தேமொழி
unread,Dec 5, 2025, 2:28:08 AM (8 days ago) Dec 5Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
#அன்புநிறை_தமிழ்இயலன்_அய்யாஅவர்களின்_வேண்டுகோள்#
அண்ணா பல்கலை
நிருவாகத்தின் அட்டூழியம்!
—----------------------------------------
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறியியற் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிற மாணவர்களிடத்தில் தமிழின் தொன்மையையும், தமிழர் தொழில்நுட்பத்தையும் கொண்டு சேர்க்கும் வகையில் மிக அருமையான பாடத்திட்டம் ஒன்றினை வகுத்துத் தந்திருக்கிறார்.
அதற்காக மிக நேர்மையான முறையில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்தி 23 தமிழ்ப் பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பாடப்பகுதிகளை பயின்று வருகின்றனர். மட்டுமல்லாமல் கலை- அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பேச்சுப்போட்டி , கட்டுரைப்போட்டி இவற்றில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்று வருகிற அளவுக்கு உயர்ந்திருக்கின்றனர்.
பிறமொழி மாணவர்கள் கூட தமிழின் தொன்மையையும் தொழில்நுட்பத்தையும் கண்டு வியக்கின்றனர்: பிறமாநில மாணவர்கள் ஆங்கிலம் வழியாகப் புரிந்து கொண்டு எழுதுகிற வாய்ப்பும் இப்பாடத் திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது
மிகக் குறிப்பாக பிதாகரஸ் தேற்றத்திற்கு ஈடான கணக்கதிகார நூலின் பாடல்/ தஞ்சைப் பெரிய கோயில் கட்டுமானம் ஆகியவற்றைப் பயிலும் பொறியியற் கல்லூரி மாணவர்கள்
பழந்தமிழர்களின் பொறியியல் அறிவைக் கண்டு வியந்து வருகின்றனர்.
மிகப் பாராட்டுக்குரிய செய்தி என்னவென்றால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலரும் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுகிற நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதாகும்.
தமிழ்ப் பாடமானது, ஒரு மதிப்பு (Single credit) முறையில் இருந்து வருகிறது. ஆனால் பொறியியற் கல்லூரிகளில் ஆங்கில மொழிப் பாடமோ ,இரு மதிப்பு -(two credits)/ மூன்று மதிப்பு (three credits) என்ற முறைகளில் பாரபட்சத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல்வேறு பொறியியற் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ்ப் பாடத்தை இரு மதிப்பு , மூன்று மதிப்பு எனத் தரம் உயர்த்த வேண்டும் என்று அவ்வப்போது கேட்டு வருகிறார்கள்.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிருவாகம் தான்தோன்றித்தனமாக தமிழக அரசுடனோ, உயர்கல்வித்துறை அமைச்சகத்துடனோ கலந்து பேசாமல், கொஞ்சம் கூட கூச்சமின்றி, சிறிதளவு கூட மொழி உணர்வுமின்றி “தமிழ் மொழிப் பாடத்தை” தகுதி இறக்கம்— அதாவது நூறு மதிப்பெண்களில்ல் இருந்து வெறும் 50 மதிப்பெண்களாகக் குறைத்து —-சதி செய்திருக்கிறது.
இச்செயலானது, தமிழ்ப்பேராசிரியர்களிடமும் மாணவர்களிடமும், தமிழ் ஆர்வலர்களிடமும் பெரும் எதிர்ப்புணர்வை உருவாக்கி உள்ளது.
பொறியியல் கல்லூரிகளிலிருக்கும் இதே மாதிரியானதொரு, பாடத்திட்டத்தைத் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும், மருத்துவக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு அரசாங்கத்தின் மொழிக்கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.
மிக அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற பேராசிரியர்களுக்கான தேர்வின், ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழ்மொழி அடிப்படைத் தகுதித் தேர்வில் பல்லாயிரக்கணக்கானோர் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் , அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவானது மிகுந்த உள்நோக்கமுடையதாக அறிஞர்களால் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்தகுதித் தேர்வில் தோல்வியடைய வேண்டும் என்று இவர்கள் திட்டமிடுவதும், அதன் வழியாகப் பிற மாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் என்று சூழ்ச்சி செய்வதும், இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிய வருகிறது.
எப்போதும், தமிழ் மொழிக்கு ஆதரவாகச் செயல்படுவது போல நடித்து, தமிழுக்கு எதிராகவே செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரின் கையும் இதில் இருப்பதாக ஒரு செய்தியும் நிலவி வருகிறது. நிருவாகப் பிரிவில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் ஆளுநர் மாளிகையால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
எனவே, தமிழ்மொழி வளர்ச்சிப் பணிகளை முதன்மைப் பணியாக எடுத்துச் செய்து வரும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் , இதில் உடனடியாகத் தலையிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியற் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ்மொழிப் பாடத்தையும் மூன்று மதிப்புடையதாக (three credits) உயர்த்தித் தர வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 23 தமிழ்ப் பேராசிரியர்களும் வெறும் ரூ 25,000/ மட்டுமே மாத ஊதியமாகப்பெற்று பணியாற்றி வருகிறார்கள் – என்ற அவல நிலையையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.,
மிகமுறையாகத் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 23 தமிழ்ப் பேராசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும், அதன் மூலமாகப் பொறியியற் கல்லூரி மாணவர்களின் மனங்களில் தமிழை
அரியாசனம் ஏற்றி வைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களைப் பணிந்து வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
—23 தமிழ்ப்பேராசிரியர்கள்
சார்பாக—
தமிழ்இயலன் @ ச.தனசேகரன்
மேனாள் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்/
அண்ணா பல்கலைக்கழகம்
#CMStalin
#dcmudayanithistalin
#ministerhighereducation
#regustrarannauniversity