(தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) தொடர்ச்சி)
ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2)
பன்வார் மேகவன்சி என்ற பெயரைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தும் ஆர்எசுஎசு அமைப்பில் சேர்ந்து பற்றார்வத்துடன் பணி செய்தவர். 1991 மே முதல் 1992 திசம்பர் வரை ஆர்எசுஎசு-இல் இருந்தவர். இது ஆர்எசுஎசு வரலாற்றில் முனைப்புமிகுந்த காலம். பாபர் மசூதியை இடித்த காலம். கரசேவைக் காலம்.
பாபர் மசூதி இந்து தேசத்துக்கு அவமானச் சின்னம் என்றும், அதை இடித்து அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவதுதான் தேசபக்தி என்றும் ஆர்எசுஎசு பாசக செய்த பரப்புரையில் பன்வார் மேகவன்சியும் மயங்கினார். கரசேவையில் பங்கேற்பதற்கான காவித் தொண்டர் படையில் சேர்ந்து அயோத்திக்குப் புறப்பட்டார். தன் வீட்டில் கரசேவகர்களுக்கு உணவு படைக்க விரும்பி அவர்களை விருந்துக்கு அழைத்தார்.
ஒடுக்கப்பட்டோர் வீட்டில் அவர்கள் உண்பார்களா? என்ற ஐயமே அவருக்கு எழவில்லை. அந்த அளவுக்கு ஆர் எசு எசு மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் சாதி இந்துக்களான கர சேவகர்கள் அவரது விருந்தோம்பலை மறுதலித்தனர்: “எவ்வளவு முயன்றும் நம் இந்துச் சமூகத்தில் சாதியும் தீண்டாமையும் ஒழியவில்லை. ஆசாரமான சாதுக்கள் தீண்டப்படாதார் வீட்டில் உண்ண மாட்டார்கள். நாம் அவர்களுக்கு வருத்தம் அளிக்கக் கூடாது அல்லவா?”
பன்வார் அதிர்ந்து போனார். ஆர்எசுஎசு மீதான அவரது நம்பிக்கை ஆட்டங்காணத் தொடங்கியது. சாதியும் தீண்டாமையும் ஆர்எசுஎசு-இல் தெளிவாக (ஆனால் நுட்பமாக) கடைப்பிடிக்கப்படுவதை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டார். கர சேவையைக் கைவிட்டு வீடு திரும்பினார்.
தன் பட்டறிவினால் அவர் ஆர்எசுஎசு-ஐ மட்டுமல்ல, இந்துவியத்தையே புரிந்து கொண்டார். தனது புரிதலை எழுதவும் செய்தார்.
I Could Not Be Hindu: The Story of a Dalit in the RSS (நான் இந்துவாக இருக்க முடியாது: ஆர் எசு எசு-இல் ஒடுக்கப்பட்டவர் கதை) என்பது அவரது நூல்.
000
சொல்லடிப்போம் வாங்க!
அன்பர் சிபி எழுதுகிறார்.
Corona virus என்பதைத் தமிழில் தீநுண்மி என வழங்குகிறார்கள். இதன் பொருத்தப்பாடு ஐயத்திற்குரியதே. இது நேரடியான மொழிபெயர்ப்போ ஒலிபெயர்ப்போ கிடையாது. வெறும் புரிதல் சார்ந்த சொற்கோவை எனலாம். அறிவியலில் பெயரிடும் போது தனித்தனிப் புழுக்களுக்குத் தனித்தனிப் பெயரிடுவர். அதனை அடையாளம் காண இதுவே உதவும். இத்தீநுண்மி அவ்வாறு தனித்த ஒரு புழுவைக் குறிக்க இயலாது. பொதுவாகத் தீமையளிக்கும் நுண்பொருள்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் குழப்பம் வரும். Corona என்பது கிரீடம் அல்லது முடி எனப் பொருள் தரும். இதில் முடி என்பதே தமிழ்ச்சொல். Virus என்பதைக் கிருமி என வழங்குகிறோம். கிருமி என்ற வடசொல்லிற்குப் புழு என்பதே தமிழ்ச் சொல். எனவே Corona virus என்பதை முடிப்புழு என வழங்கலாமென கருதுகிறேன். தோழர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
00
அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன் கொரோனா என்பதைத் தமிழில் மகுடத் தொற்று என்று சொல்லக் கேட்டுள்ளேன். சிபியின் முன்மொழிவுக்கு அவரது மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி
களம் : 5 காட்சி : 6
கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள்
கலி விருத்தம்
அதிகாரி: சாவிலும் பிரியா இன்பம் காண
ஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப்
பூவுலக மரபினைப் போற்றும் படியாய்
மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர்
எண்சீர் விருத்தம்
உதாரன் : பேரன்பு கொண்டோரே
பெரியோ ரேஎன்
பெற்றதாய் மாரேநல்
லிளஞ்சிங் கங்காள்
நீரோடை நிலக்கிழிக்க
நெடும ரங்கள்
நிறைந்தபெருங் காடாகப்
பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப்
பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப்
பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை
அந்த நாளில்
புதுக்கியவர் யார்அழகு
நகருண் டாக்கி
சிற்றூரும் வரப்பெடுத்த
வயலும் ஆறும்
தேக்கியநல் வாய்க்காலும்
வகைப்ப டுத்தி
நெற்சேர உழுதுழுது
பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெல்லாம்
எவரின் தோள்கள்
கற்பிளந்து மலைபிளந்து
கனிகள் வெட்டிக்
கருவியெலாஞ் செய்துதந்த
கைதான் யார்கை
பொற்றுகளை கடல்முத்தை
மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச்
செவரின் மூச்சு
அக்கால உலகிருட்டைத்
தலைகீ ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச்
செய்து தந்தார்
இக்கால நால்வருணம்
அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம்
ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ
பொழுது தோறும்
புனலுக்கும் அனலுக்கும்
சேற்றி னுக்கும்
கக்கும்விடப் பாம்பினுக்கும்
பிலத்தி னுக்கும்
கடும்பசிக்கும் இடையறாத
நோய்க ளுக்கும்
பலியாகிக் கால்கைகள்
உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி
இந்த நாட்டைச்
சலியாத வருவாயும்
உடைய தாகத்
தந்ததெவர் அவரெல்லாம்
இந்த நேரம்
எலியாக முயலாக
இருக்கின் றார்கள்
ஏமாந்த காலத்தில்
ஏற்றங் கொண்டோன்
புலிவேஷம் போடுகிறான்
பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனுந்
தருகின் றானா ?
