(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி)
மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14
இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2
இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:– தாண்டன், கோவிந்து தாசு, சம்பூர்ணானந்து, இரவிசங்கர் சுக்குலா, கே. எம். முன்சி ஆகியோர்.
2) உருது கலந்த இந்துத்தானி ஆதரவாளர்கள்:- சவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத்து ஆகியோர்.
இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.), கம்மிடிடாலா துருகாபாய்(Gammiḍidala Durgabāi Deshmukh), தி.அ. இராமலிங்கம்(செட்டியார்) (T. A. Ramalingam Chettiar), கொகினேனி இரங்க நாயகுலு(N. G. Ranga), நரசிம்ம கோபாலசாமி (ஐயங்கார்) (N. Gopalaswami Ayyangar)(சம்மு காசுமீர் அரசின் தலைமை யமைச்சராக 1937 – 1943 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர்.) (அனைவரும் சென்னை மாகாணம்), சி.வ.கிருட்டிணமூர்த்தி (இராவு)(S.V. Krishnamoorthy Rao) (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலத்தையே அரசு மொழியாக நீட்டிக்கச் செய்ய வேண்டுமென்று வாதிட்டனர்.
அப்போது அரசியல் யாப்பு வரையறைக் குழு(Constituent Assembly of India) உறுப்பினர் தி.த.கிருட்டிணமாச்சாரி அவற்றின் சாரமாக “எனது அருமை உத்திரப்பிரதேசத்து உடன்பிறப்புகள் இந்தி-ஏகாதிபத்தியத்தை இங்கே கசையடிப்பதன் மூலம் எங்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. நாடு முழு இந்தியாவாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி-இந்தியாவாக இருக்க வேண்டுமா என்பது உத்திரப்பிரதேசத்து நண்பர்களின் தேர்வைப் பொறுத்தது” எனப் பேசினார்.
இந்தி ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என வற்புறுத்தப்பட்டால் “இன்னொரு நாட்டுப் பிரிவினை தவிர்க்க முடியாததாகி விடும்’’ எனத் தி.த.கிருட்டிணமாச்சாரி (T.T.K.) போன்றவர்கள் 1948-ஆம் ஆண்டிலேயே அரசமைப்பு அவையில் வாதிட்டனர்,
அரசியல் யாப்பு அவையில் இருந்த பேராயக் கட்சியின் உறுப்பினர்கள், 1949 செட்டம்பரில் தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் இந்திக்கு ஆதரவாகத் தனது வாக்கை அளித்தார். இதனால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்குப் பேராயக்கட்சி பெரிதும் முயன்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத பொழுதும் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. எனினும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு கால வாய்ப்பு அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே -15.08.1947இற்கு முன்பே -1946ம் ஆண்டிலேயே அரசியல் அமைப்பவை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் அமைப்பவையில் அல்லது அரசியல் யாப்பவையில் – உறுப்பினர்களாக யாரைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்? 1935ம் ஆண்டு பிரித்தானியஆட்சி, இந்தியர்களுக்காக ஓர் அரசியல் திட்டத்தை உருவாக்கி, அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்துனக் குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. சொத்து-கல்வி அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப் பெற்றது. இதனால் நூற்றுக்கு 14 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டதே நாடாளுமன்றம். இதுவே அரசியல் அமைப்பவையாக மாற்றப்பட்டது. உண்மையில் இந்தியா விடுதலை பெற்ற பின்னரே எவ்வகை பாகுபாடுமின்றி அனைவராலும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தினரைக் கொண்டே அரசியல் யாப்பவை(அமைப்பவை) உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே உண்மையான மக்களாட்சியின் கருத்தாக அமைந்திருக்கும். அடிமை நாட்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பவை எங்ஙனம் உரிமை நாட்டினருக்கு ஏற்றதாகச் செயற்பட்டிருக்க முடியும்?
இந்த அவையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் பேராயக்(காங்கிரசு) கட்சியினர் இடம் பெற்றிருந்தனர். அரசியல் அமைப்பவை அரசியல் சட்டப் பிரிவுகளை உருவாக்கும் வரைவுக்குழுத் தலைவர் பதவியை அறிஞர் அம்பேத்துகருக்கு வழங்கியது. அந்தக் குழுவில் முகம்மது சாதுல்லா, கே.எம். முன்சி, அல்லாடி கிருட்டிணசாமி(ஐயர்), டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அம்பேத்துகர், முகம்மது சாதுல்லா என்ற இசுலாமியர் ஆகிய இருவர் தவிர, வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் அனைவரும் பிராம்மணர்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எவரும் அரசியல் வரைவுக் குழுவில் இடம் பெறவில்லை. (இருப்பினும் பிராமணரான திருவள்ளூர் தட்டை கிருட்டிணமாச்சாரி(T.T.K.). இந்திக்கு எதிராகவே குரல் கொடுத்தார்.)இதனால் அம்பேத்துகர் தமது முற்போக்குச் சிந்தனை வழியில் வரைவுகளை உருவாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அரசியல் சட்டத்தை உருவாக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டன; அதில் வரைவுக் குழுவிற்கு மட்டுமே அம்பேத்துகர் தலைவர்; வரைவுக்குழு முதலான 10 குழுக்களில் இடம்பெற்றவர் கே.எம்.முன்சி எனும் பிராம்மணர். (சாதி அடிப்படையிலேயே குழுவினர் அமர்த்தப்பட்டதால் சாதியைக் குறிப்பிட வேண்டிய நிலை வந்துள்ளது.)
அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் நிலை வருமானால், அதை எரிப்பதில் முதல் ஆளாக நான் இருப்பேன் என்று அம்பேத்துகர் அறிவித்தார் . (“I Dare say that if anybody comes forward to burn the constitution of india, I will be the first person to burn it (மாநிலங்களவை விவாதங்கள் 2-9-1953)
1946ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் வரையறைக்குழு உருவாக்கிய அரசியல் சட்டம் 26.11.1949இல் அரசியல் அமைப்பவையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் வரையறை அவையின் தலைவர் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவராக இருந்த இராசேந்திரபிரசாத்து. 26.01.1950ஆம்நாளில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களால் உருவாக்கப்படாத இந்தச் சட்டத்தில் சாதிப் பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டதை எதிர்த்த பெரியார் ஈ.வெ.இராமசாமி அந்த அரசியல் சட்டப் பகுதிகளைத் தீ வைத்து எரிக்கும் போராட்டத்தை 1957ம் ஆண்டு நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் அரசியல் அமைப்பவை இச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்த நவம்பர் 26ஆம் நாள் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் சார்பாளரகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் அதன் முகப்புரையில் “இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பு அவையில் இந்த அரசமைப்பை இயற்றி, ஏற்று அதனை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’’ என்று அறிவிக்கிறது. இவ்வாறு, இந்திய மக்கள் ஏற்போடு இந்தச் சட்டம் செய்யப்பட்டதாக உண்மைக்கு மாறான கருத்தைப் பதிவு செய்திருக்கிறது; நாடு விடுதலை பெற்ற பிறகும்கூட இந்த ‘ அரசியல் சட்டத்துக்கு’ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு ஏதும் நடத்தப் படவில்லை;
இதுவே -அரசியல் சட்டம் உருவாகிய சுருக்கமான இவ்வரலாற்றுப் பின்னணியுடன் நாம் மொழித்திணிப்பு குறித்த கருத்துகளையும் பார்க்க வேண்டும்.
சட்ட அறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய ‘மலர்க மாநில சுயாட்சி’ நூலில் இது குறித்து விரிவாகக் கணலாம்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1491-1495 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1496-1500
நீர், நீர்ம வகைகள், நீர்ப்பதம், நீர்க்கசிவு முதலானவற்றின் மீது ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் நீர்ப்பத வெருளி.
தூய்மையற்ற தண்ணீர் தொடர்பான மாசுநீர் வெருளி(Turistaphobia) எனத் தனியாகக் குறிக்கப் பெறுகிறது. நீர்ப்பத வெருளியில் இணைத்துக் குறித்துள்ளேன்.
தண்ணீர் மீது மட்டுமல்லாமல் மது முதலான நீர்ம வகைகளின் மீதும் ஏற்படும் மிகைப் பேரச்சம்.
தூய்மையற்ற நீரினால் நலக்குறைவு ஏற்படும், உடல் நலம் கெடும், இவற்றால் வேலைகள் பாதிக்கும் என்பன போன்றவற்றில் வரும் பேரச்சங்கள் இதில் அடங்கும்.
hygro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஈரப்பதம்.
[விக்கி வெருளியில் Ygrophobia(the fear of liquid) என உள்ளது. இதனைத் தனிப் பிரிவாக எண்ணி நானும் தனியாகக் குறித்திருந்தேன். ஆனால், Hygrophobia(the fear of liquids) என்பதில் முதல் எழுத்து எச்(H) விடுபட்டுப் பிழை நேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். எனவே, அதனை நீக்கி விட்டேன்.]
00
நீர் யானை குறித்த வரம்பற்ற பேரச்சம் நீர் யானை வெருளி.
நீர் யானைகள் (Hippopotamus) இயற்கையிலேயே மிகவும் உக்கிரமமான, வலிமை வாய்ந்த விலங்குகள். தங்கள் எல்லை குறித்த விழிப்புணர்வு மிக்கவை. எனவே, தங்களின் குட்டிகள் அருகே அல்லது எல்லைக்குள் பிற உயிரினங்கள் வந்தால் கடுமையாகத் தாக்குகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றின் மீதான அச்சம் உலகளவில் நிலவுகிறது. ஏறத்தாழ 1500-3200 அயிரைக்கா (கிலோ) எடை கொண்டவை. அவற்றின் வாய் மிக அகலமாக திறக்கக்கூடியது. அதில் ஏறத்தாழ 50 சிறுகோல்(செ.மீ.) நீளம் வரை வளரக்கூடிய நீண்ட கோரைப்பற்களைக் கொண்டுள்ளன. நிலத்திலும் மணிக்கு 30 அயிரைக்கா(கி.மீ.) வேகத்திற்கும் அதிகமாக ஓடுவன.
எனவே பார்ப்பவர்க்கு அச்சம் வருகின்றது. இருப்பினும் சிலர் படத்தில் பார்த்தாலோ தொலைக்காட்சியில் அல்லது திரைக்காட்சியில் பார்த்தாலோ அவை பற்றிய செய்திகளைக் கேட்டாலோ பகுத்தறிவிற்குப்பொருந்தாத பேரச்சம் கொள்கின்றனர்.
“hippos” என்னும் கிரக்கச் சொல்லின் பொருள் குதிரை. எனினும் நீண்ட, பெரிய, வலிய உயிரினங்களையோ சொற்களையோ குறிக்க இச்சொல் பயன்படுகிறது. Hippopotamus என்பது நீர் யானை எனப்படுகிறது.
00
நீர் மூழ்கிக் கப்பல்(submarine) குறித்த அளவு கடந்த பேரச்சம் நீர் மூழ்கி வெருளி.
வெளி உலகம் தெரியாமையால் நீருக்குள் மூழ்கிவிடுவோமோ, திமிங்கிலம் போன்ற வலிமையான நீருயிரிகளால் அழிவு ஏற்படுமோ, போதிய காற்று கிடைக்குமோ என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். நீர்மூழ்கிக்கப்பல் நேர்ச்சிகள் குறித்து அறிந்துள்ளவர்களும் அவற்றால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
தண்ணீரைக் கண்டு தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது நீர் வெருளி.
கடல், ஆறு,ஏரி, நீர்நிலைகள், நீருள்ள குளியல் தொட்டி என எதுவாக இருந்தாலும் அதனால் அச்சுறுத்தல் வருவதாகக் கற்பனை செய்து கொண்டு பேரச்சம் கொள்வர்.
சிலருக்குத் தண்ணீரில் கண்டம் இருப்பதாகக் கணியர்(சோதிடர்) கூறியிருந்தால் தண்ணீரைக் கண்டாலே மிகுபேரச்சம் கொள்வர்; நீர்நிலைகளில் மேற்கொள்ளும் படகுப்பயணம், நீச்சல் ஆகியவற்றின் மீதும் பேரச்சம் உண்டாகிறது
புலவர் ஐயூர் முடவனார்
நீர்மிகின் சிறையு மில்லை
என்கிறார். அஃதாவது நீர் மிகுந்தால் அதைத் தடுத்துக் காப்பதற்கான அரண் எதுவுமில்லை என்கிறார். எனவே நீர்ப்பெருக்கு குறித்த பேரச்சம் வருவது இயற்கைதான்.
நாய்க்கடியின் பொழுது வரும் சல வெருளி(Hydrophobia)யிலிருந்து மாறுபட்டது இது.
இலத்தீனிலிருந்து இடைக்கால ஆங்கிலத்திற்கு வந்த சொல்லான Aqua என்பதற்கு நீர் எனப்பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5