வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்

47 views
Skip to first unread message

இ.பு. ஞானப்பிரகாசன்

unread,
Oct 24, 2020, 10:06:51 PM10/24/20
to மின்தமிழ்
போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக.

உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா?

ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன?

இது தமிழின் குறைபாடா இல்லையா?

இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு (பார்க்க: படம்).

என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப்படி எதிரடி அடித்தாலும், “எல்லா மொழிகளிலும் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் தமிழில் இல்லாதது ஒரு குறைதானே?” எனும் எண்ணம் நம்மவர்களுக்கே இங்கு இருக்கிறது என்பது உண்மையே!


அதுவும் அண்மைக்காலமாக இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழையும் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளில் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் நம் தாய்மொழியில் மட்டும் ஏன் இல்லை எனத் தோன்றத்தான் செய்யும். அதற்கு விடையளிக்க வேண்டியது நம் கடமை என்பதால் மட்டுமில்லை உண்மையில் இதற்கான விளக்கம் மிகச் சுவையானது! தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது! எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! பார்ப்போமா?
 
தமிழ் வல்லெழுத்துக்களின் பல்முனைப் பயன்பாட்டுத் திறன்!

சமற்கிருதம், இந்தி ஆகியவற்றிலும் சமற்கிருதத்தோடு சேர்ந்து கெட்டுப் போன பிற திராவிட மொழிகளிலும் க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்கள் தலா நான்கு உண்டு (பார்க்க: படம்). ஆங்கிலத்தில் கூட இவற்றுக்கெல்லாம் இரண்டு, மூன்று தனி எழுத்துக்கள் உண்டு. ஆனால் தமிழில் கிடையாது! ஏன்?

ஏனெனில் தமிழின் வல்லெழுத்துக்கள் இடத்துக்கேற்பத் தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு விதவிதமாக ஒலிக்கும் வல்லமை வாய்ந்தவை என்பதால்தான்.


என்ன, சும்மா சமாளிக்கிறேன் என நினைக்கிறீர்களா? சரி, சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

‘கலகம்’ எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதை நாம் எப்படிச் சொல்கிறோம்? ‘kalagam’ என்றுதானே? அது ஏன், இந்தச் சொல்லின் முதலில் உள்ள க-வை ‘ka’ எனச் சொல்லும் நாம் அதற்கு அடுத்து உள்ள க-வை மட்டும் ‘ga’ என்கிறோம்? ‘kalakam’ என ஏன் சொல்வதில்லை?

அடுத்து, ‘தண்ணீர்’ எனச் சொல்லிப் பார்க்கலாம்! இதில் முதல் எழுத்தை எப்படி ஒலிக்கிறோம்? ‘tha’ என்றுதானே? அப்படியானால் ‘உதவி’ எனும் சொல்லில் உள்ள த-வையும் ‘tha’ என்றா சொல்வோம்? இல்லையே! அதை ‘dha’ என்றுதானே சொல்கிறோம்? ஏன் இப்படி?

இதற்குக் காரணம் நம் வல்லெழுத்துக்களின் ஒலி இடத்துக்கேற்ப மாறுவதால்தான். இடத்துக்கேற்ப மட்டுமில்லை மற்ற மொழிகளைப் போலவே உடன் சேரும் எழுத்துக்கேற்பவும் இவற்றின் ஒலி மாறும். இப்படி அடிப்படையாக நான்கு விதமாய் ஒலிக்கக்கூடியவை தமிழ் வல்லின எழுத்துக்கள்*.

1. தனியாகவோ சொல்லின் துவக்கத்திலோ வரும்பொழுது இயல்பான அழுத்தத்தோடு ஒலிக்கும். **எ.டு.: காலை = kaalai, சேரன் = cheran, ண்ணீர் = thanneer, னி = pani.

2. சொல்லின் இடையிலோ முடிவிலோ வந்தால் மென்மையாக ஒலிக்கும். எ.டு.: அலம் = agalam, ஊசி = oosi, வடிவம் = vadivam, மதுரை = madhurai, கம் = kabam.

