மார்கழி பிறந்து 10 நாட்களாயிற்று. இன்று 11வது நாள். திருப்பாவையும்
திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து படிக்கின்ற காலம்.
காலஞ் சென்ற என் தந்தையார் சிவநெறியாளர் ரெ.இராமசாமி அவர்கள் இன்றைக்கு
49 ஆண்டுகளுக்கு முன் 1959-ல் எம்பாவை எழில் என்ற பொத்தகத்தை
வெளியிட்டார்கள். இணையம் எங்கும் விரவியிருக்கும் இந்தக் காலத்தில் அதை
இன்றுள்ளோரும் மீண்டும் படித்து இன்புறும் வகையில் அப்படியே தட்டச்சில்
உள்ளிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகிறேன். இது அவருக்கு நான் செய்யும்
கடன்.[முன்பு ஒருமுறை தமிழுலகம் மடற்குழுவில் இந்த உள்ளீடு வந்தது.
பின்னால், படங்களோடு மின்பொத்தகம் ஆக்கும் பணியும் ஏதோவொரு காரணத்தால்
பாதியோடு தடைப் பட்டுப் போயிற்று. கூடிய விரைவில் அதைச் செய்வேன்.
அண்மையில் திரு.நாக. கணேசனும் நா. கண்ணனும் இதை மீண்டும் பதியச்
சொன்னார்கள். அவர்களின் கூற்றுக்கு இணங்கி, அதே பொழுது படங்கள் இல்லாது,
வெளிவருகிறது. நூலின் நடை 50 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே பழமையோடு
இருக்கலாம். பொறுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் விளக்கங்கள் கேட்டால்,
என்னால் முடிந்ததைச் சொல்ல முயல்வேன்.]
அன்புடன்,
இராம.கி.
____________________________________________________________________
உ
சிவமயம்
தவத்திரு. பண்டித சித. நாராயணசாமி அவர்கள்
வழங்கிய
ஆசியுரை
"திருவா சகமிங் கொருகால் ஓதின்
கருங்கன் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய
மெய்மயிற் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்த
அன்ப ராகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே"
என்றவாறு எவர் அகமும் உருகிக் கொண்டாடும் படி பாடப் பெற்ற மணிவாசக
அடிகளின் திருவாசகத்தின் பெருமையைத் தமிழ் மக்கள், அவருள்ளும் சைவ
மக்கள், புகழ்வது ஒரு வியப்புடையதாகாது. பிற மொழி மகனாகவும், பிற
கொள்கையுடையவனாகவும் தோன்றிப் பின் தமிழ் மொழியைக் கற்று, சைவத் துறை
நூல்களையும், செய்யுள்களையும் பயின்று, அவற்றின் திட்ப நுட்பங்களில்
திளைத்து, உம்பர் நாடு அடையும்
காலத்தில் தன் கல்லறையின் முகப்பில், "தண்டமிழ்த் தொண்டன்" எனச்
செதுக்கச் சொல்லிய "போப்பையர்" என்பவர், பேரன்பு பெருக்கும்
அத்திருவாசகத்தை "என்புருக்கி" எனத் தலைப்பிட்டு, ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தனர் என்பது போன்ற செய்தி பெரு வியப்பைத் தருவதாகும்.
அவ்வென்புருக்கியாகிய திருவாசகத்தில் "திருவெம்பாவை""என்னும் பாசுரத்
தொகை ஒன்று "அன்பினால் இன்பமார்" வியப்பதாகத் திகழ்கின்றது. இஃது
இளம்பெண்கள் அண்மையில் பெய்யும் மழைவளம் குறித்தும், சேய்மையில் தங்கட்கு
நல்ல கணவரைப் பெறுதல் குறித்தும், மாதங்களில் சிறந்த மார்கழித் திங்களில்
மதி நிறையும் நன்னாட்களில் விடியற் காலத்தில் தங்கள் தாய்மார்களின்
தூண்டுதலால் எழும்பி, உலகத் தாயாராகிய உமையம்மையாரை வழிபடுவதன் பொருட்டு
நீராட, முன்னெழுப்பிய பாவையர்கள் எழும்பாத பாவையரைப் பேச்சிட்டு
எழுப்புவதை அனுசரித்தும் சிவ பரம்பொருளைப் பாடியதாகும்.
இத் திருவெம்பாவைக்கு உரை பலர் எழுதியிருப்பினும், உண்மைப் பொருள் தோன்ற,
வடமொழி தென்மொழி வல்லுநர் ஆகிய பண்டிதமணி, மு.கதிரேசஞ் செட்டியார்
அவர்கள் ஓர் அருமந்த உரை எழுதியிருக்கின்றார்கள். அவ்வுரைப் பொருள்களை,
"முன்னோர் மொழிப் பொருளைப் பொன்னே போற் போற்றுவம்" என்பதாக அனுசரித்து,
எளிய இனிய வளமான நடையில், நற்கருத்துக்கள் மேவிய தம் உரைக்கேற்ப
வேறுபாடும் தோன்ற, எவரும் படித்து இன்புறுமாறு, (மலாயா நாட்டில் அலோர்
ஸ்டார் என்னும் ஊரில் வதிந்த) கண்டனூர், திருவும் கல்வியும் சீரும்
தழைக்கத் திகழ்கின்ற திரு ரெ.இராமசாமி அவர்கள் ஒரு நல்ல உரை விளக்கம்
எழில் ததும்ப எழுதியுள்ளார்கள். இந்த 'எம்பாவை எழில்' உரை விளக்கம்
எல்லோர்க்கும் இனிது பயன்படும்.
இந்நல்லார் இன்னும் நந்தமிழன்னைக்குரிய நற்பணிகளைப் புரிந்து இருமை
இன்பமும் எய்தி இறுமாந்திருப்பாராக என உமையொரு பாகன் ஆகி உடையவனை
வந்தித்துச் சிந்தித்து வாயார வாழ்த்துவோமாக.
திருவையாறு பண்டித சித. நாராயணசாமி.
17-12-1959
உ
திருச்சிற்றம்பலம்
அணிந்துரை
கீ.இராமலிங்கம். எம்.ஏ
(சென்னை அரசின் ஆட்சிமொழித் தனி அலுவலர், சென்னை)
'எம்பாவை எழில்' என்னும் இந்த இனிய உரைவிளக்க நூல் படித்துணர இன்பம்
பயப்பது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு சைவ சமய குரவர்களில்
ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானாலே திருவாய் மலர்ந்தருளப் பெற்ற
திருவாசகத்தினுள், அருள் நினைவு இழந்து இருள் மலத்தில் உறங்கிக்
கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பும் பான்மையினதாக விளங்குவது
திருவெம்பாவையாகும். இதற்கு இதுகாறும் எத்தனையோ புலவர்களால் எத்தனையோ
உரைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் 'எம்பாவை எழில்' என்ற இந்த எளிதான
தெளிவான இனிய உரை இக்காலத்திற்குப் பெரிதும் ஏற்றதாக எழுதப்
பெற்றிருக்கிறது.
புலமைப் பெருக்கினாலேயும், ஞான நூல் பயிற்சி மிகுதியினாலேயும், மற்ற
உரைகாரர்கள் தமது உரைகளில் ஏதேதோ பெரிய பெரிய கருத்துக்களைப் பாடலின்
சொற்கள் மீது சுமத்தி விடுகின்றனர். எனவே அவற்றினை மக்கள் எளிதில்
அறிந்து விளங்கிக்கொள்ளும் தெளிவு இருப்பது அரிதாகின்றது.
நேராக இலேசாகப் பொருள் செய்யக்கூடிய சொற்களுக்கும் வலிந்து கடுமையான
பொருள்களை ஏற்றிச் சொல்வது போல அவ்வுரைகள் காண்கின்றன.
"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது"
என்ற தொடருக்கு நேராகப் பார்த்தால் 'இரவும் பகலும் நாம் பேசும்போது உன்
பாசமெல்லாம் பரஞ்சோதிக்கு என்று சொல்லுவாய்' என்று பொருள் இருப்பதைக்
காணலாம். பழைய உரைகளில் 'என்பாய்' என்பதற்கு 'எலும்பாய்' என்று பொருள்
செய்துகொண்டு, 'பேசும்போது' என்னும் தொடரோடு 'எப்போது' என்று
அடுத்துவரும் சொல்லையும் சேர்த்து, 'பேசுகின்ற நேரம் எப்போது' என்று
பொருள் பண்ணுவதைப் பார்க்கலாம்.
இந்த 'எழில்' உரையின் முதற்சிறப்பு, பாடல் சொற்களின் மீது உரையாசிரியர்
தம் சொந்தப் பொருளைச் சுமத்தாமல் அவை இருக்கின்ற படியே பொருள் கூறும்
சிறப்புத்தான். எடுத்துக்காட்டாக இவ்வுரையின் சில பகுதிகளைக் கூறலாம்.
"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்"
'உன்னுடைய அன்பு (பக்தி) அத்தனையும் அருட்பேரொளிப் பிழம்பாயுள்ள அரனுக்கே
(சிவனுக்கே) உரியது என்று உரைப்பாயே!' என்றும்,
"உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்"
"'உன் கையில் சேர்ப்பிக்கப் பெறும் இப்பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம்'
என்று வதுவைக் காலத்தில் பண்டை நாள் முதல் வழங்கிவரும் பழமொழியைப்
புதுப்பிக்கும் நிலையில் எழுந்த எங்கள் அச்சத்தின் காரணமாக" என்றும்,
இவ்வாறே பிற பகுதிகளைக் காணலாம்.
இந்த விளக்கத் தெளிவுரையான 'எம்பாவை எழிலி'ன் ஆசிரியர், செட்டிவள
நாட்டைச் சேர்ந்த கண்டனூரில் தோன்றியவர். முறையாகத் தமிழறிந்த
புலவர்களிடம் முறையாகப் பயின்றவர். தனவணிகப் பணி பொருட்டு, மலேயாவில்
கடாரம் என்னும் மாநிலப்பகுதியின் தலைநகராம் அலோர் ஸ்டாரில் வசிப்பவர்.
திரு. ரெ. இராமசாமி என்னும் அரும் பெயர் பூண்டவர். ஆழ்ந்த சைவப்பாங்கும்
அடர்ந்த தமிழ்ப்பற்றும் உடையவர். கருத்தைத் திரித்து விட்டுவிட வல்ல தமது
பணிக்கு இடையிலே, நேரங்கண்டு, நமது அருள் நூல்களைப் படித்தும், அவற்றிலே
சிறந்த பகுதிகளான 'திருவெம்பாவை' போன்றவற்றிற்கு எழில் உரை எழுதியும்
வருவது மிகவும் போற்றத்தக்கது. தாம் பெற்ற இன்பத்தைத் தம்போன்ற தமிழ்
மக்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தால் இதனை வரைந்து உதவிய
அவர்கட்குத் தமிழுலகம் என்றும் கடமையுள்ளதாகும்.
இந்நூலை அழகியதாக விரைந்து அச்சிட்டு அளித்துள்ள சாந்தி நூலகத்தார்
பாரட்டற்குரியவர்கள். அவர்களது தமிழ்த் தொண்டு என்றும் நிலவி வாழ்க.
சென்னை, கீ.இராமலிங்கம்
9-12-1959
முன்னுரை
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
துணைத் தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்
சங்க நூல்கள்
ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மணிவாசகப் பெருமான் பாடியருளிய
திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டது. மார்கழி நோன்பு,
சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல்,
நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.
"மார்கழி மாதத்தில் - நிறைமதி நாளாகிய திரு ஆதிரையில் ஆகமங்களை உணர்ந்த
பூசகர்கள் தெய்வத்திற்குத் திருவிழாவைத் தொடங்கினர். அப்போது கன்னிப்
பெண்கள் ஒன்று கூடி, 'நிலம் மழைவளம் பெற்றுக் குளிர்வதாகுக' என்று சொல்லி
அம்பா ஆடலை மேற்கொண்டனர். அந்நோன்பு முறையை அறிந்த முதிய பார்ப்பனிமார்
அக்கன்னிப் பெண்களுக்கு நோன்பு நோற்கும் முறைமையைத் தெரிவித்தனர்.
அக்கன்னிப் பெண்கள், அவர்கள் தெரிவித்த படி, பனிநிறைந்த கதிரவன் தோன்றும்
காலத்தில் வையையில் நீராடினர்; கரையில் தங்கியிருந்த அந்தணர்கள் வளர்த்த
வேள்வித்தீயை வணங்கினர். இங்ஙனம் இளைய ஆண்மக்களோடு காமக்குறிப்பு இல்லாத
விளையாட்டைப் புரியும் அக்கன்னிப் பெண்கள், தவமாகிய தைந்நீராடலை
வாய்க்கப் பெற்றனர். "
இது பரிபாடல் என்னும் சங்க நூலில் பதினோராம் பாடலில் காணப்படும்
செய்தியாகும். இப்பாடலில் வரும் 'அம்பாஆடல்' என்பது அம்மன் பொருட்டு
நிகழ்த்தப்படும் நீராட்டு என்று பொருள்படும். (பேராசிரியர்
மு.இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதி, பக் 194-195) அம்பா, அம்பாள்
என்பவை அம்மனைக் குறிப்பவை.
நற்றிணை, ஐங்குறுநூறு கலித்தொகை என்பவை இதனைத் 'தைந்நீராடல்' என்று
குறித்துள்ளன.
"வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூண் இருக்கையின்"
என்பது நற்றிணை.
"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து"
என்பது ஐங்குறுநூறு.
"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ"
"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்"
என்பன கலித்தொகை அடிகள்.
இங்ஙனம் பண்டை நூல்கள் மார்கழி நோன்பைத் 'தைந்நீராடல்' என்று கூறக்
காரணம் யாது? முழுநிலவும் திருவாதிரையும் மார்கழி மாதம் பதினைந்தாம்
நாளிலேனும் அல்லது அதன் பின்பேனும் ஒன்று கூடுதல் இயல்பு. அக்காலத்தில்
அமாவாசை தொடங்கி மறு அமாவாசையில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும்,
பௌர்ணிமை தொடங்கி மறு பௌர்ணிமையில் முடியும் கால அளவு ஒரு மாதம் என்றும்
இருவகையாக முன்னோர் கணக்கிட்டனர். அவை முறையே 'அமாந்தம்' (அமாவாசையோடு
முடிவுறும் மாத கலம்), 'பூர்ணிமாந்தம்' (பௌர்ணிமையோடு முடிவு பெறும் மாத
காலம்) எனப் பெயர் பெற்றன. அம்முறைப்படி மார்கழித் திங்களின் இடையில்
பௌர்ணிமைக்குப் பின் வரும் மாதம் - மார்கழியின் பிற்பகுதியும், தையின்
முற்பகுதியும் ஆகும். அதனால் தான் மார்கழி நோன்பு 'மார்கழி நீராடல்'
என்றும், 'தைந்நீராடல்' என்றும் இருவகையாக வழங்கப் பெற்றது. (பேராசிரியர்
மு.இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி பக்கம் 196)
"திருவாதவூரடிகள் புராணத்துட் கூறப்பட்ட படி மார்கழிநீராடல்
திருவாதிரைக்குப் பத்துநாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில்
முடிவுபெறும் என்பதும், தைந்நீராடல் மார்கழித் திருவாதிரையில் தொடங்கி
நடைபெறும் என்பதும் இங்கே கண்ட வேறுபாடாம். நூற்பிரமாணம் உள்ளனவும்
இல்லனவுமாய் மக்கள் வழக்கவொழுக்கங்களிற் காணப்படும் இன்னோரன்ன
நிகழ்ச்சிகள் இங்ஙனம் காலந்தரத்தில் வேறுபடுதல் இயல்பே."
(பண்டிதமணி, திருவெம்பாவை, பக்கம் 14)
"ஒலையைப் பிடித்துப் படிக்கும் இளைய ஆண்மக்களோடு காமக் குறிப்பில்லாத
விளையாட்டைப் புரியும் சிறுமியர் மார்கழி நீராடினர்" என்பது பரிபாடற்
கூற்று. மேலும் அப்பெண்கள், "வெம்பாத வியனிலை வரைப்பு" (நிலம் மழை வளம்
பெற்றுக் குளிர்வதாகுக!) என்று அம்மனை வேண்டி நோன்பிருந்தனர் என்பது
நோக்கத் தக்கது.
திருப்பாவை-திருவெம்பாவை
இங்ஙனம் பெண்மை நிரம்பாத சிறுபெண்கள் சங்க காலத்தில் மழைவளத்தை வேண்டியே
மார்கழி நோன்பை மேற்கொண்டனர். ஆயின் ஆண்டாள் - மாணிக்கவாசகர் காலத்தில்
(கி.பி. 8,9 ம் நூற்றாண்டுகளில்) - மணப்பருவத்தை அடைந்த பெண்களும்
இந்நோன்பை பேற்கொண்டனர்; அதனால்
நாடு செழிக்க நோன்பையும் தமகேற்ற கணவரையும் பெற அம்மன் அருளை வேண்டி
மார்கழி நோன்பை மேற்கொண்டனர் என்பது தெரிகிறது.
இவ்வுண்மை,
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீணங்கின்றி நாடெல்லாந் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்"
"சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்:
பெற்றமேய்த் துண்ணுங் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் என்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றுநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்"
என்னும் ஆண்டாள் பாசுரங்களால் அறியப்பெறும். இதனை,
"முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்"
என்ற திருவெம்பாவை அடிகளாலும்,
"உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார்"
"எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க"
என வரும் திருவெம்பாவை அடிகளாலும் நன்கறியலாம்.
இச்சான்றுகளை நோக்க, முதலில் மழைவளம் வேண்டியே சிறு பெண்களால் நோற்கப்
பட்ட மார்கழி நோன்பு - காலப்போக்கில் - பத்திநெறி மிகுதியாகப் பரவிய பின்
நூற்றாண்டுகளில், பருவமடைந்த பெண்களாலும் மேற்கொள்ளப் பட்டது என்பது
தெளிவாம். வைணவப் பெண்கள் கண்ணனையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர்
சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச்
சிறப்பாக இந்நோன்பை மேற்கொண்டனர் என்பது அறியப்படும்.
பெண்கள் வயது
சங்க காலத்தில் இந்நோன்பை மேற்கொண்டவர் சிறுபெண்கள்; ஆண்டாள் - மாணிக்க
வாசகர் காலங்களில் பருவப்பெண்களும் இதனை மேற்கொண்டனர். மார்கழி நோன்பில்
கலந்து கொண்ட சைவப்பெண்கள் 5,6,7,8,9,10,11,12 வயதுடையவர்கள் என்று
திருவெம்பாவை உணர்த்தி நிற்றலை பண்டிதமணி அவர்கள் நன்கு
வெளிப்படுத்தியுள்லனர். (திருவெம்பாவை, பக் 8-9)
பிங்கல நிகண்டில் ஐந்துமுதல் ஒன்பது வயது வரையுள்ள பெண்கள் பனிநீர்
தோய்வர் என்பது கூறப்பட்டுள்ளது. இது மார்கழி நீராடலையே குறிக்கும்
என்பது அறிஞர் துணிபு. (ஆராய்ச்சித் தொகுதி பக் 197). எனவே பிங்கலந்தை
ஆசிரியர் காலத்தில் மார்கழி நீராடல் 9 வயது வரையுள்ள பெண்களுக்கே
உரியதாய் இருந்தது என்பது தெரிகிறது. அவர்க்குப் பிற்பட்ட ஆண்டாள்-
மணிவாசகர் காலத்தில் 9-க்கு மேற்பட்ட வயதுடைய மணமாகாத பெண்களும்
இந்நோன்பை மேற்கொண்டனர் என்பது தெரிகிறது. (இதனால் பிங்கலந்தை ஆண்டாள்-
மணிவாசகருக்கு முற்பட்டது என்பதும் தெளிவாகிறது.)
இந்நோன்பிற்கு அடிப்படைச் சான்று
இங்ஙனம் பெண்களால் கொண்டாடப் பெறும் இந்நோன்பு வேதங்களில் காணப்பெறாதது -
தொன்றுதொட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நோன்புகளுள் ஒன்று என்பது
சான்றோர் கருத்து. பாகவதத்தில் - தசமஸ்கந்தம் 22 -ஆம் பகுதியில்
இந்நோன்பு பற்றிய செய்திகள் குறிக்கப் பட்டுள:
"கோகுலத்துப் பெண்கள் மார்கழியில் காத்யாயனி (சக்தி) வழிபாடாகிய
நோன்பினைத் தொடங்கி நடத்தினர்; வைகறையில் எழுந்து யமுனையில் நீராடினர்;
ஈர நுண்மணலால் காத்யாயனி அம்மனது உருவத்தைச் சமைத்துச் சந்தனம், மலர்,
புகை, தளிர், பழம் முதலியவற்றால் அவ்வம்மனை வழிபட்டனர்; கண்ணனைத்
தங்கட்கு மணாளனாகத் தரவேண்டும் என்று வேண்டினர்; இங்ஙனம் ஒரு திங்கள்
முழுமையும் நோன்பியற்றினர். அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள்
தோழிகளின் பெயர்களைச் சொல்லி அழைத்துக் கையைக் கோத்துக் கொண்டு கண்ணன்
பற்றிய பாக்களைப் பாடி நடந்து சென்று, அவன் புகழைப் பாடிக்கொண்டே
நீராடினர்" என்பது பாகவதச் செய்தியாகும்.
"ஹோளை ஹோளகம்" என்று பெயர் பெற்ற காமன் நோன்மை அடிப்படையாகக் கொண்டதே
இந்நோன்பு என்பது திருப்பாவைக்கு விரிவுரை வரைந்த பெரியவாச்சான்
பிள்ளையின் கருத்து.
"நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள்" என்னும் தொடரால், அம்மன் உருவம்
சமைக்கப் பெற்று உருவ வழிபாடு நடைபெற்றமை புலனாகிறது. பாவையை வைத்து
வழிபடுதல் பற்றி இது பாவை நோன்பு எனப்பட்டது: "பாவாய்," "எம்பாவாய்"
என்று விளிக்கப்பெற்ற சிறப்புப் பற்றி முறையே ஆண்டாள் பாக்கள் திருப்பாவை
என்றும், மணிவாசகர் பாக்கள் திருவெம்பாவை என்றும் பெயர் பெற்றன.
நோன்பு முறை.
நோன்பை மேற்கொண்ட பெண்களுள் தாமே துயில் நீத்து எழத்தக்க பருவமங்கையர்
சிலர் எழுந்து நீராடச் செல்வர்; அங்ஙனம் செல்பவர் நீராடுதற்கு உடன்
வருவதாக முதல் நாளில் ஒப்புக் கொண்டு உரிய நேரத்தில் எழாமல் உறங்கும்
பெண்களை எழுப்புவர்; பின்னர் அனைவரும்,
"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாக பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம்; ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கணவர் ஆவார்; அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்"
என்று இறைவன் புகழைப் பாடிக் கொண்டே நீராடச் செல்வர். பின்பு
அப்பெண்மணிகள்,
"மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழியடியோம் வாழ்ந்தோம்காண்; ஆரழல்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்"
எனவும்,
"காதலார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி நிறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி நிறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறன்பாடி யாடேலோ ரெம்பாவாய்"
எனவும் பலவாறு பாடிக் கொண்டு நீராடுவர்; தம் நோன்பின் பயனாக மழை பெய்ய
இறைவியின் துணையை வேண்டுவர்;
"எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க"
என வேண்டுவர்; நீராடி முடிந்த பின்பு, அதன் பயனாக இறைவனையும், அவனைப்
பாடியாடுவதற்கு வாயிலாகிய நீரையும் வேண்டிக் கோடலாக,
"போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்"
எனவும் பாடி மகிழ்வர்.
முடிவுரை
சங்க காலத்தில் சிறுபெண்களால் மழைவளம் பற்றித் தொடங்கப் பெற்ற இந்நோன்பு,
பின்னர் காலப் போக்கில் கணவரைப் பெறவும் பயன்படுத்தப் பட்டது என்பதும்,
அடியார்களால் இறை அடிப்படையில் பாடப்பெறும் பெருமை பெற்றுவிட்டது
என்பதும், இதுகாறும் கூறப்பெற்ற உண்மைகளால் அறியப் பெறும்.
இக்காலத்தில் திருப்பாவை வைணவ ஆடவர் - மகளிர் ஆகியோராலும், திருவெம்பாவை
சைவ ஆடவர் - மகளிர் ஆகியவராலும் மார்கழியில் ஓதப் பெருகின்றன; வழிபாடுகள்
நிகழ்த்தப் பெறுகின்றன. இங்ஙனம் மார்கழி நோன்பு சமய ஒழுக்கமாக நாளடைவில்
மாறிவிட்டது. திருவாதிரைக்குப் பத்து நாட்கள் முன்பு தொடங்கி
அவ்வாதிரையோடு திருவெம்பாவை 20 பாடல்களும் சைவரால் ஓதப் பெறுகின்றன;
நாள்
ஒன்றுக்கு ஒரு பாடலாகத் திருப்பாவை 30 பாக்களும் வைணவரால் திங்கள்
முழுமையும் ஓதப் பெறுகின்றன.
திருப்பாவை - திருவெம்பாவை ஆகிய இரு பாக்களும் அவை தோன்றிய காலத்து
அணிவகைகள், பழக்க வழக்கங்கள், சமய ஒழுக்கம் முதலியவற்றை அறியப்
பெருந்துணை புரிகின்றன. இப்பாடல்கள் படிக்கப் படிக்க உள்ளத்தைக்
குளிர்விக்கும் ஆற்றல் பெற்றவை.
மாணிக்க வாசகர் பாடியருளிய திருவெம்பாவை சைவ உலகின் உயிர் நாடி போன்றது.
இதற்குப் பண்டிதமணி அவர்கள் பல நயங்களோடு - புலவர் பாராட்டத்தகும்
முறையில் - விளக்கவுரை வெளியிட்டார்கள். இப்போது வெளிவரும் இந்நூல்
கண்டனூர் திரு. ரெ. இராமசாமி அவர்கள் எழுதியுள்ள
விளக்கம் கொண்டதாகும். ஆசிரியர் சைவப்பற்றும், தமிழறிவும்,
நல்லொழுக்கமும் வாய்ந்தவர்; திருவெம்பாவைக் கடலுள் குடைந்து குடைந்து
ஆடியவர்; அக்கடலில் இருந்து நன் முத்துக்கள் என்னும் நல்ல கருத்துக்களை
இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார். சாதாரண மக்களும் படித்து உணரத்தகும்
எளிய நடையில் இவ்வுரை விளக்கம் அமைந்துள்ளது. ஆசிரியரது இந்த நல்ல
முயற்சியை நான் உளமாரப் பாராட்டுகிறேன்.
ஆசிரியரை மேலும் பல்லாண்டுகள் வாழ்வித்து இத்தகைய நல்ல நூல்களை வெளியிடத்
துணைசெய்யும்படி இறைவன் திருவருளை ஏத்துகிறேன்.
சென்னை மா. இராசமாணிக்கம்
19-12-1959
பாராட்டுப் பாக்கள்
சித்தாந்தச் செல்வர், பண்டித,
மு. முத்துவேங்கடாசலம் அய்யர்
திருவண்ணாமலை ஆதீன வித்வான், பள்ளத்தூர்.
வாதவூ ரன்பன் மணவா சகப்பொருளைக்
கோதறவே காட்டுங் குலதீபம் - ஓதுதமிழ்
தேர்ந்துணர்ந்த செல்வன் திருஇராம சாமியன்பன்
ஈந்தஎம் பாவை எழில்.
