

அமெரிக்க தமிழ்த்திருவிழா 2026
வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் தமிழர்களை பண்பாடு, மொழி, வாழ்வியல், வணிக மேம்பாடுகளின் நிமித்தம் ஒருங்கிணைக்கும் மகத்தான அமைப்பாக, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) திகழ்கிறது. பேரவையின் 39ஆவது ஆண்டு மாநாடு, அதன் வணிக அமைப்பான உலகத் தமிழர் தொழில்முனைவோர் அமைப்புடன்(FiTEN) இணைந்து, 2026 ஜூலை 2 முதல் ஜூலை 4 வரை அமெரிக்காவின் நியூசெர்சி மாநாட்டு மையத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மொழியையும் கலைகளையும் கடத்துவதுடன், உலகளாவிய தொழில்நூட்ப வளர்ச்சி, வணிக வாய்ப்புகளில் தமிழர்களுக்கான இடங்களை உறுதி செய்வதை இம்மாநாடு முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. ‘தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்’ எனும் கருப்பொருளுடன், தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் 150ஆவது ஆண்டுவிழா, கடாரம் கொண்டான் – ஆயிரமாண்டு என்பனவாகவும் விழாக்கோலம் பூண்டது.
மாநாட்டின் தொடக்க நாளான 2026 ஜூலை 2, வியாழக்கிழமையன்று காலை 8:00 மணிக்கு வணிகப்பதிவு, தொழில்முனைவோருக்கான வலைப்பின்னல் சந்திப்புகளுடன் நிகழ்வுகள் முறைப்படி தொடங்கின. முதன்மை அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண் ஒலித்ததைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் விஜய் மணிவேல், தொழில்முனைவோர் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் சின்னசாமி பாப்பனன், சாந்தி தங்கராசு, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ரெங்கநாதன், செயலாளர் முனைவர் கபிலன் வெள்ளையா ஆகியோர் தொடக்க உரையாற்றி உலகெங்கிலுமிருந்து வருகை தந்த தமிழ் ஆளுமைகளையும் ஆர்வலர்களையும் அன்போடு வரவேற்றனர்.
சிறப்புரையை, GEM மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சி. பழனிவேலு வழங்கி, சுகாதாரத் துறையில் தமிழர்களின் பங்களிப்பு, நிறுவனக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். அவரைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு உரையாடலில் டெகியான் (Tekion Corp) நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலலுவலர் ஜெய் விஜயன் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, தொழில்முனைவுத் துறையில் புதிய மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தும் என்பது குறித்துத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொழில்நுட்பம், அரசு வணிகம், சுகாதாரத்துறை சார்ந்த ஆய்வரங்குகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. செயற்கை நுண்ணறிவு குறித்தான கருத்தாடலில், ஆண்டி கிரி, எம், பரம் குமாரசாமி, ராஜகுரு மயில்சாமி, கதிர்வேல் குமாரராஜா ஆகியோர் பங்கேற்று, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மாற்றங்கள் குறித்து விவாதித்தனர். அரசுசாரா, அரசுசார்ந்த அமைப்புகளுடன் வணிகம் செய்வது குறித்த ஆய்வரங்கில் பாலாஜி பிரகாஷ் ராவ், செல்வா ஜெயராமன், சிவராமன் அன்பரசன், சுதர்சனன் சிவகுமார், சுப்பிரமணியன் முனியசாமி ஆகியோர் பங்கேற்று வழிகாட்டினர். நியூயார்க்கிற்கான இந்தியத் தூதர் திரு. பினயா ஸ்ரீகாந்த பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைச் சிறப்பித்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், இளைஞர்கள், தொழில் வல்லுநர்களுக்கான 'Youth Ask - Experts Answer' அமர்வு நடைபெற்றது. வேளாங்கண்ணி மகிமைராஜ், பிரபா சின்னசாமி ஆகியோருடன், வீரா வேணுகோபால், சிவ மூப்பனார், வேர்ட்ஸ்வர்த் அய்யாதுரை, வழக்கறிஞர் மேரி கென்னடி, வழக்கறிஞர் கவிதா இராமசாமி ஆகியோர் இளைஞர்களின் ஐயங்களுக்கு விரிவான விளக்கமளித்தனர். வி-டார்ட் (VDart) குழுமத்தலைவர் சித்தார்த் அகமது, ஃபெக்கி ஏஐ (Fekki.ai) நிறுவனர் மருத்துவர் கணேஷ் இராதாகிருஷ்ணன் இடையிலான தொழில்நுட்பக் கலந்துரையாடல் நடைபெற்றது. மாநாட்டுக்குழுத் தலைவர் மகேந்திரன் சுந்தர்ராஜ் முதலானோர் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
