உலக நாகரிக மனித நடவடிக்கைகளில் மிக முக்கியமான பங்கை விளையாட்டுகளும்
பொழுதுபோக்கு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்துள்ளமையை
வரலாற்றுச் சான்றுகள் பல எடுத்தியம்புகின்றன. இந்தியாவில் பல
விளையாட்டுகள் நமது பாரம்பரியத்தைப் போற்றுகின்ற விளையாட்டுகளாகும்.
குறிப்பாகத் தமிழர்கள் பல வீரவிளையாட்டுகளுக்கு களம் அமைத்தவர் ஆவர்.
இப்பொழுது பரவலாகப் பேசப்படும் ஜல்லிக்கட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
இந்தியர்களின் பாரம்பரியத்தைப் பேணிக்காக்கவும் உலக நாடுகளில்
இந்தியர்களின் தொன்மையான நாகரிகத்தை எடுத்துச் செல்லவும்
வரலாற்றுத்தடயங்களை அலசிப்பார்ப்பதும் அவசியமாகிறது.
தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் அவர்களால் பெரிதும் போற்றப்படும்
எருதுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டும் ஒன்று என்பது வரலாற்று உண்மை.
விலங்கினங்களை துன்புறுத்துதல் கூடாது என்பது மனித நேய மாண்பாக
இருந்தாலும் எந்தவொரு விளையாட்டும் எவ்வித துன்பம் அல்லது உடல் வருத்தம்
இல்லாத விளையாட்டு இல்லை என்றே சொல்ல வேண்டும். அண்மையில் கிரிக்கெட்டில்
இறந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹக்ஸ் உட்பட. இதனால் கிரிக்கெட்
விளையாட்டையே தடை செய்ய வேண்டும் என எந்த அமைப்பும் கோரிக்கை
வைக்கவில்லை. உலக அரசுகளும் இதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை. ஏனேனில் இவை
மேல்தட்டு மக்களால் போற்றப்படும் விளையாட்டுகள்.
பழங்கற்கால மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக தொடங்கி
நாளடைவில் தனக்குப் பிடித்த விலங்குகளை வளர்க்கவும் முற்பட்டான்.
அவ்விலங்குகளுடன் விளையாட ஆரம்பித்து அதனை சமூக அமைப்பிலும் புகுத்திப்
பொதுவிழாவாக ஊர் தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாட ஆரம்பித்தான்.
வேளாண்மையுடன் தொடர்புடைய ஆவினமான பசுவும் எருதும் இதில் முக்கியப் பங்கை
வகித்தன. மேலும் வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனமான கோழிகளையும்
விளையாட்டுகளில் புகுத்தினான்.
தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக் கட்டு, எருதுபிடி
சண்டை, ஏருதழுவுதல், மஞ்சி விரட்டு எனப் பலவாராக அழைக்கப்படும்
பாரம்பரியமான விளையாட்டு 5000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. தமிழர்
நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம் எனக் கருதப்படும் சிந்துவெளி
முத்திரைகளில் இடம்பெற்றுள்ள இவ்வீர விளையாட்டை தமிழர்கள் தங்களின்
உழைப்பிற்கு உயர்வு அளிக்கின்ற உழவர் திருநாளின் பொழுது தாங்கள்
வளர்க்கும் மாட்டிற்கும் விழா எடுத்து ஜல்லிக்கட்டை நிகழ்த்துகின்றனர்.
சிந்து வெளி அகழாய்வுகளில் பல விலங்கு உருவங்கள் கிடைத்துள்ளன. திமிழுடன்
கூடிய எருது பெருமளவில் கிடைத்துள்ளது. இவற்றுள் இரண்டு முத்திரைகள் சங்க
இலக்கியங்களில் குறிக்கப்பெறும் ஏறு தழுவுதலை அப்படியே படம் பிடித்துக்
காட்டுகின்றன. முதல் முத்திரையில் வீரன் ஒருவன் நீண்ட வேல் போன்ற கழியைத்
தன் வலக்கையில் தூக்கி அதன் பிடரியில் தாக்குகின்றான். இடக்கையில்
எருதின் கொம்பைப் பிடித்தும் தனது இடக்காலால் அதன் நெற்றிப்பொட்டில்
உதைத்து எருதை அடக்குகின்ற காட்சி இன்றும் தமிழ் வீரன் ஜல்லிக்கட்டை
அடக்குகின்ற காட்சியைத் தத்ரூபமாக நமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
அம்முத்திரையில் தமிழர்களின் தெய்வமான பசுபதி எனப்படும் சிவனும்
அமர்ந்துள்ளார். சில ஆய்வாளர்கள் இந்நிகழ்வை எருதை பலியிடுவதாகக்
கருதுவர். அது தவறு. காளையை பலி இடுவதாக இருந்தால் அடக்கும் வீரனின் கால்
எருதின் நெற்றிப்பொட்டில் இருக்காது. மேலும் இடக்கையும் எருதின் கொம்பை
பிடித்து இருக்காது. பசுபதிக்கு பலியிட்டால் பயபக்தியுடன் தான்
இச்சிற்பம் வடிக்கப்பட்டிருக்கும். எனவே பொது விழாவின் பொழுது
தங்களுக்குப் பிடித்த இறைவனை இறுத்தி காளையை வீரன் அடக்குகின்றதை
இம்முத்திரைச் சிற்பம் அழகுபட எடுத்தியம்புகிறது.
மற்றொரு முத்திரைச் சிற்பத்தில் காளையை அடக்கும் வீரர்களைப் பந்தாடும்
காட்சி இன்றைய தமிழர்கள் ஜல்லிக்கட்டின் பொழுது நிகழ்த்தப்படும்
ஜல்லிக்கட்டு சாகச நிகழ்ச்சியை நம் முன்னோர் அன்றே நடத்தியுள்ளமையை
அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆறு வீரர்கள் திமிழுடன் கூடிய
காளையை ஒருங்கிணைந்து அடக்க முயல்கின்றனர். அதில் ஒருவர் காளையின் திமிழ்
மீதே ஏறி அமர்ந்து அடக்க முயல்கின்றார். காளையினை எவ்வாறேனும் அடக்க
வீரர்கள் முயற்சி செய்கின்றனர். காளையின் முன் பாய்ந்தவர்கள் எல்லோரையும்
முரட்டுக் காளை தூக்கி எறிகிறது. ஒருவர் காளையின் காலடியில்
விழுகின்றார். எருது தனது பலம் முழுவதையும் காட்டி வீரர்களைப் பந்தாடி
தூக்கி எறிகிறது. வீரர்கள் எருதின் பின் பக்கமும் மேலே சென்று கீழே
விழுகின்றனர்.
அனைவருமே எருதை அடக்க இயலாமல் மண்ணைக் கவ்வுகின்றனர். இந்த படக்காட்சியை
விட வேறு என்ன வேண்டும் நமது பாரம்பரிய மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டை
எடுத்தியம்ப.
இச்செயலை 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியங்களில் ஒன்றான
கலித்தொகை முல்லைக்கலிப்பாடலில் புலவர் அழகுபட குறித்துள்ளார். கால்நடை
மேய்க்கும் இனத்தின் ஆயர் இளைஞர்கள் தாம் விரும்பும் கன்னியரைப்
பெறுவதற்காக எருதுகளை அடக்கி தமது வீரத்தை வெளிப்படுத்துவர். இது ஏறு
தழுவுதல் எனப்படும்.
’சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு’
நன்கு கொம்பு சீவப்பட்ட எருதுகள் உள்ள தொழுவத்தில் நுழைந்து இளைஞர்கள்
அவ்வெருதுகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தி தாங்கள் விரும்பும்
பெண்ணை அடைய முற்படுவர். அவ்வாறு ஏறு தழுவும் பொழுது புழுதி பறக்கின்றது.
ஒரு இளைஞன் அஞ்சாமல் கருஞ்சிவப்பு நிறமுடைய எருதின் மேல் பாய்ந்து அதன்
பிடரியைப் பற்றுகின்றான்.
’ கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை’ என கலித்தொகையின் முல்லைக்கலியின் பாடல் வரி
சிந்துவெளியில் கிடைத்துள்ள இரண்டாவது முத்திரையை நம் நினைவில்
நிறுத்துகின்றது அல்லவா.
இதே போன்று கோழிகளை விட்டு சண்டையிடும் விளையாட்டுகளிலும் தமிழர்கள்
தங்களின் கேளிக்கைப் பொழுதுபோக்கு விளையாட்டாகக் கருதினர். கி.பி 5 ஆம் 6
ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழிக்கான நடுகற்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் ஊருக்கு தென்கிழக்கில் உள்ள
ஊர் இந்தளூர். இவ்வூரின் சாலைப்பகுதியில் கோழி உருவம் பொறித்த நடுகல்
ஒன்று உள்ளது. இக்கல்லில்
‘கீழ்ச்சேரிகோழி பொடுகொத்த ’ என்ற தொன்மைத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதே போன்று செஞ்சி விழுப்புரம் சாலையில் அரசலாபுரம் என்ற ஊர் உள்ளது.
இவ்வூரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோழி உருவம் பொறித்த நடுகல்
உள்ளது. இந்நடுகல்லில்
’மேற்சேரிடுயாடி கருகிய கோழி’
என்று கல்வெட்டு தொன்மைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.
5-6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவ்விரண்டு நடுகற்கலும் அக்காலத்தில்
தமிழர்கள் கோழிகளைப் பழக்கி கோழிச்சண்டைகளை பொழுது போக்காக நடத்துவர்.
அதில் வீரமாக மற்றொரு கோழியுடன் கோழிச்சண்டை நடத்தி இறக்கின்ற கோழிக்கு
நடுகல் எடுத்து தமிழர் வழிபடுவர். அதற்காக எடுக்கப்பட்ட நடுகற்களே மேலே
குறிக்கப்பட்ட இரண்டு நடுகற்கலும் ஆகும்.
கோழிச் சண்டையைப் பொழுது போக்கு விளையாட்டாக விளையாடியமையைப்
’புறப்பொருள் வெண்பாமாலை’ என்னும் தமிழ் இலக்கியத்தில் குறிப்புகள்
உள்ளன. இதில் கீழைச்சேரிக் கோழிக்கும் மேலைச்சேரிக் கோழிக்கும்
நடத்தப்பட்ட கோழிச்சண்டை விளையாட்டு குறித்து கூறப்பட்டுள்ளது. எனவே
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டையும் கோழிச்
சண்டையும் நமது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள அரிய பெரும் பொழுது
போக்கு விளையாட்டுகளாகும். இன்றைய மேலை நாட்டு விளையாட்டுகளை விட
எவ்விதத்திலும் பெரிய அளவில் ஊறு விளைவிக்காத விளையாட்டுகள்
இவற்றையெல்லாம் பாதுகாத்துப் போற்றுவது நமது கடமையும் ஆகும்.
· முனைவர் சு.இராசவேல்
பேராசிரியர், கடல்சார்வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
rajav...@gmail.com
தென்கொங்கு சதாசிவம்.சு