(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 724-728
கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.
கல்+நெய் = கன்னெய்.
கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! –jதொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 35
துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை
முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௯ – 449)
முதல் இல்லாதவர்க்கு ஆதாய ஊதியம்(இலாபம்) இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்கியுதவும் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை.
பதவுரை: முதல்=முதற்பொருள், முன்பணம், அஃதாவது மூலதனம்; இலார்க்கு=இல்லாதவர்க்கு; ஊதியம்=வருவாய், இலாபம், பேறு, ஆக்கம்; இல்லை=இல்லை; மதலை-முட்டுத்தூண், பாரந்தாங்கும் தூண், உத்தரம், வன்மையுடையது; ஆம்-ஆகும்; சார்பு-துணை; இலார்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; நிலை-நிலைபேறு, சலியாது நிற்றல்.
சிறு கடை வைப்பதாக இருந்தாலும் பெருந் தொழிலாக இருந்தாலும் அடிப்படைத் தேவை முதலீடே. முதலீடு இன்றி வணிகம் தொடங்கவும் இயலாது. அப்படியே தொடங்கினாலும் சிறக்கவும் இயலாது. முதலீட்டு அடிப்படையிலேயே வணிக வளர்ச்சியும் அதன் அடிப்படையிலேயே ஆதாயமும் கிட்டும். அதுபோல்தான் செயல் சிறப்பதற்குத் தேவை துணை.
இடையூறு வரும்போது தாங்கிப்பிடிக்கும் சார்பாக, நல்ல தூணாக விளங்குவது பெரியாரின் துணையே. பெரியாரின் நல் வழிகாட்டலும் அறிவுரையும் நெறிப்படுத்தலும் நல்ல துணையாக விளங்கி அரசை நிலைபேறாக்கும். பிறருக்கும் பெரியாரின் தக்க அறிவுரையே அவர்களைச் சிறக்கச் செய்யும்.
முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்று சொல்வதன் மூலம் அதனால் இழப்பும் கேடும் வரும் என உணர்த்துகிறார். அதுபோல் பெரியாரின் துணை இல்லாதவர்க்கும் தீங்கு நேரும் என உணர்த்துகிறார். கட்டடத்தில் தூண் தளத்தைத் தாங்குவதுபோல் பெரியாரின் துணை நம்மைத் தாங்கும். அத் துணை இல்லையேல், தகாதன நேரும்பொழுது அதனைத் தடுத்து நிறுத்துவோர் இன்மையால் தீங்குதான் நேரும். எனவே, தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ள பெரியே்ாரின் துணை நம்மைத் தாங்கும் தூணாகத் தேவை.
துணை என்பது நல்லாற்றுப்படுத்தும் பெரியோரை, அவர்கள் தரும் அறிவுரையை, அவர்களின் வழிகாட்டுதலை,அவர்களின் நெறியுரையை. நம்மைத் துன்பச் சுமையிலிருந்து தாங்கும் சுமைதாங்கியாய் இருப்போர் பெரியோரே.இஃது ஆட்சியாளர்களுக்கும் மட்டுமல்ல. எந்த நிலையிலிருக்கும் யாராயினும் அவர்களுக்குப் பொருந்தும்.
நிலை என்பதற்கு நிலைபேறு என அனைவரும் பொருள் கூறியுள்ளது சரிதான். என்றாலும் நிலை என்று நன்னிலையைக் கூறுவதாகவும் கருதலாம். பெரியாரைத் துணையாகக் கொள்ளாதவர்க்கு நன்னிலை இல்லை எனலாம் அல்லவா?
எனவே, எக்காலத்திலும் எச்சூழலிலும் நாம் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் இடுக்கண்களிலிருந்து காத்துக் கொண்டு நன்னிலை எய்த பெரியோரைத் துணையாகக் கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்