முதலீட்டு உத்திகள் குறித்த அமர்வில் பி.டி. சதீஷ் குமார், பிரதிபா இராமதாஸ், வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத்தலைவர் மருத்துவர் ஜி.வி. செல்வம், முருகன் வடிவேல், கோபி இராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு வளர்ந்து வரும் தொழில்களுக்கான நிதிமேலாண்மை குறித்து உரையாற்றினர். சோமர்செட் பார்மா தலைமைச் செயலலுவலர் முனைவர் வீரப்பன் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். புதிய நிறுவனங்களின் தொழில் யோசனைகளைச் சமர்ப்பிக்கும் 'Startup Pitch Showcase' நிகழ்வை சுரேஷ் தண்டபாணி ஒருங்கிணைத்தார். 'செம்மா' உணவகத்தின் உணவகக் கலைவல்லுநர் விஜய் குமாருடனான உரையாடல், புது ஆக்கங்களின் வெளியீட்டு நிகழ்வு சந்திரா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. தமிழகப் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். முதல் நாள் நிறைவாக, விருதும், தன்னார்வலர்களுக்கானப் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
மாலையின் இரண்டாம் பகுதியாக பேரவை பன்னாட்டுத் திரைப்பட விழா (FeIFF) கோலாகலமாகத் தொடங்கியது. திரைப்படவிழாக் குழுவின் தலைவர் ஸ்ரீலெட்சுமி கல்யாணசுந்தரம் வரவேற்புரையாற்றினார். பேரவைத் தலைவர் விஜய் மணிவேல், விழா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ரெங்கநாதன் ஆகியோர் திரைப்பட விழாவின் நோக்கங்களைப் பற்றி உரை நிகழ்த்தினர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர்கள் தங்கர்பச்சான், அம்ஷன் குமார், லெனின் பாரதி, முனைவர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் முதலானோர் சிறப்புப் பங்களிப்புச் செய்தனர்.
திரைப்பட விழாவில் மறைந்த முன்னணி தமிழ் இயக்குநர்களான பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற தலைப்பில் கலைமாமணி இசைக்கவி ரமணனின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வட அமெரிக்க, சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள், சாதனையாளர்களுக்கான FeIFF விருதுகள் வழங்கப்பட்டன. ஆதித்யராம் குழுமத் தலைவர் ஆதித்யராம் அவர்களுடனான கலந்துரையாடலும், மக்கள் தேர்வு விருதுகளும் வழங்கப்பட்டு முதல்நாள் விழா நிறைவடைந்தது.
மாநாட்டின் இரண்டாம் நாளான 2026 ஜூலை 3, வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மங்கல இசையுடன் தொடங்கியது. பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றிய பிறகு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் விஜய் மணிவேல், நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தலைவர் சக்தி பிச்சைமணி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ரெங்கநாதன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
காலைநேர முதன்மை மேடை நிகழ்வுகள் முழுக்க முழுக்கத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியப் பெருமைகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. 'ஒரு சிற்பியும் – இராசேந்திர சோழனும்' எனும் தலைப்பில் சோழர்காலக் கட்டிடக்கலை, வரலாற்றுப் பயணம் காட்சிப்படுத்தப்பட்டது. சிலம்பின் வரலாற்றையும் அதன் உலகளாவியப் பரவலையும் விளக்கும் கலைநிகழ்ச்சி, திருக்குறள், ஆத்திசூடி ஆகிய இரண்டின் இலக்கியச்சுவையை விளக்கும் 'அறத்தின் கொண்டாட்டம்' நிகழ்வு ஆகியவை பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தன.
