தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடுகள் – வரலாற்று நோக்கில் களவேள்வி குறித்த ஆய்வு – அகத்தியன் சிவமணி

93 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 14, 2024, 7:10:57 AM10/14/24
to மின்தமிழ்
தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடுகள் – வரலாற்று நோக்கில் களவேள்வி குறித்த ஆய்வு

  – அகத்தியன் சிவமணி


முன்னுரை :
பண்டைக்கால மொழி மற்றும் பண்பாட்டு மரபை அறிந்துகொள்ளத் தொல்காப்பியம் பெரும் ஆவணம். உலகில் மானுடனாய் பிறந்த அனைவருக்கும் பொதுவானது காதலும் வீரமும். தொல்காப்பியர் காதலுக்கு அக இயலும் வீரத்திற்குப் புற இயலும் என இரண்டிற்கும் இலக்கணம் வரைந்துள்ளார். புறத்திணை இயலில் வாகைத்திணை முக்கியமானதாகும். வாகை எனும் சொல்லுக்கு “வெற்றி” எனப் பொருள்படும். வாகைத்திணையில் இடம் பெரும் களவேள்வி சங்ககாலத்தில் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என வரலாற்று நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொல்காப்பியரின் வாகைத்திணை:
சங்க இலக்கியங்கள் எழுந்த காலம் என்பது மக்கள் உணவு திரட்டி உண்ணும் நிலையிலிருந்து, உணவு உற்பத்தி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலம். அரசுகள் வளமான நிலங்கள் மற்றும் வணிகத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்த காலம். தொல்காப்பியரின் புறத்திணைக்கோட்பாடுகள் அவற்றை பிரதிபலிப்பவனாகவே உள்ளன. திணை என்பது ஒழுக்கம்[1] . வாகை எனும் சொல்லிற்கு வெற்றி எனப்பொருள். ஒவ்வொரு துறையிலும் மாந்தர் தம் ஆற்றலை வெளிப்படுத்தி எய்தும் வெற்றிச்சிறப்பினை கூறுவது வாகைத்திணை[2]. இத்திணைக்குரிய சிறப்புகளை இரு நூற்பாக்களில் தொல்காப்பியர் கூறியுள்ளார்[3]. வாகையின் வகை 18 எனவும்  அறத்திற்கு 9 எனவும், மறத்திற்கு 9 எனவும் வகுக்கிறார்[4].

மறத்திற்கு உரியதாகக் குறிக்கப்படும் 9 உம் போரைக் குறிப்பன.
குளிர் மற்றும் கோடைக் காலத்தில் போர் விருப்பம் உடையோர் பாசறையில் இருந்தது போர்க்கடமை ஆற்றுதல்.
ஏர் உழவன் விளைநிலத்தில் செய்யும் செயல்களும், போர்வீரனின் போர்க்களத்தில் நிகழும் செயல் (களவழி- களத்தில் நிகழும் செயல்கள்)
வென்ற அரசனின் தேர் முன் நடைபெறும் குரவைக் கூத்து
அவன் தேரின் பின் சென்று மறவர், விறலியர் ஆடிய பின் குரவைக் கூத்து.
பெரும்பகையை தடுக்கும் வீரனின் வேல் ஆற்றல்.
பெரும் பகைவரை தடுக்கும் ஆற்றல்
நிலையற்ற வாழ்வின் வீரவல்லமையை பாடுதல்
பகைவரும் நாணும்படி வஞ்சினம் கூறி, தம் உயிரைக் களப்பலியாக (அவிப்பலி) வழங்குதல்
பகைவரை பகை நட்பாகக் கொண்டு ஒழுகும் தன்மை
மறத்திற்கு உரியதாகக் குறிக்கப்படும் ஒன்பது வகைகளில் “மறக்களவழி” முக்கியமானதாகும்.  போர்க்களத்தில் நடைபெறும் செயல்களைக் குறிப்பதாக மறக்களவழி உள்ளது. இதை இளம்பூரணர் “ஏரோர் களவழி கூறுதலும் அன்றி போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும்” என உரைப்படுத்தியுள்ளார். மறக்களவழி களம் பாடுதல், களவேள்வி பாடுதல் என இருவகைப்படும். இதில் களவேள்வி என்பது பிராமணரின் வேத யக்ஞமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால்,  களவேள்வி என்பது தொல்குடி சமூகத்தின் உற்பத்தி பங்கீட்டின் நீட்சியே ஆகும்.

தொல்குடிகளின் உற்பத்தி பங்கீடு – பாதீடு :
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பால், பாதீடு எனும் சொல் தொல்குடி வாழ்க்கையில் நிலைபெற்றிருந்த சமபங்கீடு முறையினைச் சுட்டுகிறது. பாதீடு எனும் சொல்லின் பொருள் பங்கீடு என்பது ஆகும்[5]. பால் என்பது "பால்வரை தெய்வமாக" உருவாயிற்று[6]. ஆய்வாளர் கைலாசபதி கிரேக்க பால்வரை தெய்வமான Moyira -வை ஒப்பீட்டு ஆய்ந்து எழுதி உள்ளார்[7]. உலகின் பல்வேறு தொல்குடி மக்களிடம் இந்த உற்பத்தி பங்கீடு முறை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. வேதகால ஆரியரிடமும் இம்முறை "யக்ஞம்" என்ற பெயரில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் பாதீடு செய்தது குறித்த பாடல்கள் உள்ளன. அவற்றில் குடி வாழ்க்கையோடு தொடர்புடைய சில பாடல்களும் உள்ளன.
     “வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
      புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
      குடி முறை பகுக்கும் நெடு மலை நாட" – (நற்றிணை 336:4-6)

     “கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை
      தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
      காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
      ஓங்கு மலை நாடன், நின் நசையினானே" – (நற்றிணை 85: 8-11)
இவ்விரு சங்கப்பாடல்களிலும் பாதீடு செய்தவள் பெண். இவள் குழுவின் தலைவியாக இருக்கலாம். அவள் "கொடிச்சி" எனக் குறிக்கப்படுகிறாள். தொல்குடி சமுதாயத்தில் உற்பத்திப் பொருளின் மீதும், அதனைப் பகிர்ந்தளிப்பதிலும் தாயின் ஆதிக்கம் இருந்ததை இது உணர்த்துகிறது. வெட்சி குறித்துக் கூறும் தொல்காப்பியர் பாதீட்டினை ஒரு துறையாகக் கூறுகிறார்[8].

அடித்துக் கொண்டு வந்த மாட்டினை மறவர்களும் மற்றவர்களும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வைக் குறிக்கும் பாடல் அகநானூற்றில் உள்ளது[9]. பண்டைய நாளில் பாதீடு என்பது ஆநிரையைக் கவரும் போது மட்டுமின்றி பிற பொருட்களையும் கவர்ந்த போதும் நடைபெற்றது[10]. மேலும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகளில் தலைவி அறுவடை சிறப்பாக நடைபெற்று நெல் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும், பசுக்கள் நிறையப் பால் தர வேண்டும் என்றும் அதன் மூலம் தான் கொடுக்க நிறைய இரவலர் வர வேண்டும் என வேண்டுகிறாள்[11].

சங்ககால வேந்தர், வேளிர் எழுச்சி பெறுகையில் வாணிகமும் வாணிகப் பெருவழிகளும் சிறப்புற்றன, இருப்பினும் மக்கள் தொல்குடிவாழ்வின் பாதீடு முறையைப் பின்பற்றினர். இன்னும் பொங்கல் பண்டிகையின் போதும் நாட்டார் தெய்வ வழிபாட்டின் போதும் இப்பாதீடு முறையைக் காணலாம்.

வேதங்களின் யக்ஞம் :
நெருப்பின் உதவியுடன் ஆரியச் சமூகம் எந்த புதிய உற்பத்தி முறையில் பிரவேசித்ததோ அதுவே யக்ஞம். யஜ்னா (தமிழ் வடிவம் –யக்ஞம்) என்பதன் பொருள் “அவர்கள் ஒன்று கூடி உருவாக்கினார்கள்” என்பதாகும்[12]. பிரம்மன் ஆரிய மனிதனின் கம்யூன் ஆகும். யக்ஞம் அதன் பொருளுற்பத்தி முறை[13]. பிற்கால யாகங்களில் இருந்து வேறுபட்ட முறையில், உழைப்பின் பயனாக யக்ஞ பலன் ஒரு குழுவின் பொதுப்பலனாக இருந்தது. ஒவ்வொருவர்க்கும் சமமாக வினியோகிக்கப்பட்டது. ஆரியரின் உற்பத்தி பங்கீட்டில் பெண்களும் பங்கெடுத்தனர்[14]. இது பிற்கால யாகசாலைக்கு முரணான விடயம்.

ஆரியர்களின் "ஹேதர்" எனும் சடங்கு தெய்வங்களையும் மனிதர்களையும் ஒன்றுகூடும்படி அழைப்பது. அதிகாலையில் ஆற்ற வேண்டிய இச்சடங்கில் குழு உறுப்பினர்கள்  பிரம்மா எனும் குழுத்தலைவன் மேற்பார்வையில் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச்  செய்து தம் உழைப்பை அளித்தனர். உற்பத்தி அனைத்தும் (சோமபானம், இறைச்சி, மாவு மற்றும் பல) யக்ஞ மேடைக்குக் கொண்டு வரப்பட்டு, தெய்வம் மற்றும் இறந்த முன்னோர்க்குப் பங்கு அளிக்கப்பட்டு மீதமிருப்பவை (ஹூதசேஷம்) குழு உறுப்பினர்க்கு வழங்கப்படும். தினசரி ஹவனம் என்பது கூட்டாக உற்பத்தி செய்த உணவை கம்யூன் முழுமைக்கும் வினியோகிக்கும் முறையேயாகும். எனவே ஹவனமும் யக்ஞத்தின் பகுதியே. இது ஆரியரின் உற்பத்தி பங்கீடு ஆகும். இங்கு தாய்க்கு முக்கியத்துவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொ.ஆ.மு 1600 வாக்கில் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்த ஆரியர்கள் தங்களின் நிலையை சமூகத்தில் உயர்த்திக்கொள்ளவும், அதை நிலைப்பெறச்செய்யவும் பிறரின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து யாகம் என்ற முறையைப் பின்பற்றினர். கூட்டு  உழைப்பின் பங்கீடாக இருந்த யக்ஞம் பிராமணரின் மதிப்பை உயர்த்த தேவையற்ற உயிர்ப்பலிகளைச் செய்யும் யாக முறையாக மாறியது. யாகத்தால் மேல்தட்டு மற்றும் ஆளும் வர்க்கத்தின் பாவம் நீங்கும் எனும் மாயையின் ஊடாக பெரும் பலனைப் பிராமணர் அனுபவித்தனர். கிட்டத்தட்ட எல்லா வகை விலங்குகளும், பறவைகளுமே இத்தகைய யாகங்களில் கொல்லப்பட்டது.

கோசல அரசன் நாட்டின் பசேனாதிபதியும், மகத அரசன் பிம்பிசாரனும் பழங்குடிகளோடு நடத்திய போரில் வெற்றி பெற வேண்டி பெரும் செலவில் யாகம் நடத்தினர். பல கிராமங்களைப் பிராமணர்க்குக் கட்டணமாக அளித்தனர். பல கால்நடைகள் உழைக்கும் மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டுப் பலி இடப்பட்டன[15].  அரக்கத்தனமான உள்நோக்கத்துடன் யாகங்களில் செய்யப்பட்ட எல்லையற்ற படுகொலைகள், பொருளாதாரத்திற்கு அடிப்படையான வாழும் வழிகள் எல்லாம் நீர்த்துப்போகச் செய்யத் தொடங்கியது. இவ்வாறான உயிர்ப்பலிகளைத் தடுக்கும் நோக்கம் கொண்டே அவைதிகச் சமயங்கள் எழுந்தன (சைனம், பௌத்தம், ஆஜிவிகம்). பின் அசோகனால் உயிர்ப்பலி தடைசெய்யப்பட்டது (முழுமையாக அல்ல)[16]. பின்னர் கால ஓட்டத்தில் உயிர்ப்பலியைக் கைவிட்டு இன்று நாம் காணும் ஹோமம் எனும் வடிவில் மக்களைச் சுரண்டுகின்றனர்.

தமிழின் வேள்வி :
வேள்வி எனும் தமிழ்ச்சொல் "வேள்" எனும் சொல் மூலம் கொண்டு பிறந்தது. இதற்கு திருமணம், விருப்பம் முதலிய பொருள் உண்டு[17]. மேலும் இச்சொல்லிற்கு கொடை, மணம், பூசை முதலிய பொருள்களும் உள்ளன.
[ வெள் -> வேள் -> வேள்வி ]
திரவிட மொழிகளான மலையாளம் மற்றும் தெலுங்கில் வேள்வி என்றும், கன்னட மொழியில் பேலுவ எனும் பெயரில் மேற்கண்ட பொருட்களைத் தருகிறது[18].

விரும்பிச்  செய்யும் பலவினைகளைக் குறிப்பதாக பாவாணர் குறிப்பிடுவார். திருமணம்[19], விருந்தினர்[20], தெய்வம்[21], பேய்களுக்குப் படைப்பு[22]  அல்லது கொடை அளித்தல் போன்ற வினைகளுக்கு இச்சொல் பயன்பட்டுள்ளது. போரின் நடைபெறும் போது போர்க்களத்தின் கொடூர நிலையை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தன் உரையில் பின்வருமாறு விளக்குகிறார்:
"நெற்கதிர்களைக் கொன்று களத்திற் குவித்துப்போர் அழித்து, அதரிதிர்த்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர் பரிசிலர்க்கு முகர்ந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறு, அரசனும் நாற்படையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண் மடலோச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச் சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனா வேண்மாள் இடத்தாழந்தட்ட கூழ்ப்பலியை பலியாகக் கொடுத்து எஞ்சி நின்ற யானை, குதிரைகளையும் ஆண்டு பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகர்ந்துகொள்ளக் கொடுக்கலாம்”[23].

இது குறித்து ஆய்வாளர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் "பழந்தமிழர்கள், இரண்டு செயல்களையும் தங்களது வாழ்வில் தவறாது கடைப்பிடித்து வந்துள்ளனர். தங்களின் நிலையான வாழ்வுக்கும், நாட்டின் வளத்திற்கும் போர், அறுவடை ஆகிய இரண்டும் அடிப்படை எனக்கொண்டு வாழ்ந்தனர்" என உரைக்கிறார்[24]. இக்காரணம் கொண்டே தொல்காப்பியரும் அறுவடை மற்றும் போர் நிகழ்வை ஒப்புமை படுத்துகிறார் போலும்.

பேய் மகளிர் :
தசையும் கொழுப்பும் குருதியும் குடலும் உண்டு குரவை கூத்தாடும் பேய் மகள் அச்சம் தரும் வகையில் சங்க இலக்கியத்தில் இடம்பெறுகிறாள்[25]. இப்பேய் மகளிர் உண்டு மகிழப் போரில் தோற்கடிக்கப்பட்டு மாண்டு போன வீரரின் தலையை அடுப்பாகவும், அறுக்கப்பட்ட கைகள் தோள் மூட்டுடன் சேர்த்து அகப்பையாக உபயோகப் படுத்தப்படும்[26]. பேய் மகளிர் தமக்கு மடை (நரமாமிசம்) கொடுத்த வெற்றி வீரனைப் புகழ்ந்து போர்க்களத்தில் பிணங்களுக்கிடையே ஆடியதாக நம்பப்படுகிறது. எல்லா பேய்களும் பங்கு பெறும் நடனமாக இது இருந்தது[27]. இவ்வாடல் "துணங்கை" எனக் குறிக்கப்படுகிறது.

இப்பேய்மகளிர் குறித்து ஆய்வாளர் க.கைலாசபதி தம் கட்டுரையில் "பேய்மகளிர் உண்மையான மகளிரே. ஆனால் பெண்தெய்வ வழிபாட்டிற்காக பிணந்திண்ணிகளாகவும் இருந்தனர்" எனக் குறிப்பிடுகிறார்[28]. அதே வேளை வேளாண் வளர்ச்சியும், இரும்பு பயன்பாடும் புழக்கத்தில் இருந்த சங்க காலத்தில் நரமாமிசம் உண்ணும் ஒரு பிரிவினர் வாழ்ந்திருப்பரா என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

புராதன உலகில் தாய்த் தெய்வம் மந்திரச் சடங்கு வழிபாட்டின் வழியாக வழிபடப்பட்டது. மந்திரமும் சடங்கும் பெண்களுக்குரியதாக இருந்தது நோக்கத்தக்கது[29]. புதியதொரு மனித உயிரை உலகிற்குத் தருபவளாகக் காணப்பட்ட தாய்,  அசாதாரண சக்தி படைத்தவளாக இருந்தமையால் பெண்ணிடமே அந்த மந்திரசக்தியும் இயல்பாகக் குடி கொண்டது. தாய்த்தெய்வ வழிபாடு உலகெங்கும் ஒரு காலத்திலே தோன்றியதற்குரிய காரணமே, பெண்களைத் தலையாக மாந்திரீகராகவும் ஆக்கிவைத்தது. புராதன உலகின் மந்திரம் மற்றும் சடங்குகளைச் செய்த பெண்களின் உருவகமாகப் பேய் மகளிர் சங்ககால புலவர்களால் உருவகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இது பின்னாளில் வளர்ந்து பரணி இலக்கியம் ஆக வளர்ச்சி பெற்றது. அதே வேளை சங்ககாலத்தில் தாய்வழிச்சமூகம் மாறத்தொடங்கியது. சங்ககாலத்தில் ஆண்வழிச்சமூகம் அறிமுகமாகியதாகவும், அதே வேளை தாய்வழிச்சமூகம் தொடர்ந்தது எனவும் ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[30].

களவேள்வி :
போரில் வெற்றி பெற்ற அரசன், வெற்றிக்களிப்பில் போர்க்களத்தில் தன்னை நாடிவரும் இரவலர், பாணர், விறலியர், பிராமணர், புலவர் போன்றோருக்குப் பரிசுகள் வழங்குதல் மற்றும் போரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீரர்களுக்கு, போர் எனும் உற்பத்தி முறையில் கிடைத்த கொள்ளைப்பொருட்கள், வளநிலங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தளிக்கும் பாதீடு முறையே களவேள்வி ஆகும். போரில் வென்ற நாட்டு வீரர்களுக்குக் கொள்ளை பொருட்களில் பங்கு வழங்கப்பட்டமை சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது.
     புறநானூறு 285:15-17 பாடல் வரிகளில் வெற்றியில் கிடைத்த வளமான நிலங்கள், போரில் பங்கு கொண்ட ஒரு சிலருக்கு ஒதுக்கிப்  பங்கிட்டு தரப்பட்டுள்ளன. இவ்வாறு வளமான கழனிகள் வெற்றிக்குப்  பின்னர் வேறு சிலருக்குப்  பங்கிட்டுக்  கொடுக்கப்பட்டதால், போரில் கலந்து கொண்ட சீறூர் மன்னனுக்கு வளமில்லாத கரம்பை சீறூர் மட்டுமே கிடைத்திருக்கிறது[31].
     அகநானூறு 144:18-19 பாடல் வரிகளில் போர் வெற்றியில் கிடைத்த செல்வங்கள் பற்றிக் கூறப்படுகிறது[32].
     கலித்தொகை 148:23-24 பாடல்வரிகளில் போர் வெற்றியின் வாயிலாக நிலங்கள் பெற்றதும் அதனைக் காதலி மகிழ்வுடன் வெளிப்படுத்தியதும் தெரிகிறது[33].
     புறநானூறு 297:4-8 பாடல்வரிகளில் போரில் வென்ற மன்னருக்குத் துணைபுரிந்த குழுக்கள் அல்லது சீறூர் மன்னர்கள் வயல்கள் நிறைந்த வளமான மருத நிலங்கள் (தண்ணடை) வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்[34].
     புறநானூறு 312 பாடல், ஒரு ஆண்மகனின் கடமையாகப் போரில் கலந்து கொண்டு வெற்றி ஈட்டி வேந்தனிடமிருந்து வள நிலம் பெறுதல் வேண்டும் என உரைக்கிறது[35].
     புறநானூறு 287:9-10 பாடல் வரிகளும் போரில் கைப்பற்றப்பட்ட நிலம் பங்காக அளிக்கப்பட்டதை உரைக்கிறது[36].
     மலைபடுகடாம் 86-89 பாடல்வரிகளில் வேல் கொண்டு வென்ற வீரர்க்கு அரசன் கடமை செய்தலைக் குறிக்கிறது[37]. மேற்கண்ட உதாரணங்கள் மூலம் போருக்குப்பின் போரில் வென்ற வீரர்களுக்குப் போரின் உற்பத்தியின் பங்கீடாக நிலம் மற்றும் செல்வங்கள் வழங்கப்பட்டமை தெரிகிறது.

களவேள்வி என்பது வெற்றியைக் கொண்டாடுதலாகவே காணப்படுகிறது.

போர் வெற்றியின் பயனாகக் கிடைத்த கொள்ளை பொருட்களையும் செல்வங்களையும் பரிசிலாகப் பெற வந்தவர் அனைவரும் தத்தமது திறனை வெளிப்படுத்தி பரிசில் பெற்றிருப்பர். தம் திறனை வெளிப்படுத்தி வென்ற அரசனைப்  புகழ்ந்து ஆடிப்பாடி புலவர்கள், பாணர்கள், விறலியர் முதலியோர்  தம் உழைப்பின் பயனாகப் பரிசில் பெற்றுச் செல்வர். பாணர்கள் வழமையான பொற்றாமரை பூவை கொடையாகப்பெற்றனர்[38]. யானைகள், சிற்றூர்கள் முதலியவை பாணர்க்கு வழங்கப்பட்டமை தெரிகிறது[39]. ஔவையார் போன்ற சில புலவர்களும் கூட பாணர் என்பது குறிப்பிடத்தக்கது[40].

     பதிற்றுப்பத்து 76:7-9 பாடல் வரிகளில் பாசறையில் தங்கி இருந்த அரசன் முற்பகலிலும் பிற்பகலிலும் தம்மிடம் இரந்து வந்த வறியவர்க்குக் கொடுத்தலில் குறையாமல் செல்வத்தையும், பகைவரிடம் இருந்து கைப்பற்றிய குதிரைகளையும் மிகுதியாகப் பரிசளித்தமை குறிப்பிடப்படுகிறது[41].

