காமராசர் ஆட்சி

1,361 views
Skip to first unread message

Suba

unread,
Jul 15, 2018, 9:39:53 AM7/15/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
காமராசரின் ஆட்சி பற்றிய மாற்று சிந்தனையாக சில பதிவுகள் வாசிக்க நேர்ந்தது. அதனை ஏனையோர் வாசிப்பிற்ற்காகப் பதிகிறேன்.

சுபா

காமராசர் ஆட்சி - ஒரு மதிப்பீடு - பகுதி - 1

காமராசர் காலத்தில் நீர்த்தேக்கங்கள் அதிகம் கட்டப்பட்டன. இது இன்று சாதனையாகப் பேசப்படுகிறது. சாதனைதான். ஆனால் இத்திட்டங்கள் காமராசர் என்ற தனி நபரின் விருப்பம் சார்ந்ததல்ல. வரலாற்று வளர்ச்சிப் போக்கில் குறிப்பிட்ட பொருளுற்பத்தி சார்ந்து தான் தொழிற்கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படுகின்றன.

காமராசர் ஆட்சிக் காலம் காலனியச் சூழலுக்குப் பிந்தையது. இந்தியா பிரித்தானிய காலனிய நேரடி ஆட்சியிலிருந்து விடுதலையான நேரம். அப்போது சமூகத்தின் ஆதிக்கம் செலுத்திய பொருளுற்பத்தி என்பது விவசாயத்தையே சார்ந்தே இருந்தது. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 80% வேளாண் உற்பத்தியே. எனவே தேசத்தின் பொருளாதாரத்தை தக்கவைக்க வேண்டுமென்றால் விவசாயத்தைக் காக்க வேண்டும். அதற்கு நீராதாரங்கள் மிக முக்கியம். இந்த அடிப்படையில் இருந்து தான் அன்று இந்தியா முழுவதும் நீர்த்தேக்கங்களை நிறுவினார்கள். பக்ரா நங்கல், ஹிராகுட் போன்ற பெரிய அணைகள் எல்லாம் அப்போதுதான் கட்டப்பட்டன. அதையொட்டி தமிழகத்திலும் அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அன்று நீர்த்தேக்கங்கள் கட்டப்படாதிருந்திருந்தால் தேசத்தின் பொருளுற்பத்தி வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கும்.

அதே நேரத்தில் காலனியத்தால் திணிக்கப்பட்ட முதலாளியம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு புறம் முதலாளிய ஆலைத் தொழில் வளர்ச்சி . மறுபுறம் வேளாண் தொழிலில் புதிய மாற்றங்கள். இந்தக் கால கட்டத்தில் தான் காமராசர் அதிகாரத்தில் அமர்கிறார். வளர்ந்து வரும் முதலாளியத்தையும், உற்பத்தியில் செல்வாக்கு செலுத்துகிற நிலம் சார்ந்த உற்பத்தியையும் வளர்த்தெடுக்கும் வரலாற்றுக் கட்டத்தில் காமராசர் ஆட்சி அமைகிறது. எனவே தான் நீர்த்தேக்கங்களையம், தொழிற் கூடங்களையும் அமைக்க வேண்டிய வரலாற்று கடமை அன்றைய இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதனடிப்படையில்தான் ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. இது தவிர்க்க வியலாத வரலாற்றுப் போக்கு. இதைத் தனி மனிதச் சாதனையாக சுருக்குவது சமூக இயங்கியதுக்கு எதிரானது.

சரி.. இன்று ஏன் யாரும் அணைக்கட்டுகள் பெருமளவில் கட்டுவதில்லை. நல்ல மனிதர்கள் இல்லையா? அப்படி எல்லாம் தனிநபர் அபிலாசைகளாக வரலாற்றைச் சுருக்கிப் பார்க்க முடியாது.

இன்று பெருமளவில் முதலாளிய உற்பத்தி சார்ந்து ஆலைத் தொழில்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 80% மேல் இவைதாம். அதே சமயத்தில் வேளாண் உற்பத்தி ஒட்டுமொத்த தேசிய பொருளுற்பத்தியில் வெறும் 15% தான். அதனால் தான் வெறும் 15% உற்பத்திக்காக பல்லாயிரம் கோடிகளை செலவழித்து நீர்த்தேக்கங்களைக் கட்ட எந்த அரசும் முன்வருவதில்லை. இதற்கு காரணம் தீர்மானிக்கக் கூடிய, செல்வாக்கு செலுத்தக் கூடிய உற்பத்தியாக ஆலை உற்பத்தி இருப்பது தான். இந்த பொருளுற்பத்தி முறைகளைப் புரிந்து கொண்டால்தான் அந்தந்த காலகட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசுகளின் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். இதை விடுத்து தனிநபர் ஆளுமையாக சாதனையாக ஹீரோயிசமாக வரலாற்றைச் சுருக்குவது இயக்க மறுப்பியல் சிந்தனையாகும். இந்த அடித்தளத்தில் இருந்துதான் காமராசர் ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போல் கல்வி வளர்ச்சி பற்றி எப்படி மதிப்பீடு செய்வது?

அடுத்த பதிவில் பார்ப்போம்.