நாடகத் துறையில், ஈழத்தமிழர்களின் வாழ்வியலையும் போராட்டங்களையும் பேசும் 'ஈழத்தில் எமது பொழுதுகள்' நாடகம் அரங்கேறியது. வரலாற்று ரீதியாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் வீரவரலாற்றைப் பேசும் நிகழ்ச்சி, தமிழ்க் கல்வியின் மகத்துவத்தை உணர்த்தும் நாடகம் ஆகியவை நடத்தப்பட்டன. நடன நிகழ்ச்சிகளாக 'புயல் தாண்டிய விடியல்', 'ஆளப்போறான் தமிழன்' ஆகிய எழுச்சிமிகு நடனங்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, பிரபல வித்வான் சாகேதராமன், அவரது குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 'உலகத் தமிழர் நேரம்' அமர்வில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் தேவைகள் விவாதிக்கப்பட்டன. 'கடாரம் 1000 — திசைவென்ற கடற்படை' என்ற இராசேந்திர சோழனின் கடற்படை சாதனைகளை விளக்கும் காணொளியும், தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகள் 150-ஆவது பிறந்த ஆண்டு சிறப்புக் காணொளியும் திரையிடப்பட்டன. பேரவையின் மேனாள் தலைவர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழக நேரம், அவசரகால உதவிக்குழுவான 'TamilER' நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாநாட்டின் நினைவாகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு விழாமலர் முறைப்படி வெளியிடப்பட்டது.
இலக்கியக்குழுவின் சார்பாக, அதன் தலைவர் முனைவர் அருள்ஜோதி முரளீதரன் குழுவினர் தொகுத்திருந்த புலம்பெயர்த் தமிழர்களின் படைப்புகளைக் கொண்ட, ‘மேற்றிசை வலசை’ எனும் நூல் வெளியிடப்பட, அது இலக்கிய ஆர்வலர்களின் வரவேற்பினைப் பெற்றது. மாநாட்டினை ஒட்டி, மறைமலை அடிகளார், சோழர்வரலாறு குறித்த படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டும் படைத்தும் வந்த செளந்தர் ஜெயபால், பழமைபேசி ஆகியோர், தனித்தமிழ் ஆர்வலர்களின் வாழ்த்துதலுக்கு உரித்தாகினர்.
முதன்மை அரங்க நிகழ்வுகளுக்கு இணையாக வளாகத்தின் பல அரங்குகளில் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள இணை அமர்வுகள் நாள் முழுவதும் நடைபெற்று மாநாட்டின் மதிப்பை உயர்த்தின. நியூஜெர்சி மாநாட்டு மையத்தில் சர்வதேசத் திரைப்பட விழாத் திரையிடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. ஷெரட்டன் அரங்கில் மருத்துவர்களுக்கான தொடர்மருத்துவக் கல்விப் பயிலரங்கம், 'கலைத் தேனீ' போட்டிகள், 'வாகைசூடி' போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. காலை வேளையில் உடல், மனநலத்தைப் பேணும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இலக்கியக் குழுவின் சார்பில் 'சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்' எனும் தலைப்பில் செறிந்த இலக்கியக் கலந்தாய்வு நடைபெற்றது. படைப்பு ஆளுமைகள் தமிழ்நதி, பெருந்தேவி, சாம்ராஜ், சரவண கார்த்திகேயன், லெனின் பாரதி, அம்ஷன் குமார் முதலானோருடன் பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பிற்பகல் இணை அமர்வுகளில், 'FiTEN Next Generation' என்ற இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பேரவை