இம்மைநல மெல்லா மினிதளித்து வீடருளும்
அம்மையப்ப னாரின் அருட்பெருக்கால் - செம்மைமிகும்
இந்த'எம் பாவை எழில்'துலக்கும் ஆசிரியன்
சந்ததமும் வாழி தழைத்து.
மு. முத்துவேங்கடாசலம் அய்யர்
புதுவயல், புலவமணி
சோமசுந்தரம்
திருவண்ணாமலை ஆதீன வித்வான்
எம்பிரா னேயெழுதி ஏற்றதிரு வாசகத்தின்
எம்பாவை யுள்ளோர் எழிலை - நம்பாரில்
கண்டுபயந் தேனென்னக் கட்செவியீ ராயிரநா
விண்டளித்தான் நுண்ணறிவின் மேல்
அச்சுவா கனமேற்றி ஆருயிர்க ளார்வமுற
மெச்சுபுகழ்க் கண்டனூர் வேள்வணிகன் - சொற்சுவைகள்
தாமிளிரத் தந்துவந்தான் சற்குணமே மே(வு)இராம
சாமிநிதம் வாழ்கநலம் சார்ந்து
சோமசுந்தரம்
பதிப்புரை
ஒரு காலத்தில் சோழர் தம் புலிக்கொடி நாட்டிய 'கடாரம்' என்ற பகுதியே மலாயா
நாட்டின் இன்றைய 'கெடா' மாகாணமாகும். அதன் தலைநகரான அலோர் ஸ்டாரில் நான்
வதிந்திருந்த காலை, இரண்டாண்டுகளுக்கு முன் என் நண்பர்கள் சிலரின்
தூண்டுதலாலும், முக்கியமாக அந்நாட்டுக்கு வந்திருந்த திருவையாறு அறுபத்து
மூவர் மடத்துத் தலைவரான தவத்திரு. பண்டித. சித. நாராயணசாமி அவர்களின்
ஆசியாலும், மணிவாசக அடிகளின் திருவாசகத்துள் மாணிக்க மாலையாக விளங்கும்
திருவெம்பாவைக்கு உரைவிளக்கமும் உற்ற அழகும் உரைக்கும் வகையில்,
உரையாசிரியர்களின் அடியொற்றி 'எம்பாவை எழில்' என்ற தலைப்பில் ஐந்து
கட்டுரைகள் எழுதினேன். அவற்றுள் முதற்கட்டுரை அந்நாட்டின் தமிழர்
தினசரியான 'தமிழ் முரசு' ஞாயிறு மலரிலும், மற்ற நான்கு கட்டுரைகள்
அந்நாட்டின் மற்றொரு தமிழ் தினசரியான 'தமிழ்நேசன்' ஞாயிறு மலரிலும்
வெளிவந்தன.
மேற்கண்ட ஐந்து கட்டுரைகளையும் புத்தக உருவில் அமைத்தால் அது இன்னும்
பலருக்கு என்றும் பயன்படலாம் எனக் கருதி, மேலும் சில மாற்றங்களுடன்
புத்தக உருவில் அமைத்து வெளிவருகின்றது. இதனைத் தமிழ் மக்கள் நன்கு
பயின்று, பாவைப் பாக்களின் பொருளுணர்ந்து இறை பக்திக்கு
இலக்காகுவார்களாக.
'எம்பாவை எழில்' கட்டுரைகள் வரைவதற்கு முக்கிய காரண பூதராய் விளங்கி,
இப்புத்தகத்துக்கும் ஆசியுரை ஈந்த தவத்திரு. பண்டித. சித. நாராயணசாமி
அவர்களுக்கும், முன்னுரை வழங்கிய திருவாளர் டாக்டர் மா.இராசமாணிக்கனார்
M.A.L.T., M.O.L., Ph.D அவர்களுக்கும், அணிந்துரை வழங்கிய திருவாளர்
கீ.இராமலிங்கம் எம்.ஏ அவர்களுக்கும், இன்னும் பாராட்டுக்கள் நல்கிய எனது
ஆசிரியர் பள்லத்தூர் பண்டித. முத்துவெங்கடாசலம் ஐயர் அவர்களுக்கும்,
புதுவயல், புலவர்மணி திரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்களுக்கும் என்
உளங்கனிந்த நன்றி உரியதாகுக.
இந்நுலின் விற்பனை உரிமையை ஏற்றுக் கொண்டு அச்சிட உதவிய சாந்தி
நூலகத்தாருக்கும் நன்கு அச்சிட்டுத் தந்த மாருதி அச்சக உரிமையாளருக்கும்
என் உளமார்ந்த நன்றி உரியதாகுக.
19-12-1959 ரெ.இராமசாமி
கண்டனூர்
உ
சிவமயம்
உரிமையுரை
செந்தமிழ் மணங்கமழ் தேவ கோட்டையில்
வாழ்தரு செல்வன் வணிக மாமணி
ஒழுக்கமும் வாய்மையும் உயர்குடிப் பிறப்பும்
அழுக்கிலா அன்பும் அடக்கமும் அருளும்
கல்வியும் கொடையுங் கவினுறச் சிறந்தோன்
நாட்டு நாவலர் பாட்டிடை மகிழ்ந்து
பாட்டு மொழிதரும் தேட்டமும் படைத்தோன்
சாந்த சமுத்திரம் தரும மாணிக்கம்
வாய்ந்தபொற் பேழை வரகுண மேரு
தனிப்புகழ்ச் சைவசித் தாந்தப் புரவலன்
நேமங் கோயில் நிகழ்'தமிழ் வள்ளல்'
புண்ணிய நீறு பூத்தநன் மேனியும்
கண்டம் பொலிதரு கண்டிகை யழகும்
பொலியப் பரசிவ பூசனை புரிவோன்
திசையிசை பரவுஞ் சேவு.மெய் யப்பற்கு
நலமலி வாதவூர் நல்லிசைப் புலவன்
மனநின் றுருக்கும் மதுர வாசகன்
இனிதுவாய் மலர்ந்த 'எம்பா வை' எழில்
துலங்குமிந் நூலைத் தோழமைக் கேற்ப
உரிமை யாக்கி உளமுவந் தளித்தே
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தனன் யானே.
ரெ.இராமசாமி
அன்பின் இராமகி:
எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி இருக்கின்ற வேலையில், உடல் சுகத்தையும்
மறந்து தங்கள் தந்தையாரின் "'எம்பாவை எழில்" எனும் பொத்தகத்தை மீளாக்கம்
செய்து எங்களை மகிழ்வித்துள்ளீர்கள்.
போற்றி யருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி யருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்...
கேட்டவுடன் அப்படியே பள்ளிக்காலத்திற்குப் போய்விட்டேன். என் சகோதரிகள்
திருப்பாவை, திருவெம்பாவை இரண்டையும் தினம் பூவணத்து புனிதனார் ஆலயத்தில்
பாடுவர். கடைசி நாளன்று பசுவன் என்றொரு கிரிசை உண்டு. இளம் பெண்கள் போல்,
ஓர் சிறுவனை 'பசுவன்' என்று சொல்லி வைப்பர். அவன் துணைக்கு தினமும்
இப்பெண்களுடன் போக வேண்டும் (கோகுலத்தில் கண்ணனுக்கே இப்பசுவன்
பணியும்!). நோன்பு முடிந்தவுடன் கோலாட்ட ஜோத்திரை என்று சொல்லி குட்டிகள்
எல்லாம், "கோலேனா..கோலே..பாலா..நிலானா கோலே (இது என்ன மொழி?) என்று
பாடிக்கொண்டு கோயிலுக்குப் போய் நோன்பை முடிப்பர். நிழலாக நினைவில்...
மேலும் கண்டனூர், பள்ளத்தூர் என்ற பெயரெல்லாம் மீண்டும் வேறொரு
காலத்திற்கு இட்டுச் செல்கிறது. திருவேகம்பத்தூர் எனும் ஊரில் நான்
பிறந்தேனாம். அந்த ஊர் ஸ்வாமியின் பெயர் "ஏகாம்பரஸேஸ்வரராம்'. என்னைக்
கொஞ்ச நாள் வேடிக்கையாய் 'ஏகாம்பரம்' என்று கூட அழைத்ததுண்டாம்.
இவையும்..நிழலாக...
நாட்டரசன் கோட்டை ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் பூர்வீகமாக எங்கள் பூட்டன் சொத்து...
ம்..ம்ம்..எங்களூர்காரர் சொல் மீண்டும் கேட்க இனிக்கிறது.
மீண்டும் நன்றி.
கண்ணன்
நோன்பு முடிந்தவுடன் கோலாட்ட ஜோத்திரை என்று சொல்லி குட்டிகள்
எல்லாம், "கோலேனா..கோலே..பாலா..நிலானா கோலே (இது என்ன மொழி?) என்று
"எம்பாவை" என்பது "திரு" என்னும் மங்கலச் சொல்லை அடைமொழியாய்ச்
சேர்த்துத் "திரு எம்பாவை" என்ற பெயரால் பேரறிஞரும், பெம்மானின்
சீரடியாரும், தீந்தமிழ் வாசகருமான, வாதவூர்ப் பெருந்தகையாம் மாணிக்க வாசக
சுவாமிகளால் பாடப்பெற்ற, பக்தியின் முதிர்வே உருவாகக் கொண்ட
திருவாசகத்தின் ஒருபகுதி. அது இருபது திருப் பாக்களைக் கொண்ட ஒரு
தனிச்சிறப்பு வாய்ந்த செம்மைசால் பகுதியாகும். கன்னிப் பருவத்துப்
பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் உணர்த்தி மார்கழி நீராடும் மாண்பினை
எடுத்தோதும் வரலாற்றினைக் கூறும் வளம் நிறைந்த வண்ணப் பகுதி என்றும்
வழுத்தலாம்.
"தமிழகத்தின் தவநூல்; ஞானப் பனுவல்; பக்திப் பெருநூல்; தத்துவக்
கருவூலம்; ஆத்திகக் களஞ்சியம்; ஆன்மபோதச் செல்வம்;" என்றும், "உணர்ந்த
உள்ளத்தின் ஊற்றில் இருந்து ஊறி உயர்ந்து வந்த உயர்ஞான உரை; காதலால்
கசிந்து கண்ணீர் மல்கிய வாதவூராரின் வளம் சான்ற வண்மைத் தமிழாம் தண்ணருள்
தழைத்த திருமொழி" என்றும் பல்லோரால் பாராட்டப் பெற்ற பக்திப்பனுவல்
திருவாசகத்துள், "திருவெம்பாவை" என்னும் பகுதி, பக்தியுடன் கூடிய இன்பப்
பெருக்கை இனிதூட்டும் இனிய பாக்களைக் கொண்டதாகும்.
அடிகள் இதயத்து அரும்பிய தோற்றம்
பண்டைக் காலத்தில் தமிழகத்தில் மார்கழி மாதம் தோறும் மணமாகாத கன்னிப்
பெண்கள் திருவாதிரைக்குப் பத்து நாட்களுக்கு முன்பிருந்து, வைகறைப்
பொழுதில் துயில் நீத்தெழுந்து தம் தோழிகளின் இல்லங்கட்குச் சென்று
ஒவ்வொருத்தியையும் துயில் எழுப்பி அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி,
"ஒன்றே தேவன்" என்னும் சிவன் சீர் பாடி, தண்சுனை, தட்பநதி, தடாகம் முதலிய
நீர்நிலைகட்குச் சென்று நீராடி, உலகன்னை என்னும் உயர்தனிச் சக்தியாம்
பராசக்தியின் திருவுருவை (கற்பனையாக) தூய ஈர மணலால் பாவை என்னும் பதுமை
செய்து, அதற்கு (புதுமலர், குங்குமம் புனைந்து) பூசனை புரிந்து, மழைவளம்
குறித்தும், மாண்புமிக்க மணாளரைப் பெறுதற் பொருட்டும் வேண்டிக் கொண்டதைத்
திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தின் கண்ணே நேரிற் கண்ட மணிவாசக அடிகள்,
தான் அப்பெண்களின் நிலை நின்று அவர்கள் கூற்றாகப் பாடியருளியது இத்
திருவெம்பாவை யாகும். அவ்விளம் பாவையர் நிகழ்த்தும் இந்நிகழ்ச்சியினை
"மார்கழி நோன்பு" என்றும் "பாவை நோன்பு" என்றும் பகர்வர்.
இருபெரும் பாவைப் பாக்கள்
திருவெம்பாவைப் பகுதிக்கண் அமைந்த திருப்பாட்டுக்களைச் சுருக்கமாகப்
"பாவைப் பாட்டுக்கள்" என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு பாட்டின் ஈற்றடியில்
உள்ள இறுதிச் சொல் விளியேற்று "பாவாய்" என்று முடிவு பெறும் பாட்டுக்கள்
"பாவைப் பாட்டுக்கள்" எனப்படும். இவ்வாறான பாவைப் பாட்டினுள் சூடிக்
கொடுத்த சுடர்க்கொடியாம் ஸ்ரீ ஆண்டாள், திருமால் பக்தியில் திளைத்து
அவரிடம் அதீத காதல் கொண்டு உருகிப் பாடியருளிய முப்பது திருப்பாக்களைக்
கொண்ட திருப்பாவையும் அடங்கும்.
திருவெம்பாவை சிவபெருமானின் பெருமை போற்றுவது. திருப்பாவை திருமாலின்
திருப்புகழை ஏற்றுவது. சிவனும் திருமாலும் நாம பேதமே அன்றி, 'இறைவன்
ஒருவனே' என்பது பேரறிஞர்களும், பெரு ஞானிகளும் கண்ட ஒரு பெரும் உயர்
முடிவு. அதனை "ஒருவனே தேவன்" என்றும் "அரன் நாரணன் நாமம்" என்றும்
பெரியோர்கள் கூறியுள்ள வாக்குகளாலும்,
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூள்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.
என்ற பேயாழ்வார் பாசுரத்தாலும் நன்கு உணரலாம். எப்பெயரால் அழைப்பினும்,
"வேதம் பகர்ந்திட்ட மெய்ப்பொருளாம் உட்பொருளை" அது ஒன்றே என்ற முறையில்,
இருவேறு நாமங்கள் இட்டு இதயம் கலந்து இனிது ஓதி அவைகளின் இணையிலாப்
பெருமைகளை எடுத்து இசைக்கின்றன, இரு பாவைப் பாட்டாம் திருவெம்பாவையும்
திருப்பாவையும்.
திருவெம்பாவைக்கும் திருப்பாவைக்கும் பொதுவாக உள்ள ஒற்றுமைகள் பலவாகும்
எனினும், ஆங்காங்கே ஒரு சில மாற்றங்களும் காணுதற்கு இடமுண்டு. அவைகளை இரு
பாவைப்பாக்களையும் துருவிப் பார்த்து ஒப்பு நோக்குங்கால் நன்கு உணரலாம்.
பொதுநோக்காகப் பார்க்கும் இடத்து திருவெம்பாவை வரலாறு போலவே திருப்பாவை
வரலாறும் ஆகும் என்பது புலப்படும்.
"ஆயர்பாடியிலே ஆழிமழை வண்ணனாம் கண்ணனும், ஆரழகனைத்தும் ஒருங்கே
அமைந்தாலன்ன ஆய்ச்சியரும், தம் தம் இளமைப் பருவத்தே இன்ப விளையாடல்களில்
இணைந்து ஈடுபட்டு இலங்கியதைக் கண்ட அவ் வாய்ச்சியரின் பெற்றோர்.
"அக்கண்ணனைக் கண்ணால் பார்த்தலும் ஆகாது" என்று கட்டளையிட்டுத் தத்தம்
அகங்களில் அடைத்து வைத்துக் கட்டுப் படுத்தினர். அதன் பயன்போலும் அன்று
தொட்டு ஆயர்பாடியில் மழையே இல்லை. இந்நிலையில், அப்பெற்றோர் அவ்விளம்
பெண்களை நோக்கி, "மழை பெய்வித்தல் வேண்டி மார்கழி நோன்பு
நோற்பீர்களாகுக!" என்று கூறினர். அவர்களும் தாம் முன்பு காதல் கொண்ட
கண்ணனையே அடையவேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்தார் ஆதலின், மழை
இல்லாக் குறையைப் போக்குவிப்பான் வேண்டி, மைவண்ண மாலாம் மணிவண்ணனைத்
தலைவனாகத் தம் தம் மனத்தகத்தே நியமித்துக் கொண்டு தங்கள் உடன் தோழிகளைத்
துயில் உணர்த்தி அனைவரும் ஒருசேர வந்து யமுனைத் துறையில் நீராடி நோற்றுக்
கண்ணனை (ஆத்ம) நாயகனாக அடையும் பேறு பெற்றார்கள்" என்பது திருப்பாவை
வரலாறு ஆகும்.
மணமாகா மங்கையர் நோற்கும் மார்கழி நோன்பு மகாசக்தியின் தொடர்பு கொண்டது
என்பதைத் திருவெம்பாவையும் திருப்பாவையும் அதனதன் பாக்களின் ஈற்றடி
இறுதியில் வரும் "எம்பாவாய்" என்ற இன்சொல் இனிது விளக்கும். "பாவை"
என்பதற்குப் பதுமை என்றும், பெண் என்றும், நோன்பு என்றும் பொருள்
கொள்வர். ஆனால், "எம்பாவாய்" என்ற சொல் இருபாவைப் பாட்டிலும் சிலசில
பாக்களில் பொருள் ஒன்றியும், சிலசில பாக்களில் பொருள் இன்றியும்
விளங்குகிறது. அப்படிப் பொருளில்லாச் சொல்லாக வரும் இடங்களில் அவை ஏனைய
பாக்களோடு இசை முகத்தான் இசைதற் பொருட்டு இறுதி மகுட ஒற்றுமையாக
இலங்குகின்றது, என்றுதான் கொள்ள வேண்டுமென உரையாசிரியர்கள்
உரைக்கின்றார்கள்.
"ஏல் ஓர்" என்ற இரு சொற்களும் இரு பாவைப்பாட்டுக்களின் ஈற்றடிகளில்
வருகின்றன. "ஏல்' என்பதற்கு ஏற்றுக்கொள்ளென்றும் "ஓர்" என்பதற்கு
ஆராய்ந்து பார் என்றும் சிலசில பாக்களில் பொருள் பொருந்தி வருகின்றன.
ஏனைய சில பாக்களில் அச்சொற்கள் பொருள் பொருந்தா நிலையில் அசைச்
சொற்களாகவே அமைந்து வருகின்றன என்பது ஆய்வாளர்கள் கூற்று.
மார்கழி மாதத்தில் கருமுகில் வண்ணனாம் கண்ணனைக் கணவனாக அடையவேண்டி,
ஆயர்பாடி வாழ் ஆய்ச்சியர் நோன்பு நோற்றதற்கு ஒப்ப, அருணையம்பதி வாழ்
ஆரணங்குகளும் அரனடியாரைத் தம் ஆருயிர் நாயகராகவே அடைய வேண்டும் என நோன்பு
நோற்றார்கள் என்பது இரு பாவைப் பாடல்களிற் காணும் ஒற்றுமையாகும்.
மேலும் ஆண்டாள், "ஆழி மழைக்கண்ணா!" என்னும் அழகிய பட்டிலே மழைத்தேவனை
மனங் குழைத்து மக்கட்கு மழை பொழிவிக்க விண்ணப்பித்து வேண்டியவாறே,
மணிவாசக அடிகளும், "முன்னைக் கடலைச் சுருக்கி" என்றுவரும் திருவெம்பாவைப்
பாட்டிலே மழைபொழிய வேண்டுகிறார். இவ்விரு பாக்களும் மிக ஒற்றுமை உடையன.
இரு பாவைப் பாட்டுக்களிலும், "ஊழி முதல்வன்" என்று வருஞ் சொல்லுக்கு,
ஆண்டாள், 'திருமால்' என்றும், அடிகள் 'சிவன்' என்றும் உரைக்கின்றார்கள்.
இவ்வாறாகத் திருப்பாவையும் திருவெம்பாவையும் வேறு வேறு தெய்வ நாமங்களை
நவின்றாலும் மெய்ப்பொருளாம் ஒரே உட்பொருளை உணர்த்துவன என்பது உண்மை.
தோற்றமும் கூட.
முன்பு கூறியது போல், மார்கழி நீராடலால், இளமங்கையர் வேட்கை கொண்ட
இங்கிதப் பயன் இருவகையான பொதுவும் சிறப்புமாகும். பொதுவாகவுள்ளது, 'நாடு
செழிக்க நன்மழை பெய்தல்'. இதனைத் திருவெம்பாவைப் பதினாறாம் பாட்டில்
பராசக்தியைப் பாராட்டி மழையை முன்னிலைப் படுத்தி,
"முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்"
என்று அடிகள் கூறியிருத்தலால் அறியலாகும். இதனையே, "சரமழை போல் வாழ
உலகினிற் பெய்திடாய்" என்று ஆண்டாள் அருளிய திருப்பாவை தெரிவிக்கின்றது.
இனிச் சிறப்புப் பயன் என்னவெனின், அது அக்கன்னியர், வாழ்க்கைத்துணை நலம்
வேண்டி தனது சிந்தைக்கொத்த சிறந்த (தம்) காதல் நாயகராம் கணவரைப் பெறுதல்.
இதனை,
"உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார்"
எனவும்,
"எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க"
எனவும் அடிகள் அருளிய வாக்கால் அறியலாம். இந்த அதீதமான காதல் பக்தியின்
கருத்துக் கச்சிதமாகப் பொருந்தும் முறையில்,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கேநாம் ஆட்செய்வோம்"
எனக் கண்ணனாம் கடவுட்குத் தன் எண்ணமாம் இதய தாபம் என்னும் இனிய
விண்ணப்பத்தை வண்ணமாக வழங்குகின்றது, ஆய்ச்சியர் வாயிலாக நாச்சியார்
நவின்றுள நன்மொழிப்பாவை. இவ்வாறாக மக்களின் வாழ்வியல் அற நெறிகளை
வைத்துச் சைவ வைணவ சமய நெறிகள் பலவற்றையும் புலப்படுத்தி அருளிச் செய்யப்
பெற்றதே திருவெம்பாவை, திருப்பாவைகளாகும் என்பது எளிதில்
விளங்குகிறதன்றோ?
எம்பாவை ஏற்றம்
இனித் திருவெம்பாவையைப் பற்றி நுணுக்கமாகப் பார்ப்போமானால், அதன்
உள்ளுறைச் செம்பொருளாக உணர்த்தப் பெற்றது, 'சிவத்தோடு இயைந்த உலகன்னையாம்
உயர்தனிச் சக்தியை உவந்து வியந்தது' என்பது விளங்கும். அம்மையாகவும்
அப்பனாகவும் உள்ள உமையொரு பாகனை ஆன்மாக்கள் அடைவதற்கு உரிய அறநெறிகள்
அனைத்துள்ளும் தலையாயது 'தலையளி' என்னும் அன்பு நெறியே யாகும் என்பது
ஆன்றோர் கண்ட முடிவு. அதுவே பக்தியின் அடிப்படைக்கு ஆதாரம். ஆம், அது
மறுக்கவியலா உறுதியான உண்மையும் ஆகும்.
கருணைக் கடலாம் கடவுளைத் தலைவனாகவும், அன்பின் முதிர்ச்சி அடைந்த
ஆருயிரைத் தலைவியாகவும், பாவித்து உலகியலில் உலவும் உயர்தனிக் காதல்
ஒழுக்கத் துறைகளின் வாயிலாகக் கடவுள் தத்துவத்தின் உண்மை நெறிமுறைகளை,
நமது சமயக் குரவர், ஆழ்வாராதியர் ஆகியோர் பாடியருளிய பக்திப் பாடல்களின்
மூலம் பரக்கக் காணலாம். அதே பாங்கின் அடியொற்றி நம் மணிவாசக அடிகளும்
தம்மை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் கொண்டு, "திருவாசகத்துக்கும்
உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்றபடி அன்பின் கனிவு அப்படி
அப்படியே மின்னிடும் முறையில் இணையில்லாது இறைவனோடு ஈடுபட்டு இரண்டறக்
கலந்த நிலையில் 'சொற்சித்திரங்கள்' என்னும் அற்புதமான பல
திருப்பாட்டுக்களைத் திருவெம்பாவை முதற்கொண்டு திருப்பள்ளியெழுச்சி ஈறாக
எழில் ததும்ப இசைத்து அருளியுள்ளார்கள்.
சக்தியை வியத்தல்
பாருக்கு அருள் சுரந்து பாலிக்குந் தேவியாம் பராசக்தியாகிய அம்மையின்
செம்மையை - ஆம், அவள் தாய்மையின் தகைமையை, கருணையின் உருவினை இத்
திருவெம்பாவையுள்,
"எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைத்த
பொங்கு மடு"
என்றும்,
"பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி"
என்றும்,
"முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழிவாய்"
என்றும், வந்துள்ள அடிகளில் ஆழமாகவும், விரிவாகவும், ஏனைய பகுதிகளில்
குறிப்பாகவும் போற்றப் பெற்றிருத்தலை நன்கு காணலாம். இதன்மூலம்
திருவெம்பாவையின் உள்ளுறைச் செம்பொருளாக உணர்த்தப் பெற்ற 'சத்தியை
வியந்தது' என்பதற்குச் சான்று பெறுகின்றோம்.
இதுவரை 'எம்பாவை எழிலை'ப் பொதுவாக இரு பாவைப் பாட்டுக்கள் சிலவற்றால்
ஓரளவு கண்டோ ம். இனி 'எம்பாவை எழிலை'த் திருவெம்பாவை முழுதும் முறையாகக்
காண்போம்.
1.தோற்றுவாய்
இயற்கை அழகும் இனிய வளமும் இலங்கும் ஒரு தலம் - திருவண்ணாமலை. அதில்
அழகான பல வரிசைகளில் அமைந்த வீடுகள். அவ்வீடுகளில் உள்ள குடும்பங்கள்
தங்கள் குதூகல வாழ்வைக் குறைவின்றி நடத்திவந்தன. அக்குடும்பங்களில்
கலைமகளோ அன்றி மலைமகளோ என்னும் படியான அத்தனை அறிவும் அழகும் ஒருங்கே
அமைந்த மங்கையர் பலரும் உள்ளனர். அவர்களது நட்பு அத்துணை பெட்பு
வாய்ந்தது. எப்பொழுதும் ஒருவரோடு ஒருவர் அளவளாவி எல்லாச் செயல்களையும்
ஆராய்வதிலேயே பெரும்பொழுதைப் போக்கிப் பேரானந்தம் கொள்ளுவார்கள்.
சிறப்பாக இறைவன் புகழ் பேசுதலையே அடிக்கடி எடுத்துக் கொள்ளுவார்கள்.
அவர்களிடையே குறும்பின் கூத்துக்குக் குறைவில்லை. வாத விவாதங்கள் மிகச்
சுவையாக நடைபெறும். அவற்றில் நவரசங்களும் நடை போட்டுவரும். அவைகளை
ஒவ்வொருவரும் இரசித்து இன்புறுவர். இந்தச் சூழ்நிலையில் உள்ள இளம்
உள்ளங்களின் வளமான போக்கு எவ்வளவு இனிமை உடையவைகளாகச் செல்லும் என்பதைச்
சொல்லவா வேண்டும்? அவர்கள் நிலை நின்று எண்ணிப் பார்த்தால் எளிது
விளங்கும்.
மார்கழி நோன்புக்கு மங்கையர் திட்டம்
மார்கழி நோன்பு வந்தது. திருவாதிரைக்குப் பத்து நாட்களுக்கு முன்பு
ஒருநாள், மேற்கண்ட இளம் கன்னியரின் கூட்டம் அந்திவேளையிலே,
ஆற்றங்கரையிலே, அரசமரத்தின் அடியிலே, ஆனந்த நிலையிலே, அழகாக, அமைதியாக
நடைபெற்றது. அன்று அவர்கள் பேச்சிலே பிரதானமாகப் பேசப்பட்ட பொருள்
மங்கையரின் மாண்புமிக்க இங்கித விரதம் என்னும் மார்கழி நோன்பு பற்றியது.
முந்திய ஆண்டில் அவரவர்களின் தாய்மார்கள் தங்கள் தங்கள் அனுபவ வாயிலாக
உணர்த்திய அந்நோன்பு நோற்கும் முறையையும், பயனையும் அறிந்திருந்த
அம்மங்கை நல்லாரிடையே அது பற்றிய அபிப்பிராய பேதம் ஒன்றும் இல்லை.
அவர்கள் முன்னைய ஆண்டில் நோற்றவாறே, மார்கழி மாதத்தின் ஆதிரை நாளுக்குப்
(திருவாதிரை நாளுக்கு) பத்துநாள் முன் தொடங்கி ஆதிரை நாளோடு விரதத்தைப்
பூர்த்தி செய்யும் முறையில், அந்த ஒவ்வொரு நாளும் வைகறைப் பொழுதில்
உறக்கம் நீத்தெழுந்து, உடல்தூய்மை செய்துகொண்டு, ஒன்றாகக் கூடி, இறைவன்
புகழிசை பாடி, எழில்மிகு மடுவை நாடி, அதில் இனிது நன்னீராடி, ஈரநுண்
மணலால் இறைவியாம் பராசக்தியைப் பதுமைசெய்து பரவி, நாட்டுக்குத் தேவையான
நன்மழை பெய்விக்கவும், தேட்டம் செறிந்த தேவர்க்கு ஒப்பான தெய்வீகக் காதல்
நாயகரைத் தெள்ளிய கணவராகப் பெறவும் வேண்டும் என்னும் இதய விண்ணப்பத்தைக்
காணிக்கையாக்கி இனிது நோன்பு நோற்கத் திட்டமிட்டார்கள். அதில்,
'எல்லோரும் தாம் தாமாகவே வைகறையில் எழுந்து வந்து ஒன்று கூடுவதா? அன்றி
ஒருவரை ஒருவர் எழுப்பி வந்து ஒன்று கூடுவதா?' என்ற பிரச்சனை வாதத்திற்கு
இடமாகியது. இறுதியில் ஒருவரை ஒருவர் எழுப்பி வந்து ஒன்று சேர்ந்து
நீராடச் செல்வது என்று முடிவு செய்தார்கள். மேலும், உன்னை 'நான் வந்து
முதலில் எழுப்புவேன்' என்று ஒருத்தியும், 'என்னை நீ வந்து எழுப்புமுன்
உன்னை நானே வந்து எழுப்பிவிடுகிறேன் பார்' என்று இன்னொருத்தியும்,
இதுபோன்று வேறு பலரும் 'சவால்' விடும் முறையில் இயம்பி இறுதியாகத் தத்தம்
இல்லம் ஏகினார்கள்.
எழுந்த பாவையர் எழாத பாவையை எழுப்பல்
மார்கழி நோன்பு நோற்க விரும்பிய மங்கையர்கள் தம்முள் முதல் நாள் பேசி
முடிவு செய்தபடி, மறுநாள் வைகறையில் முன்னமே துயிலுணர்ந்து எழுந்து
மார்கழி நீராடச் செல்லுங்கால், ஏற்கனவே இயம்பியவாறு, உரிய காலத்தில்
துயில் எழாது தூங்கும் தூவிழை ஒருத்தியை துயில் உணர்த்தி எழுப்பியதாகப்
பாடப்பெற்றதே திருவெம்பாவையின் முதற்பாட்டு.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ, நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே!
ஈதேஎம் தோழி பரிசேல்ஓர் எம்பாவாய்!
[ஆதி - முதல், அந்தம் - முடிவு, வாள் - ஒளி, தடங்கண் - அகன்ற கண்,
வளருதல் - துயிலுதல், வார் - நீண்ட, கழல் - வீரக் கழல் என்னும் காலணி,
அமளி - படுக்கை, பரிசு - தன்மை]
முன்னம் துயில் எழுந்த கன்னியர்கள் இன்னும் துயில் எழாக் கன்னி
ஒருத்தியைத் துயில் நீத்து எழுப்ப வருகின்றார்கள். இறைவன் புகழிசைத்தவாறே
அவர்கள் வந்து அவள் தம் படுக்கைக்கு பக்கலிலே நின்று மிடுக்காகவே பேசி
மின்னனையாளைத் துயில் உணர்த்துகின்றார்கள்.
கன்னியர் குழுவில் உள்ள காரிகை ஒருத்தி கருத்து நிறைந்து சொன்னயம்
சொட்டச் சொல்லுகின்றாள்:-
"ஒளி மிகுந்த அகன்ற கண்களை உடையவளே! முதலும் முடிவும் இல்லா அரிய பெரிய
சோதியாய் உள்ள முதல்வனை, நாங்கள் பாடக் கேட்டும் இன்னும் தூங்குகின்றாயே!
உன் காது என்ன செவிடா? மகாதேவனுடைய நீண்ட வீரக் கழல்கள் அணிந்துள்ள
திருவடிகளை நாம் வாழ்த்தும் பண்ணொலி வீதியில் கேட்டவுடனேயே,
பெண்ணொருத்தி, தன் சிவபக்தி மிகையால் (பக்திக்காதல் தன் சக்தியை மீறிய
வாறு) பொருமிப் பொருமி அழுதழுது தன்னை மறந்த நிலையில், மலர்கள் நிறைந்த
மஞ்சத்தினின்றும் புரண்டு வீழ்ந்து ஒன்றுக்கும் பயன்படாதவாறு மயங்கிக்
கிடந்தாள். அவ்வாயிழை அவ்வாறிருக்க, எங்கள் அன்புத் தோழியாகிய நீயோ
இப்படித் தூங்குவது? உன் தன்மைதான் என்னே? என்னே? எமது பதுமை போன்ற இளம்
பருவப் பெண்ணே! நாங்கள் இயம்புவதை ஏற்று ஆராய்வாயாக!" என்றாள்.
"நாங்கள் எல்லோரும் இறைவன் ஏற்றம் இசைப்பதை நிறைய நீ கேட்டும்,
மெய்மறந்தவள் போல் பொய்யுறக்கம் பூண்டு உறைகின்றனையோ" என்று துஞ்சும்
(தூங்கும்) தூவிழையைப் பரிகசிக்கும் முறையில் "கேட்டேயும் வளருதியோ"
என்றாள்.
"ஒலியை ஏற்றுக் கொள்ளாத அவ்வளவு வலிமை மிகுந்த காதோ? (அது செவிடோ ?)"
என்ற ஐயப் பொருளில் அடிகள், "வன்செவியோ?" என்றார். "செவிடோ ?" என்றோ
நேர்படச் செப்ப வேண்டியதை, "வன்செவியோ?" என்று வாகாகச் சொல்லுகின்றார்.
உண்மையில் அது வன்செவி அன்று; நன்செவியே தான். ஆயினும் அவளது நடிப்புத்
தூக்கத்தால் அந் நன்செவியும் வன் செவியாகவே விளங்குகின்றது என்பதை
"வன்செவியோ?" என்ற சொல் முடிவில் அமைந்த ஓகார ஒலி நன்கு உணர்த்துகின்றது.
"ஒருத்தி பக்தி வலையிற் படுவோனின் உணர்ச்சி வலையின் வயப்பட்டாள்" என்று
கூறவந்த உதாரணச் செய்தியை,
"மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்"
என்ற அடிகளில் நமது அடிகள் மிக அழகான, ஆழமான அதீத பக்தி உணர்ச்சியின்
பான்மையை நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றார். இதே
படப்பிடிப்பை,
முன்னம் அவளுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் னாமாங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கைத லைவன் தாளே
என்று அப்பர் சுவாமிகள் அருளிய தேவாரத் திருப்பாடலின் படப்பிடிப்போடு
ஒப்பு நோக்கி உவகை கொள்ளத் தக்கது.
பெம்மான் பால் பேரன்பு பூண்ட பெண்ணொருத்தியின் பெருஞ் சீரான செயலைத்
துயில் நீக்காத் தூவிழை பால் எடுத்துக் காட்டி இடித்துரைத்து அவளை
எழுப்பும் வாயிலாக ,"எம்பாவை எழில்" எப்படி உருவெடுத்து வந்து
இலங்குகின்றது என்பதைச் சற்று எண்ணுங்கால் இதயம் மகிழ்கின்றதல்லவா?
இனி, இப்பாடல் முதலடியில் தொக்கி நிற்கும் உள்ளுறைப் பொருளின் ஒரு பெரும்
எழிலை ஒருவாறு உள்நோக்கி உணருவோமானால், "உலக உயிர்கள் உற்பத்தியாகியும்,
ஒடுங்குதற்கும் ஒரு பெரும் நிலைக்களனாகத் தான் இலங்குகின்ற நிலையில்,
தனக்கு ஓர் உற்பத்தியும் ஒடுக்கமும் அற்று, உலகெலாம் நீக்கமற
நிறைந்திருக்கும் உயர்பெரும் ஒளிப்பிழம்பு உருவினனாம் இறைவன்" என்பதைக்
குறிக்க, "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி" என்றார் அருட்டிரு
மணிவாசக அடிகள்.
திருமாலும் பிரமனும் அடியும் முடியும் தேடி அறிய இயலாவாறு இறைவன்
பேரொளிப் பிழம்பாகத் திருவண்ணாமலைத் தலத்தில் இனிதே இலங்குகின்றான்
என்னும் புராண உண்மையை "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி" என்ற
சொற்றொடர் குறிப்பாகக் கூறுகின்றது. "ஆதியும் அந்தமும் இல்லா" அப்பரம்
பொருளை அருள்மெய் ஞானியர் அகண்டகாரப் பிழம்பாய் அஞ்சலிப்பர் என்பதும்,
அத்தொடர் காட்டும் அகப்பொருளாகும். இங்ஙனம் பேரொளிப் பிழம்பினன் ஆயினும்
ஆசா பாசத்தால் பிணிப்புண்ட ஆன்மாக்களால் உணர்தற்கு அரியவன் என்பதை
"அரும்பெரும் சோதி" என்ற தொடரில் உள்ள 'அரும்' என்ற அருமைச் சொல்லே
அறுதியிட்டு உரைக்கும். அதன் நயம் ஆழ்ந்து உணர்தற் பாலது. அப்படி
அறிதற்கரிய வாய்ந்தவர் எனில், அவன்பால் அவர்கள் ஆழ்ந்திருக்கும்
பக்தியின் முதிர்வாம் பக்திக் காதலே தக்க காரணம் என்பது ஒக்கும். இதன்
உள்ளுறைப் பொருளை உணர்த்தவே "யாம் பாட" என்றார்கள்.
திருவெம்பாவைப் பாடல்கட்கு மிக அற்புதமான முறையில் வெகு விரிவாகச்
சித்தாந்தக் கருத்துகளும் செம்மைப்பட விளங்குமாறு, "கதிர்மணி விளக்கம்"
என்னும் பேருரை கண்ட பேரறிஞர், மகோ மகோபாத்தியாய, முதுபெரும்புலவர்,
சைவசித்தாந்த வித்தகர், பண்டிதமணி, மு.கதிரேசஞ் செட்டியார் அவர்கள்,
மேற்கண்ட பாடலில் வரும் கன்னியரை முத்திறத்தினராக வகுக்கும் முறை
எத்திறத்தாலும் ஏற்றற்குரியது ஆகும். அது எவ்வாறெனில், இறைவன் வாழ்த்திசை
கேட்ட அளவிலே, தன் இறைபக்தி மிகையால் தன் வயமிழந்தவள் தலையன்பினள்
என்றும், இறைவன் புகழ் இசைத்துத் தனக்கு நிகர் தோழியைத் துயிலுணர்த்தி
எழுப்ப இசைந்தவர் (முற்பட்டவர்) இடையன்பினர் என்றும், துயிலுணர்த்தியும்
படுக்கையினின்று துயில் எழாது கண்மூடிக் கிடப்பவள் கடையன்பினள் என்றும்,
வெகு அழகாகப் பண்டிதமணி அவர்கள் வகுத்துக் கூறும் முத்திறம் பாட்டினுள்
எத்துணைப் பொருத்தமாகப் பயின்று வருகின்றது என்பதை உற்று நோக்குவார்
நன்கு உணர்வார்கள் என்பது உறுதி.
ஈண்டு இறைவன் (சிவபெருமான்) "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி"
என்று போற்றப் பெறுமாப் போல், திருப்பாவையுள் திருமால் முறையே 5, 21 ஆம்
பாசுரங்களில், "ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு" என்றும்,
"தோற்றமாய் நின்ற சுடர்" என்றும் போற்றப் பெறுதல் ஒப்பு நோக்கத் தக்கது.
இன்னும், மேல்வந்த "வன்செவியோ நின்செவிதான்?" என்ற சொற்றொடர் "உன்மகள்
தான் ஊமையோ? அன்றிச் செவிடோ ?" என்றுரைக்கும் திருப்பாவையின் ஒன்பதாம்
பாசுரச் சொற்றொடரோடு பொருந்துவதுங் காண்க.
இப்படியாக, முதலில் எழுந்து வந்த மங்கை நல்லார், வன்செவி படைத்த வாலைக்
குமரியை, வேறொரு இளம் வனிதையின் ஏற்றமான இறைபக்தியை எடுத்தியம்பி
இடித்துரைத்து எழுப்பிக் கொண்டு, அடுத்துள்ள அணியிழை ஒருத்தியை (எழுப்பி)
அழைக்க ஏகுகின்றார்கள்.
2. திருவடி அருமையைச் சிறுமியர் செப்புதல்
உறக்கம் உணர்த்த வந்தவர்களும் முன் எழுப்பப் பட்டு எழுந்தவளும் ஆகிய
ஏந்திழையார் எல்லோரும் ஒருங்கு கூடி மருங்கேயுள்ள மற்றொரு கன்னியின்
இருக்கை (வீடு) எய்தி அவளது ஆழ்ந்த துயில் நிலையை அம்பலப்படுத்தி
அவளையும் எழுப்பினதாக அழகாக இயம்புகின்றது திருவெம்பாவையின் இவ்விரண்டாம்
பாட்டு. இப்பாட்டின் பொருளை நன்கு விரித்து நோக்குங்கால் நகைச்சுவையும்
பரிகாசமும் நடைபோட்டு வந்து நமக்கு நகையூட்டுவதை நன்கு காணலாம்.
பாசம் பரஞ்சோதிக்(கு) என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ(து) எப்போ(து)இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!
சீசீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்(கு) அன்பர்யாம் ஆலேரோர் எம்பாவாய்
[போது - மலர், ஏத்துதல் - புகழ்ந்து பாராட்டுதல், கூசும் - நாணும், தேசன்
- ஒளிமயமானவன்]
"அமைப்பான ஆபரணங்கள் அணிந்த அழகிய அணங்கே! அல்லும் பகலும் நாம் அளவளாவிக்
கொண்டிருக்கும் அமயமெல்லாம் நீ உன்னுடைய அன்பு - (பக்தி) அத்தனையும்
அருட் பேரொளிப் பிழம்பாயுள்ள அரனுக்கே (சிவனுக்கே) உரியது என்று
உரைப்பாயே1 (அதுவோ இந்நிலை? அவ்வாறு கூறும் நீ) இம்மலர்கள் மலிந்த
மஞ்சத்தின் மீது எப்போது மனங் கொண்டாய்? ஏன்? மஞ்சத்தையே காதலித்து
விட்டாயோ? ["சொல்" எனத் தோழியர் எள்ளி நகையாடி நவின்றதைக் கேட்ட நங்கை,
இல்லினுள் (வீட்டினுள்) இருந்தவாறே சிறிது சினந்து ஏசிப் பேசுகிறாள்]".
"தக்க நகைகளை ஒக்க அணிந்த நங்கையீர்! சீச்சீ! இப்படி எள்ளி நகையாடி
இழித்துரைக்கும் இழி சொற்கள் உங்கள் பால் சிலவும் உளதோ? வேடிக்கையாக
விளையாடி வைவதற்கு நாடிவந்த நேரம், நான் நன்கு தூங்குகின்ற இந்த அருமையான
நேரம் தானோ?" (என்று அவள் சொல்லியதைக் கேட்ட மெல்லியலார் மேலும்
சொல்லுகின்றார்கள்.)
"பெண்னே! வானோரும் வழிபடுதற் பொருட்டு வழங்க நாணும் இறைவனது வார்கழலாம்
திருவடிகளை, ஏதோ எளியோமாகிய நமக்கு இலகுவில் தந்தருளி வந்தருள் செய்யும்
ஒளிமயமான சிவலோக நாதனாம், தில்லையம்பதியின் சிற்றம்பலத்திலே எல்லையில்லா
நடனமாடும் ஈசனார்க்கு நமது அன்பு எத்தன்மையுடையது? நாம் எத்தகையோம்?
நாங்கள் நவில்வதை (சொல்வதை) நன்கு ஆராய்ந்து பார்" என்றார்கள்.
"நான் அருள் ஒளிப் பிழம்பினனான இறைவனையே காதலிக்கின்றேன். அவ்வரனை அன்றி
எவ்வொருவனையும் என் அகத்து இருத்தியது இல்லை" என்று இரவு பகலாக
எந்நேரமும் எங்களிடம் வீறாப்பாக விளம்புவாயே! அவ்வாறானவளா அந்த இறைவன்
புகழ் இசைத்து அரும்புனல் ஆடிப்பரவ எழவேண்டிய அதிகாலையில் எழாது,
அதற்குப் பதிலாகக் கேவலம் இம்மஞ்சத்தைக் காதலித்து மகிழ்ந்து மயங்கிக்
கிடக்கின்றாய்? இதுதானோ அந்த வீறாப்பு விளம்பலின் வெகு அழகு?" என்று
ஏந்திழையார் இடித்துரைத்து நகையாடி ஏசும் திறம்,
"பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ?"
என்ற அடிகளில் நன்கு வெளிப்பட்டு 'எம்பாவை எழி'லாக இலங்குகின்றதல்லவா?
"இப்போதார் அமளி" என்ற சொல் 'இந்த மலர்ப் படுக்கை' என்று சுட்டிக் காட்டி
வருவதால் எழுப்ப வந்த ஏந்திழையார் எழுப்பப் பட்டவளின் அமளிக்கு அருகில்
நின்று அளவளாவினர்" என்பது அறியக் கிடக்கிறது.
"அடிக்கடி இறைவன் புகழ் இசைக்கும் உங்கள் தூய்மையான நாவினின்றும்
இவ்வாறான இழி சொற்கள் வெளிவருதல் நியாயமோ?" என்று தன்னிகர் தோழிகட்கு
(நட்பின் இலக்கணத்திற்கு ஏற்ப) அச்சுறுத்தும் முறையில், பச்சையாய்ப்
பகராது, "சீச்சீ! இவையும் சிலவோ" என்று மிக எழிலாக இலைமறை காய் போல
இகழ்ச்சி தோன்ற இயம்புகின்றாள், மாணிக்க வாசகரின் மானசீக உருவில் அமைந்த
மங்கை நல்லாள். இவ்வாறாக, 'எம்பாவை எழில்' ஏச்சிலும் கூடக் கொஞ்சு
தமிழில் எப்படி எல்லாம் சஞ்சரித்து வந்து நம் நெஞ்சை மகிழ்விக்கின்றது
பாருங்கள்?
"பழகப் பழகப் பாலும் புளிக்கும்" என்றாற்போல் சதா பக்கத்தில் உள்ள
தேவர்களுக்கு, வேண்டிய அருளை மூண்டு படைக்கத் திருவுள்ளம் கொள நாணும்
இறைவன், சக்தி மிறிய காதல் பாங்குடன் அமைந்த பாவைச் சிறுமியராகிய நமக்கு
அக்காதல் வயப்பட்ட காரணத்தால் எளிதாகத் திருவடிக் காட்சி தந்து அருள்
பாலிக்கும் ஒளிப் பிழம்பினன்" என்பதை, "விண்ணோர்கள் ஏத்துதற்கும் கூசும்
மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன்" என்று சீராகச் செப்பிய சிறுமியர்
கூற்று ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. விண்ணுலகத் தேவரால் நண்ண முடியா
இறைவன் பாதம், மார்கழி நோன்பு நோற்கும் மண்ணுலக மங்கையர்க்கு இங்கிதமாய்
வந்தருளுமானால் அதன் அருள் அழகு கூறும் 'எம்பாவை எழில்' என்றென்றும்
போற்றுதற்கு உரியதன்றோ?
சிறு சீற்றங் கொண்டு மாற்றம் (பதில்) உரைத்த சேயிழையை இவ்வாறாக எழுப்பிக்
கொண்டு, இனி, மற்றொரு மங்கையின் மனைக்குப் போகின்றார்கள் மங்கையர்
அனைவரும் செங்கை கொட்டிச் சிவன் சீர் பாடியவாறே.
வைகறைப் பொழுதில் எழுந்த, மங்கைப் பருவம் எய்திய, கன்னி ஒருத்தி, தன்னோடு
ஒத்த தோழிகளை உடனழைத்துக் கொண்டு, தன்னை முதன்முதலாக எழுப்ப வருவேன்
என்று முதல்நாள் உறுதி கூறிய ஒருத்தி, அவ்வாறு தன்னை வந்து எழுப்பா
நிலையில், தானே எழுந்து வந்து, உறுதியைக் காற்றில் பறக்க விட்ட
அக்கன்னியின் வீடு அடைந்து அவளை எழுப்பு முகத்தான் ஏசலாக இயம்புகிறாள்:-
"முத்துப் போன்ற வெண்மையான பல் வரிசையுடையவளே! முன்பெல்லாம் எங்கட்கு
முன்னே எழுந்து வந்து (எங்களை எழுப்பு முகத்தான்) எங்கள் முன்னிலையில்,
'இறைவன் எந்தை' என்றும் 'இன்பமே வடிவானவன்' என்றும் , 'அழிவற்றவன்'
என்றும் வாயினிக்க வாழ்த்திப் பேசுவாயே! (அவை யாவும் அர்த்தமற்ற முறையில்
இன்று இறைவனது இசை கேட்டும், பசை அற்றவள் போல் படுத்து, நசையுற்று,
அசைவற்றுப் படுத்துக் கொண்டிருக்கின்றாயே! இதுதான் உன் பேச்சின்
உறுதியோ?) இன்னும் எழுந்து வந்து உன் வாயிற் கதவைத் திறக்கின்றாய் இல்லை.
என்னே உன் தன்மை?" என்று எழுப்ப வந்த ஏந்திழையார் ஏளனம் செய்துரைத்ததைக்
கேட்ட அந்நங்கை எழுந்து வந்து குறிப்பாக நட்பின் பாங்கை நன்குணர்த்திக்
கூறுகின்றாள்:-
"தேசனாம் (ஒளிமயமான) ஈசனிடத்துப் பாசமுடையவர்களே! நீங்களோ அவ்வீசனுக்குப்
பழைய அடியார்கள் (முன்னைய ஆண்டுகளில் நோன்பு நோற்ற அனுபவ வாதிகள்)
எனக்கும் தோழமையுடையீர்; (அத்தகைய நீங்களோ) புதிய அடியார்களாகிய
எம்போன்றார் குற்றங்களை நீக்கி எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொண்டால்
அதில் உண்டாம் கேடென்னே?" ("அதை விடுத்து இவ்வாறு ஏசுவதேன்?") என்று
இடித்து விடை கூறியதைக் கேட்டு, எழுப்பவந்த இன்னிசை மின்னிடையாள் மேலும்
ஏசிப் பேசுகின்றாள்:-
"எங்கையாம் நங்காய்! உன் அன்பெல்லாம் வெறும் ஏமாற்றம் தானோ? அவையெல்லாம்
(வீண்பசப்பு என்று) எங்கட்குத் தெரியாதோ? தூய மனமுடையார் நம் சிவபிரானைத்
துதி செய்யாது (உன்னைப் போல் வீணே உறங்கி) இருப்பரோ? (அது ஒரு
புறமிருக்க) உன்னை அழைக்கவந்த எங்கட்கு இத்தனை ஏச்சும் பேச்சும்
வேண்டியதே!" என்று சிந்தை நொந்து செப்பினாள்.
இக்கருத்தமைந்த மணிவாசகரின் அணிவாசகமாந் திருவெம்பாவையின் மூன்றாந்
திருப்பாட்டு முழுவதையும் பார்ப்போம்.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்(து) எதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்(று) அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடியீர்
புத்தடியோம் புன்மைதீர்த்(து) ஆட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியாமோ?
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
[நகை - பல், அள்ளூறி - வாயூறி, பத்து - பக்தி, பாங்கு - தோழமை]
பாட்டில் பாவையர் வாயிலாக ஏளனமும் குறும்பும் எள்ளி நகையாடுகிறதல்லவா?
இதைக் கேட்கவும் நமக்கு ஒருவகை இன்பமாகத்தான் இருக்கிறது. இதை ஒருவகையில்
'எம்பாவை எழில்' காட்டும் 'ஏச்சின்பம்' என்றாலும் ஒக்கும். பாட்டில்
நகைச்சுவை மட்டுமன்று; பக்திச்சுவையும் கவிச்சுவையும் பரந்து விளங்கப்
பார்க்கின்றோம். இன்னும் எழுப்ப வந்த ஆயிழையார் தம் அன்பு வில்லால்
எய்திய சொல்லம்புகள் எழவிருக்கும் ஏந்திழையின் இதயத்தைப் புண்படுத்தாவாறு
இதமாக இயல்பு உணர்த்தி அவளை எழச் செய்யும் ஏற்றம், 'எம்பாவை எழில்'
கூட்டும் ஒரு சொற்சித்திரமாகவே, ஆணித்தரமாக அமைத்து விளங்குகிறது மாணிக்க
(வாசகர்) வாக்கிலே. ஆம், அத்தோடு அவ்வாயிழையார் நம் முன்பு அளவளாவுவது
போலவே அத்துணை நாடகப் பண்பும் அமைந்து விளங்குகிறது.
பாவைப் பெண்கள், பார்ப்பதற்கு மட்டுமா உருவின் திருவுடைய அழகியார்?
அன்று; 'உள்ளத்திலும் திருவுடையார்' என்றார். சித்தம் எவ்வாறு அழகு பெற
இயலும்? அது எவ்வாறெனில், அப்பாவையர் பரமனையே பலகாலும் பாடிப்பாடிப்
பக்திசெய்து வந்த பான்மையின் பயனாய் மன மாசுகளை நீக்கி, மாண்பான தூய்மையை
மனத்தகத்தே அமைத்துக் கொண்டார்கள். எனவே தான் 'சித்தம் அழகியார்' என
அத்தனை அழகாகச் செப்பினார்.
"பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்(து) ஆட்கொண்டாற் பொல்லாதோ?"
என்ற அடிகளில் இருந்து எழுப்பியவள் வயதில் மூத்தாள் என்பதும், எழுப்பப்
பட்டவள் வயதில் இளையாள் என்பதும் எளிதில் அறியக் கிடக்கின்றது.
