவரை மெய்ஞானிகள் என்று கூறுகிறோம். இது பதியின் திருவருளையே கரணமாகக் கொண்டு செய்யும் செயலாதலால் இச்செயல் இறைவனின் செயலாகின்றது. ஆகையால், மெய்ஞானிகளால் உணர்த்திய மெய்நெறி கடவுளால் உணர்த்தப்பட்ட நெறி அல்லது சமயமாகின்றது.
ஆன்ம பக்குவம் என்பதில் வெவ்வேறு நிலைப்பாடுகள் உள்ளன. வெவ்வேறு சமய வழிகாட்டிகள் அவரவர் ஆன்ம பக்குவதிற்கேற்ப அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை அவர்தம் மக்களிடையே உபதேசித்ததால் ஆன்ம வாழ்க்கைக்குறிய நெறிகள் பலவாயின. இதுவே மதங்கள் பலவாக தோன்றுவதற்குக் காரணமாயிற்று.
இதில் இறை இருப்பை ஏற்காத நெறிகளை எங்ஙனம் கடவுள் படைத்தார் என்று கூறுவது? அத்தகையன ஆன்ம போதத்தால் அறிந்து கூறப்பட்ட நெறிகள் என்பதால் அவை மனிதனால் இயற்றப்பட்ட மதம் அல்லது நெறி என்று கூறுவதில் தவறில்லை.
மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை? பகுதி – 2
சைவ சித்தாந்தம் வேதாந்தத்தையேற்று அதற்கு மேலும் விளக்கமளித்து பதி, பசு, பாசமென்னும் முப்பொருளுக்குத் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து அவற்றின் இயல்பைக் கூறுகின்றது. இதுவே அறிவின் அந்தம் அல்லது முடிந்த முடிபு என்று வரையறுத்துக் கூறுகின்றது. இதனைக் கீழ்காணும் சிவஞான சித்தியாரின் 265 - சுபபக்க சூத்திரத்தால் அறியலாம்.
ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் உள; பலவும் இவற்றுள்
யாது சமயம் பொருள் நூல் இங்கு என்னின்
இது ஆகும் அது அல்லது எனும் பிணக்கு அது இன்றி
நீதியினால் இவை எல்லாம் ஓர் இடத்தே காண
நின்றது யாது ஒரு சமயம் பொருள் நூல்
ஆதலினால் இவை எல்லாம், அருமறை ஆகமத்தே
அடங்கியிடும் இவை இரண்டும் அரன் அடிக்கீழ் அடங்கும்.
தெளிவுரை – திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் முந்நாள் இயக்குனர் சித்தாந்த ஞாசாகரம் முனைவர் கு. வைத்தியநாதன்.
“பல சமயங்களும் அந்தச் சமயப் பொருள்களை அறிவதற்கு ஏது ஆகிய பல நூல்களும் மாறுபட்டனவாகக் காணப்படுவதால், அவற்றுள் முதன்மையான சமயம் யாது? அதன் இலக்கணம் யாது? அந்தச் சமயப் பொருளை உணர்த்தும் நூல் யாது? என்னும் தடைகள் பல எழும். அவற்றிற்கெல்லாம் விடை வருமாறு:-
கண் இல்லாத பலர் கூடிக்கொண்டு, யானையைக் கையால் தடவி தந்தமக்கு எய்திய உறுப்புகளின் இலக்கணமே யானையின் இலக்கணம் எனச் சொல்லி முரண்பட்டபொழுது, யானையின் இலக்கணம் முழுவதும் கண்ட கண் உள்ளவன் ஒருவன், ஏனையோர் கூறும் இலக்கணங்கள் எல்லாம் தான் கண்ட இலக்கணங்களில் அடங்கிய ஒவ்வோர் இலக்கணம் என்றும், அந்த இலக்கணங்களும் கொள்ளத் தக்கனவே என்றும் அறிவன்.
அதுபோல, இந்தச் சமயம் பொருந்தும், அந்தச் சமயம் பொருந்தாது என்னும் பிணக்கு இன்றி, படி முறையால் இந்தச் சமயம் அனைத்தும் அங்கமாகத் தன்னிடத்தில் காணப்பட்டு நின்றது எந்தச் சமயமோ, அந்தச் சமயமே உண்மையான சமயமாகும். அந்த சமய சாத்திரமே உண்மையான சாத்திரம் ஆகும். ஏனைச் சமயங்களோடு பிணக்கு இன்மையே அதன் இலக்கணம் ஆகும்.
அந்த சாத்திரம் எது என்றால், எல்லாப் பொருளையும் சொல்வதே சாத்திரம் என்பதன் பொருள் ஆகும். ஆகவே, அவ்வாறு எல்லாப் பொருளையும் சொல்லுவன ஆகிய முதல்வன் அருளில் செய்த வேதகாமங்களே அந்த சாத்திரமாகும். அந்த வேதாகமங்களில் எல்லாச் சமய நூற் பொருள்களும் அடங்கிக் காணப்படும். அவ்வாறு காணப்பட்டாலும், அந்த வேதகமங்களால் சிறந்து எடுத்து கூறப்படும் சமயமே உண்மையான சமயமாகும். அந்த உண்மைச் சமயம், சிவபெருமானையே தெய்வம் எனக் கொள்வதாலும், அந்தச் சமயம் சாத்திரத்தைப் பூர்வபட்சம் பண்ணுவதற்கு வேறு சாத்திரம் இல்லாமையாலும், அந்த உண்மைச் சமயம் சித்தாந்த சைவம் எனக் கூறப்படும்.”
உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டவை அல்ல. அவை அநாதி. இந்திய மெய்யியலில் வேதாந்தத்திற்கு மாறுபட்டு இக்கூற்றைக் கூறும் ஒரே சமய நெறி சித்தாந்த சைவமாகும்.
இல்லாத உயிர்களைப் படைத்து அவற்றுக்கு உடல், உலகங்களும் அதனுள் நுகர்ச்சிப் பொருட்களும் வைத்து புண்ணிய பாவங்கள் செய்ய வைத்துச் சொர்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புகிறார் என்றால் கடவுள் படைப்பையே செய்யாமல் சும்மா இருந்திருக்கலாம்தானே என்று கேள்வி எழும். ஆகவேதான் கடவுளால் படைக்கப்படாமல் அநாதியாகிய ஆன்மாவிற்கு இறைவன் உடல் உலகங்களைப் படைத்துத் தருகிறான். இது இந்திரியங்களின் வழி பெறும் அனுபவ அறிவினால் உயிர்கள் படிப்படியாக ஆணவமல மறைப்பினால் ஏற்பட்ட அறியாமையிலிருந்து முழு அறிவு நிலைக்குச் செல்வதற்கு இறைவன் கருணையால் நடத்தப்படும் ஐந்தொழிலாகும்.
ஆகவே, சித்தாந்த சைவம் கூறும் இறை நிலை இனம், மதம் கடந்த நிலையையுடையது என்பதைப் புரிந்து கொண்டால் பகுத்தறிவாதி என்று தன்னை அறிவித்துக் கொண்டு கூறும் குற்றங்குறைகள் அனைத்திற்கும் தர்க்கரீதியாக தகுந்த பதில் கிடைக்கும். சிவசிவ.