வணக்கம்...
புணர்ச்சி விதிகள்: தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு பகுதியும் பருக பருக திகட்டாத தேன் துளி என்றாலும், புணர்ச்சி விதி அதில் கொம்புத்தேனாய் இனிக்கும் ஒரு பகுதி. யாருக்குனு கேட்கறீங்களா... எனக்குத்தாங்க... காரணம், என்னோட வயசாவும் இருக்கலாம்... :)))
இனி பேச்சுத் தமிழ்... :)))
இது ஒன்னும் யாருக்கும் தெரியாத விஷயம் இல்லை... நான் சொல்லப் போற விதமும் மத்தவங்க சொன்ன விதத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் புதுசாவும் இருக்கப் போறதில்லை... அப்புறம் எதுக்குடா இந்த மடல்னு கேட்கறீங்களா... என்ன செய்ய, சில தப்பைப் பார்க்குறச்சே சில மடல்கள் எழுதணும்னு தோணுதே... எழுதி நானே வச்சுக்கிட்டா அதுல என்ன திருப்தி... நாலு பேருக்கு அனுப்பி அவங்களையும் குழப்புறதுல தானே நமக்கு திருப்தி...
புணர்ச்சி விதியை ஏழாம் வகுப்பு இலக்கணப் புத்தகத்துல தான் முதன் முதலா படிச்சதா நினைப்பு...
இயல்பு + புணர்ச்சி = இயல்பு புணர்ச்சி
விகாரம் + புணர்ச்சி = விகாரப் புணர்ச்சி
புணர்ச்சியில தோன்றல், திரிதல், கெடுதல்னு வகைகள் இருக்கு...
சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், நான் எதுக்காக இந்த மடலை ஆரம்பிச்சேன்னு சொல்லவே இல்லையே இன்னும்... இதோ வந்துடறேன் மேட்டருக்கு...
பல மடல்களாக பிரிஞ்சு பல பேரு விவாதம் பண்ற இழையில ஒரு விஷயம் பார்த்தேன்...
அது,
தே + வாரம் = தேவாரம் அப்படின்னு...
சில விஷயங்களை எழுதும் போது, நமக்கு பின்னால வர்ர சந்ததியினருக்கு நாம தப்பான ஒரு விஷயத்தை முன்னுதாரணமா தரக் கூடாதுனு பெரியவங்க எல்லாம் நினைச்சா நல்லாருக்கும்...
தேவாரத்தை தே + வாரம்னு பிரிச்சா, பூவரசன் அப்படின்றதை பூ + வரசன் அப்படின்னு பிரிச்சு எழுதுவீங்களா...
பூ + அரசன் = பூவரசன்
எப்படி ஆகுது.
இ,ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வழி வவ்வும் என்னும் விதிப்படி
பூ + அரசன் = பூவ்+அரசன் என்றாகி பின் உடலொடு உயிரொன்றுதல் இயல்பே என்னும் விதிப்படி பூவரசன் என ஆகுது...
இதன் படியே,
தேவாரம் என்பதை தே + ஆரம் என்றோ அல்லது தேவு + ஆரம் என்றோ பிரித்து புணர்ச்சி விதிப்படி தேவாரம் ஆனதுனு சொல்லலாம்.
முதல்ல,
தே + ஆரம், பூவரசனுக்கு சொன்னாப்புலயே, இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர் வழி வவ்வும் விதியும், உடலொடு உயிரொன்றுதல் இயல்பு விதியும் சேர்ந்து தேவாரம் ஆச்சுதுன்னு சொல்லலாம்.
அப்படி இல்லையா,
தேவு + ஆரம், உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் விதிப்படி
முதல்ல தேவ் + ஆரம் என திரிந்து பின் உடலொடு உயிரொன்றுவது இயல்பே என தேவாரம் ஆச்சுதுன்னும் சொல்லி இருக்கலாம்...
அதையெல்லாம் விடுத்து, ஏதோ இயல்பு புணர்ச்சியா வர்ராப்புல தே + வாரம் = தேவாரம்னு சொல்லி ஔ தவறான முன்னுதாரணத்தை தர்ரது நல்லாவா இருக்கு சொல்லுங்க...
பின்குறிப்பு: தேவாரம் = தே + ஆரம் என்பதே நூறு சதம் சரி என எனக்குத் தோன்றினாலும், தேவு + ஆரம் என்பதும் தவறல்ல என்றே தோன்றுகிறது. தேவு எனும் சொல் பழங்காலத்தில் தேவர்களை, தெய்வங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருப்பதாக என் உள்ளுணர்வு சொல்வதால் அதற்கான விளக்கமும் கொடுத்திருக்கிறேன். இக்கட்டுரையை ஏற்பவர்கள் இதன் தொடர்ச்சியாக தேவு என்னும் பதம் சரியா தவறா என ஆராய்ந்து அதன் பிறகு அதனை ஏற்றுக் கொள்ளவே நான் ஆலோசனை வழங்குகிறேன். இப்பதிவு முழுக்க முழுக்க எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் எழுதியதே... நான் எழுதியதற்கு ஆதாரம் நான் கற்றறிவும் எனது சிற்றறிவும் மட்டுமே...
மீண்டும் சந்திப்போம்... :)))