மக்களுக்குப் பொதுவாய் உள்ள இறையாம் சிவனை மார்கழி நீராடும் மங்கையர்
தமது மட்டிலாப் பக்திக் காதலால் மனத்தகத்துச் சேர்ந்த (ஆத்ம) நாயகனாகக்
கொண்ட உரிமை உணர்வின் உயர்வு, "நம் சிவன்" என்ற சொல்லில் நன்கு உணர்த்தப்
படுகிறது. ஆம், மனதார எண்ணி எண்ணி மகிழத்தக்கது. எம்பாவை காட்டும் எழில்
அல்லவா அது?
இத்தனை பாவையரும் சேர்ந்து தித்திக்கப் பேசும் முத்தன்ன வெண்ணகையாளின்
சித்தம் தெளிவித்து, அத்தனைப் பாடி அரும்புனல் ஆட அவளை அழைத்துக் கொண்டு
அணித்தேயுள்ள மணிமொழியாள் ஒருத்தியின் அணிமனை அடைந்து அவளையும்
துயிலகற்றி எழுப்புகின்றார்கள்.
4. துயிலின்பந் துய்க்கும் தூவிழை
"பளபளப்பான ஒளி மிகுந்த முத்துப் போன்ற பற்களை உடையவளே! உனக்கு என்ன,
இன்னும் பொழுது விடியவில்லையா? (என்று பாவையருள் ஒருத்தி பகர)
"எழில்"மிக்க கிளிபோல இனிய மொழி பேசும் அணங்கார் அனைவரும்
வந்துவிட்டார்களா?" (என்று நித்திரை நீத்து நிமிர்ந்தெழ வேண்டியவள் அது
நீங்கா நிலையில் வினவ) அயல்நின்ற தோழி ஒருத்தி உத்தரமாக
உரைக்கின்றாள்:-
"உடன் வந்தவர்களை உள்ளபடி கணக்கிட்டு உரைக்கின்றோம். ஆனால், அதுவரையில்
நீயோ அயர்ந்த துயிலில் அவப்பொழுது போக்காது இருக்கவேண்டுமே! (மேலும்)
நாங்கள் விண்ணுலகுக்கு ஒப்பற்ற தண்ணமுதாம் ஈசனை, வேதங்கள் ஓதும் சிறப்பான
செம்பொருளாம் இறைவனை, காண்பார் கண்ணுக்கு இனிமையாகக் காட்சி தரும்
கடவுளைப் புகழ்ந்து பாடி, மனம் ஒருப்பட்ட நிலையில் எங்கள் உள்ளம்
நெகிழ்ந்து கசிந்து உருக வேண்டும்; (நீயோ அந்நிலையில் இல்லை.) எனவே, இவண்
வந்தாரைக் கணக்கிட்டு வழுத்த நாங்கள் இசைய மாட்டோ ம், ஆகையினால், நீயே
நீண்ட நித்திரை நீத்து வந்து, நின் தோழியராம் எங்களை எண்ணிப் பார்த்து
(இன்னும் யாரேனும் வாராதிருந்து) எண்ணிக்கை குறைந்தால் (அவர்களும் வரும்
வரை) நீ திரும்பிப் போய் விரும்பியவாறு உறங்குவாயாக" என்றார்கள்.
இவ்வினிய பொருளமைந்த மூலம், கவிதை வடிவிலே வாதவூரடிகளின் வளம் சான்ற
வாக்காக - திருவெம்பாவையின் நான்காம் பாட்டாகத் திகழ்ந்து வருகின்றதைப்
பாருங்கள்!
ஒள்நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொண் டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்(கு) ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்(கு) இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்
[நித்திலம் - முத்து, புலர்தல் - விடிதல், அவம் - வீண், மருந்து -
அமுதம், விழுப்பம் - சிறப்பு, நெக்கு - நெகிழ்ச்சி]
ஆழ்ந்த தூக்கத்தில் உடல் அங்கங்கள் உணர்வற்றுத் தன் நிலையில் நின்று
மாறியிருத்தல் இயல்பு. அம்முறையில் தூங்கிய நங்கையின் துவர் (சிவந்த)
வாய் சற்றுத் திறந்திருந்த நிலையில் வெளிப்பட்ட முத்துப் போன்ற வெண்ணிறப்
பற்களைக் கண்ட தோழியர் அவளை "ஒள்நித்தில நகையாய்" என்று அழகாக அழைத்தனர்
போலும். "இன்னம் புலர்ந்தின்றோ?" என்னும் சொல்லில் நன்கு மின்னுகின்ற
இன்னிசையாரின் குறும்பு, அரும்பு மலர்வது போல அழகாக வெளிப்படுகின்றது
அன்றோ?
ஒரு சிலர் துயில் நீக்குங்கால் துயில் அசதியில் தோன்றும் சோம்பலை நீக்க
உடம்பை முறுக்கி ஒருவித இன்பச் சாயல் படிந்த உணர்ச்சியை எய்துவார்கள்.
அதுவே ஒருவகைத் "துயிலின்பம்" என்றும் சொல்லலாம். அவ்வாறு, சிலர் துயில்
நீங்கியும் எழாது துயிலின்பம் துய்க்கும் நிலையில் தூங்காமல் தூங்குவர்.
அந்நிலையை, மணிவாசக அடிகள் மாண்புமிக்க பாட்டால் நன்கு படம்பிடித்துக்
காட்டுகின்றார்கள். எப்படியெனில்? அத்துயிலின்பத்தை அறவே துறக்க
மனமில்லாது தூங்கும் ஆயிழை, எழுப்ப வந்த ஏந்திழையார் முன் ஒரு கேள்வியை
எழுப்பி, அதற்குப் பதில் வரும் வரையுள்ள அற்ப நேரமாவது ஆசை தீர இன்னும்
சற்றுத் தூங்கலாமே என்று பற்றுக் கொண்டவளாய், அந்த ஆசை வெளிப்பட
"முதல்நாள் பேசிய திட்டப்படி இத்தனைபேர் வந்து என்னை எழுப்புவதாக
இயம்பினீர்களே, அத்தனை பேரும் இவண் வந்து விட்டீர்களா?" என்று கேட்கும்
முகத்தான், "வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?" என்று வினயமாக
வினவினாள். தூங்கிய தூவிழை, துயிலின்பம் துய்க்க விரும்பிய நங்கையாதலால்,
அதனைக் குறிப்பால் உணர்த்தும் முறையில், "எண்ணிக் குறையும் துயில்" என்று
குறிப்பாகவும், அதனையே "இறைவனைப் பாடி அவன்பால் (பக்தி) காதல்
வயப்பட்டுக் கசிந்து கண்ணீர் பெருகி உருகி நிற்கவேண்டிய நிலையில்,
நாங்கள் நீ கேட்கிற எண்ணிக்கைக் கணக்கைத் திண்ணமாகச் சரிபார்த்துச் செப்ப
முடியாதே! நீயே எழுந்து வந்து எண்ணிச் சரிபார்த்துப் போய் இன்னும் நன்கு
தூங்கம்மா!" என்னும் முறையில் சிறப்பாகவும் ஏசுகின்றாற் போல் நகைச்சுவை
ததும்ப எழிலாக இயம்பினர் இளங் கன்னியர். இவ்வாறான "எம்பாவை எழில்"
காட்டும் இன்கவிச் சித்திரங்களை அகக் கண்கொண்டு நோக்கி அருமையாக
அனுபவிக்க வேண்டும். ஆனந்தமாக அமலனைப் பாடிப் பாடி அகமகிழ்ந்து உருக
வேண்டும். மக்கள் வீண் காலம் போக்காது நெஞ்சத்தால் நினைந்துருகி நிமலன்
பால் பக்தி செலுத்த வேண்டியதன் அழுத்தம் பாடல்கள் முழுவதும் நிறைந்து
கிடக்கின்றது. அது மட்டுமன்று, பக்திச் சுவையோடு நகைச்சுவையும் பாடலிற்
பங்கு கொண்டுள்ளன.
இப்பாடல் பெரும்பாலும் திருப்பாவையின் 15-ஆம் பாசுரப் பொருள் நடையை
அடியொற்றிப் பொலிவுறும் அற்புதம் காண்மின்! இருபாவைப் பாடலிலும் ஒரு சில
இடங்களில் ஒரே மாதிரியான கருத்துக்கள் ஆளப்பட்டும், வேறுசில இடங்களில்
ஒரே பாணியில் சிறு மாற்றங் கொண்ட கருத்துக்கள் ஆளப்பட்டும், அழகு
செய்யும் திறம் ஆழ்ந்து நோக்கி ஆனந்திக்கத் தக்கது. அதனைக் கீழ்வரும்
திருப்பாவைப் பாசுரத்தால் சிறப்பாக அறியலாம்.
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
[எல்லே - என்னே, போதருதல் - வந்துவிடல், வல்லை - வல்லமையுடையவள், ஒல்லை -
விரைவாக, போந்து - வந்து, வல்லானை - வலிய (குவலயாபீடம் என்னும்) யானை,
மாற்றார் - பகைவர்]
திருவெம்பாவை திருப்பாவை
1. இன்னம் புலர்ந்தின்றோ? 1. இன்னம் உறங்குதியோ?
2. வண்ணக் கிளிமொழியார் 2. இளங்கிளியே
3. எல்லாரும் வந்தாரோ? 3. எல்லோரும் போந்தாரோ?
4. விண்ணுக்கு ஒரு மருந்தை 4. வல்லானை கொன்றானை
வேத விழுப்பொருளைக் மாற்றாரை மாற்றழிக்க
கண்ணுக்கு இனியானைப் பாடி வல்லானை மாயனைப் பாட
5. வந்து எண்ணி 5. போந்து எண்ணிக் கொள்
இறைவனைப் பொறியின் பால் வைத்து, "கண்ணுக்கு இனியான்" என்று அடிகள்
பேசுகின்றதும், அதே பாணியில் அவ்விறைவனை அகக்கரணத்தின் பால் வைத்து
"மனத்துக்கு இனியான்" என ஆண்டாள் பேசுகின்றதும் ஈண்டு நோக்கத் தக்கது.
ஆழ்ந்த நித்திரைக்கு ஆட்பட்ட அணியிழையை அதனை விடுத்து அமலன் பால் பக்தி
செலுத்த வேண்டிய அவசியத்தை அழுத்தமாக அவளகத்தே உணர்வெழச் செய்த நிலையில்,
உடனழைத்துக் கொண்டு, தோழியர் யாவரும் ஒருங்கு சென்று, வேறு ஒருத்தியைத்
துயில் எழுப்பி நீராட வரும்படி அழைக்கின்றார்கள்.
5. கேலியால் கிளர்ந்தெழுந்த நங்கை
"திருமால், பிரமன் ஆகிய இரு பெருந்தேவராலும் முறையே அடியையும்,
முடியையும் காண்பதற்கும் அரியவனான (பேரொளிப் பிழம்பாய் இலங்கும்) மலை
உருவாய் அமைந்த அண்ணாமலை இறைவனை நாம் அறிவோம் என்று (மார்தட்டிப்
பெருமைப்பட) இத்தகைய பொய்களையே (வேடிக்கையாகப்) பேசுகின்ற, பாலும் தேனும்
ஊறி வழியப் பசுமை மொழி பேசும் வஞ்சகீ! நீ கதவைத் திற; இம்மண்ணுலகினரும்,
விண்ணுலகினரும், வேறுலகினரும் அறிதற்கு அரியவன் அவ்விறைவன், அவனது
எல்லையிலா எழிலையும், அவன் நம்மையெல்லாம் ஆட்கொண்டு [மருள்(மயக்கம்)
நீக்கி தெருள்(தெளிவு) ஈந்து] அருள் சுரந்து சீராட்டுகின்ற அரும் பெருங்
கருணையைப் பாடி, "சிவனே சிவனே" என்று நாங்கள் சிந்தையார அபயமிடலைச்
(செவியாரக்) கேட்டுக் கொண்டும், அவ்வபயம் கேளாதவள் போலத் தூங்குகின்றாயே!
உணர்ந்து உறக்கம் நீங்காயா? மயிர்ச் சாந்து பூசிய மணம் நிறைந்த கூந்தலை
உடைய மாதே! இதுவோ உன் தன்மை?" என்று ஏளனமாக இயம்பினார்கள்.
இவ்வாறு பாவையர் பலரும் பாசமுள்ள பாங்கி ஒருத்தியை ஏசிப் பேசுகின்ற அரிய
காட்சி, எழிலார் இன்கவி மலர்களால் ஆக்கம் பெற்ற திருவெம்பாவை மாலையின்
ஐந்தாங் கவி மலரிலே அறியக் கிடக்கின்றது. அவ்வெழிற் கவி மலரை அறிவுக்
கண்கொண்டு பார்த்து அகமகிழ்வோம்.
மால்அறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போல்அறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் "சிவனே சிவனே" என்று
ஓலம்இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலீ! பரிசேலோ ரெம்பாவாய்
[பொக்கம் - பொய், படிறீ - வஞ்சகி, கோலம் - எழில், கோதாட்டும் -
சீராட்டும், ஓலம் - அபயம், ஏலம் - மயிர்ச்சாந்து]
பாட்டின் முதல் மூன்றடிகளில் பாவையரின் கேலியும் ஏச்சும் கெக்கலி
கொட்டுகின்றது. சாதாரணமாக வேடிக்கையாகப் பேசும் பொய்யுரைகளின் சொற்களில்
இனிமையும், அதன் பொருளில் பொய்மையும் பொதிந்திருப்பது கண்கூடு. இதனையே
நன்கு உணர்த்துகிறது மேல் குறிப்பிட்ட முதல் மூன்றடிகளும்,
"நிந்தாஸ்துதி" என்னும் தூற்றிப் போற்றுதலுக்கு ("பழிப்பது போல்
புகழ்தல்") எதிர்மறை போன்று, ஏற்றித் தூற்றும் ("புகழ்வது போல்
பழித்தல்") இயல்பில் அமைந்துள்ளன. "பாலூறு தேன்வாய்ப் படிறீ" என்ற
சொற்றொடர் "படிறீ" என்ற பதத்தில் ஏச்சின் அழுத்தம் உச்சமாக விழுந்துள்ளது
நன்கு உணரத்தக்கது.
"வஞ்சகீ! இறைவனைக் கண்டுவிட்டேன் என்று வாய் இனிக்க இனிக்க வீரம் பேசிய
உன் பொய்யுரைகள் எல்லாம் இப்பொழுது எங்கே காணோம்? ஏன் ஊமைபோல் பேசா
மடந்தையாய் உறங்கிக் கிடக்கின்றாய்! எழுந்து வந்து கதவைத் திற" என்ற ஏளன
ஆணைக் குறிப்பு, "படிறீ கடை திறவாய்" என்ற சொற்றொடருள் பொதிந்து கிடத்தல்
நன்கு புலனாகும். இறைவன் எளிய இளங்கன்னியரை (அவர்களது பக்திப் பெருக்கால்
வலிய வந்து) அடிமைகளாக ஆட்படுத்திக் கொண்டு அன்னார் தம் குற்றங்கள்
அகற்றி அன்பாகச் சீராட்டும் அருட்குணங் கொண்ட நிலையைக் குறிக்க, "நம்மை
ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும் சீலமும்" என்றார் எழிலாக.
இறைவனது திருக்கோலத்தையும் அருட்சீலத்தையும் அகத்துட் கொண்டு அகங்
கனிந்து பாடும் ஆனந்த நிலையில், "எம் பெருமானே எம்மைக் காத்தருள்க!"
என்று அபயம் விழையும் குறிப்பு, "சிவனே சிவனே என்று ஓலமிடினும்" என்ற
வரிகளில் நன்கு இணையக் கிடக்கின்றது. "ஏலக்குழலி பரிசேலோர்" என்ற
வாக்கில் வாலைக் குமரிகளின் கேலி ஒலி எழிலாகக் கேட்கின்றது. ஆம், நாம்
நேர் நின்று பேசும் ஒரு நாடகக் காட்சியாகவே, "எம்பாவை எழில்" காட்டும்
இக்கவிதைச் சித்திரம் இனிது அமைந்துள்ளது அன்றோ?
மணிவாசகர் அணியாக "ஏலக்குழலீ!" என்று அழைத்ததை நாச்சியார் திருப்பாவை 18-
ஆம் பாசுரத்தில் "கந்தம் கமழும் குழலீ!" என்று அந்தமாக (அழகாக)
அழைப்பதும் ஒப்பன.
கேலி உரையால் கிளர்ந்தெழுந்த நங்கையை எழுப்ப வந்த ஏந்திழையார், தம்மோடு
இணைத்துக் கொண்டு ஏகி, அடுத்துள்ள அணியிழை ஒருத்தியை எழுப்புதற்கு
விடுக்கின்றார்கள், அதே கேலிக் கணைகளை.
"மான் போன்ற (விழியும் அழகும் கொண்ட) மாதே! நீ நேற்று, உன்னை நாங்கள்
வந்து எழுப்பு முன்னர் எங்களை நீயே முன்வந்து எழுப்புவதாக இயம்பினாயே!
(அது என்ன ஆச்சு? உனக்கு வெட்கமில்லையா?) அப்படிச் சொல்லி விட்டு
(அப்பாற் போய்விட்டாயே, உன் பேச்சைப் பறக்க விட்டு?) அவ்வாறு
வெட்கமின்றிச் சென்ற திசையையாவது விளம்புவாயாக! உனக்கு என்ன, இன்னும்
பொழுது விடிய வில்லையா? விண்ணுலகோரும், மண்ணுலகோரும், வேறுலகோரும்
அறிதற்கு அரியனாம் அண்ணலன்றோ இறைவன்? அவன் தானாகவே வலிய வந்து எமக்குத்
"தலையளி" என்னும் கருணை பாலித்து ஆளாகக் கொண்டு அருளுதற்கரிய அழகிய நீண்ட
வீரக் கழல் அணிந்த திருவடியைப் பாடிவந்த எங்களை இன்புறுத்தவாவது உன்
திருவாயைத் திறக்க மாட்டாயா? அவனது உலப்பிலாப் புகழ் பாடி உடல் உருக
மாட்டாயா? இக்கேவல நிலை உனக்கே பொருந்தும். (சரி சரி, இனியேனும் எழுந்து
வந்து) எங்கட்கும் ஏனையோருக்கும் இனிய தலைவனாம் இறைவனைப் பாடுவாயாக!"
என்று இயம்பினார்கள்.
இப்பொருள் பொதிந்த பாடல் அருள் தரும் இறையின் தெருள் சேர்க்கும் பக்திப்
பெரு நூலாம் திருவாசகத்துள் திருவெம்பாவையின் ஆறாம் பாடலாக உருப்பெற்று
வருகின்றது உவகையும் அழகும் ஒருங்கே மிளிர.
மானே!நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய்? இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலைஅளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
[நென்னல் - நேற்று, தலையளி - சிறந்த கருணை, வான் -அழகு, வார் - நீட்சி,
கழல் - வீரக்கழல் (ஓர் காலணி), உறும் - பொருந்தும்]
"முன்னை நாள் மொழிந்த வாக்குறுதிப்படி கன்னியரை முன்வந்து கடிதில்
எழுப்பாது இன்னும் நான் தூங்கிக் கொண்டிருக்கின்றேனே" என்று உன்னிய
அளவில் உதித்த நாணத்தால், அஞ்சிய வஞ்சியின் துஞ்சி (தூக்கப்) பார்வை,
மானின் மருட்சிப் பார்வைக்கு ஒப்ப மலர்ந்திருந்ததால், "மானே!" என்று
மகளிர் எல்லோரும் மஞ்சத்து உறைந்த மங்கையை மனங் கனிய அழைத்தனர் போலும்
எனச் சிறப்பாகக் கொள்ளுதல் சிந்தைக்கு விருந்தாகும். பாட்டில் "எம்பாவை
எழில்" எடுத்த எடுப்பிலேயே இப்படியாகக் கவிநயம் கனியக் கதித்து
வருகின்றது. என்னதான் உன்னினாலும், இளங்கொடிக்கு எழுந்திருக்க இதயம்
இசையவில்லை துயிலின்பம் துய்க்கும் காரணமாக! இதனை நன்குணர்ந்தே, "எங்கள்
எல்லோருக்கும் இருள் விடிந்தும் உனக்கு மட்டும் இன்னும் இருள்
விடியவில்லையோ?" என்பதோடு "எங்கள் கூற்றும் வெற்றுரையோ?" என்பதும்
குறிப்பாகத் தோன்ற, "இன்னம் புலர்ந்தின்றோ?" என்று படுத்திருக்கும்
பாவையைப் பார்த்துப் பரிகாசமாக எடுத்துரைத்த இளங்கன்னியர் கூற்று
இன்புறத்தக்க "எம்பாவை எழில்" ஆகும்.
"ஏனம்மா! நீ இறைவன் பால் வைத்த காதல் உண்மையாயின், நீயாகவே முன்பு
எழுந்து வந்திருக்க வேண்டும். அஃதல்லாது, இறைவன் புகழிசையை இவண் வந்துள்ள
எங்கள் பால் கேட்டும், இன்னும் எழுந்து வராது இன்பமாக உறங்கிக்
கொண்டிருப்பதோடு, உன் திருவாயைக் கூடத் திறக்க மாட்டாதிருக்கின்றாயே!"
என்று இளமகளிர் இதமாக இடித்துரைக்கும் பான்மை துடி நடையாக,
"வந்தோர்க்குன் வாய்திறவாய்" என்ற வாக்கில் சுவையோடு பொருந்தி வருதல்
நன்கு உணரக் கூடியது. ஆம், நன்கு அனுபவித்து மகிழக் கூடிய "எம்பாவை
எழில்" காட்டும் இன்பமாகும்.
"நாளைவந்து உங்களை நானே எழுப்புவன்" என்ற வாக்குறுதியை வானில் பறக்கவிட்ட
வகையும், இறைவன் புகழ் இசைந்து வந்துள்ள எம்மை ஏறிட்டுப் பாராது (இன்கனி)
வாய் திறவாதிருக்கும் இயல்பும், உள்ளம் குழைந்து, உடல் உருக உலப்பிலா
ஆனந்தனைப் பாடாதிருக்கும் உன் (மௌன) நிலையும், இறைவன்பால் உண்மை அன்பு -
பக்திக் காதல் - உடையார்க்கன்றி, பொய்யன்பு பூண்ட உனக்கே இத்தன்மை
பொருந்தும்" என்பதை "உனக்கே உறும்" என்ற இரு வார்த்தைகளில் இரத்தினச்
சுருக்கமாக இடித்துரைத்துச் (சுருங்கச்) சொல்லி இனிது விளக்குகின்ற திறம்
பாட்டில் பக்குவமாகப் படிந்து வந்துள்ளது. ஆம், அது "எம்பாவை எழில்"
அல்லவா? இப்பாடலிலும் பாவையர் கேலியும் கிண்டலும் கிளர்ந்து வந்துள்ளதை
நன்கு காணலாம்.
"மானே நீ நென்னலை நாளைவந்(து) உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய்"
என்று இங்கே கூறப் பெறுகின்ற கருத்து, அங்கே திருப்பாவை 14 - ஆம்
பாசுரத்தில்,
"எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாஉடையாய்"
என்ற கருத்தினோடு பொருத்தி நோக்கற்குரியது.
கிண்டலுக்கும் கேலிக்கும் மண்டியிட்ட மானாம் மங்கையை எழுப்பி அழைத்துக்
கொண்டு, மங்கையர் யாவரும் மற்றொரு மங்கையை எழுப்ப மருங்கே சென்றார்கள்.
அவளோ அமலன் மீது அயராப் பக்திக் காதல் அதிகமிருந்தும் ஏதோ அசதியின்
பயனாய் அசையாத் துயிலுக்கு ஆட்பட்டு விட்டாள். அவளை அறிவுறுத்தி
எழுப்பும் முறையை நோக்குமின்!
7. பாவையர் பழிப்பும், பாவையின் விழிப்பும்
"தாயே! உனது திருவிளையாடல்களில் இவைகளும் சிலவா? தேவர்கள் பலரால்
நினைத்தற்கு அரியவனும், ஒப்பற்றவனும் பெருஞ் சிறப்பு வாய்ந்தவனும் ஆகிய
இறைவனது பறை, எக்காளம், சங்கு முதலிய பல திருச் சின்னங்களின் ஓசை
முழக்கம் கேட்டவுடனே (ஆசையோடு) 'சிவசிவ' என்று திருவாய் திறந்து
(உருகினாற் போல்) உரைப்பாய். 'தென்னடுடைய சிவனே!' என்று செப்புதற்குள்
தீயிடைப் பட்ட மெழுகைப் போல உருகிவிடுவாய்; (ஆனால் இப்பொழுது நீ என்ன
செய்கிறாய்?) என் தலைவனை, என் அரசன், இனிய அமிர்தன் என்று எல்லோரும்
தனித்தனியே புகழ்ந்து இசைத்தோம்; அதனையும் நீ கேட்டாய். கேட்டும் இன்னும்
நீ நன்றாக உறங்குகின்றாயே! வலிய மனம் படைத்த அறிவிலார் போலச் சும்மா
கிடக்கின்றாயே! ஆகா! உன் உலையா உறக்கத்தின் உயர் தன்மைதான் என்னே!" என்று
இகழ்ச்சிக் குறி தோன்ற இயம்பினார்கள்.
இக்கருத்தைத் தீந்தமிழ் வாசகராம் திருவாதவூரடிகள் தமது திருவெம்பாவையின்
ஏழாம் பாடலில் எழில் ததும்ப எடுத்துக் கூறுகின்றார்கள். இனி, அப்பாடலைப்
பார்ப்போம்.
"அன்னே! இவையும் சிலவோ? பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன், இருஞ்சீரான்,
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதென்(று) எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ?
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்!
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
[அமரர் - தேவர், உன்னல் - நினைத்தல், அரையன் - அரசன்]
சாதாரணமாகத் தாய்மார்கள் மகளை நோக்கி 'அம்மா' என்று செல்லமாகச் செப்பி
அழைப்பது தமிழக மரபு. இப்படிப் பாசப் பிணிப்பின் பக்குவம் வெளிப்படப்
பரிவோடு அழைப்பதை ஒட்டியே, ஈண்டு அன்றைய பெண்டிரும் மூத்தாள் என்ற
முறையில் இளையாளாய் உள்ள எழுப்ப வேண்டிய கன்னியை "அன்னே" என்று அன்பு
குழைய அழைத்தனர் போலும். முன்பெல்லாம் இறைவன் பால் பக்திக் காதல் பூண்டு
தன்னை மறந்து ஈடுபடும் அன்புச் செய்கைகளையுடைய அப்பாவையே இன்று பக்தியற்ற
ஒரு பேதை போல் படுத்திருக்கின்றாள், என்ற இரு முரண்பட்ட செய்கைகளையே,
"இது போன்ற உன் திருவிளையாடல்களும் சில உளவோ?" என்று சுட்டிக் காட்டும்
முறையில் "இவையும் சிலவோ?" என்று எழுப்ப வந்த பாவையர் முதலில் 'அம்மா'
என்று அவளை அன்பு குழைய அழைத்ததை அடுத்து, இவ்வாறு பழித்து உளையப்
பகர்வாராயினர்.
