மாயிருண்டகம் கோத்தா கெலாங்கியில் இராஜேந்திர சோழன்
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தமிழ் மலர் - 05.09.2021
தமிழகக் கோயில்களில் கிடைத்த இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திச் சான்றுகளைக் கொண்டுதான் சோழர் காலத்துப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்த முடிகிறது.
மெய்க்கீர்த்திகள் என்றால் என்ன? தெரிந்து கொள்வோம். ஓர் அரசரைப் பற்றிய கல்வெட்டுகளில் அல்லது செப்பேடுகளில் செதுக்கப் பட்ட செய்திகள் தான் மெய்க்கீர்த்திகள். பெரும்பாலும் அந்த அரசரின் அருமைப் பெருமைகளைச் சொல்லும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும்.
அதாவது ஓர் அரசரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய புகழ்ச் செயல்களையும்; புகழ்ச் சாதனைகளையும் கூறும் கல்வெட்டுகளைத் தான் மெய்க்கீர்த்திகள் (Meikeerththi - True Glory or Prasaththi) என்று அழைக்கிறார்கள். அவற்றைப் புகழ்மாலைகள் என்றுகூட சொல்லலாம்.
இன்னும் ஒரு விசயம். கல்வெட்டுகளைச் செதுக்கியவர்கள், மன்னர்களின் பாராட்டைப் பெறுவதற்காக அவர்கள் இஷ்டப்படி அள்ளி விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக பாண்டியர்களின் ஒரு கல்வெட்டு. அதில் ஒரு வாசகம்.
இராமாயணம் நடந்த காலத்தில் ஒரு பாண்டிய மன்னர் ஆட்சி புரிந்தார். அவர்தான் இராமனுக்கும் இராவணனுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்தார் என்று சொல்கிறது. இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம்.
அப்படிப்பட்ட புகழேந்திகள் இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லா காலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆக அந்த மாதிரி அள்ளிவிடும் கல்வெட்டுகளும் இருக்கவே செய்கின்றன.
ஒரு கல்வெட்டின் உண்மையை உறுதிப்படுத்த மற்ற மற்ற கல்வெட்டுகளையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
இல்லாத ஒன்றைப் புகழ்ந்து புகழுரைகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம், முதலாம் இராஜராஜன் காலத்தில் தோன்றியது. இது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களின் முடிவு.
சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் இருந்து (கி.பி. 993), அவை காணப் படுகின்றன.
இந்த மெய்க்கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கங்கை நோக்கி இராஜேந்திரன் எடுத்த படையெடுப்புகளைச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.
இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள்.
இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திச் செப்பேடுகளின் பெயர்கள்:
1. திருவாலங்காட்டுச் செப்பேடு
2. கரந்தைச் செப்பேடு
3. திருக்களர் செப்பேடு
4. எசாலம் செப்பேடு
இதில் ஆனைமங்கலச் செப்பேடுகள் (Leiden Copper plates), நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்கள்.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தமிழகத் தொல்பொருள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சருக்கு இந்த லெய்டன் செப்பேடுகள் மீட்கப்பட வேண்டும் எனத் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு கடிதம் அனுப்பி இருந்தது.
விரைவில் மீட்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. முயற்சி செய்து வரும் தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷிணிக்கு வாழ்த்துகள்.
இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பட்டியலிடும் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி (Inscription of Rajendra Chola - 1, No: 66). அதில் ஒரு பகுதியில் பின்வருமாறு செதுக்கப்பட்டு உள்ளது.
1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.
1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sri Vijaya
2. பண்ணை (சுமத்திரா) - Pannai
3. மலையூர் (சுமத்திரா) - Malaiyur
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa-Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) - Ilangaasokam
6. மாபப் பாளம் (பேராக்) - Maa-Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு) - Mevili-Bangkam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) - Valaipanthur
9. இலாமுரி தேசம் (ஆச்சே) - Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா - தாய்லாந்து) - Maa-Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa-Nakkavaaram
13. கடாரம் - Kadaaram
மெய்கீர்த்தியில் பொறிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள்.
அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள், சோழர்களில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.
இப்போது உள்ள தமிழ்ப் பிரியர்கள் அந்த எழுத்துகைத் தவிர்த்து வருகின்றனர். நல்லது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்களில் ஒரு பகுதி:
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்
நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்
மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு
(Inscription of Rajendra Chola - 1, South Indian Inscription Vol 1, Inscription No: 66, page 98.)
ஸ்ரீ விஜயத்தின் மீது படையெடுப்பதற்கு முன்னர் இராஜேந்திர சோழனின் கடல்படை, முதலில் நக்காவரம் எனும் நிக்கோபார் தீவில் முகாமிட்டு உள்ளது.
இந்தத் தீவில் சோழப் படைகள் மூன்று அல்லது நான்கு பிரிவுகளாகப் பிரிந்து சென்று தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்புகள் நடத்தினார்கள் என்பது வரலாற்று அறிஞர்கள் சிலரின் கருத்து.
மேலும் ஒரு சாரார் இராஜேந்திர சோழன் படையெடுப்புகளில் கலந்து கொள்ளவே இல்லை. அவர் உளநாட்டுப் போரில் கவனம் செலுத்தி வந்தார் என்பது அறிஞர்கள் சிலரின் கருத்து. இதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.
நிக்கோபார் தீவில் படையெடுப்பு செய்த பின்னர், சோழரின் படைகள், மற்ற மற்ற இடங்களின் மீது படை எடுத்து இருக்கிறார்கள். அவற்றில் ஓர் இடம் மாயிருண்டகம் எனும் கோத்தா கெலாங்கி.
மாயிருண்டகம் எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். மா + இருண்டகம் என இரு சொற்கள் பிரிந்து வருவதைப் பார்க்கலாம். ’மா’ என்றால் ’பெரிய’ என்று பொருள். ’இருண்டகம்’ என்றால் ’இருண்டு கிடக்கும் இடம்’ என்று பொருள்.
(Maayirudingam - Johore kingdom of South Malaysia which was the "Maayirudingam" of Rajendra Chola's Meikeerththi. that existed in the southern most end of then Malaysia, a region without much human habitation and prominance in the early 11th century.)
கி.பி. 950-ஆம் ஆண்டுகளில் மாயிருண்டகத்தில் மாபெரும் கோட்டை இருந்து இருக்கிறது. கரும் கற்பாறைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை.
தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் போது கருமையாகக் காட்சி அளித்து இருக்கின்றது. அதை வைத்துத் தான் அந்த இடத்திற்கு மாயிருண்டகம் எனும் பெயர் வந்து இருக்கலாம்.
கோத்தா கெலாங்கியை லெங்குய் என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இராஜேந்திர சோழன் காலத்திற்கு முன்னரே; பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே; சீன நாட்டு வணிகர்கள் தென்னிந்தியாவில் வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள்.
அப்படிப் போகும் வழியில் கோத்தா கெலாங்கியைப் பார்த்து ’லெங்குய்’ என பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்போது அங்கே ’லிங்கி’ எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தான் ’லெங்குய்’ என்று மருவி இருக்கலாம்.
லெங்குய் எனும் பெயர்தான் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்று உள்ளன. சீன நாட்டவர் பயன்படுத்திய அதே லெங்குய் எனும் பெயரையே மெய்க்கீர்த்திகளிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Maayirudingam a big city in South Malaya with a fortress of blackstone (granite) known as 'Glang Gui' (Lenggui in corrupted form). The kingdom of Maayirudingam at that time was ruled by the king Chulaamanivarman.
மாயிருண்டகத்தைப் பற்றி மெய்க்கீர்த்திகள் என்ன சொல்கின்றன. அதையும் பார்ப்போம்.
மாயிருண்டக அரசு. அதைச் சுற்றிலும் ஆழ்க் கடல்கள். நூற்றுக் கணக்கான வணிகக் கப்பல்கள். பச்சைக் காடுகள் மேவிய தீபகற்பத்தின் தென் பகுதியில் மாயிருண்டக அரசு மையம் கொண்டு இருந்தது.
இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார்.
பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். அவரின் முயற்சிகளைப் பாராட்டினால் மட்டும் போதாது. தமிழ் நல்லுள்ளங்கள் அவருக்கு நிதியுதவி செய்ய வேண்டும். என்னுடைய தாழ்மையான கருத்து. வாழ்க கணேசனின் தமிழினச் சேவை. சரி.
மாயிருண்டகத்தின் தலைநகரம் லெங்குய். கருங்கற்களால் ஆன பெரிய ஒரு கோட்டை தலைநகரத்தைப் பாதுகாத்தது. அந்த நகரத்தின் வலது புறத்தில் ஒரு பெரிய ஆறு.
(நீண்ட கட்டுரை. வலைத்தளத்தில் பதிவாகி உள்ளது)
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.09.2021
சான்றுகள்:
1. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.
2. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia by Hermann Kulke,K Kesavapany,Vijay Sakhuja
3. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen
5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41
#whatsappshare