தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும்

998 views
Skip to first unread message

இரவா

unread,
Jan 18, 2008, 4:24:45 AM1/18/08
to தமிழாயம், minT...@googlegroups.com

தமிழ் மருத்துவமும் தமிழ் மருத்துவ சுவடிகளும்

 

                                                                                    -            முனைவர் இர.வா சுதேவன், M.A.,M.Phil.,Ph.D.

                                                                                                                                                            செயலாளர்

                                                                                                                                                           தமிழ் மன்றம்

                                                                                                                                     இந்திய ரிசர்வ் வங்கி , சென்னை  600001.

 

            தமிழர் பண்பாடு அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கு வகை ஒழுக்கங்களைக் கொண்டது. ஒழுக்கங்களுக்கு முதலாக இருப்பது , இன்பமாகும். மனித வாழ்வு இன்பமுடனிருக்க வேண்டும். உடல் நலமும் உள நலமும் செம்மையாகப் பேணப் பட வேண்டும் என்பதைக் கருத்திற்  கொண்டு உருவானது , தமிழ் மருத்துவம். தமிழ் மருத்துவத்தின் களமாக விளங்குபவை தமிழ் இலக்கியமும் , சித்தர் இலக்கியமுமாகும்.

 

            தமிழ் மருத்துவம் தொன்மை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளவை சிந்துவெளி முத்திரைகள் , தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஐம்பெருங் காப்பியம், திருக்குறள் பொன்றவையாகும். அவற்றில், மருத்துவக் குறிப்புகளும், நோய் பற்றிய செய்திகளும், மருத்துவம் பற்றிய குறிப்புகளும், மூலிகைகளும் கிடைக்கின்றன. குறிஞ்சிப் பாடலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ள மூலிகைப் பட்டியலே தமிழ் மருத்துவப் புலமைக்குச் சன்றாக அமைகின்றது.

 

            தாவரமாகிய எள்ளுக்கு தோன்றும் 'மகுளி ' நோய் , யானைக்குத் தோன்றும் 'வயா ' நோய் , மரணத்தை வெல்லும் மருந்துகள் , அறுவை மருத்துவம் , குழந்தை மருத்துவம் , நோயாளிக்குப் படுக்கை அறை , நோய் அண்டாதிருக்க சுகாதாரப் பாதுகாப்பு , மருந்துப் பொருள் பாதுகாப்பு , மருத்துவ உறுப்புகள் போன்றவை கூறப்பட்டுள்ளன.

 

            மதுரை எரிவதற்குக் காரணமாக இருந்தது யார் ? என்றால் , பாண்டியனோ பொற்கொல்லனோ இல்லை! மதுரை எரிந்ததற்குக் காரணமாக இருந்தது , தமிழ் மருத்துவம்! என்பேன். வியப்பாக இருக்கிறதல்லவா! ஆமாம்! பத்து விரை , முப்பத்திரண்டு ஓமாலிகைகளைக் கொண்ட மருத்துவ நீரில் நீராடியதால் , மாதவி பேரழகு உடையவளாகத் திகழ்ந்தாள்! அவளைக் கண்ட கோவலன் தனது மனத்தை இழந்து   மாதவி பின் சென்றான். பொருள் இழந்தான். கோவலன் மதுரைக்குச் சென்றான்.

 

            சங்க காலத்தில் தோன்றிய மருத்துவத் தனி நூல் எதுவும் கிடைக்க வில்லை.என்றாலும் , சங்க காலப் புலவரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை என்னும் மருத்துவ நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. சங்க காலத்தில் மருத்துவ நூல்கள் தோன்றின என்பதற்குச் சான்றாகிறது. 

 

சங்க காலத்தில் ' கலைக்கோட்டுத் தண்டார்' என்னும் முனிவர் இருந்திருக்கிறார். அவர், ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூலை இயற்றியிருக்கின்றார். அந்த சுவடி, ஜெர்மனி நாட்டிற்குச் சென்றிடுக்கிறது. அதன்பின்னால், ஜெர்மனி மருத்துவத் துறையில் முன்னிலைப் பெற்றுள்ளது! என்று, ஜெர்மனி நாட்டுத் தமிழரிஞர் கருத்து தெரிவிக்கிறார். ஆனால், அம்முனிவர் எழுதிய நூலின் ஒரு பகுதி கூட நமக்குக் கிடைக்கவில்லை.

