
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
௪. எழுக தமிழினமே!
தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் அளிக்கப்படாத போழ்து, சிறுபான்மையினராக வாழும் அயல் மாநிலத்தார் தங்கள் மொழிகளையும் பயிற்று மொழிகளாக்க முயல்கின்றனர்.
பெயரளவில் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் சமற்கிருத மொழியையும் ஒரு பாடமொழியாக்க வேண்டுமென்று இந்திய நடுவணரசு முயல்கின்றது. இந்தி மொழி பெரும்பாலும் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டுவிட்டது. தமிழக ஆளுநர் சன்னாரெட்டி இந்தி படித்த தமிழ்நாட்டாருக்கு பட்டச்சான்று வழங்கியஞான்று தேசிய ஒருமைப்பாட்டிற்கு எல்லாரும் இந்தி படித்தல் வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
சமற்கிருதப் பல்கலைக்கழகம், வேதாகமப் பாடசாலைகள் தமிழ்நாட்டில் நிறுவியுள்ளனர். இந்திப்பிரச்சார சபாக்கள் முன்னரே நிறுவிவிட்டனர். 1922 – க்கு முன்னர் குடிமயக்கில் பிதற்றிய பாரதியின் பாடல்களையெல்லாம் ‘மகாகவி’, ‘தேசியகவி’எனப் பாராட்டி ஏமாளித் தமிழர்களை வயப்படுத்துகின்றனர். புரட்சிப் பாவலர் கனகசுப்புரத்தினத்தைப் பாரதிக்குத் தாசனாக்கி, இருங்குடியர் பேராலும் இரு பல்கலைக் கழகங்கள் நிறுவி விட்டனர். அப் பல்கலைக் கழகங்கள் அவர்கள் கோட்பாடுகளையா பரப்புகின்றன? அவர்கள் பாடியவற்றுள் ஆரியக் கோட்பாட்டிற்குச் சார்பானவற்றை மட்டில் எடுத்தாள்கின்றனர்.
இன்று தமிழ் மக்களிடையே உள்ள பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், விழாக்கள் முதலியன ஆரியர்களுக்குரியனவே! தமிழர் தம் பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றை அறியாமல் மறைக்கப்பட்டு விட்டனர். தன்மானமுள்ள தமிழர் சொல்வதை ஏற்க மறுக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களாகிய ஆரியமதக் கொள்கைகளை ஏற்காதவர்களிடையே தமிழும், தமிழ்ப்பண்பாடும் இருந்தன.
“எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓரினம்; எல்லோரும் இந்நாட்டு மன்னர்; நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பாரதியின் பிதற்றலைப் பாடுகிறார்களே தவிர, எத்தனை பார்ப்பனர் தாழ்ந்துபட்ட மக்களின் இல்லங்கட்குச் செல்கின்றனர்? அவர்கள் இல்லச் சடங்குகளில் பங்கு கொள்கின்றனர்?
ஆரியப் பார்ப்பனர், தம் இல்ல நிகழ்ச்சிகட்கு ஆதி தமிழர்களை அழைக்கின்றார்களா? அவர்களுடன் அமர்ந்து உணவருந்துகிறார்களா? இல்லையே! எல்லாம் வெறும் பேச்சே! ஆனால் வயல் வேலைகட்கு அவர்களை அழைப்பர். அயல் மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் தமிழ்மக்கள் பிழைப்புக்காகச் சென்று அல்லல்படுகின்றனர். அயல் மாநில மக்கள் தமிழ்நாட்டிற்கு வந்து வளமாக வாழ்கிறார்கள். அயலார் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் நடத்துகின்றனர்.
தமிழர் அவர்களிடம் அடிமைத் தொழில் செய்கின்றனர். அயல் மாநிலத்தார் தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியாளராகவும், நடுவர்களாகவும் அமர்த்தப்படுகின்றனர். அயல் மாநிலத்தார் தமிழ்நாட்டில் தங்கள் மொழிப்பள்ளிகளும் கல்லூரிகளும் நிறுவுகின்றனர்.
கன்னடத்தாரும், கேரளத்தாரும் தமிழ்நாடு வளம் பெற நீர் கொடுத்துதவ மறுக்கின்றனர். தமிழகஅரசு “மெட்ராஸ்”, “High Court” என்றுதான் குறிப்பிடுகின்றது. ஏனைய மாநிலங்கள் தம்மொழிவழி பெயர் சூட்டியுள. அவ்வாறு “தமிழ்நாடு உயர்முறை மன்றம்” என்றும், சென்னை என்றும் தமிழ்நாட்டில் ஏன் மாற்றவில்லை? இஃது பற்றி எந்த அரசியல் கட்சித் தமிழனாவது கேட்கிறானா? இல்லை. அவரவரும் மேலும் பொருள் சேர்க்கவே பாடுபடுகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்லாயிரம் மக்கள் உண்ணப்போதிய உணவின்றியும், உடுத்த உடையின்றியும், குந்தக் குடிசையின்றியும், அல்லற்படும் இக்காலத்தில் ஒரு கல்லுருவம், செம்புச்சிலை முதலியவற்றைச் “சாமி” என்று சொல்லி அவற்றை வைத்து ஊரையடைத்துப் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டிக் கோயில்கள் எனப் பெயரிட்டு, வெள்ளித்தேர், பொற்றேர், ஊர்திகள் முதலான எடுபிடிகள் செய்து வைத்துக் கோடிக்கணக்கான செல்வத்தை அரசு வீணாக்குவதைக் கேட்பாரிலர்.
இந்தியா விடுதலை பெற்று விட்டதென்று 47 ஆண்டுகளாக விழாக்கள் நடத்துகின்றனர். ஆனால், மக்கள் தொல்லைகளின்றி அமைதியாகவும், உள நிறைவுடனும் வாழ்கிறார்களா? இல்லையே! இந்தியா முழுவதும் கலகமும், கொலையும், கொள்ளையும் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவே.
படை மறவர்கள், காவல்துறையினர் பாதுகாப்புப் படைகள் கொண்டு ஆட்சி நடக்கிறது. ஏன்? மக்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள். இதுதான் விடுதலை பெற்றதன் பயனா? மக்கள் விரும்புகிறபடி மாநிலங்கட்குத் தன்னாட்சியுரிமை வழங்காமல், அடிமை நிலையில் வைத்துக் கொண்டே விடுதலை பெற்றுவிட்டோம் என்று முழங்குகிறார்கள். ஒற்றுமை, ஒருமைப்பாடு பேசுகின்றனர். எத்துணை நாள் இத்தகு ஆட்சி நிலைக்கும்?
எனவே, தமிழின இளந்தலைமுறையினரே இங்ஙனம் நாடு போய்க் கொண்டிருந்தால், விரைவில் தமிழினம் அழியும் என்பதில் ஐயமில்லை! எமது 70 ஆண்டு பட்டறிவு சொல்கிறது. ஆகவே, “எழுக தமிழினமே” செயல்படு அல்லது சாவைத் தழுவு. எம் இறுதி அறிவிப்பு இதுவே.
(நன்றி : தமிழினமே எழுக, செப்.-அக். 1994)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 12 April 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1246 -1250 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1251 -1255
மூச்சுத் திணறல் வரும் என்று தேவையின்றியும் தக்கக் காரணமின்றியும் வரும் அச்சமே திணறல் வெருளி. மூச்சுத்திணறல் வரும் பொழுது அதற்கு ஆட்பட்டவரும் அதைப் பார்ப்பவரும் அதைத் தணிப்பதற்கான வழிமுறைகளில் இறங்காமல் தீவிரமான எதிர் சிந்தனைகொண்டு அச்சம் அடைவதும் திணறல் வெருளிதான்.
மூச்சடைப்பு வெருளி (choking phobia ) என்றாலும் இதுதான்.
pnig என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் மூச்சுத் திணறல்.
angino என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தாெண்டைத் தொற்று, மூச்சுத் திணறல் எனப் பொருள்கள்.
00
திங்கட்கிழமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திங்கட்கிழமை வெருளி.
மாணவப்பருவத்தில் வார விடுமுறை முடிந்து வரும் திங்கட்கிழமை குறித்துப் பேரச்சம் கொள்கின்றனர். ஆள் வளர வளர அச்சமும் வளருகிறது. நாளடைவில் பணிக்குச் செல்லும்பொழுதும் வார விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்ல பேரச்சம் வருகிறது. இத்தகைய காரணமற்ற அளவு கடந்த பேரச்சம் திங்கட்கிழமை வெருளியாகிறது.
“திங்கள் துக்கம் திரும்பி வரும்” என எதுகை மோனை அடிப்படையில் பழமொழி உருவாகியுள்ளது. எனவே, திங்கள் கிழமை துக்கம் எதுவும் நேர்ந்தாலோ கெடுதி நேர்ந்தாலோ துயரம் தொடரும் என்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். எனவே, திங்கள் கிழமை நல்லது நடக்க வேண்டுமே, கெட்டது நடக்கக்கூடாதே என்று கவலைப்பட்டு, அளவுகடந்து தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
Luna என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிலா/ உலவி.
00
திசம்பர்(December) குறித்த வரம்பில்லாப் பேரச்சம் திசம்பர் வெருளி.
shi+er என்னும் சீனச் சொற்களுக்குப் பத்து+இரண்டு= பன்னிரண்டு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, shieryue பன்னிரண்டாம் மாதமாகிய திசம்பர் மாதத்தைக் குறிக்கிறது.
00
வாலுட்டு திசினி(The Walt Disney Company) நிறுவனம் தொடர்பான பெருங்கவலையும் பேரச்சமும் திசினி வெருளி.
வெள்ளையர் அல்லாத கதைப்பாத்திரங்களின் ஒரே மாதிரியான சித்தரிப்பு, பாலின வேறுபாடு, படைப்புத் திருட்டு போன்றவற்றால் வாலுட்டு திசினி நிறுவனம் மேல் வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5