ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (குறள்.398)
ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வியானது தொடர்ந்து அவனுக்கு ஏழேழு பிறவிகளுக்கும் அரணாக இருந்து பாதுகாக்கும். அக்கல்வியறிவு உயிரின்கண் நுண்ணுருவில் கிடந்து வரும் பிறவி தோறும் தொடரும் என்பது வள்ளுவரின் நம்பிக்கை. இக்காலத்திலும், மிகச் சிறிய வயதுடைய பாலர் கல்வியில் சிறந்து விளங்குவதையும், பல அருஞ்செயல்கள் புரிவதையும் நாம் பார்க்கின்றோம். முற்பிறப்பில் முற்றிய கல்வியின் பயனாய் இப்பிறப்பின் தொடக்கத்திலேயே இவர்களை உலகம் போற்றுகின்றது.
அகவையில் சிறியவராகவும், பண்பு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றில் பெரியவராகவும் விளங்குபவரை “சிறிய பெருந்தகையார்” என்று அழைக்கின்றோம். இத்தகையோரை மேலைநாட்டார் “Child Prodigy” என்பர். அறிவுசான்ற இளம் பெண்ணை “சிறுமுதுக் குறைவி” என்று குறிப்பிடுவதை அகநானூற்றுப் பாடலிலும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும், திருத்தக்கத் தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியிலும்(பாடல் 1051) காணமுடிகிறது. இளம் பேரறிவாளனை “சிறிய பெருந்தகையார்” என்று சேக்கிழாரும் போற்றியுள்ளார்.
தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிடுகிறாள். இதனை அறிந்த செவிலித்தாய் ஏங்கிப் புலம்பும் பாடலில் “சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி” (அகநானூறு 17, பாடியவர் கயமனார்) என்று தான் வளர்த்த, பருவத்தாலும் உருவத்தாலும் சிறிய அறிவுசான்ற மகளை எண்ணிப் புலம்புகிறாள்.“சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்” (சிலப்பதிகாரம் 16: 67-68) என்ற அடியானது சிலப்பதிகாரத்தில் கோவலன் கூற்றாக அமைந்துள்ளது. சிறிய வயதிலேயே சிறந்த அறிவைப் பெற்றவளாக விளங்கியவள் கண்ணகி என்பதைக் கோவலனின் இக்கூற்றிலிருந்து நாம் அறிய முடிகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் - திவ்யா இவர்களின் மகன் 2 வயதுச் சிறுவன் சஞ்சய் கார்த்திகேயன். இவன் புதிர்போட்டி, பாடல்கள் ஒப்புவிப்பு உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு 11 உலக அருஞ்செயல்களைச் செய்து உலகின் இளைய அருஞ்செயலாளர் என்ற விருதையும் பெற்றுள்ளான். இவனது அருஞ்செயல் “இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்” புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவன் திவ்யதர்ஷன். இவன் 247 தமிழ் எழுத்துகளையும் 28 நொடிகளிலும் ஆங்கிலத்திலுள்ள நீளமான 10 சொற்களை 40 நொடிகளிலும் சொல்லி உலக அருஞ்செயல் படைத்தான். இச்சிறுவர் “சிறிய பெருந்தகையார்” என்று உலத்தாரால் உயர்ந்து புகழ்ந்து போற்றப்படுகின்றனர்.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரிதமிகா என்ற ஆறு வயதேயான சிறுமி தன் பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறாள். இவள் 9 நிமிடங்களில் 1 முதல் 10 ஆம் வாய்பாடு வரை எழுதிக்கொண்டே 100 திருக்குறளையும் கூறி “கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்” அருஞ்செயல் புத்தகத்தில் இடம் பெற்றாள்.
“இந்தியாவின் நடமாடும் கணினி” என்று போற்றப்படுகிறார் பிரியன்ஷி சோமாளி. ஆண்டுதோறும் கணித நுண்ணறிவுத் திறன் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான “மெண்டல் கால்கலேஷன் உலகக் கோப்பை போட்டி” ஜெர்மனியில் நடைபெற்றது. ஏறத்தாழ 16 நாடுகளிலிருந்து 37 கணித வல்லுநர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்றவர் 12 வயது நிரம்பிய பிரியன்ஷி சோமானி.
போரினால் உண்டாகும் அவலங்களையும், பதின் பருவத்தினரின் ஏக்கங்களையும், இழந்த வெளியுலக வாழ்வையும், ஏமாற்றங்களையும், நிறைவேறாத ஆசைகளையும் நாட்குறிப்பில் எழுதிவைத்து தன வலிகள் அனைத்தையும் வரிகளாய் விட்டுச் சென்றாள்; நம்மை விம்ம வைத்துவிட்டுச் சென்றாள் 13 வயது சிறுமி ஆன் ஃபிராங்க். அமெரிக்காவிற்கும் ரசியாவிற்கும் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் நிகழலாம் என்று இருந்த சூழலில், இளம் அமைதித் தூதுராகச் சென்று போர் ஏற்படாமல் தடுத்தவர் 13 வயதுடைய சிறுமி சமந்தா.
இச்சிறுமியரெல்லாம் வள்ளுவன் வாய்ச் சொல்லை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் என்றே தோன்றுகின்றது.
இவர்களெல்லாம் முற்பிறவியில் கசடறக் கற்ற கல்வியின் பயன்தான் இப்பிறப்பிலும் சிறுமுதுக் குறைமையுடையவர்களாகத் திகழக் காரணம் என்றே நான்முகனார் நம்மை நம்ப வைக்கின்றார். எனவே, வள்ளுவர் ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவிக்கும் தொடர்ந்து வரும் என்று கூறிய கருத்தை இப்பிறப்பின் “ சிறிய பெருந்தகையர் ” செய்யும் அருஞ்செயல்கள் உறுதிப்படுத்துகின்றன.
