போன பகுதியில் மணிமேகலை எப்படி மணிபல்லவத்தீவுக்கு வந்தாள் என்றும் கோமுகிப் பொய்கையில் ஆபுத்திரன் கையிலிருந்து இடப்பட்ட அமுதசுரபி மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் பார்த்தோம்.
இந்தப் பகுதியில் அமுதசுரபி எப்படி மணிமேகலை கைக்கு வருகிறது என்று பார்ப்போம்.
இது கொஞ்சம் "அடர்த்தியான பகுதி." பல கதை மாந்தர்களும் பல இடங்களும் பல நிகழ்ச்சிகளும் கலந்தது. மணிமேகலையின் மன மாற்றத்தின் முதல் படியைக் காட்டுகிறது.
கூடியவரை எளிமைப்படுத்திச் சொல்லப் பார்த்திருக்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: மணிபல்லவத்தில் மணிமேகலை -- பகுதி 3
-----------------------------------------------------------------
காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் பறிப்பதற்காக மலர்வனம் போன மணிமேகலையை மணிமேகலாதெய்வம் எடுத்து வந்து மணிபல்லவத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டது!
இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவில் என்ன செய்கிறாள், அமுதசுரபி எப்படி அவள் கைக்கு வருகிறது என்று பார்ப்போம்.
***********************************************
மணிமேகலாதெய்வம் என்ன செய்தாள்?
---------------------------------------------
மணிமேகலையை மணிபல்லவத்தில் வைத்துவிட்டு மணிமேகலாதெய்வம் நேரே உதயகுமரனிடம் போகிறாள்.
உதயகுமரனுக்கோ ... மணிமேகலை நினைப்பு! மணிமேகலையை மலர்வனத்தில் பார்த்துவிட்டு அவளை அடைய முடியாததால் உறக்கம் வராமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறான்.
மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:
"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"
[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]
"தவ-த்-திறம் பூண்டோள்-தன்-மேல் வைத்த
அவ-த்-திறம் ஒழிக ..."
[சுருக்கமான பொருள்: தவ வழியில் போகிற மணிமேகலையின்மேல் நீ வைத்திருக்கிற கீழான எண்ணத்தை விட்டுவிடு.]
இப்படி உதயகுமரனிடம் சொல்லிவிட்டு மலர்வனத்திற்குப் போகிறாள் மணிமேகலாதெய்வம். சுதமதிக்கோ இன்னும் உறக்கம். மணிமேகலாதெய்வம் சுதமதியை எழுப்பித் தான் யார் என்பதைத் தெரிவித்துவிட்டுப் ... பிறகு நடந்ததைச் சொல்கிறாள்.
மணிமேகலைக்குத் தவ வழியில் போகும் நல்ல நேரம் வந்தது; அதனால் அவளை எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத் தீவில் வைத்ததாகச் சொல்லுகிறாள். மணிமேகலை தன் முற்பிறப்பை அறிந்துகொண்டு இன்னும் ஏழு நாட்களில் திரும்பி வருவாள் என்கிறாள். மணிமேகலை வேறு வடிவங்களில் வந்தாலும் உன் கண்ணுக்குப் புலப்படுவாள் என்று உறுதி சொல்கிறாள். மாதவியிடம் போய்த் தான் (மணிமேகலாதெய்வம்) வந்ததையும் மணிமேகலை நற்கதி செல்லும் காலம் அமைந்ததையும் தெரிவிக்கச் சொல்கிறாள். பிறகு "அந்தரத்தில் எழுந்து" போய்விடுகிறாள்.
இதையெல்லாம் கேட்ட சுதமதிக்கு மணிமேகலையைப் பிரிந்த வருத்தம். மாதவர் பள்ளிக்குத் திரும்பிப் போவதற்கு மணிமேகலாதெய்வம் குறித்த வழியிலேயே போகிறாள். வழியில் சக்கரவாளக் கோட்டத்தை அடைகிறாள்.
சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
---------------------------------------------------------------
சக்கரவாளக் கோட்டத்தில் பலரும் புகும்படியாகத் திறந்த வாயிலை உடைய பொது மன்றம் ஒன்று இருக்கிறது. அங்கே தூணில் இருந்த ஒரு பாவை மூலம் சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள்.
முற்பிறப்பில் இரவிவன்மன் என்றவனுக்கு மூன்று பெண்கள்: தாரை, வீரை, இலக்குமி. அவர்கள் இந்தப் பிறவியில் மாதவியாகவும் சுதமதியாகவும் மணிமேகலையாகவும் பிறக்கிறார்கள். தாரை == மாதவி; வீரை == சுதமதி; இலக்குமி == மணிமேகலை.
இந்த முற்பிறவிச் செய்தியைத் தெரிந்துகொண்ட சுதமதிக்குத் திகைப்பு! மாதவர் [பௌத்த] பள்ளியை நோக்கிப் போகிறாள்.
இதற்கு முந்திய நாளில்தான் தூய மலர் பறித்துக் கொண்டுவருவதற்காக மகள் மணிமேகலையை மலர்வனத்துக்கு அனுப்பியிருந்தாள் தாய் மாதவி. அந்த மகள் இன்னும் திரும்பி வரவில்லை. தாய்க்குத் துடிப்பு.
மாதவியிடம் தனியாகப் போய்ச் சேர்ந்த சுதமதி சொன்ன தகவலோ மாதவிக்கு இன்னும் கலக்கம் தந்தது. மாணிக்கத்தை இழந்த நாகம் போல வருந்துகிறாள். மணிமேகலை திரும்பிவருவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே காத்திருக்கிறாள்.
மணிமேகலை ... மணிபல்லவத்தீவில்
-----------------------------------------
மணிபல்லவத்தில் இருள் நீங்குகிறது. காலை மலர்கிறது. கடல் புறம், மணல் பரப்பு. மணிமேகலைக்குத் தூக்கம் கலைகிறது. புதிய இடம். தெரிந்தவர் யாரும் தென்படவில்லை. ஒரே கலக்கம். தவிக்கிறாள்.
"சுதமதி ஒளித்தாய்; துயரம் செய்தனை;
நனவோ கனவோ என்பதை அறியேன்;
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்;
மெல்வளை வாராய்! விட்டு அகன்றனையோ"
[சுருக்கமான பொருள்: சுதமதி! ஒளிந்துகொண்டிருக்கிறாயே. இது என் கனவா? நனவா? தெரியவில்லையே. மனது நடுங்குகிறது. ஏதாவது பதில் சொல்லு. இருட்டு நீங்கிவிட்டது. மாதவி குழம்பிப்போவாள். மென்மையான வளையணிந்தவளே, வா. என்னை விட்டுப் போனாயோ?]
"விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்;
ஒரு தனி அஞ்சுவேன்; திருவே வா!"
[சுருக்கமான பொருள்: வித்தையினால் நமக்கு முன்னால் வந்த அந்தப் பெண் ("மணிமேகலாதெய்வம்") ஏதாவது வஞ்சனை செய்துவிட்டாளா? தெரியவில்லையே. தனியே இருக்க அஞ்சுகிறேன். திருவே, வா!]
