சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாடும் கோட்டவழிபாடும்
(மதுரை ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் 26,27ஏப்ரல் 1999ல் நடத்திய ஐந்தாவது கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. ஆய்வுச் சிந்தனைகள்- தொகுதி- 1 என்ற கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப் பட்டது.)
முன்னுரை:
சிலப்பதிகாரத்தில் சுட்டப்பெறும் கோயில்கள்,கோட்டங்கள் ஆகியவற்றின் இருப்பிடத்தையும், அங்கு நிகழ்ந்த வழிபாட்டு முறையையும் ஆராய்வது இக்
கட்டுரையின் நோக்கமாகும். எனவே சிலப்பதிகாரம் இக்கட்டுரையின் ஆய்வு
எல்லை ஆகிறது. முதல்நிலைத் தரவுகள் சிலப்பதிகாரத்திலிருந்தும்; இரண்டாம் நிலைத்தரவுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை முதலிய இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.
இருப்பிடங்களும் நடைமுறைகளும்:
கோயில்கள் தலைநகரங்களிலும் பிற ஊர்களிலும் இருந்தன. அங்கெல்லாம் வேத முறைப்படி வேள்விகள் நிகழ்ந்தன. கோட்டங்கள் தலைநகரங்களிலும் பிற ஊர்களிலும் ஈமப்புறங் காட்டிலும் இருந்தன. கோட்டம் குழந்தையின் சடலத்தோடும் கூடச் செல்லக்கூடிய ஒரு வழிபாட்டிடம் ஆகும்.
சோழர் தலைநகரமாகிய புகாரில் பிறவியாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குக் கோயில் இருந்தது. (சிலப்.- இந்திர.- அடி.- 169-175) இந்திரவிழாவின் போது அங்கு வேள்வி நிகழ்ந்தது. சிவன் அதிபதியாக இருக்கும் கைலாயத்தின் பெயரால் ஊர்க் கோட்டமும் இருந்தது. (சிலப்.- கனாத்.- அடி-11) அங்கு மாலதி மாற்றாள் மகவின் சடலத்தோடு சென்று வணங்கினாள்.
முருகன் ஆறுமுகத் தோற்றத்தில் அழகுடன் எழுந்தருளிய கோயிலும் புகார் நகரில் இருந்தது. (சிலப்.- இந்திர.-அடி.- 169-175) அங்கு இந்திர விழாவின் போது வேள்வி நிகழ்ந்தது. முருகனின் ஆயுதமாகிய வேலின் பெயரால் வழிபாடு நிகழ்ந்த வேற்கோட்டமும் இருந்தது. (சிலப்.- கனாத்.- அடி- 11)அங்கு மாலதி பால்விக்கிச் சோர்ந்த பாலகனின் உடலோடு சென்று அதற்கு உயிரை மீட்டுத்தரும்படி வேண்டினாள்.
புறநானூறு தமிழகத்தில் இருந்த ஒரு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது (பா-299). அணங்குடை முருகன் கோட்டத்தில் கலந்தொடா மகளிர் ஒதுங்கி இருந்ததைப் போலக் குதிரைகள் நின்றன என்று பாடியுள்ளார் பொன்முடியார். இதனால் விலக்கான நிலையிலிருந்த பெண்கள் கூட ஒதுங்கி இருக்கக்கூடிய இடமாகக் கோட்டங்கள் நிலவின எனத் தெரிகிறது.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கோயில், கோட்டம் என்ற இருபெயர்களையும் எடுத்தாளவில்லை. ஆனால் வேதநெறி பின்பற்றிய வழிபாட்டிடங்களையும் பிற மரபினைப் பின்பற்றிய வழிபாட்டு இடங்களையும் தனித்தனியாகப் பட்டியலிடுகிறார்.
திருப்பரங்குன்றத்தைத் தலைமைப்படுத்தியுள்ளார். (திருமுருகாற்றுப் படை- அடி.- 66-77) அது கோயிலுமன்று; கோட்டமும் அன்று; நகர் என்னும் வகையினது என்பது பரிபாடல்(18&19) மூலம் தெளிவாகிறது.
