அண்மையில் உதயன் அவர்கள் முகநூலில் ஒரு கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அது மதுரை அருகேயுள்ள மேட்டுப்பட்டி என்ற ஊரின் அருகிலுள்ள சித்தர்மலை என்ற மலையின் ஏறக்குறைய உச்சியில் உள்ள பாறைக் குகையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.
அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
இதில் கடைசி எழுத்து தமிழி இல்லை. வடபிராமி ’ஸ’. இவ்வாறு வடபிராமி எழுத்துக்கள் சேர்த்து எழுதும் வழக்கம் ஆதியில் இருந்திருக்கிறது. மாங்குளத்தில் வடபிராமி ‘dha' உண்டு. இந்தப்போக்கு நீடித்தால் அது தமிழுக்கு ஆபத்து என்று உணர்ந்த தொல்காப்பியர்
’வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’
என்றார். அதன் பின்னர் இது முற்றிலும் நீக்கப்பட்டது.
அதிஷ்டானம் என்ற சொல் அதிட்டானம் என்று எழுதப்பட்டது.
அதுமட்டும் அல்ல. வட பிராமியில் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லை. எனவே நம் பாட்டன்,
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
என்று மெய்க்குப் புள்ளிவைக்கச் சொன்னார். ஆனால் அது ஏனோ பலகாலம் பின்பற்றப்படவில்லை.
வடபிராமியில் ‘எ’, ‘ஒ’ உயிரும் அவற்றின் உயிர்மெய்யான ‘கெ’, ‘கொ’ ‘செ’, ‘சொ’ ஆகியவை இல்லை.
தொல்காப்பியர் என்ற பெயரையே,
என்று எழுதித்தான் படித்தார்கள்.
இதையும் மாற்றினார் தொல்காப்பியர்.
ஏ, ஓ அல்லது அவற்றின் உயிர்மெய் எழுதி அவற்றின் மேல் புள்ளி வைத்தால் அது எ, ஒ என்றாகும் என்றார் நம் பாட்டன்.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
(பல நூற்றாண்டுகள் கழித்து, இந்த எ, ஒ - வைக் கீழே நீட்டி அல்லது சுழித்துவிட்டு எ. ஓ ஆக்கியவர் வீரமாமுனிவர்.)
வடவெழுத்தை நீக்கவேண்டும் என்று தொல்காப்பியர் அன்று எழுப்பிய பேரணைதான் தமிழைப் பலநூற்றாண்டுகட்குக் காப்பாற்றியது.
ஆமாம், இவற்றையெல்லாம் தொல்காப்பியர்தான் செய்தாரா, அல்லது அவருக்கு முன்பு இருந்த வழக்கத்தை அவர் குறிப்பிடுகிறாரா என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.
தொல்காப்பியத்துப் பாயிரம் எழுதிய அவருடைய உடன்மாணாக்கர் பனம்பாரனார் இவ்வாறு கூறுகிறார்:
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டித்
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி --
இங்கு மயங்கா மரபு என்பது without ambiguity என்ற பொருள் தரும்.
இவற்றையெல்லாம் மேலும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட தொடுப்புகளைசச் சொடுக்குங்கள்.