 

            கலைக்கோட்டு முனிவர் நூலைப் பார்த்து , பல நூல்கள் இயற்றினேன்! என்கிறார். போகர்.

 

            அதைப்போல , நாடு கடந்து சென்ற சுவடிகள் , 87 நாடுகளின் நூலகங்களில் இருக்கின்றன.

 

சிலப்பதிகாரத்தில் அரைப்பு முறையால் செய்யும் மருந்துகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவை ,

 

            சந்தான கரணி          -           முரிந்த உறுப்புகளை ஒட்டுவது.

            சல்லிய கரணி           -           வேல் தைத்த புண்ணை ஆற்றுவது.

            சமனிய கரணி           -           புண்ணின் தழும்பை மாற்றுவது.

            மிருத சஞ்சீவினி       -           இறந்த உடலை உயிர்ப்பிக்கச் செய்வது.

 

ஆனால் , இம்மருந்துகளைப் பற்றிய குறிப்புகள், எந்த மருத்துவ நூலிலும் காணவில்லை.

 

            தமிழ் மருத்துவ மரபைத் தோற்றுவித்தவர் திருமூலர். திருமூலர் இயற்றிய ' எண்ணாயிரம்' என்னும் நூல் கிடைத்தில. வடலூர் வள்ளலார், அந்நூல்லின் அருமை பெருமையை வியந்து போற்றுகிறார். எந்த நூலும் எண்ணாயிரத்துக்கு ஈடில்லை! என்கிறார். தருமையாபுர ஆதினத்தின் சுவடி நூலகத்தில் "எண்ணாயிரம் " நூல் இருந்ததைக் கண்டதாகவும் , சில காலங்களுக்குப் பின்னர் அந்நூலைத் தேடிச் சென்ற போது , ஆங்கே அந்நூல் இல்லை! என்றும் , தமிழ்த் தாத்தா உ.வே.சா குறிப்பெழுதியுள்ளார்.

 

            எண்ணாயிரம் என்னும் நூல் ஒன்றே தமிழ் மருத்துவத்துக்கு மூல நூலாக இருந்திருக்க வேண்டும். அதன் சிறப்பினாலேயே அது காணாமற் போயிருக்க வேண்டும்.

 

            முல்லை நிலத்துச் சித்தராகிய இடைக்காடர் , அரியவகை மருந்துகளைக் கூறியுள்ளார். அச்செய்தி , உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள மேற்கோள் களிலிருந்து கிடைக்கிறது. ஆனால் , இடைக்காடர் இயற்றிய தனிநூல் ஒன்றையும் காணோம்.

 

            அதேபோல் , அகத்தியர் - 81000, அகத்தியர் - 51000, அகத்தியர் - 30000, அகத்தியர் - 21000, அகத்தியர் - 18000, அகத்தியர் - 8000, பரஞ்சோதி - 8000, கோரக்கர் வெண்பா , மச்சமுனி கலிப்பா , சங்கர மாமுனி கிரந்தம் , மாபுராணம் போன்ற நூல்கள் தமிழ் மருத்துவத்துக்கு ஆதாரமாக இருந்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சில பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

 

ஆனால் , பழனியிலுள்ள ஒரு மருத்துவ நூலாசிரியர், அகத்தியர் எண்ணாயிரத்தில் அனைத்து இரகசியங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும், 3 ஆவது காண்டம், முதல் பிரிவு 272 முதல் 276 வரை என்று குறிப்புரை தந்துவிட்டு, மேலும் அந்நூலை அச்சிட அந்நூலை வைத்திருப்பவர் கொடுக்க மறுத்துவிட்டார் என்கிறார். இந்த நூலே திருமூலர் எண்ணாயிரமாகவும் இருக்கலாம்.

 

            ஆங்கில மருத்துவம் அறிமுகமாகாத காலத்துக்கும் முன் , தமிழ் மருத்துவம் கண்டறிந்த முறைகள் , இன்னும் அறிய முடியாதவைகளாக இருக்கின்றன.