சதுரங்கப் போட்டிகள், குழந்தைகளுக்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை எளிமையாகக் கதைகளாகக் கூறும் 'சுட்டிகளின் கதைக்களம்' ஆகியவை இடம்பெற்றன. வட அமெரிக்கக் கல்வி வழிகாட்டுதல், பெரியார் பன்னாட்டு அமைப்பின் மனிதநேய அமர்வு, உலகத் தமிழ் அமைப்பின் தமிழர் உரிமை அமர்வு, 'அறிவியலும் தமிழும்' என்ற அமெரிக்கத் தமிழ் முனைவர்கள் சங்கமம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் தொடர்பான நிதி மேலாண்மை பயிலரங்கம் ஆகியவை நடைபெற்றன. மாலை வேளையில் மகாகவி பாரதியாரின் பெருமைகளைப் போற்றும் வகையில் இசைக்கவி ரமணனின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
இரவு உணவிற்குப் பின் தொடங்கிய மாலை நேர முதன்மை நிகழ்வில், திரையுலக ஆளுமைகளின் பங்கேற்புடன் 'திரைநட்சத்திர நேரம்' பிரம்மாண்டமாகக் களைகட்டியது. சமூகத்திற்கும் பேரவைக்கும் அரும்பணியாற்றிய முன்னோடிகளைப் போற்றும் 'அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள்' விருதுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களின் உரையில், உலக சமுதாய சேவா சங்கத்தின் அருள்நிதி ப. முருகானந்தம், சோகோ நிறுவனத் தலைவர் திரு. ஸ்ரீதர் வேம்பு, தமிழக மேனாள் அமைச்சர் திரு. கே.சி.வீரமணி, வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ. விசுவநாதன், சமூக செயற்பாட்டாளர் திரு. கு. அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய ஒன்றிய மேனாள் அமைச்சர் திரு. அன்புமணி ராமதாஸ் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டிற்காக உழைத்த தன்னார்வலர்கள் சிறப்பிக்கப்பட்டு, நிறைவாக சங்ககிரி ராஜ்குமார் அவர்களின் இராசேந்திர சோழன் பற்றிய பிரம்மாண்டத் தெருக்கூத்து நிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் விழா இனிதே நிறைவுற்றது.
மாநாட்டின் மூன்றாம், நிறைவு நாள் நிகழ்வுகள் 2026 ஜூலை 4, சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கின. தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண், மங்கல இசையைத் தொடர்ந்து, அமெரிக்க நாட்டின் 250-ஆவது விடுதலை ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் 'சுதந்திரப் பெருவெளி' சிறப்பு நிகழ்ச்சி அரங்கேறியது. அன்னைகளைப் போற்றும் கவித்துவ நிகழ்வு, அலாரிப்பு நடனத்துடன் அன்றைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
தமிழ்க்கல்வி நேரமாக அமைக்கப்பட்ட அமர்வில், குறள் தேனீ, தமிழ்த்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியல் தேனீ போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'வட அமெரிக்க வாகை சூடி' பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர். சிறுவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரான "சிறுவர் பூங்கா" இதழ் வெளியிடப்பட்டது.
சமூகப் பயன்பாடு, வரலாற்று விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வாக "வான்புகழ் வள்ளுவர்" ஆவணப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் சிறப்புரையாற்றிப் பேரவையின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டினார்.