3. மெய்யெழுத்தோடு சேர்ந்து வந்தால் – சொல்லின் இடையிலோ முடிவிலோ வரும்பொழுதும் – மேலும் அழுத்தமாக ஒலிக்கும். எ.டு.: அக்கா = akka, மிச்சம் = michcham, வட்டம் = vattam, நத்தை = naththai, உப்பு = uppu.

4. இன (varka) எழுத்தோடு சேர்ந்து வந்தால் மென்மையாகவும் இனிமையாகவும் ஒலிக்கும். எ.டு.: மங்கை = mangai, இஞ்சி = inji, நண்டு = nandu, மந்தை = mandhai, அம்பு = ambu.

இவை மட்டுமல்ல குற்றியலுகரம், குற்றியலிகரம் என வேறு சில ஒலி மாறுபாடுகளும் இந்த எழுத்துக்களுக்கு உண்டு. ஆனால் அவையெல்லாம் தமிழுக்கு மட்டுமே உரியவை. இங்கு மற்ற மொழிகளில் இருக்கும் ஒலிகள் தமிழில் இருக்கின்றனவா என்பதைப் பற்றி மட்டும்தான் பார்த்து வருகிறோம் என்பதால் பட்டியலில் அவற்றைச் சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் கொஞ்சம் நீளும்.

எல்லாரும் தமிழில் ‘ja’ இல்லை என நினைக்கின்றனர். ஆனால் மேலே நான்காம் எண்ணில் உள்ள ‘இஞ்சி’ எனும் சொல்லின் ஆங்கில எழுத்துக்கூட்டலைப் பாருங்கள்! தமிழ்ச் சகரம் தனது இன எழுத்தான ஞகர மெய்யெழுத்துடன் சேரும் எல்லா இடங்களிலும் ‘ja’-வாக ஒலிப்பதை உணரலாம் (எ.டு.: மஞ்சள், பஞ்சு, தஞ்சை).

இதே போல் ககர வரிசையின் கீழ் வரும் ஹகர மெய்க்கும் தமிழில் தனி எழுத்தே இருக்கிறது.

பள்ளியில் நமக்கு அனா, ஆவன்னா கற்பிக்கும்பொழுது ஆய்த எழுத்தை ‘அக்கு’ என்று சொல்லித் தந்திருப்பார்கள். உண்மையில் இதன் சரியான ஒலிப்பு ‘ahku’ என்பதுதான். அதாவது ஃ = ஹ். இதற்கு ஆதாரம் என்ன எனக் கேட்டால், அரிச்சுவடிப் பாடத்தில் ஆய்த எழுத்துக்கு எஃகு எனும் சொல்லைக் காட்டி ‘ekku’ எனச் சொல்லித் தருவார்கள்; ‘ekku’ என எழுத வேண்டுமானால் ‘க்’ பயன்படுத்தியே எழுதி விடலாமே? எதற்காக அங்கே ஃ? இதிலிருந்தே ஆய்த எழுத்தின் ஒலி ‘க்’ இல்லை என்பதை உணரலாம். எனவே எஃகு = எஹ்கு என்பதே சரி! (மேலும் விவரங்கள்: https://bit.ly/341ptRX).

ஆக, எத்தனை ஒலிகள் தமிழில் இருக்கின்றன, பார்த்தீர்களா? இப்பொழுது சொல்லுங்கள், தமிழிலா எழுத்துத் தட்டுப்பாடு?

ஆகவே தமிழிலும் அதற்குத் தேவையான அளவுக்கு வல்லின எழுத்து வகைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் தனி எழுத்துக்களாக இல்லை. உண்மையில் அது குறையில்லை, சிறப்பு!


அறிவியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கருவி என்பது ஒரு துறையின் தொடக்கக் கால வடிவமைப்பு என்பதை அறிய முடியும். இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு நம் வீட்டுத் தொலைக்காட்சியின் தொலை இயக்கி (remote control). ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்தத் தொலை இயக்கிகளில் எத்தனை விசைகள் (keys) இருந்தன! ஒலியைக் கூட்ட ஒன்று, குறைக்க ஒன்று, அலைவரிசையில் முன்னே போக ஒன்று, பின்னே போக ஒன்று என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி விசைகள்.

