தமிழும், பாலினமும், சங்க இலக்கியங்களும்!—அருள் மெர்வின்

3 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 9, 2026, 9:51:23 PM (5 hours ago) Jul 9
to மின்தமிழ்
Arul Mervin

தமிழும், பாலினமும், சங்க இலக்கியங்களும்!
நாற்காலி உடைந்துவிட்டான், கரன்ட் போய்விட்டாள், செல்போன் நொறுங்கிவிட்டான் - இப்படியெல்லாம் அஃறிணைகளை ஆண், பெண் என்று மரியாதை கொடுத்துப் பேசினால் ஜாலியாகதானே இருக்கிறது. ஏன் இப்படியெல்லாம் தமிழில் பேச, எழுத முடிவதில்லை? தெருக்கோடியிலுள்ள டீ கடையில் டீயைவிட காஃபி டேஸ்டாக இருப்பாள். பந்தை அடித்த வேகத்தில் பேட் உடைந்துவிட்டான். நாய் குட்டி போட்டாள்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் மேசை, நாற்காலி, கரன்ட், செல்போன், மட்டை, டீ, காபி போன்ற ஒரு லட்சம் அஃறிணைச் சொற்களுக்குப் பாலினம் கிடையாது. இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே நம்மில் பெரும்பாலானோர்க்குப் பரீட்சயம் இருப்பதால் அஃறிணைக்குப் பாலினம் என்ற கான்செப்டே புரிபடுவதில்லை. இந்த பலவீனத்தை வைத்து அந்த மொழி இந்த மொழி தமிழ் மொழி என்று எல்லாம் ஒன்றிலிருந்து வந்ததுதான் என்று நம் தலையில் பலர் துவையல் அரைக்க முடிகிறது.
தமிழில் “பஸ் வந்துவிட்டது” என்போம். ஆங்கிலத்தில் “bus arrived” என்போம். ஏனென்றால், பஸ் அஃறிணை.
இந்தியில் “பஸ் வந்துவிட்டாள்” (“பஸ் ஆகயி”) என்று சொல்லவேண்டும். “பஸ் வந்துவிட்டான்” (“பஸ் ஆகயா”) என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் பஸ் என்ற வாகனம் பெண் பாலினத்தைச் சேர்ந்தது. “பஸ் வந்துவிட்டது” என்ற அஃறிணைச் சொற்பிரயோகம் இந்தியில் கிடையாது. எல்லா அஃறிணைப் பொருட்களும் ஒன்று ஆணாக இருக்கும், இல்லை பெண்ணாக இருக்கும்.
மரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், இத்தாலியன் என்று எல்லா மொழிகளிலும் மரம் ஓர் ஆண். “மரம் விழுந்துவிட்டான்” என்றுதான் இந்த எல்லா மொழிகளிலும் சொல்ல வேண்டும். அல்லது, “திரு. மரம் விழுந்துவிட்டது” என்று சொல்ல வேண்டும். தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த மொழிகளில் மரம் அஃறிணை. “மரம் விழுந்துவிட்டது” என்று சொல்லி - அது ஆணோ பெண்ணோ என்ற கவலைகளின்றி - வீட்டுக்கு வெட்டி எடுத்துச் சென்றுவிடலாம்.
அஃறிணைப் பொருட்களுக்குப் பாலின உபயோகத்தை வைத்து மொழிகள் எந்த குடும்பத்தைச் சார்ந்தவை என்று வகைப்படுத்த கால்டுவெல் அளவு மூளையெல்லாம் தேவையில்லை. தமிழ், தமிழ் சார்ந்த மொழிகள் (மற்றும் ஆங்கிலம்) தவிர வேறு ஒன்றிரண்டு மொழிகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதும். தமிழ் தனியாகத் தெரியும்.
அஃறிணை எனப்படுபவை உயர்திணை தவிர மற்றவை. ஆச்சரியமானவை. மனித ஆண் உயர்திணை. அவன். இவன். மனிதப் பெண் உயர்திணை. அவள். இவள். ஆனால் மனித உடலிலுள்ள கூந்தலோ, முகமோ, கண்ணோ, இன்னபிற உறுப்புகளோ அஃறிணைகள். அது. இது. சிவந்த மண் படத்தில் சிவாஜியின் கண்கள் சிவந்தன என்றுதான் சொல்ல முடியும். சிவாஜியின் கண்கள் சிவந்தார்கள் என்று சொல்ல... பிரஞ்சு மொழியில் ‘கண்’ பெண் பாலினம். அது சிவாஜியின் கண்ணாகவே இருந்தாலும் பிரஞ்சு மொழியில் அவரது கண் சிவப்பாள். இறந்த உடல் தமிழில் உடனே அஃறிணையாகிவிடும். பாடி வந்து விட்டது என்போம். ஜெர்மன் மொழியில் இறந்த உடல் பெண் பாலினம். இறந்தது ஆணாகவே இருந்தாலும்.
இந்த உலகிலுள்ள ஏழாயிரத்து சொச்சம் மொழிகளில் முப்பது சதவீத மொழிகளில் மட்டுமே அஃறிணைக்குப் பாலினம் சொல்லி அடையாளப்படுத்தும் இலக்கணப்பழக்கம் இருக்கிறது. இந்த சிறுபான்மை மொழிகளுள் பெரும்பான்மை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை. ரோட்டிலுள்ள பாலத்தைப் பார்த்து இது ஆண், தட்டிலுள்ள சாப்பாட்டைப் பார்த்து இது பெண் என்றெல்லாம் ஒரு மொழியில் இலக்கணம் இருந்தால் அது இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று சொல்லிவிட முடியும். அஃறிணைக்குப் பாலினம் இல்லாத தமிழ் போன்ற மொழிகள் மேற்படி குடும்பத்தைச் சார்ந்தவை அல்ல என்றும் சொல்லிவிட முடியும். இரண்டு குடும்பங்களுக்குள்ளும் சொற்களைக் கொடுக்கல் வாங்கல் செய்திருந்தாலும் வெவ்வேறு மரபணுக்களைக் கொண்டவை.
நிற்க. ஆங்கிலத்திலும் அஃறிணைக்குப் பாலினம் இல்லை என்றுதான் இந்த டாபிக்கையே ஆரம்பித்தோம். இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்ப ரேஷன் கார்டில் ஆங்கிலத்தின் பெயரைச் சேர்க்கவில்லையா? தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டப்பட்ட காலத்தில் ஆங்கிலத்திலும் அஃறிணைக்குப் பாலினம் (ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை) இருந்திருக்கிறது. அதன்பின் பல மொழிச் சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்த போது வந்த குழப்பங்களால் பாலினத்தைக் கழற்றி விட்டுவிட்டார்கள். உதாரணமாக, ஜெர்மன் மொழியில் ‘பாலம்’ ஒரு பெண். பழைய ஆங்கிலத்திலும் ‘பாலம்’ ஒரு பெண். கடவுளுக்கும் ஆணுக்குமிடையேயான பாலம் பெண். பிரஞ்சு மொழியில் ‘பாலம்’ ஓர் ஆண். கடவுளுக்கும் மனிதனுக்குமிடேயான பதவிகளில் இருப்பவர்கள் ஆண்கள். சமஸ்கிருதத்திலும் ‘பாலம்’ (சேது) ஓர் ஆண். அஃறிணைக்குப் பாலினம் எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் இருந்தாலும் லோக்கல் அரசியல், மதங்கள், சித்தாந்தங்கள், வாழ்வியல் மாற்றங்களால் எந்தெந்த பொருட்கள் ஆண், பெண் வகை என்பது அந்தந்த மொழிகளில் மாறியிருக்கின்றன. பழைய ஆங்கிலம் இன்றைய ஆங்கிலமாகப் பரிணமித்த காலகட்டத்தில் அஃறிணைக்கான பாலினங்கள் மேற்படி நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகக் கழன்று கொண்டன. (இதே போல பெங்காலி மொழியிலும் அஃறிணைக்கான பாலினங்கள் காலப்போக்கில் கழன்றுவிட்டன என்கிறார்கள்.)
மறுபடியும் நிற்க. இலக்கண அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலுள்ள அஃறிணைப் பொருட்களின் ஆண்/பெண் பாலினப்பாகுபாடு ஆண்/பெண் பாலினப்பாகுபாடு என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இவை இந்த மொழிகளில் ஆதிகாலத்திலிருந்தே பெயர்ச்சொற்களை ஆண்/பெண் என்று இலக்கண வசதிக்காக வகைப்படுத்தும் ஒரு முறை மட்டுமே, மற்றபடி நாற்காலியை ஆண் என்றும், வீட்டுச் சுவரைப் பெண் என்றும் நேரடியாக அர்த்தப்படுத்துவது தவறான புரிதல் என்பார்கள். அஃறிணைச் சொற்களுக்குப் பாலினம் வைத்து அடையாளப்படுத்துவதிலுள்ள இலக்கண வசதியைக் கொஞ்சம் புரிந்து கொள்வோம்.
“பாட்டில் தலையில் விழுந்ததால் உடைந்துவிட்டது” - இந்த வாக்கியத்தை ஆழ்மனதுக்குள் கொண்டு சென்று ஒரு நிமிடம் தியானியுங்கள். இந்த வாக்கியத்தில் ‘உடைந்துவிட்டது’ பாட்டிலா? தலையா? தமிழில் எழுதப்பட்ட இந்த வாக்கியத்தில் அதற்கான பதில் இல்லை. பாட்டில்தான் எளிதில் உடையக்கூடியது, அதனால் பாட்டில்தான் உடைந்திருக்கும் என்று யூகம் மட்டுமே செய்யமுடியும். “சுத்தியல் தலையில் விழுந்ததால் உடைந்துவிட்டது” - இந்த வாக்கியத்தில் ‘உடைந்துவிட்டது’ சுத்தியலா? தலையா?
பாட்டில் என்றால் பெண் என்றும், தலை என்றால் ஆண் என்றும் இலக்கண வகைப்படுத்துதல் ஒரு மொழியில் இருந்தால் இதே வாக்கியத்தை, “பாட்டில் தலையில் விழுந்ததால் உடைந்துவிட்டாள்” என்றோ “பாட்டில் தலையில் விழுந்ததால் உடைந்துவிட்டான்” என்றோ எழுதவேண்டிய இலக்கணக் கட்டாயம் ஏற்படும். அதை வைத்து உடைந்தது பாட்டிலா, மண்டையா என்று குழப்பமில்லாமல் புரிந்து கொள்ள முடியும். புரிஞ்சுதா?!
இந்த புரிதல்களுடன் இப்போது சங்க இலக்கிய ஏரியாவுக்குள் செல்வோம். தொல்காப்பிய இலக்கணத்தையெல்லாம் கொஞ்சம் சைடில் வைத்து விட்டுச் செல்வோம். சங்க இலக்கியங்களின் இன்னோர் ஆச்சரியப் பரிமாணம் புலப்படும். பெரும்பாலான சங்கப்பாடல்களை அஃறிணைப் பொருட்களுக்குப் பாலினமே தேவைப்படாத மாதிரி நேக்காக எழுதியிருக்கிறார்கள்.
“என் காதலியின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று வண்ணத்துப் பூச்சி சொல்லியது” - இப்படி ஒரு வாக்கியத்தை எழுதினால் கடைசியில் ‘சொல்லியது’ என்று முடிப்பதை வைத்து இங்கே வண்ணத்துப் பூச்சி அஃறிணை என்று சொல்லலாம். இதையே, “என் காதலியின் கூந்தலுக்கு மணம் உண்டு என்று வண்ணத்துப் பூச்சி சொன்னாள்” என்று முடித்தால் வண்ணத்துப் பூச்சி ஒரு பெண் என்று சொல்லலாம். “…. சொன்னான்” என்று முடித்தால் வண்ணத்துப் பூச்சி ஓர் ஆண் என்று சொல்லலாம். ஆனால், குறுந்தொகைப் பாடலில் எப்படி எழுதியிருக்கிறார்கள்?
“வண்ணத்துப் பூச்சியே சொல், என் காதலியின் கூந்தலுக்கு மணம் உண்டோ?” - இப்படி மொழியை எழுதினால் இந்த வாக்கியத்தில் வண்ணத்துப் பூச்சி அஃறிணையா, ஆணா, பெண்ணா என்று எதையும் கண்டுபிடிக்க முடியாது.
எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் ‘நிலம்’ ஒரு பெண். பெரும்பாலான இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ‘வானம்’ ஓர் ஆண். பூகம்பத்தில் பூமி பிளந்தாள், வானம் அழுதான் என்பது போல் இந்த மொழிகளில் எழுத வேண்டும். குறுந்தொகையின் அடுத்த பாடலில் எப்படி எழுதியிருக்கிறார்கள்? “உன்னோடு நான் கொண்ட நட்பை விட நிலம் சிறிதாக இருந்தாள், வானம் தாழ்வாக இருந்தான்.” சாரி, இப்படி எழுதவில்லை. “நிலத்தைவிடப் பெரிது, வானத்தை விட உயர்வு உன்னோடு நான் கொண்ட நட்பு”, என்று எழுதியிருக்கிறார்கள். இந்த வாக்கியத்தில் நிலமும் வானமும் அஃறிணையா, ஆணா, பெண்ணா என்று எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஜென்டர் ரிவீல் செய்ய அவசியமல்லா வகையில் எழுத தமிழ் உதவியிருக்கிறது.
மேலே உள்ளவை ஒரு சேம்பிள்தான். அஃறிணைப் பொருட்களின் பாலினத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாமல் இன்னும் ஏகப்பட்ட அபாரமான டெக்னிக்குகளை சங்க இலக்கியங்களில் கைவசம் வைத்து உபயோகித்திருக்கிறார்கள். உவமைகளில் அஃறிணைகளை உபயோகித்து வாக்கியத்தை முடிக்கும் போது தலைவன், தலைவிக்கு வந்து ஆண் அல்லது பெண் பாலில் முடிப்பார்கள். “இவளது முகம் நிலவைப் போல் ஒளிவிடுகிறது” என்று சொல்ல மாட்டார்கள். சொன்னால், முகம் அஃறிணை என்று தெரிந்துவிடும். அதற்குப் பதிலாக, “நிலவைப் போல் ஒளிவிடும் முகத்தை உடையவள்” என்று சொல்லிப் பெண்பாலில் முடிப்பார்கள். மொத்த சங்க இலக்கியப் பாடல்களையும் வாசித்துப் பாருங்கள். இந்த நுட்பம் பெரும்பான்மையாகத் தெளிவாகத் தென்படும்.
இதனால் என்ன தெரிய வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். மொழியைப் பயன்படுத்துவதில் கூட பாலினப் பாகுபாடு வந்துவிடக்கூடாது என்ற அக்கறை!
(பி-கு: இன்றைய தேதியில் எல்லா மொழிகளும் தெரிந்த ஒரே ஆளுமை AI. மேலே நான் எழுதியிருப்பதில் - சங்க இலக்கியம் பற்றிய கருத்துகள் தவிர - என்ன சந்தேகம் இருந்தாலும் chatGPT-யிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளுங்கள். எந்தெந்த மொழிகளில் எந்தெந்த அஃறிணைச் சொற்கள் ஆண், பெண் என்பது போன்ற பொழுதுபோக்கு ஆராய்ச்சிகள் செய்வது எளிது. ஆனால், இலக்கண அறிஞர் போல chatGPT காரித் துப்பவும் செய்கிறான். அஃறிணைக்கான ஆண்/பெண் வகைப்பாடு ஓர் இலக்கண வசதி மட்டுமே என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் chatbot ஓர் ஆண்.)
Reply all
Reply to author
Forward
0 new messages