(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 554-558
554. ஒருக்க வெருளி – Tongyiphobia
ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி.
நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் பிறர் பிள்ளைகளும் படிப்பிலோ விளையாட்டிலோ ஒத்து இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
ஒருக்கம்(sameness) = ஒரேபடித்தான நிலை/ஒரே தன்மை /ஒத்த தன்மை.
00
555. ஒரே உடை வெருளி – Idemophobia
தொடர்ந்த ஒரே உடையை அணிவது குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒரே உடை வெருளி.
உடுப்பினை மாற்றாமல் அதே உடையை அணிந்து இருப்பதனால் தேவையற்ற வெறுப்பிற்கும் பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர். இதனைப் பெண்களுக்கான வெருளியாகக் குறிப்பிடுகின்றனர். பெண்கள் ஆடை அணிந்து அழகு பார்ப்பதில் கூடுதல் கருத்து செலுத்துபவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் ஆண்களும் பெண்கள் தங்களைப்பார்க்க வேண்டும் என்பதற்காக நாளும் பொழுதும் ஆடைமாற்றுவதில் கருத்தாக இருப்பார்கள். உழைப்பாளிகள் இதில் கருத்து செலுத்தாமல் இருக்கலாம். ஆனால், கொண்டாடப்படும் பெயராளிகள்(celebrities) உடைகளிலும் கருத்து செலுத்துபவர்களே! வகைவகையான உடை அணிந்த ஆடவர் இதழ்களின் அட்டைகளில் இடம் பெறுவதும் பல்வேறு விளம்பரத் தோற்றங்களில் இடம் பெறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.
00
556. ஒலி பெருக்கி வெருளி – Megaphonophobia
ஒலி பெருக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒலி பெருக்கி வெருளி.
வெளியிடங்களில் கூட்டத்தினரிடையே அல்லது தொலைவில் உள்ளவர்களை அழைக்க ஒலியைப் பெரிதாக்கப் பயன்படும் கூம்புவடிவிலான ஏந்துவே ஒலி பெருக்கி. சிலர் அரங்கிற்குள்ளும் ஒலி பெருக்கியைப் பயன்படுத்தும் பொழுது ஒலியை அளவுக்கு மீறி வைப்பதால் கேட்போர் எரிச்சலுறுகிறார்கள். அரசு கூம்பு வடிவ ஒலி பெருக்கிக்குத் தடை விதித்துள்ளது.இருப்பினும் பயன்படுத்துவோர் உள்ளனர்.
ஒலி வெருளி உள்ளவர்களுக்கு ஒலி பெருக்கிவெருளியும் வர வாய்ப்புள்ளது.
00
557. ஒலி வெருளி – Phonophobia/Sonophobia
குரலொலி, உரத்துப் பேசுதல், தொலைபேசி ஒலி, பிற ஒலி முதலியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஒலி வெருளி.
தொலைபேசி வந்தபின் தொலைபேசி அச்சமும் ஒலி வெருளியில் அடங்கிவிட்டது.
இரைச்சல் வெருளி(Acousticophobia) போன்றதுதான் இதுவும்.
phōnē என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒலி என்பதுதான். ஆனால், இப்பொழுது ஒலி வரும் கருவியை நாம் phone என்று கூறுகிறோம்.
00
558. ஒலிப் பதியன் வெருளி – Magnitofonophobia
ஒலிப் பதியன் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப் பதியன் வெருளி.
ஒலிப்பதியன் பயன்படுத்தும்பொழுது ஒலிஇழை சிக்கிக் கொள்ளும், மீள்பதிவோ கேள்பதிவோ சரியாக வேலைசெய்யாது என்று கருதிக் கவலை கொள்வோர் உள்ளனர். 00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
இலக்குவனார் திருவள்ளுவன் 21 October 2025 No Comment
(வெருளி நோய்கள் 554-558 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 559-563
559. ஒலிப்பிக் கடிகார வெருளி – Xypnitiriphobia
மணிஒலிப்பிக் கடிகாரம்(alarm clock) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப்பிக் கடிகார வெருளி.
விழிப்பிற்காக மணியை ஒலிக்கச்செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குரிய மணிப்பொறி, ஒலிப்பிக் கடிகாரம் ஆகும்.
00
560. ஒலிம்பிய வெருளி – Olympicphobia
ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிம்பிய வெருளி.
பேரார்வமும் விடாமுயற்சியும் அளவற்ற நம்பிக்கையும் இருப்பினும் மறுபுறம் வாகைசூட இயலுமா என்ற கவலையும் சேர்வதால் ஒலிம்பிக்குப் போட்டிகளில் பங்கேற்பதில் பேரச்சம் கொள்கின்றனர்.
விளையாட்டு வெருளிபோன்றதுதான் இதுவும்.
00
561. ஒலி ஒளியிழை வெருளி – Cassettophobia
ஒலியிழை, ஒளியிழை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலி-ஒளியிழை வெருளி.
இழைகள் சிக்கிக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் பேரச்சம் கொள்கின்றனர். ஒலிப்பதியன் வெருளிக்குக் காரணமாய் அமைவதும் ஒலி-ஒளியிழை வெருளியே.
ஒலி இழை அல்லது ஒளி இழை அடங்கிய பெட்டகத்தைக் குறிப்பிடும் வகையில் ஆங்கிலத்தில் பெட்டக வெருளி என்கின்றனர்.
00
562. ஒலிவாங்கி வெருளி – Microphonophobia
ஒலிவாங்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிவாங்கி வெருளி.
நாம் பேசும் பொழுது ஒலி வாங்கிச் சரியாக வேலை செய்யாது, கர், குர் என்ற ஒலியை உடன் எழுப்புகிறது என்றெல்லாம் தேவையற்றுக் கவலைப்பட்டு ஒலி வாங்கி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
563. ஒல்லியன் வெருளி – Slendermanphobia
புனைவுரு ஒல்லியன்(Slenderman) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒல்லியன் வெருளி.
ஒல்லி மனிதன் (Slender Man) என்பது புனைவுரு பாத்திரம். இதனைச் சுருக்கமாக ஒல்லியன் எனக் குறித்துள்ளோம். மெலிந்த இயல்புக்கு மாறான உயரம் கொண்டதும், கூறுகள் இல்லாத தலையையும் முகத்தையும் கொண்டதும், கறுப்பு நிற உடை அணிந்ததுமான ஓர் உருவம். 2009இல் கைச்சுவை இணையத்தளப் பயனரான எரிக்கு நட்சன் (Eric Knudsen) என்பவரால் உருவாக்கப்பட்டது.
இலக்கியம், ஓவியம், நிகழ்படத் தொடர்கள் போன்ற ஊடகங்களில் ஒல்லியனைக் காண முடியும். ஒல்லியன்பற்றிய கதைகள் அவன் மக்களை – குறிப்பாகச் சிறுவர்களைப் பின் தொடர்தல், கடத்துதல், காயப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபடுவதாகக் காட்டுகின்றன. ஆதலின் இதைப் பார்ப்போருக்கு – அவர்களுள் சிறுவர்க்கு – அச்சம் உருவாதல் இயற்கையே. கற்பனையை மெய்யாகக் கருதும் பொழுது ஒல்லியனால் தீங்கு நேரும் எனப் பேரச்சம் வளர்கிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 20 October 2025 அகரமுதல
தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே
ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது!
“திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் பெருகி வருவதால் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.
கடவுளுக்கு உருவம் இல்லை என்பதே தொன்மையான கருத்து. அருவமான கடவுளை வழிபடுவதற்காக ஒளி வழிபாட்டைப் பின்பற்றியிருக்கிறார்கள். மரபு வழியிலான ஒளி வழிபாட்டையே இராமலிங்க வள்ளலாரும் பின்பற்றி வலியுறுத்தியுள்ளார்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர்
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு.ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டடோமோ…” என்கிறார்.
உருவமோ பெயரோ இல்லாத கடவுளுக்குத்தான் பல உருவங்களை வடித்துப் பல பெயர்களிட்டு வணங்குகின்றனர் என்கிறார். உருவமில்லாக் கடவுளைத்தான் ஒளி வடிவில் கண்டு வணங்குகின்றனர் மக்கள்.
ஒளி வழிபாட்டிற்காக விளக்கொளியை வழிபட்டுள்ளனர்.
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக்கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது
வந்ததாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நக்கீரர் நெடுநல்வாடையில்(அடிகள் 42 – 43) கூறுகிறார். (ஈந்திரி – நுண்ணிய திரியில்; கொளீஇ – கொளுத்தி; நெல்லும் மலரும் தூஉய் – நெல்லையும் மலரையும் தூவி)
பெண்கள் மாலைக் காலத்திலே இரும்பாலான விளக்கை ஏற்றி வைப்பார்கள்; நெல்லையும் மலரையும் தூவி அவ்விளக்கொளியை வணங்குவார்கள் என்கிறார். இவ்வாறு அன்றாடம் விளக்கு வழிபாடு நடந்துள்ளது. இதுவே, பின்னர்க் கார்த்திகை நாளில் கார்த்திகை மீன் நாளன்று சிறப்பாக வழிபடும் விழாவாக மாறியது. கார்த்திகை விழாவைப் பெருவிழாவாக நாடெங்கும் கொண்டாடினர். அந்நாள் புது மணமக்களுக்குத் தலை கார்த்திகையாக விளங்கியது. இதுவே, கார்த்திகை தீபாவளியாக மாறிய பின்னர்த் தலை தீபாவளியாக மாறியது.
கார்த்திகைத் திருநாள் குறித்த மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.
தனித்தனியாகக் கொண்டாடிய கார்த்திகைத் திருநாள் குமுகாய விழாவாக மாறிப் பல குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”
(அகநானூறு: 11: 1-5) என ஒளவையார் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
வானத்தில் ஒளிவட்டமான சூரியன் ஊர்ந்து செல்கிறது. அப்போது நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. கடும் வெப்பத்தால் அழகிய காடு காய்ந்தது. அதனால் இலையே இல்லாமல் இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அதனைக் கண்டார் ஒளவையார்.அவருக்குப் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஏற்றிய அழகிய விளக்குகளின் சுடர் கொடியாகப் படர்ந்து வரிசையாய் நீண்டு செல்வது போல் தோன்றியுள்ளது.
தீபாவளி என்றால் என்ன? தீபம்=விளக்கு; ஆவளி=வரிசை. விளக்கு வரிசையைத்தானே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒளவையார் குறிப்பிடுகிறார்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல்நாள் பரணி நட்சத்திரம். கார்த்திகையை வரவேற்க முதல்நாளே விளக்கேற்றி வைப்பார்கள். அதனையே புலவர் கண்ணங் கூத்தனார் தலைநாள்விளக்கு என்கிறார்.
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி”
கார்நாற்பது: 26: 1 – 3
நலம்தரும் கார்த்திகைத் திருநாளின் தலைநாளில் நாட்டுமக்கள் ஏற்றி வைத்த விளக்கு வரிசையைப் போல் எல்லா இடங்களிலும் வரிசையாகத் தோன்றிப்பூக்கள் பூத்தனவாம். பொதுவாகப் புலவர்களுக்குச் செந்நிறப் பூக்கள் யாவும் கார்த்திகை விளக்கொளிபோலவே காட்சியளித்துள்ளன.
போர்க்களத்தில் குருதி ஓடுவதைப்பார்க்கும் புலவர் பொய்கையாருக்கு அது கார்த்திகை விளக்குகளின் செஞ்சுடரைத்தான் நினைவூட்டுகி்றது.
“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்
ஆர்து அமர்அட்ட களத்து”
இலக்குவனார் திருவள்ளுவன் 21 October 2025 No Comment
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail,receipt
? case என்றால் என்ன பொருள்?
நீங்கள் எந்தத் துறை?
? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?
‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.
case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.
மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.
? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்