அதே  வேளை, வேதமந்திரங்களோடு தொடர்புடைய, வேறு உற்பத்தித் திறனோ உற்பத்தி கருவிகளை உருவாக்கிக்கொள்ளும் கற்றல் ஆற்றல் இல்லாத பிராமணர்கள் தமக்குத் தெரிந்த வேத மந்திரங்களை ஓதி பூவும் பொன்னும் புனல் படச்சொரிந்து தானம் பெற்றுச் சென்றிருக்கவேண்டும். பிற்கால உரையாசிரியர்கள் மயங்குவது போன்று வெற்றி பெறுவதற்காகப் பிராமணரை வைத்து களத்தில் அரசர்கள் வேத யாகம் செய்தனர் என்ற கூற்று ஏற்புடையதாக இல்லை. மேலும் சங்க காலத்திலும் அதையடுத்த காலப் பகுதிகளிலும் பார்ப்பனர் சமூக மேன்மையைப் பெற்றுவிடவில்லை, அதற்கு அவர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருந்தது என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[42].

     புறநானூறு 26:11-15 பாடல்வரிகள், பிராமணர் போர்க்களத்தில் இருந்தாக கூறப்பட்டாலும் அவர்கள் வேத யாகங்களை நடத்துவதற்காக அங்கு செல்லவில்லை[43].
போர் வெற்றியின் பயனாகக் கிடைத்த கொள்ளை பொருட்களையும் செல்வங்களையும் பரிசிலாகப் பெற பிராமணர், பாணர், விறலியர், இரவலர், புலவர்கள் உள்ளிட்ட பலர் போர்க்களம் நாடிவருவர். மேற்கூறிய அனைவரும் வேளாண் உற்பத்தியில் ஈடுபடாதவர்.

     புறநானூறு 372:12-13 பாடல்வரிகளில் "புலவர் பரிசிலுக்கு நாடியதும்"[44], மதுரைக் காஞ்சி 749-752 பாடல்வரிகளில் "ஆட்சியாளர்கள் இரவலர்களை அழைத்து பரிசில் வழங்கி இருப்பதும், அதில் அந்தணர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது”[45].

     பதிற்றுப்பத்து 64:3-5 பாடல்வரிகளில்[46] மற்றும் புறநானூறு 361:4-6 பாடல்வரிகளில்[47]  "பார்ப்பனர் போர்க்களத்தில் பரிசு பெறச்சென்றமை புலப்படுகிறது". மேற்கண்ட பாடலில் வேள்வித்தொழிலை மேற்கொண்ட பார்ப்பனர் போர்க்களம் சென்று பரிசில் பெற்றனர் என்ற பொருளில் தான் உள்ளதேயன்றி, போர்க்களத்தில் வேள்வி செய்து பரிசில் பெற்றனர் என்ற பொருளில் அமையவில்லை.

மேலும் பிணக்குவியலுக்கு மத்தியில் வேத யாகம் செய்வரா? என்ற கேள்வியும் இயல்பாகத் தோன்றுகிறது. போரில் ஈடுபட்ட வீரர்களே வெற்றி வேள்வியில் கலந்து கொண்டு மகிழ்வினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்[48] . வேந்தர்கள் மட்டுமின்றி அவர்களது படைத்தலைவர்களாக இருந்தவர்களும் (பொருநன்) களவேள்வி நடத்தியிருப்பதை அறிய முடிகிறது[49].

மாறாக அந்தணரின் வேத யாகங்கள்/வேள்விகள் களவேள்வியோடு தொடர்பில்லாமல், அவர்கள் தங்களுக்குள் தங்கள் இருப்பிடத்தில் நடத்திக் கொண்டவை என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[50]. பெரும்பாணாற்றுப்படை:315-316 பாடல்வரிகள்[51] மற்றும் கலித்தொகை 36:15-26 பாடல்வரிகளில்[52]  அந்தணரின் வேள்விகள் போர்க்களத்தில் நடத்தப்பட்டதாக இருக்கவில்லை என்பதை நோக்கவேண்டும்.

யாகங்களும் - வேள்வியும் :
வேதங்களில் குறிப்பிடப்படும் யாகங்கள் (யக்ஞம்) மாந்த வளர்ச்சிக்கு உரியனவாக இல்லை. யாகங்கள் குறித்த வேதமாக இருப்பது "யசூர்வேதம்".  அசுவமேதம், கோமேதம், நரமேதம், சர்வமேதம் என்பன குறிப்பிடத்தகுந்த பலியிடல்களாகச் சொல்லப்படுகிறது. மேதம் என்பது கொலைப் பலியைக் குறிப்பிடும் வடசொல்[53] . மேற்குறிப்பிட்ட கொலைப் பலிகள் முறையே குதிரை, மாடு, மாந்தன் மற்றும் பிற அனைத்துக் கொலைகளுக்கு உரிய என்பவனாகப் பொருள்படும்.

பொருட்களையெல்லாம் பலியாக்கிய பின்னர், தாமாகவே யாகம் நடத்தி அதில் இறைப் பணியாளர் (விசுவகர்மா) தன்னையே பலியாக்கிக் கொள்வான்,  இது சர்வமேதயாகம்[54].  அசுவமேதம் என்பது குதிரை பலியிடும் யாகம்[55]. சாதவாகன் அரசர் ஶ்ரீ சதகர்ணி அசுவமேத யாகம் செய்ததாக அறியமுடிகிறது[56]. கோமேத யாகம் என்பது மாடுகளைப் பலியிடுவது. புருசமேத யாகம் என்பது மாந்தர்களைக் கொன்று நடத்தப்பட்ட தீப்பலி யாகம் ஆகும். அசுவமேத யாகம் போலவே இதுவும் நடத்தப்படும்.

இவை இல்லாமல் இராசசூய யாகம் என்றொரு யாகம் காணக்கிடைக்கிறது. சாதவாகன அரசர் ஶ்ரீ சதகர்ணி[57]  மற்றும் கலிங்க அரசன் காரவேலன்[58] ஆகியோர் இராசசூய யாகம் செய்ததாக அறியமுடிகிறது. ஒரு அரசன் தன்னை சக்கரவர்த்தியாகத் தன்நிலையை உயர்த்திக்கொள்ள இந்த யாகம் செய்யப்படும். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பெயர் புறநானூறு 16, 125, 367, 377 ஆகிய பாடல்களின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது. மேலும் அத்தகைய பெயர் கொண்ட ஒரு சோழ அரசன் அந்தப் பாடல்களில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. வேறு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களிலும் இப்பெயர் காணக்கிடைக்கவில்லை. பிற்காலத்தில் புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர் தான் இப்பெயரைச் சேர்த்திருக்க வேண்டும் என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[59]. அதே வேளை பெருநற்கிள்ளியின் காலத்தில் அவனைக் காட்டிலும் பலமான பிற அரசர்கள் தமிழ் நிலத்தில் இருந்தனர். அவர்கள் ஏன் இராசசூய யாகம் செய்யவில்லை? என்ற கேள்வி இவ்வேள்வி குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற பெயர் புறநானூறு 6,912,15,16 ஆகிய பாடல்களின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது. ஆனால் இவ்வரசன் மதுரைக்காஞ்சியில் "பல்சாலை முதுகுடுமி" என்றே குறிப்பிடப்படுகிறான்[60]. பல்சாலை முதுகுடுமி எனும் பெயரை பல்யாகசாலை என  புறநானூற்றுப்  பாடல்களைத் தொகுத்தவர், உரையாளர் அல்லது ஏட்டில் எடுத்தெழுதியோர் இவர்களில் ஒருவர் தான் இத்திருத்தலை அல்லது புகுத்தலைச் செய்திருக்க வேண்டும் என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[61].

மேலும், யாகம் என்ற சொல் எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் பயின்று வரவில்லை. வேள்வி என்பது வேதவேள்வியே அன்றி, களவேள்வியையே பெரிதும் குறித்ததால் பாண்டியரை ஆரியச் சார்பாக்க "பல்யாக சாலை" எனத் திரித்து விட்டனர் என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்[62]. இதனை உணராத உரையாசிரியர்கள் "பல்யாக சாலை" என்ற பாடத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் பலவேள்விகளைச் செய்வித்தான் என ஏற்றுக்கொண்டனர்.

அது மட்டுமின்றி "புத்திர காமேஷ்டி" என்றொரு யாகம் உள்ளது. இராமாயணத்தில் தசரதன் இந்த யாகத்தைச் செய்ததாகத் தெரிகிறது.

சேர அரசன் பெருஞ்சேரல் இரும்பொறை இந்த யாகத்தைச் செய்து மகனைப் பெற்றதாகப் பதிற்றுப்பத்து 74 ஆம் பாடலைக்[63]  கொண்டு பலர் உரைமயக்கம் கொள்கின்றனர். ஆனால் யாகம் செய்தால் குழந்தை பிறக்குமா? என்ற அடிப்படை கேள்வி இதை ஏற்க மறுக்கும். மேலும் இப்பாடலில் பார்ப்பனர் பங்கெடுப்போ அல்லது வேத யாகத்தின் தாக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என ஆய்வாளர் மே.து.ராசுகுமார் குறிப்பிடுகிறார்]64].  சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணாந்தயன் என்று ஒருவன் செய்ததாகச் சொல்லப்படும் புறநானூறு 166 ஆம் பாடலிலும் கூட யாகத்தின் பெயர் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புறநானூறு 6:20  "நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே" எனும் பாடல்வரிகளுக்கு உரையாசிரியர் "மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென்றெடுத்த கையின் முன்னே" என உரையெழுதியுள்ளனர். வாழ்த்துதலுக்காக எடுக்கின்ற கைகளுக்கும், ஒன்றைப் பெற வேண்டிக் கைகளை ஏந்துவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஏந்துதல் என்ற சொல்லுக்கான பொருள் வெளிப்படையாகவும்  தெளிவாகவும் இருக்கும் போது, அதற்கு முரணான ஒரு பொருள் கூறப்படுகிறது. மேலும் அதே பாடலின் 16 ஆம் வரிகளில் போர் வெற்றிகளுக்குப் பின்னர் வழங்கப்படும் அணிகலங்களும் பரிசில்களும் குறிப்பிடப்படுகிறது.

புறநானூறு 367 ஆம் பாடலும், பொருள் இரந்து வேண்டி நின்ற பார்ப்பனர்க்குப் பொன் தானமாக வழங்கும் படி ஔவையார் வேண்டுகிறார். மேலும் இப்பாடலில் இரவலர்க்கு அரிய பொருட்களைக் குறைவில்லாமல் கொடுத்தவராக வேந்தர்கள் கூறப்படுகின்றனர்.  ஆய்வாளர் அ.பாண்டுரங்கன், இனக்குழு சமுதாயத்தில் வெற்றி பெற்ற தலைவன் தன் வெற்றிக்குக்  காணிக்கையாக ஓர் மனிதனைப் பலியாகக்  கொடுக்கும் "அவிப்பலியே" பிராமணர் கூட்டுறவால் களவேள்வியாக படிமலர்ச்சி அடைந்தது எனக்  குறிப்பிடுகிறார்[65]. தொல்காப்பியப்  பொருளதிகார நூற்பா 75:12 “தொல்லுயிர் வழங்கிய வ‌லிப்பலி யானும்“ வஞ்சினம் கூறும் வீரன் தன்னுயிரைக் கொடுப்பதாக நூற்பா வரிகள் உரைக்கின்றன.

மேலும்,  சங்க இலக்கியத்தை நோக்கும் வேளையில் இத்தகைய மாந்த பலி ஏற்பட்டதாக எந்தக்  குறிப்பும் இல்லை. ஒரு வேளை அது தொல்குடி சமுதாயத்தோடு விட்டுப்போன வழக்கமாக இருக்கலாம். ஆய்வாளர் பாண்டுரங்கன் உரைப்பது போல அந்தணர் கூட்டுறவால் களவேள்வியாக மாறி இருக்க துளியேனும் வாய்ப்பில்லை. மேலும், தன் ஆய்வுக்  கட்டுரையில் இதற்கான எந்தச்  சான்றையும் அவர் அளிக்கவில்லை. மேலும் ஆய்வாளர் அ.பாண்டுரங்கன் வேதங்களில் குறிப்பிடப்படும் ரணகள வேள்வியே, தமிழ் மன்னர்களால் களவேள்வியாக மாற்றப்பட்டு நடைபெற்றது என்றும் குறிப்பிடுகிறார்[66]. இதற்கும் எந்தச்  சான்றுகளையும் அவர் அளிக்கவில்லை. மேலும் வேதங்களை ஆய்ந்து பார்க்கும் போது இத்தகைய பெயர் கொண்ட யாகம் ஏதும் கிட்டவில்லை. வேத நெறியை தழுவி வாழ்ந்த வட இந்திய மன்னர்கள் கூட இந்தப்  பெயரை உடைய யாகத்தைச்  செய்ததாக சான்று இல்லை என்பது நினைவு கூறத்தக்கது.

முடிவுரை :
தொல்குடி சமூகத்திலிருந்து உருவான சங்க கால வேளாண் வளர்ச்சி சமூகம் தன்னகத்தே தொல்குடி வாழ்வின் கூறுகளைச் சுமந்துள்ளது. இன்றைய நவீனக் காலத்திலும் அதன் எச்சங்கள் உள்ளன. தொல்குடி சமூகத்தின் உற்பத்தி பங்கீட்டின் பாதீடு முறையின் போர்க்கள மொழிவு/கூற்று (Version) களவேள்வி என்றும், போர்க்களத்தில் வென்ற அரசனால் கொள்ளைப் பொருள், செல்வம் மற்றும் நிலங்களைப் போரில் பங்கு கொண்ட வீரர்களுக்கும் போரில் பங்கு பெறாத புலவர், பாணர், விறலியர், பாடினி, பிராமணர், வறியவர், இரவலர் முதலியோருக்கு வெற்றிக்களிப்பில் பங்கீடாக வழங்கப்பட்ட நிகழ்வே களவேள்வி. மேலும் இவை வேத யாகங்களோடு எத்தொடர்பும் அற்றது எனவும் மேற்கண்ட சான்றுகள் மூலம் நிறுவுகிறேன்.