வட அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளின் கூட்டு முயற்சியில் உருவான 'காலப் பயணம்' கலைநிகழ்ச்சி, சங்ககாலத் தமிழர் வாழ்வியலை இயல், இசை, நாடகம் வாயிலாகக் காட்சிப்படுத்திய நிகழ்ச்சிகள் மரபின் பெருமையை உணர்த்தின. மதிய உணவிற்கு முன்பாக 'தலைமுறை மாற்றம்: புலம்பெயர் வாழ்வில் தமிழர் அடையாளம்' என்ற தலைப்பில் தலைமுறை இடைவெளியையும் பண்பாட்டுப் பேணலையும் மையமாகக் கொண்ட விவாத மேடை, தமிழறிஞர் நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
மதிய உணவிற்குப் பிறகான அமர்வில், மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் அணிகளுக்கு இடையே, நாஞ்சில் பீற்றர் அவர்களின் இயக்கத்தில், இலக்கிய விநாடி வினா போட்டி நடைபெற்றது. கவிஞர் திருமிகு. உமாதேவி அவர்களின் தலைமையில் 'மனவெளிப் பயணம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கம் கவிதை விரும்பிகளுக்குச் சிறந்த விருந்தாக அமைந்தது. தொடர்ந்து 'கடாரம் கொண்டான் காணும் தமிழரின் மரபுக்கலைகள்' நிகழ்ச்சி வாயிலாகத் தமிழர்களின் பல்வேறு பாரம்பரிய கலைவடிவங்கள் ஒரே மேடையில் சங்கமித்தன. அமெரிக்கா முழுவதிலும் உள்ள தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் 'சங்கங்களின் சங்கமம்' நிகழ்வுடன் மாலை நேர அமர்வுகள் நிறைவடைந்தன.
மூன்றாம் நாளின் முதன்மை மேடை நிகழ்வுகளுக்கு இணையாகப் பல்வேறு பயனுள்ள இணை அமர்வுகள் நடைபெற்றன. காலை வேளையில் பன்னாட்டுத் திரைப்பட விழாத் திரையிடல்கள், மருத்துவக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், பேரவையின் பொதுக்குழு கூட்டம், 'TamilER' அவசரகால உதவி குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் நடைபெற்றன. வட அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைக்கும் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழக கூட்டமைப்பு நிகழ்வு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தகவல் அமர்வு, தொண்டு நிறுவன நிதி திரட்டும் நிகழ்ச்சி, அமெரிக்கத் தமிழ் செயல்பாட்டுக் குழுவின் உத்தி சார்ந்த கூட்டம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த 'Tamil AI Learning Management System' விளக்கவுரை ஆகியன வெற்றிகரமாக நடைபெற்றன.
பிற்பகல் வேளையில் 'கவிதையெனும் பெருவெளி' என்ற தலைப்பில் சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலான இலக்கிய நிகழ்வு, கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, தமிழ்முறைத் திருமணங்களை ஊக்குவிக்கும் 'அன்புடை நெஞ்சம்' முயற்சி ஆகியன நடைபெற்றன. உலகத் தமிழ்த் தலைவர்கள் பங்கேற்ற உலகத் தமிழ் உச்சி மாநாடு, சர்வதேசத் தமிழ்த்தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் உத்தமம் நிகழ்வு, கனடா தமிழ்ச்சங்க சந்திப்பு, ஈழத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, ரட்கர்ஸ் பல்கலைக்கழக தமிழ்மன்றத் தகவல் அமர்வு, குழந்தைகளுக்கான 'சுட்டிகளின் கதைக்களம்' ஆகியவை சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தன.
இரவு உணவிற்குப் பின் நடைபெற்ற நிறைவு விழா அமர்வில், மாநாட்டின் வெற்றிக்குப் பெரும் கொடையளித்த முனைவர் சுப்பிரமணியன் வீரப்பன், மருத்துவர் கோவி சுப்பிரமணியன், சோகோ நிறுவனத்திற்காக ஹூஸ்டன் சதீஷ்குமார், வி-டார்ட் குழும சித் அகமத், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் முனைவர் வி.ஜி.செல்வம் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். தமிழ்நாடு அறக்கட்டளையின் சிறப்பு நிகழ்ச்சி இடம் பெற்றது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 2027-ஆம் ஆண்டிற்கான 40-ஆவது பேரவை விழா பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2024-2026 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவின் பணிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, 2026-2028 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் எழிலன் இராமராஜன் தலைமையிலான செயற்குழு உறுப்பினர்கள், முறைப்படி உலகத் தமிழர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டனர். கடைசியாக, பாடற்கலைஞர் விஜய் பிரகாஷ் அவர்களின் எழுச்சிமிகு இன்னிசை நிகழ்ச்சியுடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39ஆவது ஆண்டு மாநாடு கோலாகலமாக நிறைவுற்றது.
-பழமைபேசி.