# மீள்பதிவு

தோழமையுடன்

மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

Suba

unread,
Jul 15, 2018, 9:40:31 AM7/15/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
4 hrs · 

"பார்ப்பனர்கள் தேடிப் பிடித்த ஆட்களில் ஒருவர் காமராசர் " - தந்தை பெரியார்

1952 தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராசர் வெற்றி பெற்றார். அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்ட பாடு வீணானது கண்டு மனம் வெதும்பி விடுதலையில் எழுதியது, "எப்படிப் பட்ட ஆசாமி வெற்றி பெற்று விட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போக வேண்டும். இராவணீயம் தோற்று விட்டது. விபீஷணத்துவம் வெற்றி பெற்று விட்டது" என்றதோடு 
"காமராசர் தோற்றார் என்ற செய்தியினால் இந்த மாகாணம் மட்டுமல்ல, இந்த நாடே எவ்வளவு கிடுகிடுத்துப் போயிருக்கும். நேருவுக்கு வலது கையாகவும், பார்ப்பனர்களுக்கு நீங்காத் துணையாகவும், முதலாளிகளுக்கு இரும்புத்தூணாகவும் இருக்கின்ற ஒருவரை தோற்கடிக்கக் கூடிய தலை சிறந்த வாய்ப்பை தமிழ் மக்கள் இழந்து விட்டார்களே ! தோழர் தங்கமணிக்குப் பயந்து கொண்டு விருதுநகரை விட்டு ஓடி, சென்னை ராஜ்ய சட்டசபையையும் விட்டு ஓடி, பார்லிமென்ட் அபேட்சகராக நின்ற ஒரு காங்கிரஸ் தலைவரைத் தோற்கடிக்கக் கூடிய தங்கமான வாய்ப்பை பாழாக்கி விட்டார்களே, படு மோசக்காரர்கள் " என்று விடுதலையில் எழுதப்பட்டது.

வடநாட்டுத் துணிக்கடை, ஓட்டல்களின் முன்பு பெரியார் மறியல் நடத்தினார். காமராசர் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் . பெரியாரின் மறியலுக்கு எதிர் மறியல் செய்யப் போவதாகக் கூறினார். இதைக் கண்டித்து காமராசர் என்றோர் தலைப்பில் விடுதலையில் தலையங்கம் வந்தது. அதில், " காமராஜர் இன்றைய இந்த தமிழ் நாட்டில் தன்னை ஒரு சர்வாதிகாரி ஸ்டாலின் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். சர்க்கார் தன் காலடியில் இருப்பதாகவும், மந்திரிகள் தன்னுடைய அடிமைகள், வேலைக்காரர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்" என்று கூறிவிட்டு மேலும் எழுதுகிறது, " காமராஜர் யார்? அவரின் இயற்கை நிலை என்ன? என்ன காரணத்தால் இவர் பொது வாழ்வில் மதிக்க வேண்டியவரானார்? இன்றைய வாழ்வு இவருக்கு எப்படி வந்தது? இவருடைய பொருளாதாரம், கல்வி, பொது அறிவு, அரசியல் திறமை, தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், ஒழுக்கம் எவ்வளவு? என்பவைகளான விஷயங்களை இவரே சிந்தித்துப் பார்ப்பாரானால், இவர் இப்போது பேசும் பேச்சுகளுக்குத்தான் தகுதியுடையவரா?" என்று கூறிவிட்டு மேலும் எழுதுகிறது, "காங்கிரசானது முதல் தர மக்களிடமிருந்து பிடுங்கி மூன்றாந்தர மக்களிடம் ஒப்புவிக்கப்பட்டாலொழிய தங்களால் இந்த நாட்டில் வாழ முடியாது என்கின்ற நிலை, பார்ப்பனருக்கு ஏற்படும்படியாக சுயமரியாதை இயக்கம் செய்து விட்டதன் பயனாய், பார்ப்பனர்கள் தேடிப் பிடித்த ஆள்களில் ஒருவராக காமராஜர் பார்ப்பனர்களுக்குத் கிடைத்தவரே தவிர, அதற்கேற்ற காமராஜரின் தகுதி என்ன என்று சிந்திக்கப் பொது மக்களை வேண்டுகிறோம்"

தொகுத்துச் சென்னால் காமராசருக்கு விடுதலை (பெரியார்) சூட்டிய புகழ் மாலைகள்:
நேருவின் வலது கரம்
பார்ப்பனப் பாதுகாவலர்
முதலாளிக்கு இரும்புத் தூண்
அடிதடியாட்சிக் கர்த்தா
கொலை பாதக ஆட்சிக்கு உடந்தையானவர்
கல்வி
பொது அறிவு
ஒழுக்கம்
அனுபவம்
நேர்மை
தகுதி
திறமை இல்லாதவர் 
என்று விடுதலை புகழ் மாலை சூட்டுகிறது.

ஆதாரம் : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.
கடிதம் 63
தலைப்பு : மிருக ஆட்சி
தேர்தலும் காங்கிரசும் - விடுதலையும் காமராசரும் - காங்கிரசாட்சியின் கொடுமை 
நாள் : O2-09-1956

வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்

Suba

unread,
Jul 15, 2018, 9:41:10 AM7/15/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
3 hrs · 

"கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டுச் செத்தான்" -காமராசரின் பொற்கால ஆட்சியிலே!

1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் குடியரசு தினத்தன்று செங்கொடி சங்கத்தின் முக்கிய ஊழியர்களான அப்பாரு, குருசாமி, பழனி, ஞான முத்து ஆகிய நால்வரும் காமராசரின் ஆட்சியில் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எதற்காக இவர்கள் சுடப்பட்டனர்? யார் இவர்கள்

தோழர்களே! வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய கூலி உயர்வுப் போராட்டத்தில் தான் காமராசர் அரசு இவர்களை சுட்டுக் கொன்றது.

பனிரெண்டு மணி நேர உழைப்பு. கூலியோ ஆண்களுக்கு 7 1/2 அணா, பெண்களுக்கு 5 1/2 அணா. 1952 முதல் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. நான்கு வருட விசாரணைக்குப் பிறகு குறைந்த பட்ச கூலி நாளொன்றுக்கு 2 1/4 ரூபாய் தர வேண்டுமென கமிசன் தீர்ப்பளித்தது. ஆனால் தோட்ட முதலாளிகள் தர மறுத்தனர். காமராசர் அரசாங்கம் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டது. இதை எதிர்த்து "குறைந்த பட்சக் கூலியை அமல் நடத்து" என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அந்தப் போராட்டத்தில் தான் கண்மூடித்தனமாக போலீசார் சுட்டு நால்வர் மாண்டனர். பச்சைத் தமிழரின் ஆட்சியில்தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. கம்யூனிஸ்டு அலுவலகம் , தோட்டத் தொழிலாளர் சங்கமும் சீல் வைக்கப்பட்டன. இறந்த தொழிலாளர்களின் புகைப்படத்தைக் கூட எடுக்க அனுமதிக்க வில்லை கர்ம வீரரின் ஆட்சி.