அடிக்குறிப்புகள்:
1.  செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி,  Volume- IV, Part – II, பக்: 22.
2.  "வாகை தானே பாலையது புறனே" - (தொல்.பொருள்.73).
3.  தொல்.பொருள்.74 மற்றும் 75.
4.  தொல்.பொருள்.75.
5.  செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி, Volume- VI, Part – I, பக்: 601.
6.  இரா.பூங்குன்றன், தொல்குடி வேளிர் வேந்தர், சென்னை: NCBH (2022, பக். 16).
7.  K.Kailasapathy, The concept of destiny in Early Tamil Literature, in proceeding of the Conference Seminar of  Tamil Studies, Held at Madurai 1981, Volume 1, Page: 95-104.
8.  "தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென" - (தொல்.பொருள்.61)
9.  "இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து
      இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
      கொலை வில் ஆடவர் போல பலவுடன்" - அகநானூறு 97: 4-6
10.  “விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
      மை படு திண் தோள் மலிர வாட்டி
      பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
      திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
      படு புலாக் கமழும் ஞாட்பில் துடி இகுத்து
      அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்
      வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
      கொல்லை இரும் புனம் நெடிய என்னாது“ – அகம் 89: 10-17
11.  ஐங்குறுநூறு 1,2 மற்றும் 3 ஆம் பாடல்கள்.
12.  S.A.டாங்கே, பண்டைய இந்தியா, சென்னை: NCBH, 2016, பக்: 66.
13.  Ibid, பக்: 57.
14.  Ibid, பக்: 60.
15.  D.D.கோசாம்பி, பண்டைய இந்தியா, சென்னை: NCBH, 2021, பக்: 279.
16.  Ibid, பக்: 340.
17.  செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி, Volume- VIII, Part – III, பக்: 252
18.  Ibid and Dravidian Etymology Dictionary, 2nd Edition, 1984, Pg: 506 [ DED 5544 ].
19.  “நாம்முன்பு தொண்டு கொண்ட வேள்வியில்“ - பெரியபுராணம், தடுத்தாட்கொண்டது – 127.
20.  திருக்குறள் 87 மற்றும் 88.
21.  பரிபாடல் : 19-41.
22.  புறநானூறு 372.  
23.  தொல்காப்பியம் – நச்சினார்க்கினியர் உரை, மெய்யப்பன் பதிப்பகம், 2009, பக்: 353.
24.  ஜார்ஜ்.எல்.ஹார்ட், தமிழ்ச் செவ்விலக்கியங்கள், சென்னை: NCBH, 2022, பக்: 54.
25.  புறநானூறு 371: 21-26.
26.  புறநானூறு 372 பாடல் இது குறித்து விவரிக்கிறது.
27.  “பிணை யூபம் எழுந்து ஆட“– மதுரைக் காஞ்சி: 27.
28.  க.கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: காலச்சுவடு பதிப்பகம், 2023, பக்: 75.
29.  B.Briffault, The Mothers, 2: 620-3 and George Thomson, “Studies in Ancient Greek Society “, Pg: 212-213.
30.  மே.து.ராசுகுமார், “தாயும் மனம் திரியும்: பெண்வழியிலிருந்து ஆண்வழி உரிமைக்கான மாற்றத்தின் தொடக்க வெளிப்பாடு”, சமூக விஞ்ஞானம் இதழ், 2009(ஜூன் – செப்டெம்பர்), 2009 (அக்டோபர் – டிசம்பர்), 2010 (ஜனவரி- மார்ச்).
31.  “அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
      இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
      கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே“ - புறநானூறு 285: 15-17
32.  “அமர் ஓர்த்து அட்ட செல்வம்
      தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே“ - அகம் 144: 18-19
33.  “போய் அவர் மண் வௌவி வந்தனர்
      சேய் உறை காதலர் செய் வினை முடித்தே“ – கலித்தொகை  148:23-24
34.  “கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
      கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
      நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
      துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
      தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி“ – புறம் 297: 4-8
35.  “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே”-  புறம் 312: 4
36.  “நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
      தண்ணடை பெறுதல் யாவது படினே“ – புறம் 287: 9-10
37.  “இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
      நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
      புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
      கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்“ -மலைபடுகடாம் 86-89.
38.  புறநானூறு 12,69,126,141 மற்றும் பொருநர் ஆற்றுப்படை: 169-170.
39.  அகநானூறு 106, புறநானூறு 302.
40.  புறநானூறு 307.
41.  “இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
      ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
      கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு “ - பதிற்றுப்பத்து 76: 7-9.
42.  மே.து.ராசுகுமார், “சங்க காலத்தில் பார்ப்பனர்”, சிந்தனையாளன் பொங்கல் மலர் 2008.
43.  “அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
      ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
      நான்மறை முதல்வர் சுற்ற மாக
      மன்னர் ஏவல் செய்ய மன்னிய
      வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே“ – புறம் 26: 11-15.
44.  “புலவுக்களம் பொலிய வேட்டோய் நின்
      நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே“ – புறம் 372: 12-13.
45.  “பாணர் வருக பாட்டியர் வருக
      யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
      இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
      கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி“ - மதுரைக் காஞ்சி 749-752.
46.  “அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
      உரைசால் வேள்வி முடித்த கேள்வி
      அந்தணர் அருங் கலம் ஏற்ப நீர் பட்டு“ - பதிற்றுப்பத்து 64: 3-5.
47.  “கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
      அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
      தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்” - புறம் 361: 4-6.
48.  “கொன்று களம்வேட்ட ஞான்றை
      வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே“ – அகம் 36: 22-23.
49.  “வள் வாய் அம்பின் கோடைப் பொருநன்
      பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்“ – அகம் 13: 10-11.
50.  மே.து.ராசுகுமார், சங்க காலத்தில் வேந்தர்களும் வேளிர்களும், தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர், 2009
51.  “கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த
      வேள்வித் தூணத்து அசைஇ யவனர்“ - பெரும்பண் ஆற்றுப்படை: 315-316
52.  “கேள்வி அந்தணர் கடவும்
      வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே“ – கலித்தொகை  36: 25-26
53.  ப. அருளி, அயற்சொல் அகராதி (பாகம் 4), புதுச்சேரி: வேரியம் பதிப்பகம், 2007, பக்: 95.
54.  ரிக் வேதம் 10-81-1
55.  பொழிலன், வேத வெறி இந்தியா, சென்னை: மன்பதைப் பதிப்பகம், 2018, பக்: 186.  
56.  Noboru Karashima, A Concise History of South India Issues and Interpretations, New Delhi: Oxford University Press, 2014, Pg. 41.
57.  Shashi Kant, The Hathīgumphā Inscription of Khāravela and the Bhabru Edict of Aśoka, New Delhi: D.K. Printworld (P) ltd, 2000, Pg.41.
58.  முக்கலிங்க திராவிடம், பே.ரா. K.S.சலம், சென்னை: சிந்தன் புக்ஸ், 2022, பக்: 190.
59.  மே.து.ராசுகுமார், “சங்க காலத்தில் வேந்தர்களும் வேளிர்களும்”, தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர், 2009
60.  “பல்சாலை முதுகுடுமியின்“ - மதுரைக் காஞ்சி 759-767
61.  மே.து.ராசுகுமார், “சங்க காலத்தில் வேந்தர்களும் வேளிர்களும்”, தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர், 2009.
62.  Ibid
63.  “கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
      வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப “ - பதிற்றுப்பத்து 74: 1-2.
64.  மே.து.ராசுகுமார், “சங்க காலத்தில் வேந்தர்களும் வேளிர்களும்”, தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர், 2009.
65.  அ.பாண்டுரங்கன், “தொல் பொதுவுடைமை சமுதாயத்திலிருந்து நிலவுடைமைச் சமுதாயத்தை நோக்கிய பயணம்”, செம்மலர் ஆகஸ்ட் 2013, பக்: 21.
66.  Ibid

கட்டுரையாளர்:
அகத்தியன் சிவமணி (Agathiyan Sivamani)
மென்மியப் பொறிஞர், பெங்களூரு.
தொடர்பு எண்: 9080083047
மின்னஞ்சல்: agathiy...@gmail.com

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா - செப்டம்பர் 21, 2024 ஆய்வரங்கில்  படிக்கப் பட்ட  ஆய்வுக் கட்டுரை . . . 

Pandiyaraja Paramasivam

unread,
Oct 15, 2024, 12:15:10 AM10/15/24
to mint...@googlegroups.com
மிகவும் அருமையான கட்டுரை. மிகவும் உழைத்து, முயன்று உருவாக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.  இவருக்கும் என் பாராட்டுகள். அதை எடுத்து இங்கே போட்ட தேமொழி அம்மைக்கும் பாராட்டுகள்.
ப.பாண்டியராஜா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1ebe3701-5118-4127-b43f-96e9d48b8a4en%40googlegroups.com.

தேமொழி

unread,
Oct 15, 2024, 12:25:40 AM10/15/24
to மின்தமிழ்
நன்றி ஐயா  🙏

கட்டுரையாளருக்கும் உங்கள் பாராட்டைத் தெரிவித்துள்ளேன் 
Reply all
Reply to author
Forward
0 new messages