அடுத்து அலைவாய், ஆவிநன்குடி, ஏரகம் ஆகிய தலங்களில் வேதநெறி பின்பற்றப்பட்டமையைக் காட்டி விளக்குகிறார். (மேற். -அடி. -78-189) அலைவாயில் எழுந்தருளிய முருகனின் திருமுகங்களில் ஒன்று வேள்வியை நோக்கிக் கொண்டு இருந்தது. ஆவிநன்குடியில் எழுந்தருளிய முருகனை வழிபட நூறு வேள்விகளையும் செய்து முடித்த இந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து சென்றனர் என்கிறார். ஏரகத்தில் எழுந்தருளிய முருகனை வழிபட வேதநெறிப்படி வழிபடும் அந்தணர்கள் வந்தனர் என்கிறார். இவ்வாறு கோயில் என்று சொல்லக்கூடிய மூன்று தலங்களைப் பாடிய பின்னர் முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, வெறியாட்டயர் களங்கள், மன்றங்கள், பொதியில்கள், மலைநிலத்துக் குடியிருப்புகள் என்று நீளமாக அவர் வரிசைப்படுத்தும் வழிபாட்டிடங்கள் கோட்டங்கள் என்று சொல்லத்தக்கனவாய் உள்ளன. (மேற்.- அடி.- 189-226)
மதுரை மாநகரத்தில் சிவபெருமானுக்குக் கோயிலும், முருகனுக்குக் கோட்டமும் இருந்தன. இரு வழிபாட்டு இடங்களிலும் காலை முரசின் ஓசை சங்கொலியுடன் கேட்டது. (சிலப்.- ஊர்காண் காதை- அடி.- 5-14) சிவபெருமானின் கோயிலிலும், மன்னனின் அரண்மனையிலும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதை கேட்டது (சிலப்.- புறஞ்சேரியிறுத்த காதை- அடி.- 137-142)
வஞ்சிமாநகரில் சிவன் கோயிலில் மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை செங்குட்டுவனது மாலையின் நல்லகம் வருந்த அவன் தொழுதான். (சிலப்.- கால்கோட் காதை-அடி.- 55-60) அந்நகரில் திருமால் எழுந்தருளிய ஆடகமாடம் கோயிலா? கோட்டமா? என்று சொல்லக்கூடிய சான்றாதாரம் இல்லை.
புகார் நகரில் இருந்த திருமால் கோயில் நீலமேனி நெடியோன் கோயில் என்று சுட்டப்படுகிறது. (சிலப்.- இந்திர.- அடி.- 169-175) அங்கு இந்திர விழாவின் போது வேள்வி நிகழ்ந்தது. அத்துடன் திருமாலுக்குக் கோட்டமும் இருந்தது. (சிலப்.- நாடுகாண் காதை- அடி- 10) கண்ணகியும் கோவலனும் கங்குல் கனைசுடர் கால்சீயாமுன் தம் இல்லத்து நீள்நெடுவாயில் நெடுங்கடை கழிந்து யாரும் அறியாமல் மணிவண்ணன் கோட்டம் வலம் செய்து சென்றனர்.
இந்திரனுக்குப் புகார் நகரில் கோயில் ஒன்று இருந்தது.(சிலப்.- இந்திர.- அடி.- 169-175) மாலை வெண்குடை மன்னவனாகிய அவன் கோயிலில் இந்திர விழாவின் போது வேள்வி செய்தனர். அவனது ஆயுதத்தின் பெயரால் வச்சிரக் கோட்டமும், அவனது வாகனத்தின் பெயரால் வெள்யானைக் கோட்டமும், அவன் அதிபதியாக இருக்கும் தேவலோகத்திலுள்ள கற்பகதருவின் பெயரால் ஒரு கோட்டமும் அந்நகரில் இருந்தன. மாலதி தன்னிடம் பாலருந்தி விக்கிச் சோர்ந்த பாலகனின் சடலத்தோடு அங்கெல்லாம் சென்று அழுது புலம்பினாள். (சிலப்.- கனாத்.- அடி.- 9-20) இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சை யானைப் பிடர்த்தலையில் ஏற்றி விழா அறைந்தனர். வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்தில்; அதாவது ஐராவதக் கோட்டத்தில் விழாக்கால் நாட்டினர். தருநிலைக் கோட்டத்தில் விழாவிற்குரிய மங்கல நெடுங்கொடியை வானுற எடுத்தனர் என்கிறார் இளங்கோவடிகள். (சிலப்.- இந்திர.- அடி.- 141-146)
மணிமேகலையிலும் இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து முரசினையே அறைந்து சாற்றியதாகச் சாத்தனாரும் பாடியுள்ளார். (விழாவறை காதை- அடி.- 27-72)
பலதேவனுக்குப் புகார் நகரில் கோயிலும் கோட்டமும் இருந்தன. (சிலப்.- இந்திர.- அடி.- 171& ஊர்காண்.- அடி- 7) வால்வளை மேனி வாலியோனாகிய அவன் கோயிலில் இந்திரவிழாவிற்காக வேள்வி நடத்தினர். புகர் வெள்ளை நாகராகிய அவன் கோட்டத்தில் மாலதி குழந்தையின் சடலத்தோடு சென்று தவித்து வணங்கினாள்.
மேற்சுட்டிய கோட்டங்களோடு மாசாத்தன் என்ற புறம்பணையான் கோட்டம், பகல்வாயில் உச்சிக்கிழான் என்ற சூரியன் கோட்டம், பாசண்டச் சாந்தன் கோட்டம், நிலாக்கோட்டம், நிக்கந்தக்கோட்டம், எனப் பல கோட்டங்கள் புகாரில் இருந்தன. (சிலப்.- கனாத்.- அடி.- 9-20) மாலதி இறந்த பிள்ளையின் உடலோடு இங்கெல்லாம் சென்று அரற்றி ஏங்கினாள்.
புகார் நகரத்து நெய்தலங்கானலில் காமவேள் கோட்டம் இருந்தது. அங்கு சென்று சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய துறைகளில் மூழ்கித் தொழ வேண்டும் என தேவந்தி கண்ணகியிடம் கூறுகிறாள். (மேற். -அடி. -58-61)
பட்டினப்பாலை காமவேள் கோட்டத்தையும், நிலாக்கோட்டத்தையும் ஒருங்கு குறிப்பிடுகிறது.
"மதி சேர்ந்த மகவெண்மீன்
உருகெழு திறல் உயர்கோட்டத்து" என்றும்,
"இருகாமத்து இணையேரி" என்றும் பாடியிருப்பது
நோக்கத்தக்கது. (பட்டினப்பாலை- அடி.- 35-39)
சுடுகாட்டுக் கோட்டம் ஈமப்புறங் காட்டில் இருந்தது. இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்று தான் பறித்த பிணத்தைத் தின்றது. (சிலப்.- கனாத்.- அடி.- 15-22)
மணிமேகலை புகார் நகரத்து ஈமப்புறங் காட்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அங்கு சக்கரவாளக்கோட்டம், காடுகிழாள் கோட்டம், இறந்த அரசர்க்கமைந்த கோட்டங்கள் எனக் குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டங்களாகப் பல இருந்தன. (சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை)
புகார் நகரிலிருந்து மதுரை செல்லும் வழியில் எயினர் குடியிருப்பில் ஐயை கோட்டம் இருந்தது. (சிலப்.- வேட்டுவ வரி- அடி.- 4) எயினர் குலக்குமரியைக் கொற்றவையாக அலங்கரித்து வழிபாடு நிகழ்த்தினர். அது மட்டுமின்றிப் பாண்டிய நாட்டில் ஐயை கோயிலும் இருந்தது. வேத மந்திரங்களைச் சிறப்பாக
(தொடரும்)
சக
ஓதிய அந்தணச் சிறுவன் தக்கிணனின் தந்தை வார்த்திகனைப் பாண்டிய மன்னன் குற்றமுள்ளவன் என்று தவறாகக் கருதிச் சிறையிட்டவுடன்;
"மையறு சிறப்பின் ஐயை கோயில்" கதவு மூடிக்
கொண்டது என்றும் சிலப்பதிகாரம் கூறக் காண்கிறோம். (சிலப்.- கட்டுரை காதை- அடி- 107)
கோட்டம் கோயிலாவதும் கோயில் கோட்டமாவதும்:
கோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழ்த்தினால் அது கோயில் என்று அழைக்கப்பட்டது. வேதமரபை மீறும்போது மீண்டும் கோட்டம் என்றே வழங்கினர்.
செங்கோட்டுயர்வரையில் மலைமகளிர் கண்ணகியை வணங்குவதாக இளங்கோவடிகள் காட்டுகிறார். அவர்கள் தொண்டகம் தொட்டு; சிறுபறை தொட்டு; கோடுவாய் வைத்து; கொடுமணி இயக்கி; குறிஞ்சி பாடி; நறும்புகை எடுத்து; பூப்பலி செய்து; காப்புக் கடை நிறுத்தி; விரவுமலர் தூவிப் பரவினர். (சிலப்.- குன்றக்குரவை- அடி.- 11-22) அவர்கள் வழிபாடு செய்த இடத்தை மாடலன் மங்கலமடந்தை கோட்டம் என்று சுட்டுகிறான். (சிலப். -வரந்தரு காதை- அடி.- 58&88) மலைவளம் காணவந்த செங்குட்டுவன் கண்ணகி வரலாற்றை அறிந்து; இமயக் கல்லெடுத்துக்; கங்கையில் நீர்ப்படை செய்து; நூல்நெறி மாக்கள் பாற்பட வகுத்த பத்தினிக் கோட்டத்தில் நடுகல்லாக்கிக்; கடவுள் மங்கலம் செய்தான். (சிலப்.- நடுகற் காதை- அடி- 224) பின்னர் மாடலமறையோன் அறிவுறுத்த நூன்மரபின் படி வேள்விச்சாலை அமைத்துத் தீமுறை செய்தான். வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்தான். அவ்விடத்திற்கு தேவந்தியும், ஐயையும், காவற்பெ ண்டும், வந்து சேர்ந்த பொழுது;
"கோமகள் தன் கோயில்" என்கிறார். (சிலப்.- வாழ்த்துக்
காதை- உரைப் பாட்டுமடை) ஆனால் வேள்வி முடிந்து; கண்ணகி காட்சியளித்து; வாழ்த்தி; வரம்தந்த பின்னர்; வேதமரபினின்று மாறுபட்டுச் செங்குட்டுவன் தேவந்தியை அங்கே தங்கி நித்தல் விழாவணி நிகழ்த்திப் பலிபூசை செய்ய ஏவியபோது;
"பத்தினிக்கோட்டம்" (சிலப்.- வரந்தரு காதை- உரைப்பாட்டு
மடை) என்றே சுட்டுகிறார். இதனால் வேதமரபு பின்பற்றப்படும் போது மட்டும் கோட்டம் கோயில் என்று அழைக்கப்படுவது கண்கூடு.
கோட்டங்கட்குரிய மரபுகள்:
கோட்டங்களில் தெய்வக் கோலத்தை மானிடர்க்குப் புனைந்து வழிபடும் வழக்கமும், வரிப்பாடல்கள் பாடிக் குரவைக்கூத்து ஆடும் வழக்கமும், தெய்வமேறி ஆடும் நடைமுறையும் இருந்தன.
எயினர் குடியிருப்பில் இடம்பெறும் ஐயைகோட்டத்து வழிபாட்டில் சாலினி தெய்வமேறி ஆடுகிறாள். (சிலப்.- வேட்டுவவரி- அடி.- 4-74) கண்ணகியைக் குடமலையாட்டி என்று சுட்டிப் பேசி வருவதுரைக்கிறாள். அவ்வமயம் எயினர் வேட்டுவவரிப் பாடல்கள் பாடி ஆடினர்.
செங்கோட்டுயர்வரையில் மங்கலமடந்தை கோட்டத்தில் மலைநாட்டுப் பெண்கள் குன்றக்குரவை ஆடி முருகனையும், வள்ளியையும், கண்ணகியையும் வழிபட்டனர்.
திருமுருகாற்றுப்படையில் முருகனின் கோட்டங்கள் என்று கருதத்தக்க பட்டியலில் வேலன் தெய்வமேறி ஆடும் வருணனை உள்ளது. (அடி.- 189-215)
குரவையர் துணங்கையர் அணங்கெழுந்தாடும் வழக்கத்தை எண்ணிறந்த சங்க இலக்கியங்களில் காண இயல்கிறது. (மதுரைக்காஞ்சி- அடி.- 610-615& கலித்தொகை- பா- 39) அங்கெல்லாம் வேதமரபினின்று மாறுபட்ட வழிபாட்டு முறையே நடைபெறுவதாகக் காட்டப்படுவது நோக்கத்தக்கது.
முடிவுரை:
இதுகாறும் கண்டவற்றான் பண்டைத் தமிழகத்தில் கோயில் வழிபாடு வேதமரபைப் பின்பற்றி அமைந்தது என்றும்; கோட்ட வழிபாடு பிற வழிபாட்டு நடைமுறைகளைக் கொண்டிருந்தது என்றும் புலப்படுகிறது.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
இந்திர. - இந்திரவிழவு ஊரெடுத்த காதை
கனாத். - கனாத்திறமுரைத்த காதை (முற்றும்) சக