கலி விருத்தம்
இளையோன் : கஞ்சிக்கு வழிதேடிக்
கதிரவன் வெயில்காய்ந்து
பஞ்செடுக்கும் கொட்டைதான்
படும்பாடு யாம்பட்டும்
நெஞ்சத்தின் நினைவைநீள்
வேந்தன்தன் எதிருரைக்கக்
கொஞ்சமேனும் எமக்குரிமை
இலையிந்த நாள்மட்டும்
எண்சீர் விருத்தம்
உதாரன் : அரசனுக்கும் எமக்குமொரு
வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள்
தீர்ப்ப தேதான்
சரியென்றேன் ஒப்பவில்லை
இவளும் நானும்
சாவதென்றே தீர்ப்பளித்தான்
சாக வந்தோம்
ஒருமனிதன் தேவைக்கே
இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம்
ஒழிதல் நன்றாம்
இருவர்இதோ சாகின்றோம்
நாளை நீங்கள்
இருப்பதுமெய் யென்றெண்ணி
இருக்கின் றீர்கள்
மோனை: காதலில்லா உயிரொன்று
மண்ணி லில்லை
கற்பனைதான் மறுதியானுக்
கென்று யில்லை
பேதத்துடன் மனிதர்தாம்
பிறப்ப தில்லை
பெரும்புலவோர் நெஞ்சத்தில்
வஞ்ச மில்லை
வாதத்தால் இயற்கைநிலை
யறிவா ரில்லை
வஞ்சனையாற் பொருளீட்டி
மகிழ்வா ரில்லை
பேதத்தால் தமிழழிந்தால்
அழிவ தல்லால்
பெருமைமிகு தமிழர்க்கு
மீட்சி யில்லை
உதாரன்: தன்மகளுக்கு எனையழைத்துக்
கவிதை சொல்லித்
தரச்சொன்னான் அவ்வாறு
தருங்கா லிந்தப்
பொன்மகளும் எனைக்காதல்
எந்தி ரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்
ஒப்பி விட்டேன்
என்னுயிருக் கழவில்லை
அந்தோ என்றன்
எழுதாத சித்திரம்போ
லிருக்கு மிந்த
மன்னுடல்வெட் டப்படுமோர்
மாப ழிக்கே
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்
இன்னுங் கேளீர்
தமிழறிந்ததால் தார்வேந்தன்
எனைய ழைத்தான்
தமிழ்க்கவிஎன் றெனையவளுங்
காத லித்தாள்
அமுதமென்று சொல்லுமிந்தத்
தமிழ்என் னாவி
அழிவதற்குக் காரணமா
யிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமா
ஐய கோஎன்
தாய்மொழிக்குப் பழிவந்தால்
சகிப்ப துண்டோ
உமையொன்று வேண்டுகின்றேன்
மாசில் லாத
உயர்தமிழை உயிரென்று
போற்று மின்கள்
மோனை: உமிகுத்தி வீண்பொழுது
போக்கு வாரும்
உயர்தமிழை அழியவிட்டு
வாழா ரென்றும்
தமியளாகத் தாள்நீக்கத்
தயங்கு வாளும்
தமிழுக்குக் கேடென்றால்
சீறிப் பாய்வாள்
நமையாளும் மன்னவனுக்
கிந்த உண்மை
நனிசிறிதுந் தோன்றாமை
விந்தை யன்றோ
இமைகாக்கும் விழியைவிட
எமக்கு மிந்நாள்
எழில்வாய்ந்த தமிழ்காத்தல்
முதன்மை யாகும்
பெண்ணாசை பெரிதென்பார்
அறியார் பெண்தான
பேரிளமைப் பெண்ணானால்
திரும்பிப் பாரார்
மண்ணாசை பெரிதென்பார்
அறியார் மண்தான்
மாற்றாருக் காட்பட்டு
மதிப்பி ழக்கும்
பொன்னாசை பெரிதென்பார்
அறியார் பொன்தான்
பொதியாகக் குவியுமெனில்
மதிப்பே யில்லை
என்னாசை மொழியான
தமிழ மிழ்தே
எந்நாளும் எவ்வளவுங்
களிப்பே நல்கும்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி