(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி)
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7
பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.
பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்
பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் . . …..
செழுநகர் (புறநானூறு : 319.9-17) என்கிறார்.
செழிப்பான மாளிகையைச் செழு நகர் என்று புலவர் பாலைக் கௌதமனார் (பதிற்றுப்பத்து:21/12) கூறுகிறார். தோற்றத்தாலும் சிறப்பாலும் சிறந்து விளங்குகின்ற மாளிகையைப் புலவர் பெருங்குன்றூர் கிழார் (குறுந்தொகை : 338.7) விளங்கு நகர் என்கிறார்.
செல்வச் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட வீடுகள் திருமனை (கிளிமங்கலங் கிழார் : குறுந்தொகை : 181.6) என அழைக்கப்பட்டன.
புலவர் கருவூர்க் கண்ணம்புல்லனார் செல்வம் மிகுந்த அழகிய மாளிகையைத்
திரு நகர் வரைப்பகம் (அகநானூறு : 63.2) என்கிறார்.
புலவர் மாமூலனார், மணல் பரப்பப்பட்ட பொலிவு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க மாளிகையைத்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் (அகநானூறு : 187.9) என்கிறார்.
புலவர் ஒருவர் செல்வம் மிகுந்த பழமையான வீட்டை
மூதூர்த் திருநகர் (அகநானூறு : 114.13) என்கிறார். இவரே வீடுகளின்
மதில்கள், அவை மீது ஏற்றப்படும் கொடிகள் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருக்கும் என்பதை
நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை (அகநானூறு 114.9) என்னும்
வரியில் விளக்குகிறார்.
மற்றொரு புலவர், தொழில் நலம் பொருந்திய செல்வம் மிகுந்த மாளிகையை,
ஏர் வினை
வளம் கெழு திரு நகர் (அகநானூறு : 117.3-4) என்கிறார்.
நலமும் வளமும் பொருந்திய அழகான மாளிகையைப் புலவர் தயங்கண்ணியார்
வளம் கெழு திருநகர் (புறநானூறு : 250.6) என்கிறார்.
இனிமையாய்த் தூங்குவதற்குரிய செழிப்பான வளமனையைப் புலவர் உலோச்சனார்
இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் (புறநானூறு : 377.3) என்கிறார்.
புறத்திணை நன் நாகனார் செல்வம் மிகுந்த சிறப்பான மாளிகையைத்
திருஉடைத் திருமனை (புறநானூறு : 379.16) என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வ வளத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டமையால் வளமனைகள் என்றும் அழைக்கப்பெற்றன. வளமனை என்பதற்கேற்ப வீடுகளில் செல்வவளத்திற்குரிய பொருள்கள் நிறைந்து காணப்பட்டு நாகரிகச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.
சிறப்பான பெரிய வளமனையைப் புலவர் வெறிபாடிய காமக்கண்ணியார் (அகநானூறு: 22.9),புலவர் கருவூர்க் கண்ணம்பாளனார் (அகநானூறு: 263.12) ஆகியோர் வள நகர் என்றே கூறுகின்றனர்.
பல வசதிகளும் உடைய வீட்டை வளமனை எனப் புலவர்கள் கயமனார் (அகநானூறு 275.4),மதுரைக் கண்ணத்தனார் (நற்றிணை 351.1), பரணர் (புறநானூறு 354.6; மதுரைக்காஞ்சி 603; குறிஞ்சிப்பாட்டு 223), ஓரம்போகியார் (ஐங்குறுநூறு : 66.4) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
பெரிய நகரத்தைப் போன்று தோற்றத்தாலும் அமைப்பாலும் உள்ளடக்கங்களாலும் சிறப்பாகவும் செழிப்பாகவும் உள்ள மாளிகைகளைச் செழுநகர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
புலவர் நக்கீரர்
பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் (அகநானூறு : 205.11-13) என்கிறார்.
தழை செறிந்த புன்னைகளை உடைய செழிப்பான மாடமாளிகையைப் புலவர் கல்லாடனார்
துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் (புறநானூறு :391.17) என்கிறார்.
எனவே, இன்றைக்கு உள்ளவாறான செல்வ வளத்தை உணர்த்தும் வகையில் வீடுகள் சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன என்பது தமிழர்களின் கட்டடக்கலைச்சிறப்பை உணர்த்துகின்றது அல்லவா?
கல்லாடனார், புறநானூறு, பாலைக் கௌதமனார்,பதிற்றுப்பத்து, பெருங்குன்றூர் கிழார், குறுந்தொகை, கிளிமங்கலங் கிழார், குறுந்தொகை ,கருவூர்க் கண்ணம்புல்லனார், மாமூலனார், தயங்கண்ணியார், உலோச்சனார், நன் நாகனார், காமக்கண்ணியார், கண்ணம்பாளனார், கயமனார், மதுரைக் கண்ணத்தனார், நற்றிணை, பரணர், புறநானூறு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, ஓரம்போகியார், ஐங்குறுநூறு, நக்கீரர்,
– இலக்குவனார் திருவள்ளுவன்
+++
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 67-69
- ? 67 சனாதன தருமம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஓர் ஆன்மிக அடையாளமாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தருமமாகும். இவ்வாறு கண்ணதாசன் கூறுகிறாரே!(அருத்தமுள்ள இந்து மதம்)
o நிலையானதாகக் கூறப்படும் கருத்துகள் எல்லாம் தவறு என்று முன்பே சொல்லியுள்ளோம். அனைவருக்கும் பொதுவான கடமை, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தல் என்பனவெல்லாம் ஆரிய நெறிக்கு மாறானவையே. தமிழ் நெறியைச் சனாதனமாகக் கூறுவது பச்சைக் கயமையாகும். இறைப்பற்று மிகுந்தவர்கள், சனாதனம் என்ன சொல்கிறது என்று அறியாமல் நல்ல கருத்துகள் எல்லாம் சனாதனம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு அதைப் பாராட்டுகிறார்கள்.
o- ? 68. இந்து தருமம் என்று இன்று நாம் அழைக்கும் பெயருக்கு மிகவும் பொருத்தமான சொல் சனாதன தருமம் என்பதே.
இந்து சமயம் என்று தற்போது அழைக்கப்படுவது, இதன் உண்மையான பெயர் அன்று. காலத் தொடக்கம் அற்ற இந்த வாழ்வியல் தருமத்திற்கு வரலாற்றுக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே இந்து என்பதாகும். அநாதியான வேதங்களில் இந்தத் தருமம் வேர் கொண்டிருக்கிறது. இது நிறுவப்பட்ட மதமும் அல்ல. ஆர்யவருத்தத்தில் முனிவர்களின் இறை அனுபவத்தால் விளைந்த இனிய கனி இது. வைதீக சமயம் என்றும், வேதாந்தம் என்றும்கூட இது அழைக்கப்படுகிறது…. என்று சாய்பாபா கூறுகிறாரே!
இந்து மதமும் சனாதன தருமமும் ஒன்று என்னும் பொழுது எப்படி சனாதனம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாக இருக்கும்? வேதங்களில் வேர் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆரிய வேத நெறி என்பது எல்லா உயிர்களையும் சமமாக எண்ணும் தமிழ்நெறிக்கு மாறானதல்லவா? அப்புறம் தமிழ்நெறியைச் சனாதம் என்பது வடிகட்டிய பொய்தானே!
இந்து மதமும் சனாதனமும் வேறு. இது குறித்துத் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு பின்வருமாறு விளக்குவதைக் காணுங்கள்.
- இந்து என்பதற்கான வரையறை:
இந்தியாவில், கிறித்தவர்கள் இசுலாமியர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள் என ஒரு வரையறை உள்ளது.
இவர்களுள் சமணர்கள், பௌத்தர்கள், உலகாயுதர்கள், ஆசிவகர்கள் ஆகியோர் சனாதனத்தை எதிர்ப்பவர்கள்.
சைவர்கள் சனாதனத்தை ஏற்காதவர்கள்.
வைணவர்கள் ஓரளவு ஏற்பவர்கள்.
இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்களுக்கு எந்த வகையிலும் சனாதனம் சாதகமாக அமையாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் சனாதனத்திற்கு உரியவர்களாக அமைபவர்கள் பிராமணர்கள். அவர்கள்தான் சனாதனத்தில் பிதாமகர்கள்.
இந்த நிலையில் சனாதனம் என்பது பிராமணம் அல்லது பார்ப்பனம் எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்து தருமம் வேறு சனாதனம் வேறு எனக் கொள்ள வாய்ப்பு உள்ளது. - ? 69. “இந்து தருமம் மட்டுமே சனாதன தருமம் ஆகும்.” என்கிறாரே இராமகிருட்டிணர்.
o “இந்து தருமம் மட்டுமே சனாதன தருமம் ஆகும். பல்வேறு சமய நம்பிக்கைகள் இப்போது நிலவலாம். அவை யாவும் இறைவன் திருவுள்ளம் உள்ள வரை மட்டுமே வாழும். இந்து தருமம் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்” என்கிறாரே இராமகிருட்டிணர். (சிரீ இராமகிருட்டிணரின் உபதேசங்கள், சிந்தி பிரம்ம சமாசத்துக்கு விசயம் – அத்தியாயம்- 32).
மீண்டும் மீண்டும் இந்து தருமம்தான் சனாதன தருமம் என்பதை நன்கு கவனியுங்கள். மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிக்கும், மக்களுள் ஒரு பிரிவினரை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்தும் , ஆரிய இந்து எங்ஙனம் உலகத்திற்குப் பொதுவான அறமாகத் திகழமுடியும்? எனவே, சனாதனத்தை உலகிற்கே பொதுவாகக் கூறுவதைப் பெருந்தவறாக உணரலாம் அல்லவா?
o பின்னால் வந்த மதமான இந்து மதத்தை மட்டும் வாழச்செய்யும் எல்லார்க்கும் பொதுவான இறைவன் அதற்கு முன்னாலும் பின்னாலும் தோன்றிய பிற மதங்களை மட்டும் அழிப்பானா? எனவே, பிற சமய நம்பிக்கைகளும் வாழும். அவற்றிற்கு எதிரான சமய மறுப்பு நம்பிக்கைகளும் வாழும்.- ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ எனக் கேள்வி எழுப்பிய வள்ளுவம், சனாதனத்தின் சாட்சி. – சரியா?
கற்பவர் கற்பித்தவரைத் தொழ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். வாலறிவன் என்றால் தூய அறிவை உடையவன். அஃதாவது தூய அறிவையுடைய கல்வி தந்த ஆசிரியர். இல்லை இல்லை. கடவுளைத் தொழ வேண்டும் என்கிறார் என்றாலும் தவறில்லை. ஏனெனில், கீதை கிருட்டிணனைத்தான் தொழ வேண்டும் என்கிறது. சனாதனம் பிராமணர்களைத் தொழ வேண்டும் என்கிறது. எனவே, சாதி வேறுபாடின்றி நமக்குக் கல்வி தருபவரைத் தொழச் சொல்லும் திருவள்ளுவரைச சனாதனத்தின் சாட்சி என்பது அறிந்தே பொய் பரப்பும் கயமைத்தனமாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.95-97