ஆனால் இன்றைய திறன்தொலைக்காட்சிகளின் (smart TVs) தொலை இயக்கிகளைப் பாருங்கள். மொத்தமே ஏழெட்டு விசைகள்தாம். அவையே எல்லா வேலைகளையும் செய்து விடுகின்றன. இதுதான் பல்முனைப் பயன்பாடு (Multi-Purpose function)! உங்களைச் சுற்றியுள்ள பல பொருட்களில் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் இன்று பார்க்க முடியும்.


ஆகவே சமற்கிருதம் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகள் ஒவ்வோர் ஒலிப்புக்கும் ஒவ்வோர் எழுத்தைக் கொண்டிருப்பது அம்மொழிகளின் எழுத்தமைப்பு இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதைத்தான் காட்டுகிறது. மாறாக, அவற்றுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் அந்தக் காலத்திலேயே இப்படிப் பல்முனைப் பயன்பாட்டுடன் கூடிய எழுத்துக்களோடு திகழ்வது முன்னைப் பழமைக்கும் பழமையாய் மட்டுமின்றிப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் அது விளங்குவதையே காட்டுகிறது!

அப்படியே எழுத்து வளம்தான் ஒரு மொழியின் வளம் என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தமிழில் இருப்பது போல் எழுத்து வளம் வேறெந்த மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை.

ஆம்! தமிழில் வல்லினத்தில் வேண்டுமானால் எழுத்து வகைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால் மெல்லினத்திலும் இடையினத்திலும் தமிழில் இருப்பது போல் வகை வகையான எழுத்துக்கள் வேறு மொழிகளில் கிடையாது.

நம் அனைவருக்குமே தெரியும்; தமிழில் ல – ள – ழ என ‘L’ ஒலிப்புக்கு மட்டும் மூன்று வகைகள் உண்டு. ண – ந – ன என ‘N’ ஒலிப்பிலும் மூன்று விதங்கள் உண்டு. ‘R’ ஒலிப்புக்கும் ர – ற என இரண்டு உண்டு. இவை வேறு எத்தனை மொழிகளில் இருக்கின்றன?

பொதுவாக, ஓர் எழுத்தின் ஒலி என்ன என்பதைக் காட்டப் பலரும் ஆங்கிலத்தைத்தான் நாடுவோம். ஆனால் ஆங்கிலத்தாலேயே எழுத இயலாத சொற்களின் எண்ணிக்கை தமிழில் பெரிது! கண்ணனை kannan என எழுதுகிறோம். அப்படியானால் கன்னம் என்பதை எப்படி எழுதுவது? வெள்ளத்தை vellam என எழுதினால் வெல்லத்தை எப்படி எழுதுவது? அட, இவ்வளவு ஏன்? தமிழ் என ஆங்கிலத்தில் எப்படி எழுத முடியும்? Thamizh என எழுதலாமே என்பீர்கள். அதுவே தவறு! zha என்பது சகரத்துக்கும் ஸகரத்துக்கும் இடைப்பட்ட ஓர் ஒலிதானே தவிர அது ழ ஆகாது. இது தனிப்பெரும் தமிழறிஞரும் செம்மொழிப் போராளியுமான இலக்குவனார் அவர்கள் ழகரத்தை ஆங்கிலத்தில் எழுதப் பரிந்துரைத்த ஒரு மாற்று வழிமுறைதானே தவிர, "தமிழ் எழுத்துக்கள் X ஆங்கில எழுத்துக்கள்" எனத் தீர்க்கமாகப் பார்த்தால் ஆங்கிலதத்தால் ழ-வை எழுதவே இயலாது. இப்படி ஆங்கிலத்தாலும் பிற மொழிகளாலும் எழுத இயலாத சொற்கள் தமிழில் ஏராளம்.

மெல்லினத்தையும் இடையினத்தையும் எழுதுவது இருக்கட்டும்! சார்பெழுத்துக்கள் எனத் தமிழில் இருக்கின்றனவே! அவற்றை எழுத எத்தனை மொழிகளால் இயலும்?

எழுத்தறிவியலில் சிகரம் தொட்ட தமிழர்கள்

நீட்டலளவை (linear measure), முகத்தலளவை (measure of capacity), நிறுத்தலளவை (weighing measure) போன்ற பூதியல் (physical) அளவீடுகளுக்கே செந்தரமான (standard) அளவுகோல்கள் உருவாக்கப் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தேவைப்பட்டது மனித குலத்துக்கு. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவுக்கு அளவுகோல் கண்டவர்கள் தமிழர்கள்! இதைக்


“கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”


என்று 2500 ஆண்டுகள் முன்பே பதிவு செய்திருக்கிறது தொல்காப்பியம்!

அதாவது கண் இமை மூடித் திறக்கும் நேரத்தை அடிப்படை அளவுகோலாகக் கொண்டு, அந்த அளவீட்டுக்கு மாத்திரை என ஒரு பெயரும் சூட்டிக் குறில் எழுத்துகளுக்கு (எ.டு.: அ, இ, உ) ஒரு மாத்திரை, நெடில் எழுத்துகளுக்கு (எ.டு.: ஆ, ஈ, ஊ) இரண்டு மாத்திரை, மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை என அந்தக் காலத்திலேயே மிக நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறது தமிழினம்.

இவ்வரிசையில் சார்பெழுத்துகளான ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கு அரை மாத்திரை என அறியப்பட்டுள்ளது. இவற்றில் ஆய்த எழுத்தின் ஹ் ஒலியை மட்டுமே மற்ற மொழிகளில் எழுத முடியும். குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றை எழுதுவது பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. தமிழிலும் இவற்றுக்கெனத் தனி வரி வடிவம் இல்லைதான். ஆனால் மேலே சொன்ன பல்முனைப் பயன்பாட்டு முறையில் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்தமைப்பில் தனி எழுத்துக்களாகவே கணக்கில் கொள்ளப்படும் இவற்றை ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ எழுத இயலாது.

இதற்கும் மேலே மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் எனக் கால் மாத்திரை அளவேயான ஒலிப்புகளையும் நுணுக்கமாகத் தமிழிலக்கணம் கண்டறிந்திருப்பது மொழியறிவியலின் உச்சம்!

அதையும் விட நுட்பமாக உடம்படுமெய், அரையுயிர்க் குற்றியலுகரம் போன்ற அதி உச்சக்கட்ட இலக்கணக் கூறுகளும் தமிழில் உண்டு. இவை போக, ஒலி நீளும் இடங்களான உயிரளபெடை, ஒற்றளபெடை என இன்னும் நீள்கிறது நுட்பங்களின் பட்டியல். அவற்றையெல்லாம் எழுத ஒரு கட்டுரையும் போதாது; எழுதும் அளவுக்கு எனக்குத் தமிழறிவும் போதாது.

எனவே எழுத்து வளம்தான் மொழி வளம் என்பதாகவே வைத்துக் கொண்டாலும் தமிழின் எழுத்து வளத்தோடு போட்டியிட எந்த மொழியாலும் இங்கு முடியாது என்பதைத் தமிழ்ப் பகைவர்கள் நன்றாக மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டும்! வெறுமே ஓரிரண்டு எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பதை மட்டுமே பிடித்துக் கொண்டு பேசக்கூடாது. என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் எல்லாரிடமும் இருப்பது தன்னிடமும் இருப்பதற்குப் பெயர் பெருமை இல்லை. யாரிடமும் இல்லாதது தன்னிடம் இருந்தால் அதுதான் பெருமை. அப்படிப்பட்ட பெருமைகள் தமிழுக்கு நிறையவே உள்ளன என்பதைத்தான் இதுவரையில் பார்த்தோம். முடிவாக இவற்றுக்கெல்லாம் மகுடமான ஒன்று!

வாழ வைக்கும் தமிழ்!

இப்படி வல்லின எழுத்து வகைகள் குறைவாகவும் மெல்லின – இடையின எழுத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் மற்ற மொழிகள் போல் வயிற்றிலிருந்து, அடித் தொண்டையிலிருந்தெல்லாம் கடினப்பட்டுப் பேச வேண்டிய சொற்கள் எதுவுமே – அதாவது மூச்சொலிகளே – இல்லாமல் மென்மையும் குழைவுமான எழுத்துக்களே தமிழின் எல்லாச் சொற்களிலும் நிறைந்து காணப்படுகின்றன. மற்ற மொழிகளை விடத் தமிழ் பேச மிகவும் இனிமையாகத் திகழக் காரணமே இதுதான்.

இதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது எனக் கேட்டால், கட்டாயம் இருக்கிறது!

தமிழறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் எனப் போற்றப்படும் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் தனது ‘செந்தமிழ்ச் சிறப்பு’ நூலில் இது பற்றி எழுதுகையில், “தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாக இருப்பதனாலேயே, அஃது உலக முதல் மொழியாய்த் தோன்றியும் இறக்காமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசி வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு மொழிக்கு வேண்டியது சொல் வளம்தானே தவிர ஒலி வளம் இல்லை” என்றும் நறுக்குத் தெறித்தது போல் கூறியுள்ள அவர், அத்துடன் “ஒலி மென்மையால் தமிழுக்கு உயர்வேயன்றி இழிவில்லை என்றும் அதைப் பேசுவார்க்கு மூச்சு வருத்தமும் பேச்சு வருத்தமும் இல்லாததால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் அறிந்து கொள்க” எனத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

அதாவது தமிழில் பேசினால் நீண்ட காலம் வாழலாம் என்கிறார் தமிழ்ப் பேரறிஞர் பாவாணர்!

இது என்ன புதுக் கதை என நினைப்பவர்கள் ஓகப் பயிற்சி (yogasana) பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

ஓகக் கலை பற்றி இந்நாளில் அதிகமாகப் பேசப்படுகிறது. ஓக நாள் (yoga day) கூடக் கொண்டாடுகிறார்கள். மனிதர்களை நோயும் முதுமையும் நெருங்காமல் என்றும் இளமையோடு வாழ வைக்கும் இக்கலையில் மிக முக்கியமானது மூச்சொழுங்குப் (பிராணாயாமம்) பயிற்சி. எவ்வளவுக்கு எவ்வளவு மூச்சைக் குறைவாகச் செலவிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் வாழ்நாள் நீடிக்கும் என்பது இதன் அடிப்படைக் கோட்பாடு. நிமையத்துக்கு மூன்று / நான்கு தடவை மட்டுமே மூச்சு விடும் ஆமை ஒரு நூற்றாண்டுக்கு மேல் உயிர் வாழ்வதையும் மிகுதியாக மூச்சைச் செலவழிக்கும் மான், முயல், புலி, சிங்கம் போன்றவை குறைந்த காலமே வாழ்வதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள் ஓக ஆசான்கள்.

இது சரியா தவறா எனத் தீர்ப்புச் சொல்ல நான் ஓகக்கலை அறிந்தவனோ மருத்துவனோ இல்லை. ஆனால் உலகெங்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாக ஏற்கப்பட்டுள்ள ஓகக்கலையுடைய இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்பொழுது மூச்சு அதிகம் செலவாகாத தமிழில் பேசினால் வாழ்நாள் நீடிக்கும் என்பதும் சரியானதே என்பதை உணரலாம்.

இது மட்டுமில்லை, இருக்கும் மொழிகளிலேயே மிகவும் அதிகமாக மூச்சு செலவழிவது சமற்கிருதத்துக்குத்தான் என்றும் பதிவு செய்துள்ளார் மொழிஞாயிறு.