ஏழைப் பங்காளரின் ஆட்சியில் ஏழைகள் கூலி உயர்வு கேட்டால் துப்பாக்கிச் சூடு தான் பரிசாக கிடைத்தது. வரலாற்றில் இருந்து இதையெல்லாம் மறைத்து விட்டு தான் பொற்கால புலம்பல்கள் ஒலிக்கின்றன.

தோழர் பார்வதி கிருஷ்ணன் தலைமையில் மிகப் பெரிய அளவில் கம்யூனிஸ்டுக் கட்சி போராட்டங்களை நடத்தி அரசை பணிய வைத்தது.

மீண்டும் பதிவிடுவோம்.

Suba

unread,
Jul 15, 2018, 9:41:43 AM7/15/18
to மின்தமிழ், Subashini Kanagasundaram
1 hr · 

காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம்.

காமராசரைச் சுற்றியிருந்தவர்கள் ஏழை குப்பனோ சுப்பனோ அல்ல. மிட்டா மிராசுகளும் ஆலைய திபர்களும் தான். காமராசர் கட்சியில் கக்கன் , பரமேஸ்வரன்கள் மிகச் சிலரே!

கட்சியில் செல்வாக்கு செலுத்திய ஏழைப் பங்காளர்கள் பட்டியல் இதோ!

கபிஸ்தலம் மூப்பனார்
ஸ்ரீரங்கம் வெங்கடேச தீட்சிதர்
கல்வண்டார் கோட்டை சாமிநாதன்
வெண்மனி கொலைகாரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
பக்கிரிசாமி நாயுடு
மதுரை சின்னக் கருப்பத் தேவர்
கவரப்பட்டு மாரியப்ப வாண்டையார்
கருப்பு அம்பலம் வெங்கடாசலத்தேவர்
ஜெகவீரபாண்டிய நாடார்
கும்பகோணம் ஏ ஆர் ராமசாமி
காளியண்ணன் கவுண்டர்
ராமசாமி கவுண்டர்
பொள்ளாச்சி மகாலிங்கம் 
இராஜாராம் நாயுடு
என்.ஆர்.தியாகராசன்

நீண்டு விடும். நிறுத்திக் கொள்வோம்.

ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இவர்கள். கடத்தல் பேர்வழிகளும் கள்ள நோட்டுக்காரர்களும் பிளாக் மார்க்கெட் பேர்வழிகள் தான் காமராசரின் பொற்கால ஆட்சியின் புரவலர்கள்.

கர்ம வீரரின் ஆட்சியில் தானே எல்லைப் பகுதிகளை இழந்தோம்.

தேவிகுளம்
பிர் மேடு,
நெய்யாற்றங்கரை
நெடுமங்காடு
பாலக்காடு
சித்தூர்
திருப்பதி
மூணாறு 
போன்ற பகுதிகளை இழந்தது காமராசர் ஆட்சியில் .

அது மட்டுமல்ல. எல்லைப் போராட்டத்தின் இரத்தஞ் செறிந்த வரலாறு சொல்லும் காமராசரின் கருணை மிகு ஆட்சியைப் பற்றி.

44 அப்பாவி தலித் கூலி விவசாயிகளைப் படுகொலை செய்த வெண்மணி கொலைகாரக் கும்பலுக்கு எதிராக காமராசர் நடத்திய போராட்டங்கள் எத்தனை ? 

இரிஞ்சூர் கோபால கிருஷ்ணனை பாதுகாத்தவர் காமராசரின் செல்லப் பிள்ளை கருப்பையா மூப்பனார். காமராசர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?

1974 கச்சத் தீவை தாரை வார்க்கும் போது கர்ம வீரர் என்ன போராட்டம் நடத்தினார்? அப்போது அவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர். கச்சத் தீவிற்காக என்ன செய்தார்?

1957 சனவரி வால்பாறை படுகொலை . கூலி உயர்வு கேட்ட எஸ்டேட் தொழிலாளர்களை சுட் க் கொன்றது யாருடைய ஆட்சியில் . பெருந்தலைவரின் ஆட்சியில் தானே.

வாட்டாக்குடி இரணியனும் சிவராமனும் களப்பால் குப்புவும் படுகொலை செய்யப்பட்ட போது காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் என்ன செய்தார்?

காங்கிரஸ் காமராசர் ஆட்சியிலே கம்யூனிஸ்டுகள் மீதான அடக்கு முறை தலை விரித்தாடியது.

தஞ்சை விவசாயக் கூலிகளின் இரத்தமும் சதையும் சொல்லும் பண்ணையார்களின் பாதுகாவலர் யார் என்று? ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிருக்கிறது.

தோழமையுடன் 
மருது பாண்டியன்
சோசலிச மையம்
7550256060

Singanenjam Sambandam

unread,
Jul 16, 2018, 12:52:06 AM7/16/18
to mint...@googlegroups.com
சுவையான பதிவுகள் .  நன்றி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

மாயோன்

unread,
Jul 16, 2018, 5:33:32 AM7/16/18
to mintamil
ஒருவேளை காமராசர் தனிமனித ஒழுக்கமில்லாமல், மக்களுக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால் மக்கள் கொண்டாடி இருப்பர் அவரை. 

