காதல் திருமண ஊற்று.

184 views
Skip to first unread message

இரவா

unread,
Dec 6, 2007, 5:50:21 AM12/6/07
to தமிழாயம், minT...@googlegroups.com

.

சங்க இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. காதல் தொடர்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் என்ன கருத்தை முன்வைக்கின்றது எனப்பார்ப்போம்.


"யாவும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தாவே"
 
இயற்கையான புணர்ச்சியற்ற நிலையில் பாடுவதாக அமைகின்றது. அதில் காதல் புணர்ச்சிக்கு எந்த வரையறையும் அவசியமற்றது என்பதையும் , அன்பான நெஞ்சங்களின் இணைப்பே போதும் என்றும் கூறி நிற்கின்றது. இதுபோன்று நற்றிணைப் பாட்டு காதலைத் தொழில் சார்ந்து விரிந்த தளத்தில் நடந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
 
"இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீலநிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலறின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரின் செம்மலு முடைத்தே"
 
- என்ற பாடல் தொழில் சார்ந்த நிலையில் எல்லை கடந்த, சாதி கடந்த நிலையில் திருமணம் நடப்பதைக் காட்டுகின்றது. அன்று பார்ப்பனியம் ஆழமாக ஊடுருவாத நிலையில், உழைப்பு சார்ந்து சாதியிருந்த போதும் , பரம்பரை சாதி உறவு உருவாகி விடவில்லை. அதாவது குடும்ப வழியாகச் சாதி தோன்றாத நிலையில் உழைப்பு சார்ந்து சாதி உருவானபோது, திருமணம் பரந்த எல்லைக்குள் நடப்பதைத் தடுத்து விடவில்லை.
 
குடும்பம் சார்ந்த உறவுதான் குறுகியத் திருமணத்துக்கான ஊற்று மூலமாகியது. திருமணத்தின் எல்லை விரிந்திருந்த போது, பெண்ணின் சுதந்திரமும் விரிந்த தளத்திலேயே இருந்தது.
 
"சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நடமாடு" என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியில் அறிமுகமற்ற ஒருவன் குடிக்க நீர் கேட்டு வந்தபோது , தாய் ஒருத்தி மகளை நீர் கொடுக்க அனுப்புகின்றாள். அவன் தனது வலக்கையைப் பிடித்தான் என்று பாடல் வரிகள் கூறுகின்றன. அவனின் முதுகைத் தாய் தடவுவதும் , தாய் அவனைக் கள்வன்,  மகன் எனக் கூறுவதும், அவர்கள் இடையேயான உறவையும் குறிப்பிடுகின்றாள்.
 
இந்தத் திருமணத்தில் ஆணே வெளியிடத்தில் இருந்து வருபவனாக இருக்கின்றான். அதாவது பெண்வழிச் சமுதாயத்தின் எல்லை ஆண் - பெண் வீடு தேடி வருவது அன்றைய மரபாக இருந்துள்ளது.
 
பெண் தனது தாய்வழிப் பகுதி நிலத்தைத் தாண்டிச் செல்வது கிடையாது. பெண்ணின் வாழ்க்கை தாய்வழி நிலத் தொடர்களிலேயே வாழ்ந்தாள்.
 
இங்கு பல வெளியிடத்து ஆண்கள் வந்து போவதும், பெண் அவர்களைக் காண்பதும் இயல்பான நிகழ்ச்சியாகும். இந்த ஆண்களில் இருந்தே பெண் ஆணைத் தெரிவு செய்கின்றாள். "மற்றிவன் மகனே தோழி" என்ற கருத்தின் மூலம் ஆணின் சமூகத் தகுதி எதையும் கோரவில்லை. உழைப்பு இயற்கை மீதே சார்ந்து இருந்ததால் , உற்பத்திக்கான மூலம் அசையாச் சொத்தாக இருந்ததால், பெண்ணின் நிலையான சொத்தை நோக்கி ஆண் வரும்போது உழைப்பைத் தவிர பொருளாதார ரீதியாகத் திருமணத் தகுதி என்பது எல்லைப்பட்டது. ஆண் , பெண்ணுக்கும் பெண்ணின் குடும்பத்துக்கும் அன்பளிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தது.
 
"சான்றோர் வருத்திய வருத்தம் தமது
வான்தோய் வன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள்
வருமுலை ஆகம் வழங்கினோ மன்றே
அஃதான்று, அடைபொருள் கருதுவார் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நற்றோர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே"
 
ஆண், பெண் வீட்டை நோக்கிச் செல்லும்போது அன்பளிப்புகள் கொடுப்பது வழக்காக இருந்தது. இதன் மூலம்தான் பெண்ணை அடையமுடியும். இது இன்றைய ஆண் வழிச் சமூக நடைமுறைக்கு எதிரிடையானது. அத்துடன் பெண்ணின் குடும்பத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அகநானூறு பாடல் வரிகள் இதைத் தெளிவாக்கின்றன.
 
"பொன்னடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையின ளிருந்த ஆய்தொடிக் குறுமகள்
நலஞ்சால் விழப்பொருள் கலநிறை பொடுபின்னும்
பெறலருங் குரையளாயின் அறந்தெரிந்து
நாமுறை தேஎம் மரூஉப்பெயர்ந் தவனொடு
இருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணித்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே விரிதிரைக்
கண்டிரன் முத்தங் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பாரவன் நமக்கே"
 
பெண்ணின் தந்தையுடன் உப்பங் கழனியில் உழன்றாக வேண்டும். மீன்பிடிக்க ஆழ்கடல் செல்லவேண்டும். அன்பைப் பலப்படுத்த வேண்டும். இந்த நிலையில் தான் பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணைத் தனக்கு தருவார்கள் என்றளவுக்கு ஆண் ஏங்குவதைப் பாடல் வரிகள் தெளிவாக்குகின்றன. அன்று , பெண் அடிமையாகி விடவில்லை. பெண் திருமணம் இன்றி கன்னியாகப் புழுங்கி சிதையவில்லை. ஆண் - பெண்ணை அடைவது என்பது , பெண்ணைத் திருப்தி செய்வதைச் சார்ந்திருந்தது. பெண்ணும் ஆணும் காதல் செய்து இருந்தாலும், அவர்கள் குழந்தையைப் பெற்று இருந்தாலும், ஆணை அந்தக் குடும்பத்தில் அங்கீகரித்து திருமணம் செய்வது என்பது பெரியவர்களின் ஆசியில் தங்கியிருந்தது. அன்று காதல் திருமணத்துக்குத் தடை விதிப்பது சமூகப் பண்பாடல்ல. குறுந்தொகை 51.4-6 இல், இதற்குச் சான்றாக உள்ளது.
 
"யானும் காதெலென யாவும்நனி வெய்யள்
எந்தையுமங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனோடு மொழிமே"
 

ஆணும் பெண்ணும் விரும்பிக் காதல் செய்யும்போது சமூகம் அதற்குத் துணையாக, பக்கபலமாக இருந்துள்ளது. இன்றைய சமூகம் போல் காதலைக் குற்றமாகக் கருதவில்லை. கலித்தொகைப் பாடல் ஒன்றில் ,


"தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து
ஒருபக லெல்லா முரத்தெழுந் தாறி
இருவர்கட் குற்றமும் இல்லையா லென்று
தெருமத்து சாய்த்தார் தலை"
 

இது மாறிவந்த சமுதாய இயல்பைக் காட்டுகின்றது. காதலை எதிர்த்து நிற்கும் குடும்பம் பின் ஒத்துக்கொள்கின்றது. பெற்றோர் தனக்குப் பிடித்தவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்வதை விட , திருமணம் செய்பவர்களின் விருப்பத்துக்கு இணங்கிபோன நிலையைப் பாடல் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு சாதி , பொருள், மதம் என எதுவும் தடைவிதித்ததில்லை.



--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages