குறள் தரும் சொற்சுவையும் பொருட்சுவையும்: தேமொழி

182 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 11, 2025, 12:10:17 AMJun 11
to மின்தமிழ்
“யாதெனின். . .  யாதெனின். . . “

திருக்குறளில்  11 குறள்கள் "யாதெனின்" என்று கேள்வி எழுப்பி, குறிப்பிட்ட ஒரு கருத்தை "எது என்றால்" என்று விளக்கும் வகையில் அமைகின்றன. இக்கட்டுரையின் குறள்களுக்கு  மு. வரதராசனார் எழுதிய விளக்கவுரை எடுத்தாளப்பட்டுள்ளது.
 
கொல்லாமை என்பதை வலியுறுத்த விரும்பும் வள்ளுவர் அருளல்லாது எது என்றால், அறச்செயல் எது என்றால், நல்லொழுக்கம் எது என்றால் என்று பல்வேறு வகைகளில் கேள்வி எழுப்பி,  கொல்லாமை என்பதுதான் நாம் பின்பற்ற வேண்டிய நல்லறம் என்று விளக்குகிறார்.
அருளல்லாது எது என்றால்;
     அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
     பொருளல்ல தவ்வூன் தினல்.   [254]
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.  

அறச்செயல் எது என்றால்;
     அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
     பிறவினை எல்லாந் தரும்.   [321]
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.  

[ நன்றி - உலகத்தமிழ்-இதழ்-288-11.06.2025]


தேமொழி

unread,
Jun 17, 2025, 11:57:16 PMJun 17
to மின்தமிழ்
நல்லொழுக்கம் எது என்றால்;
     நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     கொல்லாமை சூழும் நெறி.   [324]
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.  

இதே முறையில், மற்ற நல்லொழுக்கங்களான கள்ளாமை, தீங்கு செய்யாமை ஆகியவற்றையும் எது என்ற கேள்வி எழுப்பி பதில் கூறும்  முறையில் விளக்குகிறார்.
     அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
     வேண்டும் பிறன்கைப் பொருள்.   [178]
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
     தீமை இலாத சொலல்.   [291]
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.  

உயிரைக் கொல்லுதல், ஒருவர் பொருளைக் களவாடுதல், தீங்கு செய்தல் இவற்றைத் தவிர்க்கும் நோக்கில் எது என்றால் என்று கேள்வி எழுப்பி  விளக்கும் வகையில் இக்குறள்கள் அமைந்திருக்கின்றன.

சிறந்த நட்பு எது என்றால்; நட்பிற்கு இலக்கணமாக அமைவது; மாறுபாடு இல்லாத நெஞ்சத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அரவணைத்துச் செல்லும்  நிலையும்; நெடுநாள் நட்பின் காரணமாக  ஒருவர் உரிமையுடன் நமக்கு ஏற்புடையது அல்லாத ஒரு செயலைச் செய்துவிட்டாலும் நட்பு கருதி அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுமாகும்.  
     நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
     ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.   [789]
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.  

     பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
     கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.   [801]
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.  

[ நன்றி - உலகத்தமிழ்-இதழ்-289-18.06.2025]

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 19, 2025, 4:58:07 PMJun 19
to mint...@googlegroups.com
திருவள்ளுவர் எழுப்பும் வினாக்களையும் தரும் விடைகளையும் நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் அம்மா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/73f45d21-1d77-4a82-9c49-a00fdcd4e0ffn%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Jun 19, 2025, 5:12:45 PMJun 19
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா 🙏🙏

தேமொழி

unread,
Jun 25, 2025, 1:30:19 AMJun 25
to மின்தமிழ்

அறியாமை  எது என்றால்;
     பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
     ஊதியம் போக விடல்.   [831]
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

     வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
     உடையம்யாம் என்னும் செருக்கு.   [844]
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.  

சான்றோர்கள் பண்பு எது என்றால்;
     சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
     துலையல்லார் கண்ணும் கொளல்.   [986]
சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.  

வறுமையின் கொடுமை எது என்றால்;
     இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
     இன்மையே இன்னா தது.   [1041]
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.  

"அரியது கேட்கின் வரிவடி வேலோய்" என்று  ஔவையார் பாடல் ஒன்று கேள்விக்கு  விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பதும், தொன்றுதொட்டு அக்காலம் முதல் இக்காலத் திரையிசைப் பாடல்கள் வரை கேள்வி கேட்டு பதில் சொல்லும் வகையிலே அமைந்திருப்பதும்  தமிழ் மொழியில் யாவரும் விரும்பும்  தனிச்சிறப்பு கொண்ட ஓர்  இலக்கியக் கூறு எனலாம்.

[நன்றி - உலகத்தமிழ்-இதழ்-290-25.06.2025]

தேமொழி

unread,
Jun 26, 2025, 12:49:22 AMJun 26
to மின்தமிழ்
பெண்ணியப் பார்வையில் கலைஞரின் திருக்குறள் உரை



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர்மன்னராட்சி காலத்தில் அரசர்களை வழிநடத்த எழுதப்பட்ட திருக்குறள்குடியாட்சி காலத்திலும்இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மக்களின் பிரதிநிதியாக அரசாட்சி செய்பவருக்குப்  பொருந்தி வருவதில்தான் குறளின் சிறப்பு இருக்கிறது.  இருப்பினும் மனைவிபெண்கள்  இவர்களைக் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம்பெண்வழிச்சேரல் அதிகாரங்களில்  உள்ள குறள்கள்  இக்காலத்தில் ஏற்க இயலாவண்ணம் பெண்களுக்கு  மதிப்பு தராமல் அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பெண்ணியவாதிகள் பலர் இந்த அதிகாரங்களைப் பற்றிய கசப்புணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களில்  முதன்மை இடம் பெரியாருக்குத்தான் உள்ளது. வள்ளுவரைக் கேள்விகேட்டமறுதலித்த துணிச்சலான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த பெண்மணி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இவர் திருக்குறளில் பெண்ணடிமைத்தனம் போதிக்கும் 30 குறள்களையும் நீக்கிவிடவேண்டும் எனப் பேசியவர். பெண்ணியம்சமத்துவம்பகுத்தறிவு எனப் பேசிய எழுத்தாளர்களான பாரதிதாசனும்கலைஞர் மு. கருணாநிதியும்  இக்குறள்களுக்கான  உரைகளைக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க  முனைந்தனர்.  இக்கட்டுரை  வாழ்க்கைத் துணைநலம்பெண்வழிச்சேரல் ஆகிய அதிகாரங்களின் குறள்களுக்குதமிழகத்தின் முன்னாள் முதல்வரான முத்தமிழறிஞர் மு. கருணாநிதி அவர்கள் உரை எழுதிய முறையைக் குறிப்பிட்டு அந்த நன்முயற்சியைப் பாராட்டுகிறது.
 
வாழ்க்கைத் துணைநலம்:
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் மனைவி குறித்துத்தான் கூறப்படுகிறது என்பதை1. மாண்புடையள்2. மனைமாட்சி இல்லாள்3. இல்லதென் இல்லவள்4. பெண்ணின் பெருந்தக்க யாவுள5. கொழுநன் தொழுதெழுவாள்6. சொற்காத்துச் சோர்விலாள்7. மகளிர் நிறைகாக்கும்8. பெண்டிர் பெருஞ்சிறப்பு போன்ற முதல் 8 குறள்கள் நேரடியாகக் குறிக்கும். 
 
இருப்பினும்இறுதி 2 குறள்களும்  (குறள் - 5960)  மேலோட்டமாக பெண்ணைக் குறிக்கும்.  ஆனால் இன்றைய உலகில் சமத்துவக்   கருத்தை மதிப்பவர்கள்இவை பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமே பொருந்தும் வகையில் பொருள் கொள்ள விரும்புவார்கள்.  ஓர் ஒப்பீட்டிற்காக வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் இறுதி  இரு குறள்களுக்கும்  எழுதப்பட்ட உரைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன.
 
      புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
      ஏறுபோல் பீடு நடை.  
      [இல்லறவியல்வாழ்க்கைத் துணைநலம்குறள் - 59]
 
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்குஇகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
—மு. வரதராசன்
 
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
—சாலமன் பாப்பையா
 
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள்தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
—மு. கருணாநிதி   
 
இதில் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானதுஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  நல்ல கணவன் அமையாத  மகளிர் துயர் குறித்துஅவள் எதிர்கொள்ளும் அவமானம் குறித்து வள்ளுவர் ஏன் எழுதவில்லை என்று இப்பொழுது வள்ளுவரைக்  கேட்க வாய்ப்பில்லை.  ஆனால் நாம் அந்த எதிர்பார்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரலாம்அதாவது தக்கவாறு பொருள் கூறுவதன் மூலம். அடுத்து;
 
      மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
      நன்கலம் நன்மக்கட் பேறு.  
      [இல்லறவியல்வாழ்க்கைத் துணைநலம்குறள் - 60]
 
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.
— மு. வரதராசன்
 
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.  
— சாலமன் பாப்பையா
 
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்புஅதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
— மு. கருணாநிதி
 
இதிலும் கருணாநிதி  உரைதான்  காலத்திற்குப்  பொருத்தமானதுஆண் பெண் இருவருக்குமே பொருந்தும்.  குடும்பத்தின் பெருமைக்கு அவர்களின் நற்பண்பும்நல்ல மக்கட் செல்வங்களும் அமைவது என்றுகுடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்துகிறது.
 
ஆனால் இது வள்ளுவரின் எண்ணம் அல்ல.  இருப்பினும்,  குறளின்  அதிகாரத்தைக்  கணக்கில் கொள்ளாமல்இவற்றைத்  தனிப்பட்ட குறள்கள் என்ற அணுகுமுறையில் பொருள் கொண்டால் இக்காலத்திற்கும் அவை செவ்வனே பொருந்தும்
 
பெண்வழிச்சேரல்:
பெண்வழிச்சேரல் அதிகாரத்தில்மனைவிழைவார் (901)இல்லாள்கண் (903)மனையாளை (904)இல்லாளை (905)இல்லாள் (906) என்று குறிப்பிடும் குறட்பாக்களின் மூலமாக 'மனைவி சொல்லைக் கேட்பவன் மடயன்என்ற கருத்தை வலியுறுத்தித்தான் வள்ளுவர் எழுதியுள்ளார். இதில் எவருக்கும் வள்ளுவர் நோக்கம் குறித்து மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை. இவ்வாறு  5 குறட்பாக்களில் நேரடியாக மனைவி என்றே குறிப்பிட்ட வள்ளுவர்மற்றும் ஐந்து குறள்களில்பெண்  (902907908909910) என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஆனால் அவையும் மனைவியைக் குறிக்கும் குறள்கள்தான். பொம்பளை பேச்சைக் கேட்கிறான்பொண்டாட்டி  பேச்சைக் கேட்கிறான் என்று இன்றும் இழிவாகத்தான் மனைவி சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவரைக் கூறுவது உலக வழக்கம்.
 
இந்த அதிகாரத்திற்கு கருணாநிதி உரையைப் படிக்கும் பொழுது மனைவி சொல்லிற்கு  மதிப்பு தருவதில் அவருக்கு உடன்பாடு இருக்கிறது என்பதைக் காண  இயலும்.  அதனால்,  "பண்பில் குறைபாடு கொண்ட" மனைவி சொல்வதைக் கேட்டு நடப்பது சரியல்ல என்று உரை எழுதுகிறார். எல்லா மனைவிகளும்எல்லாப் பெண்களும் பண்பற்றவர்கள் இல்லையே.  குறைபாடு கொண்ட மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்பதுதான் உண்மையும் கூட.  அந்த அடிப்படையில் ஆணவம்அகங்காரம் கொண்டு தன் வாழ்க்கைத் துணையை  மதிக்காமல் நடக்கும் மனைவியின் சொல்லுக்கு அவன் மதிப்புத் தரத் தேவையில்லை என்று பொருள் கூற முற்படுகிறார் என்பது தெளிவு.
 
மனைவி என்ற நேரடியாக வள்ளுவர் குறிப்பிடாத பொழுதுமாறாக பெண் என்று மட்டும் குறிப்பிடும் பொழுது,  அந்தப் பெண்ணை மனைவி என்று கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டுபொதுவாகப் பெண்கள்அதிலும் ஆணவம் அகங்காரம் கொண்ட பெண்கள் மட்டுமே என்ற கோணத்தில் கருணாநிதி உரை எழுதுகிறார்.  இது மீண்டும் மனைவியை இளக்காரமாகக் கருதும் போக்கைத் தவிர்க்கும் மற்றொரு முறை.
 
      அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
      பெண்ஏவல் செய்வார்கண் இல். 
      [நட்பியல்பெண்வழிச்சேரல்;  குறள்- 909]
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும்மற்றக் கடமைகளும் 'மனைவியின் ஏவலைச்  செய்வோரிடத்தில்இல்லை.
—மு. வரதராசன்
 
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும்பிற இன்பச் செயல்களும் 'மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம்இருக்கமாட்டா.
—சாலமன் பாப்பையா
 
'ஆணவங்கொண்ட பெண்கள்இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
—மு. கருணாநிதி
 
பொதுவாகபகுத்தறிவுசமத்துவம் என்ற வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்த அதிகாரங்கள் மிக உறுத்தலாக இருக்கும். தங்கள் கொள்கைக்கு மாறுபட்டவையாக அவை இருப்பதை உணர்வார்கள்.   அதனால் வள்ளுவர் மேல் குற்றம் காண்பதைத் தவிர்த்துகாலத்திற்குப் பொருத்தமான விளக்கம் தர முற்படுவார்கள். இலக்கியவாதிகளான கருணாநிதிபாரதிதாசன் போன்றோர் குறளுக்கு உரை எழுதும் முறையை இந்தப் பிரிவில் அடக்கலாம்.
 
ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதாலேயே அவர் சிந்தனைக்கு மதிப்பு தரவேண்டாம் என எண்ணுவது எத்தகைய அறமற்ற செயல் என்று மனதில் தோன்றுவதை நேரடியாகச் சொல்ல இலக்கியத்தின் மீது பற்று அற்ற பெரியார் போன்றவராலேயே முடிந்தது.  “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால்இக்கருத்துகளைக் கூறியிருக்கமாட்டார்” என்று,  தான் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்நூலின் 'வள்ளுவமும் கற்பும்என்ற இரண்டாவது அத்தியாயத்தில் பெரியார் குறிப்பிட்டிருப்பார். பண்டைய தமிழ்ப் பண்பாட்டின்படி 'யார் சொன்னாலும் குற்றம் குற்றமேஎன்று பெரியாரால் சொல்ல முடிந்தது. ஆனால்மற்ற எழுத்தாளர்களால் அவ்வாறு நேரடியாக உண்மையைக் குறிப்பிட முடியாமல் போனது. 
 
பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்பது காலத்திற்கு ஒவ்வாத கருத்துஇதனைப்  பள்ளியில் முதல் வகுப்பில் ஔவை எழுதிய ஆத்திசூடிகொன்றை வேந்தன் பாடம் படித்தவர்களால் மறுக்க இயலாது. வள்ளுவர் கருத்திற்கு நேரடியாக உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி,  காலத்திற்குத் தக்கவாறு  உரை எழுதப்பட்டிருந்தாலும் சரி வள்ளுவரின் அறிவுரையை ஏற்று "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டால்வள்ளுவரின் குறள்களில் சில காலத்திற்கு ஏற்றவை அல்ல என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலாது.
 
வாழ்க்கைத் துணைநலம்பெண்வழிச் சேரல் அதிகாரங்கள்  - வள்ளுவர் காலத்துக் கருத்துகள் கொண்டவைதான்.  அவற்றில் உள்ள குறள்கள் பல இக்காலத்திற்குப்  பொருந்தாது என்றால் அந்த  உண்மையை நாம் ஏற்க வேண்டும். பிரதமர் இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டார்அக்காலத்தில் அவர் ஆணையை ஏற்று நடக்க வேண்டிய சூழல் அரசுப் பணியாளர்களுக்கு இருந்தது. அத்தகைய சூழலில் பெண்ணின் சொல்லைக் கேட்காதே  என்று  கூறும் குறள்  பொருந்துமாஇந்தியாவிற்கு அந்நாட்களில் பின்னடைவு ஏதும் ஏற்பட்டதாஅவர் காலத்தில்தான் இந்தியச் சட்டவரையறையின்  முகப்புரையில், 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து திருத்தம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இதனைக் கருத்தில் கொண்டால் கருணாநிதி உரை ஏற்கத்தக்கது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் ஒன்றிற்குக்  காலத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைக் குறை காண்பதற்கு வழியில்லை. இந்த அதிகாரங்களுக்குக் கலைஞர் கருணாநிதி உரைகள் சிறந்தவை. காலத்திற்கேற்பப் பொருந்துபவை.
 
நன்றி: "கனடியன் ரேஷனலிஸ்ட்" இதழ்ஜூன் 2025

---

தேமொழி

unread,
Jul 2, 2025, 12:05:15 AMJul 2
to மின்தமிழ்
யாமறிந்தவரையில் . . .


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
      இனிதாவ தெங்கும் காணோம்
என்று தமிழின் சிறப்பின் மீது பெருமிதம் கொண்டு பாடும் பாரதியார், அடுத்த பாடலில்;  

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
      வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை, உண்மை
      வெறும் புகழ்ச்சியில்லை.
தமிழ்ப் புலவர்கள் பற்றியும் பெருமிதம் கொள்கிறார்.

இவ்வாறு பாரதி போலவே வள்ளுவரும் 'நான் அறிந்தவரையில்', 'எனக்குத் தெரிந்தவற்றில்', என்று 'தான் அறிந்தவரையில்' தன் கருத்துகளாகக்  கூறும் குறள்களும் சில உள்ளன.  குறள் கூறும் 1330  கருத்துகளும் வள்ளுவரின் கருத்துக்களே என்றாலும், வள்ளுவர் இதுபோல தன் கருத்து என்ற கோணத்தில் என்ன கருத்துக்களைக் கூறுகிறார் என்று அறியும் ஆவலும் தோன்றுகிறது.  இது போன்ற ஆய்வுகளுக்கு முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களின் தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Literature - http://tamilconcordance.in/index.html) தளம் மிக உதவியாக இருக்கும்.  திருக்குறளில் 'யாம்' என்ற சொல்  13 குறள்களில் 14 முறை (1140ஆம் குறளில் இருமுறை) வருகிறது. 'யாமும்' என்ற சொல் காதலியின் கூற்றாக உள்ள காமத்துப் பாலின் இரு குறள்களில் வருகிறது.

வள்ளுவர் அறிந்த வரையில்:
குறிப்பு: அடைப்புக் குறிக்குள்  குறள் எண்ணும், குறளுக்கு மு. வரதராசனார் வழங்கிய விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.  
      பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
      மக்கட்பேறு அல்ல பிற.   (61)
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

      யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
      வாய்மையின் நல்ல பிற.   (300)
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

      மக்களே போல்வர் கயவர் அவரன்ன
      ஒப்பாரி யாங்கண்ட தில்.   (1071)
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

நான் அறிந்தவற்றில் அறிவுள்ள நன்மக்களைப் பெறுவதே சிறந்த பேறு; நான் அறிந்தவற்றில் வாய்மையே பண்புகளில் சிறந்த பண்பு;  நான் அறிந்தவற்றில் கயவர்களும் மக்களைப்போலவே  இருக்கும் ஒப்புமை வியக்கத்தக்கது என்கிறார் வள்ளுவர்.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 291-02.07.2025]

தேமொழி

unread,
Jul 9, 2025, 1:38:36 AMJul 9
to மின்தமிழ்
வள்ளுவர் என்னும் காதலர்


கூகுள்  இணையத் தேடலின் முடிவாகக் கிடைக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் (Google search results: About 'N'  results, in 'T' seconds) மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற, பெரும்பாலோர் அறிந்த குறளாக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற வள்ளுவத்தின் முதல் குறள்.   அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, இல்வாழ்க்கையின் சிறப்பை வலியுறுத்தும் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறள். வாழ்க்கை நெறிகளை வகுத்தளிக்க முடிவெடுத்த வள்ளுவர் அறம், பொருள் ஆகியவற்றுடன் இல்லறத்திற்கு வழிகாட்டும் இன்பம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முப்பாலின் மூன்றாம்  பாலான காமத்துப் பாலில்  250 குறட்பாக்களை அருளியுள்ளார்.  

இவற்றுள் 'யாம்' என்று திருவள்ளுவர் தன்னையே ஒரு காதலராகாக்  குறிப்பிட்டு எழுதிய பாடல்களும் உள்ளன.  அவ்வாறு, 'யாம்' என்று வள்ளுவர் குறிப்பிடுவதைக் கீழ்க்காணும் குறள்கள் மூலம் அறிய முடிகிறது.
 
      நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
      மென்னீரள் யாம்வீழ் பவள்.   (1111)
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.  

      கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
      திருநுதற்கு இல்லை இடம்.   (1123)
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

      ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
      நீடுக மன்னோ இரா.   (1329)
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

      யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
      யாம்பட்ட தாம்படா ஆறு.   (1140)
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

      கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
      தாம்காட்ட யாம்கண் டது.   (1171)
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
(குறிப்பு: மேலே இறுதியாகக் கொடுக்கப்பட்ட இரு குறள்களும் [1140, 1171] காதலியின் கூற்றாகப் பெரும்பாலும் பொருள் கூறப்படுகிறது.)

இவை தவிர்த்து; 1150, 1245, 1312 'யாம்' என்று காதலி கூற்றாகவும்; 790, 844 'தான் என்ற எண்ணம்', 'தான் என்னும் செருக்கு' போன்ற பொருள்களிலும் "யாம்" என்ற சொல் திருக்குறளில் இடம் பெறுகிறது.  

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 292  -  09.07.2025]


----

தேமொழி

unread,
Jul 15, 2025, 11:10:26 PMJul 15
to மின்தமிழ்
பள்ளிப்பாடங்களில் திருக்குறள்

     தேமொழி  

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்குறளின் பெருமை பரவலாக  அறியப்பட தமிழார்வலர்கள் பெரும் முயற்சி எடுத்தனர் என்பது வரலாறு. பள்ளிக் கல்வியில் திருக்குறள் இடம் பெற வேண்டும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. விடுதலை பெற்ற இந்தியாவின் தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறத் தொடங்கியது. மனப்பாடப் பகுதியாகப் பல குறள்கள் மாணவர் அறிவுத்திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும்  உயர்த்தியது. இன்று வாழும், தமிழகப் பள்ளியில் பயின்ற எவருக்குமே அவர்கள் படித்தவற்றில் ஒரு 25 குறள்களாவது நினைவில் தங்கி இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

இருப்பினும், இன்றைய சமூகத்தில் இளைஞர்களிடம்  ஒழுக்கம் பற்றிய சிந்தனையும் நன்னடத்தையும் குறைந்து வருவதால் ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்த 6-ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை திருக்குறளைத் தனிப்பாடமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை ஏற்றுப்  பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளைத் தனிப் பாடமாகச் சேர்க்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 26, 2016 அன்று உத்தரவிட்டது.

தார்மீகப் பண்புகளைக் கற்றுக்கொடுப்பதில் திருக்குறளுக்கு நிகரான இலக்கியப் படைப்பு உலகில் இல்லை. எனவே திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைத் தவிர்த்து அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 திருக்குறள் அதிகாரங்களும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டு முதலே பாடத்திட்டத்தில் தேவையான விளக்கத்துடன் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் அரசுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப் பட்டது.

இதையடுத்து,  2018 -2019 கல்வியாண்டிலிருந்து  கல்வித்துறை வல்லுநர்களால் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, ஆறாம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடப் புத்தகங்களில் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களில் (பள்ளி மாணவப் பருவ வயதிற்குப் பொருத்தமற்றவையான அதிகாரங்கள் சில தவிர்க்கப் பட்டு) தேர்ந்தெடுக்கப்பட்ட 275 குறள்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறள்கள் தக்க விளக்கத்துடன் இடம்பெறுவது மட்டுமின்றி  தேர்வில், 15 முதல் 20 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையையும்  தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. திருக்குறளின் பெருமையைப் பரப்பும் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  

தமிழ் நாட்டு அரசின் பள்ளிப் பாடத்தில் 12 வகுப்புகளில்  3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள தமிழ்ப் பாடத் திட்டத்தில் திருக்குறள்கள் இடம் பெறுகின்றன.
தமிழ்நாடு அரசுப்பள்ளிக் கல்வித்துறையின் தமிழ்ப் பாடநூல் 1 முதல் 12 வகுப்புகளுக்கான  (https://archive.org/details/1-12_20220309/)  நூல்களைப் பார்வையிட்டதில்  மூன்றாம்  வகுப்பு முதற் கொண்டே திருக்குறள் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ளது.
◆ 3 ஆம் வகுப்பிற்கும் 4 ஆம் வகுப்பிற்கும்,  திருக்குறள் கதைகள்  (5 குறள்களுக்கு - 5 படக் கதைகள்) என்ற அளவில்  அறிமுகப் படுத்தப்படுகிறது.
◆ 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  "பண்புடைமை" அதிகாரத்திலிருந்து  '5 குறள்கள்' கற்பிக்கப் படுகிறது.
◆ 6, 7, 8, 9 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  30 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை,  கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன.(எடுத்துக்காட்டாக அணி  இலக்கணப் பாடங்களிலும், கல்வி குறித்த பாடம், அறிஞர்கள்  கட்டுரைகள் ஆகியவற்றிலும்  குறள்கள்  இடம் பெறுவதைக் காண முடிகிறது).  
◆ 10, 11, 12 ஆம் வகுப்புகள் பயிலும்  மாணவர்களுக்கு  40 குறள்கள் தனிப் பாடங்களாகவும், இவற்றுடன் இலக்கியம், இலக்கணம் ஆகியவை கற்பிக்கப் படும் பொழுதும், உரைநடை, கதைகள் இவற்றிலும்  குறள்கள் ஆங்காங்கே இடம் பெறுகின்றன.
அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில்; பெரும்பாலான அதிகாரங்களில், அதிகாரத்திற்கு  2 குறள்கள் வீதம்  குறள்கள்  இடம் பெறுகின்றது, குறைந்தது  அதிகாரம் ஒன்றிற்கு ஒரு குறள்  என்ற அளவிலாவது  பாடத் திட்டத்தில்  குறள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  கல்வி, அறிவு உடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, வெகுளாமை, செய்ந்நன்றியறிதல், ஒப்புரவறிதல், வலியறிதல், பொருள் செயல்வகை ஆகிய அதிகாரங்களில், ஒவ்வொரு அதிகாரத்திலும்  பாதி அதிகாரம் அல்லது 5 குறள்கள் பாடத்திட்டத்தில் உள்ளது.  

எனவே, பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு 1330 குறட்பாக்களில் 275 குறள்கள் (20% குறள்கள்) அறிமுகமாகி இருக்கும், அவற்றில் 85 குறள்கள் மனப்பாடப்பகுதி செய்யுள்களாகவும்  அமைந்துள்ளன. இத்துடன் நன்னெறி வகுப்புகளிலும் திருக்குறள் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டால் மேலும் மாணவர்களை நல்வழிப்படுத்தத் திருக்குறள் உதவும் என்பதில் ஐயமில்லை.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 293  -  16.07.2025]


தேமொழி

unread,
Jul 23, 2025, 1:05:18 AMJul 23
to மின்தமிழ்
குறள் யாரை வழிநடத்துகிறது ?

     தேமொழி


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்ற அறவுரைக் கருத்துகளைக் கொண்டுள்ளது என்பது குறள் அறிந்த அனைவரது கருத்தாகவும் இருக்கிறது.  குறள் கருத்துகள் யாரை நோக்கிச் சொல்லப் படுகிறது? யாருக்கான அறிவுரைகளாக அவை இருக்கின்றன என்பதை திருக்குறளின் அதிகாரங்களின் தலைப்புகள் மூலமே மேலோட்டமாக   எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

அறத்துப்பாலின் துறவு, தவம், நீத்தார் பெருமை, கூடாவொழுக்கம்  போன்ற அதிகாரங்கள் துறவறம் மேற் கொண்டவர்களை நோக்கி  எழுதப்பட்டது என்றாலும், இவற்றில் சில குறட்பாக் கருத்துகள்  ஏனையோருக்கும் பொருந்துபவை.  

இவ்வாறே,   பொருட்பாலின் செங்கோன்மை, கொடுங்கோன்மை, இறைமாட்சி, ஒற்றாடல், அமைச்சு, தூது, நாடு, அரண், படை மாட்சி, படைச் செருக்கு  போன்றவை  ஆட்சியாளர்களுக்கான அறிவுரைகளாக அமைவதைக்  காணலாம்.  இவற்றிலும்  சில குறள்கள் பொது மக்களுக்கும் பொருந்துபவை.  அதே போல மக்கள் அனைவருக்கும்  என எழுதப்பட்ட மற்ற பிற அதிகாரங்களிலும்  வேந்தன் குறித்த குறிப்புகள் ஆங்காங்கே இருப்பதைக் காண இயலும். சற்றொப்ப நூறு குறள்கள் அரசாட்சி செய்பவருக்கானவை.  

காமத்துப் பால் குறள்கள் அனைத்தும்; அவற்றுடன்  இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்கள் இல்லறம் மேற்கொள்பவர்களுக்கானவை. இவற்றில் காமத்துப்பால்  குறள்களை ஆண் கோணத்தில் காதலன் கூற்றாகவும்; பெண் கோணத்தில் காதலியின் கூற்றாகவும் அமைத்து எழுதி இருப்பார் வள்ளுவர்.  இல்வாழ்க்கை அதிகாரத்தில் சில குறள்கள் பொதுவானவை.   மாறாக, வாழ்க்கைத் துணைநலம் மற்றும் வரைவின் மகளிர் அதிகாரங்கள் பெண்களின் பண்புகள் குறித்தவை. பிறனில் விழையாமை மற்றும் பெண்வழிச்சேறல் பெண்களுடன் கொள்ளும் தொடர்பு  குறித்து ஆண்களின் கோணத்தில் ஆண்களுக்குக் கூறும் அறிவுரைகளாக  எழுதப்பட்டவை.  ஆகவே, இந்த அதிகாரங்களின்  குறள்கள் பெண்கள் குறித்து இருந்தாலும் அவை  பெண்களுக்கானவை அல்ல, பெண்களுக்குப் பெருமை சேர்ப்பவை  எனக் கூறவும் இயலாது.  

காமத்துப் பாலின்  களவியல் காதலன் காதலிக்காக ஏங்குவதாக அமைந்திருக்க;  காமத்துப் பாலின்  கற்பியல்  குறள்கள் காதலி பிரிந்து சென்ற தனது காதலனை  நினைத்து வருந்துவதாகவே அமைகின்றன. கற்பியலில்  களவியலை  விட இரண்டு மடங்குக்கும் மேலான எண்ணிக்கையில் அதிகாரங்கள் உள்ளதால் பெண்கோணத்தில்  எழுதப்பட்ட குறள்களும் மிகுதி.  அகப்பொருள் கருத்துகள் கொண்ட காமத்துப்பால் அதிகாரங்கள், புறப் பொருள் கருத்துகள் கொண்ட  அறம், பொருள் அதிகாரங்களிலிருந்து  வேறுபட்டு இருப்பதன் காரணத்தால்  வாழ்க்கை நெறி என்று பள்ளிப் பருவத்து மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த இயலாதவை.  வயது வந்த பின்னர் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை.  காமத்துப்பால்  தவிர்த்து திருக்குறளில் உள்ள பிற அதிகாரங்கள் யாவும் கல்வி, கேள்வி, நட்பு, பண்பு, செல்வம், ஈகை, உண்மை, ஒழுக்கம், அன்பு, குடும்பம், தலைமை, நீதி போன்று பொதுமையான கருத்துக்களுடன் மக்கள் எவருக்கும் பொருந்துபவை; இவற்றின் கருத்துகள் வாழ்வியல்  நெறிகளாக இளம்பருவத்தினருக்கு அறிமுகப் படுத்தப் பட வேண்டியவை.

குறள்கள் யாரை நோக்கி/யாருக்காக எழுதப் பட்டிருக்கின்றன, ஒரு குறள் ஆணைக்  குறிப்பிடுகிறதா/ஆணுக்கானதா/ஆணின் கூற்றாக உள்ளதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா/பெண்ணுக்கானதா/பெண்ணின் கூற்றாக உள்ளதா,  அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி அனைத்துக்  குறள்களையும் ஆய்வு செய்வது குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்களின் சூழ்நிலையையும்  வாழ்வியல் நிலையையும்  அறிய உதவும். எடுத்துக்காட்டாகக் குறள்களை வகைப்படுத்தும் முறை;

பொது:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   (பொருட்பால்; தெரிந்து தெளிதல்: குறள் - 504)

ஆண்:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (பொருட்பால்; குற்றங்கூறாமை: குறள் - 435)

பெண்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (அறத்துப்பால்; வாழ்க்கைத் துணைநலம்: குறள் - 55)

[வளரும் . . . ]

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 294  -  23.07.2025]


தேமொழி

unread,
Jul 30, 2025, 1:26:57 AMJul 30
to மின்தமிழ்
[தொடர்ச்சி . . . ]


குறள் யாரை வழிநடத்துகிறது ?

     தேமொழி

குறளில் ஓர் ஆய்வு:
பொதுமறை என்று சிறப்பிக்கப்படும் திருக்குறளின் 1330 குறள்களையும்   ஆணைக்  குறிப்பிடுகிறதா, பெண்ணைக்  குறிப்பிடுகிறதா அல்லது பொதுவாக அமைந்துள்ளதா என்று குறள்களை வகைப்படுத்தி ஆராய்ந்ததில்;  
 
◆ எவருக்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்ட குறள்கள் 61%;  ஆண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவை அல்லது ஆணின் கோணத்தில் எழுதப்படவை 25%; பெண்களைக் குறிப்பிட்டு ஆணுக்காக எழுதப் பட்டவையோ அல்லது பெண் கோணத்தில் எழுதப் பட்டவையோ 14%.

◆ தனித்தனியாக முப்பாலுக்கும் இதே வகையில் ஒப்பிடுகையில்; அறத்துப்பால் மற்றும் பொருட்பால் குறள்களில்  இதே விழுக்காடுகளின் நீட்சியைக்  காண இயலவில்லை [("அறம்" — பொது: 74%, ஆண்: 23%, பெண்: 3%);  "பொருள்" — பொது:  76%, ஆண்: 22%, பெண்:  2%)].

◆ இந்த வேறுபாட்டிற்குக் காமத்துப்பால் குறள்கள் யாவும் ஆண்கோணத்திலோ அல்லது பெண்கோணத்திலோ எழுதப்பட்டதனால் மட்டும் அல்ல;  காமத்துப்பாலில் பெண்கோணத்தில் எழுதப்பட்ட குறள்கள் சற்றொப்ப மூன்றில் இரண்டு பங்கு (68%) என்று மிகுதியான அளவில் இருக்கும் நிலைதான் காரணம் ("இன்பம்" — பொது: 0%, ஆண்: 32%, பெண்: 68%).

பெண்கள் தங்கள் காதலனின் பிரிவுத்துயர் உரைப்பதாக அதிக அளவில் எழுதப்படும் நோக்கம் பெண்களின் வாழ்க்கையைக்  குடும்பம் கணவன் என்ற வட்டத்திற்குள் அடக்கும் முயற்சியாகக் கொள்ளலாம்.  இதைப் புரிந்து கொண்டால் புற இலக்கியப் பிரிவில் அடங்கும் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர்  என்று முப்பாலின் அறம் பொருள் ஆகிய பால்களில் உள்ள பிற அதிகாரங்களிலும் ஏன் ஆண்களை முதன்மை படுத்தி அவர்கள் பார்வையில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
 
◆ இந்த முக்கியமான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு; காமத்துப் பாலை தவிர்த்து விட்டு அறம்+பொருள் (1,080) குறள்களை மட்டும் கணக்கில் கொண்டால் ("அறம்-பொருள்" — பொது: 75%, ஆண்: 23%, பெண்: 2%) என்ற அளவில் குறள்கள் உள்ளன. அதாவது, பெண்களுக்கான 'குரலாக' 2% குறள்கள் திருக்குறளில் உள்ளன.  

திருக்குறளின் பெண்கள் பற்றிய குறள்களும்;  கற்பியலில் காதலி தனது காதலன் பிரிந்தான் என்ற பிரிவுத் துயருடன் என் அழகு அழிந்தது, உறக்கம் வரவில்லை, தோள் மெலிந்தது, வளை கழன்றது, பசலை நோய் படர்ந்தது,  கண்ணீர் வற்றியது, நடை தளர்ந்தது,  எனது இத்தகைய நிலைக்குக் காரணமான என் காதலர் ஓர் இரக்கமற்ற கொடியவர் என்று குற்றம் சாட்டியவாறு சலிப்பைத் தரும் வகையில் நெஞ்சே, நிலவே, இரவே என்று ஒவ்வொன்றையும் காதலி அழைத்து அரற்றும் புலம்பல்கள்.

எனவே, வள்ளுவர் காலத்தில் பெண்  குடும்பத்திற்கும் கணவனுக்கும் ஏற்ற வகையில் பணிவிடை செய்பவளாக இருக்க வேண்டும், கொழுநன் தொழுதெழுபவளாக, காதலனை  நினைத்து காதல் ஏக்கம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற வட்டத்திற்குள் அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருப்பது தெளிவாகிறது.
 
பொதுவாகக் காண்கையில், மக்களுக்கான வாழ்வியல் நெறிகளை வழங்கும் திருக்குறளில் பெரும்பான்மையான குறள்களை, அதாவது 815 குறள்களை  வள்ளுவர் எவருக்கும் பொருந்தும் வகையில் பொதுநோக்கில் அமைத்து எழுதியுள்ளார் என்பதுவே திருக்குறளின் தனிச் சிறப்பு.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 295  -  30.07.2025]
fig 2.png
fig 1.png

தேமொழி

unread,
Aug 6, 2025, 2:40:41 AMAug 6
to மின்தமிழ்
குறள் சொல்லும் கிழக்கு  

     தேமொழி

இன்று கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று திசைகளை நாம் அடையாளம் காண்கிறோம்.  சிந்துவெளி ஆய்வாளர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன்  இதைச் சிந்துவெளியின் திராவிடப் பரிமாணம் என்பதற்குச் சான்றாகக் காட்டி இருப்பார்.  இந்த மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு என்பதற்கும் சிந்துவெளி நகர வடிவமைப்பில் இருக்கும் முக்கியமான தொடர்பினை  "சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற அவருடைய நூலில் விளக்கி இருப்பார்.  சிந்துவெளி  நகர்கள் இருபகுதிகளை உள்ளடக்கியவை  என்றும், மேற்கே  உயரமான பகுதியில் கோட்டை போன்ற கட்டிடங்கள் அமைந்த நகரின் பொது நிர்வாகக்   கட்டமைப்பும்; அதன் அருகில் கிழக்கே உள்ள தாழ்ந்த பகுதியில் பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இருந்தன  என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இயற்கையிலேயே மேற்கில் உயர்ந்த நிலப்பகுதி இல்லாவிட்டாலும் செயற்கையாக அப்பகுதியை உயர்த்தி கோட்டை அமைத்து சிந்துவெளி மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

"சிந்துவெளி ஒரு வன்பொருள் என்றால் சங்க இலக்கியம் அதைப் புரிந்து கொள்ள உதவும் ஒரே மென்பொருள்" என்ற கருத்தையும் முன்வைக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் "சிந்துவெளியைப் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான்" என்று சங்க இலக்கியம் சிந்துவெளிப் பண்பாடு தொடர்பு குறித்து முடிந்த முடிவாகவும் குறிப்பிடுவார்.  இதற்குப் பல சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டும் ஆர். பாலகிருஷ்ணன், திசைகள் குறித்த சான்றாக சங்க இலக்கிய வரிகளையும் மேற்கோள்களாகத் தருவார்.  

குறுந்தொகைப் பாடல்(337)  காட்சியில், தலைவி வளர்ச்சியுறும் முலையையும், அவளுடைய தலையின் தழைத்த கூந்தல் தாழ்ந்து தொங்கும் அளவிற்கு இளமைப்பருவம் கொண்டவள் என்பதை;
     "முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
      கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே"

என்ற வரிகள் கூறும்.  இதில் 'கிழக்கு' என்ற சொல் திசையைக் குறிக்காது.  மாறாக, தரையைத் தொடுவது போல தலைவியின் கூந்தல்  'தாழ்ந்து'  கீழே நீண்டு  தொங்குவதைக் குறிக்கிறது. கிழக்கு என்பது இங்கு கீழ் என்ற பொருள் கொள்கிறது. (தரையின் கீழ் இருப்பதால் அச்செடி கிழங்கு எனப்படுகிறது என்று  வேர்ச்சொல் ஆய்வுகள்  விளக்குவது போல, கிழக்கும் அவ்வாறான அடிப்படையில் உருவான சொல்.)

சங்க இலக்கியத்தில் 'கிழக்கு என்ற சொல்  மூன்று முறை இடம் பெறுகிறது.  அவை கீழ்  என்ற பொருளில் மட்டுமே இடம் பெறுகின்றன. மேலே காட்டப்பட்ட குறுந்தொகை பாடல் தவிர்த்து;
   பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப (நற். 297/1)
   (பாலானது கீழே பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்க)

   குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய (பதி. 36/10)
    (போர்க் களத்தில் பறவை கீழே தரை இறங்கும் காட்சி)
ஆகிய பாடல்களில் வரும் 'கிழக்கு இருப்ப', 'கிழக்கு இழிய' ஆகிய சொற்களும்  'கீழே' என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் திசையைக் குறிப்பிடும் கிழக்கு மேற்கு என்பதற்கு, முறையே குண, குட (எடுத்துக்காட்டு: குணபுலம். குடவாயில்) என்ற சொற்களே எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கிழக்கு மேற்கு என்ற சொற்களால் திசைகள்  குறிப்பிடப்படவே இல்லை.  குறிப்பாக, மேற்கு என்ற சொல் சங்கப்பாடல்களில்  இடம் பெறவும் இல்லை.
   குண குட கடலா எல்லை (புறம். 17/2; மது. 71)
   குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி (நற் 153/1; நற் 346/1)
   குண கடல் கொண்டு குட கடல் முற்றி (மது.  238)

போன்ற பாடல் வரிகள் மூலம் சங்கப் பாடல்களில் திசைகள் குறிப்பிடப்பட்ட முறையை அறியலாம்.

வள்ளுவரும் திருக்குறளில் கிழக்கு என்ற சொல்லை 'கீழ்' என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறார்.
   செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
   காணிற் கிழக்காந் தலை. (குறள் - 488)


பகைவர்க்கு முடிவுகாலம் வந்து அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும்  உரிய நேரம் வரும்  வரையில்  தங்களின் பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும் என்பது காலம் அறிந்து செயல் படுவது குறித்து வள்ளுவர் வழங்கும் அறிவுரை.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 296  -  06.08.2025]

தேமொழி

unread,
Aug 13, 2025, 1:10:36 AMAug 13
to மின்தமிழ்
வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்

  தேமொழி


ஔவையின் தனிப்பாடல் ஒன்று 'நான்கு கோடி பாடல்' என்று அறியப்படுகிறது. அரசன் இட்ட கட்டளைப்படி ஓர் இரவுக்குள் நான்கு கோடிப் பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ மன்னனின் அவைக்களப் புலவர்கள் கலங்கியதாகவும், அப்பொழுது, ஔவையார் நான்கு வரிகளைக் கொண்ட இப்பாடலைச் சொல்லி, இப்பாடல் சொல்லும் வாழ்வியல் நெறி ஒவ்வொன்றும் கோடிப் பொன்னுக்குச் சமம் என்று கூறியதாகவும் அக்கதை அறியப்படுகிறது.

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
          மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில்
          உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
          கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
          கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)

இப்பாடலில் ஒளவையார் வாழ்வியல் நெறிகளாக நான்கு செயல்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்குச் சமம் எனக் கூறுகிறார். அவை முறையே;
தன்னை மதிக்காதவர்களின் வீட்டுக்குச் சென்று அவ்வீட்டு வாசலை மிதிக்காமல் இருப்பது.
உண்ண வருமாறு வருந்தி அழைக்காதவர்களின் வீட்டில் உண்ணாமல் இருப்பது.
கோடி கொடுத்தாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்திருப்பது.
எத்தனை கோடி கொடுத்தாலும், தான் சொன்ன சொல் தவறாமல் இருப்பது.
'மிதியாமை', 'உண்ணாமை' ஆகிய அறிவுரைகள் செய்யாதீர் என்று எதிர்மறை கருத்துகளாகவும், நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்! சொன்ன சொல் தவறாமல் வாழ்! என்பன உடன்பாட்டுக் கருத்துகளாகவும் அமைந்துள்ளன.
இந்த வரிகள், ஒருவரது குடிப்பிறப்பும், நற்பண்புகளும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை உணர்த்துகின்றன.

வாழ்வியல் நெறிகளை வகுத்தளித்த வள்ளுவர் ஔவையார் போல எவையெவை கோடி மதிப்புப் பெறுபவை  என்று  கூறுகிறார் என்று அறிய விரும்பி  திருக்குறளை ஆராய்ந்தால், வள்ளுவத்தில் 10 குறள்கள் கோடி பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றில் இரண்டு குறள்கள்   (குறள்கள் - 554,  559) கோடி என்ற எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் மன்னனின் வளைந்த செங்கோல் (கோல்கோடி)  என்ற கொடுங்கோன்மை ஆட்சியைக் குறிப்பிடுகின்றன, இவற்றில் கோடி  என்பது வளைந்த என்ற பொருள் தருபவை. இவ்விரண்டையும் தவிர்த்துவிட்டால் எட்டு குறள்கள்  பின்வரும் கருத்துகளைச் சொல்கின்றன:
1. அறிவற்றவரின் தீங்கு விளைவிக்கும் நட்பை விட, அறிவுடையவரிடம் கொண்டிருக்கும் பகை அதைவிடக் கோடி மடங்கு மேலானது (816);
2. சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பால் விளையும் தீங்கை விடப் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துகோடி மடங்கு நன்மையானது (817);
3. தவறாக வழிநடத்தும் அமைச்சரை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலானது (639);
4. இரக்கச்சிந்தையுடன் ஒருவர் பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அவரிடமும் சென்று இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும் (1061);
5. கொடுத்து உதவும் பண்பில்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் இருந்தாலும் அதனால் எவருக்கும் பயனில்லை (1005);
6. பலகோடிப் பொருள் கொடுத்தாலும் நற்பண்பு நிறைந்த குடியில் பிறந்தவர் தன் குடிப்பெருமையைக் குலைக்கும் செயலைச் செய்ய மாட்டார் (954);
7. ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றிக் கோடிக்கும் மேலான எண்ணங்களுடன் மனக் கோட்டைகள் கட்டுவார்கள்;  
8. ஒருவர் முயன்று கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தாலும் அவரிடம் எது தங்குமோ அதன் பயனை மட்டுமே அவரால் துய்க்க இயலும் (377).


[வளரும் . . . ]

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 297  -  13.08.2025]  

தேமொழி

unread,
Aug 20, 2025, 2:46:41 AMAug 20
to மின்தமிழ்
[தொடர்ச்சி . . . ]

வள்ளுவர் பார்வையில் எவையெவை கோடி பெறும்

—  தேமொழி


கோடி என்ற சொல் இடம் பெறும்  குறள்களும் அவற்றுக்கு மு. வரதராசனார் வழங்கிய தெளிவுரையையும்  அடுத்துக் காணலாம்:
         1.  பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
          ஏதின்மை கோடி உறும்.    (குறள் - 816)
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

          2. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
          பத்தடுத்த கோடி உறும்.   (குறள் - 817)
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

          3. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
          எழுபது கோடி உறும்.   (குறள் - 639)  
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.  

          4. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
          இரவாமை கோடி உறும்.   (குறள் - 1061)
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

          5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
          கோடியுண் டாயினும் இல்.    (குறள் - 1005)
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

          6. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
          குன்றுவ செய்தல் இலர்.   (குறள் - 954)
பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

          7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
          கோடியும் அல்ல பல.   (குறள் - 337)
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

          8. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
          தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.   (குறள் - 377)
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் என்று ஔவையும்; அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் என்று வள்ளுவரும் நற்குடி பிறந்தவர் சிறப்பைப் பாராட்டுகிறார்கள்.  


[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 298  -  20.08.2025]  

தேமொழி

unread,
Aug 26, 2025, 11:25:38 PM (10 days ago) Aug 26
to மின்தமிழ்
எண்குணத்தானும் கம்பரும்

 — தேமொழி


திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இடம் பெறும் 9ஆவது குறள்;
      "கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
      தாளை வணங்காத் தலை"


எண்குணங்களை  உடையவன் (அதாவது கடவுள் அல்லது வழிகாட்டியின்) திருவடிகளைப் பணிந்து வணங்காதவர் தலையானது செயல்திறனற்ற மெய், வாய், கண், மூக்கு, செவி முதலானவைபோல் செயலிழந்த ஐம்புலன்களை ஒத்திருக்கும் ஒரு  பயனற்ற தலையாக; அதாவது அறிவற்ற தலையாகக் கருதப்படும் என்ற பொருள் வருமாறு தமிழறிஞர் பலர் தெளிவுரை எழுதிச் சென்றுள்ளனர்.

இதில் "எண்குணம்" என்பதற்குப் பொருள் விளக்கம் தருவதில் பல கருத்து மாறுபாடுகளும் உள்ளன.
[1] பெரும்பாலோர் எண்குணம்  என்றால் என்ன என்று  பொருட்படுத்தாமல்  விவரிக்காமல் "எண்குணத்தைக்  கொண்டவர்" என்று சொல்லியோ அல்லது சொல்லாமலோ கடந்து விடுவார். மு.கருணாநிதி, மு.வரதராசன், வ.சுப.மாணிக்கம் ஆகியோர் தெளிவுரை தரும் முறை இது.

[2] குறளுக்கு உரை தந்த தொல்லாசிரியர்களான மணக்குடவர், பரிதியார், பரிமேலழகர் ஆகிய மூவரும் எண் = எட்டு என்று பொருள் கொள்வர். எனவே, எண்குணத்தைக்  கொண்டவர் என்றால் எட்டு குணங்களைக் கொண்டவர் எனப் பொருள் விளக்கம் தர முற்படுவர். அதனால்  அவர்களுக்கு எண்குணங்கள்  யாவை என்ற விளக்கம் தரும் கட்டாயமும் ஏற்படுகிறது.
(பரிமேலழகர் உரை: எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது).  இருப்பினும், சைவாகமத்தில் சிவனின் குணங்களாகக் காட்டப்படுவது சமண அருகரின் குணங்களே என்று ஆய்வாளர்கள் கூறுவர். இது போன்ற தரவுகள் வள்ளுவரைத் தத்தம் சமயப் பின்புலத்துடன் காணும் முயற்சி எனலாம். பௌத்தம் அருளும் எட்டு வழிமுறைகளைப் பின்பற்றி வாழும் குணமுடையவர் என்று பௌத்தருக்கும் வள்ளுவரை உரிமை கொண்டாட  வாய்ப்புள்ளது என்பதை மறுக்க இயலாது.

[3] எண்=எளிய என்ற பொருள்  கூறப்படுதலும் உண்டு. இம்முறையில், எண்குணத்தான் என்பது 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள் கொள்ளப்படுகிறது. எண்பொருள வாகச் செலச்சொல்லி (குறள் 424) என்ற குறள் விளக்கம் போல, மேலும் சில குறள்களையும் (எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன், எண்பதத்தால் எய்தல் எளிதென்ப) காட்டி, 'எண்' எளிய என்ற  இப்பொருள் கொள்ளும் முறைக்கு  மேற்கோள்  காட்டப்படுகிறது. இம்முறையில், எண்குணத்தான் என்பவன் அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பது பொருள்.
 
[4] அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் அல்லது அன்பர்கள் எண்ணும் குண வடிவை ஏற்பவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்பதற்கு எண்குணம் கொண்டவர் என்ற பொருள் விளக்கத்தை முதன் முதலில் தந்தவராக காலிங்கர் அறியப்படுகிறார்.  சாலமன் பாப்பையாவும், எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே என்றுதான் பொருள் கொள்வார்.

மக்களால் நினைப்பதற்குரிய குணங்களை ஏற்பவர்; அதாவது மாந்தர் எண்ணிய குணம் கொண்டவரே இறைவன். கடவுளுக்கு  உருவங்களும் குணங்களும் தருபவர் மனிதர்கள்தாம் என்ற அடிப்படை உண்மையை இவ்விளக்கம் முன் வைக்கிறது. கடவுள் என்பவருக்கு வெறும் எட்டு குணங்கள் மட்டும்தானா என்று ஆழ்ந்து சிந்தித்து வினா எழுப்புபவருக்கு அன்பர்கள் எண்ணும் குணவடிவை ஏற்பவன் எண்குணத்தான் என்ற இந்த விளக்கமே ஏற்புடையதாக இருக்கும்.  எண்குணத்தான் என்பது எண்ணிய குணத்தை உடைய இறைவன் என்ற பொருள் கொள்வோமெனில்,  அதே கருத்தைக் கம்பரும் கூறுவதைக் காண முடிகிறது.

      "ஒன்றே யென்னின் ஒன்றேயாம்  பலவென் றுரைக்கிற் பலவேயாம்
      அன்றே யென்னின் அன்றேயாம்  ஆமே யென்னின் ஆமேயாம்
      இன்றே யென்னின் இன்றேயாம்  உளதென் றுரைக்கின் உளதேயாம்
      நன்றே நம்பி குடிவாழ்க்கை  நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா"
            [யுத்த காண்டம், கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்]

 
இதன் பொருள்:  கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதால் ஒன்றே என எண்ணுவோருக்கு ஒன்றாக விளங்குகிறார். பல உயிர்களிலும் உறைந்து உள்ளமையால் பல என எண்ணுவோருக்குப் பலவாகத் திகழ்கிறார். கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான். மாறாகக் கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே. கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான். கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே. இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே. சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!

இவ்வாறாக, ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்குப் பல நாமம் சூட்டி அழைப்பதும் மக்கள் வழக்கம் என்பதைக் கருத்தில் கொண்டு இறைவனை உருவமாகவும் அருவமாகவும் உளதாகவும் இலதாகவும் கற்பிக்கும் பாடல்களுள் ஒன்றாகக் கம்பரின் பாடலும் அமைந்துள்ளது. இப்பாடலில் எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலானவர் கடவுள் என்கிறார்  கம்பர்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 299  -  27.08.2025]  

தேமொழி

unread,
Sep 3, 2025, 12:48:08 AM (3 days ago) Sep 3
to மின்தமிழ்
குறளின் ஈற்றடிகள்

  —  தேமொழி


திருக்குறளின் வெண்பாக்கள் ஏழு சீர்களைக் கொண்டு இரண்டே அடிகளில் அமைந்த குறள் வெண்பாக்கள். ஈற்றடி அல்லது இறுதி அடி முச்சீராலும் ஏனையடி நாற்சீராலும் வெண்பா இலக்கணப்படி அமைந்தவை வள்ளுவரின் குறட்பாக்கள்.   “ஈற்றடி முச்சீராகவும், மற்றையடி நாற்சீராகவும் பெற்று, காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்களும் இருவகை வெண்டளைகளுங் கொண்டு, மற்றைச் சீரும் தளையும் பெறாமல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருவதே வெண்பாவின் பொது இலக்கணமாம்” என்று வரையறுக்கிறது இலக்கண நூல்.

ஈற்றடி ஒன்று கொடுக்கப்பட்டு அதற்கு வெண்பாக்கள் எழுதுவது மரபுப்பாக்கள் புனைவோர் இடையே நடக்கும் ஓர் அறிவார்ந்த போட்டி. 'பாரதி சின்னப்பயல்' என்று கொடுக்கப்பட்ட ஈற்றடிக்குத் தன் பதினைந்தாம் வயதிலேயே வெண்பா புனைந்து அவையோரை வியக்கவைத்தவர் மகாகவி சுப்ரமணிய பாரதி.  

"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற சொற்றொடர், மனம் போனபடி புனைகதைகள் பல கதைக்கப்படும் இன்றைய இணைய உலகில் இன்று பலருக்கும் அறிவுறுத்தப் படும் சொற்றொடர். இது குறளின் புகழ் பெற்ற ஈற்றடி.  இது போலக் குறளின் பல ஈற்றடிகளே தனித்து நின்று பழமொழி போல ஒரு வாழ்வியல் நெறியையோ,  மாறாத உலக உண்மையையோ உணர்த்திச் செல்லும்.  யாவரும் அறிந்த பல ஈற்றடிகள் இருப்பினும் 'கனி இருப்பக் காய்கவர்ந் தற்று',  'அறனல்ல செய்யாமை நன்று',  'பயனில சொல்லாமை நன்று' போன்ற ஈற்றடிகள் தனித்து நின்றே நன்னெறியைக் குறிப்பிடுவன.

சில குறட்பாக்களின் ஈற்றடிகளைச் சொன்னாலே குறள் முழுமையையும் சொல்லத் தேவையின்றி நினைவிற்கு வரும் வகையில் புகழ்பெற்ற ஈற்றடிகளும் உள்ளன.  எடுத்துக் காட்டாக,  'நிற்க அதற்குத் தக', 'நாவினால் சுட்ட வடு', 'சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' போன்ற ஈற்றடிகள் அத்தகைய சிறப்பு கொண்ட ஈற்றடிகள்.  

தான் எழுதிய 1330 குறட்பாக்களில் வள்ளுவர் சில ஈற்றடிகளை மீண்டும் மீண்டும் பயன் கொண்டுள்ளார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 26 குறட்பாக்களின் ஈற்றடிகள் மற்றொரு குறளின்  இறுதி அடியாகவும்  உள்ளது. இணைக்கப்பட்டுள்ள குறள் அட்டவணை அவ்வாறு ஒரே ஈற்றடிகளைக் கொண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளது.

43.3.jpg
'ஏதம் பலவுந் தரும்' என்ற ஈற்றடி மூன்று முறை திருக்குறளில் இடம் பெறக் காணலாம்.  இவை தவிர்த்த மற்றவை இரண்டிரண்டு முறைகள் வள்ளுவரால் எடுத்தாளப்பட்டுள்ளன.  ஒரே ஈற்றடிகள் ஒரே அதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. உட்பகை அதிகாரத்தின் 'உட்பகை உற்ற குடி' என்ற ஈற்றடியும்; காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் 'ஏதிலர் என்னும்இவ் வூர்' என்ற ஈற்றடியும்; நடுவு நிலைமை அதிகாரத்தின் 'கோடாமை சான்றோர்க் கணி' என்ற ஈற்றடி போன்றவை ஒரே அதிகாரத்தில் இடம்பிடிக்கும் ஈற்றடிகள். இவ்வாறு ஒரே அதிகாரத்தில் அமையாத ஈற்றடிகளும் உள்ளன.  

சொல்லுக்குச் சொல் மாற்றமின்றி  அமையும் இத்தகைய ஈற்றடிகள் தவிர்த்து,  சற்றேறக் குறைய ஒத்திருக்கும் ஈற்றடிகளைக் கொண்டவையாக மேலும் 9 குறட்பாக்களும் உள்ளன. அவற்றுள் சில:
'தாழாது உஞற்று பவர்' (620 ) - 'தாழாது உஞற்று பவர்க்கு' (1024);
'நல்குரவு என்னும் நசை' (1043) -'நல்குவர் என்னும் நசை' (1156);
'மாசறு காட்சி யவர்'(199) - 'மாசறு காட்சி யவர்க்கு'(352) போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும்

இவ்வாறு அமையும் ஈற்றடியைக் கொண்ட குறட்பாக்களை ஒப்பிட்டுக் கொடுக்கப்பட்ட ஈற்றடி மூலம் வள்ளுவர் சொல்ல வரும் கருத்து என்ன?  அவர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்? என்ன நோக்கத்தில் கையாண்டுள்ளார் என்று ஆராய்வது  மேலும் பயனுள்ளவகையில் அமையும்.

[நன்றி:  உலகத்தமிழ் - இதழ்: 300   -  3.09.2025]  
Reply all
Reply to author
Forward
0 new messages