
"சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருள் இது" என்று விளக்கிய திருவள்ளுவரும், தாம் எந்த சமயத்தையும் வெளிப்படையாகக் கூறாத இயல்பினராயினும்,"மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடியால்" அளந்த திருமாலைப் பற்றிக் (குறள் - 610) குறிப்பிட்டுள்ளார்.
நம்மாழ்வார், மாணிக்கவாசகர் என்னும் இருபெரும் சான்றோர்களும் வேறு, வேறு இடத்தில், வேறு வேறு சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றியிருப்பினும், "சான்றோர் சான்றோர் பாலர் ஆவர்" என்று புறநானூறு பாடுவது போல, தம்முள் பலவகைகளில் ஒப்புமைத் தன்மைகள் உடையவராகத் திகழ்கின்றனர்.
"உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்" என்னும் "திருவாய்மொழி"ப்பாடலின் ஒரு வரியை அடிப்படையும், ஆதாரமுமாகக் கொண்டே, "விசிஷ்டாத்வைதம்" என்னும் பெருமாளிகை
இராமானுஜரால் எழுப்பப்பட்டது எனின், நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பெருமையைச் சிந்தித்து உணரலாம்.