 

            நரை திரை மூப்பு ;  ஆஸ்துமா ;  காசம் ;  எய்ட்ஸ் ;  சோரியாஜீஸ் ; புற்று ; மூட்டுவாதம் ; பக்கவாதம் ; இதயநோய் ; சர்க்கரை நோய் ; கிட்னிக் கோளாறு ; முதிர்வு நோய்கள் போன்றவற்றுக்கும் மருந்துகள் காணப்படுகின்றன.

 

            தமிழ் மருத்துவத்தின் சிறப்பாக அமைந்திருப்பவை இரண்டு. இன்று நோய் தடுப்பு. மற்றொன்று நோய் எதிர்ப்பு. மேலை மருத்துவ முறைகளில் காணப்படும் மருத்துவ முறைகளைப் போலத் தமிழ் மருத்துவத்திலும் மருத்துவ வகைகள் காணப்படுகின்றன. அவை ,

 

     1. அறுவை மருத்துவம்

     2. இசை மருத்துவம்

     3. ஒட்டு மருத்துவம்

     4. குழந்தை மருத்துவம்

     5. நெஞ்சக நோய் மருத்துவம்

     6. வர்ம மருத்துவம்

     7. பன்முக மருத்துவம்

     8. கற்ப மருத்துவம்

     9. மகளிர் மருத்துவம்

     10. உணவு மருத்துவம்

     11. நோயில்லா நெறி

     12. நம்பக மருத்துவம்

     13. மூலிகை மருத்துவம்

     14. கண் மருத்துவம்

     15. நரம்பு மருத்துவம்

     16. எலும்பு மருத்துவம்

     17. மூளை மருத்துவம்

     18. தோல் மருத்துவம்

     19. மதன மருத்துவம்

 

 

என்பவை குறிப்பிடத் தக்கவை.

 

            பன்னூறு ஆண்டுகளாகப் போற்றப் பட்டு வந்துள்ள தமிழ் மருத்துவத்தை முழுவதுமாகக் கண்டறிய வேண்டுமானல் , கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மங்கோலியா, திபெத், உருஷ்யா, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் காணப்படுகின்ற மருத்துவ நூல்களை ஆராய வேண்டியிருக்கின்றன.

 

            கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் ஒரு இலட்சம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. அவ்வாறே மங்கோலியம் , திபெத்தியம், அரபி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளுக்கும் சென்றுள்ளன. அவை, தமிழ் நூல்களாகவே வழங்கி வருகின்றன என்பது வருத்தத்துக்கு உரியது.

 

            தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய வர்ம மருத்துவத்தின் மறு வடிவமாகியிருக்கிறது , சீன மருத்துவம்.

 

            வடக்கிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகம் , ஆயுர்வேத பல்கலைக் கழகம் , சமஸ்கிருத கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள நூல்களில் செம்பாதி தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நூல்களை மொழிமாற்றம் செய்தவர்கள் , தமிழ் மொழிப் புலமை யில்லாமல் செய்த பிழைகளை தேரையர் என்னும் சித்தர் கேலி செய்திருக்கிறார். இதிலிருந்து, மொழித்திருட்டு வெளிப்பட்டிருக்கிறது.

 

            இலங்கை இராவனேஸ்வரன் நூலகத்திலிருந்து திருடி வரப்பெற்ற நூலைப் பார்த்து , மருத்துவ நூல் இயற்றப்பெற்றதாக, இரச சாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூல் குறிப்பிடுகிறது.

 

            தமிழ் மருத்துவ நூல்கள் , செய்யுள் வடிவாக இருந்தாலும் அவை தமிழ் இலக்கிய வடிவங்களாகவே இருப்பது போற்றுதற்குரியது.

 

            உதாரணமாக , வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , நொண்டி , சிந்து , கும்மி , பள்ளு , காவியம் , காப்பியம் , சிந்தாமணி , சூடாமணி , கல்லாடம் , திருமந்திரம் , சதகம் , கரிசல் , பிள்ளைத் தமிழ் , உலா , பாரதம் , நிகண்டு , திருப்புகழ் , கோவை , தண்டகம் , வாகடம் , சூத்திரம் , திறவுகோல் , சுரிதகம் என்று பலவடிவங்களைக் குறிப்பிடலாம்.

 

            தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றுள் , கீழ்க்கண்ட நிறுவனங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் திரட்டிவைத்துள்ளன.

 

            தமிழ்ப் பல்கலைக் கழகம்                            -           5000

            சரசுவதி மஹால் நூலகம்                             -           396

            உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்                -           270

            சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு              -           478

            உஸ்மான் கமிட்டி                                        -           594

            உ.வே சாமிநாதர் நூலகம்                           -              15

            விருத்தாசலம் , வீர சைவ மடம்                   -              15

            பாண்டிச் சேரி , பிரஞ்சு- இந்திய கலைக்கூடம்       80

            மதுரை , தமிழ்ச் சங்கம்                                  -             24

            திருவனந்தபுரம் கீழ்த்திசை சுவடி நூலகம்  -           165

            சென்னை , கீழ்த்திசை சுவடி நூலகம்          -            579

 

இவையல்லாமல் , தமிழகத்திலுள்ள சைவ வைணவ மடாலயங்கள், கோயில்கள், மருத்துவ மனைகள், பரம்பரை மருத்துவர்களிடம் நூற்றுக் கணக்கான சுவடிகள் இருக்கின்றன.

 

இத்தனைச் சுவடிகள் இருந்த போதிலும் , தமிழ் மருத்துவம் நிறைவு பெற்ற மருத்துவ முறைகளைக் கொண்டதாகக் கூற முடியவில்லை. காரணம்,

 

உ.வே .சா போன்ற தமிழ்ச் சான்றோர்கள் தமிழ் நூல்களைத் திரட்டியது போல, மருத்துவ நூல்களைத் திரட்ட முன் வந்தது போல, மத்திய கலாச்சாரத் துறையும் தமிழ் நாடு அரசும் கேட்டுக் கொண்டதற்கிணங்க பேராசிரியர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு, தமிழகத்தின் இல்லங்கள் தோறும் சென்று சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டனர். அவர்கள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சுவடிகள் பற்றிய கணக்கெடுப்பு நிகழ்த்திய போதில், ஜோதிடர்கள், புதிரை வண்ணார், குறி சொல்லும் குறவர், வில்லிசை கலைஞர், கணியான், பண்ணையார், கோவில்கள், பழைய பொருள்களை வாங்கி விற்பவர், புலவர்கள் போன்றவர்களிடம் அரிய சுவடிகள் இருப்பதை அறிந்துள்ளார்கள். அவர்கள், சுமார் ஒன்பது இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கணக்கெடுத்துள்ளார்கள். குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் இரண்டு இலட்சம் ஓலைச் சுவடிகளும், சங்கரம் கோவில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்பதாயிரம் சுவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அச்சுவடிகளில் தமிழ் மருத்துவத்தைத் தலை நிமிரச் செய்யும் அரிய  முறைகளைக் கொண்ட நூல்கள் இருக்கக் கூடும்.

 

ஆனால் , அவற்றைக் கையகப்படுத்த எந்த முயற்சியும் அரசோ பிற நிறுவனங்களோ மேற்கொள்ளாதிருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.

 

            இன்றைய நிலையில் தமிழ் மருத்துவ முறைகள் ஓலைகளிலும் நூல்களிலும் மறைந்து கிடக்கின்றன. ஒரு சில முறைகள் மரபு வழி மருத்துவர்களின் பாதுகாப்பில் முடங்கிக் கிடக்கின்றன.

 

தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் இயக்கத்தைத் தோற்றுவித்துள்ளோம். பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வங்களைத் தேடிச் சேமிப்பதே இதன் பணியாகும். இதன் கிளைகள் தமிழ்ச் சென்னை , இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருக்கின்றன.

 

            இந்த இயக்கம்  திரட்டும் சுவடிகள் இலக்கப் பதிவாக மாற்றப்பட்டு மின் காந்த இலத்திரன் வடிவில் சேமிக்கப் படுகின்றன. பின்னர் இணைய தளங்களிலும் , இந்திய அரசு மின் - நூலகத்திலும் வெளியிடப்படுகின்றன.