16 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:22 அன்று, Singanenjam Sambandam <singa...@gmail.com> எழுதியது:

சேது

unread,
Jul 16, 2018, 10:41:57 AM7/16/18
to மின்தமிழ்
எல்லாம் அறிந்தாரும் இல்லை.ஏதும்அறியாதாரும் இல்லை.பெரியார் வலியுறுத்தியகல்விக்கண்திறப்பு.க்குவகைசெய்தார்.உயர்நிலைப்பள்ளிகளில்முதல்நிலைத்தமிழாசிரியர் பணியிடம்பல ஆண்டுகளுக்குநிரப்படாமல் இருக்கும். காமராசர் அந்த அவல நிலையைமாற்றினார்.

செல்வன்

unread,
Jul 16, 2018, 2:17:01 PM7/16/18
to mintamil
விட்டால் தமிழ்நாட்டில் 1957 முதல் 1962 வரை நடந்த திருட்டு, கொலை, கொள்ளை, பிக்பாக்கட் குற்றப்பட்டியலை எல்லாம் எடுத்துபோட்டு காமராஜர் மேல் பழிபோடுவார்கள் போல :-)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--

செல்வன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 17, 2018, 4:38:04 AM7/17/18
to mintamil
காமராசரின் ஆட்சிமை பற்றி, இன்று நான் என் காதால் கேட்ட செய்திகள் நான்கு.

IMG_20160925_185206.jpg
​1) சிதம்பரத்தில் “ஞானம்பிகை பேருந்து” நடந்தி வந்த முதலாளி ஒரு நாள் காமராசர் அவர்களைச் சென்னையில் சந்தித்தார்.

என்ன விசயம்? இவ்வளவு தூரம்? 
வேளை தவறாமல், நல்லா பொல்லா சாப்பிடுகின்றீர்களா? என்று கூடத் தெரியவில்லை. 
அதுக்கு என்ன இப்போ?
அது வந்து ஒரு முறை நீங்கள் நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிட வேண்டும்.
இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் செலவு செய்து வந்தே? ஊருக்குப் போய் வேலைவெட்டியைப் பாரு.  நான் சிதம்பரம்னு ஏதோவது வேலையா வந்தா, உன் வீட்டிற்கு வரமுடியுமான்னு பார்க்கிறேன்.

சிதம்பரத்தில் கூட்டம் முடிந்தது.
 “ஞானம்பிகை பேருந்து” நடந்தி வந்த முதலாளி வீட்டில் மட்டன் விருந்து.
சாப்பிட்டு முடித்ததும்.... வீட்டின் வாசலில் கிடந்த பலகையில் வந்து அமர்ந்தார் காமராசர்.
சிகிரெட் வைச்சுருக்கே?
இதோ கிருஷ்ணன் (பேருந்து நடத்துனர்) போயிருக்கான்.
கிருஷ்ணன் ஒரு பெட்டிச் சிகிரெட்டும் ஒரு பெட்டித் தீப்பெட்டியும் வாங்கி வந்து பலகையில் வைத்தார்.
ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துவிட்டு மீதத்தை அப்படியே பலகையில் வைத்துவிட்டுச் சென்று விட்டாராம்.

2) ஒரு நாள், சென்னையில் காமராசரை அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரது தாயார் பார்த்தார் !
என்ன இவ்வளவு தூரம், எப்படி இப்படி இங்கே வந்தே?
நம்ம ஊரில் எல்லாரும் சேர்ந்து திருப்பதிக்கு போரோம்னு சொன்னாங்க, நானும் சேர்ந்து வந்தேன்.
இந்தா, இந்தப் பணத்தைக் கைச் செலவுக்கு வைத்துக் கொள், என்று கையில் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

கையில் பணத்துடன், அதே இடத்திலேயே அந்த அம்மா வெகுநேரம் நின்று கொண்டே இருந்தார்.

இதைப் பார்த்த அலுவலர் ஒருவர் முத்தையாச் செட்டியாருக்குத் தொலைபேசியில் பேசி, இப்படி நிற்கின்றார்களே, என்று ஆதங்கப்பட்டார்.

முத்தையாச் செட்டியார், ஒரு அம்பாசிட்டர் காரை அனுப்பி வைத்து, அம்மாவைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று வா, வழிபாட்டுச் செலவு அவர்களது என்று அனுப்பி வைத்தார்.
அம்மாவும் அம்பாசிட்டர் காரில் திருப்பதி சென்று வழிபட்டு விட்டு, அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கே திரும்பி வந்து நின்று கொண்டிருந்தார்.

ஏதோ வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் வந்த காமராசர், அம்மாவைப் பார்த்து, நீ இன்னும் திருப்பதிக்குப் போகவில்லையா? என்று கேட்டார்.

அம்மா நடந்ததைக் கூறினார்.
அவ்வளவுதான், காமராசருக்கு வந்தது கோபம்.  நான்தான் உனக்குப் பணம் கொடுத்தேனே, பின்னே ஏன் மற்றவங்க காரில் போனாய்? என்று திட்டித் தீர்த்தார்.
அந்த அலுவலரையும் அழைத்து, அம்மா வந்ததை நீ ஏன் முத்தையாச் செட்டியாரிடம் சொன்னாய் ? என்று திட்டு திட்டு என்று திட்டித் தீர்த்தார்.
செட்டியாரையும் தொலைபேசியில் கூப்பிட்டு, நீங்கள் இப்படிச் செய்வதானால், அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் திருப்பதிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்.  அதற்குத் தயாராய் இருங்கள் என்று மிகவும் கடிந்து கொண்டார்.

3)
வால்டர் வெற்றிவேல் அவர்கள் காமராசரைப் பார்த்து, நான் யுத்தத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னார்.
காமராசரும் அவரை யுத்தத்திற்கு அனுப்பி வைத்தார்.  யுத்தம் முடிந்து திரும்பிய வால்டர் வெற்றிவேலுக்கு அரசுவேலை போட்டுக் கொடுத்தார்.

4) முதியோர் ஓய்வு ஊதியம்.
கும்பகோணத்தில்  கூட்டம்.
கூட்டம் முடிந்து காமராசர் மற்றவர்களுடன் மரத்தடியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு அம்மா, யாருக்கோ சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தவர், காமராசரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டார்,
எதற்கு?
சும்மா பார்த்துவிட்டுப் போகலாமுன்னு கேட்டேன்.
சும்மா எதற்கு ஒரு முதலமைச்சரைப் பார்க்க வேண்டும்?
இந்தா பாரு, இந்த காலித் தூக்குப்போணியைத் தவிர என்னிடம் எதுவும் இல்லை, சும்மா பார்த்துவிட்டுப் போய் விடுகிறேன் என்றார்.
சத்தம் கேட்ட காமராசர் அந்த அம்மாவை வரும்படி அழைத்தார்,.

என்ன அங்கே சத்தம் போட்டு பேசுகிறாய்? இங்கே உனக்கு என்னம்மா சத்தம்?

ஐயா, எனக்குப் புருஷன் இல்லை, இறந்து போய்விட்டார்.  பிள்ளைகளும் இல்லை.  ஓலை வீடு உள்ளது.  அதில்தான் இருக்கிறேன்.  இங்கே வேலை செய்பவர்களுக்கு மதியம் சமைத்துப் போடுகிறேன்.  மதியச் சாப்பாட்டைத் தூக்குவாளியில் வைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து வருகிறேன்.  இதுதான் என் ஜீவனம்.  ஏதோ நீங்க பார்த்து ஏதோவது உதவி செய்தால் தேவலாம்.

ஏம்மா உனக்குன்னு தனியா அரசாங்கம் ஏதும் செய்ய முடியாதும்மா.

எனக்குன்னு தனியா ஏதும் செய்ய வேண்டாமையா,  என்னைப் போல் எத்தனையோ கைம்பெண்கள் இந்த நாட்டில் இருக்காங்க,  எல்லோருக்கும் ஏதாவது செய்ய முடியும்ன்னா செய்யுங்க ஐயா.
ஆகட்டும் பார்ப்போம், நீ போயிட்டு வா.

தமிழ்நாட்டில் எத்தனைபேர் இந்த அம்மா போல் இருக்கின்றனர் என்று கேட்டறிந்து, அத்தனை பேருக்கும் மாதம் ரூ.20 (ரூ.30?) அந்த மாதம் முதல் உதவித் தொகையா வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காமராசர் பற்றிக் காதில் விழுந்த செய்திகள் இவை.   பேருந்து நடத்துனர் கிருஷ்ணன் சொல்லக் கேட்டவர் அண்ணமலை பல்கலைக்கழக ஊழியர்.  அவர் இன்று என்னிடம் சொன்னதைக் கேட்டு எழுதியுள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்

Satish Kumar Dogra

unread,
Jul 17, 2018, 7:04:05 AM7/17/18
to mint...@googlegroups.com
செல்வன் சார், நானும் காமராஜரை நேர்மையின் வடிவம் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால், சுபா அவர்கள் இணைத்த கட்டுரைகளில் அவர் பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை என்று உள்ளது.

இதனால்தான் நான் வரலாற்றை அதிகமாக படிப்பதில்லை. எளிமையான மனம் குழம்பிவிடுகிறது.

செல்வன்

unread,
Jul 17, 2018, 11:16:15 AM7/17/18
to mintamil
On Tue, Jul 17, 2018 at 6:04 AM Satish Kumar Dogra <dogra...@gmail.com> wrote:
செல்வன் சார், நானும் காமராஜரை நேர்மையின் வடிவம் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால், சுபா அவர்கள் இணைத்த கட்டுரைகளில் அவர் பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை என்று உள்ளது.

இதனால்தான் நான் வரலாற்றை அதிகமாக படிப்பதில்லை. எளிமையான மனம் குழம்பிவிடுகிறது.

-

காமராஜரை புகழ்ந்து பதிவு எழுதினால் கோடியில் ஒரு பதிவாக காணாமல் போய்விடும்.

அதே அவரை திட்டி "காமராஜ்ர் ஆட்சியில் பிக்பாக்கட் அடித்தார்கள்" என எழுதினால் அதை படிக்க பலர் கூடுவார்கள். பதிவு வைரல் ஆகும்.

இந்த எளிய உளவியலை புரிந்துகொண்டால் சிக்கல் இல்லை சதீஷ் ஐயா
--

செல்வன்

செல்வன்

unread,
Jul 17, 2018, 11:18:47 AM7/17/18
to mintamil
நன்றி காளைராசன் ஐயா. இதுவரை படித்திராத தகவல்கள்

தேமொழி

unread,
Jul 17, 2018, 2:40:33 PM7/17/18
to mint...@googlegroups.com

On Tuesday, July 17, 2018 at 4:04:05 AM UTC-7, dogratamil wrote:
செல்வன் சார், நானும் காமராஜரை நேர்மையின் வடிவம் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால், சுபா அவர்கள் இணைத்த கட்டுரைகளில் அவர் பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை என்று உள்ளது.

இதனால்தான் நான் வரலாற்றை அதிகமாக படிப்பதில்லை. எளிமையான மனம் குழம்பிவிடுகிறது....

குழப்பம் தேவையில்லை :-)

மருதுபாண்டியன் இரா. கட்டுரை. 
புதியதாக விடுதலை அடைந்த நிலையில்,   இந்தியாவின்  துவக்க காலத்தின் பொருளாதார நிலை வேறு.    விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியாவில்  அதனை மேம்படுத்தப் பல ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  அந்த காலத்தில் ஆட்சியில்  காமராஜர் இருந்திருந்தாலும் சரி, அல்லது வேறொருவர் இருந்திருந்தாலும் சரி அது  நடந்திருக்கும். அதனால் வரலாற்றைக் காலத்திற்கு ஏற்ப அணுகினால் அந்தப் பெருமைகளை காமராஜரிடம் கொடுக்க முடியாது என்று மட்டுமே சொல்கிறது.(பகுதி 1)

கூலி உயர்வு கேட்டவர்கள் மீது அடக்குமுறை, தொழிலாளருக்கு ஆதரவான கம்யூனிஸ்டுக் கட்சி மீது  அடக்குமுறை, இந்தித் திணிப்பு இவையும் முதலாளித்துவத்தை நோக்கி நடைபோடத் துவங்கிய  மத்திய அரசின் வளர்ச்சிக் கொள்கையாக இருந்தபொழுது காமராஜரின்  தமிழக காங்கிரசும் அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. (பகுதி 2, 3, 4). சோசலிச பின்னணி கொண்டவர் பார்வையும் அவரது கோணத்தில் காட்டும் வரலாற்று உண்மைகள் இவை. 

கல்வி வளர்ச்சிக்கு, தன்னைப் பொறுத்த வரையில் ஊழல் எதிலும் சிக்கவைக்க முடியாத ஒரு அரசை காமராஜர் நடத்தியது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இதையே, 
"காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம்." மருதுபாண்டியன் இரா. மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.  (பகுதி  4).

இவர் கோட்டை விட்டது, காங்கிரசில் வெற்றி பெற்றவர்களை கட்சி என்ன செய்ய முடியும் ?  கட்சியில் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று அவர் கூறும் பட்டியலில் செல்வந்தர் அதிகம் இருந்தால் அவர்களை வளர்த்தெடுத்தவர் காமராஜரா? (பகுதி  4).

அமைச்சரவை அமைக்கும் பொழுது தனது கொள்கையில் முரண்பட்டவர்களையும் (சி.சுப்ரமணியம்) போன்றவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு திறமைக்கு மட்டும் மதிப்பளித்தார் என்பதுதான் நான் படித்துள்ளது. 

மேலும், "பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை" (திரு. டோக்ரா பதிவில்)  போல என்பதைத்தான் அரசியல் என்று கூறுவது வழக்கம்.  தனது கட்சியின் கொள்கைக்கு ஆதரவு என்றால் அவர்களை முதன்மைப்படுத்துவதும் அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் அரசியல் எனக் கூறப்படும்.  காங்கிரசை எதிர்த்த பெரியார் காமராஜரை ஆதரித்த காரணங்களில் (மேலும் காரணங்கள் உண்டு) இது முதன்மையானது.  அதுவும் அரசியலே. 

"காமராசருக்கு விடுதலை (பெரியார்) சூட்டிய புகழ் மாலைகள்:"  என்று கூறிய பெரியார்தான் காமராஜரின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்தவரும்.  அதனால் வரலாற்றை அதன் காலச் சூழ்நிலையில், காலக்கோட்டில் பார்க்க வேண்டும். ஒருவரே  முன்னுக்குப் பின் முரணான கருத்து வைத்தார்  என்றால் அவையும் காலப்போக்கில் அரசியல் அரங்கில்  நிகழ்ந்த மாற்றத்தினால்  ஏற்படுவதுதான்.  (பகுதி  2).

ஆனால் காமராஜர் பொம்மை அல்ல, அவர் கிங் மேக்கர்.  இந்திய அரசியல் அளவில் மத்திய அரசில் மாற்றம் நிகழ்த்தி யார் தலைமைப்பதவியில் இருக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் நிலைக்கு முக்கியமான பொறுப்பும் அவருக்குக் கட்சியில்  இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக அரசியல் சதுரங்கத்தில்  காமராஜர் நகர்த்திய காய்களே காரணம்.

காமராஜர்  செயல்பாடுகளில் அவருக்கே உரித்தானது தமிழகக் கல்வி வளர்ச்சியில் அவரது பங்கு.
கட்டுரை ஆசிரிய சுட்டுவது போல நாடு முழுவதும் நிகழ்ந்த மாறுதலில் நடந்தவற்றை அவருக்கானது என ஒதுக்கத்  தேவையில்லை என்பது சரியானதே.  

காமராஜர் சாதனைகள் என்று பட்டியல் இடுபவர்களும் அதைப் படிப்பவர்களும் இதற்கு இவரே காரணமானவரா? என்று கேள்வி எழுப்பினால் போதுமானது.  எந்தவகையில் காமராஜரின் பங்களிப்பு இருந்தது எனத் தானே தெரியும். 

அடுத்து ஒரு கட்டுரையை இடுகிறேன்.  படிக்கும்பொழுதே மருதுபாண்டியன் இரா. குறிப்பிட்டது போல ஒவ்வொன்றையும் அணுகினால் காமராஜரின் உண்மையான பங்களிப்பு கல்வி வளர்ச்சியில் அவரது தாக்கம் என்பதும் புரியும். 

..... தேமொழி
 
தேமொழி

unread,
Jul 17, 2018, 2:42:27 PM7/17/18
to மின்தமிழ்
நீங்கள் எழுதும் பதிவுகள் இந்த உளவியல்  அடிப்படையில் எழுதப்படுபவையா?

--

செல்வன்

தேமொழி

unread,
Jul 17, 2018, 2:47:28 PM7/17/18
to மின்தமிழ்

https://tamil.thehindu.com/opinion/columns/காமராஜர்-காலம்-ஏன்-பொற்காலம்/article7424124.ece

காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?

Published :  15 Jul 2015   
ஆ.கோபண்ணா

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்

தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி

தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.

காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.

அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி

ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.

1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.

மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.

மின்உற்பத்தி

காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…

சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்

காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி

சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை

எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்

காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.

1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”

காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?

- ஆ.கோபண்ணா, பத்திரிகையாளர், தலைவர், காங்கிரஸ் ஊடகத்துறை.

தொடர்புக்கு: desiya...@gmail.com

On Tuesday, July 17, 2018 at 11:40:33 AM UTC-7, தேமொழி wrote:

On Tuesday, July 17, 2018 at 4:04:05 AM UTC-7, dogratamil wrote:
செல்வன் சார், நானும் காமராஜரை நேர்மையின் வடிவம் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால், சுபா அவர்கள் இணைத்த கட்டுரைகளில் அவர் பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை என்று உள்ளது.

இதனால்தான் நான் வரலாற்றை அதிகமாக படிப்பதில்லை. எளிமையான மனம் குழம்பிவிடுகிறது....

குழப்பம் தேவையில்லை :-)

மருதுபாண்டியன் இரா. கட்டுரை. 
புதியதாக விடுதலை அடைந்த நிலையில்,   இந்தியாவின்  துவக்க காலத்தின் பொருளாதார நிலை வேறு.    விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியாவில்  அதனை மேம்படுத்தப் பல ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  அந்த காலத்தில் ஆட்சியில் இருந்த காமராஜர் இருந்திருந்தாலும் சரி, அல்லது வேறொருவர் இருந்திருந்தாலும் சரி அது அவர் நடந்திருக்கும். அதனால் வரலாற்றைக் காலத்திற்கு ஏற்ப அணுகினால் அந்தப் பெருமைகளை காமராஜரிடம் கொடுக்க முடியாது என்று மட்டுமே சொல்கிறது.(பகுதி 1)

கூலி உயர்வு கேட்டவர்கள் மீது அடக்குமுறை, தொழிலாளருக்கு ஆதரவான கம்யூனிஸ்டுக் கட்சி மீது  அடக்குமுறை, இந்தித் திணிப்பு இவையும் முதலாளித்துவத்தை நோக்கி நடைபோடத் துவங்கிய  மத்திய அரசின் வளர்ச்சிக் கொள்கையாக இருந்தபொழுது காமராஜரின்  தமிழக காங்கிரசும் அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. (பகுதி 2, 3, 4). சோசலிச பின்னணி கொண்டவர் பார்வையும் அவரது கோணத்தில் காட்டும் வரலாற்று உண்மைகள் இவை. 

கல்வி வளர்ச்சிக்கு, தன்னைப் பொறுத்த வரையில் ஊழல் எதிலும் சிக்கவைக்க முடியாத ஒரு அரசை காமராஜர் நடத்தியது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இதையே, 
"காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம்." மருதுபாண்டியன் இரா. மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.  (பகுதி  4).

இவர் கோட்டை விட்டது, காங்கிரசில் வெற்றி பெற்றவர்களை கட்சி என்ன செய்ய முடியும் ?  கட்சியில் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று அவர் கூறும் பட்டியலில் செல்வந்தர் அதிகம் இருந்தால் அவர்களை வளர்த்தெடுத்தவர் காமராஜரா? (பகுதி  4).

அமைச்சரவை அமைக்கும் பொழுது தனது கொள்கையில் முரண்பட்டவர்களையும் (சி.சுப்ரமணியம்) போன்றவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு திறமைக்கு மட்டும் மதிப்பளித்தார் என்பதுதான் நான் படித்துள்ளது. 

மேலும், "பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை" (திர. டோக்ரா பதிவில்)  போல என்பதைத்தான் அரசியல் என்று கூறுவது வழக்கம்.  தனது கட்சியின் கொள்கைக்கு ஆதரவு என்றால் அவர்களை முதன்மைப்படுத்துவதும் அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் அரசியல் எனக் கூறப்படும்.  காங்கிரசை எதிர்த்த பெரியார் காமராஜரை ஆதரித்த காரணங்களில் (மேலும் காரணங்கள் உண்டு) இது முதன்மையானது.  அதுவும் அரசியலே. 

Satish Kumar Dogra

unread,
Jul 18, 2018, 6:17:35 AM7/18/18
to mint...@googlegroups.com
" ஆனால் காமராஜர் பொம்மை அல்ல, அவர் கிங் மேக்கர்.  இந்திய அரசியல் அளவில் மத்திய அரசில் மாற்றம் நிகழ்த்தி யார் தலைமைப்பதவியில் இருக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் நிலைக்கு முக்கியமான பொறுப்பும் அவருக்குக் கட்சியில்  இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக அரசியல் சதுரங்கத்தில்  காமராஜர் நகர்த்திய காய்களே காரணம்."

இந்திரா காந்தி பிரதமரான காலத்தில் நான் பஞ்சாப் மாநிலத்தில்   பள்ளிக்கூட மாணவனாக இருந்தேன். ஆங்கிலம் அதிகமாக தெரியாத நிலையில் ஹிந்தி நாளிதழ்களைப் படிப்பேன். ஒரு கட்டுரையில் நாளிதழ் ஆசிரியர் "தமிழ்நாடு இறுக்கமாகவே காமராஜரின் பிடியில் இருக்கிறது. அவரை எதிர்க்க இந்திரா துணியமாட்டார்" என்பது போல  எதையோ படித்ததாக இன்னும் தெளிவான நினைவு இருக்கிறது. 

============================================
Read my websites:
English: csprep.in
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

2018-07-18 0:10 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, July 17, 2018 at 4:04:05 AM UTC-7, dogratamil wrote:
செல்வன் சார், நானும் காமராஜரை நேர்மையின் வடிவம் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால், சுபா அவர்கள் இணைத்த கட்டுரைகளில் அவர் பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை என்று உள்ளது.