"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று இசையோடு இயம்புங்கால் மிகு
பக்தியுடையோர் வெகுவாக இதயம் உருகி இன்புறுவர் என்ற நிலையில், இவளோ
அச்சொற்றொடரின் முற்பகுதியாம் 'தென்னா' என்ற சொல் கேட்ட அளவிலானே
உலப்பிலா உவகை கொண்டு அனலிடை அகப்பட்ட மெழுகு போல் உளம் உருகி ஒன்றுபடும்
இறை பக்தியின் விரைவினை விளக்கு முகத்தான், "தென்னா என்னா முன்னம் தீசேர்
மெழுகு ஒப்பாய்" என்று அருமையாகக் கூறினர் அக்கன்னியர். பாட்டில்
பாவையரின் பழிப்புரையைப் பல இடங்களில் பார்க்கின்றோம். ஆயினும் அதன் உச்ச
நிலைக் கூற்றாக, "என்னே துயிலின் பரிசு!" என்ற சொற்றொடர் அமைந்துள்ள நிலை
தெற்றென விளங்குகின்றதன்றோ? பழிப்புரையின் பக்குவமாக ஈண்டு ""எம்பாவை
எழில்" எடுத்துக் காட்டப் பெறுகின்றது.
"இன்னும் துயிலுதியோ?" "என்னே துயிலின் பரிசு"
என்ற இரு சொற்றொடர்களோடு திருப்பாவையின் 10 - ஆம் பாசுரத்தில்,
"கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெரும்துயில் தான் தந்தானோ?"
என வரும் வாக்கின் பொருள் பொருந்தி வருதல் காண்க.
பழிப்புக்கு ஆளான பைந்தொடி பள்ளி நீத்து வந்ததும் பண்ணிசைத்தவாறே
பக்கத்தேயுள்ள பிறிதொரு பாவையை அழைத்தற்குப் போயினர் அணியிழையார்
அனைவரும். அவள் பிராயம் குறைந்த இளம்பெண் போலும். ஏதோ மிகமிக ஆழ்ந்த
தூக்கத்தில் ஈடுபட்டுவிட்டாள். அவளை நோக்கி எப்படி அழைக்கின்றார்கள்?
பார்ப்போம்.
8. ஏச்சுப் பேச்சால் எழுந்த ஏந்திழை
கோழிகள் கூவுகின்றன; பறவைகள் எங்கும் ஒலிக்கின்றன; (கோவிலில்) ஏழிசைக்
கருவியான நாகசுரம் இசைக்க, எங்கும் வெள்ளிய சங்குகள் முழங்குகின்றன.
ஒப்பற்ற பேரொளி உருவினனாம் பெம்மானும், ஈடிணையற்ற பேரருளாளனும் ஆன
இறைவனது நிகரில்லாத மேலாம் பொருள்களைப் புகழ்ந்து பாடினோமே நாங்கள்;
அவைகளை நீ (செவியாரக்) கேட்கவில்லையா? நீ வாழ்வாயாக! இது என்ன உறக்கம்?
(கேவலம்) வாயைக் கூடத் திறக்கமாட்டாய் போலிருக்கிறதே! அருட் பெருங்
கடலாகிய இறைவனிடம் நீ அன்பு செலுத்துதல் இவ்வளவு தானோ? (இனியேனும்
எழுந்து வந்து) எல்லாம் அழிந்து ஒழிகின்ற ஊழிக் காலத்தும் தனித்து
நிலைத்து நிற்கும் தலைவனாம் ஒருவனை (ஏழைகள் பங்கிலே இருப்பவனாகிய)
உமையொரு பாகனாம் எம்பெருமானைப் பாடுவாயாக!" என்று அப் பாவையை எழுப்பித்
தங்களுடன் வந்து பரமனைப் பாடிப் புனலாட வருமாறு பரிகாசத்தோடு பரிவும்
கலந்து அழைக்கின்றார்கள் பாவையர்.
இனி, இவ்வாறு இயம்பிய அழைப்புரை, இசைக் கவிதை வடிவிலே எப்படி எழிலோடு
இயைந்து வருகின்றது என்பதை எம்பாவைப் பாட்டின் எட்டாம் பாடல் வாயிலாகப்
பார்ப்போம்.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதிக் கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழிஈ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங் காளனையே பாடேலோர் எம்பாவாய்
[சிலம்புதல் - ஒலித்தல், குருகு - பறவை, ஏழில் - ஏழிசை தோண்ருதற்கு
இடமாகிய கருவி (நாகசுரம்), கேழில் - ஒப்பற்ற]
"ஏனம்மா! விடியற் காலையை உணர்த்தும் ஒலிகள் எங்கும் வீறிட்டு முழங்கிய
நிலையில் அது கேட்டே நீ எழுந்து வந்திருக்க வேண்டும். அது அல்லாது இவண்
நாங்கள் இறைவன் புகழ் இசைத்த இனிய பண்ணொலி கேட்டும் கண் திறந்தாயே அன்றி,
வாய் திறந்து எம்மோடு வாகாக இசைக்க வந்தாயில்லை. இந்நிலையும் உன்
உறக்கத்தின் ஒரு வகையோ?" என்று உள்ளே படுத்திருக்கும் பாவையைப் பார்த்து
எழுப்ப வந்த ஏந்திழையார் நன்கு எள்ளி நகையாடும் முறையில் இயம்புவதாக
அமைந்துள்ள, "ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?" என்ற சொற்றொடரிலும்,
பாவையின் பக்திக் காதலைப் பழிக்கும் முறையில் பகரப்பெற்ற, "ஆழியான்
அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?" என்ற சொற்றொடரிலும் ஏச்சின் பேச்சு
எகத்தாளம் கலந்து இலங்குகின்றது. "அம்மா! உன்னுடைய தூக்கம், என்ன தூக்கமோ
தெரியவில்லையே! ஆகா! உன் தூக்கத்திற்கு இப்படியும் ஒரு வாழ்வு
வந்துவிட்டது போலும்!" என்றும், "நீ இப்படித் தூங்கியே வாழம்மா!"
என்றும், பொருள் கொள்ளுமாறு வனிதையர் வழங்கிய எகத்தாள வாழ்த்துரை, "வாழி"
என்ற சொல்லில் பொதிந்து கிடக்கின்றது நன்கு நோக்கத் தக்கது. முன்னையப்
பாடலைப் போலவே இப்பாடலிலும் மாண்பு மிக்க மணிவாசகரின் மணிமொழியாம்,
"எம்பாவை எழில்" ஏச்சின் பக்குவமாகவே இசைந்து நிற்கின்றது.
எங்கும் நிறைந்த மங்கை பங்கனை மனம் உருகிப் பாடி மார்கழி நீராடுவது அவனது
பக்திக் காதல் என்னும் பயிருக்குச் சக்தி மிகுந்த உரமாக விளங்கி, முக்தி
அடைய உந்தும் என்ற உட்பொருள் தோன்ற, 'சத்தியும் சிவமுமான உமையொரு பாகனையோ
பாடு, வேறொருவரை அன்று, என்று' தேற்றமாகப் போற்றிப் புகலும் முறையில்,
"ஏழை பங்களானையே பாடு" என்று இசைத்த இளங்கன்னியின் இன்சொல்லில் வந்துள்ள
ஏகாரத்தில் அவளது பக்தித் திடம் நன்கு வெளிப்படுகிறது.
இப் பாடலில் வைகறையை உணர்த்தும் அறிகுறியாக,
"கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்"
என்று வருகின்ற கருத்து, கோதை முழங்கும் திருப்பாவை 6 - ஆம் பாசுரத்தில்,
"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?"
என்றும், இன்னும் 13 - ஆம் பாசுரத்தில்,
"வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண்"
என்றும், மேலும் 18-ஆம் பாசுரத்தில்,
"வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்"
என்றும் பேசப் பட்டிருப்பதோடு பொருந்துவனவாகும்.
இப்பாடல் உள்ளிட்ட திருவெம்பாவையின் எட்டுப் பாடல்களில் ஒவ்வொரு
பாவையரையும் நித்திரை நீத்து நீராட வருமாறு அழைத்தமை கூறப்பெற்றது.
பாவையர் அனைவரும் முதல் நாள் பேசிய திட்டப்படி வரவேண்டிய யாவரும் வந்து
சேர்ந்த நிலையில், இனி நீராடச் செல்லும் முகத்தான் தடாகத்தை நோக்கிப்
புறப்படுகின்றார்கள். அது போது கூட்டமாக இறைவன் புகழைத் தெருவெல்லாம்
இசையில் முழக்கிச் செல்லுகின்றார்கள். இறைவனைக் குறித்த இன்னிசைக்
கன்னியரின் இசைப் பொழிவை நாமும் கொஞ்சம் கேட்டு இரசிப்போம்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோ(ம்) எல்லோர் எம்பாவாய்
[பேர்த்தும் - மீண்டும், பாங்கு - உரிமை, தொழும்பு - அடிமை, நல்குதல் -
கொடுத்தருளல்]
"முற்பட்ட பழமையான பொருள்கள் எல்லாவற்றுக்கும் முற்பட்ட பழமையானவனே!
பிற்காலத்தே தோன்றும் எந்தப் புதிய பொருள்களுக்கும் மீண்டும் அப்புதுப்
பொருள் தன்மையுடைய பெருமையோனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற, உனது சிறப்பு
மிக்க அடியார்களாகிய நாங்கள் உன் தொண்டர்கள் திருவடிகளையே தண்டமிடுவோம்.
அந்த அடியார்களுக்கே நாங்கள் உரிமை உடையவர்கள் ஆவோம். அந்த
மெய்யடியார்களே எங்கள் (மேன்மை மிகு) அன்புக் கணவர்களாக
ஆகுதற்குரியவர்கள். அவர்கள் அகம் விரும்பி இடும் ஆணைப் படியே அவர்களின்
அடிமைகளாக இருந்து (அன்புப்) பணியாற்றுவோம். இவ்வாறே எந்நாளும் நாங்கள்
அன்புப் பணிபுரிய எங்கட்கு நீ அருள் புரிவாயானால் எவ்விதமான இடர்ப்பாடும்
இல்லாது இனிது வாழ்வோம்" என்று இறைவனை முன்னிலைப் படுத்தி
இறைஞ்சுகிறார்கள்.
இப்பாடல் திருவெம்பாவையின் நடுநாயகமாக விளங்கும் மார்கழி நீராடலின்
சிறப்புப் பயன் விழைந்த திருப்பாடல். இது, பொதுவாகக் கருத்து
ஒன்றியவர்களே காதல் மிகையால் கணவன் மனைவியராக இணைந்து இல்லறம் என்னும்
நல்லறம் நடாத்தி இனிது வாழவேண்டிய இயல்பினை எடுத்து விளக்குகிறது. இதில்
சிறப்பாகச் சிறு கன்னிப் பெண்கள் தங்கள் உள்ளக் கிடக்கையை உரைத்து உலக
நாயகனை அதற்கு அருள் சுரக்குமாறு அஞ்சலி செய்கின்றார்கள். மெய்யடியாரை
வணங்குதல், மேலாம் இறைவனை வணங்குதற்கு ஒப்பாகும் என்று உரைப்பாரும் உளர்.
எப்படியாயினும், இறையடியார்களை இதயத்துட் கொண்டு இன்பக் கணவராக எய்தி,
அவர்களது விருப்பும் வெறுப்புமே தங்களது விருப்பும் வெறுப்புமாகக்
கொண்டு, மங்கையர் மாண்புற இங்கிதப் பணிபுரிய வேண்டுதலை, "அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்" என்ற அடிகள் அழகுபட
விரித்துரைக்கின்றது. இதன் உட்பொருளை இல்லறம் நடாத்தும் மெல்லியலார்
எல்லாரும் நன்கு உணர்ந்து நல்லியல்பாகக் கைக்கொள்ளுதல் நல்லறமாகும். ஆம்,
தலைமகள் ஒருத்திக்குத் தலைவன்பால் தலையாய காதல் தோய்ந்த நிலையில்
அவனுக்கு அடிமையாக இருந்து அரும் பணியாற்றுதலில் தோன்றும் ஆறா இன்பம்
தனியொரு அலாதி வகைதானே!
அணங்குகளனைய அணியிழையார் அரன் (சிவன்) அடியார்களை வணங்குதலும், அவர்களையே
அன்புக் கணவர்களாக அடைதலும், அவர்கள் விரும்பிய அன்புப் பணியையே
தாங்களும் விரும்பிச் செய்தலுமான இச்செய்கைகளைக் குறிப்பால் உணர்த்தவே,
"இன்னவகை" என்ரு அருமையாகச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து 'எம்பாவை
எழில்' காட்டுகின்றார், உளம் உருக்கும் வளம் கனிந்த வாசகம் வழங்கும்
உயர்தனி அடிகளாம் மணிவாசகப் பெருமான்.
பின்னர், கன்னியர் அனைவரும் ஒன்று கூடி, கன்னித் தமிழால் கடவுள்
புகழ்பாடி, நன்னீராடத் தடாகத்தை நாடிச் செல்லுங்கால், நகரின் கண்ணுள்ள
நம் பெருமான் கோவிலில் நற்பணி புரிந்து கொண்டிருந்த நங்கை நல்லார் சிலரை
நோக்கி, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றி ஏதோ தம் இதயத் தெழுந்த
சில ஐய வினாக்களுக்கு விளக்கம் தருமாறு வினவுகின்றார்கள். எப்படி என்பதை
முதலில், பாட்டின் வாயிலாகப் பார்ப்போம்.
10. இறைவன் தன்மையும் எழுந்த வினாவும்
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன்தன் கோயில்பிணாப் பிள்ளைகாள்!
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆருற்றார்? ஆரயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
[போது - மலர், உலவா - முடிவற்ற, பிணா - பெண், உற்றார் - உறவினர், கோது -
குற்றம்]
"இறைவனது திருவடித் தாமரைகள் கீழ் உலகம் ஏழுக்கும் கீழாகச் (செல்லும்)
சொல்லின் எல்லையைக் கடந்து விட்டன. பூவணிந்த அவனது அழகிய திருமுடி
எல்லாப் பொருள்களுக்கும் எல்லையாகவுள்ளது. உடம்பின் ஒரு பாதியில் உமையாம்
பெண்ணை உடையவன் (அர்த்த நாரி). உயர்திருமேனியின் வடிவம் ஒன்றே உடையவன்
அல்லன். வேதங்களுக்கு முதலாக விளங்குகின்ற நாதன்; விண்ணுலகினரும்,
மண்ணுலகினரும் எண்ணிலாது எவ்வளவுதான் ஏற்றினாலும், அவ் வண்ண ஏற்றத்தால்
வரையிலாப் புகழுடைய ஒப்பற்ற உயர் தோழன். தொண்டர் உள்ளத்தை
அண்டியிருப்பவன். அத்தகைய குற்றமற்ற ஏற்றங் கொண்ட இறைவனது திருக்கோவிலில்
குறைவறப் பணிபுரியும் குலப் பெண்மணிகளே! அந்த இறைவனுடைய ஊர் எது? அவன்
பெயர்தான் என்ன? அவனுக்கு உற்றார் யார்? அயலார்தாம் யார்? அவன்
புகழ்பாடும் வகை யாது? (கூறுவீர்)" என்றார்கள்.
'எது எல்லாப் பொருள்களின் எல்லையைக் கடந்து நிற்கிறதோ, எதில் எல்லாப்
பொருள்களும் ஒடுங்கி நுணுகி முடிந்து நிற்கின்றதோ, அது இறை' என்னும்
கடவுள் தத்துவத்தை,
"பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே"
என்ற அடிகளில் அத்தனைப் பாடிச் சித்தம் சிவமேயான செம்மலாம் திருவாதவூர்ப்
பெருந்தகை செப்புகின்ற சீர் சிந்தித்தற்கரியது. 'ஓர் உலகத்தையே அதன் நீள
அகலப் பரிணாமங்களை அளவிட்டுரைக்க முடியா நிலையில், ஏழு கீழ் உலகங்களையும்
எவ்வாறு எடுத்தியம்ப இயலும்?' என்ற அதன் நீட்சி சொல்லுக்கு அடங்கி
நிற்காது என்னும் குறிப்புத் தோன்ற, "சொற்கழிவு" என்ரு சொல்லப் பட்டுள்ள
கருத்து கூர்ந்து நோக்கத் தக்கது. கடவுள் தத்துவத்தின் கரை, காண
முடியாதது தானே! பல வடிவங்களிலே காட்சி தந்தருளும் பரமன் என்றும், பல
படிமங்களிலும் (வடிவுகளிலும்) பரந்துள்ள பரமன் என்றும் கொள்ளுமாறு,
"திருமேனி ஒன்றல்லன்" என்று அவனது ஆகிருதியின் ஆழ்ந்த விரிவு நிலை அழகுபட
அறிவுறுத்தப் பெற்றது.
"ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்" என்ற அடிக்கு, "ஓத உலவா ஒரு தோழந்
தொண்டர் உளன்" என்று பாடங் கொண்டு (தோழம் என்பது பேரெண் என்ற பொருளில்)
'இணையற்ற மிகுந்த தொண்டரை உடையவன் அவ்விறைவன்' எனப்பொருள் கொள்ளலும்
உண்டு. மேன்மைமிகு இறைவனுக்கு மெய்யடிமை பூண்டொழுகும் மெல்லியலாரை
நோக்கி, வல்லியராம் பாவையர் அவனது ஊர், பேர், உற்றவர், மற்றவர் என்பன
பற்றி உரைக்குமாறு கேட்டது, அம்மெல்லியலார் என்றும் பரமன் பக்கத்தே
இருத்தலால் என்றாலும், தம்மினம் என்ற தனித்த பற்றினால், என்றலே சாலும்
போலும். "ஏதவன் ஊர், ஏதவன் பேர், ஆருற்றார், ஆரயலார்" என்ற பாட்டின்
ஈற்றடியில் பாவையரின் பாசக்குழைவு ஆசை ததும்பப் படமெடுத்துக் காட்டப்
பெறுகின்றதைப் பாருங்கள்.
மார்கழி நீராடப் புகும் மங்கையர் அனைவரும் ஏற்கனவே தமது அளவளாவல்
அரங்கில் இறைவனைப் பற்றி நன்கு பேசியுள்ள முறையில் அவனது ஊர், பேர்,
உற்றார், அயலார், அவனைப் புகழ்ந்து ஓதும் முறை எல்லாம் குறிப்பாக
அறிந்திருப்பினும், மேலும் சிறப்பாக அறிந்துகொள்ள ஆசை கொண்ட நிலையில்,
அறிவிலும் அகவையிலும் (வயதிலும்) மூத்த ஆலயப் பணி அலுவலர்களை அன்போடு
அழைத்து விளக்கம் தருமாறு வினவினார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். ஆம்,
அதுவும் ஓர் 'எம்பாவை எழில்' தான்.
இனி, அவ் வல்லியர் எல்லோரும் ஒருங்கு கூடி, மருங்கேயுள்ள விரும்பத்தக்க
நறும் புனல் தடாகத்தில் நீராடும் நிலையில், இறைவனை விளித்து எய்ப்பு
அடையாதிருக்குமாறு இரந்து வேண்டுகின்றனர்.
11. காப்பு வேண்டும் காரிகையார்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழிஅடியோம் வாழ்ந்தோம் காண்! ஆர்அழல்போல்
செய்யா!வெண் ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவளா!
ஐயா!நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
[மொய் - வண்டுகள் (ஆகுபெயர்), பொய்கை - வாவி - குளம், குடைந்து -
கிண்டுதல் - நீரினுள் மூழ்குதல், அழல் - நெருப்பு, மருங்குல் - இடை,
உய்தல் - பிழைத்தல், எய்ப்பு - இளைப்பு]
"செறிந்த நெருப்புப் போன்ற செந்நிறத் திருமேனியனே! வெண்ணீறு (விபூதி)
பூசியவனே! செல்வனே! சிறிய இடையும், கரிய மை பூசிய விசாலமான கண்களுமுடைய
உமையவளின் கணவனே! எங்கள் தலைவனே! வண்டுகள் மண்டிய (வாச மலர்களையுடைய)
வளம் சான்ற அகன்ற வண்ண வாவிகளில் மூழ்கி, 'முகேர்' என்றே நீரொலி முழக்கம்
ஆர்த்தெழும்படியாகத் தண்ணீரில் தடக்கைகளால் அடித்துக் கிண்டி ஆழ்ந்து
மூழ்கி ஆடி, உன் ஒப்பற்ற திருவடிகளைப் புகழ்ந்து உளம் உருகப் பாடி, ஐயனே!
உனது பக்தி வழி நின்ற, வழி வழி அடிமைகளாகிய நாங்கள் அரும் பெரும் நல்
வாழ்வடைந்தோம். நீ உயிர்களை அடிமை கொண்டருளும் உன் திருவிளையாடல்களின்
அமைப்புப் படி உய்தி பெறுவார் உய்யும் வழி வகைகள் எல்லாவற்றாலும்
பிழைத்துவிட்டோ ம். இனியும், நாங்கள் எய்ப்பு அடையாமல் (இளைத்துவிடாமல்)
எங்களைக் காத்தருள் புரிவாயாக!" என்றார்கள்.
இவ்வாறாக நீராடல் பயன் விழைந்த சீரார்ந்த பாட்டின் மூலம், அரும் புனலாடிய
அழகிய ஆயிழையார், அன்பு கனிய அகங் குழைய, ஆண்டவன் பால் மூண்ட காதலால்
வேண்டுதலாம், "காப்பு"க்கு அருள் புரிய வேண்டுகின்றார்கள். பாட்டில்
பாவையரின் பக்திக் காதல் பைந்தமிழ் ஓவியமாக உருப்பெற்று வருகிறது.
"..............................................ஆர் அழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா ................................................................."
என்னும் அடிகளில் பாவையர் இறைவனைப் புகழ்ந்து விளித்தல் அவர்தம் பக்திக்
காதலை எடுத்துக் காட்டும் பான்மையில் மிக எழிலாக இசைக்கப் பெற்றுள்ளது.
"எம்பாவை எழில்" எப்படி எல்லாம் சக்தி நிறைந்த பக்திக் காதல் வாயிலாகப்
பயின்று வருகின்றது என்பதைப் பாருங்கள். ஆகா! படித்துப் படித்து
அனுபவித்துப் பக்திக் காதல் கொள்ளச் செய்ய வேண்டியவை அல்லவா அச்
சிரஞ்சீவிக் கவிதைகள்?
பலமுறை நீரினுள் மூழ்கிப் பாவையர் நீராடினர் என்பதைப் பொதுவாகக்
"குடைந்து குடைந்து" என்று கூறினாலும், அதனைச் சிறப்பாகப் பொருள்
கொள்வோமானால், முதற் "குடைந்து" என்பதற்குத் தாமரை போன்ற மலர்கள் நிறைந்த
தடாகத்தில் நீராடுவதற்குப் பக்குவமாக (இடம்) இருக்கும் பொருட்டுப்
பாவையர் தம் கைகளால் அம் மலர்களைத் தட்டி அடித்துக் கிண்டி ஒதுக்கினர்
என்றும், இரண்டாம் "குடைந்து" என்பதற்குப் பாவையர் மூழ்கி எழுந்து
நீராடினர் என்றும் கொள்ளல் வேண்டும். "ஏதோ இதுவரை புரிந்த பணிகளில்
எல்லாம் எக்குறையும் இன்றி ஈடுபட்டு உலகியல் நெறி முறைப்படி ஈடேற்றம்
கொள்ளுதற்கேற்ப எல்லா வகையாலும் நல்ல நிலையிலே பிழைத்து விட்டோ மாயினும்,
இனியும், எங்கள் இனிய வாழ்வு ஈடேறும் பொருட்டு எங்கள் (மார்கழி) நோன்பின்
பயனைப் பெறுதலில் நாங்கள் சலிப்படையாது காத்தருள்வாயாக!" என்ற பாவையரின்
குறிக்கோளாம் "காப்பு" வேண்டுதலைப் பாட்டின் ஈற்றடியில் எழிலுறக்
காண்கிறோம். "எம்பாவை எழிலை"த் தம் பாற்கொண்ட இத்தமிழ் நடை வளம் பாட்டைப்
பயில்வோர் மனத்தைப் பாசமுறச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
இனி, இவ்வாறு பாவையர் எல்லோரும் பைம்புனல் ஆடுங்கால் இறைவனிடம் 'காப்பு'
வேண்டிய பின்பு, 'அவனது எல்லையில்லாப் புகழை இசைத்து இன்பமாக நீராடுவோம்'
என்று இயம்புகின்றனர்.
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்
[குவலயம் - நிலவுலகம், கரந்தும் - மறைந்தும், சிலம்ப - ஒலிக்க, குடைந்து
- மூழ்கி]
"நம்மைக் கட்டுப் படுத்தும் இம்மைப் பிறவித் துன்பம் ஒழியும் படி, நாம்
மகிழ்ந்து ஆரவாரித்து நன்னீராடித் திளைக்கும் தூய நீரையுடையவன், நல்ல
தில்லைச் சிற்றம்பலத்திலே அனல் தாங்கி (அல்லல் தீர்க்க அல்லும் பகலும்)
ஆடுகின்ற அருட்கூத்துடையான். இம் மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும், நம்
எல்லோரையும், ஆக்கியும், அருளியும், மறைத்தும் விளையாடுகின்றவன், ஆகிய
இத்தகைய இறைவனுடைய திருப்புகழை இசைத்துக் கொண்டு, கை வளையல்கள் ஒலிக்க,
நீண்ட மேகலைகள் ஆரவார ஒலி எழுப்ப, அழகிய அளகபாரத்தின் மீது வண்டுகள் தம்
ஆனந்த இசையைப் பாட, அழகிய மலர்கள் மல்கிய மடுவிலே மனம் மகிழ்ந்து
குளித்து நம்மை ஆளுடையான் பொன்னடிகளை இன்னிசையால் புகழ்ந்து போற்றி, நிலை
பெற்ற பெரிய சுனை நீரிலும் நீந்தி ஆடுவோமாக" என்றார்கள்.
பாட்டின் முற்பகுதியில் இறைவனது சிறப்பான பெருமை இசைக்கப் பெறுகின்றது.
பிற் பகுதியில் புண்ணியப் புலனாடும் பாவையரின் வண்ண நிலை வருணிக்கப்
பெறுகின்றது. இது ஒரு அனுபவிக்கத் தக்க அருமையன சொற்சித்திரமாகவே
சோபிக்கின்றது. மக்களிடையே பண்டை நாள் முதல் மரபாக வந்துள்ள புண்ணியப்
புனலாடும் குறிக்கோள், "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்" என்ற
அடிகளில் அறியக் கிடக்கின்றது. பாவையர் நீராடுங்கால் பைம்பூங் கைகளால்
நீரைத் தட்டி வாரி இறைக்கும் நிலை, "வளை சிலம்ப" என்ற கைவளை ஒலி எழும்பக்
காரணமான காரியத்தினால் நன்கு உணர்த்திக் காட்டப் பெறுகிறது. அவர்கள்
நீரினுள் மூழ்கி மூழ்கித் திரும்பத் திரும்பவும் எழும்பும் எழில் நிலை,
"வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய" என்ற வாக்கின் மூலம், இடையில் இணைக்கப்
பெற்ற மேகலை என்ற ஆபரணத்தால் ஆரவாரித்து எழும் ஒலிக்குக் காரணமாகத்
திகழ்வது கருத்துடன் நோக்கத் தக்கது. இன்னும் பாவையர் கூந்தலில்
பைம்பூந்தேனைப் பருகுவான் வேண்டிப் படிந்துள்ள வண்டுகள், அப்பாவையர்
நீரினுள் புகுந்ததும் அம் மலரின் கண் மதுவுண்ண முடியா நிலையில் பிரிவுத்
துயரால் ஆரவாரிக்கும் அவல ஒலியாகிய காரியத்திற்குக் காரணமாகக் கன்னியர்
நீரில் மூழ்கும் நிலையினையே எடுத்தியம்பும் முறையில், "அணி குழல் மேல்
வண்டார்ப்ப" என்று அழகுறக் கூறும் நயம் அனுபவித்து மகிழ வேண்டிய "எம்பாவை
எழில்"களில் ஒன்று.
நித்தில நகையார் அத்தனை பேரும் நிமலனின் நிலையான மாண்பினை வித்தகமாக
எடுத்து விளம்பி வேட்கையோடு நீராடுகின்ற நிலையை விரித்துரைக்கும்
முறையில் முன்னைய திருப்பாட்டைப் போலவே பின் வருகின்ற திருவெம்பாவைப்
பாடலும் மிகமிக அழகாக அமைந்துள்ளது. அழகுப் பாடலை ஆனந்தமாக ஆழ்ந்து
அனுபவிப்போமாக.
13. அம்மையப்பராய் அமைந்த வாவியில் ஆழ்ந்து நீராடல்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைத்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்
[போது - மலர், குருகு - பறவை, அரவம் - பாம்பு, மலம் -அழுக்கு, சங்கம் -
வளையல், ஆர்ப்ப -ஒலிசெய்ய, பங்கயம் - தாமரை, கமலம்]
"பசிய கருங்குவளைப் பூக்களாலும், பசுமை மிகுந்த செந்தாமரைப் பூக்களாலும்,
அழக்ய பறவைக் கூட்டங்களாலும், பின்னி எழும் அலை ஓசைகளாலும், (மடுநீரில்)
தங்கள் (உடல்) அழுக்கைப் போக்குவார் வந்து சேர்தலினாலும், (ஆகிய
இவைகளால்) எங்கள் இறைவியையும் இறைவனையும் போலப் பொருந்திய நீர் பொங்கி
நிற்கும் பொய்கையில், தாவித் தாவி நீரில் மூழ்கப் புகுதலால் நம் கை
வளையல்கள் ஒலிக்க, கால் சிலம்புகளும் அவ்வொலியோடு சேர்ந்து ஓசை எழுப்ப,
கொங்கைகள் பூரிப்படைய, நாம் குடைந்து விளையாடும் மடுநீர் மேலெழுந்து
வழிய, அழகிய தாமரைத் தடாகத்திலே குதித்து மூழ்கி நீராடுவோமாக"
என்றார்கள்.
இவ்வழகிய பாடலின் நடைவளம் பைந்தமிழே பச்சிளங் குழந்தையாகத் தவழ்ந்து
(விளையாடி) வந்து நம்மைப் பாசத்தில் ஆழ்த்தும் படைப்பாக அமைந்துள்ளது.
பாடலின் பொருள் வளமோ பயில்வோரின் மனத்தைப் பரவசமுறச் செய்கிறது. பாடலின்
முதல் மூன்று அடிகளிலும் இறைவன் (சிவன்) இறைவி (உமை) மடு (குளம்) ஆகிய
மூன்றிற்கும் உவமை உரைக்கப் பெற்றிருக்கிறது. இதனை உன்னிப் பயில்வார்
உள்ளத்தில் உவகை ஊறும் என்பது உறுதி. இது சிலேடைப் பொருளில் வந்து,
"எம்பாவை எழில்" காட்டும் சிறப்பு என்று செப்பினால் அது தப்பில்லை -
ஒப்பத்தான் வேண்டும்.
பசிய கருங்குவளை என்னும் நீலோற்பலப் பூக்கள், பரமாருள் நிறைந்த நீல
மேனியளாம் உமையம்மையையும், செந்தாமரைப் பூக்கள், செந்நிற மேனியனாம்
சிவபெருமானையும் குறிக்கின்றன. மடுவில் பைங்குவளையும் செங்கமலமும்
அடுத்தடுத்து இணைந்து நிற்கும் நிலை, அரனும் உமையும் இணைந்த ஒரே வடிவமாம்
அம்மையப்பனை நினைவூட்டிச் செம்மையாக விளங்குகின்ற காட்சி நம் மனத்தை
மகிழ்விக்கின்றதன்றோ - மானசீகமாகப் பார்க்குங்கால்?
"அங்குஅம் குருகினத்தால்" என்பது குளத்தில் நீர் வாழ்பறவைக் கூட்டம்
நிலவி இருத்தலாலும், நெருங்கிய அலைகள் நிரலாக நிறைந்து இருத்தலாலும்
வாவிக்குப் பொருந்தும். "அங்கம்" என்பது உடம்பின் உறுப்பாம் கையையும்,
"குருகு" என்பது கைவளையையும் குறிக்கும் முறையில் கைவளை அணிந்த
உமையையும், "பின்னும் அரவம்" என்பது பின்னிக் கிடக்கின்ற பாம்பு அணி
என்னும் முறையில், பாம்பாபரணனாம் சிவனையும் குறிப்பின. ஒரு சொல்லில் இரு
பொருளைச் சிலேடையாகச் செப்பி, அத்தனைப் பாடிச் சித்தம் சிவமேயான மணிவாசக
அடிகள், ஈண்டு ஈருருவும் ஓருருவாய் அமைந்த அம்மையப்பனை அறிவுறுத்தும்
ஆற்றல் ஆழ்ந்து பாராட்டத் தக்கது. ஆம், அம்மையும், அப்பனையும் அடிகள்
அடுத்தடுத்து அறிவுறுத்தும் முறையில், "பைங்குவளைக் கார்மலரால்"
என்பதனால் அம்மையையும், "செங்கமலப் பைம்போதால்" என்பதனால் அப்பனையும்,
"அங்கெம் குருகினத்தால்" என்பதனால் அம்மையையும், "பின்னும் அரவத்தால்"
என்பதனால் அப்பனையும் முறையே கூறி, "தங்கள் மலம்கழுவு வார்வந்து
சார்தலினால்" என்பதனால் அம்மையப்பர் இருவரையும் இணைத்து வைத்திருக்கும்
எழில் நிலை 'எம்பாவை எழிலு'க்கு ஏற்றமாக இலங்கி அதில் ஈடுபட்டோ ர்
இதயத்தை ஈர்த்து இன்புறுத்துகின்றது.
இனி மடுவுக்கும் அம்மையப்பனுக்கும் பொருந்துவதான, "தங்கள் மலங் கழுவுவார்
வந்து சார்தல்" என்பதில் மலம் என்பதற்குச் சுருக்கமாக, இறைவனை
அடையவொட்டாது தடை செய்யும் (பந்த) பாசப் பிணிப்பு என்று சொல்லலாம்.
இம்மலம் மக்கள் பால் மூவகையில் உள்ளது. அதாவது ஆணவம், கன்மம், மாயை
என்பன. இம் மும்மலங்கள் என்னும் (உயிரின்) அழுக்கைக் கழுவிப் போக்கும்
சாதனம் இறைவன் இறைவியரின் பால் உள. அவர்களை அடைதலே அதற்கு மார்க்கம்
என்னும் முறையில் அந்தப் பந்த பாசப் பிணிப்பை விலக்குவான் வேண்டி
அம்மையப்பனை வந்தடைதல் என்பது குறிக்கப் பெற்றது.
உயிர் அழுக்கைப் போக்கிக் கொள்ள வந்தடையும் உமையொரு பாகனாம்
அம்மையப்பனைப் போல உடல் அழுக்கைப் போக்கிக் கொள்ள வந்தடையும் மடு காட்சி
தருகின்றது. இதனைத்தான் "எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடு" என்று துங்கமுறச் (பெருமையுறச்) சொல்லி மங்களமாய் இலங்கும்.
"எம்பாவை எழி"லை அற்புதமாக எடுத்துக் காட்டுகின்றார். இணையிலாப் பக்திக்
காதல் கவிதை பாடிய மணிவாசகப் பெருமான்.
"கொங்கைகள் பொங்க" என்பதை இள மங்கையர் பங்கமில்லாது நோற்கவிருக்கும்
நோன்பாம் மார்கழி நீராடற் பேறு கருதி மனம் மகிழ்ந்த நிலையில் கொங்கைகள்
பூரிப்புக் கொண்டன போலும் எனக் கொள்ளுதல் சாலும்.
பக்திக் காதல் மூலம் அம்மையப்பரின் அருட் கடலில் அழுந்த வேண்டிய அரியதொரு
காரியத்தை மடுவின் வாயிலாக மக்கட்கு எடுத்துக் காட்டிய மணிவாசகரின்
மணிமொழி மகிழ்ந்து பாராட்டத் தக்கது. ஆம், எண்ணி எண்ணி இதயம் பூரிக்கத்
தக்கன. மேற்கண்ட பாட்டில் மடுவை வைத்து முன்பு உவமேயமாகச் சொல்லப்பட்ட
பொருளையும், பின்பு விளக்கமாக உபமானமாகச் சொல்லப்பட்ட பொருளையும்
ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்க்குங்கால், "எம்பாவை எழி"லின் நயம் இனிது
விளங்கி இதயத்தை இனிக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை.
மேலும், இளங் கன்னியர் யாவரும் உளம் ஒருமித்து உலக நாயகனை ஒருசேரப்
பாடுதலையும், நீராடுங்கால் நேரும் நிகழ்ச்சிகளையும், கூறும் முறையிலே,
அடுத்த கவிமலர் அமைந்து வருகிறது.
14. அத்தனையும் சக்தியையும் ஒத்துப் பாடல்
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதண்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
[குழை - காதணி, கலன் - ஆபரணம், கோதை - பூமாலை, குழாம் - கூட்டம், தார் -
மாலை, ஆமா - ஆமாறு]
"காதில் அமைந்த அணிகள் அசைய, ஆகத்தில் அணிந்த இதர அழகிய பசும்பொன்
ஆபரணங்கள் அசைய, மலர்மாலை சூடிய கூந்தல் அசைய, அக்கூந்தலைச் சுற்றிச்
சுரும்புக் கூட்டங்கள் சுழன்று ஆட, குளிர்ந்த நீரில் மூழ்கி, தில்லைச்
சிற்றம்பலம் என்னும் சிதம்பர ஞானசபைப் புகழைப் பாடி, வேதத்தின்
உட்பொருளாய் அமைந்த மேன்மைகளைப் பாடி, அந்த உட்பொருளே விமலனாக விளங்கும்
விதத்தைப் பாடி, ஒளி வடிவாய் இலங்கும் அவ்விறைவனது உயர்வினைப் பாடி, அவன்
அணிந்திருக்கும் கொன்றை மாலையைப் பாடி, அப்பெருமாள் எப்பொருட்கும்
முதலாகவும் முடிவாகவும் உள்ள முறையின் இயல்பினை இசைத்து, நம்மை
வேறுபடுத்திப் பாதுகாத்து வளர்த்தெடுத்த வளையல்களை அணிந்த பராசக்தியாம்
உமையம்மையின் பாத கமலப் பெருமைகளையும் பாடி, (நாம்) நீராடுவோமாக"
என்றார்கள்.
பாவில் ஆடலும் பாடலும் ஒன்றையொன்று முந்துவது போல் ஒரே குதிப்பு மயம்.
மார்கழி நோன்பின் மாண்பான செய்கையில் ஈடுபட்ட மங்கைமார் மனம் மகிழ்ந்து
நீராடும் மகிழ்ச்சிக் கூத்தின் படப்பிடிப்பாகப் பாவின் ஒலிச் சித்திரம்
பரந்து விளங்குகின்ற நிலை, "எம்பாவை எழி"லாக இலங்கி இசையின்பம் ஈந்து
இதயத்தை மகிழ்விக்கின்றதன்றோ? பாட்டில் 'ஆடல்' ஒன்றேகால் அடி அளவிலும்,
'பாடல்' இரண்டே முக்கால் அடி அளவிலும் அமைந்துள்ளன. இறைவனைப் பாடினால்
தானே முறையான பக்தி பெருகும் - சக்தி அடையலாம். அதனால் தானே பாட்டில்
'பாடல்' பகுதி கூடியது போலும்.
மங்கையர்கள் கரையினின்றும் மடுவுக்குச் செல்லுங்கால் நிகழ்ந்த ஆடல்
அசைவினை, "காதார் குழையாடப் பைம்பூண் கலனாட" என்றும், அவர்கள் நீரினுட்
புகுந்து நீராடுங்கால் நிகழ்ந்த அசைவாடலினை, "கோதை குழலாட வண்டின்
குழாமாட" என்றும், வனிதையர் நீராடும் நிலையினை வரிசைப் படுத்தி
வழங்குகின்றார் அன்பின் வள்ளலாம் வாதவூரடிகள். முன்னர், "ஆர்த்த பிறவி"
என்ற 12 -ஆம் பாடலில் வந்த "அணி குழல்மேல் வண்டார்ப்ப" என்ற அடிகளுக்கு
நாம் கண்ட விளக்கவுரையே இவண் கூறப்பெற்ற, "வண்டின் குழாம் ஆட" என்ற
வாக்கிற்கும் பொருந்துவதாகும்.
வேதத்தின் உட்பொருள் "பிரமம்" என்பர் சான்றோர். அப் "பிரமம்" என்னும்
பரம்பொருளே (பாருக்கு) இறைவனாக விளங்குகிறான் என்பதைப் பாராட்டிப்
பாவையர் பாடியதை "வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடி" என்றார் அடிகள்.
கடவுள் தத்துவத்தின் கருப்பொருள், கன்னியரின் இன்னிசைக் கன்னல் மொழி
வாயிலாக எடுத்துக் காட்டப் பெறுகிறது. "வேதப் பொருள்" என்பது முதல்
"அந்தம் ஆமாபாடி" என்பதுவரை இறைவனது ஏற்றமே பேசப்படுஇறது. அனைத்திற்கும்
முதலாகவும் முடிவாகவும் விளங்கி நிற்கும் அந்த இறைவன் நிலையினைப் பாடி
இசைத்த இளங்கன்னியர், அடுத்து, உமையொருபாகனது ஒரு பாதியாம் அம்மையை,
'அவளது தாய்மைச் செயலாம் தலையாய செயலாக - அல்லால் நீக்கி நல்லன செய்யும்
செயலாக - உலக பந்த பாசம் என்ற உயிரின் அழுக்காகிய மல பந்தத்தில் இருந்து
(அதில் ஆட்பட்டு விடாது) வேறுபடுத்தி வளர்த்து மேம்படச் செய்யும் மேலாம்
காரியத்திற்கு, மேன்மைமிகு கர்த்தாவாக விளங்கும் அருளம்மை என்னும், அந்த
அனைத்துலக அம்மையினது பாதச் சிறப்பினைப் பாடுவோம்' என்னும் பான்மையில்,
"பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி" என்று
"எம்பாவை எழில்" கூறும் வகையில் இன்னிசை மெல்லியார் இசைத்தனர். வளையல்கள்
அணிந்த பெண் என்ற பொருளில் வந்துள்ள, "பெய்வளை" என்னும் சொல் இங்கு அருட்
சக்தியாகிய உமையம்மையை உணர்த்துகிறது.
இனி, இறைவன் பால் நிறைந்த காதலுடைய ஒருத்தியின் இதயம் உறைந்த கதை,
நீராடுங்கால் பாவை ஒருத்தியால் மற்றவர்கட்கு உரைக்கப் பெற்று, இறைவனது
பெருமை பேசப்படுவதாக அருமையான முறையில் அமைந்துவரும், 'தண்ணருள் நிறைந்த
வண்ணத் திருமொழி என்னும்' கன்னல் (கரும்பு) கவிதையைக் கண்டு களிப்போம்.
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்
[ஓவா - ஓயாமல், பனிப்ப - சிந்த, பார் - பூமி, வித்தகா - ஞானமுடையோர்,
வார் - கச்சு, ஏர் - அழகு]
"கச்சணிந்த அழகிய ஆபரணங்கள் பூண்ட மார்புடையீர், (ஒரு பெண்ணானவள்)
ஒவ்வொரு சமயம் 'எம்பெருமான்' என்று சொல்லிச் செப்புவதில் ஒருபோதும் வாய்
ஓயாமல் இருப்பாள். மனம் மகிழ்ந்து நீண்ட தாரையாக ஒரு போதும் ஒழியாது
ஊறும் கண்ணீரைக் கண்கள் சிந்த, பூமியில் ஒரேயடியாக வீழ்ந்து வணங்குவாள்;
(மற்ற) தேவர்களை வணங்க மாட்டாள். பேரரசனாகிய இறைவனிடத்து இப்படியாக ஒரு
பெண் பைத்தியங் கொண்டுள்ள விதத்தையும், இம்மாதிரியாக ஆட்கொள்ளும்
(அருளினைப் புரியும்) அரிய ஞானமுடையார் யாரோ அவருடைய திருவடிகளை
வாய்குளிர நாம் பாடிக் கொண்டு அழகிய வடிவங் கொண்ட மலர்கள் மல்கிய மடுவிலே
வீழ்ந்து மூழ்கி நீந்தி நீராடுவோமாக!" என்றார்கள்.
"இறைவனாம் தலைவன் பால் தன் வயமிழந்து தலையன்பு பூண்டுள்ள தலைவி
ஒருத்தியின் தகைமை உணர்த்தி, அத்தகைமைக்குத் தலையாய காரணமாக விளங்கிய அத்
தலைவனையே நாமும் பாடி ஆடுவோம்" என வெளிப்படையாகக் கூறிய நிலையில், அதனால்
'அவள் பெற்ற தகைமைகளை நாமும் அடையலாம்' என்ற அக விருப்பம் அரும்ப,
ஆண்டின் மூத்த அணங்கு ஒருத்தியின் - குழுத்தலைவியின் - வாய்மூலம் மணங்
கமழ வருகின்றது மாணிக்கவாசகரின் மலர்ப்பாடல். ஆம், அணிசெய்யும் "எம்பாவை
எழி"லாகத் தான்.
தலையன்பினளின் தகைமையைப் பார்ப்போமானால் தான் ஈடுபட்ட பக்திக் காதலால்
ஆசை மீக்கூர இறைவனை "எம்பெருமான்" (என்னுடைய சொந்தப் பெருமான்) என்று பல
முறை பக்தி உரிமையின் எதிரொலியாகப் பகரப் பெற்றதை நோக்கின் அவளது தகைமை
அங்கைக் கனிபோல் அழகுற விளங்கும்.
பக்தியின் பெற்றிமைக்கு ஒரு படம் எழுதிக் காட்ட முடியுமானால் அது எவ்வாறு
இனிது இலங்குமோ அவ்வளவு விளக்கமாகக் கடவுள் பக்தியின் காட்சி, கவிதையின்
முதல் இரண்டடிகளில் கவின்பெற விளங்குகின்ற நிலை, கண்டு களிப்பெய்தத்
தக்கது. சித்தத்துள் தித்திக்கும் தேனாக விளங்கும் சிவபிரானோடு
பத்திமையால் ஈடுபட்டு ஒத்த ஐக்கியம் உருவாகும் முறையில், உள்ளக் குழைவின்
பயனாய் அனுபவிக்கும் பேரின்ப நுகர்ச்சியின் விளைவாக, ஓயாது வெளிப்படும்
ஆனந்தக் கண்ணீர் உகுப்பையே, "சித்தம் களிகூர நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை
கண்பனிப்ப" என்று அத்தனை அழகாக அறிவுறுத்துகின்றார், மணிவாசக அடிகள் தம்
"எம்பாவை எழில்" கூறும் முறையில்.
தலையன்பினளாய பக்தையாம் பாவையின் இறையன்புக் காதலின் ஈடுபாடு, "மனம்,
வாக்கு, காயம்" என்ற மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றது. மனத்தால்
ஈடுபட்ட மாண்பைச் "சித்தர் களிகூர" என்றும், வாக்கினால் ஈடுப்பட்ட வகையை,
"வாய் ஓவாள்" என்றும், காயத்தால் ஈடுபட்ட காட்சியை, "வந்தனையாள்"
என்றும், அழகுறச் சித்தரித்துக் கூறும் அடிகளின் வாக்கு நயம் நன்கு
அனுபவிதற்கு உரியது.
இனிப் பாவையர் நோற்கும் மார்கழி நோன்பின் பொதுப்பயனாக், 'நாடு செழிக்க
நன்மழை பெய்தல் வேண்டும்' என நானில நாயகனிடம் நயந்து வேண்டிக்
கொள்ளுகின்ற நன்மழைப் பாட்டின் இன்னெழிற் பொழிவை இனித் பார்ப்போம்.
16. மழை பொழிகவென மங்கையர் ஏத்துதல்
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
[இட்டிடை - மிகச் சிறிய இடை, சிலம்பி - ஒலித்து, சிலை குலவி - வில்
வளைத்து, முன்னி - நினைத்து, மழை - மேகம்]
"ஏ மேகமே! முதலில் கடலை அணுகி அதன் நீரைச் சுருக்கி முகந்துகொண்டு
(ஆவியாகிக் குடித்து) மேலே (ஆகாயத்தில்) சென்று எம்மையுடையவராகிய
எம்பிராட்டியாம் உமையம்மையைப் போல (நீல நிறம் பெற்று) விளங்கி, எங்களை
ஆட்கொண்டருளிய அந்த அம்மையின் மிகச் சிறிய இடையைப் போல மின்னி விளங்கி,
எங்கள் பெருமாட்டியின் திருவடிகளின் மேல் விளங்கும் அழகிய தங்கச்
சிலம்புகள் ஒலிப்பது போல ஒலித்து (இடித்து) அத்தேவியின் அழகிய புருவம்
போல வானவில் உருவம் ஒளிரச் செய்து, நம்மை ஆட்கொள்ளும் அம்பிகையை
விட்டகலாத (உடனுறையும்) எம்பெருமானுடைய அன்பர்களுக்கும் நமக்கும்
அவ்வம்மை (அருள்செய்வோம் என) முற்பட்டுத் திருவுளங் கொண்டு சுரந்தருளும்
இனிய அருட்பெருக்கைப் போல நீ மழை பொழிவாயாக!" என்று நயம்பட வேண்டினார்கள்
நங்கையர்கள்.
மழை வளம் விழைந்த இளங் குழந்தைகள், களத்தில் கூடி நின்று உளம்
ஒன்றுபட்டு, "மழையே! மழையே! வா, வா நீ! வையகம் செழித்திட வா வா நீ!"
என்று மேகத்தை முன்னிலைப் படுத்தி மிக அழகாக ஆனந்தமாகப் பாடுவதுண்டு.
அதுபோலவே அன்றும் மங்கை நல்லார் மாநில வளங் கொழிக்க மழை பொழியுமாறு
மகிழ்ச்சி பொங்கப் பாடினார்கள்.
பாட்டில் மங்கையர், மக்கட்கு மழை பொழிவிக்க மனம் மகிழ்ந்து விழையும்
மான்பு குழைவாகக் கூறப் பெற்றுள்ளது. வனிதையர் விருப்பத்தை வனப்பாக
எடுத்து வழங்கும், ஓசையின்பம் பயக்கும் ஒலிச் சித்திரமாம் கவிதையின்
வளமான நடை தனி வசீகரத் தன்மை வாய்ந்தது என்று கூறினால் அது வாய்மையாகும்.
அவ்வாய்மையே இங்கு "எம்பாவை எழி"லாக இலங்குகின்றது என்று இயம்பலாம்.
'அருட் சூல் கொண்டு அகிலம் காக்க அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியைப்
போல் நீருண்டு சூல்கொண்ட நீலமேகம் நிலங் காக்க நெடுமழை பொழியவேண்டும்'
என்ற நேரிழையார் வேண்டுகோளின் உவமைச் சிறப்பு உன்னி உன்னி உவகை கொள்ளத்
தக்கது; இச்சிறப்பின் உச்சநிலை உரையாக - ஆம் முத்துக் கவிதையின்
முத்தாய்ப்பாக,
"முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்"
என்று மணிவாசகப் பெருந்தகை மணியாகக் கூறியுள்ள கவிதையின் வாக்கு நயம்
களித்து அனுபவிக்க வேண்டிய "எம்பாவை எழில்" ஆகும்.
பாவை நோன்பின் பொதுப் பயனாக மழை பொழிக என இழையிடையார் இன்னிசையால்
குழைந்து ஏத்துங்காலை, ஈண்டு மழையாம் மேகத்துக்கும், மாதேவியாம்
உமையம்மைக்கும், உருவகித்து ஒப்பிட்டு உரைக்கும் நயம் ஓர்ந்து உவக்கத்
தக்கது. மாதேவியின் மேனி நிறம் மழையாம் மேகநிறத்தையும், அவளது நுண்ணிடை
நுணுகி ஒளிரும் மின்னலையும், அவளது அடிச் சிலம்பொலி இடி ஒலியையும், அவளது
அழகிய புருவம் வானவில் உருவத்தையும், அவளது இன்னருள் நன்மழையையும்
குறிக்கின்றன. மேகம், மின்னல், இடி, வானவில், மழை ஆகியவற்றின் இயல்புகள்
பாவையர்க்குப் பராசக்தியின் பான்மை உணர்த்தி அவள் பாலுள்ள அவர்களது
பக்திக் காதலை வளர்க்கின்றன.
இவ்வாறு திருவெம்பாவைப் பாவையர் உமாதேவியை உருவகித்து மழை பொழிய விழைந்து
வேண்டியவாறே திருப்பாவைப் பாவையரும் திருமாலை உருவகித்து மழை பொழிய
விழைந்து வேண்டுகின்ற கீழ்வரும் 4 -ஆம் பாசுரம், ஈண்டு ஒப்பு நோக்கி
இன்ப்றத் தக்கது.
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்!
ஆழியுள் புக்கு முகந்துகொ(டு) ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
[ஆழி - கடல், கரவேல் - ஒளிந்துவிடாதே, ஆர்த்து - ஆரவாரம் செய்து, ஊழி
முதல்வன் - பகவான் (திருமால்), பாழி - வலிமை - பெருமை, ஆழி - சக்கரம்,
அதிர்ந்து - முழங்கி, தாழாதே - தாமதியாமல், சார்ங்கம் - பகவானுடைய வில்.]
திருவெம்பாவை திருப்பாவை
1.முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து |1.ஆழியுள் புக்கு முகுந்துகொடு
ஆர்த்தேறி
2.உடையாள் என்னத் திகழ்ந்து |2.ஊழிமுதல்வன் உருவம்போல்
மெய்கறுத்து
3.ஆளுடையாள் இட்டிடையின் மின்னி |3 பற்பநாபன் கையில் ஆழிபோல் மின்னி
4.பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி |4.வலம்புரிபோல் நின்றதிர்ந்து
5.திருப்புருவம் |5.சார்ங்கம்
6.முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் |6.சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
7.இன்னருளே என்ன |7.வாழ உலகினில் பெய்திடாய்
மணிவாசக அடிகள் இரத்தினச் சுருக்கமாக இயம்பிய 'சுருக்கி எழுந்து' என்ற
சொற்றொடர் கருத்தினை, ஆண்டாள் சற்று வெளிப்படையாகவே 'முகந்துகொடு ஆர்த்து
ஏறி' என்று அழகுறக் கூறினார்கள். இன்னும், மேக நிறம் குறித்து 'உடையாள்
என்னத் திகழ்ந்து' என்று அடிகள் பக்குவமாகப் பகர்ந்ததை, அண்டாள்
பச்சையாகவே, 'ஊழிமுதல்வன் உருவம் போல் மெய்கறுத்து' என்று உரைத்தார்கள்.
இதே நிலையில் 'பொன்னஞ் சிலம்பிற் சிலம்பி' என்ற அடிகள் கூற்றும்,
'வலம்புரி போல் நின்றதிர்ந்து' என்ற ஆண்டாள் கூற்றும் தம்முள் ஒக்கும்.
