முருகேசு ரவீந்திரன் தமிழுக்கு முதல் வரலாற்று நாவலாக ‘மோகனாங்கி’யையும் எழுதியவர் திருகோணமலை தி. த. சரவணமுத்துப்பிள்ளை என்றும் குறிப்பிட எஸ். எல். மன்சூர் ‘அசன்பே சரித்திர’த்தையும் கண்டி எம்.சி. சித்திலெப்பையையும் முன் வைக்கிறார்.
கோவை செம்மொழி மாநாட்டு மலர் எனக்கு வீடுதேடி வந்தது.
அதன் 340 ஆம் பக்கத்தில் ‘வரலாற்றுப் புதினங்கள்’ என்ற தலைப்பில் சென்னை, சேலையூர் கலாநிதி தி. இராச கோபால் ஆய்வு செய்துள்ள ஒரு கட்டுரையில் ‘தமிழில் வரலாற்றுப் புதினங்கள் வளர்ந்த வகை’ என்ற பகுதியில் -
‘தஞ்சை - திருச்சி நாயக்கர் கால வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘மோகனாங்கி’ எனும் தலைப்பில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை 1895 ல் முதன் முதல் ஒரு வரலாற்றுப் புதினத்தை எழுதினார். வரலாற்று நாவல் வகையில் சரவணமுத்துப் பிள்ளை ஒரு தனிப்பட்ட சிறந்த முன்னோடியாக உள்ளார். இவருடைய பணியே அருங்காட்சியகக் காப்பாளராக அமைந்ததால் வரலற்றின் துல்லியம் வெளிப்படையாக அமைந்து கிடக்கிறது’ என அழகுறப் பதிவாக்கியுள்ளார்.
ஆனால், அன்னார் ‘அழகாக’ப் பதிய மறந்த அல்லது வேண்டு மென்றே விடப்பட்ட ஒரு முக்கியத் தகவல், ‘அவர் ஓர் இலங்கையர் - அதுவும் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருகோணமலை மைந்தர்’ என்பதாகும்.
பொதுவாகவே இச் செம்மொழி மாநாட்டு மலரில் (சுமார் 450 பக்கங்கள்) ‘முனைவர் கா. சிவத்தம்பி’ ‘இலங்கை திரு பாலகுமார்’ (பேரா. மெளனகுரு மாணவர்?) ஆகிய இரு இலங்கையரைத் தவிர வேறெவரினதும் ‘இருப்போர் இறந்தோர்’ குறிப்புகளோ தகவல்களோ கட்டுரைகளோ கவிதைகளோ கிடையாது. 152 பேரினது பங்களிப்புகளிலும் இலங்கையர் மிகவும் கவனமாகத் தவிர்க்கப் பட்டுள்ளனர். அந்தோ பரிதாபம் அருட் தந்தை கலாநிதி தனிநாயகம் அடிகளார், விபுலானந்த அடிகளார், பேரா. ம. மு. உவைஸ் போன்றோர்! சரி, இந்த இருட்டடிப்பை ஒரு பக்கம் வைத்து விடுவோம்.
தமிழில் முதல் வரலாற்றுப் புதினம் என்ற தலைப்லயே ஒரு புறம் வைத்துவிட்டு தமிழுக்கு முதல் புதினம் எது என்பதை வைத்துப் பார்த்தால் புதினங்களின் ஆரம்பகாலமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதாவது 134 ஆண்டுகளுக்கு முன்பு 1900 ஆம் ஆண்டு பிறக்கும் வரையில் வெளியான முதல் ஏழு தலைப்புகள் இவை:
1. பிரதாப முதலியார் சரித்திரம் 1876 அல்லது 1879 மாயவரம் (இப்போதைய மயிலாடுதுறை) வேதநாயகம் பிள்ளை.
2. அசன்பே சரித்திரம் 1885 கண்டி முகம்மது காசிம் சித்தி லெப்பை மரக்காயர்
3. சுகுண சுந்தரி – 1887 வேதநாயகம் பிள்ளை (அவரது 2 வது புதினம்)
4. பிரேமகலாவதியம் – 1893 ஸ¥. வை. குருஸ்வாமி சர்மா.
5. மோகனாங்கி – 1895 தி. த. சரவணமுத்துப்பிள்ளை
6. கமலாம்பாள் சரித்திரம் 1893 அல்லது 1896 பி. ஆர். ராஜம் அய்யர் என்கிற சிவசுப்பிரமண்யம்.
7. பத்மாவதி சரித்திரம் – 1898 அ. மாதவையா.
மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் பிரதாப முதலியார் சரித்திரத்தை நாவல் இலக்கணப் பண்புக்குள் அடக்க முடியாது என வாதிட்டு கமலாம்பாள் சரித்திரத்தை முன்னிலைப்படுத்துவோரும் உண்டு.
அது தனி விவகாரம் அதனை இங்கே தவிர்த்துவிட்டு ஏழிலும் எதெது வரலாற்றுப் புதினங்கள் எனப் பார்க்கும் பொழுது உள்ளங்கை நெல்லிக்கனியாக ‘அசன்பே சரித்திர’மும் (1885) ‘மோகனாங்கி’யும் (1895) பளிச்சிட்டு எது முந்தியது என்பதைச் சுட்டி நிற்கின்றன.
ஆனால் தமிழில் முதல் வரலாற்றுப் புதின விடயத்தில் புதியதொரு வெளிச்சமும் சில காலங்களுக்கு முன் ஒளி காட்டி நின்றது. அதனையே நான் புதையலாகப் பெற்றேன்.
அதற்கு முக்கிய சூத்திரதாரிகள் (ஆய்வாளர்கள்) இருவர்.
ஒருவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி பீ. மு. அஜ்மல்கான்.
மற்றவர் கீழக்கரை கலாநிதியும் ஆன்மிக அறிஞர் திலகமுயான தைக்கா ஸ¤ ஹைபு ஆலிம்.
முதலாமவர் 1985 இல் வெளியிட்ட ‘தமிழகத்தில் முஸ்லிம்கள்’ ஆய்வு நூலின் 79 ஆம் பக்கத்தில் தந்துள்ள தகவல் இப்படி உள்ளது.
‘ஹசன்பே’ சரத்திரம் என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்தி லெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே ‘தமிரப் பட்டணம்’ நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆகையால் அதுவே முதல் நாவல் எனவும், தமிழ் மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே எனவும் உறுதியாகிறது. அரபி லிபியில் எழுதப்பட்டாலும் அந்நாவலின் மொழி தமிழே ஆகும்.
இந்த ஆறேழு வரி ஆய்வுக்குறிப்பில் பாரிய சில செய்திகள் அடங்கியுள்ன.
‘தாமிரப் பட்டணம்’ – அறபி லிபியில் எழுதப்பட்ட நாவலின் மொழி தமிழ் என்பவையெல்லாம் புதினங்களை ஆராய்வோருக்கு அதிசயத்திற்குரிய தகவல்கள்.
வாரமஞ்சரி அபிமானிகள் - அதுவும் ‘கூராயுத’ தீவிர வாசகர்கள் கொஞ்சம் என்னுடன் வரலாற்றில் முத்துக்குளிக்க வரவேண்டும்.
தமிழகத்தின் அந்தத் தென்பகுதி (இராமநாதபுரம் - இராமேஸ்வரத்திற்கு அண்மையானது) ஊரான கீழக்கரை மக்களில் பெரும்பாலானோருக்கு 18 – 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் எமதிலங்கை இரண்டாவது தாயகம்.
நன்றி: தினகரன் வாரமஞ்சரி, ஆகத்து 8, 2010
அன்புடன்
சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com