மணிமேகலைக்கு என்ன தவிப்பு, பாவம்! மலர்வனத்துக்கு மலர் பறிக்கப் போனவளுக்கு இப்படி ஒரு திருப்பமா?
மணிபல்லவத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறாள்; அவளுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை; அலைந்த அலைச்சலில் ... கட்டி முடித்திருந்த கூந்தல் குலைந்து பின்புறம் தாழுகிறது. அரற்றுகிறாள், கூவி அழுகிறாள்; ஏங்குகிறாள். கண்ணகியுடன் வேற்று நாடு போய்க் கொலைப்பட்ட தந்தை கோவலனை நினைத்து "ஐயாவோ" என்று கதறுகிறாள்.
அப்போது ... அவள் முன்னால் நிகழ்கிறது ஓர் அற்புதம்!
நிலத்திலிருந்து மூன்று முழ உயரத்தில் தோன்றுகிறது தரும பீடிகை!
அந்தத் தரும பீடிகை தரமான பளிங்கினால் செய்யப்பட்டது. "பதும சதுரத்தின்" மேல் அறவோனுக்காக ["புத்த தேவனுக்காக"] அமைந்த ஆசனம். அதன் மேல் நல்ல நறுமணம் உடைய மலர்கள் மட்டுமே விழும். அதன் பக்கத்தில் பறவைகள் சென்று சிறகுகளை அடித்து ஒலி செய்யமாட்டா. அது தேவர்கோன் அங்கே வைத்த மணிப்பீடிகை; அதைப் பார்ப்பவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிவிக்கும். கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப் பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம் உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை.
அந்தத் தரும பீடிகை இப்போது மணிமேகலை முன் தோன்றுகிறது.
தரும பீடிகையைப் பார்த்ததும் மணிமேகலை தன்னையறியாமல், அவள் கைகள் தாமாகவே தலைமேல் குவிகின்றன. கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. இடமிருந்து வலமாக மூன்று முறை அந்தப் பீடிகையை வலம் வருகிறாள். நிலத்தில் விழுந்து வணங்கி எழுகிறாள்.
அப்படி எழுகிறவளுக்கு அவளுடைய பழைய பிறப்புப் பற்றித் தெரிகிறது.
பழைய பிறவியில் ... இலக்குமி
-----------------------------------
காந்தார நாட்டில் பூருவ தேசத்தில் அத்திபதி என்னும் அரசனுக்கு இடவயம் என்பது தலைநகரம். அந்த அரசனுக்கு மைத்துனன் பிரமதருமன். பிரமதருமன் அரசனுக்குத் தரும உபதேசம் செய்யும்போது "இந்த நாவலந்தீவில் இன்றைக்கு ஏழாம் நாளில் நிலநடுக்கம் உண்டாகும். அப்போது இந்த நகரமும் நாக நாட்டில் 400 யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெடும். ஆதலால் நீ இந்த நகரத்தை விட்டு வேறு இடத்துக்குப் போ" என்று சொல்கிறார். அரசனும் அந்த நகரத்தாரும் வடக்கே உள்ள அவந்தி என்ற ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் காயங்கரை என்ற நதிக்கரையை அவர்கள் அடைந்த போது நில நடுக்கம் ஏற்பட்டு இடவயம் என்ற நகரம் அழிந்தது. அதைத் தெரிந்து கொண்ட அரசனும் அவன் மக்களும் பிரமதருமனைச் சரண் அடைந்து நின்றார்கள்.
அசோதர நகரத்து அரசனாகிய இரவிவன்மன் என்பவனுடைய தேவி அமுதபதி என்பவளுக்கு இலக்குமி பிறக்கிறாள். அத்திபதி அரசனுக்கு நீலபதி என்பவளிடம் பிறந்த இராகுலனை இலக்குமி மணந்துகொள்கிறாள். கணவனோடு பிரமதருமனிடம் வந்து தருமம் கேட்கிறாள். பிரமதருமன் சொல்கிறார்: "இராகுலன் இன்றைக்கு 16-ஆம் நாள் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறப்பான். அவனுடன் நீயும் தீயில் புகுந்து உயிர் விடுவாய். பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். அங்கே உனக்கு ஒரு துன்பம் வரும். அப்போது மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்துத் தென் பக்கம் இருக்கும் ஒரு தீவில் வைப்பாள். அங்கே இருக்கும் புத்த பீடிகையைத் தரிசித்துத் தொழுது முற்பிறப்பைப் பற்றி அறிந்துகொள்வாய்."
இராகுலன் யாராகப் பிறப்பான் என்று இலக்குமி கேட்கிறாள். "உன்னை மணிபல்லவத்தில் விட்டுச் செல்லும் தெய்வமே மீண்டும் வந்து உனக்கு அந்த உண்மையைப் புலப்படுத்தும்" என்று பிரமதருமன் சொல்கிறார்.
இந்தப் பிறவியில் -- மணிமேகலை
---------------------------------------
இப்படி... புத்த பீடிகை முன் நின்று தன் பழம் பிறப்புப் பற்றித் தெரிந்துகொண்டு அதைச் சொல்லி அழுகிறாள் மணிமேகலை. "அந்தத் தெய்வம் ["மணிமேகலா தெய்வம்"] இப்போது வாராதோ" என்று புலம்புகிறாள்.
மணிமேகலா தெய்வமும் "இவள் பழைய பிறப்பு உணர்ந்துவிட்டாள்" என்று தெரிந்து, வானிலிருந்து ஒரு பூங்கொடி நிலத்திற்கு வந்தது போலத் திரும்பி வருகிறாள்.
புத்தபீடிகையை வலம்வந்து தொழுகிறாள். அவள் முன்னர் மணிமேகலை நிலத்தில் விழுகிறாள். "என் பெரும் கணவன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்கிறாள்.
"இலக்குமி கேள்!" என்று தொடங்கிய மணிமேகலா தெய்வம் இன்னும் சில பழம்பிறப்புச் செய்திகளை அவளுக்குச் சொல்லி "உதயகுமரன் உன் இராகுலன்" என்று தெரிவிக்கிறாள்.
"ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு"
[சுருக்கமான பொருள்: அவனுக்கு உன்மேல் ஈடுபாடு உண்டு. உனக்கும் அவன்மேல் ஈடுபாடு உண்டு.]
அது ...
"கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெண் களர் வீழ்வது போன்ம் என"
[சுருக்கமான பொருள்: அது கந்தசாலி என்ற நெல்லின் மிகச் சிறந்த விதை ஒன்று வேகும் வெண்மைக் களர் நிலத்தில் விழுந்தது போல் ஆகிவிடும்.]
ஆனால் நீயோ "அறத்தின் வித்து." உன்மனம் ஒரு நல்ல வழியில் செல்வதற்கு ஏதுவாகச் செய்தேன்.
இது சொல்லிய மணிமேகலா தெய்வம் மேலும் "இலக்குமி கேள். தாரையும் வீரையும் உனக்குத் தவ்வையர் ["மூத்தவர்"]. இருவரும் கச்சய மன்னன் துச்சயனுக்கு மனைவியர். மனைவியருடன் துச்சயன் மலைவளம் கண்டு பின் கங்கையாற்றங்கரையில் இருந்தபோது அறவண அடிகள் அங்கே போனார். அவரைப் பார்த்ததும் துச்சயன் வணங்கி அவரை யார் என்ற விவரம் கேட்டான். "ஆதி முதல்வனும் அறவாழி ஆள்வோனும் ஆகிய புத்த தேவனின் பாதத் தாமரை இருக்கும் பாதபங்கய மலையைக் கண்டு தொழுது வலம் கொள்ள வந்தேன். நீங்களும் தொழுங்கள்" என்று அறவண அடிகள் சொன்னார். அவர் சொல்லியபடியே துச்சயனும் அவன் மனைவியரும் செய்தார்கள். அப்படித் தொழுததின் பயனே அந்தப் பெண்கள் (தாரையும் வீரையும்) பிறகு மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்தார்கள்" என்று விளக்குகிறாள்.
தொடர்ந்து ... மணிமேகலைக்கு இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை மணிமேகலா தெய்வம் கூறுகிறாள்.
"நீ உன் பிறப்பை உணர்ந்தாய். இனி, பல வேறு சமயங்களின் பொய்க் கூற்றுக்களைக் கேட்பாய். அப்போது இவள் இளையவள்; வளையோள் என்று உனக்கு யாரும் தம் சமயங்களின் பொருள்களை விளக்கிச் சொல்லமாட்டார்கள். [அதனால்] இந்த மந்திரங்களைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி மாற்று வடிவம் கொள்ளவும், அந்தரத்தில் திரியவும், கடும் பசியை நீக்கவும் ஆகும் 3 மந்திரங்களைக் கொடுக்கிறாள்.
பிறகு அந்தரத்தில் எழுந்து போய்விடுகிறாள்.
மணிமேகலா தெய்வம் போனபின் மணிமேகலை மணிபல்லவத்தில்
-------------------------------------------------------------------------
"வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப் பொய்கையும்" இறங்கிப் பார்க்கிறாள் மணிமேகலை.
இப்படி ஒரு காவதம் திரிகிறாள்.
அப்போது...
தீவதிலகை தோன்றுகிறாள். மணிமேகலையை "யார்" என்று கேட்கிறாள்.
மணிமேகலையோ ...
"எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது?
...
போய பிறவியில் பூமியங்கிழவன்
இராகுலன் மனை யான்; இலக்குமி என் பேர்"
[சுருக்கமான பொருள்: எந்தப் பிறப்பில் நான் யார் என்று கேட்கிறாய்? போன பிறவியில் பூமி ஆளும் உரிமை பெற்ற இராகுலனுக்கு மனைவி; இலக்குமி என்பது என் பெயர்.]
"ஆய பிறவியில் ஆடல்-அம்-கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்"
[சுருக்கமான பொருள்: இப்போது ஆகிய பிறவியில், ஆடல் கணிகை மாதவி பெற்ற மகள் மணிமேகலை.]
... என்று சொல்கிறாள்.
பிறகு மணிமேகலா தெய்வம் தன்னை அங்கே கொண்டுவந்தது பற்றிச் சொல்லி, "நீ யார்?" என்று கேட்கிறாள்.
தீவதிலகை தான் அந்தத் தீவுக்கு வந்த வகையைத் தெரிவிக்கிறாள். அங்கே புத்த பீடிகையைக் காவல் செய்வதையும் சொல்லிப் புத்த பீடிகையின் சிறப்பை விவரிக்கிறாள்.
"ஈங்கு இதன் அயலது இரத்தின தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்
தொழுது வலம்கொண்டு வந்தேன்"
[சுருக்கமான பொருள்: இந்தத் தீவுக்கு அருகில் உள்ளது இரத்தின தீவம். அங்கே சமந்த மலையின் மேல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புத்தனது பாதங்கள் உண்டு. அப் பாதங்களைத் தொழுது வலம் செய்து விட்டு இங்கே வந்தேன்.]
" ... ஈங்குப்
பழுது-இல்-காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர்"
[சுருக்கமான பொருள்: இங்கே குற்றமற்ற காட்சி தரும் இந்த நல்ல மணிப்பீடிகையைக் காவல் காக்கும்படித் தேவர்களின் தலைவன் எனக்குக் கட்டளை இட்டான். அது போல இதைக் காவல் செய்கிறேன். என் பெயர் தீவதிலகை.]
"தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை சால் நல்லறம் பிறழா நோன்பினர்
கண்டு கை தொழுவோர் கண்டதன் பின்னர்-ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; பைந்தொடி
அரியர் உலகத்து; ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக"
[சுருக்கமான பொருள்: தரும தலைவன் சொன்ன பெருமை நிறைந்த நல்ல அறத்திலிருந்து தவறாத நோன்பு மேற்கொண்டவர்களே இந்தப் பீடிகையைக் கண்டுகொண்டு கைதொழுது வணங்குவார்கள். அவர்கள் தங்கள் பழம் பிறப்பை உணர்வார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகத்தில் அரிதாகவே உள்ளார்கள். அப்படிப் பட்டவர்களுக்கே இந்த உலகத்தில் அறமொழி உறுதியாக உரியது.]
இப்படி ... புத்த பீடிகையின் சிறப்பையும் தான் அந்தப் பீடிகையைக் காவல் செய்து வருவதையும் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள்.
"ஆங்கனம் ஆகிய அணியிழை, இது கேள்"
[சுருக்கமான பொருள்: அப்படி அரியவளாக அமைந்தவளே, இதைக் கேள்.]
தொடர்ந்து ... கோமுகிப் பொய்கை பற்றியும் அதில் மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அமுதசுரபி பற்றியும் சொல்கிறாள்.
மணிமேகலை கையில் அமுதசுரபி ...
-----------------------------------------
தீவதிலகை மணிமேகலைக்குக் கோமுகிப் பொய்கை பற்றிச் சொல்கிறாள்.
"ஈங்கு இப் பெரும் பெயர்-ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி"
[சுருக்கமான பொருள்: இந்தப் பெயர் பெற்ற பீடிகைக்கு முன் இருப்பது கோமுகி என்ற நீர் வளம் மிகுந்த பொய்கை.]
"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன்கை அமுத சுரபி எனும்
மா-பெரும் பாத்திரம் ...
அந்நாள் இந்நாள்; அப்பொழுது இப்பொழுது;
நின்னாங்கு வருவது போலும்"
[இளவேனில் பருவத்தில், வெயில் எரிக்கும் இடப ராசிக் காலத்தில், முதல் 13 மீன்கள் ("நட்சத்திரங்கள்") கழிந்தபின் விசாக நாளில் போதித் தலைவன் பிறந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் தோன்றும். இன்றுதான் அந்த நாள். அந்தக் குறிப்பிட்ட பொழுது இப்பொழுது. உன்னிடம் அது வரும் போலத் தெரிகிறது.]
இப்படி ... தீவதிலகை கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிவரும் நாளும் பொழுதும் நெருங்கியதை மணிமேகலைக்குத் தெரிவித்து, அந்தப் பாத்திரத்தின் சிறப்பை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு சொல்கிறாள்.
மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வந்து தொழுது வணங்கித் தன் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி நிற்கிறாள்.
அப்படித் தொழுத இளம்பெண் மணிமேகலையின் செம்மையான கைகளில் அமுதசுரபி புகுகிறது.
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் தயங்காமல் மனம் மகிழ்வு எய்தி, புத்த தேவனைப் போற்றத்தொடங்குகிறாள்.
"மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி!
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி!
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"
[சுருக்கமான பொருள்: மாரனை வென்றவனே, தீய வழிகளைக் கடிந்தவனே, பிறருக்கு அறவழி காட்டுபவனே, துறக்கம் விரும்பாதவனே, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனே, பிறருக்குக் கண் அளிக்கும் கண் ஆனவனே, தீய மொழிகளை கேட்காதவனே, சிறந்த சொற்களைச் சொல்பவனே, நரகர்களின் துயரத்தைத் துடைப்பவனே, உரகர்களின் ("நாகர்களின்") துன்பம் துடைப்பவனே, உன்னை வணங்குதல் தவிர வாழ்த்துதல் என் நாவிற்கு அப்பாற்பட்டது.]
தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அந்தண அரசன்கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.
"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
[சுருக்கமான பொருள்: வலிமை உடைய மக்களுக்கு உணவு கொடுப்பவர் அறத்துக்கு விலை பேசுபவர்கள். இயலாதவர்களின் கொடிய பசியை நீக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே உண்மையான மெய்ந்நெறி வாழ்க்கை. எனவே ... உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.]
தீவதிலகையின் கூற்றைக் கேட்ட மணிமேகலை முற்பிறப்பில் தான் இலக்குமியாய் இருந்து கணவன் இராகுலன் இறந்தபோது தான் தீப்புகுந்ததைச் சொல்லி அந்த நேரத்தில் சாதுசக்கரன் என்ற அறவோனுக்கு உணவு ஊட்டியதைக் கனவு போலக் கண்டதன் பயனே இங்கே இன்றைக்கு இப்போது அமுதசுரபி தன் கையில் வந்தது என்று விளக்கம் கொடுக்கிறாள்.
பிறகு அமுதசுரபியை வைத்துத் தான் என்ன செய்ய விரும்புகிறாள் என்றும் சொல்கிறாள்.
"நாவலந்தீவில் பசியினால் வறுமையில் வாடிக் கந்தைத் துணி உடுத்திப் பிறர் வீடுகளில் பிச்சை கேட்டு உண்ணும் நிலையில் மக்கள் இருப்பதனால் அவர்களால் அறவழியில் செல்ல முடியவில்லை; தான் பெற்ற குழந்தை முகத்தைப் பார்த்தவுடன் தாய்க்குப் பால் சுரப்பதைப் போல்... அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இந்தப் பாத்திரத்திலும் உணவு சுரப்பதைக் காண விரும்புகிறேன்."
அதைக் கேட்ட தீவதிலகைக்கு மகிழ்ச்சி.
"மறந்தேன் அதன் திறம்; நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை; அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்"
[சுருக்கமான பொருள்: இந்தப் பாத்திரத்தின் வரலாற்றை மறந்திருந்தேன். எடுத்துச் சொன்னாய்! அறத்தின் அடிப்படையில், அருளொடு உணவு கொடுக்கும் இயல்பு உடையவர்கள் தவிர மற்றவருக்காக இந்தப் பாத்திரம் சுரக்காது. உனக்கு அந்த நல்ல திறம் இருக்கிறது. இதன் பயனையும் நன்கு அறிந்திருக்கிறாய். இனி, இங்கேயிருந்து எழுந்து செல்வாய்.]
தீவதிலகை விடை கொடுக்கிறாள். மணிமேகலை தீவதிலகையின் அடிகளை வணங்குகிறாள். அமுதசுரபியுடன் மணிபல்லவத்தை விட்டு நீங்கி, வான வழியில் செல்கிறாள்.
காவிரிப் பூம்பட்டினத்தில் ...
--------------------------------
மலர்வனத்துக்கு மகளை அனுப்பிவிட்டு அவளைத் திரும்பக் காணாமல் 7 நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள் தாய் மாதவி.
மாதவி முன் தோன்றுகிறாள் மணிமேகலை.
7 நாட்கள் முன்னால் ... தாய், தந்தையரின் துன்பம் கேட்டுத் துயர்க் கண்ணீர் விட்டதனால் மலர்களின் தூய்மை சிதைந்தது; அதனால்தானே புதிய தூய மலர்கள் பறித்துக் கொண்டுவருவதற்காக அவள் மலர்வனத்துக்கு அனுப்பப்பட்டாள்! அதே மணிமேகலை ... இப்போது தாயைத் தாய் என்று கூடக் குறிக்கவில்லை!
பேச்சின் தொடக்கமே அவர்களின் முற்பிறப்பின் உறவு முறையின் அடிப்படையில் அமைகிறது!
"இரவி வன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்றில் அரிதில் தோன்றி-த்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர்; நும் அடி தொழுதேன்"
[சுருக்கமான பொருள்: இரவிவன்மனின் மகளே! துச்சயனுக்கு மனைவி! அமுதபதிக்கு மக்களாக, தாரை வீரை என்ற பெயரில் எனக்குத் தவ்வையர் ("மூத்தவர்") ஆக இருந்தீர். (இப்போது) எனக்கு நீங்கள் அவ்வையர் ("அம்மையர்"). உங்கள் அடிகளை வனங்குகிறேன்.]
எத்தகைய மாற்றம், ஏழே நாட்களில்!
தொடர்ந்து வாழ்த்துகிறாள் மாதவியையும் சுதமதியையும்.
அறவண அடிகளிடம் போய் அவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறாள்.
அமுதசுரபியைப் பற்றிச் சுருக்கமாக "இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் மிகச் சிறந்த பாத்திரம். இதை நீங்களும் தொழுங்கள்" என்று அவள் சொல்லியபடியே மாதவியும் சுதமதியும் தொழுகிறார்கள்.
பிறகு மூவரும் அறவண அடிகள் எங்கே இருக்கிறார் என்று தேடிச் செல்கிறார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மணிமேகலை: மணிபல்லவத்தில் மணிமேகலை -- பகுதி 3
-------------------------------------------
காவிரிப்பூம்பட்டினத்தில் மலர் பறிப்பதற்காக மலர்வனம் போன மணிமேகலையை மணிமேகலாதெய்வம் எடுத்து வந்து மணிபல்லவத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டது!
இந்தப் பகுதியில் மணிமேகலை மணிபல்லவத்தீவில் என்ன செய்கிறாள், எப்படி அமுதசுரபி அவள் கைக்கு வந்தது என்று பார்ப்போம்.
****************************
மணிமேகலாதெய்வம் என்ன செய்தாள்?
----------------------------
மணிமேகலையை மணிபல்லவத்தில் வைத்துவிட்டு மணிமேகலாதெய்வம் நேரே உதயகுமரனிடம் போகிறாள்.
உதயகுமரனுக்கோ ... மணிமேகலை நினைப்பு! மணிமேகலையை மலர்வனத்தில் பார்த்துவிட்டு அவளை அடைய முடியாததால் உறக்கம் வராமல் மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறான்.
மணிமேகலாதெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை சொல்கிறாள்:
"கோன் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்-ஆள்-வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும்"
[சுருக்கமான பொருள்: மன்னன் தன் நிலையில் மாறுபட்டால் கோள்கள் ("கிரகங்கள்") தங்கள் நிலையில் மாறுபடும். கோள்கள் தங்கள் நிலையில் மாறுபட்டால் நாட்டில் மழையில்லாமல் வறட்சி உண்டாகும். வறட்சி உண்டானால் உலகத்தில் உயிர்கள் வாழமுடியாது. உலக உயிர்கள் எல்லாம் மன்னனின் உயிர் என்ற தகுதி இல்லாமல் போகும்.]
"தவ-த்-திறம் பூண்டோள்-தன்-மேல் வைத்த
அவ-த்-திறம் ஒழிக ..."
[சுருக்கமான பொருள்: தவ வழியில் போகிற மணிமேகலையின்மேல் வைத்த கீழான எண்ணத்தை விட்டுவிடு.]
இப்படி உதயகுமரனிடம் சொல்லிவிட்டு மலர்வனத்திற்குப் போகிறாள் மணிமேகலாதெய்வம். சுதமதிக்கோ இன்னும் உறக்கம். மணிமேகலாதெய்வம் சுதமதியை எழுப்பித் தான் யார் என்பதைத் தெரிவித்துவிட்டுப் ... பிறகு நடந்ததைச் சொல்கிறாள்.
மணிமேகலைக்குத் தவ வழியில் போகும் நல்ல நேரம் வந்தது; அதனால் அவளை எடுத்துக்கொண்டுபோய் மணிபல்லவத் தீவில் வைத்ததாகச் சொல்லுகிறாள். மணிமேகலை தன் முற்பிறப்பை அறிந்துகொண்டு இன்னும் ஏழு நாட்களில் திரும்பி வருவாள் என்கிறாள். மணிமேகலை வேறு வடிவங்களில் வந்தாலும் உன் கண்ணுக்குப் புலப்படுவாள் என்று உறுதி சொல்கிறாள். மாதவியிடம் போய்த் தான் (மணிமேகலாதெய்வம்) வந்ததையும் மணிமேகலை நற்கதி செல்லும் காலம் அமைந்ததையும் தெரிவிக்கச் சொல்கிறாள். பிறகு "அந்தரத்தில் எழுந்து" போய்விடுகிறாள்.
இதையெல்லாம் கேட்ட சுதமதிக்கு மணிமேகலையைப் பிரிந்த வருத்தம். மாதவர் பள்ளிக்குத் திரும்பிப் போவதற்கு மணிமேகலாதெய்வம் குறித்த வழியிலேயே போகிறாள். வழியில் சக்கரவாளக் கோட்டத்தை அடைகிறாள்.
சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
---------------------------------------
சக்கரவாளக் கோட்டத்தில் பலரும் புகும்படியாகத் திறந்த வாயிலை உடைய பொது மன்றம் ஒன்று இருக்கிறது. அங்கே தூணில் இருந்த ஒரு பாவை மூலம் சுதமதி தன் முற்பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள்.
முற்பிறப்பில் இரவிவன்மன் என்றவனுக்கு மூன்று பெண்கள்: தாரை, வீரை, இலக்குமி. அவர்கள் இந்தப் பிறவியில் மாதவியாகவும் சுதமதியாகவும் மணிமேகலையாகவும் பிறக்கிறார்கள். தாரை == மாதவி; வீரை == சுதமதி; இலக்குமி == மணிமேகலை.
இந்த முற்பிறவிச் செய்தியைத் தெரிந்துகொண்ட சுதமதிக்குத் திகைப்பு! மாதவர் [பௌத்த] பள்ளி நோக்கிப் போகிறாள்.
இதற்கு முந்திய நாளில்தான் தூய மலர் பறித்துக் கொண்டுவருவதற்காக மகள் மணிமேகலையை மலர்வனத்துக்கு அனுப்பியிருந்தாள் தாய் மாதவி. அந்த மகள் இன்னும் திரும்பி வரவில்லை. தாய்க்குத் துடிப்பு.
மாதவியிடம் தனியாகப் போய்ச் சேர்ந்த சுதமதி சொன்ன தகவலோ மாதவிக்கு இன்னும் கலக்கம் தந்தது. மாணிக்கத்தை இழந்த நாகம் போல வருந்துகிறாள். மணிமேகலை திரும்பிவருவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே காத்திருக்கிறாள்.
மணிமேகலை ... மணிபல்லவத்தீவில்
---------------------------
மணிபல்லவத்தில் இருள் நீங்குகிறது. காலை மலர்கிறது. கடல் புறம், மணல் பரப்பு. மணிமேகலைக்குத் தூக்கம் கலைகிறது. புதிய இடம். தெரிந்தவர் யாரும் தென்படவில்லை. ஒரே கலக்கம். தவிக்கிறாள்.
"சுதமதி ஒளித்தாய்; துயரம் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல்வளை வாராய்; விட்டு அகன்றனையோ"
[சுருக்கமான பொருள்: சுதமதி! ஒளிந்துகொண்டிருக்கிறாயே. இது என் கனவா? நனவா? தெரியவில்லையே. மனது நடுங்குகிறது. ஏதாவது பதில் சொல்லு. இருட்டு நீங்கிவிட்டது. மாதவி குழம்பிப்போவாள். மென்மையான வளையணிந்தவளே, வா. என்னை விட்டுப் போனாயோ?]
"விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்;
ஒரு தனி அஞ்சுவேன்; திருவே வா!"
[சுருக்கமான பொருள்: வித்தையினால் நமக்கு முன்னால் வந்த அந்தப் பெண் ("மணிமேகலாதெய்வம்") ஏதாவது வஞ்சனை செய்துவிட்டாளா? தெரியவில்லையே. தனியே இருக்க அஞ்சுகிறேன். திருவே, வா!]
மணிமேகலைக்கு என்ன தவிப்பு, பாவம்! மலர்வனத்துக்கு மலர் கொய்யப் போனவளுக்கு இப்படி ஒரு திருப்பமா?
மணிபல்லவத்தில் எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறாள்; அவளுக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை; அலைந்த அலைச்சலில் ... கட்டி முடித்திருந்த கூந்தல் குலைந்து பின்புறம் தாழுகிறது. அரற்றுகிறாள், கூவி அழுகிறாள்; ஏங்குகிறாள். கண்ணகியுடன் வேற்று நாடு போய்க் கொலைப்பட்ட தந்தை கோவலனை நினைத்து "ஐயாவோ" என்று கதறுகிறாள்.
அப்போது ... அவள் முன்னால் நிகழ்கிறது ஓர் அற்புதம்!
நிலத்திலிருந்து மூன்று முழ உயரத்தில் தோன்றுகிறது தரும பீடிகை!
அந்தத் தரும பீடிகை தரமான பளிங்கினால் செய்யப்பட்டது. "பதும சதுரத்தின்" மேல் அறவோனுக்காக ["புத்த தேவனுக்காக"] அமைந்த ஆசனம். அதன் மேல் நல்ல நறுமணம் உடைய மலர்கள் மட்டுமே விழும். அதன் பக்கத்தில் பறவைகள் சென்று சிறகுகளை அடித்து ஒலி செய்யமாட்டா. அது தேவர்கோன் அங்கே வைத்த மணிப்பீடிகை; அதைப் பார்ப்பவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிவிக்கும். கீழ்த் திசையில் நாகநாட்டு மன்னர்கள் இரண்டுபேர் அது தன்னது என்று எடுத்துக்கொள்ளப் பார்த்துத் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டார்கள். அப்போது "பெருந்தவ முனிவன்" ["புத்த தேவன்"] தோன்றி, சண்டை போட வேண்டாம்; "இது எமது" என்று சொல்லி அதில் இருந்து அறம் உரைத்தான். அப்படிப் பட்ட பெருமை உடையது அந்தத் தரும பீடிகை.
அந்தத் தரும பீடிகை இப்போது மணிமேகலை முன் தோன்றுகிறது.
தரும பீடிகையைப் பார்த்ததும் மணிமேகலை தன்னையறியாமல் போகிறாள்; தாமாகவே அவள் கைகள் தலைமேல் குவிகின்றன. கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. இடமிருந்து வலமாக மூன்று முறை அந்தப் பீடிகையை வலம் வருகிறாள். நிலத்தில் விழுந்து வணங்கி எழுகிறாள்.
அப்படி எழுகிறவளுக்கு அவளுடைய பழைய பிறப்புப் பற்றித் தெரிகிறது.
பழைய பிறவியில் ... இலக்குமி
------------------------
காந்தார நாட்டில் பூருவ தேசத்தில் அத்திபதி என்னும் அரசனுக்கு இடவயம் என்பது தலைநகரம். அந்த அரசனுக்கு மைத்துனன் பிரமதருமன். பிரமதருமன் அரசனுக்குத் தரும உபதேசம் செய்யும்போது "இந்த நாவலந்தீவில் இன்றைக்கு ஏழாம் நாளில் நிலநடுக்கம் உண்டாகும். அப்போது இந்த நகரமும் நாக நாட்டில் 400 யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெடும். ஆதலால் நீ இந்த நகரத்தை விட்டு வேறு இடத்துக்குப் போ" என்று சொல்கிறார். அரசனும் அந்த நகரத்தாரும் வடக்கே உள்ள அவந்தி என்ற ஊருக்குப் புறப்படுகிறார்கள். வழியில் காயங்கரை என்ற நதிக்கரையை அவர்கள் அடைந்த போது நில நடுக்கம் ஏற்பட்டு இடவயம் என்ற நகரம் அழிந்தது. அதைத் தெரிந்து கொண்ட அரசனும் அவன் மக்களும் பிரமதருமனைச் சரண் அடைந்து நின்றார்கள்.
அசோதர நகரத்து அரசனாகிய இரவிவன்மன் என்பவனுடைய தேவி அமுதபதி என்பவளுக்கு இலக்குமி பிறக்கிறாள். அத்திபதி அரசனுக்கு நீலபதி என்பவளிடம் பிறந்த இராகுலனை இலக்குமி மணந்துகொள்கிறாள். கணவனோடு பிரமதருமனிடம் வந்து தருமம் கேட்கிறாள். பிரமதருமன் சொல்கிறார்: "இராகுலன் இன்றைக்கு 16-ஆம் நாள் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி இறப்பான். அவனுடன் நீயும் தீயில் புகுந்து உயிர் விடுவாய். பிறகு காவிரிப்பூம்பட்டினத்தில் பிறப்பாய். அங்கே உனக்கு ஒரு துன்பம் வரும். அப்போது மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்துத் தென் பக்கம் இருக்கும் ஒரு தீவில் வைப்பாள். அங்கே இருக்கும் புத்த பீடிகையைத் தரிசித்துத் தொழுது முற்பிறப்பைப் பற்றி அறிந்துகொள்வாய்."
இராகுலன் யாராகப் பிறப்பான் என்று இலக்குமி கேட்கிறாள். "உன்னை மணிபல்லவத்தில் விட்டுச் செல்லும் தெய்வமே மீண்டும் வந்து உனக்கு அந்த உண்மையைப் புலப்படுத்தும்" என்று பிரமதருமன் சொல்கிறார்.
இந்தப் பிறவியில் -- மணிமேகலை
--------------------------
இப்படி... புத்த பீடிகை முன் நின்று தன் பழம் பிறப்புப் பற்றித் தெரிந்துகொண்டு அதைச் சொல்லி அழுகிறாள் மணிமேகலை. "அந்தத் தெய்வம் ["மணிமேகலா தெய்வம்"] இப்போது வாராதோ" என்று புலம்புகிறாள்.
மணிமேகலா தெய்வமும் "இவள் பழைய பிறப்பு உணர்ந்துவிட்டாள்" என்று வானிலிருந்து ஒரு பூங்கொடி நிலத்திற்கு வந்தது போலத் திரும்பி வருகிறாள்.
புத்தபீடிகையை வலம்வந்து தொழுகிறாள். அவள் முன்னர் மணிமேகலை நிலத்தில் விழுகிறாள். "என் பெரும் கணவன் எங்கே இருக்கிறான்?" என்று கேட்கிறாள்.
"இலக்குமி கேள்!" என்று தொடங்கிய மணிமேகலா தெய்வம் இன்னும் சில பழம்பிறப்புச் செய்திகளை அவளுக்குச் சொல்லி "உதயகுமரன் உன் இராகுலன்" என்று தெரிவிக்கிறாள்.
"ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு"
[சுருக்கமான பொருள்: அவனுக்கு உன்மேல் ஈடுபாடு உண்டு. உனக்கும் அவன்மேல் ஈடுபாடு உண்டு.]
அது ...
"கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெண் களர் வீழ்வது போன்ம் என"
[சுருக்கமான பொருள்: அது கந்தசாலி என்ற நெல்லின் மிகச் சிறந்த விதை ஒன்று வேகும் வெண்மைக் களர் நிலத்தில் விழுந்தது போல் ஆகிவிடும்.]
ஆனால் நீயோ "அறத்தின் வித்து." உன்மனம் ஒரு நல்ல வழியில் செல்வதற்கு ஏதுவாகச் செய்தேன்.
இது சொல்லிய மணிமேகலா தெய்வம் மேலும் "இலக்குமி கேள். தாரையும் வீரையும் உனக்குத் தவ்வையர் ["மூத்தவர்"]. இருவரும் கச்சய மன்னன் துச்சயனுக்கு மனைவியர். மனவியருடன் துச்சயன் மலைவளம் கண்டு பின் கங்கையாற்றங்கரையில் இருந்தபோது அறவண அடிகள் அங்கே போனார். அவரைப் பார்த்ததும் துச்சயன் வணங்கி அவரை யார் என்ற விவரம் கேட்டான். "ஆதி முதல்வனும் அறவாழி ஆள்வோனும் ஆகிய புத்த தேவனின் பாதத் தாமரை இருக்கும் பாதபங்கய மலையைக் கண்டு தொழுது வலம் கொள்ள வந்தேன். நீங்களும் தொழுங்கள்" என்று அறவண அடிகள் சொன்னார். அவர் சொல்லியபடியே துச்சயனும் அவன் மனைவியரும் செய்தார்கள். அப்படித் தொழுததின் பயனே அந்தப் பெண்கள் (தாரையும் வீரையும்) பிறகு மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்தார்கள்" என்று விளக்குகிறாள்.
தொடர்ந்து ... மணிமேகலைக்கு இனி வரப்போகும் நிகழ்ச்சிகளை மணிமேகலா தெய்வம் கூறுகிறாள்.
"நீ உன் பிறப்பை உணர்ந்தாய். இனி, பல வேறு சமயங்களின் பொய்க் கூற்றுக்களைக் கேட்பாய். அப்போது இவள் இளையவள்; வளையோள் என்று உனக்கு யாரும் தம் சமயங்களின் பொருள்களை விளக்கிச் சொல்லமாட்டார்கள். [அதனால்] இந்த மந்திரங்களைப் பெற்றுக் கொள்" என்று சொல்லி மாற்று வடிவம் கொள்ளவும், அந்தரத்தில் திரியவும், கடும் பசியை நீக்கவும் ஆகும் 3 மந்திரங்களைக் கொடுக்கிறாள்.
பிறகு அந்தரத்தில் எழுந்து போய்விடுகிறாள்.
மணிமேகலா தெய்வம் போனபின் மணிமேகலை மணிபல்லவத்தில்
----------------------------------------------
"வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
தண் மலர்ப் பொய்கையும்" இறங்கிப் பார்க்கிறாள் மணிமேகலை.
இப்படி ஒரு காவதம் திரிகிறாள்.
அப்போது...
தீவதிலகை தோன்றுகிறாள். மணிமேகலையை "யார்" என்று கேட்கிறாள்.
மணிமேகலையோ ...
"எப் பிறப்பு அகத்துள் யார் நீ என்றது?
...
போய பிறவியில் பூமியங்கிழவன்
இராகுலன் மனை யான்; இலக்குமி என் பேர்"
[சுருக்கமான பொருள்: எந்தப் பிறப்பில் நான் யார் என்று கேட்கிறாய்? போன பிறவியில் பூமி ஆளும் உரிமை பெற்ற இராகுலனுக்கு மனைவி; இலக்குமி என்பது என் பெயர்.]
"ஆய பிறவியில் ஆடல்-அம்-கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்"
[சுருக்கமான பொருள்: இப்போது ஆகிய பிறவியில், ஆடல் கணிகை மாதவி பெற்ற மகள் மணிமேகலை.]
... என்று சொல்கிறாள்.
பிறகு மணிமேகலா தெய்வம் தன்னை அங்கே கொண்டுவந்தது பற்றிச் சொல்லி, "நீ யார்?" என்று கேட்கிறாள்.
தீவதிலகை தான் அந்தத் தீவுக்கு வந்த வகையைத் தெரிவிக்கிறாள். அங்கே புத்த பீடிகையைக் காவல் செய்வதையும் சொல்லிப் புத்த பீடிகையின் சிறப்பை விவரிக்கிறாள்.
"ஈங்கு இதன் அயலது இரத்தின தீவத்து
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங்கிழவோன் அடி இணை ஆகிய
பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம்
அறவி நாவாய் ஆங்குளது ஆதலின்
தொழுது வலம்கொண்டு வந்தேன்"
[சுருக்கமான பொருள்: இந்தத் தீவுக்கு அருகில் உள்ளது இரத்தின தீவம். அங்கே சமந்த மலையின் மேல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புத்தனது பாதங்கள் உண்டு. அப் பாதங்களைத் தொழுது வலம் செய்து விட்டு இங்கே வந்தேன்.]
" ... ஈங்குப்
பழுது-இல்-காட்சி இந் நல் மணிப் பீடிகை
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
தீவதிலகை என் பெயர்"
[சுருக்கமான பொருள்: இங்கே குற்றமற்ற காட்சி தரும் இந்த நல்ல மணிப்பீடிகையைக் காவல் காக்கும்படித் தேவர்களின் தலைவன் எனக்குக் கட்டளை இட்டான். அது போல இதைக் காவல் செய்கிறேன். என் பெயர் தீவதிலகை.]
"தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை சால் நல்லறம் பிறழா நோன்பினர்
கண்டு கை தொழுவோர் கண்டதன் பின்னர்-ப்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; பைந்தொடி
அரியர் உலகத்து; ஆங்கு அவர்க்கு அறமொழி
உரியது உலகத்து ஒருதலையாக"
[சுருக்கமான பொருள்: தரும தலைவன் சொன்ன பெருமை நிறைந்த நல்ல அறத்திலிருந்து தவறாத நோன்பு மேற்கொண்டவர்களே இந்தப் பீடிகையைக் கண்டுகொண்டு கைதொழுது வணங்குவார்கள். அவர்கள் தங்கள் பழம் பிறப்பை உணர்வார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகத்தில் அரிதாகவே உள்ளார்கள். அப்படிப் பட்டவர்களுக்கே இந்த உலகத்தில் உறுதியாக அறமொழி உரியது.]
இப்படி ... புத்த பீடிகையின் சிறப்பையும் தான் அந்தப் பீடிகையைக் காவல் செய்து வருவதையும் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துச் சொல்கிறாள்.
"ஆங்கனம் ஆகிய அணியிழை, இது கேள்"
[சுருக்கமான பொருள்: அப்படி அரியவளாக அமைந்தவளே, இதைக் கேள்.]
தொடர்ந்து ... கோமுகிப் பொய்கை பற்றியும் அதில் மணிமேகலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அமுதசுரபி பற்றியும் சொல்கிறாள்.
மணிமேகலை கையில் அமுதசுரபி ...
--------------------------
தீவதிலகை மணிமேகலைக்குக் கோமுகிப் பொய்கை பற்றிச் சொல்கிறாள்.
"ஈங்கு இப் பெரும் பெயர்-ப் பீடிகை முன்னது
மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி"
[சுருக்கமான பொருள்: இந்தப் பெயர் பெற்ற பீடிகைக்கு முன் இருப்பது கோமுகி என்ற நீர் வளம் மிகுந்த பொய்கை.]
"இருது இளவேனில் எரி கதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையில்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன்கை அமுத சுரபி எனும்
மா-பெரும் பாத்திரம் ...
அந்நாள் இந்நாள்; அப்பொழுது இப்பொழுது;
நின்னாங்கு வருவது போலும்"
[இளவேனில் பருவத்தில், வெயில் எரிக்கும் இடப ராசிக் காலத்தில், முதல் 13 மீன்கள் ("நட்சத்திரங்கள்") கழிந்தபின் விசாக நாளில் போதித் தலைவன் பிறந்த நாளில் ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பாத்திரம் தோன்றும். இன்றுதான் அந்த நாள். அந்தக் குறிப்பிட்ட பொழுது இப்பொழுது. உன்னிடம் அது வரும் போலத் தெரிகிறது.]
இப்படி ... தீவதிலகை கோமுகிப் பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிவரும் நாளும் பொழுதும் நெருங்கியதை மணிமேகலைக்குத் தெரிவித்து, அந்தப் பாத்திரத்தின் சிறப்பை அறவண அடிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு சொல்கிறாள்.
மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வந்து தொழுது வணங்கி எண்ணத்தை ஒருமுகப்படுத்தி நிற்கிறாள்.
அப்படித் தொழுத இளம்பெண் மணிமேகலையின் செம்மையான கைகளில் அமுதசுரபி புகுகிறது.
பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் தயங்காமல் மனம் மகிழ்வு எய்தி, புத்த தேவனைப் போற்றத்தொடங்குகிறாள்.
"மாரனை வெல்லும் வீர நின்னடி!
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் நின்னடி!
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின்னடி!
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக்கு அடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர் துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவுக்கு அடங்காது"
[சுருக்கமான பொருள்: மாரனை வென்றவனே, தீய வழிகளைக் கடிந்தவனே, பிறருக்கு அறவழி காட்டுபவனே, துறக்கம் விரும்பாதவனே, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனே, பிறருக்குக் கண் அளிக்கும் கண் ஆனவனே, தீய மொழிகளை கேட்காதவனே, சிறந்த சொற்களைச் சொல்பவனே, நரகர்களின் துயரத்தைத் துடைப்பவனே, உரகர்களின் ("நாகர்களின்") துன்பம் துடைப்பவனே, உன்னை வணங்குதல் தவிர வாழ்த்துதல் என் நாவிற்கு அப்பாற்பட்டது.]
தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அந்தண அரசன்கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் யாருக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.
"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
[சுருக்கமான பொருள்: வலிமை உடைய மக்களுக்கு உணவு கொடுப்பவர் அறத்துக்கு விலை பேசுபவர்கள். இயலாதவர்களின் கொடிய பசியை நீக்குபவர்கள் வாழும் வாழ்க்கையே உண்மையான மெய்ந்நெறி வாழ்க்கை. எனவே ... உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.]
தீவதிலகையின் கூற்றைக் கேட்ட மணிமேகலை தான் தன் முற்பிறப்பில் இலக்குமியாய் இருந்து கணவன் இராகுலன் இறந்தபோது தான் தீப்புகுந்ததைச் சொல்லி அந்த நேரத்தில் சாதுசக்கரன் என்ற அறவோனுக்கு உணவு ஊட்டியதைக் கனவு போலக் கண்டதன் பயனே இங்கே இன்றைக்கு இப்போது அமுதசுரபி தன் கையில் வந்தது என்று விளக்கம் கொடுக்கிறாள்.
பிறகு அமுதசுரபியை வைத்துத் தான் என்ன செய்ய விரும்புகிறாள் என்றும் சொல்கிறாள்.
"நாவலந்தீவில் பசியினால் வறுமையில் வாடிக் கந்தைத் துணி உடுத்திப் பிறர் வீடுகளில் பிச்சை கேட்டு உண்ணும் நிலையில் மக்கள் இருப்பதனால் அவர்களால் அறவழியில் செல்ல முடியவில்லை; தான் பெற்ற குழந்தை முகத்தைப் பார்த்தவுடன் தாய்க்குப் பால் சுரப்பதைப் போல்... அவர்களின் முகத்தைப் பார்த்தவுடன் இந்தப் பாத்திரத்திலும் உணவு சுரப்பதைக் காண விரும்புகிறேன்."
அதைக் கேட்ட தீவதிலகைக்கு மகிழ்ச்சி.
"மறந்தேன் அதன் திறம்; நீ எடுத்து உரைத்தனை
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்
சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
ஆங்கனம் ஆயினை; அதன் பயன் அறிந்தனை
ஈங்கு நின்று எழுவாய்"
[சுருக்கமான பொருள்: இந்தப் பாத்திரத்தின் வரலாற்றை மறந்திருந்தேன். எடுத்துச் சொன்னாய்! அறத்தின் அடிப்படையில், அருளொடு உணவு கொடுக்கும் இயல்பு உடையவர்கள் தவிர மற்றவருக்காக இந்தப் பாத்திரம் சுரக்காது. உனக்கு அந்த நல்ல திறம் இருக்கிறது. இதன் பயனையும் நன்கு அறிந்திருக்கிறாய். இனி, இங்கேயிருந்து எழுந்து செல்வாய்.]
தீவதிலகை விடை கொடுக்கிறாள். மணிமேகலை தீவதிலகையின் அடிகளை வணங்குகிறாள். அமுதசுரபியுடன் மணிபல்லவத்தை விட்டு நீங்கி, வான வழியில் செல்கிறாள்.
காவிரிப் பூம்பட்டினத்தில் ...
---------------------
மலர்வனத்துக்கு மகளை அனுப்பிவிட்டு அவளைத் திரும்பக் காணாமல் 7 நாட்களாகத் தவித்துக் கொண்டிருக்கிறாள் மாதவி.
மாதவி முன் தோன்றுகிறாள் மணிமேகலை.
7 நாட்கள் முன்னால் ... தாய், தந்தையரின் துன்பம் கேட்டுத் துயர்க் கண்ணீர் விட்டதனால் மலர்களின் தூய்மை சிதைந்து; அதனால்தானே புதிய தூய மலர்கள் பறித்துக் கொண்டுவருவதற்காக அவள் மலர்வனத்துக்கு அனுப்பப்பட்டாள்! அதே மணிமேகலை ... இப்போது தாயைத் தாய் என்று கூடக் குறிக்கவில்லை!
பேச்சின் தொடக்கமே அவர்களின் முற்பிறப்பின் உறவு முறையின் அடிப்படையில் அமைகிறது!
"இரவி வன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
அமுதபதி வயிற்றில் அரிதில் தோன்றி-த்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
அவ்வையர் ஆயினீர்; நும் அடி தொழுதேன்"
[சுருக்கமான பொருள்: இரவிவன்மனின் மகளே! துச்சயனுக்கு மனைவி! அமுதபதிக்கு மக்களாக, தாரை வீரை என்ற பெயரில் எனக்குத் தவ்வையர் ஆக இருந்தீர். (இப்போது) எனக்கு நீங்கள் அவ்வையர். உங்கள் அடிகளை வனங்குகிறேன்.]
எத்தகைய மாற்றம், ஏழே நாட்களில்!
தொடர்ந்து வாழ்த்துகிறாள் மாதவியையும் சுதமதியையும்.
அறவண அடிகளிடம் போய் அவர்களுடைய பிறப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும்படிச் சொல்கிறாள்.
அமுதசுரபியைப் பற்றிச் சுருக்கமாக "இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் மிகச் சிறந்த பாத்திரம். இதை நீங்களும் தொழுங்கள்" என்று அவள் சொல்லியபடியே மாதவியும் சுதமதியும் தொழுகிறார்கள்.
பிறகு மூவரும் அறவண அடிகள் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டு செல்கிறார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்