தமிழாய்வாளர் பா.வே.மாணிக்க நாயகர் ஒரு முறை உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குச் செலவாகும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில் சமற்கிருதத்திற்கே மூச்சு மிக அதிகமாகச் செலவழிவதும் தமிழுக்குத்தான் மிகக் குறைவாகச் செலவாவதும் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாவாணர் மேற்கண்ட நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் “சமற்கிருதம் தேவமொழி. அதனால் அதுதான் உயர்வானது” என்பவர்கள் அந்த மொழியிலேயே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவாகத் தேவர்களிடமே போய்ச் சேர வேண்டியதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

முடிவாகச் சொல்ல விரும்புவது இதுதான். மொழி என்பது மண்ணையும் மக்களையும் சார்ந்து உருவாவது. அந்தந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான சொற்கள்தாம் அந்தந்த மொழிகளில் உருவாகும். அந்தச் சொற்களை எழுதத் தேவையான எழுத்துகள் மட்டும்தாம் அந்த மொழிகளில் இடம் பெறும். அதனால் உலகின் எந்த மொழியிலும் எல்லா ஒலிகளும் இருக்காது, இல்லை.

இதற்காகத்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளின் எல்லா எழுத்துக்களையும் வரிவடிவில் கொண்டு வருவதற்காகவே பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphabet) எனும் ஒரு தனி வரிவடிவமே உருவாக்கப்பட்டுள்ளது.

இது எதுவுமே தெரியாமல் “என் மொழியில் இருப்பது உன் மொழியில் இல்லை. எனவே உன்னுடையது மட்டம்; என்னுடையது உயர்வு” எனப் பேசுவது மொழியியலின் அடிப்படை கூடத் தெரியாத மூடத்தனம்.

மூடத்தனம் தவிர்ப்போம்!
மொழியறிவை வளர்ப்போம்!


❖ ❖ ❖ ❖ ❖

* பி.கு-1: தமிழ் வல்லினத்தில் உள்ள றகரம் தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்து என்பதால் மற்ற மொழி வல்லின எழுத்துக்கள் தமிழில் உள்ளனவா என்பதை மட்டும் ஆராயும் இந்த வரிசையில் அந்த எழுத்து பற்றிப் பேசவில்லை.

** பி.கு-2: டகரத்தில் தமிழ்ச் சொற்கள் துவங்குவதில்லை என்பதால் இந்த நெறி அதற்குப் பொருந்தாது. எனவே இந்த வரிசையில் அதை எடுத்துக்காட்டவில்லை.

(நான் ‘கீற்று’ இதழில் ௨௦-௧௦-௨௦௨௦ அன்று எழுதியது)

 
கட்டுரை ஆக்கத்தில் உதவி: தமிழாய்வாளர் சேதுபாலா.
 
உசாத்துணை:
௧. அறியப்படாத தமிழ்மொழி, மே 2018, முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் (கரச | KRS), தடாகம்
௨. ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழ்

(தமிழிலேயே இப்படி ஜ, ஸ எல்லாம் இருக்கிறது என்றால் ஏன் கிரந்த எழுத்துக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?
– உங்கள் அடிப்படை மொழிப் புரிதலையே புரட்டிப் போடக்கூடிய
இதற்கான விடை தனிப் பதிவாக விரைவில்!)

படங்களுடன் படிக்க:-
https://agasivapputhamizh.blogspot.com/2020/10/why-tamil-does-not-have-many-consonants-shocking-reasons.html

Kamal Sir

unread,
Oct 24, 2020, 10:47:22 PM10/24/20
to mint...@googlegroups.com
Super sir 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/153d4865-5826-4b38-b33f-34770657eb00n%40googlegroups.com.

இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)

unread,
Oct 29, 2020, 6:20:09 AM10/29/20
to மின்தமிழ்
மிக்க நன்றி நண்பரே! 😊❤🙏

ஞாயி., 25 அக்., 2020, முற்பகல் 8:17 அன்று, Kamal Sir <sirka...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/P5AKcV8n2PY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPMdAJK%2BZ_J5cXAifQpNsdhisDPGQ-HZOvPCCG249%3D%3DSLfmPmA%40mail.gmail.com.


--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages