ஆதி திராவிடர் வரலாற்றுச் சுருக்கம் கீழே
ஜில்ஜில் ரமாமணி
==========================================================================================================================
| ஆதிதிராவிடன்: 'கற்பனை'யாக்கப்பட்ட இதழ் (உண்மெய்யும் திரிபும்) |
| ஸ்டாலின் ராஜாங்கம் |
அயோத்திதாசரின் தமிழன் இதழை அவரது மறைவிற்குப் பின் அவருடைய மகன் க.அ. பட்டாபிராமன் 05.05.1914 முதல் 18.08.1915 வரை நடத்தினார்.
பின்னர் ஜீ. அப்பாத்துரையாரும் பி.எம். ராஜரத்தினமும் சேர்ந்து கோலார் தங்கவயலிலிருந்து 09.07.1926 முதல் 27.06.1934 வரை மீண்டும் தமிழன் இதழைக் கொணர்ந்தனர்.
அயோத்திதாசர் காலத் தமிழன் இதழுக்கும் பிந்தையோர் நடத்திய தமிழன் இதழுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கான சமூக அரசியல் பின்புலங்கள் தனியே ஆராயத்தக்கன. மேற்கண்ட இதழ்களில் தமிழன் தவிர வேறெந்த இதழும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது மாபெரும் இழப்பாகும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடத்தப்பட்ட இதழ்களின் கதியும் அதுதான். அத்தகைய இழப்பு இப்போது அரசியல்ரீதியான இழப்பாகவும் மாறி நிற்கிறது. இதனால் தலித் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த கடந்தகாலப் போராட்டங்கள், வெற்றிகள், இழப்புகள், ஏமாற்றங்கள் என யாவும் மங்கலாகவே தெரிகின்றன. எனினும் தலித்துகளின் நீண்ட கால அரசியல் தொடர்ச்சியினைக் கண்டெடுக்கக் கடந்த காலத்தின் மீதான வரலாற்றுரீதியான பயணமும் தேவைப்படுகின்றது.
நாமக்கல் பகுதியிலிருந்து வெளியான சமத்துவம் (1945),
வேலூர் பகுதியிலிருந்து நடத்தப்பட்ட பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமியின் சமத்துவச் சங்கு,
1942இல் ஆம்பூர் ஈ.சுப்பிரமணியத்தால் மாதம் இரு முறையாகத் தொடங்கப்பட்ட தென்னாடு,
1941 முதல் வார இதழாகவும் 1946 முதல் மாதமிருமுறை இதழாகவும் வெளியான ஜே.ஜே. தாஸ், மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திய உதயசூரியன்,
1930களில் க.அ. பட்டாபிராமதாஸால் நடத்தப்பட்ட ஆங்கில-தமிழ் மாத இதழான தர்மதொனி போன்ற இதழ்கள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியாயின.
அதற்கும் சற்றே பின்னால் நடத்தப்பட்ட அன்பு பொன்னோவியத்தின் அறவுரை, மக்கள் அறம், டி. குப்புசாமியின் பௌர்ணமி, சென்னை நீலக்கொடி, வீராசாமியின் தொண்டு, ரத்தினம் நடத்திய எரிமலை, ரத்தினமும் எக்ஸ்ரே மாணிக்கமும் இணைந்து நடத்திய சிவில் உரிமை, டாக்டர் அ. சேப்பன், சக்திதாசன் ஆகியோர் இணைந்து நடத்திய உணர்வு, மேலும் அம்பேத்கரிஸ்டு, அறிவுவழி ஆகிய இதழ்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய நெடிய மரபில் இருபதாம் நூற்றாண்டின் கால்பகுதியிலேயே வெளியான இதழ்களிலொன்றுதான் ஆதிதிராவிடன் என்னும் இதழ். சமூகத்தளத்திலும் அரசியல்தளத்திலும் திராவிடம், திராவிடர் என்னும் சொல்லைக் கையாண்டு முதலில் அமைப்புகளையும் கருத்தியலையும் உருவாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே ஆவர்.
திராவிடம் என்பதை மொழி, இனம் என்னும் தளத்தைக் கடந்து சாதிபேதமற்ற சமூகம் என்னும் நிலையில் பொருள்படுத்தியவர்கள் இவர்களே. எனினும், எண்ணிக்கை பலங்கொண்ட பெரும்பான்மை இந்து சாதியினர் அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்ட வேளையில், சிறுபான்மை தலித் சாதி அறிவாளிகளும் அரசியல் செயல்பாட்டாளர்களும் ஆதிதிராவிடர்கள் என்னும் கூடுதலான அரசியல் அடையாளமுள்ள பெயரின் மூலம் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர். அயோத்திதாசர் காலத்திலும் அதிகம் புழக்கமில்லாத இச்சொல் அவர் மறைந்த காலத்திற்குப் பின்பே அழுத்தம் பெற்று மேலெழுந்தது. 1910களின் மத்தியில் பிராமணரல்லாதார் இயக்கம் உருபெற்றதன் பின்னணியில் இச்சொல்லிற்கான தேவை கூடுதலாகியது. 1920களில் தமிழக தலித் அரசியலில் கோலோச்சிய எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற செயற்பாட்டாளர்களின் காலத்தில் இச்சொல் நிலைபெற்றது. இப்பெயரில் அமைப்புகளையும் இதழ்களையும் அரசியல் விண்ணப்பங்களையும் இம்மக்கள் வெளிப்படுத்தினர்.
கோபால் செட்டியாரின் ஆதிதிராவிடர் வரலாறு (1920), திரிசிரபுரம் ஆ. பெருமாள்பிள்ளையின் ஆதிதிராவிடர் வரலாறு (1922) போன்ற வரலாற்று நூல்கள் வெளியானது இக்காலத்தில்தாம். ஆ. பெருமாள்பிள்ளை ஆதிதிராவிடர் வரலாறு எழுதக் காரணமாக இருந்த எம்.சி. ராஜா சென்னை மாகாணச் சட்டப் பேரவையில் 1922இல் ஆதிதிராவிடர் என்னும் சொல்லினை அரசுப் பதிவாக்கக் கோரிக் கொணர்ந்த தீர்மானம் ஏற்கப்பட்டது. ஆதிதிராவிடர் என்னும் சொல்லைத் தலித் சாதிகள் பலவற்றையும் குறிப்பதாக இத்தலைவர்கள் மாற்றவும் செய்தனர். 1938ஆம் ஆண்டு ஆலயப் பிரவேசம் என்னும் சிறுபிரசுரத்தை வெளியிட்ட இரட்டைமலை சீனிவாசன் அந்நூலில் செடூல் காஸ்ட்கள் என்னும் 86 வகுப்புகளையும் சேர்த்தே ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் குறிக்கிறார்.
ஆதிதிராவிடர் என்னும் அடையாளம் அரசியல் தளத்தில் முக்கியத்துவமடைந்த சமகாலத்தில்தான் ஆதிதிராவிடன் என்னும் மாத இதழ் இலங்கையிலிருந்து வெளியானது. 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென் இந்திய ஐக்கியச் சங்கத்தின் சார்பில் இவ்விதழ் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எஸ்.பி. கோபால்சாமி என்பவர் இதன் ஆசிரியராவார். இச்சங்கம் 1922இல் இந்தியன் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களின் ஊழியன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இரண்டாண்டுகளுக்கும் மேலாக இவ்விதழ் வெளியானதாகத் தெரிகிறது. இரண்டாண்டு முடிவில் முதலாண்டு இதழ்கள் ஒரு தொகுதியாகவும் இரண்டாமாண்டு இதழ்கள் மற்றொரு தொகுதியாகவும் தொகுத்து வெளியிடப்பட்டன.
ஆதிதிராவிடர்களின் கல்வி, ஒழுக்கம், கலாச்சாரம், லௌகீக விசயம், ராஜ விசுவாசம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு தொடங்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், ஆதிதிராவிடர்களுக்கான கல்வியையே முதன்மை நோக்கமாய்க்கொண்டு இயங்கியது. கேசவ பிள்ளை, சிதம்பரம் நந்தனார் பாடசாலை சுவாமி சகஜானந்தர் ஆகியோர் இலங்கை சென்ற காலத்திலேயே இவ்விதழ் உருப்பெற்றது. சமய அடிப்படையில் சைவ சமய உணர்வைப் போற்றிய இதழ் இது.
தெய்வமிகழேல், சக்கர நெரிநில், ஊக்கமது கைவிடேல் என்னும் வாசகங்களை முகப்பிலே தாங்கி 16 பக்கங்களில் வெளியானது. இதழின் பக்கங்களைக் கூட்டவும் வார இதழாக மாற்றவும் தொடர்ந்து விருப்பத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் விருப்பம் நிறைவேறாமலேயே நின்றுபோனது. 1000 சந்தாவினை நெருங்கியிருந்த இந்த இதழ் தமிழகம், கோலார் தங்கவயல், பர்மா ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நன்கொடை, சந்தா ஆகியவை கிடைத்துவந்தபோதிலும் இதழ் நிலைப்பதற்கு போதுமானவையாக அவை இல்லை. ஆயிரம் பிரதிகளை நெருங்கியிருந்த இவ்விதழ் ஆதிதிராவிடர்களின் அறிவுசார்ந்த வேட்கையினை அடையாளம் காட்டக்கூடியதாக இன்றைக்கு மாறி நிற்கிறது. ஆதிதிராவிடர் அல்லாதாரும் சந்தாதாரர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதழ் பற்றிய விமர்சனம் சுதேசமித்திரன் இதழிலும் வெளியானது.
பின்னாளில் திராவிடன் இதழின் ஆசிரியராக விளங்கிய கனக சங்கர கண்ணப்பன் சூத்திரர் யார்? ஆதிதிராவிடர்களின் தொழில் போன்ற கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார்.
ஆதிதிராவிடர்கள் விவசாயம், நெசவு, போர், இசைத் தொழில், வள்ளுவர் எனப் பல்வேறு தொழில் புரிந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்றெழுதிய அவர் இக்கருத்தினையே எஸ். சோமசுந்தரம்பிள்ளை போன்ற சென்னை வாழ் ஆதிதிராவிடர்களும் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
ஆதிதிராவிடர்கள் பல்வேறு தொழிலிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தனர் என்னும் வரலாற்றுரீதியான நம்பிக்கையினைப் பலரும் கொண்டிருந்தனர் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. அதேபோல இவ்விதழில் வெளியான சுவாமி சகஜானந்தரின் உரைகள் மூலம் அவருக்கிருந்த விரிவான தமிழறிவு புலப்படுகிறது. சகஜானந்தரைப் போற்றிய இவ்விதழ் நம் தலைவர் எம்.சி. ராஜா என்று எம்.சி. ராஜாவையும் போற்றத் தவறவில்லை. இத் தலைப்பிலேயே வெளியான கட்டுரையொன்றில் "இம்மஹான் நம் ஆதிதிராவிட குலசிரேஷ்டர், சென்னை, ஆதிதிராவிட மஹாஜன சபைக்கு செக்ரடேரியும் தற்காலம் வந்துலாவும் சென்னை ஆதிதிராவிடன் பத்திரிக்கைக்கு ஆசிரியருமாவார்.
. . ஆதிதிராவிட மக்களில் சட்ட நிருபண சபைக்கு மெம்பராகத் தெரிந்தெடுப்பது இதுவே முதல் தடவை" (1919
ஆகஸ்ட் 15)
என்று புகழ்கிறது. இதே காலத்தில் சென்னையிலிருந்து ஆதிதிராவிடன் என்னும் இதழ் எம்.சி. ராஜாவை ஆசிரியராகக்கொண்டு வெளியானது எனும் குறிப்பும் இக்கட்டுரை மூலம் கிடைக்கிறது.
பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இவ்விதழில் மறைமலையடிகள் எழுதிய நூல்கள் குறித்த விளம்பரங்கள் விரிவான அறிமுகக் குறிப்புகளுடன் பன்முறை வெளியிடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கல்லல் பகுதியில் ஆதிதிராவிடர்கள் படும் சாதிக் கொடுமைகள், இலங்கையில் நடக்கும் சாதிப் பிரச்சினைகள், தென்னிந்திய ஐக்கியச் சங்கத்தின் பணிகள் போன்ற பல செய்திகளும் இடம் பெற்றன.
ஆதிதிராவிடர்களின் கல்வி சார்ந்து இவ்விதழில் பதிவுகள் தனியாக எழுதுமளவுக்கு விரிவாக அமைந்துள்ளன. ஆதிதிராவிடர்கள் கல்வியின் மூலமே சாதிய இழிவை விலக்கிக்கொள்ள முடியும் என்று உறுதிபட எழுதியது. கிறித்தவப் பாதிரிமார்கள்கூடக் கல்வியின் பெயரால் இம்மக்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்னும் கோபத்தை வெளிப்படுத்திய இவ்விதழ் இம் மக்களின் தனித்துவமான நடவடிக்கைகளினாலே இவை சாத்தியமடைய முடியும் என்று சொல்லவும் செய்தது. அதாவது, "இலங்கை தென்னிந்திய ஐக்கியச் சங்கம், தென்னிந்திய ஒடுக்கப்பட்டவர்கள் ஐக்கியச் சங்கம் மற்றும் குலாபிமானிகள் முன்னின்று நடத்தினால் மட்டுமே" கல்வி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கைகூடுமென்று எழுதியது.
கோயம்புத்தூர் ஆர். வீரையன் போன்றோர் ஆதிதிராவிடர் கல்விக் குறித்துத் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று:
அறிக்கை
நண்பர்கள்!
வீணாக காலங்கழிக்காதீர்கள். கோயம்புத்தூரில் நடைபெற்றுவரும் நக்ஷ்த்ரவாசக சாலை இரவு பள்ளிக்கூடத்தில் இரவு 7 மணியிலிருந்து 9 1/2 மணி வரைக்கும் இலவசமாக வாசித்து முன்னேறுங்கள்.
"முன் கசக்கும் பின் இனிக்கும்"
திருமால் வீதி ஆர். வீரையன்
கோயம்புத்தூர்
என்று வெளியாகியிருந்தது.
=========================================================================
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