இதனால்தான் நான் வரலாற்றை அதிகமாக படிப்பதில்லை. எளிமையான மனம் குழம்பிவிடுகிறது....

குழப்பம் தேவையில்லை :-)

மருதுபாண்டியன் இரா. கட்டுரை. 
புதியதாக விடுதலை அடைந்த நிலையில்,   இந்தியாவின்  துவக்க காலத்தின் பொருளாதார நிலை வேறு.    விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியாவில்  அதனை மேம்படுத்தப் பல ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  அந்த காலத்தில் ஆட்சியில் இருந்த காமராஜர் இருந்திருந்தாலும் சரி, அல்லது வேறொருவர் இருந்திருந்தாலும் சரி அது அவர் நடந்திருக்கும். அதனால் வரலாற்றைக் காலத்திற்கு ஏற்ப அணுகினால் அந்தப் பெருமைகளை காமராஜரிடம் கொடுக்க முடியாது என்று மட்டுமே சொல்கிறது.(பகுதி 1)

கூலி உயர்வு கேட்டவர்கள் மீது அடக்குமுறை, தொழிலாளருக்கு ஆதரவான கம்யூனிஸ்டுக் கட்சி மீது  அடக்குமுறை, இந்தித் திணிப்பு இவையும் முதலாளித்துவத்தை நோக்கி நடைபோடத் துவங்கிய  மத்திய அரசின் வளர்ச்சிக் கொள்கையாக இருந்தபொழுது காமராஜரின்  தமிழக காங்கிரசும் அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. (பகுதி 2, 3, 4). சோசலிச பின்னணி கொண்டவர் பார்வையும் அவரது கோணத்தில் காட்டும் வரலாற்று உண்மைகள் இவை. 

கல்வி வளர்ச்சிக்கு, தன்னைப் பொறுத்த வரையில் ஊழல் எதிலும் சிக்கவைக்க முடியாத ஒரு அரசை காமராஜர் நடத்தியது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இதையே, 
"காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம்." மருதுபாண்டியன் இரா. மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.  (பகுதி  4).

இவர் கோட்டை விட்டது, காங்கிரசில் வெற்றி பெற்றவர்களை கட்சி என்ன செய்ய முடியும் ?  கட்சியில் செல்வாக்கு செலுத்தியவர்கள் என்று அவர் கூறும் பட்டியலில் செல்வந்தர் அதிகம் இருந்தால் அவர்களை வளர்த்தெடுத்தவர் காமராஜரா? (பகுதி  4).

அமைச்சரவை அமைக்கும் பொழுது தனது கொள்கையில் முரண்பட்டவர்களையும் (சி.சுப்ரமணியம்) போன்றவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு திறமைக்கு மட்டும் மதிப்பளித்தார் என்பதுதான் நான் படித்துள்ளது. 

மேலும், "பிறரால் உள்நோக்கத்துடன் அமர்த்தப்பட்ட ஒரு பொம்மை" (திர. டோக்ரா பதிவில்)  போல என்பதைத்தான் அரசியல் என்று கூறுவது வழக்கம்.  தனது கட்சியின் கொள்கைக்கு ஆதரவு என்றால் அவர்களை முதன்மைப்படுத்துவதும் அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் அரசியல் எனக் கூறப்படும்.  காங்கிரசை எதிர்த்த பெரியார் காமராஜரை ஆதரித்த காரணங்களில் (மேலும் காரணங்கள் உண்டு) இது முதன்மையானது.  அதுவும் அரசியலே. 

"காமராசருக்கு விடுதலை (பெரியார்) சூட்டிய புகழ் மாலைகள்:"  என்று கூறிய பெரியார்தான் காமராஜரின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்தவரும்.  அதனால் வரலாற்றை அதன் காலச் சூழ்நிலையில், காலக்கோட்டில் பார்க்க வேண்டும். ஒருவரே  முன்னுக்குப் பின் முரணான கருத்து வைத்தார்  என்றால் அவையும் காலப்போக்கில் அரசியல் அரங்கில்  நிகழ்ந்த மாற்றத்தினால்  ஏற்படுவதுதான்.  (பகுதி  2).

ஆனால் காமராஜர் பொம்மை அல்ல, அவர் கிங் மேக்கர்.  இந்திய அரசியல் அளவில் மத்திய அரசில் மாற்றம் நிகழ்த்தி யார் தலைமைப்பதவியில் இருக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் நிலைக்கு முக்கியமான பொறுப்பும் அவருக்குக் கட்சியில்  இருந்தது. இந்திரா காந்தி பிரதமராக அரசியல் சதுரங்கத்தில்  காமராஜர் நகர்த்திய காய்களே காரணம்.

காமராஜர்  செயல்பாடுகளில் அவருக்கே உரித்தானது தமிழகக் கல்வி வளர்ச்சியில் அவரது பங்கு.
கட்டுரை ஆசிரிய சுட்டுவது போல நாடு முழுவதும் நிகழ்ந்த மாறுதலில் நடந்தவற்றை அவருக்கானது என ஒதுக்கத்  தேவையில்லை என்பது சரியானதே.  

காமராஜர் சாதனைகள் என்று பட்டியல் இடுபவர்களும் அதைப் படிப்பவர்களும் இதற்கு இவரே காரணமானவரா? என்று கேள்வி எழுப்பினால் போதுமானது.  எந்தவகையில் காமராஜரின் பங்களிப்பு இருந்தது எனத் தானே தெரியும். 

அடுத்து ஒரு கட்டுரையை இடுகிறேன்.  படிக்கும்பொழுதே மருதுபாண்டியன் இரா. குறிப்பிட்டது போல ஒவ்வொன்றையும் அணுகினால் காமராஜரின் உண்மையான பங்களிப்பு கல்வி வளர்ச்சியில் அவரது தாக்கம் என்பதும் புரியும். 

..... தேமொழி
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages