என்னுடைய நூலுக்கு நூலறிமுகம் கொடுத்துப் பாராட்டி ஊக்கம் அளித்துள்ள பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு அவர்களுக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
தேமொழி
------------------------------------------------
அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் நூல் அறிமுகம்
பேரா. முனைவர் மு. முத்துவேலு, சென்னை
அறிவியலை ஆய்வுகளை ஆக்கம்சேர் கணிப்பொறியைப்
பொறியியலை மருத்துவத்தைப் பொதுமைசேர் சட்டத்தின்
நெறியதனைத் தமிழாக்கி நிறைந்துவரும் நூலியற்றி
அறிவுசார் மொழிஎன்று அவனிக்குக் காட்டிடுவோம்!
என்னும் என் கவிதைக்கு ஏற்ப அறிவியல் கருத்துக்களை அருந்தமிழில் எழுதி அறிவியல் தமிழைப் பரப்பி வருகிற அறிஞர் பெருமக்களுள் பேராசிரியர் தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
இந்நூலில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கிய ஸ்டெப்ஃபெனி கோலக் என்னும் கட்டுரை தொடங்கி முச்சொல் முகவரி என்னும் கட்டுரை வரை உள்ளன. இந்த நூலில் அறிவியல் உலகத்தில் பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறும் அறிவியல் கருத்துக்கள் பரவுவதற்குப் பாடுபட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகளும், சில அறிவியல் செய்திகளும் அடங்கி உள்ளன.
அறிவியல் அறிஞர் ஒவ்வொருவரைப் பற்றியும் கூறுகையில் நிறைவாக அந்த அறிவியல் அறிஞரின் நினைவாக உலகம் போற்றி வருகிற செயல்பாட்டினை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் ஒரு கட்டிடத்திற்குக் காத்தரின் ஜான்சனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது அறிவியலில் பெண்கள் கண்ட முன்னேற்றம் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிடுவது சுட்டிக் காட்டத் தக்கதாகும். அதைப் போலவே டிமிட்ரீ மெண்டலீயா என்னும் ருசிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடும் போது இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் பெயரில் அறிவியலில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடுவது மேனாட்டு உலகம் அறிவியல் அறிஞர்களைப் போற்றிப் பாராட்டுகிற செயல்பாடுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
தொற்றுநோய்ப் பரவலைக் காட்டும் மருத்துவப்புவி வரைபடங்களின் வரலாறு எனும் கட்டுரையில் உலக இயக்கத்தை முடக்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் கொள்ளை நோய் குறித்த செய்தியை முதலில் கவனத்திற்குக் கொண்டு வந்தது கணினியின் செயற்கை நுண்ணறிவு என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு பயன்களையும் அதன் செயல்பாடுகளையும் அதனைக் கண்டறிந்த வரலாற்றையும் விரிவாக எடுத்துச் சொல்லுகிறார். இக்கட்டுரை நூலில் மூன்று பக்கங்கள் முதல் 15 பக்கங்கள் வரையிலான கட்டுரைகள் அடங்கியுள்ளன. சென்னைப் பெருநகரில் காலரா நோய் பரவியதற்குப் பின் அதனைத் தடுக்கும் நோக்கில்தான் இலண்டன் மாநகரைப் போலச் சென்னை நகரிலும் கழிவுநீர் வடிகால் வசதி கட்டப்பட்டது என்கிற வரலாற்றுச் செய்தியையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இது சென்னை நகரின் கழிவுநீர் வடிகால் வசதியின் வரலாற்றைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டு பிடித்துச் செல்ல நம் கைப்பேசித் திரையில் உலக வரைபடத்தைத் திறந்து நம் இடத்தைக் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் தொடக்கமாகக் கடலுக்கு நடுவே செல்லுகிற கப்பலை ஒட்டுகிற மாலுமிகள் தாங்கள் செல்லும் திசையையும் கடலில் தாங்கள் கரையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதையும் கண்டறிவதற்கான அந்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வைக்கண்ட கடற்கால மாணி குறித்த கட்டுரை சுவையானதாக அமைந்துள்ளது.
உலக வரைபடங்களை உருவாக்கிப் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அதனுடைய துல்லியம் இன்னும் செம்மைப் படவில்லை. அந்தத் துல்லியத்தை நோக்கித்தான் வரைபடம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக வரைபட வரலாறு இன்னும் அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதற்குக் கட்டுரை சான்றாக அமைகிறது.
முச்சொல் முகவரி என்ற கட்டுரையும் உலக வரைபடத்தின் வரலாற்றையும் அதன் இன்றைய நிலையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. "அறிவியல் பார்வையை நமக்குள்ளும் பரப்பி நம் அடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்க வேண்டிய இன்றியமையாமையைத் தேமொழி தெரியப்படுத்துகிறார்" என்று பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா அவர்கள் கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம். அறிவியல் கருத்துக்களை எழுதும் பொழுது அதன் மொழிநடையும் சொல் பயன்பாடும் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் முனைவர் தேமொழி அவர்கள் எளிய சொற்களில் ஊடகத் தமிழ் நடையில் எல்லோருக்கும் புரிகிற மொழியைப் பயன்படுத்தி எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அறிவியல் அறிஞர்களின் படங்களையும் அவர்களது கண்டு பிடிப்புகளையும் தேடிக் கண்டெடுத்து நூலிலே இணைத்திருப்பது, தொடர்ந்து கட்டுரைகளைப் படித்து வருபவர்களுக்கு இடையில் சற்று இளைப்பாறுதலையும் சுவையையும் ஊட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அறிவியல் ஆக்கங்களை எல்லாம் அருந்தமிழில் எழுதிப் பரப்பி வருகிற முனைவர் தேமொழி அவர்களின் அறிவியல் தமிழ்ப் பணி மேலும் சிறக்க அறிவியல் பூங்காவின் நல்வாழ்த்துக்கள்!
நன்றி:
அறிவியல் பூங்கா, மலர்: 17, இதழ்: 68, பக்கம் : 46
______
நூல் : அறிவியல் அறிஞர்களும் அரிய கண்டுபிடிப்புகளும்
ஆசிரியர் : தேமொழி
வெளியீடு : சந்திரோதயம் பதிப்பகம், மதுரை
(+91 70109 97639)
விலை : ரூ.150/-
-------------------------------------------------------