இனி, பாவையர் பைம்புனல் ஆடுங்கால், அக்குழுவில் உள்ள பைந்தொடி ஒருத்தியை
நோக்கி, அப்பாவையர் அனைவரும் அம்மையப்பனாம் இறைவனது அருள்முதத்தால்
(தங்கள்பால்) ஊறும் இன்ப உணர்வின் அருமையைப் பாராட்டி இசைக்கும்,
'ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனி'க்கும் உயர்தனிச் செம்மொழியை ஈண்டு
உற்று நோக்குவோம்.
17. இல்லம் புகுந்த இறைவன் தன்னை நல்லார் பாடி நன்னீராடல்
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி! நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்
[திசைமுகன் - பிரமன், கொங்கு - மணம், குழல் - கூந்தல், கோதாட்டி -
சீராட்டி, பங்கயம் - தாமரை]
"மணம் நிறைந்த கரிய கூந்தலினையுடைய மாதே! சிவந்த கண்களையுடைய
திருமாலிடத்தும், நாலு திசைகளுக்கும், நான்கு முகங்களையுடைய
பிரமனிடத்தும், இந்திரன் முதலான தேவர்களிடத்தும், மற்ற எந்தவிடத்தும்
இல்லாதாகிய ஒப்பற்ற (பக்திக் காதல்) இன்பம் எளியோமாகிய நம்மிடத்ததாக,
நம்மைப் பாராட்டி இவ்வுலகில் நமது வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து தமது
செந்தாமரை போன்ற திருவடிகளை (எளிதாக) நமக்குத் தந்து அருள் புரியும்
அடியார்க்கு எளியனாம் ஊழியன் என்னும் சேவகனை, அழகிய (அருள் நோக்கங்
கொண்ட) கண்களையுடைய அரசனை, அடியவர்களாகிய நமக்கு (கிடைத்தற்கரிய) நிறைந்த
அமுதமானவனாம் நமது தலைவனைப் புகழ்ந்து பாடி நமக்கு நன்மை பெருக, தாமரை
மலர்கள் மலிந்துள (இத்) தடாக நீரிலே தாவி மூழ்கி ஆடுவோமாக" என்று இறைவன்
பெருமை இசைத்தனர் இன்னிசை இளங்கொடியார்.
பாட்டில் பெருமை மிகு பரமனது அருளமுதக் கூற்று பைந்தமிழ்த் தேனாக வந்து
பயில்வோர் இதயத்தை இனிக்கச் செய்கிறது. 'திருமால், பிரமன், தேவர்,
ஏனையோர், எவரிடத்தும் இல்லாத இணையற்ற (பக்திக் காதல்) இன்பம் (தேவர்க்கு
ஒப்பான தகுதியற்ற) ஏழை இழையிடையாரான தங்கள் பாலே உள' என்னும் முறையில்,
இறைவனுக்கும் தமக்குமுள்ள அரிய தொடர்பின் சக்தியால் செம்மாந்திருக்கும்
நிலையில் தேற்றாக் கூற்றாக,
"செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதாக"
என்று துடி நடை போட்டு வரும் அடி எடுப்பே "எம்பாவை எழில்" காட்டி
நமக்கும் ஒரு (பக்தி) இன்ப ஈடுபாட்டைத் தந்து அதன்பால் உந்தச்
செய்கின்றது. ஆம், 'நாமும் அப் பாவையர் போல் இறைவனிடம் பக்திக் காதலில்
ஈடுபட்டு இணையிலா நித்திய இன்பமாம் முத்திப் பேற்றை அடைவோமே' என்னும் ஆசை
கொள்ளும் உறுதிப் பாட்டை உளத்தகத்து அறுதியிட்டுக் கொள்ளுமாறு ஊக்குகிறது
என்றும் உரைக்கலாம்.
விண்ணுலகினரும் வேறுலகினரும் நண்ணுதற்கரிய இணையிலாப் பக்திச் சீரின்
பரிசாக நம் ஏழைக் குடிலாம் இல்லங்களில் இறைவன் எழுந்தருளி இனிய ஞானத்
தேன் பொழியும் திருவடித் தாமரைகளைத் தந்தருளும் கொடையினைக் கூறுகின்றாற்
போல்,
"இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகன்"
என்று வரும் அடிகள் அமைந்து, "எம்பாவை எழி"லாக விளங்குகின்ரது. "அன்பால்
நினையும் நம் மனக் குகைகளில் நாம் நினைத்த வடிவுடன் விரைந்து வந்தருளித்
திருவடித் தாமரைகளைத் தந்தருளும் சேவகன்" என்ற பொருள் நுட்பத்தையும்
அவ்வடிகள் மேலும் காட்டுகின்றன. "ஆங்கண்" என்பதை அழகிய கண் என்ற அளவிலே
மட்டும் வெள்ளையாகப் பொருள் விளம்பப் படவில்லை. அது, 'அருள் நோக்கங்
கொண்ட கருணை பாலிக்கும் கண்ணாகப் பெருமை பெற்று அருமையாக விளங்குகின்றது'
என்று விரித்துரைக்கும் தொனியில் வெகு நயமாக விளம்புகிறார் மணிவாசக
அடிகள். 'பக்திக் காதலை அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத அமிர்தம்
போன்றவன் இறைவன்' என்று குறிக்கவே, "ஆரமுது" என்று சுயானுபவத்
திருவாக்காக அடிகள் சொல்லுகிறார் போலும். "மார்கழி நோன்பின் பொதுவும்
சிறப்புமாகிய பயனை அடைந்து நலம் பல நண்ணி, நாளும் நன்கு வாழ அருளுமாறு
நம்பெருமானைப் பாடி நறும் புனலாடுவோம்" எண்ர நங்கையர் வேட்கை, பங்கயம்
போல் பாட்டின் ஈற்றடியில் பக்குவமாக மலர்ந்து நம் மனத்தையும் மகிழச்
செய்கின்றது.
இங்கே "கொங்குண் கருங்குழலி" என்றது, அங்கே திருப்பாவை 13 - ஆம்
பாசுரத்தில் வரும் "கந்தம் கமழும் குழலி"க்கு ஒப்பாகும்.
முன்னையத் திருப்பாட்டைப் போன்றே பின்வரும் பாவைப் பாட்டிலும் பாவை
ஒருத்தியைப் பாசமோடு அழைத்துச் சூரியோதயத்தைச் சுட்டி, சீரிய இறைவனது
அருட்செம்மையைப் புலப்படுத்துவதாகச் சிறந்து விளங்கும் செஞ்சொற் பாட்டைச்
சிறிது பார்ப்போம்.
இந்த இடத்தில் "மழை பொழிய நங்கையர்கள் வேண்டினார்கள்" என்ற பொருள்
என்றால் ஏன் அப்படி வேண்ட வேண்டும்? இது அவர்களின் நீராடலுக்கு இடையூறு
அல்லவா?
மாறாகத் தற்செயலாக வந்த மழையைக் கண்டு "நீயும் எம் பெருமான் பெயர்
வாழ்த்தி ("என்ன") பெய்வாயாக!" என்பது மேலும் பொருத்தமாக
இருக்குமா?
ரெ.கா.
உங்கள் கேள்விக்கு விடையை என் பார்வையில் இன்னும் இரண்டொரு நாட்களிற்
தருகிறேன். அது என் தந்தையார் பார்வையாக இருக்காமற் போகலாம். இன்றைக்குக்
கடைசி 3 பாக்களுக்கான இடுகையைத் தந்துவிடுகிறேன். [சொல்லாய்வு: குடும்பம்
என்ற இழையில் நீங்கள் எழுப்பிய கேள்விக்கு அண்மையில் விடை
அளித்திருந்தேன், படித்தீர்களோ?]
அன்புடன்,
இராம.கி.
On Jan 2, 7:38 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
அண்ணா மலையாம் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றார்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந்(து) ஆடேலோர் எம்பாவாய்
[இறைஞ்சும் - வணங்கும், வீறு - பொலிவு - பெருமை, கரப்ப - நீங்க, தாரகை -
விண்மீன், பிறங்கும் - விளங்கும்]
"பெண்ணே! திருவண்ணாமலை அண்ணலின் திருவடித் தாமரைகளை நண்ணி வணங்கும்
தேவர்களுடைய திருமுடிகளில் உள்ள இரத்தினக் கோவைகள் (அனல் உருவாய அண்ணலின்
முன்) எவ்வாறு தம் ஒளி இழந்து பொலிவற்று விளங்குமோ, அவ்வாறே எங்கும்
பரவிய சூரியனது ஒளி வந்து இருள் நீங்க, விண்மீன்கள் தம் தண் ஒளிப் பொலிவு
இழந்து மழுங்கி மறைய, (இந்நிலையில்) பெண்ணாகியும், ஆணாகியும்,
அலியாகியும், ஒளி விளங்கும் ஆகாயமாகியும், நிலமாகியும், இவை
யாவற்றினின்றும் கடந்து வேறு பொருளாகியும், கண்ணிறைந்த அமுத வடிவாகியும்,
நிலைபெற்று நிற்கும் இறைவனுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடி, பொலிவு
மிகுந்த இப்பொய்கையில் குதித்து நீராடுவோமாக" என்று இளங்கன்னியர்
எல்லோரும் இறைவனது அருளமுதப் பெருமையை எழிலுற இசைத்தார்கள்.
திருவாதவூரடிகள் திருவெம்பாவைப் பாக்களைத் திருவண்ணாமலையில்
இயற்றியருளினார்கள் என்பதற்குச் சான்று சாற்றுமாப் போல்
திருவண்ணாமலைத் தலம் இங்கே சிறப்பித்துக் கூறப் பெற்றது. அது பாட்டின்
முதலடியின் ஆரம்பத்திலேயே விளங்குகின்றது. கண்ணார் அமுதாய் விளங்கும்
அண்ணாமலை அண்ணலின் தண்ணார் அருள்கூர் வண்ணத் திருவடியின் எண்ணிலாப் புகழ்
இசைக்கும் ஏற்ற நிலை, போற்றற்குரிய ஒரு சொல்லோவியமாக விளங்கி "எம்பாவை
எழில்" காட்டி இன்சுவை தருகின்றது.
பேரொளிப் பிழம்பின் முன் இரத்தினக் கோவையின் சிற்றொளி, சீர் அற்றுப்
போவது இயல்பு. அதுபோலச் சூரியன் ஒளி முன் விண் மீனின் வீறு
ஒடுங்கிவிடுகிறது. இந்த விடியற்கால நிலையை விளக்க,
"கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகிகள் தாம் அகல"
என்றார் பாவையர். அவர்கள் நெடுநேரம் பொய்கையில் நீராடிப் பொன்னார்
மேனியனைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருந்த நிலையில் இருள் புலர்ந்தது
என்பது குறிப்பு, குளிர்மையும் மென்மையும் குழுமிய ஒளி என்னும் விழுமிய
கருத்திலே "தண்ணார் ஒளி" என்று இயம்பப் பெற்றது.
இறைவன் எந்தெந்த நிலைகளில் நிலைபெற்று விளங்குகின்றான் என்று எடுத்துக்
கூறுமிடத்து, பெண் குலத்துக்குப் பெருமை தரும் முறையில் தம்மினத்திற்கு
முதன்மை கொடுத்து "பெண்ணாகி ஆணாகி" என்று பேசப்பட்டுள்ளது பாவையர்
வாக்கிலே என்பது பாங்காக நோக்கத் தக்கது.
ஆண், பெண், அலி, விண், மண் என்ற இயற்கைப் பொருட்களில் இறைவன்
இயங்கினாலும், இவை அனைத்தையும் கடந்து அணுக்கள் முதலாய ஏணைய
பொருள்களையும் இயக்குவிக்கும் ஒரு தலைவனாக அவன் விளங்குகின்றான் என்பதன்
சிறப்பை உணர்த்தவே, "இத்தனையும் வேறாகி" என்று அத்தனை நுணுக்கமாக உரைத்து
"எம்பாவை எழி"லின் அருமை காட்டுகின்றார், அணிவாசகம் என்னும்
பக்திப்பனுவல் பாடிய மணிவாசகப் பெருந்தகையார். இறைவன், ஒன்றாய் உடனாய்
வேறாய் ஆன்மாக்களிடம் உலவுவர் என்பது உட்கருத்து.
"கண்ணார் அமுதம்" என்பதற்குக் கண்களால் பருகும் அமுதம் என்றும்,
ஞானானுபவத்திற்கு அமுதம் என்றும், உரையாசிரியர்கள் உரைக்கும் இரு பொருள்
விளக்கம் உன்னுதற்குரியது.
இனி, இறைவனை முன்னிலைப் படுத்தி அவனுக்கு அடியார்கள் செய்யும் அன்புப்
பணிகள் நிறைவேற அவன் துணை நாடி அருள் செய்யுமாறு அணங்கனார் அனைவரும் ஒரு
சேரக் கோரும் அருமையான அற்புதத் திருப்பாடலைச் சற்று அகக் கண்ணால் அறிய
முற்படுவோம்.
19. அணங்கனார் எண்ணம் இணங்க வேண்டல்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்
[கங்குல் - இரவு, நல்குதல் - கொடுத்தல், எழில் - எழுகை (தோன்றுதல்,
ஞாயிறு - சூரியன்]
"எங்கள் பெருமானே! ' உன் கையில் (சேர்ப்பிக்கப் பெறும் இப் பெண்) பிள்ளை
உனக்கே அடைக்கலம்' என்று வதுவைக் காலத்தில் பண்டை நாள் முதல் வழங்கிவரும்
பழமொழியைப் புதுப்பிக்கும் நிலையில் எழுந்த எங்கள் அச்சத்தின் காரணமாக
நாங்கள் உனக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம். அதை நீ
கேட்டருள்வாயாக! எங்களுடைய கொங்கைகள் உனது அன்பர் அல்லாதார் தோள்களைத்
தழுவாது இருப்பனவாகுக; எமது கைகள் உனக்கு அன்றி வேறு எவருக்கும் எத்தகைய
தொண்டும் செய்யாது இருப்பனவாகுக; இந்த உலகத்தில் இவ்வாறே எங்களுக்கு
(எங்கள் தலைவனாம்) நீ அருள் செய்வாயாயின் ஆதித்தன் (சூரியன்) எத்திசையில்
எழுந்து உதயமானாலும் ஆவது என்ன?" என்று விண்ணப்பித்தார்கள்.
இப்பாடலைத் திருவெம்பாவையின் உயிர்நிலைப் பாடல் என்னும் முத்திரைப்
பாடலாகக் கொள்ளவேண்டும். பாவை நோன்பின் இலட்சிய விளக்கம் பாடலில்
பக்குவமாகப் பகரப் பெறுகிறது. பாவையரின் மூன்று இலட்சியங்கள் முழங்கப்
பெறுகின்றன. ஒன்று, நல்ல கணவரை அடைந்து வாழ வேண்டும்; இரண்டாவது
இறைவனுக்கே (சிவனுக்கே) என்றும் முறையாகப் பணி செய்ய வேண்டும்;
மூன்றாவது, கண்களால் காண்பனவெல்லாம் (கருணைக் கடலாம்) பெருமான்
காட்சியாகவே காணவேண்டும் என்பன. இப்பாடலில் வரும் இக்கருத்துக்கள்,
பெரும்பாலும் பொருந்தும் முறையில் பொலிவுற்று விளங்குகின்ற முன்னைய,
"முன்னைப் பழம் பொருட்கும்" என்ற ஒன்பதாவது பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.
திருமணத்தின் போது மணமகளை மணமகன்பால் பெற்றோர் கைப்பிடித்துக்
கொடுக்குங்கால், 'உன் கையில் ஒப்படைக்கும் இப்பெண் உனக்கு அடைக்கலம்,
இவளை நீயே பாதுகாக்கும் கடமையுடையவன்' என்னும் கருத்துப்படக் கூறுவதாகப்
பண்டைநாள் முதல் வந்த வழக்கு என்னும் பழமொழியே, "உன்கையில் பிள்ளை உனக்கே
அடைக்கலம்" என்பது. "எங்கள் மணக்காலத்தே எம் பெற்றோரும் இப் பழமொழியைப்
புதுப்பித்தாற் போலப் புகல்வார்கள் அல்லவா? அவ்வாறே நிகழ்ந்து அம் மணமகன்
ஒருகால் உனது அடியாராகும் தகுதியற்றவர் ஆயின் அப் பழமொழி பகர்ந்து
மணமகனிடம் எங்களை ஒப்புவித்ததற்கு ஏற்க நாங்கள் வாழுங்கால், அன்னார்
சிவத்தொண்டின் பால் சித்தம் சேரா நிலையில் அவ்வாழ்வு நின் அடியார்களாகிய
எங்களுக்குச் சிறப்புடையதாக அமையாதே" என்ற அச்சம் தோன்றியதை அறிவுறுத்தவே
"எம் அச்சத்தால்" என்று இரத்தினச் சுருக்கமாக இயம்பினர் அப் பாவையர்.
இந்த அச்சத்தை அகற்றுவிப்பான் வேண்டியே (அண்ணாமலை) அண்ணலை நோக்கி
விண்ணப்பிக்கின்றார்கள்.
அவ் விண்ணப்பத்தின் முதலாவது இலட்சியமாகிய, 'நல்ல கணவரையே அடைய வேண்டும்'
என்ற அவர்தம் தாபத்தின் தலையாய நிலையைக் குறிக்கும் முறையில், அவர்கள்
இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஆசை ததும்ப எதிர் மறைக் கூற்றாக,
"எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க" என்று வந்துள்ள வாக்கு நன்கு
அனுபவிக்கத் தக்கது. அவைகள் வேறு ஒருவரையும் அடையக் கூடாது என்று கூறும்
முறையில் 'நாங்கள் சிவனடியார்களைத் தவிர வேறு ஒருவரையும் திருமணம்
செய்தல் கூடாது' என்ற வனிதையரின் வாழ்வியல் உறுதி மேற்கண்ட அடியில் நன்கு
வெளிப்படுவது நவிலாமலே அமையும்.
இரண்டாவது இலட்சியமாகிய, 'இறைப் பணியே (சிவப் பணியே) என்றும் இயற்ற
வேண்டும்' என்ற இதய விண்ணப்பம் கடவுட் கைங்கரியமே கதி கொடுக்கும் காரியம்
என்னும் திருப்பணி ஈடுபாட்டை உருவகிக்கும் முறையில், அதன் ஆர்வம்
வெளிப்பட எதிர்மறை இயம்பலாகவே, "எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க"
என்று கூறப் பெற்ற பாவடி, பாவையரின் பணிப் பண்பைப் படம் பிடித்துக்
காட்டுவதுடன், சிவத் தொண்டே பாவத்தைப் போக்க வல்ல செயல் கொண்டது என்னும்
சிறப்பினையும் செப்பாமல் செப்புந்திறம் சிந்தித்தற்குரியது.
மூன்றாவது இலட்சியமாகிய 'காண்பன எல்லாம் கடவுட் காட்சியாகவே காணவேண்டும்'
என்ற காட்சி இன்பக் கோரிக்கை, பெருமான் காட்சியே உறுபயன் அளித்து
உய்விக்கும் என்னும் முறையில் அக்காட்சி இன்ப ஈடுபாட்டில் தோய்ந்த
அனுபவத்தை, அல்லும் பகலும் - கனவிலும் நனவிலும் - அனுபவித்துக் கொண்டே
ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மிக்கூர்ந்த நிலையில், அதனையன்றி
வேறொன்றையும் காணக் கூடாது என்னும் எதிர்மறைப் பொருளாகவே, "கங்குல் பகல்
எங்கண் மற்றொன்றுங் காணற்க" என்று கழறிய கன்னிப் பெண்களின் காட்சியனுபவம்
கவின் நிறை மாட்சியாக வெளிவந்து மகிழ்விக்கச் செய்கின்றது.
"இவ்வாறு மூன்று இதய இலட்சியங்களும் இனிதே நிறைவேற நீ அருள் செய்வாயானால்
அந்த அருட் செல்வம் பெற்ற எமக்கு எக்குறையும் (எள்ளளவும் இல்லவே) இல்லை"
என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் இதய வேண்டுகோளைத் தேற்றமாகத் தெரிவிக்கும்
முறையில், "இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் எங்கு எழில் என்
ஞாயிறு எமக்கு" என்று ஈற்றடியில் சாற்றும் விண்ணப்பம், ஏந்திழையார்
எண்ணத்தின் எதிரொலி முத்திரையாக விழுந்துள்ளது நன்கு கவனிக்கத் தக்கது.
பாவையரின் நோன்புக் கொள்கையான மூன்று இலட்சியங்களையுங் கண்ட முறை மூலம்,
"எம்பாவை எழில்" எவ்வளவு இனிமையாக இலங்குகின்றது என்பதை எளிதில்
அறியலாம், ஆம், இத்தகைய, "எம்பாவை எழில்" கருத்துக்கு விருந்தாக
விளங்கிச் சொன்னயம் சொட்டச் சுவை நனி நல்குகின்றதன்றோ?
இங்கு பாவை நோன்பின் சிறப்புப் பயனாம் பாவையரின் இலட்சியப்
பிரார்த்தனையாக,
"எம்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க"
என்றுவரும் மணிவாசகரின் கருத்து, அங்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம்
ஆண்டாள்ன் திருப்பாவை 29-ஆம் பாசுரத்தில்,
"குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதே"
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தனோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்"
என்றுவரும் கருத்தினோடு பொருத்தி நோக்கத் தக்கது. திருப்பாவைச்
செல்வியரைக் காட்டிலும் திருவெம்பாவைச் செல்வியரின் சிறப்புப் பயன்
வேண்டும் சீரிய விண்ணப்பம் வெகு அழுத்தமாக உறுதி கலந்து உலவுதல் காண்க.
அடுத்து, எடுத்த காரியத்தை முடிசூடி முடிக்கும் முறையில்
எல்லாவற்றுக்கும் முழுமுதற் காரணமாகவுள்ள இறைவனது திருவடித் தாமரைகளைப்
புகழ்ந்து வணக்கம் செலுத்தும் வகையினைக் கூறுகின்றார்கள் வனிதையர்கள்.
அதனை அணி அணியாகப் பாடிய மணிவாசகப் பெருமானின் மாண்பு மிக்க மணிவாக்கை
நாமும் பாடி மங்கை பங்கன் இங்கித அருளை ஏற்போமாக.
20. திருவடி ஏற்றிச் செழுநீர் போற்றல்
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
[போகம் - இன்பம், கழல் - பாதம், ஈறு - எல்லை, புண்டரிகம் - தாமரை, உய்ய -
பிழைக்க]
"இறைவனே! (இவ் விளி பாடலில் தொக்கி நிற்கின்றது) எப்பொருள்களுக்கும்
முதலாகவுள்ள உன் திருவடி மலர்களை வணங்குகின்றோம், அதை எங்களுக்கு
அருள்வாயாக! எல்லாவற்றிற்கும் முடிவாகவுள்ள உன் சிவந்த தளிர் போன்ற
திருவடிகளைத் துதிக்கின்றோம்; அதை எங்களுக்கு அருள்வாயாக. எல்லா உயிர்
வர்க்கங்களும் தோன்றுதற்கு முழுமுதற் காரணமாயுள்ள உன் பொன்னடிகளைப்
போற்றுகின்றோம், (அவற்றால் எங்களைக் காத்தருள்வாயாக!); எல்லா
உயிரினங்கட்கும் (ஏற்றவாறு) இன்பம் தந்து, அவைகளைக் காப்பாற்றும் உன்
அழகிய திருவடிகளை அஞ்சலிக்கின்றோம், (அவற்றை எங்களுக்கும் அருள்வாயாக!);
எல்லா உயிர்களும் ஒடுங்குவதற்கு ஒரு எல்லையாக விளங்குகின்ற உன்
அடியிணைகளைத் தொழுகின்றோம், (அவைகளால் எம்மைக் காப்பாயாக!); திருமாலும்,
பிரமனுமே காணமுடியாத உன் பாத தாமரைகளைப் பரவுகின்றோம், (அவைகளால்
எங்களைக் காப்பீராக!); நாங்கள் எல்லோரும் நன்கு பிழைக்கும் வண்ணம் எங்களை
ஆட்கொண்டருளுகின்ற தங்கத் திருவடிகட்கு எங்கள் இதயம் தோய்ந்த வணக்கம்;
(இன்னும்) நாங்கள் நீராடுகின்ற இந்த மார்கழி நீருக்கும் எங்கள் அன்பு
வணக்கம் (உரியதாகுக)" என்றார்கள்.
இத் திருப்பாட்டு, திருவெம்பாவையின் இறுதிப் பாடலான இருபதாம் பாடலாகும்.
இது, நீராடல் நிறைவேறியதும் நித்தில நகையார் அத்தனை பேரும் ஒத்திருந்து
பத்திமை ததும்பிச் சித்தம் குழைய அத்தனைப் பாடி, முறையோடு பாவைப் பூசனை
பண்ணும் நிலையில், "காத்தல் வேண்டும்" என ஏத்தும் பாடலாக இலங்குகின்றது.
ஆகா! வனிதையரின் வணக்கவுரை இணக்கம், வளங் கனிந்த வாக்காக வந்து வாயூறச்
செய்கின்றது - பரமனின் பக்தித் தேனைப் பருக.
இறைவன் திருவடியே உலகில் உள்ள அனைத்தையும் இயக்குவிக்கும் கருவி என்னும்
முறையில் சிறப்பாக அதனை, "பாத மலர்கள், செந்தளிர்கள், பூங்கழல்கள்,
இணையடிகள், புண்டரிகம், பொன்மலர்கள்" எனப் போற்றிப் புகழ்கின்றார் பக்தி
ஏற்றப் பாக்கள் பாடிய பரமனடியார் வாதவூரடிகள் பண்புமிக்க பாவையர்
வாயிலாக. முதற் பாவில் இறைவன் தனக்கு முதலும் முடிவும் இல்லை என்பதைக்
குறிப்பிக்க, "ஆதியும் அந்தமும் இல்லா" என்றார். இறுதிப் பாவில் எல்லாப்
பொருள்களுக்கும் முதலாய் இருப்பதனையும், எல்லாவற்றையும் ஒடுக்கி
நிற்பதையும், குறிப்பதற்குப் பாதத்தின் மேலேற்றி, "ஆதியாம் பாதமலர்"
என்ரும், "அந்தமாம் செந்தளிர்" என்றும் கூறினார். இங்ஙனம் எழிலாக இயம்பி
இறைவன் இயல்பு இலங்க வைத்தனர் எம்பெருமான் மணிவாசகர்.
இன்னும் சாத்திரங்கள் சாற்றுகின்ற இறைவனது ஆக்கல், அளித்தல், அழித்தல்,
மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலைச் சிறப்பித்துக் கூறுகின்ற செம்மையில்
"எம்பாவை எழில்" காட்டும் இறுதிப் பாடல் இலங்குகின்றது. எப்பொருட்கும்
முதலாயும் முடிவாயும் இருந்து எல்லாவுயிர்களையும் தோற்றுவித்தற்கு
இடமாயுள்ள (தோன்றலின்) திருவடி என்னும் தோரணையில் வரும்,
"போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்"
என்ற அடிகளில் இறைவன் தன் ஐந்தொழிலின் முதல் தொழிலான ஆக்கலைச்
சிறப்பித்துச் செப்புகின்றார் - செம்புலப் பெருந்தொகையாம் சீரார்ந்த
மணிவாசகர். இல்லறவியலார் நாடும் இன்பத்தைச் சிற்றின்பம் என்றும், துறவற
வியலார் நாடும் இன்பத்தைப் பேரின்பம் என்றும் இயம்புவர். இரண்டிற்கும்
துறை வேறுபாடாயினும் 'இன்பம்' என்ற சொல் பொதுவாதலால், அதனை எல்லா
உயிர்கட்கும் அதனதன் தகுதிக்கேற்ப அந்தந்த இன்பங்களை அளித்துக்
காத்தருளும் இறைவன் தன் அழகுடைய இணையடிகள் என்னும் இயல்பில், ""போற்றி
எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்" என்று "இன்பம் பெருக்கி
இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்" விளங்கும் அமலன்
தன் ஐந்தொழிலின் அடுத்த தொழிலான அளித்தலை (காத்தலைப்) பொலிவுறப்
புகல்கின்றார் - "பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம், மூழ்கிய புனிதன்
மொழிந்த வாசக"மாம் பொருள் பொதிந்த அடிகளில்.எல்லாவுயிர்களும் ஒடுங்கி
முடியும் ஒரு முடிவுக்குக் காரணமாயுள்ள கடவுளின் கழல்கள் என்னும்
நிலையில், "போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்" என்ற
அப்பெருமானின் ஐந்தொழிலில் மூன்றாவதான அழித்தலை (ஒடுக்கத்தை)
அறிவுறுத்திக் கூறுகின்றார் அருள்வாசகம் பாடிய அடிகள்.
ஆன்மாக்கள் ஆணவம் என்னும் மலமாகிய இருளில் அகப்பட்டமையால் உடலை 'யான்'
எனவும், உலகப் பொருள்களை 'எனது' எனவும் அபிமானித்து - பற்றுக் கொண்டு -
நல்வினை தீவினைகளைச் செய்தலால், அவ்வினைக்கு ஈடாக இறைவன் மாயையாகிய மூல
காரணத்தினின்றும் ஆன்மாக்கள் வினைப்பயன் நுகர்வதற்காகவும், நல்வினை
தீவினையின் ஒரு தன்மையை - இருவினை ஒப்பினை - எய்தி முத்தி நிலை
பெறுவதற்குமாக தனு, கரண, புவன, போகங்களை - உடல், மனம், புத்தி, சித்தம்,
அகங்காரம் என்ற அந்தக்கரணம், உலக இன்பங்கள், ஆகியவற்றை - அளிக்கின்றான்.
அப்படி அளிக்கும் போது போகங்களை நுகருமாறு ஆணவ மலம் வழியே இறைவன் தனது
கொள்கை என்னும் சங்கற்பமாகிய மறைப்புத் திரையை இட்டு நிற்றலால்,
ஆன்மாக்கள் அல்லனவற்றையும், நல்லனவென நாடுகின்றார்கள். அவ்வாறு ஆணவ
மலத்தின் வாய்ப்பட்டு, "நான்" எனச் செருக்கிய ஏதுவினால் தான்,
திருமாலும், பிரமனுமே இறைவனது (சிவனது) திருமுடி திருவடி காணமுடியாது
திகைத்தலைந்து தோற்றனர் என்பது புராணம். 'இவ்விரு தேவ தேவர்களாலும்
காணவியலாத இவ்வளவு சக்தி வாய்ந்த ஆணவமலத்தின் வலியை அழித்தற்கான அமலனது
அரவிந்தத் தாள்கள்' என்னும் முறையில், "போற்றி மால் நான்முகனும் காணாத
புண்டரிகம்" என்னும் அடிகளில், ஆண்டவனது ஐந்தொழிலின் நான்காவதான மறைத்தல்
தொழிலை, மறைமுகமாகவே குறிப்பில் புகுத்தி விரிவான முறையில் பொருள்
கொள்ளச் செய்கின்றார் - பாவமது நீக்கிப் பரஞானம் அடையப் பத்திப் பனுவல்
பாடிய பரமனடியார் மாணிக்கவாசகர்.
வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவதே இறைவன் அருளாகும். தனித்த முறையில்
இறையன்பில் ஈடுபட்ட பக்தனுக்கு அன்பு முதிர்ந்த நிலையில் கிடைக்கும்
பரிசு, அருள் பாலிக்கும் காரியமாகவே அமையும். 'மருள் நீக்கி அருள்
புரியும் காரியம் மாண்பான பொன்னடிகட்கே பொருந்தும் உரிமை' என்பதை
விளக்கும் முறையில், "போற்றியாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்"
என்று அம்பிகை பாகன் தன் தொழில்களுள் ஐந்தாவதாக உள்ள அருளல் தொழிலை
அறுதியிட்டு உரைக்கின்றார் - ஆடிசீர் பரவும் வாதவூர் அண்ணல்.
இறுதியாகப் பாவையர் யாவரும் பிறவிப்பயனை அடைய விரும்பி நோற்கும் பாவை
நோன்பு குறித்து, நீராடுவதற்கு நிலைக்களனாய் இருந்த மார்கழி நீருக்கும்
நன்றிக் கடனாக வணக்கம் செலுத்தும் வகையில், "போற்றியாம் மார்கழிநீர்
ஆடேலோர் எம்பாவாய்" என்று இறுதி மகுட வாக்காக இசைத்து முடித்தனர்.
இறைவனது ஐந்தொழில் மாட்சிக்குச் சான்று பகரும் திருவெம்பாவையின் இறுதிப்
பாடலில், "எம்பாவை எழில்" வெகு சுவையோடும், விரி பொருளோடும் வெகுவாக
எடுத்தாளப் பட்டிருப்பது இனிது விளங்கும்.
இவ்விறுதிப் பாடலில் எட்டு இடங்களில் 'போற்றி' என்ற சொல் ஏற்றமுறினும்,
அது ஏழு இடங்களில் இறைவன் தன் திருவடியோடு பொருந்துவது போலவே,
திருப்பாவையின் 24 - ஆம் பாசுரத்தில் ஆறு இடங்களில் பயின்று வரும்
'போற்றி' என்ற பதம் திருமாலின் திருவடியோடு பொருந்துவதும் ஒப்பு நோக்கி
உன்னத் தக்கது. மேலும், திருவெம்பாவையில் 'போற்றி' என்ற சொல் அடிகளின்
முதலிலும், அதே சொல் திருப்பாவையுள் அடிகளின் ஈற்றிலும் ஏற்று வருதல்
இனிது காண்க. இன்னும் ஈண்டு பாடலின் ஈற்றில் முடிவுறும், "போற்றியாம்
மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்" என்ற கருத்து, ஒரே மாதிரியாக ஆண்டு,
ஆண்டாள் பாவைப் பாட்டின் 4 - ஆம் பாசுரத்தின் முடிவில், "மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேலோர் எம்பாவாய்" என்று ஆளப் பட்டிருப்பதும் அறிக.
"மல இருளுற் றுறங்காமல் மன்னுபுரி பாகர்அருள்
சலமுழுக வருகஎனச் செப்பல்திரு வெம்பாவை"
என்று திருப்பெருந்துறைப் புராணத்துள் வரும் அடிகள் இத் திருவெம்பாவை
இலக்கணத்தைக் குறிப்பனவாம். "இத் திருவெம்பாவையில், ஆன்ம நாயகனாகிய
இறைவனை அடைதற்குரிய பக்குவம் முதிர்ந்த உயிர்களையே கன்னிப் பெண்களாகவும்,
ஆணவ மல இருளிற் பிணிப்புண்டு இருத்தலையே உறங்கிக் கிடத்தலாகவும்,
மலவாற்றல் ஒழியப் பெறும் நிலையே துயில் நீத்தெழும் நிலையாகவும், மலபரி
பாகனுடைய உயிர்கள் அது இல்லாத உயிர்களை உணர்த்தி, அன்பு நெறிப் படுத்தும்
இறையருளில் தோய்வித்தற்கு அழைத்தலையே நீராட அழைத்தலாகவும் அமைத்துக்
கொண்டு இது அருளிச் செய்யப் பட்டது" என்று உரையாசிரியர்கள் கூறும் இச்
சித்தாந்தக் கருத்தும் ஈண்டுச் சிந்தித்தற்குரியது.
மேலும் இத் திருவெம்பாவையினைச் சைவ சித்தாந்த சாத்திர முறைப்படி நவ
சக்திகள் தம்முள் தொழிற்படும் நிலை என்றும் கூறுவார்கள்.
திருவெம்பாவையின் தலைப்பின் கீழ் "சக்தியை வியந்தது" என்று குறிக்கப்
பெற்றிருக்கிறது. "சக்தியை வியந்தது" என்பது உலகன்னையாம் பராசக்தியின்
கிரியைகளைப் புகழ்ந்து பாராட்டியது. அது திருவெம்பாவைப் பாடல்களில்
தனித்த நிலையிலும், சிவத்தோடு இயந்த நிலையிலும் பாராட்டப் பெற்றுள்ளது
அவைகளைக் கூர்ந்து நோக்கின் நன்கு புலனாகும். 'முதலில் தாய், அதனைச்
சார்ந்து தந்தை என்னும் நிலையில், பராசக்தியாம் அன்னையைப் பரவி, அவள்
மூலம் பரம்பொருளாம் அப்பனை அடைதல் வேண்டும்' என்பது ஆன்றோர் கண்ட
முடிவு.
அம்முறையில், திருவெம்பாவையின் உள்ளுறைப் பொருளாக அமைந்து விளங்குவதே
"சக்தியை வியந்தது" என்பது குறிப்பிடத்தக்கது.
"மலர்வாய்ப் பிறந்த வாசகத்தேன்" என்னும் திருவெம்பாவையின் முற்பகுதியில்
பொற்புறு பாவையர் துயில் எழுப்பப் படும் நிலையையும், பிற்பாதியில்
அன்னார் நீராடிப் பயன் விளையும் நிலையையும் நாம் காண்கின்றோம். இவை
யாவும் இல்லறவியல் என்னும் நிலைக்குள், கடவுளிடத்துக் காதல் கொண்ட
பக்தியின் அடிப்படையில், பிறவிப்பயன் கருதி, தம் இலட்சியங்கள் யாவும்
நிறைவேறும் வண்ணம் பாவையர் வாயிலாக அனைவரும் அம்மையப்பரை அஞ்சலி செய்யும்
முறையில் அமைந்ததொரு அற்புதக் காட்சி. இந்த பக்தி இன்பக் காட்சியைத்
"திருவெம்பாவையின் அழகு" என்னும் "எம்பாவை எழில்" மூலம் இதுவரை கண்டு
அனுபவித்தோம்.
பக்திப் பெருக்கிற்குச் சக்தி அளிக்கும் திருவெம்பாவைப் பாடல்களைத்
தமிழகத்தில் மார்கழி மாதந்தோறும் ஆலயங்களில் விடியற்காலையில் நடக்கும்
திருவெம்பாவைப் பூசையின் போது ஓதுவது மரபு. அதனை (மார்கழி மாதந்தோறும்)
தமிழ்மக்கள் கோவிலிலோ அன்றி அவரவர்கள் இல்லங்களிலோ வைகறையில் நியமமாக
ஓதி, எம்பெருமானுடைய இன்னருட் பேறு எய்துவார்களாகுக.
திருச்சிற்றம்பலம்.
திருவாதவூரர் திருத்தாள் போற்றி. /
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் //
’பைங்குவளைக் கார் மலர்’ - குவளை மலர்கள் நன்கு மலர்ந்துள்ளன.
அதாவது நிலவு இன்னும் மறையவில்லை;
‘செங்கமலப் பைம்போது’ – கமலம் இன்னும் நன்கு மலரவில்லை;
கதிரவன் உதிக்கவில்லை.
பின்னிரவு நேரம் முடிவதற்குள் நீராடுகின்றனர் என்று பொருள் தருகிறது.
தேவ்
On Jan 2, 1:15 pm, devoo <rde...@gmail.com> wrote:
> // Dec 31 2008, 10:01 am, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> 13. அம்மையப்பராய் அமைந்த வாவியில் ஆழ்ந்து நீராடல்
>
> பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் //
>
> ’பைங்குவளைக் கார் மலர்’ - குவளை மலர்கள் நன்கு மலர்ந்துள்ளன.
> அதாவது நிலவு இன்னும் மறையவில்லை;
சந்திரனுக்குக் குமுதசகாயன் என்பது பெயர்.
ஆம். படித்தேன். விளக்கத்திற்கு நன்றி.
ரெ.கா.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் //
இங்கு செங்கமலப் பைம்போது; திருப்பாவையில்
பூங்குவளைப்போது.
தேவ்
திருவெம்பாவை - திருப்பெருந்துறையிலும், திருவம்மானை -
திருவண்ணாமலையிலும், திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி,
திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருத்தோள்நோக்கம் ஆகியவை
தில்லையிலும், திருவுந்தியார் - திருக்கச்சி ஏகம்பத்திலும்
திருப்பொன்னூசல், அன்னைப் பத்து ஆகியவை திரு உத்தரகோச மங்கையிலும்
எழுந்ததாக மறைமலை அடிகள் கூறுவார். திருவெம்பாவை திருவண்ணாமலையில்
எழுந்ததாகவும் அடிகள் இன்னோரிடத்தில் கூறியிருக்கிறார். திருவண்ணாமலை
என்ற கருத்தையே என் தந்தையாரும் கொண்டிருந்தார்கள். பாடலில் தில்லையும்,
திருவண்ணாமலையும் பேசப் படுகின்றன. மேலே கூறிய பதினொறு நூல்களும் மகளிர்
குறித்துச் செய்யப் பட்டவை. மாணிக்க வாசகர் இந்த வகையில் சிற்ப்பானவர்.
மகளிருக்காகச் சிறப்புப் பாடல்கள் இயற்றியவர்.
திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டையும் படிக்கும் போது, எம்பாவையே
முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (இதை நிறுவ தனிக்
கட்டுரை எழுத வேண்டும். அதை இன்னொரு முறையில் செய்ய முற்படுவேன்.)
மணிவாசகர் இருந்தது 9ம் நூற்றாண்டு என்பதை மறுத்து, "மணிவாசகர் மற்ற
சமயக் குரவர் மூவருக்கும் முந்தியவர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டினர்"
என்றே தன்னுடைய "மாணிக்க வாசகர் வரலாறும் காலமும்" என்ற நூலின் மூலம்
மறைமலை அடிகளார் நிறுவுவார். அந்த நூலில் நிறுவிய முடிவுகளை முழுக்க
என்னால் ஒப்ப முடியாவிட்டாலும் பெரிதும் ஒப்புகிறேன். மணிவாசகர் பற்றிய
காலக் கணிப்பு காய்தல் உவத்தல் இன்றிச் சரி செய்யப் படவேண்டும்.
தமிழகத்தில் மழைக்காலம் என்பது இரு பருவத்தில் வருவது. முதலில் வருவது
ஆவணியில் தொடங்கும் கார்காலம் [இன்றைக்கு முற்செலவம் (precession)
காரணமாய் ஆடி 18 - லேயே இது தொடங்கிவிடுகிறது.] இரண்டாவது பருவம்
ஐப்பசியில் தொடங்கும் கூதிர்க்காலம். இரண்டாவது மழைக்காலம் முடிந்து
முன்பனிக் காலத்திலும் அந்தக் காலத்தில் வெள்ளம் பெருகிப் போகும். [சங்க
காலத்தில் தமிழக மக்கள் தொகை கிட்டத்தட்ட 5-இல் இருந்து 10
இலக்கங்களுக்குள் தான் இருந்திருக்க வாய்ப்புண்டு; எனவே வெள்ளம் வடிய
வெகுநாட்கள் ஆனதில் வியப்பில்லை.] வையையில் வெள்ளம் பெருகி ஓட மகளிர்
நீராடப் போவதை பரிபாடல் பல பாட்டுக்களில் சொல்லும். அந்த மழைக்கு நன்றி
சொல்லி "மழையே! ஆண்டாண்டும் வந்து போ" என்ற வேண்டும் நோக்கும் மார்கழி
நோன்பிற்கு உண்டு. ஒருவகையில் பார்த்தால் "மாரிகழி"ந்த மாதம் மார்கழி
என்றே தோன்றுகிறது. தமிழ்த் திங்கள்களின் (சந்திரமான மாதங்கள்), தமிழ்
ஞாயிறுகளின் (சூரியமான மாதங்கள்) பெயர்க் காரணத்தை காலங்கள் என்ற என்
தொடரில் பேசயிருக்கிறேன்.
பரிபாடலின் படி, மார்கழித் திருவாதிரையில் தொடங்கிப் தைத்திங்கள் வரை 10
நாட்கள் நோன்பிருக்கும் பழக்கம் (பரிபாடல் காலத்தில் மார்கழி நீராட்டில்
தொடங்கித் தைநீராட்டிற்கும் வந்து நோன்பை முடிப்பார்கள்.) எப்படியோ மாறி,
மணிவாசகர் காலத்தில் திருவாதிரைக்கு 10 நாட்கள் முன் தொடங்கி
திருவாதிரையில் முடிவாதாக ஏன் மாறிற்று, எப்படி மாறிற்று என்று
விளங்கவில்லை. எங்கோ வரலாறு தடம் புரண்டிருக்கிறது. தெரிந்தவர்கள்
சொன்னால் அறிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பருவ நிகழ்வுகளை, நூறாண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் முன்னுள்ள
நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முற்செலவம் பற்றிப் புரியாது
இருப்பின், நம்மால் உணர முடியாது. முற்செலவம் என்ற கருத்து மிக எளிதானது.
நம் கண்ணுக்குத் தெரியும் ஞாயிற்றின் பயணச் சுற்று ஒவ்வொரு ஆண்டும்
0.01396291 பாகை அளவு கொஞ்சம் முன்னே சென்று விடுகிறது. இதனால் புவியில்
இருந்து பார்க்கும் ஞாயிற்றின் பின்புலம் அதே புலமாக இருப்பதில்லை. முழு
முற்செலவமும் முடிய இன்றையக் கணிப்பின் படி 25782.6 ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு ஓரையில் இருந்து இன்னொரு ஓரைக்கு இப்படிச் சூரியன் நகர 2148.55
ஆண்டுகள் ஆகின்றன. காட்டாக, இந்தியக் காலக் கணிப்பின் படி கி.பி.285 வரை
ஞாயிற்றின் பின் புலமாக இருந்த மேய ஓரை போய், இப்பொழுது மீன ஓரை
இருக்கிறது. எனவே ஞாயிற்றின் வட பயணம் திசம்பர் 22-ல் தொடங்குகிறது.
இருந்தாலும் பழைய நிலையைக் கருதி முற்செலவ நகர்ச்சியைக் கழித்து, இன்னும்
தைத்திங்களில் ஞாயிற்றின் வட பயணம் என்று சொல்லிவருகிறோம். நம்மவர்கள்
இதற்கான பயண வகுந்தத்தை (ayanaamsa)க் கழித்துக் கணக்கிடுவதில் ஒரு
பொருள் இருக்கிறது. இதைப் பற்றியும் பேசவேண்டிய கட்டுரைத் தொடர்
"காலங்கள்" தான். எனவே அதைத் தவிர்க்கிறேன்.
மாணிக்க வாசகர் காலமும் கி.பி.285 - யை ஒட்டியே இருந்தது ஒரு வியப்பான
தன்னேர்ச்சி.
திருவாதிரைத் தேரோட்டம், திருவாதிரைக் களி போன்றவை இந்த நோன்போடு
எப்படித் தொடர்பானவை என்றும் நாம் அறியாமல் இருக்கிறோம். இன்னும் ஒரு
செய்தி இருக்கிறது. செட்டிநாட்டுப் பக்கம், பத்து அகவைச்
சிறுமியர்களுக்கு (பெரியவள் ஆவதற்குச் சற்று முந்திய அகவைப் பெண்கள்)த்
திருவாதிரை செய்யும் பண்டிகை ஒன்று உண்டு; இப்பொழுதெல்லாம் அது
முற்றிலும் நின்று போனது. இந்தப் பண்டிகைகளில் இந்தச் சிறுமிகளுக்கு
மணப்பெண்கள் போலவே சோடித்து, கிட்டத்தட்ட அரைக் கல்யாணம் போலவே செய்தபின்
இந்தச் சிறுமிகள் அண்டை அயலில் உள்ள வீடுகளுக்குச் சென்று காய்கறிகளை
வேண்டிப் பெறுகிறார்கள். அப்பொழுது,
ஆடி ஆடி வாரோம் அவரைக்காய் போடுங்கள்
பாடிப் பாடி வாரோம் பாடவரங்காய் போடுங்கள்
கூடிக் கூடி வாரோம் கொத்தவரங்காய் போடுங்கள்
என்று பாடி, தம் கைகளில் ஏந்திச் சென்ற பாத்திரங்களில் உணவுப்
பொருட்களைப் பெற்றுத் திரும்புவர். அதை வைத்து பண்டிகை வீட்டில்
காய்கறிகள், கூட்டாஞ்சோறு செய்யப்படும். தவிர, திருவாதிரை மாவை இடித்து
நீரூற்றி, ஊறவைத்துத் தோசையும் செய்வார்கள். இந்தத் திருவாதிரைத் தோசையை
ஊற்றி முடித்தவுடன் அதைத் தட்டில் வைத்து மணமுடிக்காத (ஆனால் மணம்
செய்யக் காத்திருக்கும்) பெண்கள் கூர்மையான தோசைக் கரண்டியால் குத்திக்
கிழித்து பின் சிறு துண்டுகளை வந்திருக்கும் எல்லோருக்கும் கொடுப்பதும்
ஒரு மரபாக இருந்தது. இந்த வழக்கம் முற்றிலுமாக மறைந்துவிட்டது. (இதுபோல
வெவ்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு வழக்கங்கள் இருக்கலாம்.) (சொல்லி
வைத்தாற் போல் கோவலனின் மகள் மணிமேகலையும் கூட ஆதிரை என்பாளிடம் தான்
முதல் பிச்சை தொடங்குவாள்; எங்கோ ஒரு மணியோசை ஒலிக்கிறது; இன்னதென்று
விளங்கவில்லை.) [மணிமேகலை, ஆதிரை என்ற பெயர்கள் இன்றும் எங்கள் பக்கம்
உண்டு; கண்ணகி என்ற பெயர் அரிதிலும் அரிது.]
மொத்தத்தில் மார்கழி நோன்பு நம்மூரில் ஆழமாகப் பதிந்து இருந்திருக்கிறது.
அதன் கூறுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்து வருகிறோம். ஆய்வுகள்
கூடவேண்டும்.
நண்பர்கள் சிலருக்கு திருவெம்பாவைப் பாட்டில் "பெண் ஆணுக்குத் தொழும்பு
செய்வதாகக் கூறுவது" இந்தக் காலச் சிந்தனைக்கு முரணாகத் தெரியலாம். அது
அந்தக் காலம் என்பதோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
மற்ற செய்திகளை அடுத்த முறை இன்னொரு வாய்ப்பில் சொல்லுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
திருவாதவூரார் சொல்லும் பல ஆடல், பாடல் வகைகள் வழக்கொழிந்து வருவதாக
பாரதி கூறுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது.
இப்பெரியோர்களின் காலக்கத்தைக் கணிப்பது என்பது சாதரணப்பட்ட விஷயமில்லை
என்று தோன்றுகிறது. ஒருமுறை கோவையில் அருட்செல்வரை சந்தித்த போது
இராமதுரை என்பார் எழுதிய வானவியல் கணக்கில் ஆழ்வார்கள், நாயன்மார்கள்
தோற்றத்தைப் பற்றிய எழுதிய பொத்தகமொன்று கொடுத்தார். அதை எடுத்துப்
பேசினால் ஒரே வீச்சில் சாய்த்துவிடுவர் என்னை. எல்லாம் கிமுவுக்குப்
போகிறது. தமிழ் மண்ணில் ஆய்வு சிறக்கும் போது இதன் உண்மை புலப்படும்.
எப்படியும் எங்களை விட உங்களுக்கு கூடுதலாகப் புரியும். தாங்கள் பொறிஞர்.
கட்டாயம் இங்கு தொட்டுச் செல்லும் விஷயங்கள் பற்றி எழுதுங்கள். மாரி
கழிந்து வருவது மார்கழி! இப்படியெல்லாம் எங்களை சிந்திக்க வைப்பது
தாங்கள்தானே!
வாழ்க.
க.>
அவர் நினைவை எழுப்பியமைக்கு நன்றி.
ரெ.கா.
On Jan 8, 4:53 am, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> தொடருங்கள். ஆர்வமாகப் படித்து வருகிறேன்.
> உங்கள் தந்தையாரின் இந்த நூல் என் நூலகத்தில்
> இருக்கிறது என்றே நினைக்கிறேன். தேடிப் பார்க்க வேண்டும்.
> அவருடைய நூல்கள சிலவற்றை நேரடியாக எனக்குக்
> கொடுத்திருக்கிறார்.
>
அவர் எழுதிய புத்தகக், கட்டுரைப் பட்டியலை
நீங்கள் தொடங்கி வைக்கலாமே.
இராம.கி பூர்த்தி செய்ய வேண்டுவோம்.
பல தமிழ் எழுத்தாளர்களின் புத்தக, கட்டுரைப் பட்டியல்
அவற்றைப் படித்தோர், மாணவர், உறவினர், ...
தொகுத்தால், கிடைக்கிறபோது பிடிஎப் ஆவது
ஆக்கிடலாம். கிடைக்காமல் இருப்பனவற்றைத்
தேட உந்துசக்தியாய் வலையுலகில்
திகழும்.
கூகுள் போன்ற தேடிகளில் துழாவும்போது
தாம் விரும்பும் உறவுக்காரர்/ஆசிரியர்/எழுத்தாளர்
பேரும், அவர் படைப்புக்ளும் தென்படும்.
அது "ஆற்றின்ப வெள்ளமாக" உள்ளங்களில் பாயும்.
ஒருசிலர் முனைப்பாக அப்படைப்புகளில்
சிலவற்றை மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பர்.
சொத்து பங்கிடக் குறையும்!
கல்வி (பிடிஎப்!) ஒன்றுதான் பகிர்ந்திட விரியும்!
அன்பிணை,
நா. கணேசன்
> அவர் நினைவை எழுப்பியமைக்கு நன்றி.
>
> ரெ.கா.
>
> On Jan 8, 1:32 pm, இராமகி <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
>
>
> > திருவெம்பாவை விளக்கமாக என் தந்தையார் 1959-ல் வெளியிட்ட எம்பாவை எழில்
> > என்ற பொத்தகத்தை தட்டச்சு செய்து மின் மடற் குழுவுக்கு ஏற்றிவைத்த பணி
> > இந்தத் திருவாதிரையோடு முடிந்தது. ஏற்கனவே இந்தப் பணியைச் சுணங்கித்
> > தொடங்கியதாலும், திருவெம்பாவை நோன்பை மார்கழித் திருவாதிரைக்குள் முடிக்க
> > வேண்டும் என்பது இந்தக் கால மரபென்பதாலும், (திருப்பாவை என்பது மார்கழி
> > முழுதும் பாராயணம் செய்யப்படுவது. திருவெம்பாவையோ மார்கழித்
> > திருவாதிரைக்குப் பத்து நாட்கள் முன் தொடங்கித் திருவாதிரையில்
> > பாராயணத்தை முடிப்பதே மரபு. சிவநெறியில் மார்கழி மாதம் முழுக்கப்
> > பாராயணம் செய்வது திருப்பள்ளி எழுச்சி மட்டுமே!) சற்று விரைவாகவே
> > தட்டச்சு செய்ய நேர்ந்தது. தட்டச்சுப் பிழைகள் இருந்திருந்தால் அது என்
> > குறை.- Hide quoted text -
>
> - Show quoted text -