1) நட்டு முத்து நாதஸ்வரம் கொட்டலங்காரம்; அதைச் சுற்றி தோப்பலங்காரம்; தோப்புக்குள்ளே குடியிருக்கும் சிமிக்கிப் பண்டாரம்.---அது என்ன ?
2)இரண்டு வீட்டுக்கு ஒரு மோடு .---அது என்ன?
3)கருப்பாய் சுருண்டு இருக்கும்- கயிறும் அல்ல; பழுத்தால் உதிர்ந்து விடும் -இலையும் அல்ல ---அது என்ன?
4)வளைவான; சுருளுவான்; ஒடிய மட்டும் மாட்டான் ---அது என்ன?
5)அடுக்கி வைத்த அழகுச் சிற்பங்கள்; அடி விழுந்தால் அழகு போகும் ---அது என்ன?
6)ஐந்து பேரில் இளையவன்; கலியாணத்துக்கு மூத்தவன் ---அது என்ன?
7)அஞ்சு வீட்டுக்கு ஒரு முற்றம் ---அது என்ன?
8)அஞ்சு குஞ்சு மரம்; அழகான தென்னை மரம்; நிற்க நிழலுமில்லை; தைக்க இலையுமில்லை ---அது என்ன?
9)தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவிப் பாயுது ஒரு கப்பல் ---அது என்ன?
10)ஆட்டு மாட்டுக்கு அடங்காத தண்ணி; தொண்டைமான் குதிரைக்குத் தொடையளவு தண்ணி ---அது என்ன?
11)முதுகிலே மூட்டை தூக்கி மூனு மணிக்கி முழந்தூரம் போவான் ---அவன் யார்?
12)சங்கீத வித்துவான்; சமயத்தில் ஊசி போடுவான் ---அவன் யார்?
13)வளைவான; நெளிவான்; வயிறு கலங்க வைப்பான் ---அவன் யார்?
14)பறக்கப்பட்ட பச்சியில் பெய்யாத மழை பெருமழை; பெய்தாலும் அந்தப் பச்சிக்கு சிறகு வளையாமல் இருக்கும்---அது என்ன?
15)வாயிலிருந்து நூல் எடுப்பான்; மந்திரவாதி அல்ல; எதிரெதிரே தாவுவான்; குரங்கும் அல்ல; வலை விரித்துக் காத்திருப்பான்; வேடனும் அல்ல ---
அவன் யார்?
16)உத்தியோகம் இல்லாமல் ஊர் சுற்றி அலைபவன் ---அவன் யார்?
17)அரிவாள் இல்லாமல் புல்லறுத்து, கொடியில்லாமல் கட்டுக் கட்டி, ஏணி இல்லாமல் வீடு மேய்ந்தவர் ---அவர் யார்?
18)ஆயிரம் பேர் சேர்ந்து கட்டிய மண்டபம்; ஒருவன் கண் பட்டு உடைந்தது ---அது என்ன?
19)மரக்கிளையைத் தலையில் தூக்கியபடி துள்ளி ஓடுவார் ---அவர் யார்?
20)நாலு மரம் பிடித்து வர; துடுப்பு துளாவி வர; துரை மகன் ஏறிவர...---அது என்ன?
21)ஏழு மலைக்கும் அந்தாண்ட எருமைக்கடா கத்துது ---அது என்ன?
22)கையில் படுவான்; காலில் படுவான்; கண்ணில் மட்டும் படமாட்டான் ---அது என்ன?
23)நான் சென்ற ஊர் நான்கெழுத்து ஊர்;
முதல் எழுத்து நீரில் உண்டு; சீரில் இல்லை;
இரண்டாம் எழுத்து கலத்தில் உண்டு களத்தில் இல்லை;
மூன்றாம் எழுத்து கிளியில் உண்டு; புளியில் இல்லை;
நான்காம் எழுத்து பொரியில் உண்டு; பொறியில் இல்லை;
நான் சென்ற ஊர் எந்த ஊர்?
24)ஒரு கரண்டி மாவுல ஊரெல்லாம் தோசை ---அது என்ன ?
25)குப்பை தின்பான்; கூளம் தின்பான்; தண்ணியக் கண்டா செத்தும் கிடப்பான்--- அது என்ன?
26)மதுரை சமுக்காளம்; மடிக்கவே முடியல ---அது என்ன?
27)எட்டிப் பார்த்தால் எட்டும் தூரம்; நடந்து பார்த்தால் போகப் போகத் தூரம்--- அது என்ன?
28)வியப்பான போர்க்களத்தில் வீரர் எவரும் இல்லை; பல வண்ணக் கோலத்தில் படுத்துக் கிடக்கிறது; எடுத்துப் போர் புரிய எவரும் இல்லை--- அது என்ன?
29)ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பேன்; நாளுக்கு ஒருமுறை இறப்பேன்--- அது என்ன?
30)மண்டையைத் திருகினால் கண்ணீர் விடுவான்--- அவன் யார்?
31)இருட்டு வீட்டில் குருட்டு ராஜா --- அது என்ன?
32)காடு வெள்ளைக்காடு; கானம் கருங்கானம்; கையில் விதைத்து வாயில் பொறுக்குவது ---அது என்ன?
33)அம்மா வயிற்றில் ஆடும் பிள்ளை ---அது என்ன?
34)வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும்--- அது என்ன?
35)குட்டை மாமியார்; குச்சி மருமகள்; தீராத சண்டை; தினமும் மோதல் ---அது என்ன?
36)ஒல்லியான உடம்புக்காரன்; ஊசி மூஞ்சிக்காரன்;
ஒத்தக் கண்ணுக்காரன்; அவன் அழும் கண்ணீரை
இந்த ஊர் அறியும்; பார் அறியும்--- அது என்ன?
37) காட்டில் பிறப்பான்; வீட்டில் சாவான்--- அது என்ன?
38)தட்டையான பலகை மீது குட்டையான வீரன் --- அது என்ன?
39)ஆயிரம் கண் உண்டு; அசந்து தூங்க இடம் உண்டு ---அது என்ன?
40)பல்லிருந்தும் கடிக்கத் தெரியாதாவன்---அவன் யார்?
(விடைகள் அடுத்த மடலில் )
தொடரும்
கண்மணி