எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10
conference, seminar, symposium – தமிழில் . . .
? ‘Consultation’, ‘discussion’, ‘Conference’ என்பனவற்றிற்கு என்ன சொல்ல வேண்டும்?
Consultation என்பதற்குச் சரியான பழந்தமிழ்ச் சொல் சூழ்ச்சி என்பதாகும்.
இருப்பினும் இப்பொழுது சூழ்ச்சி என்பது “கலந்து பேசுதல்’ என்னும் பொருள் தராமல் சதி செய்வது போன்ற எதிர்மறையான எண்ணத்தைக் குறிக்கிறது. மருத்துவரிடமோ வழக்குரைஞரிடமோ ஒரு பொருள் குறித்து அதனை அறிந்தவரிடமோ வழிவகை காணப்பெறும் அறிவுரையே Consultation ஆகும். மருத்துவரிடம் உடல் நோயை அல்லது மனநோயைத் தணிப்பதற்காக – ஆற்றுவதற்காக அறிவுரை பெறுவதால் இதனை ஆற்றுரை எனலாம். ஆற்றுப்படுத்தல் என்றால் வழிப்படுத்தல் என்றும் பொருள். இதே போல் வழக்குரைஞரிடம் வழக்கு தொடர்பான வழிவகை வேண்டிப் பேசுவதால் “வழியுரை’ என்று சொல்லலாம். அல்லது பொதுவாக ஆற்றுரை என்ற சொல்லையே எல்லா இடத்திலும் கையாளலாம். கலந்துரையாடுதல் எனச் சொல்வதை விட இது சுருக்கமாக அமையும். ஆனால், பொதுவான நேர்வுகளில் கலந்து பேசி முடிவெடுப்பதைக் கருத்தறிதல்’ என்று குறிப்பது எளிமையாக இருக்கம்.
சான்றாக
The decision was taken after consultation with residents – குடியிருப்போர்களின் கருத்தறிந்த பின் முடிவு எடுக்கப்பட்டது.
என்று சொல்லலாம்.
Discussion என்றாலும் கலந்துரையாடல் என்றுதான் குறிப்பிடுகிறோம். உசாவுதல் எனில் வினவுதல் என்றும் பொருள். ஒருவருக்கொருவர் வினவி விடையறுத்துத் தெளிவுபடுத்தும் உரையாடலை உசாவல் என்பாரும் உள்ளனர். கேள்வி எழுப்புதலை இது குறித்தாலும் கேள்வியறிவு பெறுவதை இது குறிப்பதில்லை. ஒரு பொருள் குறித்து வெவ்வேறு நிலைப்பாட்டை வாதிட்டு ஆய்வு செய்து முடிவெடுப்பதால் (வாது+ஆய்வு) வாதாய்வு என்பது பொருத்தமாக இருக்கும் எனினும் ஒரு பொருள் மீது பலமுறை பேசி முடிவெடுப்பதால்
மீதுரை எனலாம்.
மீதுரை பல்கால் விளம்புதலாகும்’
என்கிறது பிங்கல நிகண்டு.
எனவே
discussion மீதுரை என்பதே சரியானதாகும்.
After considerable discussion, they accepted – போதுமான மீதுரைக்குப்பின் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
The plans have been under discussion for a year – திட்டங்கள் ஓராண்டாக மீதுரையில் உள்ளன. (பேசப்பட்டு வருகின்றன.)
Take decission after discussion – மீதுரைக்குப்பின் முடிவெடுக்கவும்.
மீதுரை என்பது வாய்மொழியாக பேச்சாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எழுத்திலும் மடல்வழியாகவோ கோப்பு வழியாகவோ, இருக்கலாம். கலந்து பேசுதல் என்னும் பொழுது பேச்சை மட்டும் குறிக்கின்றது. ஆனால், மீதுரை என்னும் பொழுது இரண்டையும் குறிக்கிறது.
Her article is a discussion of the methods used in research – அவர் தம் கட்டுரையில் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட முறைகளை அலசி ஆராய்ந்துள்ளார்.
Conference என்றால் மாநாடு என்கிறோம். உலகத் தமிழ்மாநாடுபோல் பேரளவில் நடைபெறும். கூட்டத்தை “மாநாடு’ என்பது பொருத்தமாக இருக்கும். ஒரு பொருள் அல்லது பல பொருள் குறித்துக் கலந்து ஆய்வு செய்து முடிவெடுப்பதற்கான கூட்டத்தை “மாநாடு’ என்பதை விடக் கலந்தாய்வுக் கூட்டம் என்பதே ஒத்து வருகிறது. Press Conference அல்லது news conference என்பது செய்தியாளர் கூட்டம் என்பதே சரி. அதே நேரம் பேரளவிலான Journalist Conference என்றால் இதழாளர் மாநாடு எனலாம். இருப்பினும் மாநாடு அல்லாத சந்திப்பை வேறு வகையில் சொல்லிப் பார்க்கலாம்.
ஆடல் என்பது சொல்லாடலை அஃதாவது சொல்லுதலையும் குறிக்கும்.
மாற்றம் என்பது “சொல்,விடை, வஞ்சின மொழி, மாறுபட்ட நிலை வாதம்’ எனப் பல பொருள் தரும்.
உரை உரையாடு எனப்படுவது போல்
மாற்றம் மாற்றாடு எனப்படும்.
“மாற்றாடு’ தெலுங்கில் “மாட்டாடு’ என்றும் கன்னடத்தில் “மாட்லாடு’ என்றும் மாறியது. எனவே சொல்லுதல், விடையிறுத்தல், வாதித்தல் முதலியன இடம் பெறும்.
Time Conference மாநாடு
Time Conference நேர மாற்றாடு
என இனிக் கூறிப்பார்க்கலாம்.
எனவே,
Consultation வழியுரை/ ஆற்றுரை/ கருத்தறிதல்
Discussion மீதுரை
Conference இடத்திற்கேற்றவாறு மாநாடு/ மாற்றாடு எனலாம்.
எதுவாக இருந்தாலும் ஒரே சொல்லையே கையாளாமல் இடத்திற்கேற்றவாறு உரிய சொல்லைக் கையாளுவதையும் ஒரே சொல்லுக்கு ஒரே வகைப் பயன்பாட்டில் வெவ்வேறு சொற்களைக் கையாளாமல் இருப்பதையும் பின்பற்றினாலே போதுமானது. புதுச்சொற்கள் கடினமாகத் தோன்றினாலும் பழகப் பழக எளிதாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்