 

            ஜெர்மனி நூலகத்திலுள்ள தமிழ் நூல்களும் சுவடிகளும் திரட்டும் பணி நிறைவடையும் நிலையிலிருக்கிறது. அவை , வெளியிடப் படும் போது வியப்பை ஏற்படுத்தும்.

 

            எனது முயற்சியால் , சென்னைக்கிளை அலுவலகம் , சுமார் பத்தாயிரம் சுவடிப் பக்கங்களை இலக்கப் பதிவாகப் பதிவு செய்திருக்கின்றன. சுவடிகளை வழங்கிய நல்லோர்கள் வரிசையில் மருத்துவர். பேராசிரியர் புது.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களும் இருக்கின்றார்கள்.

 

            தமிழ் மருத்துவப் பாதுகாப்பிற்காக எடுக்கும் முயற்சி முறையாக இருக்க வேண்டுமானால் , தமிழ் மருத்துவச் சுவடிகளும், பழைய நூல்களும் இலக்கப் பதிவாக மாற்றி, மின்காந்த இலத்திரன் முறைக்கு மாற்றியாக வேண்டும்.

           

 

தமிழ் மருத்துவம் சிறப்படைய வேண்டுமானால் , கீழ்க்கண்ட செயல்கள் நடைபெற வேண்டும்.

 

            1) கி.பி 1927 க்கு முன் சித்த மருத்துவம் என்னும் பெயர் வழங்கப்படவில்லை. மருத்துவம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே , சித்த மருத்துவம் என்னும் பெயரை ' தமிழ் மருத்துவம்' என்று, வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

 

            2) தமிழ் மருத்துவத்தில் மூல மருந்தாகப் பயன் படுத்தப்பட்ட கற்பம் , சரக்குகள் , பாடாணங்கள் ,  மூலிகைகள் ஆகியவற்றில் பல அடையாளம் காணப் படவில்லை.

 

            3) மூலிகைகளைப் பாதுகாக்கும் பணியில் தமிழகத்து கோயில்களும் ஈடுபட்டிருக்கின்றன. கோயில்களில் , ஸ்தல விருட்சம் என்று கூறப்படுகின்ற கோயில் தாவரங்கள், அரியவகை மூலிகை இனமாகும். அவை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முதிர்ந்த நிலையில் உள்ளன. அவை, பிற தாவர இனங்களின் பண்பிலிருந்து மாறுபட்டவை. (அவ்வாறு உள்ள 124 தாவரங்களை எனது ஆய்வேட்டில் பட்டியலிட்டுள்ளேன்) அவற்றை ஆராய்வது தமிழ் மருத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்.

 

            4) மூன்றே பொருளால் ஆனது பிண்டம் என்பதற்குச் சான்றாக , மூன்று பொருள்களால் ஒரு உயிரையே உருவாக்கும் முறையைக் "கும்ப முறை ' என்று , கூறப்பட்டுள்ளது. அந்த முறையை ஆராய வேண்டும்.

 

            5) மூன்றே பொருளால் ஆனது அண்டம் , பிண்டம் , சீவன் , வாதம் , நோய் , மருந்து என்பதன் உட்பொருளைக் கண்டறிய வேண்டும். முப்பு , குரு மருந்து ஆகியவற்றை ஆராய வேண்டும்..

 

            6) சுவடி வடிவத்திலிருந்து நூல்வடிவம் பெற்ற நூல்களில் , பல , செய்யுள் வடிவிலேயே இருப்பதனால் , அவை , பொருள் விளங்காமல் இருக்கின்றன். அதனால் , அவை , பிழையான நூல்கள் எனக்  கருதப் படுகின்றன.

 

            7) ஒரே நூல் வெவ்வேறு பெயரில் வெளியாகியுள்ளது.   ஒரு நூலின் பகுதிகள் வேறு ஒரு நூலின் பகுதியாக அமைந்துள்ளது. இச்செயல்கள், தமிழ் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

 

            8) இந்தியாவில் ஆயுர்வேதக்கல்வியைக் கற்பிக்க மூன்று பல்கலைக் கழகங்களும்     பல கல்லூரிகளும் மொத்தம் 196  துறைகளும் இருக்கின்றன. அயல் நாடுகளிலும் 6 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பது வியப்பளிக்கிறது.

 

ஆனால்,
 

சித்த மருத்துவத்தைக் கற்பிக்கும் கல்லூரிகளாக இருப்பவை மொத்தம் - 12.  அவற்றில் தனியார் கல்லூரிகள் 10, அரசுக் கல்லூரிகள் 2 மட்டுந்தானா?

 

இந்திய மொழிகளில் தொன்மையான மொழி தமிழ். தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப் படுவதற்கு முன் , தமிழுக்குப் பின் மொழியான சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையான மொழி என்று கூறி செம்மொழியென அறிவிக்கப் படுகிறது. பல்முனை நெருக்கத்திற்குப் பின் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் படுகிறது. அதுவும் எவ்வாறு ?  1500 ஆண்டுகள் பழமையான மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதைவிடவும் ஒரு சிறப்பு என்னவென்றால் , 500 ஆண்டுகளே ஆன இந்தி மொழி ஆட்சி மொழியாக அறிவித்திருப்பதாகும். தந்தை மாணவன்! மகன் ஆசிரியன்! அப்பனுக்குப் பாடஞ் சொன்ன சுப்பையன் கதை போலத் தமிழ் , மூன்றாம் இடத்து மொழியாகப் பாவிக்கப் படுகிறது. மூன்றே பொருளால் ஆனது அண்டம் என்பது போல , மூன்றே மொழியால் ஆனது அரசியல்.

 

            9) இந்தியாவிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் திரட்டிய மருத்துவ நூல்கள் அனைத்தையும் ஆராய வேண்டும். ஆங்குள்ள தமிழ் மருத்துவ நூல்களை அடையாளம் காண வேண்டும்.

 

          10)   அண்ணா சித்த  மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள ஆயுர் வேதம் - தமிழ் மொழி பெயர்ப்பு நூலை ஆராய வேண்டும். அதன் மூலம் , தமிழ் மருத்துவ நூல்கள் ஆயுர்வேதமாக மாற்றப்பட்டுள்ள உண்மை வெளிவரும்.

 

          11) தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தமிழ் மருத்துவ நூல்களைத் திரட்டும் பணிக்குழு நியமிக்க வேண்டும். பதிப்பிலுள்ள நூல்களைத் தொகுக்க வேண்டும்.

 

          12) வட மொழிக்கும் / ஆயுர் வேதத்துக்கும் இருப்பதைப் போல, தமிழ் மருத்துவத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் நிறுவ வேண்டும்.

 

           13) தமிழ் மருத்துவ மாநாடுகள், கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். புதிய புதிய மருத்துவ முறைகளைக் கண்டறிய பரம்பரை மருத்துவர், குடும்ப முறை மருத்துவர் (பாட்டி வைத்தியம்) ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும்.

 

           14) தமிழ் மருத்துவத்தில் மாட்டு வைத்தியம் சிறப்படைய வில்லை. ஆனால், சிறந்த மாட்டு மருத்துவர்கள் தமிழகத்தில்  இருக்கின்றார்கள். அவர்களைக் கண்டறிந்து மருத்துவ முறைகளைத் திரட்ட வேண்டும். சரசுவது மஹாலில் நூற்றுக் கணக்கில் மாட்டுவாகட நூல்கள் இருக்கின்றன. ஆனால் , அவை பதிப்பிக்கப் படவில்லை. அவற்றை பதிப்பில் வெளியிட முயற்சி செய்ய வேண்டும்.

 

          15) மலைவாழ் இன மக்களிடம் அரிய மருத்துவ முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவர்களிடமிருந்து அம்முறைகளைக்  கற்று நூலாக வெளிக்கொணர வேண்டும்.

 

            16) ஆயிரக்கணக்கில் மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன. என்றாலும் அவை பதிப்பிக்கப் படாமல் சுவடியாகவே இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிக்க குழு அமைக்க வேண்டும்.

 

             17) நிலம் கடந்து / நாடு கடந்து சென்ற சுவடிகளைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க முயல வேண்டும்.

 

            18) படைப்பாளர்கள் தங்கள் முயற்சியினால் படைக்கப் படுகின்ற நூல்கள், 50 ஆண்டுகள் நிறைவடைந்தால் அந்நூல்கள் பொதுச் சொத்தாகி விடுகின்றன. அதைப் போல, தனியாரிடம் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் அரசுச் சொத்து என அறிவிக்க வேண்டும். தங்களிடமிருக்கும் சுவடிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காமல் இருப்பதும் , அழிப்பதும் , மறைப்பதும் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

 

             19) சிறந்ததும் அரியதுமாகிய மருத்துவச் சுவடிகளையோ, மருத்துவ முறைகளையோ அளிப்போர்களுக்கு  ஏற்ற சன்மானம் அளிக்க வேண்டும். அம்மருந்துகுரிய உரிமையையும் அவர்களுக்கே அளிக்கலாம். அதனால் , பல முறைகள் தமிழ் மருத்துவத்துக்குத் தெரியவரும்.

 

          20) பிற துறைகளில் சிறந்தவர்களைச் சிறப்பு செய்வது போலத், தமிழ் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டு தோறும் விருது அளித்து சிறப்பு செய்ய வேண்டும்.

 

             21) தமிழ் மருத்துவம் பயிலும் மருத்துவர்களுக்குச் சுவடிகளைப் படிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.

 

            22) தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் மருத்துவ இலக்கியத் துறை நிறுவ வேண்டும். அவை, மருத்துவச் சுவடிகளை ஆராய்தல், மருந்துப் பொருள்களை ஆராய்தல், நூல்களைப் பதிப்பித்தல் போன்ற பணிகளைச் செய்ய  வேண்டும்.

 

          23) தமிழர் தம் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் சுவடிகளைத் திரட்ட குழு அமைக்க வேண்டும். அறிவிப்புகள் வெளியிட வேண்டும். கிராம சுகாதார அதிகாரிகள் , கிராம வருவாய்த்துறை அதிகாரிகள் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரைப் பயன் படுத்தி , சுவடிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும். திரட்டும் சுவடிகள் ஆவணப் படுத்தி, படித்து, குற்றங்குறை நீக்கி, பதிப்பித்து நூல்வடிவாக வெளியிட  வேண்டும்.

 

          24) மருத்துவ நூல்களில் காணப்படும் மருத்துகளை ஆய்வு ஆய்வரிக்கை வெளியிட வேண்டும்.

 

         25) இந்திய மருத்துவக் கல்விச் சாலைகள் ஆங்கில மருத்துவத்துடம் இந்திய மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிக்க வேண்டும். இதற்கு வேண்டிய முன் நடவடிக்கைகளுக்கு  ஏற்ற "மருத்துவக் கொள்கை "யை உருவாக்க வேண்டும்.

 

மேற்கண்ட பணிகளை ஆற்றுகின்ற முனைப்பும் திறமும் நம்மிடம் இருக்கின்றன. வேண்டிய நிதி ஆதாரமும் ஊக்கமும் அளிக்க மத்திய மாநில அரசுகளும் மருத்துவத் துறையும் முன் வர வேண்டும். பொருப்பிலிருப்பவர்கள் உரிய பணிகளைச் செய்ய முன்வருவார்கள் என நம்புகின்றோம்.

 

அழிந்து வரும் மரபு அழியாமலிருக்க விழித்தெழுவோமாக!

 

வாழ்க தமிழ் மருத்துவம்.

 

வணக்கம்

*

 

 

தொடர்புக்கு:  3, A5/6, ' அருணா' 10 ஆவது குறுக்குத் தெரு, பெசண்ட் நகர், சென்னை 600090.

 



--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:   www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

இரவா

unread,
Jan 18, 2008, 4:28:06 AM1/18/08
to தமிழாயம், minT...@googlegroups.com
  இருக்கும் வரை தமிழ் அணையில்

இரவா

unread,
Jan 18, 2008, 4:31:32 AM1/18/08
to தமிழாயம், minT...@googlegroups.com

இக்கட்டுரை மைய சித்தா ஆயுர்வேத மருத்துவ ஆய்வகத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் எனது சிறப்புரையின் சுருக்கம்
--
Reply all
Reply to author
Forward
0 new messages